Wednesday, August 13, 2014

பாஸ்டன் திரும்பிய பயணம்...

இந்த கதை இப்பொழுது தேவையா என்று தெரியவில்லை..சொன்னால் தவறு இல்லை.. சிலருக்கு சில விஷயங்கள் உதவவும் செய்யலாம்..

நான்கு வருடங்களுக்கு முன்னால்..ஜுன் இருபத்தி ஒன்று..கொஞ்ச நாளாவாகவே மோப்பம் பிடித்த விஷயம்தான்..வெடிக்கும் வரை வாயை திறக்காமல் இருப்பதே பெரும்பாடு. அன்று வெடித்து விட்டது..ஆறாவது படிக்கும் பையன் நாளையில் இருந்து பள்ளிக்கு செல்ல மாட்டேன் என்று கூறி விட்டான். எனக்கு மிக மிக போர்  அடிக்கிறது..புதிதாக எதையும் கற்றுத்தரவில்லை..பாடங்கள் சுவாரசியமாக இல்லை..என்ன செய்தாலும் இனி ஹோம் ஸ்கூலிங் என்று வீட்டில் வந்து உக்கார்ந்து விட்டான். பள்ளியில் கூட விருப்பமாக அமரவில்லை..அவனுக்கு  தினம் தரும் தண்டனையாக பள்ளி தொடர ஆரம்பித்ததை நானும் உணர்ந்தேன்.

ஒரு தாயாக இது மிகக்கடினம்..சின்ன குழந்தை என்றால் தூக்கிகொண்டு போய் பள்ளியில் விடலாம்..பத்தரை வயது பையன்..அந்த சமயத்தில் ஒரு மாண்டோசரி பள்ளியை பற்றி கேள்விப்பட்டு அங்கு நேரடியாக ஏழாவதில் சேர்த்துக்கொள்ள அனுமதி கேட்டேன்..அவர்களும் பரந்த மனப்பான்மையோடு தகுதி தேர்வு வைத்து சேர்த்துக்கொண்டார்கள்.

அங்கு வகுப்புகள் தகுதிக்கு ஏற்ப குழுவாக இருக்கும். வயதுக்கு ஏற்ப இருக்காது. பத்து பேருக்கு ஒரு ஆசிரியர்..தனி கவனம்..மிகுந்த விருப்பதோடு அந்த பள்ளிக்கு சென்றான். ஏழாவதில் அமர்ந்து இருக்கும் போதே குழுவில் உள்ள மற்றவர்களோடு எட்டாம் வகுப்பு பாடத்தையும் கற்றுகொண்டான். அவனுக்கு பள்ளி விருப்பமாக ஆனது..அடைத்து வைத்து ஊட்டாமல் அவனுக்கு அறிவுப்பசியை தூண்டியது.

அங்கு பொது தேர்வாக திறந்த பள்ளி முறையில் எழுத வைப்பார்கள்..
NIOS என்று..அடுத்த பிரச்சனை..திறந்த முறை பள்ளி கல்வி எந்தளவுக்கு  அங்கரிக்கப்படுகிறது என்று..கிட்டத்தட்ட ஒரு வருடம் அதை பற்றி தீவிரமாக யோசித்தும், அதற்கான புத்தகங்களை பிரிண்ட் எடுத்து பையனிடம் கொடுத்ததும்..ஆசிரியர்களிடம் விவாதித்தும்,, இணையத்தில் தேடியும், நேரடியாக சில அதிகாரிகள், கல்வியாளர்களை சந்தித்தும் அதன் சாதக, பாதகங்களை அறிந்துக்கொண்டேன். நல்ல முறைதான்..ஆனால் சிறு, சிறு கண்ணுக்கு தெரியாத குறைகள்.தாயாக பத்தாம் வகுப்பு மிக முக்கியம் நமக்கு..நம்மால் வீட்டுக்கல்வியை ஒரு ஆப்ஷனாக கூட எடுத்துக்கொள்ள முடியாது.. ஆனால் பையன் திரும்ப ஜெயில் முறை கல்வி அது., எக்காரணத்தை கொண்டும் பத்தாம் வகுப்பு வரை சாதாரன பள்ளிக்கு செல்ல மாட்டேன் என்று சொல்லிவிட்டு உறுதியாக இருந்தான். அவனுக்கு வயது பதினைந்து ஆகாததால் விசாரித்து வைத்து இருந்தேன் தகவல்களை..

ஆனால் அம்மாவாக ஒரு முடிவு வேண்டும்..எனவே  அடுத்த என் படையெடுப்பு இன்டர்நேஷனல் கல்வி முறையும், பள்ளிகளும்.. ஒரு வரியில் சொல்லிவிடுகிறோம், எழுதுகிறோம்...ஆனால் அதற்கான உழைப்பு பல நாட்கள்..திரும்பவும் இணையம், பள்ளிகளின்  கல்வி ஆலோசகர்களின் கருத்துகள், பாடத்திட்ட முறையின் சாதக பாதகங்கள் அனைத்தையும் அலசி ஆராய்ந்தேன்.

