Tuesday, April 22, 2014

அப்பா-5

அப்பா-5

வெயிலானுபவம்..

வெயில் காலத்தை அனுபவிப்பது என்றால் ரிசார்ட், ஊட்டி செல்வது மட்டுமல்ல..ஊரில் உதிர்ந்தும், காய்ந்தும் கிடக்கும் வெயிலோடு மகிழ்வது. 

காலையில் எழுப்பும்பொழுது அலுப்பாகாதான் இருக்கும். ஆனால் அப்பாவுடன் கதைகள், நகைச்சுவை நிமிடங்களை தவற மனம் வராது. அந்த காலத்தில் முதுமக்கள் தாழி என்று ஒன்று உண்டு. அதிக வயதாகிவிட்டால் ரொம்ப சுருங்கி போய்விடுவார்கள். ஒரு கொட்டாங்குச்சியில் சாதமும்..குத்தி சாப்பிட ஊசியும், ஒரு கொட்டாங்குச்சியில் நீரும் வைத்து வைத்து மூடி பூமிக்குள் புதைத்து விடுவார்கள். பாவம் இப்பொழுது போல கொள்ளை அடிக்கும் ஐ-சி-யூ இல்லாத காலம்.

சில மியுசியங்களில் இன்னும் அந்த தாழி காணக்கிடைக்கும். அது போன்ற ஒரு பெரிய மண் ஜாடி ஒன்று இருந்தது. ஒரு வருடத்துக்கு பல குடும்பங்களுக்கு தேவையான மாவடுக்கள் அதில் மிதக்கும். அப்பாக்கு கீழே விழும் மாவடுக்களை வீணாக்க மனம் வராது. பெரிய பைகள் எடுத்துகொண்டு கிளம்புவோம். அம்மாக்கு இறக்கின வடு வேண்டும் என ஆசை..அது எங்கள் வீட்டில் நடக்காது.

சிறு வடுக்கள் தோப்பில் இறைந்து கிடக்கும். வெயில் ஏறும் முன் பொறுக்க போய் விடுவோம். எத்தனையோ கதைகள்..வெம்பிய மாவடுக்களை பொறுமையாக தூக்கிபோட்டுவிட்டு கெட்டிய வடுக்களாக பார்த்து பொறுக்கி கொண்டு வருவோம். தோப்பை ஒரு சுற்று சுற்றினால் அரை பை தேறும். இது பத்து பதினஞ்சு நாள் நடக்கும். கொத்தவரங்காய், அவரைக்காய் போன்று சில சமயம் ஊடு பயிர் உண்டு. அது பறிக்கவும் போக வேண்டும். ஒவ்வொன்றையும் பழக்கி கொடுத்தது இன்று வெயிலோ, மழையோ எதையும் கண்டுக்காம, உஸ், உஸ் என்று இல்லாமல் இருக்க வசதியாகத்தான் இருக்கு.

புளியம்பழம் பொறுக்க, வேப்பங்கொட்டை பொறுக்கி விலைக்கு போட எல்லாம் ஒவ்வொரு சீசனில் செய்த அனுபவங்கள். எத்தனை லட்சங்கள் கொடுத்தாலும் அந்த அனுபவங்கள் திரும்பி வராது. எல்லாம் முடித்துவிட்டு ஒரு போர் செட் குளியல் போட்டால் அத்தனை மகிழ்ச்சியாகவும், குளுமையாகவும் இருக்கும்.

ஏ.சி யில் கிடைக்குமா வெயிலானுபவம் ? நன்றிப்பா..

No comments: