Saturday, May 31, 2014

வெல்லுமா நேசம்?



வெல்லுமா நேசம்?

நாங்கள் சிறுமியாக இருந்த காலத்தில் நடிகர்கள் சிகரெட் பிடிப்பார்கள், கல்லூரி மாணவர்கள் வளையம் விடுவது கூட பேஷனாக கருதப்பட்ட காலம். வீட்டில் சிலருக்கு பழக்கம் இருந்தது.

இவர்தான் இந்த பதிவுக்கு ஹீரோ..அவருக்கு விளையாட்டாக கல்லூரியில் ஆரம்பித்த பழக்கம், கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கொள்ள தொடங்கி இருக்கு. வியாபாரத்தில் மிகபெரிய வெற்றிகளை சந்தித்தார். இரவு,பகலாக அயராத உழைப்பு, அனைவருக்கும் உதவும் குணம், ஊரில் நல்ல பெயர் எடுத்து பெரிய மனிதர்களில் ஒருவர் என்ற  தகுதியும், மரியாதையும்..அதுவும் சிறிய வயதில்..

மூன்று குழந்தைகள், அருமையான மனைவி, மிகப்பெரிய குடும்பம், நல்ல வசதி என்று எல்லாவிதத்திலும் வளர்ந்து கொண்டு வந்தவருக்கு ஒரே ஒரு பிரச்சனை..ஆம்..சிகரட்..குழந்தைகளுக்கு தெரிந்தும், தெரியாமலும் சிகரெட் பழக்கம் தொடர்ந்தது .மிக அதிகப்படியான வேலை..டென்ஷன்..ஒரே தீர்வு சிகரெட்...முதலில் மெதுவாக பழகும்,..கொஞ்சம், கொஞ்சமாக சுகம் தரும்..டென்ஷன் குறைவது போல இருக்கும்..ஒரு கட்டத்தில் அது இல்லாவிட்டால் டென்ஷன் வரும்..அதுவே டென்ஷனாகி போகும்.
ஒரு வேலை இல்லாவிட்டால் வாழ்வு சூன்யமாகி போகும்..

எத்தனை பெரிய மனிதர்களையும் இத்தனூண்டு சிகரெட் வீழ்த்தி இருக்கிறது. ஹீரோவிற்கு அப்ப
39 வயது..நெஞ்சு அடைத்துக்கொண்டு வருவது போல இருந்தது..குடும்ப மருத்துவர் உணவினால் ஏற்பட்ட வாயு தொல்லை என்று சொல்லிவிட்டு சென்றார்..மூச்சு விட முடியாமல்  போகவே உடனே காரைக்கால் பெரிய ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கொண்டு போங்க என்று சொன்னவுடன் உறவினவர்களுக்கு விபரீதம் உறைத்தது.

பெரியப்பெண் ஹாஸ்டலில், அடுத்து இரு சிறு குழந்தைகள்..மனைவியும் கதறி அழுதப்படி ஐ.சி.யூ வாசலில் கை பிசைந்தபடியான துக்க காத்திருப்பு. மூன்று நாள் செல்ல வேண்டும் என்று டாக்டர்கள் கெடு..ஆஸ்பத்திரி முழுக்க உறவினர்கள், ஊர்காரர்களின் கூட்டம்..கட்டுப்படுத்த முடியாத பேரன்பு அது..டாக்டர்கள் பார்வையாளர்கள் கூட்டம் செல்லாவிட்டால் மருத்துவம் பார்க்க முடியாது என்று கூறியவுடன்,.கார், வண்டி, பேருந்து என்று எப்படி, எப்படியோ வந்தவர்களை முகத்தை கூட காட்டாமல் நெருங்கிய உறவினர்கள் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துக்கொண்டு இருந்தனர்.

கொஞ்சம்  மனநிலை சரியில்லாத ஒருவர் எப்படியோ தப்பி ஐ.சி.யூ வாசலுக்கு ஒரு கிலோ திராட்சை பழத்துடன் வந்து ..ஐயா நல்லா எழுந்து பிழைக்க வேண்டும் என்று கூறியபோது கண்ணீர் விடாதவர்கள் பாவம்.. மருத்துவமனை ஊழியர்கள் உள்பட..அத்தனை அன்புக்கு பாத்திரமானவர் நினைவிழந்து உள்ளே..அப்பொழுது எல்லாம் இதய பாதிப்புக்கு இத்தனை நவீன சிகிச்சைகள் இல்லை..இருந்தும் சிறு டவுன்களில் எட்டி பார்க்கவில்லை..உடம்பில் சொருகி இருக்கும் அத்தனை குழாய்களையும் பிய்த்து விட்டு ஓடுவதை பார்க்க அத்தனை வேதனையாக இருக்கும்..

அவர் பேச்சுக்கு யாரும் மறுபேச்சு பேசியதில்லை..ஆனால் கட்டுப்பட்டு இருக்கவேண்டுமே மருத்துவமனையில்..ஒரு மாதத்துக்கு மேலே மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டு இருந்ததாக நினைவு. குழந்தைகள் தனி, தனியே...வீட்டு பெரிய பாட்டி ஏதோ ஒரு பாடலை பாடி குழந்தைகளை கட்டிப்பிடித்து அழுதது நினைவு இருக்கு..

முப்பத்தியொன்பது வயதில் இத்தனை பெரிய பிரச்சனை வர ஒரே காரணம் சிகரெட்..அன்னிக்கு தப்பித்தது மிகப்பெரிய விஷயம். அன்றில் இருந்து சிகரெட் பழக்கத்தை விட்டார்..நடுவில் அது அவரை விடவில்லை என்று பிறகு கேள்விப்பட்டோம்..

பத்து வருடம் பார்த்து, பார்த்து கழிந்தது..அவ்வபொழுது டெஸ்ட் அது, இது என்று.. மகள்களுக்கு படித்த உடனே திருமணம் செய்து முடித்தார்..மரண பயம் இருந்து இருக்குமோ..கடமைகளில் அவசரம்..

ஹீரோ  வீட்டில் மிகப்பெரிய விசேஷம். பத்திரிக்கை அடித்து அனைவரும் வருகை..உறவினர்களுடன் குதூகல பேச்சு..காலை நான்கு மணி. மனைவியின் அழகிய கோலம் வாசலில்..மனைவியிடம் பாராட்டை தெரிவித்துவிட்டு உள்ளே வந்தார்..இருவர் படம் ரிலீசான நாள். அத்தனை பணத்தையும் மணிரத்னம் எப்படி எடுக்க முடியும் என்று பேசிக்கொண்டு காபியை ஏந்தியவர் பனியன் முழுது காபி சிந்தியது..அப்படியே சாய்ந்தார்..இந்த முறை சிகரெட் ஜெயித்துவிட்டது..அதுவும் சின்ன வயதில் சில காலங்கள்.. பிடித்த சிகரெட்..இந்த முறை வயது
49 மட்டுமே..பட்டுப்புடவையில் இருந்த உறவினர்கள் அவசரமாக உடை மாற்றினர்.. மருமகன் இறந்ததை தாங்க முடியாத மாமனார் மயக்கமடைந்தார்..90 வயது பாட்டிக்கூட திடமாக வளைய வந்த நேரத்தில்..சிறுவயதில் முக்கியமானவரை குடும்பம் இழந்தது..

மனம் கனக்கிறது..இறந்தது என் அப்பா..என்னுடைய ஹீரோ..

ஒரு மகளாக எத்தனை சாபங்கள் கொடுத்து இருக்கிறேன் அந்த சிகரெட்டுக்கு..அப்பொழுது மனதில் பயங்கர வேகம்..அப்பாவை அழித்த அத்தனை சிகரெட் முதலாளிகளையும் பழிவாங்க வேண்டும் என்ற வெறி கூட எழுந்தது. சிகரெட்டை ஒழிக்க பாடுபட வேண்டும் என்று சபதம் எடுத்ததாக நினைவு..மசான வைராக்கியம். .
43 வயதில் இருந்து வாழ்கையை அம்மா தனியாக எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம்.

சாக்குபோக்குகள்  ஆயிரம் இருக்கலாம்..ஆயிரம் முகேஷ்களை பறிகொடுத்து இருக்கிறோம்..அண்ணன், தம்பி, மகன், மருமகன், தந்தை, கணவர் என்று சிகரெட் க்கு பலிகொடுத்துக்கொண்டே இருக்கிறோம்..ஆனால் அது ஜெயித்துக்கொண்டே இருக்கிறது.. அது நம்மை அடக்கி ஆள்வதா? என்ற கோபத்தில் விட்டொழிக்க வேண்டும்..ஜஸ்ட் தூக்கி ஏறிய வேண்டும்..இதுவே கடைசி என்று..அன்பானவர்களின் முகத்தை நெஞ்சில் தேக்கினால் எதுவும் எளிது..

Tuesday, May 20, 2014

இசையும், நானும்.

ஏதோ எழுதினோம் என்று எழுதிவிட்டு போக முடியுமா இந்த சந்திப்பை..

காலையில் இருந்தே பரபரப்பு, தரன் அசதியில் தூங்கிக்கொண்டு இருந்தார், எழுப்பி உடனே கிளம்புங்க போகனும்னு சொன்னேன்..மனதில் சொல்ல முடியாத பரபரப்பு..காரில் போனோம், நண்பர் கூட்டிக்கொண்டு போனோர், காத்திருந்தோம், நண்பர் பழனி பாரதி அவர்கள் அறைக்கு கூட்டிக்கொண்டு சென்றார் என்று ஒரு பதிவாக அன்றே போட்டுவிட்டு சென்று இருக்கலாம். அப்படியே போட்டோவையும் போட்டுவிட்டு இரு நாளில் மறந்தும் இருக்கலாம்.

ஆனால் இசை என்பது அப்படி இல்லை..அதுவும் இளையராஜா இசை..நம் காலத்தில் அவரோடு பிறந்து, அவரோடு வளர்ந்துவிட்டோம். ஒரு நாள் கூட அவர் இசை இல்லாமல் கழிந்தது இல்லை. நான் அதிகம் இசையில் மூழ்குபவள் இல்லை..நானே என்னை ப்ராடிகல் ஆசாமியாக கருதிக்கொண்டு இருப்பவள்.

ஆனால் இளையாராஜா அவர்களின் இசையை முகநூல் வந்தப்புறம் அதிகம் கேட்க ஆரம்பித்தேன். எந்த வரிகளுக்கும் இழைந்து  போய் கற்பனையை தூண்டும் இசை. கேட்க, கேட்க அலுக்காத இசை. எந்த இடத்துக்கும் பொருந்தி போகும் இசை.  எரிமலை கிளறி, கொதிக்கும் சாந்து குழைய பொங்க வைக்கும் இசை..

நண்பர் வாங்க பார்க்க ஏற்பாடு செய்கிறேன் என்று அழைத்தவுடன் உடனே கிளம்ப தயார் ஆகிவிட்டேன். எப்பவுமே படைப்பாளிகளை பார்க்கும் ஆர்வம் இருந்தது இல்லை. தூரத்தில் இருந்து பிம்பம் கலையாமல் ரசிக்கவே பிடிக்கும். ஒவ்வொருவருக்கும் உள்ள பிம்பதை மனதில் கலையாமல் பார்த்துக்கொள்ள நினைப்பேன். அருகே நெருங்கினால் பிம்பம் உடைந்து இயல்பான நம்மை போன்று மனிதர்களாக நினைக்க வைக்கும்.அதனாலேயே நெருங்கி போக தயக்கம் உண்டு.

சிறு வயதில் பிடித்த பாட்டு "மயங்கினேன் சொல்ல தயங்கினேன்"..முதல் நாள் மாலை எங்கிருந்தோ ஒரு பாட்டு "பனி விழும் மலர் வனம், உன் பார்வை ஒரு.." என்று காற்றில் தவழ்ந்து வந்தது. இந்த பாட்டுகள் எப்படியோ மனதில் ஒரு முறை வந்துவிட்டால் போதும்.மனம் தானே ரீவைண்ட் செய்து, தேய்ந்த ரிகார்ட் ப்ளேயர் போல திரும்ப திரும்ப ஒலிக்க செய்வதில் வலியது. அதுவும் இளையராஜா அவர்கள் பாட்டின் வரிகளுக்கு ஒரு சிறப்பு உண்டு..பச்சக் என்று நன்றாக ஒட்டிக்கொண்டு ரிகார்டரில் ஓட விடும்.
அன்று முழுக்க பனி விழும் மலர் வனம்..நண்பரோடு காரில் செல்லும் வேளையில் அவரின் பாட்டுகள்..எங்குதான் இல்லை ராச இசை....தாலாட்டுக்கு அவரின் இசை..என் தம்பி மிக சிறிய குழந்தை..ராசாத்தி உன்னை பாட்டு பாடித்தான் தூங்க வைப்போம். என் இரண்டு குழந்தைகளுக்கு கண்ணே கலைமானே பாட்டுதான் தாலாட்டு...அது கிட்டத்தட்ட குடும்ப பாட்டு போல ஆனது.அது பாடாமல் குழந்தைகளை தூங்க வைத்தது இல்லை.

அடுத்து அடுத்து அவரின் பாட்டுகள் பரந்து விரிந்த இடங்கள் கட்டுக்குள் அடங்காதவை..ஊருக்கு வந்தால் கொதிக்கும் வெயில் இடைவேளையில் சுட, சுட பாய்லர் டீ குடித்துக்கொண்டு அவரின் பாட்டை கேக்கும் நேரத்தில் தமிழ்நாட்டின் மண் பாசம் பொங்கும். பக்கத்துல இருக்கும்  கல்யாண மண்டபத்தில் அரைச்ச சந்தனம் பாட்டு மஞ்சள் நீராட்டு விழாவை முன்னிட்டு ஒலிக்கும். கல்யாண வீடு முதல் கருமாதி வரை ஸ்பீக்கர் கட்டிய இடமெல்லாம் ராசாவின் இசை கேட்டு வளர்ந்த தலைமுறை நாம். இரண்டு கரோக் பார்ட்டிகளில்  சமிபத்தில் கலந்துக்கொண்டேன்..ஆன்ம இசையாக ராச இசையையே பெரும்பாலும் தேர்ந்து எடுத்து பாடி, உருகி கொண்டு இருந்தோம்.

அவரை சந்திக்க பிரசாத் ஸ்டுடியோ வரசொன்னார். ரிசப்ஷனில் பேராசிரியர் பர்வீன் சுல்தானா .பார்த்தேன். குட்டியான, அழகான சந்திப்பு. பிறகு உள்ளே அமர வைத்தார்கள். பிரசாத் ஸ்டுடியோ..ஒரு நிமிடம் இசை உடலில் எழும்பி அடங்கியது. மெதுவாக நோட்டம விட்டேன். மனம் யாருடனும் பேச்சில் லயிக்கவில்லை..அந்த காலத்து நாற்காலிகள். எத்தனை பேர் இங்கு நாம் கேக்கும் ஒரு துளி இசைக்கு வேலை செய்து இருப்பார்கள் என்று நினைவு வந்தது. எந்த, எந்த  கவிஞர்கள் பாடல் எழுத் போயிருப்பார்கள் என்றெல்லாம் யோசனை, ஒரு வரலாற்று சின்னத்தை  பார்க்கும் வேளையில் என் கண் முன்னே ராஜா, ராணி, மக்கள், யானை என்று அனைத்தையும்
you tube video ஆக்கி கற்பனையில் ஓட விடுவேன்.. போர்க்களம், சந்தை என்று எந்த வரலாற்று தளத்துக்கும் கதையோடு கற்பனை செய்வேன். எனவே எங்கு போனாலும் அரசாங்க கைடு தேடி அவரோடுதான் கதை கேட்டுக்கொண்டு சொல்வேன்.