ஒரு பள்ளியில்
IGCSE  க்கு வயது தடை இல்லை..எழுதலாம்..அதுவும் விருப்ப பாடமாக ஐந்து பாடங்கள்..எது தேவையோ அதை மட்டும் படிக்கலாம் என சொல்ல, அவனும் அம்மா இந்த வருடமே எழுதுகிறேன், என் குழுவில் பத்தாம் வகுப்பு பாடங்களை படித்து விட்டேன் என சொல்ல..அடுத்து அதற்கான பயிற்சி முறைகள் ஆரம்பம் ஆனது.

மூன்று தனி ஆசிரியர்கள், ஆங்கிலம், இயற்பியல், உயிரியல்..வைத்தேன்.அவன் சோஷியல் பாடத்தை எடுக்கவில்லை..இந்திய முறைப்படி கணக்கு தெரியாத ஒரு குழந்தை பத்தாம் வகுப்பை தாண்ட முடியாது, இயற்பியல் பிடிக்காவிட்டால் வாழ்க்கை பத்தாம் வகுப்போடு நின்று விடும்..ஆனால் அங்கு எழுபத்தெட்டு விருப்ப பாடங்கள்..ஏதாவது ஐந்து எடுத்தால் பத்தாம் வகுப்பு செர்டிபிகேட் கையில். எனவே பதினோன்றாம் வகுப்புக்கு தேவையான பாடங்களை மட்டும் படித்தான்.. ஆறு மாதங்களில் பத்தாம் வகுப்பு தேர்வை வீட்டில் இருந்தபடியே முடித்துவிட்டு சாதாரண பள்ளிக்கு செல்ல தயாராக ஆனான்.

அடுத்து
IIT யில் இல்லை IISC ல் படிக்க திட்டம்.சிறு வயதில் இருந்தே தனியாக எலக்ட்ரானிக்ஸ் கற்றுக்கொள்வதால் அதில் ஆராய்ச்சி செல்வதில் விருப்பமாக இருந்தது. அதனால் FIITJEE கோச்சிங் கொடுக்கும் பள்ளியில் இணைந்தான்..இப்பொழுது வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்புகள் பற்றியும்  சொல்ல ஆரம்பித்தான்..

நடுவில் முகநூல் தோழி சுபா மோகனை  சந்தித்தேன்.இவனை பற்றி கேள்விப்பட்டவுடன் வெளிநாடு அனுப்பு, பயமே இல்லை என்றார். அடுத்த தேடுதல் வேட்டை ஆரம்பம். பல பரிட்சைகள், இணைய தேடுதல்கள், கவுன்சிலர்களிடம் படையெடுப்பு..ஆனால் வெளிநாட்டுக்கல்வியை பற்றி சரியாக வழிநடத்த கவுன்சிலர்கள் பலருக்கு  அதிக அனுபவமோ, அதை பற்றிய ஆழமான அறிவோ இல்லை என்று புரிந்துக்கொண்டு நானும், பையனுமே தேடினோம்...ஒருவர் கட்டுரைகளை திருத்தி கொடுத்தார்..அவரின் ஆலோசனைகள் கொஞ்சம் உதவின..

கடைசியாக பலப்படிகளை தாண்டி பதினாறு வயதில் இன்று பன்னிரெண்டாவது
CBSE முறையில் முடித்துவிட்டு..பாஸ்டனில் நல்ல பல்கலைக்கழகத்தில் நூறு சதவிகிதம் கல்வி உதவியோடு சேருகிறான்.. ஆனால் ஒரு தாயாக பல நாட்கள் தூங்கவில்லை.. நாளை பயணம்..பதினொன்றாம் வகுப்பில் அவன் வகுப்பு நண்பர்கள் படித்துக்கொண்டு இருக்க , இவன் பயணம் தனியாக ஆகிவிட்டது..இரண்டு வருடங்கள் தாண்டியதை விட இரண்டு வருடங்கள் அழகிய பள்ளி நாட்களை இழந்தது கொஞ்சம் வருத்தம் அளிக்கிறது..ஆனால் வேறு வழியில்லை..

குழந்தைகளை அவர்கள் விருப்பபடி வளர்ப்பது என்பது மிகுந்த சவால்,,நம் சூழ்நிலையில்..குடும்ப, சமூக அழுத்தங்களை தாண்டி முடிவெடுக்க மிகுந்த மனப்பலம் தேவை..இதில் வெற்றி, தோல்வி என்பது எதுவும் இல்லை..ஒரு பயணம்..அடுத்தக்கட்ட பயணத்துக்கு தயாராக கிளிக்கு சிறகுகள் முளைத்து இருக்கிறது.. கூடு தவிக்கிறது. பிரிவை நினைத்து..அம்மாக்கிளிக்கோ இறக்கையை பற்றிய பெரும்கவலை..ஆக மொத்தம் எல்லாவற்றையும் மறைத்துக்கொண்டு சந்தோஷமாக அவனை அனுப்ப தயாராகிவிட்டோம்..அனைவரின் ஆசிகளுடனும், வாழ்த்துக்களுடனும்..