Saturday, December 27, 2014

மாதொரு பாகன்...வாசிப்பு தேவைப்படும் மக்கள்.

மாதொரு பாகன்..
ஆச்சரியம்..ஒரு புத்தகத்தை தமிழ் சூழலில் எதிர்ப்பது. சினிமா போல அடுத்து புத்தகத்துக்கும். ஆனால் படைப்பாளியை மன ரீதியாக காயப்படுத்துவது மிக வருத்தம் அளிக்கிறது.
சில படைப்புகள் படைப்பாளியை விட அதை அனுபவிக்கும் வாசகர்கள் அல்லது பார்வையாளருக்கு மிகுந்த நெருக்கத்தை ஏற்படுத்தும். அவை உலகின் சிறந்த படைப்புகள் ஆகும்.
அவை ஏற்படுத்தும் தாக்கம் சிலரின் வாழ்வை கூட மாற்றும் அளவுக்கு ஏற்படும்..புரட்சிக்கான தாக்கமும் நூல்களின் மூலம் சாத்தியம். மாதொரு பாகனை தம்பி வீட்டில் படித்தேன்..அவன் அதன் தாக்கம் அதிமாகி போன் நம்பர் தேடி எழுத்தாளருக்கு போன் செய்து பேசி இருக்கிறான். கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் உழைப்பு. தமிழில் ஒரு புத்தகத்துக்காக ஏழு வருடங்கள் அதுவும் பொருளாதார ரீதியாக அத்தனை லாபம் அதிகம் இல்லாவிடினும் ஒரு படைப்புக்கு இத்தனை வருடங்கள் உழைப்பு என்பது அவரின் அர்ப்பணிப்பை காட்டுகிறது.
இதை எதிர்ப்பவர்கள் முழுக்க படித்து இருந்தால் அந்த தாக்கத்தில் இருந்து மீள முடியாது. படைப்பை எப்படி அணுக வேண்டும், கருத்தியல் ரீதியாக எப்படி பதில் கருத்துகளை வைக்க வேண்டும் என்று அறியாத விளைவு இது. இதில் மூர்க்கத்தனம் என்பது நாம் எந்தளவுக்கு சமூகத்தில் பின் தங்கி இருக்கிறோம் என்றே உணர்த்துகிறது.
கொங்கு மனிதர்களின் பின்புலமும், வாழ்க்கை முறையும் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. ஒரு காலத்தை காட்டும் கண்ணாடியாக பெருமாள் முருகன் அவர்களின் புத்தகங்கள் இருக்கின்றன.. அவரின் பூக்குழி படித்து விட்டு நம் சமூக அமைப்பை நினைத்து என் உடம்பு முழுக்க நெருப்பு பட்ட எரிச்சல். அங்கு நானும் எரிந்து தணிந்தேன்.
மாதொரு பாகனின் ஒவ்வொரு எழுத்தும் அந்த மனிதர்களோடு , அந்த காலத்தில் நம்மை நடமாட வைக்கும் சக்தி கொண்டது. பெண்மையின் உணர்வுகளை..அதுவும் முடிவு நெருங்கும் இடத்தில் விவரித்து இருப்பது ..ப்ச் சான்ஸே இல்லை..
ஆனால் எல்லாமே நன்மைக்கே என்று தோன்றுகிறது. (அப்படி தோன்றுவது தவறும் கூட ) இதனால் புத்தகங்கள் கவனிக்கப்படுவது நல்லது. அது இன்னும் நிறைய தமிழர்களை அடைய வேண்டிய புத்தகம். இதன் மூலம் எழுத்தாளருக்கு ஏற்படும் மன உளைச்சல் மட்டுமே கவலை அளிக்கும் விஷயம்.
டி.வியில் பேசுங்கள், ஊர்வலம் செல்லுங்கள்..ஆனால் எதிர்க்க வேண்டும் என்று முடிவு செய்தால் சொந்த காசு கொடுத்து வாங்கி ஒரு வரி விடாமல் வாசியுங்கள்.. அந்த படைப்பை முதலில் அணுகவும், அனுபவிக்கவும் கற்றுக்கொள்ளுங்கள்..அதன் பிறகு அதன் இருந்து மீண்டு வந்தால், மனசாட்சியுடன் எதிர்க்க முடியுமா என்று பாருங்கள்.. உங்கள் மோசமான அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு..
முடியவே முடியாது. படைப்பு அப்படி. இது வாசக கர்வம்.

Sunday, December 21, 2014

பெங்களூரு புத்தக கண்காட்சி.

புத்தக திருவிழா..
மொத்த பெங்களுரு மக்கள் தொகையில்
கிட்டத்தட்ட இருவது சதவிகிததிற்கு மேல் தமிழர்கள் உள்ளனர்..அதுவும் இப்பொழுது பரந்து, விரிந்த பெங்களூருவில் கிட்டத்தட்ட இருவது முதல் முப்பது லட்சம் தமிழர்கள் வசிக்கலாம்..
ஆனால் தமிழ் இலக்கிய கூட்டங்கள், சங்கங்கள் பற்றி சாமான்ய, புதிதாக குடிவரும் தமிழர்களுக்கு எதுவும் தெரிவது இல்லை..இவ்வளவு ஆக்டிவாக இங்கு இருக்கிற நானும் இதுவரை ஒரு இலக்கிய சந்திப்புகோ, புத்தக வெளியீட்டு விழாக்கோ சென்றதில்லை..இதே வெளியூருக்கு வாரத்துக்கு ஐந்து அழைப்புகள் எப்பவும் இருக்கின்றன..
புத்தக கண்காட்சி ஐந்து வருஷங்களா சுரத்தே இல்லை..கடந்த வருடம் போடவே இல்லை..எத்தனையோ ஆங்கில புத்தகங்கள் அத்தனை மலிவாக கிடைக்கும்..அவ்வளவு அள்ளிக்கொண்டு வருவோம்..இந்த முறை போட்ட நூற்று சொச்சம் கடைகளில் தமிழ் நான்கு , ஐந்து தான்..பெரும்பாலும் ஆன்மிக, அரசியல் அரங்குகள்..மிச்சம் கன்னடம், வேறு மொழிகள்..
எந்த சிறு நகரத்தை விட பெங்களூரில் தமிழர்கள் அதிகம்..உயிர்மை கூட எட்டிப்பார்க்கவில்லை..காலசுவடு, கிழக்கு, விகடன்..இன்னொரு பதிப்பகங்கள் மட்டுமே பார்த்தேன்..
கால சுவட்டில் ஐயாயிரம் டெபாசிட் கட்டினால் வருடம் ஆயிரத்துக்கு புத்தகமும், வருடம் முழுதும் இதழ்களும் கொடுகிறார்கள்..தஸ்தாவெஸ்கி RS.950 அது வாங்க ஆசை இருப்பினும் அதற்கு பதிலாக ஐந்து வாங்கிவிட்டேன்..
ஆங்கில புத்தக கடைகளும் மிக குறைவு..என்னிடம் உள்ள PDF புத்தகங்களின் விலை கூரையின் மேல்..சென்ற முறை மலிவு விலையில் பெரியவனுக்கு CAPITAL, ANNA வாங்கினேன் ..இப்பொழுது காணவே இல்லை.. செகன்ட் கான்ட் புத்தகங்கள் அள்ளி குமித்து இருப்பார்கள்..அள்ளிக்கொண்டு வருவோம்..அதுவும் மிக குறைவே.. வழக்கம் போல நேஷனல் புக் ட்ரஸ்ட் ல கொஞ்சம் புத்தகங்கள் வாங்க முடிந்தது...ஆங்கிலத்திலும் பல புத்தகங்கள் கிடைக்கவில்லை..ஸ்டீபன் ஹான்கிங்க்ஸ் குழந்தைகள் புத்தகம் தேடினேன்..ம்ஹூம்.
தேடிய பல தமிழ் புத்தகங்களும் கிடைக்கவில்லை..ஏன் எஸ். ரா, ஜெயமோகன் போன்றவர்கள் கூட கண்ணில்படவில்லை..விகடனில் சாம்பிளுக்கு இரண்டு அவ்ளோதான்..
பெங்களுரு சந்தையை மிக குறைத்து மதிப்பிடுகிறார்கள் தமிழ் பதிப்பகங்கள்..கொஞ்சம் நல்ல விளம்பரம் செய்தால் தமிழ் புத்தகங்கள் விற்பனையாகும்..எங்களுக்கு பெரும்பாலும் நேரடிகடைகளில் தமிழ் புத்தகங்கள் வாங்க முடியாது.. இப்படி கண்காட்சிகளில் மட்டும்..அதுவும் மொக்கை பேஸ்புக் ஸ்டேடஸ்களை விட சுமாராக இருந்ததால லைக் கூட போடமுடியவில்லை..
தமிழ் புத்தக பதிப்பாளர்கள் பெங்களூருவை புறக்கணிக்க, பெங்களூரு மக்களும் ஆங்கிலத்துக்கு மாறி பிலிப் கார்ட், அமேசானில் தஞ்சம் அடைகிறார்கள்..
கவனிப்பாங்களா..தமிழ் விற்பனையாளர்கள்...இந்த மாற்றாந்தாய் பிள்ளைகளையும்..

Thursday, December 18, 2014

பகிர்தல் சொர்க்கம்.

பகிர்வதின் சொர்க்கம்.

 கல்வி..கல்வி என்றால் என்ன..

அக்கா பையன் கௌதமிடம் கேட்டேன். ஆர்வம் உண்டாக்குவது. கவனமா ல் க்கு புள்ளி வைப்பது என்றான்.

நல்ல சென்ஸ் ஆப் ஹுயுமர் மட்டுமில்லை..ஹுமாநிடியும் இருக்கு அவனிடம்..M.Tech முடித்து அடுத்தப்படி செல்ல போகிறான்..நடுவில் கிடைத்த நாட்களில் ஏதாவது செய்ய வேண்டும் என்று பெங்களூரு வந்தான்.

கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள்..காலையில் ஒரு பள்ளி, சாயங்காலம் வேறு பள்ளி.. மாலையில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கற்றுகொடுத்தல் .பின்தங்கிய ..வருமானம் குறைந்த மாணவர்களுக்கான பள்ளிகள்.  பாதிக்கு மேல் முதல் தலைமுறை கல்வி கற்கும் குழந்தைகள்..

மிக அருமையான குழந்தைகள்..மிக அற்புத அறிவு..சொல்லிக்கொடுப்பதை அப்படியே உள்வாங்கும் சக்தி..முன்னுக்கு வர வேண்டும் என்ற உத்வேகம்..கண்களில் ஒளி..

அங்கு செல்லும் ஒவ்வொரு நாளும் ஒரு அனுபவம்..கௌதம் சயின்ஸ் லேப் நான் எடுத்துக்கொண்டு செய்கிறேன் என்றான்..அவர்கள் அது வரை லேப் சென்றதே இல்லை..

தினமும் ப்ராடிகல் வழியாக சயின்ஸ்..பயாலாஜிக்கு விடியோ பாடங்கள்..ஒவ்வொரு நாளும் குழந்தைகள் உற்சாகமாய் கற்றனர்..அவன் சொல்லிகொடுத்ததை உள்வாங்கி தினமும் ஒன்று அவர்களே செய்துக்கொண்டு வந்தனர்..அது வரை டாக்டர், இஞ்சினியர் என்றவர்களை சயின்டிஸ்ட் என்ற ஒருவர் இருக்கிறார் எண்று நினைவுப்படுத்தி சயின்ஸ் மேல் ஆர்வம் வரவைத்த நாட்கள்..

இப்பொழுது அவன் மேற்படிப்பு செல்லும் நேரம் வந்துவிட்டது..உடனடியாக குழந்தைகளிடம் விடைப்பெறும் வேலை..

சமூகத்தில் இருந்து எடுத்துக்கொண்டதை சமூகத்துக்கு திருப்பி கொடுக்க சிலருக்கே மனம் வருகிறது..மிகச்சிறிய காலம் என்றாலும்..இனி நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் வருகிறேன் என்று உறுதியும் அவனுக்கு இருப்பது எத்தனை அழகான விஷயம்..

குழந்தைகள் அவனுக்காக பிரார்த்தனைகள் செய்தும்..பத்து நிமிடத்தில் உடனே தோட்டத்தில் இருந்த பூக்களை வைத்து பொக்கே செய்தும், வாழ்த்து அட்டைகள் செய்தும் அசத்தி விட்டனர்..

பாதர் (Father) அவனுக்கு கொடுத்த அன்பளிப்பு..(எவ்ளோ என்று அவன் பார்க்கவில்லை) பணத்தை திருப்பி அவர்களிடமே கொடுத்து சயின்ஸ் லேப் க்கு தேவையானதை வாங்கி கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டான்..

ஈன்ற பொழுதில் நம்ம பையனுக்கு மட்டுமில்லை..அவனை கையில் பெற்ற முதல் ஆள் நான்..பெற்ற பொழுதினும் பெரிதுவக்கும் பேறை ஒரு செயலால் செய்துவிட்டான்..அவனுடைய முதல் உழைப்பின் பணத்தை அப்படியே கொடுத்து விடுவது..ப்ச்..கிரேட்..

இருவருக்கும் கண் கலங்கியது..அவர்கள் செலுத்திய பாசத்தில்..போட்டோ எடுத்துக்கொண்டு , மனம் நெகிழ அவன் மேல் அத்தனை குழந்தைகளும் அன்பு செலுத்தி கண் மூடி பிரார்த்தனை  செய்வதை கவனித்தேன்..

நல்லாருப்போம்..இந்த இளைஞர்களும், குழந்தைகளும் நம்பிக்கை அளிக்கின்றனர்.

நம்பிக்கை வெளிச்சம்..மனமெங்கும், வெளியெங்கும்.


Wednesday, December 10, 2014

பயணம்..பத்து..

பயணம் பத்து..

எங்கு பார்த்தாலும் ச்வட்ச் பாரத் ஸ்லோகன் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.  பையன் கூட சொல்கிறான்....காந்திஜிக்கு பிறகு மோடிதான் இந்தியாவில் என்று..நல்ல விஷயத்தை கையில் முதன் முறையாக எடுத்து இருப்பது மட்டும் இல்லாமல்..மக்களிடம் கொண்டு போய் சேர்த்ததும் பெரிய விஷயம்தான்..

இங்கு பெங்களூரில்  குப்பை போடும் இடங்களில் போஸ்டர்கள்..அபராதம் வசூலிக்கப்டும் என்ற எச்சரிக்கைகள்..குப்பை காம்பவுண்டுகளில் வெள்ளை அடிக்கப்பட்டு குப்பை போடுவதை தடுக்க B.B.M.P பாடுப்பட்டுக்கொண்டு இருக்கிறது..இருப்பினும் இரவில் காய்கறி கடை குப்பையை கவரில் கட்டி வீசுவது சத்தமில்லாமல் நடக்கிறது.

நான் வாஷிங்கடனில் குப்பை சேகரிக்கும் இடம் பார்க்க வேண்டும் என்று சொன்னவுடன் தோழி குடும்பம் அழைத்துக்கொண்டு சென்றார்கள்..

குப்பை சேகரிக்கும் கிடங்கில் ஒரு துளி குப்பையை கூட பார்க்க முடியாமல் மிக சுத்தமாக இருந்தது.பழைய சோபாக்கள் , அட்டைப்பெட்டிகள் ஒரு புறம், காய்கறி குப்பைகள் ஒருபுறம், பிளாஸ்டிக் குப்பைகள், பேட்டரி உள்பட எலக்ட்ரானிக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், பேப்பர் கழிவுகள் என்று தனி தனியே வைத்து இருந்தனர்..

நான் சென்றது ஒரு வட்டத்தில் உள்ள குப்பைகளை சேகரித்து ரீ சைக்ளிங் செய்யும் இடம்..ஊழியர் அன்பாக வரவேற்று விளக்கம் கொடுத்தார்..காய்ந்த எரியும் குப்பைகள் போகும் இடத்தை காட்டினார்..அங்கு சிறிய மின் தயாரிப்பு நிலையம் இருந்தது..அத்தனையும் எரித்து மின் தயாரிக்கிறோம் என்றார்..இந்தியாவின் மின் பற்றாக்குறையையும், குப்பை கிடந்குகளையும் நினைத்துக்கொண்டேன்..

அடுத்து ஈர குப்பைகள்..அத்தனையும் உரம்.அங்கு இருக்கும் மக்கள் வந்து எடுத்துக்கொண்டு தோட்டத்துக்கு உபயோக்கிக்க இலவசமாகவே தருகின்றனர்.. பிளாஸ்டிக், பேப்பர்..ஒன்றை கூட விடுவதில்லை..அதனையும் ரீ சைக்ளிங் செல்கிறது..மெடிக்கல் குப்பைகள் கவனமாக கையாளப்படுகிறது..எல்லாமே பொறுப்பாக நடைபெறுகிறது..தாங்கள் வீசும் குப்பைக்கு தங்கள் வரிப்பணம் செலவழிக்கப்படுகிறது என்று அறிந்து மக்களும் பொறுப்பாக இருக்கிறார்கள்..

ஈர குப்பை, காய்ந்த குப்பையை கூட பிரித்து போடும் பொறுமை பலருக்கு இங்கு இல்லை..

எத்தனை இயக்கம் வந்தாலும் மக்களிடம் பொறுப்புணர்வு..நம்முடைய நாடு , நம்முடைய இடம் சுத்தமாக இருக்க வேண்டும் என்ற பொறுப்பு வர வேண்டும்..குப்பை சேகரிக்கும் முறையை..குப்பை கிடங்குகளை சரிபடுத்தாமல் எத்தனை கோஷம் போட்டாலும் அது வீணாகாத்தான் போகும்..

கழிவறை கட்டுவதோ, குப்பைகளை போடாமல் தடுப்பதோ பெரிய விஷயம் இல்லை..அடுத்து பராமரித்தல் என்ற விஷயம் இருக்கிறது..நம்மிடம் பொறுப்பு இருக்கிறதா என்று அரசும், மக்களும் கேட்டுக்கொள்ளும் நேரம்...

இருக்கிறதா?

Tuesday, December 2, 2014

காவியத் தலைவன்..

காவிய தலைவன்.. சினிமா..

போட்டியும்  பொறாமையும்  எந்த கோடில் பிரிகிறது?. கோடு அறியத்தான் முடியுமா..

எதனாலும் பிரிக்க முடியாத நட்பை பிரிக்கும்  விஷயம் எது.?

கலை, தொழில், காதல் நட்பில் செய்யும் பிரச்சனைகள் என்ன?

இதை வைத்துக்கொண்டு களம் புறப்பட்டு இருக்கிறார் இயக்குனர் வசந்தபாலன்..

களம் பிரிட்டிஷ் கால நாடக காலம்..

அதிகம் மிகைபடுத்த வில்லை...

மீசையை முறுக்கி வீர வசனங்கள் இல்லை..


மனம் அதிரும் பல இடங்களில்..

இசையும் இசைந்தே இருக்கிறது...

கண் முன்னே நம்புமாறு பழங்காலத்தை  கொண்டு வருவது அத்தனை எளிதல்ல..

கதை இதற்க்கு மேல் வேகமாக சென்றால் அந்த காலத்தை ஒட்டி பயணிப்பதில் தடைப்படலாம்..

எப்பவும் வேகம், வேகம் என்று இல்லாமல்..கொஞ்சம் மெதுவாக, அழகாக ஒரு படத்தை ரசிக்க செய்யலாம்..

ஹேட்ஸ் ஆப் ..இந்த  படத்தை கொடுத்து துணிச்சலுக்கு..

மிக அதிக இடைவெளிக்கு பிறகு ரசித்த தமிழ் படம்..

கலர்புல் படமும்..சித்தார்த், பிரித்வி நடிப்பு பட்டையை கிளப்புகிறது..பொன்வண்ணன்..நாசர்..ஒருவரும் வீணாகவில்லை..

பிரித்வி இன்னும் மனசில் நிற்கிறார்..மிக இயல்பாக..நம் மனதை நமக்கே தெரியாமல் பிரிதிவியுடன் ஒப்பிட்டு கொள்ளும் அளவுக்கு மிக அழகான கேரக்டர் வடிவமைப்பு..

பொறாமை என்பதை கையில் எடுத்தால் கத்தி எடுத்த கதை..கத்தியை  எடுத்ப்பதை விட பொறாமையை எடுத்தவன் கதை மோசமாக போகும்..

அவனுக்கு வாழ்க்கை தொலையும் ..ஒரு நிமிடம் கூட தூங்க முடியாது..மிக பரிதாபத்துக்கு உரிவர்கள் இவர்கள்..ஆனால் மிக ஆபத்தனாவர்கள்..

நல்ல படம் தொடர்ந்து மனதில் ஓடும்..ஓடுகிறது காவியத்தலைவன்..