பிரசாத் ஸ்டுடியோவும் ஒரு இசை வரலாற்று மற்றும் நிகழ்வு சாட்சியாகதான் தோன்றியது.  இசை மேதைகள், பாடகர்கள், இசை அமைப்பாளர்கள், இயக்குனர்கள், கவிஞர்கள், நடிக, நடிகையர்..எத்தனை இசை வல்லுனர்கள், எடிட்டர்கள், தொழில் நுட்ப வல்லுனர்கள் நடமாடி இருப்பர் என்று மனதில் காட்சிகள் விரிந்தது..
முன்பு போட்டோவில் பார்த்த ப்ரசாத ஸ்டுடியோ இசை கோர்ப்பு நிகழ்ச்சிகள் மனக்கண் முன் வந்து ஓடியது. அவர்களை அங்கு பொருத்தி பார்த்து மனதில் இசையை ஓட விட்டேன். என்னை விசித்திரமாக பக்கத்தில் இருந்தவர்கள் பார்த்து இருக்கலாம்..என்னடா இது ஒரு music studio வை இப்படி ரசிக்கிறா என்று..ஆனால் நாம் ரசிக்க பிறந்தவர்கள்..ஒவ்வொரு நிகழ்வையும் ரசிக்கவே பிறந்தவர்கள் என்று தீர்மானமாக நம்புகிறேன். அங்கு அமைதியாக இருக்க வேண்டும் என நண்பர் என் குணம் தெரிந்து வலியுறுத்தி இருந்தார்..ஆனால் ஒஜுவை எப்படி அமைதியாக இருக்க செய்வது என்று புரியவில்லை.. நிமிடத்துக்கு நான்கு கேள்விகள் உதிக்கும், அனைத்தையும் நான் விளக்க வேண்டும்..எப்படியோ சமாளித்து விட்டேன்.


ஆனால் நண்பர் பழனி பாரதி அவர்களுடன் பேச முடியாத நிகழ்வாக போய் விட்டது. அந்த சூழலில் என்ன பேசுவது என்பது கூட தெரியவில்லை. காற்றே, காற்றே பாடலை பற்றி பேசாமல் போய்விட்டோம் என்ற வருத்தம் பிறகு வந்தது.. அவருடன் புகைப்படம்  எடுத்துக்கொண்டு உள்ளே சென்றோம். அமைதியாக உள்ளே நுழைந்தோம். வெண்ணிற உடையில் இசை அரசர்.. ஒஜுவை ஆசிர்வாதம் வாங்கி கொள்ள சொன்னேன்..உனக்கு நல்லா பாட்டு வரும்..ஆசிர்வாதம் வாங்கிக்கோ என்று கூறியபொழுது ஓடிவிட்டான். உடனே இளையராஜா அவர்கள் குழந்தையை விடும்மா என்று மெதுவாக கூறினார். குழந்தைகளின் இயல்பை சிதைக்காத அனைவரையும் மிகப்பிடிக்கும். அவரின் அமைதியை குலைக்கும் விதமாக குழந்தை நடந்துக்கொன்டாலும் அதை இயல்பாக  அதுவும் சந்தோஷமாக எடுதுக்கொண்டதற்க்ககாவே அவர் மன சிம்மாசனத்தில் உயரத்தில் அமர்ந்தார்.

அதிகம் பேசவில்லை, எதுவும் சொல்லவில்லை..பாடல்கள் பற்றிய பாராட்டுகளுக்கு சந்தோஷமாக தலை அசைத்தார்..முதலில் எனக்கு பேச்சே வரவில்லை..அவரை பார்த்தவுடன் நதி மூலத்தை தரிசித்த உணர்வு..இங்கிருந்துதானே அத்தனை ஒலிகளும் புறப்பட்டு இருக்கு..உலகம் முழுதும் காற்றில் பரவும் ஒலிகளுக்கு சொந்தகாரார்..அன்டார்டிகா முதல் ஆர்டிக்வரை இந்த இசை பயணம் போகாத தூரமே இல்லையே..அருவியாய், நதியாய், கடலாய், அலையாய் பரந்த இசையின் மூலம் இந்த சின்ன அறையில் அமைதியாக இருக்கிறதை வியந்த  மன உணர்வுகள்.. அமைதியாக வெளியே வந்தோம்.


