Saturday, April 9, 2016

என் கதை. நன்றி Your Story

'நள்ளிரவில் கழுத்து நிறைய நகைகளுடன் என்றைக்கு ஒரு பெண் தனியாக அச்சமின்றி தெருவில் நடந்து செல்ல முடிகிறதோ, அன்றைக்குத்தான் உண்மையான சுதந்திரம் கிடைத்ததாகச் சொல்ல முடியும்' என்று கூறினார் தேசப்பிதா மகாத்மா காந்தி. அவருக்கு இன்று ஃபேஸ்புக்கில் அக்கவுண்ட் இருந்திருந்தால் இப்படிச் சொல்லியிருக்கலாம்...
"ஒரு பெண், தான் விரும்பி எடுத்த செல்ஃபியையும், தன் மனதில் உதித்த எண்ணத்தை எடிட் செய்யாமலும் 'பின்விளைவுகள்' ஏதுமின்றி என்றைக்கு ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட முடிகிறதோ..."

ஆம், ஃபேஸ்புக்கில் நட்பு வட்டாரத்துடன் தங்கள் படங்களைப் பகிர்ந்து மகிழ்ந்தால், அது எங்கெங்கோ வெவ்வேறு அவதாரத்தில் வலம் வந்து அதிர்ச்சி அளிக்கின்றன. கொஞ்சம் கவனம் பெறும்படி செயல்களில் ஈடுபட்டாலோ அல்லது தீவிரமாக எழுதினாலோ வேறு விதமான எதிர்வினைகளை சந்திக்க நேரிடுகிறது.
இத்தகைய சூழலில், ஃபேஸ்புக்கில் மிகத் தீவிரமாக இயங்கி, அதன் மூலம் பல தளங்களில் கவனம் ஈர்த்துள்ள கிர்த்திகா தரண், பெண் என்பதாலேயே ஃபேஸ்புக்கில் சந்திக்க நேர்ந்தப் பிரச்சினைகள் பற்றியும், அதை எதிர்கொண்ட விதம் குறித்தும் தமிழ் யுவர் ஸ்டோரியுடன் அனுபவங்களைப் பகிர்ந்தார். அது அப்படியே அவர் மொழி நடையில்...


நாங்க தனி ஆள் அல்ல...\
ஆங்கிலத்தில் இரு வரி பதிவுகள், அங்கே போனேன், இங்கே போனேன் என்று சில புகைப்படங்கள், இரண்டு புத்தர் அல்லது ஜென் தத்துவ பகிர்வுகள்... பத்து சொந்த பந்தம், அக்கம் பக்கம், கல்லூரி, பள்ளித் தோழர்களைக் கண்டுபிடித்து அளவாடுதல்கள்... இப்படிதான் பல பேரின் ஃபேஸ்புக் பக்கங்கள் போல என் பக்கமும் சென்றது.

ஒருநாள் தோழி, 'வா கவிதைப் பக்கம் திறந்து இருக்கிறோம். வெறும் கல்லூரி மற்றும் தெரிந்தவர்கள்' என்று கூற, அப்பொழுதுதான் தமிழில் எழுதும் இத்தனை பேர் இருக்கிறார்கள் என்றுக் கண்டுகொண்டேன். அப்படியே வெளியேறி ஒவ்வொரு பக்கமாக போய் நானே சேர்த்துக்கொண்டு, அவர்கள் கொடுப்பதை ஏற்று கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்தேன். ஒரு தோழி சொன்னதால் பப்ளிக் செட்டிங் வைத்து பதிவுகள் போட ஆரம்பித்தேன். அதனால் ஃபாலோவர்ஸ் ஆரம்பித்து இன்று 20 ஆயிரத்தைத் தொடப்போகிறது.
இது எல்லாவற்றையும் விட நண்பர் ஒருவர் ஆரம்பித்த டயட் குழுவில் இணைந்து என் உடல் எடையை பதினெட்டு கிலோ குறைத்தேன். இன்றும் நன்றிக்கு உரிய மனதில் மறக்க முடியா நபர் அவர். இன்று எங்கள் வாட்ஸ்அப் குழுமத்தில் 130 பெண்கள். அதில் 60-க்கும் மேலே உடல் இளைப்பு. ஆரோக்கிய மாற்றம். இதற்கு ஒரு ஃபேஸ்புக் நல்ல நட்பின் வழிக்காட்டுதல் இல்லாமல் சாதித்து இருக்க முடியாது. அது அடுத்தடுத்து ஃபேஸ்புக் பக்கமாக விரிவடைய காத்து இருக்கிறது.

