Friday, July 25, 2014

நெய்த விடம்.

எங்கள் மருத்துவமனைக்கு பெட்ஷீட் ஆர்டர் வாங்க கரூர் பக்கத்தில் இருந்து ஒருவர்வந்தார். அவருக்கு ஒரு வாரம் மார்க்கெட்டிங் வேலை..ஒரு வாரம் தயாரிப்பு வேலை..ஊர் , ஊராக அலைவது அவர் வழக்கம்..நான் தினம் அத்தனை முகங்களை பார்க்கிறேன் என்றார்.நாம் வழக்கம் போல பேரம் பேச ஆரம்பித்தவுடன் உடனே அவர் பெட்ஷீட் தயாரிப்பு கஷ்டங்களை விவரிக்க ஆரம்பித்தார்.
முதலில் கை நெசவுதான் செஞ்சு இருக்காங்க....ஊடுபாவு என்று சொல்கிறார்.தலைமுறை, தலைமுறையாய் நெசவு குடும்பமாம்..நெசவு விட்டால் வேறு எதுவும் தெரியாது என்றார். அடுத்து பவர் லூம் ..நிமிடத்துக்கு முப்பது வரை கூட கட்டை போய் வருமாம்..அடுத்து இப்ப வந்து இருக்கும் ஆட்டோ லூம்கள் பற்றி விவரிக்க ஆரம்பித்தார்..ஒரு நிமிடத்துக்கு அந்த கட்டை நூற்று நாற்பது முறை கூட போயிட்டு வரும் என்றார். அந்தளவுக்கு வேகமாக  நெய்கிறோம் என்றார்.
இதே பின்னலாடை வேறு..நெய்வது வேறு..அவை நிட் வேர் என்று அழைக்கப்படும். பின்னலாடை திருப்பூர் பகுதியை சேர்ந்தது..அது பின்னி, பின்னி..(நெருக்கமான ஒரு நாடா கட்டில் அமைப்பு என்று கற்பனை செய்துக்கொண்டேன்..) உள் இழுத்து வெளி வருவது  என்றார். உள்ளாடை, பனியன்கள் பின்னாலாடை...நாம் அணியும் மற்ற உடைகள் நெய்யும் ஆடைகள்தான் பெரும்பாலும்.  கார்மென்ட்ஸ் என்பது பெரும்பாலும் ஆயத்த ஆடைகளை குறிக்கிறது.

நெய்யும் ஆடைகளில் இரண்டு பகுதி இருக்கிறது..நாம் உபயோகிக்கும் ஆடைகள்..அதை தவிர பெட்ஷீட், தலையணை, ஹோட்டல் , தொழிற்சாலை  , மருத்துவமனை பயன்பாடுகள்  , ஜமுக்காளம் போன்று உடைத்தவிர உபயோகப்படுத்தும் துணி வகைகள். இவற்றுக்கான சந்தை மிகப்பெரியது..நேரடியாக கவனத்தில் கொள்ளப்படாத சந்தை இது. பெரும்பாலும் நேரடி மார்கெட்டிங் மூலம் செய்யப்படுகிறது.

பெங்களூரில் ஒரு வழக்கம் உண்டு..எங்கயும் பேரம் பேசாமல் இருக்க மாட்டார்கள்..எந்த இடத்திலும் பேரம் பேசுவதை தவறாக நினைக்க மாட்டார்கள்..டிஸ்கவுண்ட் உண்டா என்று சகஜமாக கேட்கலாம்..இல்லை என்றாலும் அதற்காக வெட்கப்பட தேவை இல்லை..இங்கு பார்கேயின் கலச்சாரம் அதிகம்..மால்கள் மூலம் இவை கொஞ்சம் குறைந்து வருவதும் நிஜம்..

அதே வழக்கத்தில் பேரம் பேச ஆரம்பித்தவுடன்..நெசவில் இருக்கும் கஷ்டங்களை கூற ஆரம்பித்தார்.. அது எப்பவும் வியாபாரிகளுக்கு வழக்கம்..ஈரோடு, திருப்பூர், கரூர் பகுதியில் நிலத்தடி நீரை நேரடியாக காலையில் குடித்தால் கண்டிப்பாக மாலை மருத்துவமனை செல்ல வேண்டுமாம். சுத்திகரிக்கப்பட்ட நீரை தவிர வேறு எந்த நீரையும் தொட்டுவிட முடியாதாம்..விவசாய நிலங்கள் அத்தனையும் பாழ் என்றார்..எங்களால் எங்கும் நிம்மதியாக சாயம் ஏற்ற முடியவில்லை..மாற்று தொழிலுக்கும் வழியில்லை..இதை நம்பி லட்சகணக்கான மக்கள் இருக்கிறோம் என்றார். உடனே ஒரு பேப்பர் கட்டிங் கொடுத்தார்..அதில் விவசாயிகள் போராட்டம் பற்றிய செய்தி..சாயம் இனி நீரில் கலந்தால் அதை குடித்து உயிரை விடுவோம் என்று போராடிக்கொண்டு இருந்தார்கள். நீர் அத்தனையும் இழந்து அவர்களால் என்ன செய்ய முடியும்?

வழக்கத்துக்கு மாறான அமைதியுடன் கேட்டுக்கொண்டேன்..என் பின்புலம் பற்றி கேட்டார்.. விவசாயம் என்றவுடன் அவரும் அமைதி ஆனார். உடனே பொல்யுஷன் போர்ட் கடுமையான கட்டுபாடுகளை விதிக்கிறது..சாயக்கழிவுகளை சுத்திகரிக்க பத்து கோடிக்கு இயந்திரமும் அதை சுத்திகரிக்க லிட்டருக்கு இரண்டு ரூபாயும் வேண்டும்..ஆனால் அரசாங்கம் இவற்றுக்கு உதவி செய்வதில்லை.ஆனால் பொக்லைன் இயந்திரத்தோடு வந்து மாசுக்கட்டுப்பாடு அதிகாரிகள் பயமுறுத்திக்கொண்டு இருக்கிறார்கள் என்றார்,

அதனால் என்ன..மாசுபட்ட நீரோடு வாழ முடியுமா என்று கேட்டேன்..இப்ப இந்த பெட்ஷீட்க்கு நீங்கள் ஆயிரம் ரூபாய் கொடுக்க தயாராக இருந்தால் எல்லாம் மாறும் என்றார்..பேரம் பேசியதற்கு பதிலடியா..இல்லை செய்தியா? புரியவில்லை..

ஆனால் இப்போதைக்கு எதுவும் மாறாது..லிட்டர், லிட்டராக விஷச்சாயம் தமிழ்நாடு நீரில் கழிவுகள் கலக்கும்.. உலகம் முழுவதும் நெய்யப்பட்ட ஆடையோ, பின்னலாடையோ குறைந்த விலைக்கு பிரான்ட் தயாரிப்பாளர்கள் வாங்கிக்கொள்வார்கள்..ஆனால் மூவாயிரம் கொடுத்து ஜீன்ஸ் வாங்கிப்போடுவோம்..முந்நூறு ரூபாய்  படுக்கை விரிப்புக்கும், அறுபது ரூபாய் தலையணை உறைக்கும் ஒரு மணி நேரம் கதை கேட்போம்..

அங்கு விவசாயிகள் பிளாஸ்டிக் பாட்டிலில் சாய நீரோடு போராடலாம்..குடிக்கவும் செய்யலாம்..நமக்கென்ன..போர்த்திக்கொண்டு தூங்க அருமையான பவானி அல்லது கரூர் போர்வை இருக்கிறதே?