திரும்ப காரில் வரும்பொழுது யாரிடமும் பேசவில்லை. அந்த கணங்களில் இருந்து மீள விரும்பவில்லை..ஒவ்வொன்றாக இசை அதிர்வுகள் மனதை ஊஞ்சல்

இருப்பினும் நன்றிகள் நட்புகளுக்கு.. நண்பர் ராஜாராமன் அவர்களுக்கும் நண்பர் பழனி பாரதி அவர்களுக்கும்.

Monday, May 5, 2014

சென்னையும், நானும் 1..

ஒரு நான்கு நாட்கள் நாற்பது நாட்களுக்கான அனுபவங்களை ஒளித்து வைத்துகொண்டால் எப்படி இருக்கும்? ..மணி நேரங்கள் நிமிஷங்களாக பிரிக்கப்பட்டு ஓடிக்கொண்டு இருந்தன..ஊருக்கு வந்து அலுப்பாக தூங்கினால் போதும் என்பதை விட அனுபவங்களை வரிக்க நான்கு மணிக்கு எழுந்து எழுத சொல்கிறது மனது..

எழுத, பகிர ஆரம்பித்து விட்டால் ஏதோ ஒரு வடிவில் எழுதிக்கொண்டே இருக்க வேண்டும், இல்லாவிட்டால் ஏதோ இழந்தது போல தோன்ற ஆரம்பித்து விடுகிறது..இதற்கு பேஸ்புக் ஸ்டேடஸ்களும் விதிவிலக்கல்ல..சொல்ல முடியாது..எங்கோ பகிரப்படுவது நம் மனதை ஒரு நிமிடம் உலுக்கிவிட்டு செல்வது போல இதுவும் எங்கோ ஒரு மனதை தொடலாம் அல்லது  ஒதுங்கி போக செய்யலாம்.  புகழ்பெற்ற எழுத்தர்கள் எழுதிய புத்தகங்கள் வாசிக்கப்படாமல் என் புத்தக அலமாரியில் இருக்கும்பொழுது இங்கு பகிர(எழுத) வந்திருப்பது சரியா என்றும் தோன்றுகிறது.

 அடியில் நாய் படுத்திருக்கும் பெஞ்சை கவனமாக விலக்கிவிட்டு நெரிசலுடன் இருந்த பிளாட்பாரம் பெஞ்சை பகிர்ந்துகொண்டு வழக்கம் போல பேஸ்புக் லைக்குகள் வாரி வழங்கி கொண்டு இருந்தேன்..முன்பெல்லாம் நிறைய புத்தகங்கள் இல்லாமல் எந்த பிராயணமும் நடைபெறாது..எங்கும் கையில் பத்திரிக்கையோ , புத்தகமோ கைவசம் இருக்கும்..எந்த நேரத்தில் மாறியதோ இப்பொழுது வாங்குவதில்லை..வாங்கினாலும் புரட்டிவிட்டு செல்போனை நாடுகிறது மனம்..நல்ல எழுத்துகளை விட அறிமுகமான நண்பர்களின் பதிவுகள் அதிகம் ஈர்க்கிறது..வாசிப்பானுபவம் எப்பொழுதாவது ப்ளாக் ஷேர் செய்யப்படும் பதிவுகளிலும், சிலரின் கவிதைகளிலும் கிட்டிவிடுவதால் அதைக்கண்டு மனம் திருப்தி அடைந்து விடுகிறது.

ஒரு மணி நேர ரயில் தாமதம்..இரவு தூக்கம் போச்சே என்ற கவலையில் பயணிகள். அடுத்த ரயிலுக்காக காத்திருக்கும் அறிமுகமான தம்பதியருடன் குசலம் விசாரித்துவிட்டு வாட்ஸ் அப் அரட்டை தொடர்ந்து கொண்டு இருந்தது. ப்ளாக் போய் பேஸ்புக் வந்து பேஸ்புக் போய் வாட்ஸ் அப் வந்து வெறும் அரட்டையில் பொழுது போய் விடும் போல..இரவு ரயிலில் பர்த் ல் படுத்துக்கொண்டு நிறைய பயணிகள் யாரோ யாரிடுமோ வாட்ஸ் அப் ல் கதைத்து கொண்டு வருவது கண் கொள்ளா காட்சி.பக்கத்தில் உள்ள மனிதர்களை தவற விட்டாலும் எங்கோ உள்ள மனிதர்களிடம் தொடர்பு கொண்டு இருப்பது..மனிதர்கள் மனித மனங்களை அன்புக்காக தேடி அலைந்துக்கொண்டே இருப்பதை நிரூபிக்கிறது.