இப்படி பல பல நன்மைகள் இங்கு வந்ததால் கிடைத்தது. அடுத்து கிறுக்கி வைத்தேனா, எழுதினேனா என்றெல்லாம் தெரியாது. தோழி ஃபேஸ்புக் பரண் என்று பக்கம் வைத்து இருந்தார். அவரின் ஊக்குவிப்பு இல்லாமல் நான் எழுதியிருக்க மாட்டேன். அவர் ஒற்றைப் பெண்ணாக பின் இருந்து வளர்த்து விட்டவர்கள் பலர். இதுபோன்ற மனிதர்கள் சமூக வலைதளத்தில் அரிது.
ரிலாக்ஸ் ப்ளீஸ், வலைபேச்சு என்று பகிரத் தொடங்கினார்கள். ஏன் என்றால் தேடித்தேடி பெண்கள் பதிவை படிக்க வேண்டிய காலம் அது. வெகு சில பெண்கள் மட்டுமே பப்ளிக் செட்டிங்க்ஸில் பதிவு போடுவார்கள். எனவே, எங்களை போன்ற பெண்கள் மிக எளிதில் வெளியே வர முடிந்தது.
இப்படி போய்க்கொண்டிருந்த வாழ்க்கையில் சில பிரச்சனைகள் வராமல் இல்ல. உடைக் கட்டுப்பாடு, பெண்ணியம் என்று பேச ஆரம்பித்தால் பலருக்கு பிடிப்பதில்லை. பெண்கள் என்றால் ஒரு மொக்கை, ஜோக், கவிதை, கட்டுரை என்று போய்கொண்டு இருக்கும் வரை பிரச்சனை இல்லை. இதுவே அரசியல், சாதி, சமூகம், சமூக உதவி என்று இறங்கி விட்டால் மிகப் பெரிய பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஆண்களுக்கும் உண்டு. ஆனால் பெண்களுக்கு வேறு விதம்.

அந்த மோசமான அனுபவமும் திரண்ட தோழிகளும்...
ஒருமுறை என்னுடையே புகைப்படத்தை ஒரு மோசமான பக்கத்தில் கண்டு அதிர்ந்தேன். அதில் மிக மோசமான பின்னூட்டங்கள். அது வரை இந்த உலகின் மறுபக்கத்தை அறியாப் பெண் நான். உள்ளே போய் பார்க்க பார்க்க இணையத்தின் நடமாடும் அத்தனை கொடூரமும் புரிந்தது. தூக்கமே வரவில்லை. என்ன மாதிரியான உலகம் என்று மறுபக்கத்தை முதன் முதலில் பார்த்த அதிர்ச்சி. இப்படி கூட நடக்குமா என்றெல்லாம் யோசனை.
இதற்கு முதல் படியாக அனைவரும் ஒரு கோரமான முகமூடி முகத்தை ஃப்ரோபைலில் வைத்துக்கொண்டோம். அன்று முதன்முதலில் தீ பற்றியது. உடனே அடுத்து ஒரு குழுவை ஆரம்பித்தோம். அனைவரும் ஒன்று சேர்ந்து எங்கள் புகைப்படங்கள் பகிர்ந்து இருந்த பல பக்கங்களை முடக்கினோம். பிடோபில் எனப்படும் குழ்நதைகளை வைத்து செயல்படும் ஐம்பது பக்கங்களை எங்கள் குழு தோழி பானுவின் உதவியுடன் மூடச் செய்தோம். இதுபோன்று அந்தக் குழு பல விஷயங்களை செய்துகொண்டு பல பெண்களுக்கு நம்பிக்கையை அளித்தது.

யார் வந்தாலும் கவலைப்பட வேண்டாம். எல்லாருக்கும் நம்பிக்கை அளித்த நேரம். பலர் புகைப்படங்களை, அதாவது முகத்தை வெளியே காட்ட அந்தக் குழு ஒரு நம்பிக்கையை அளித்தது. இன்றும் பெண்கள் குழுக்கள் மூலமே பல பெண்களுக்கு சமூக வலைதளத்தில் நடமாட நம்மை போன்று இருக்கிறார்கள் என்று பார்த்து துணிச்சல் வருகிறது. அந்த வகையில் பெண்கள் குழுக்கள் வரவேற்கப்படுவது மிக நல்லது.

எங்கு சென்றாலும் நம் புகைப்படம் பகிரும் இடம் உண்டு. அது ஃபேஸ்புக்கின் மூலம் மட்டுமே போக வேண்டும் என்பது இல்லை. கூகுள் போட்டோஸ் சியர்ச் இஞ்சின் சென்று நம் போட்டோ வைத்து எங்கெங்கு பகிரப்பட்டு இருக்கிறது என்று கண்டுபிடித்து விடலாம்.

பத்திரிக்கையில் வருகிறது, பொதுக் கூட்டங்களில், பொது இடங்களில் இருக்கும்பொழுது பல கேமரா கண்கள் கவனிக்கின்றன. எனவே எதைப் பற்றியும் யோசிக்காமல் ஆண்கள் போல பெண்களும் சுதந்திரமாக பப்ளிக் செட்டிங்க்ஸ் வைத்து புகைப்படம் போட வேண்டும் என்பதே விருப்பம். எல்லாரும் செயல்பட்டால் மட்டுமே இதற்கு ஒரு முடிவு வரும். 

பயந்துகொண்டே இருந்தால் கற்காலத்தில் இருக்க வேண்டியதுதான்.
அப்படி போடும்பொழுது பல நல்ல பின்னூட்டங்கள், சில வேறு விதமான பின்னூட்டங்கள் வரும். அதைப் பிடிக்காவிடில் டெலிட் செய்யும் அதிகாரம் நம்மிடம் எப்பவும் உண்டு. நான் அதை பெரிதாக எண்ணி இருக்கவில்லை. யார் பாராட்டியோ, இல்லை நக்கல் செய்தோ பின்னூட்டம் இட்டால் மனதுக்கு ஏற்ப வார்த்தைகள் என்றே கடந்துக்கொண்டு இருந்தேன்.

நடுவில் ஒரு நண்பர் எங்கள் புகைப்படங்களை பகிர்ந்தார். அதனால் அவரை நட்புப் பட்டியலில் இருந்து எடுக்கச் சொல்லி பெண்களுக்கு குழுவில் அழைப்பு விடுத்தோம். ஆனால் அவர் அதை பலரின் வேண்டுகோளுக்கு இணங்க எடுத்துவிட்டதால் பிரச்சனை அதோடு முடிந்துவிட்டது. இந்த முயற்சியில் சில நட்பு இழப்புகள். நாம் துணிவோடு செய்யும் விஷயங்களுக்கு என்றும் உடனே ஆதரவு கிடைத்து விடாது. ஆனால் பலவீனமான பெண்களை பலவீனமகவே வைத்திருக்க விரும்பும் சமூகம் என்று புரிந்துகொண்டேன்.
சில பெண்களும் பின்னால் இருந்து முன்னே வரும்பொழுதுதான் எல்லாவற்றையும் உடைக்க முடியும். கமல்ஹாசன் போன்றோரது படங்கள் போல நாம் காலத்துக்கு முன்னே பயனப்பட்டால் தோல்வியை சந்திக்க வேண்டும். ஆனால் என்றுமே நம் முதல் முயற்சிக்கு மதிப்பு இருக்கும். ஒரு வருடத்தில் எல்லாம் மாறிவிடும். ஒவ்வொருத்தராக தங்கள் எண்ணங்களை மாற்றிக்கொண்டு வருவார்கள்.என்னை 'கவனித்த' கண்கள்...
ஆனால், இத்தனைக்கு பிறகு என்னை பல கண்கள் கவனிப்பதை கவனிக்கத் தவறிவிட்டேன். சில சமூக பிரச்னைகளை கவனித்து கட்டுரை எழுதியும், அதை முகநூலில் பதிந்ததும் பல எதிர்ப்பாளர்களை எனக்கே தெரியாமல் சேமித்து இருக்கிறேன். அதற்கு நான் மட்டுமே பொறுப்பு என்பதை அறிந்தும் வைத்திருக்கிறேன்.