காலையில் வழக்கம் போல தாமதம் ஆனதை சபிக்காமல் தூக்கம் தொலையாமல் வந்ததுக்கு சந்தோஷப்பட்டுகொண்டே நடந்து வரும் பாதையில் கொசுக்காக கலர், கலராக பாக்ஸ் அமைப்பு தற்காலிக தூங்கும் அறை அமைத்து தூங்கி கொண்டு இருப்பவர்களை பார்த்து இத்தனை மனிதர்கள் தினமும் இங்கே தூங்குகிறார்கள்..இவர்கள் எதற்கு இங்கே ? ஏன்? பயணிகளா? கூலி தொழிலாளிகளா? தினம் ஒருவரே கொசு வலை கட்டி நிரந்தரமாக ஒரே இடத்தில்   தூங்க முடியுமா என்று யோசனைகள்..ஒவ்வொரு முறையும் இது பற்றி கேக்க வேண்டும் என்பது மட்டும் தள்ளிக்கொண்டே போகிறது.

ரூமுக்கு வந்து சிறிது நேரத்தில் "
R u Safe " என்ற எழுத்து வாட்ஸ் அப் ல் மிளிர்ந்தது. உடனே டி.வி போட்டால் நாங்கள் வந்த ரயிலுக்கு பிறகு வந்த ரயிலில்  குண்டு வெடிப்பு. போகும், வரும் ரயில்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. அடுத்த ரயிலில் வந்திருந்தாலோ, இன்னும் தாமதம் ஆகி இருந்தாலோ எந்த இடத்தில் தவித்துக்கொண்டு இருந்து இருப்போம் என தெரியாது. என்னோடு அடுத்த ரயிலுக்காக  அமர்ந்து இருந்த வயதான தம்பதிகள் பற்றி ஒரு கவலை வந்து போனது.உடனே காலிங்பெல்.. .போலீசார் விசாரணைக்கு ..வெளியூரில் இருந்து வந்து தங்கி இருப்பவர்களை விசாரிக்கிறோம் என்று கூறினர். விசிட்டிங் கார்ட் காட்டியவுடன் மரியாதை கொஞ்சம் கூடியது போல தெரிந்தது. போலிசுக்கு கொஞ்சம் கடுமையாக இருந்தே பழக்கம் ஆனதோ?

வெளியே வந்தால் எங்கு பார்த்தாலும் போலிஸ் தலைகள். சரி சென்னை போலிஸ் வேகமாக செயல்ப்படுகிறார்கள் என்று கொஞ்சம் மனதுக்கு இதமாக இருந்தது. சில சமயம் கோழி குஞ்சு அணைப்பு போல மக்களுக்கு அரசாங்கத்தின் பாதுக்காப்பு பற்றிய நிம்மதி தேவையாக இருக்கு.

அன்று இரவில் ஒரு பார்ட்டி.. அது அடுத்த பதிவில்...ஸ்டேடஸ் பார்த்துவிட்டு தந்தி டி.வி கோகுல் போன்.. குண்டுவெடிப்பு போலிஸ் விசாரனை பற்றி என்று..சரி என்று..எல்லா அனுபவத்தையும் சொல்லுங்க எடிட்டிங் செஞ்சுக்கறோம் என்று சொல்ல..இருவது நிமிஷம் மூச்சு விடாமல் பேசிக்கொடுத்தேன்..மூச்சு மட்டும் பதிவு பண்ணி எப்படி போட்டார்கள்? ஆனால் இருவரை தூக்க கலக்கத்தில் எழுப்பி என்னை டி.வி ல் சில நொடிகள் பார்க்க வைத்ததுக்கு எனக்கு தூக்கம் வராமல் போகட்டும் என்று சபித்து விட்டார்கள்..எனவே தூக்கம் போய் இந்த பதிவு.