சிலர் என் படங்களுக்கு போட்ட பின்னூட்டங்களை வைத்து சிலர் கேலியாக விடாமல் பதிவுகள் போட்டு தாக்க ஆரம்பித்தனர். என்னுடைய பதில் வெறும் அமைதி மட்டுமே இருந்தது. மதிப்பு உள்ள சிலவற்றை மட்டுமே எதிர்க்க வேண்டும் என்ற முடிவு செய்தேன். கண்டிப்பாக அதுபோன்ற பதிவுகளில் பலவும் சைபர் சட்டப்படி கிரிமினல் குற்றங்கள்தான். சிலவற்றை இப்படியும் பார்த்து கடக்க, புறக்கணிக்க கற்றுக்கொண்டேன். பெரிய புகழ் பெற்ற ஆட்களைக்கூட ஃபேஸ்புக் விட்டு வைப்பது இல்லை. நம் போன்ற சாதாரண நிலைமையில் இருந்து வந்த ஆட்களை விட்டு வைக்குமா?

மிகக் கடினமான நேரம்தான். நெருங்கிய நண்பர்கள் என்றும் பார்க்காமால் நட்பில் இருந்து விலக வேண்டி இருந்தது. மனதில் பகமையில்லை, நட்பு மட்டுமே. ஆனால் கருத்தில் பகைமை. ஒரு பெண்ணை பலர் முன்னிலையில் அவமானப்படுத்தும் பொழுது பெண்கள் நம்மை ஆதரிக்க வேண்டாம். ஆனால், ஒதுங்கியாவது இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தேன். அது நடக்கவில்லை. என்னைச் சுற்றி நடந்த கதைகள் பல எனக்கே புரியவில்லை. ஏதாவது தப்பு இருந்தால் மன்னிப்பு கேட்டு சரி செய்யலாம். என் சுவற்றில் விவாதிக்கலாம். ஆனால் அதை நேரடியாக சொல்ல யாருக்கும் துணிவு வராமல் பதிவுகளில் புகழுக்கு ஆசைப்படுபவள் என்ற வார்த்தையை மட்டும் எடுத்துக்கொண்டு விளம்பரம் செய்கிறேன் என்று ஏதோ ஏதோ அவர்கள் கற்பனைக்கு எழுதி கொண்டார்கள். நான் யாருக்கும் எந்த பதிலும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஒரு நட்பு போதும் எனக்கு, திரும்ப எல்லாவற்றையும் பெற.
எல்லாவற்றில் இருந்தும் விலகி என்னை தனிமையாக வைத்துக்கொண்டேன். கடின நேரங்களில் தனிமை அவசியம். யாரிடமும் புலம்பி வார்த்தைகளை விட்டு விட்டால் இன்னும் காலம் மோசமாக்கும். நெருங்கிய இரு தோழிகளை தவிர எல்லா தொடர்புகளில் இருந்தும் வெளியே வந்தேன். ஆனால், கொட்டிய வார்த்தைகள் அவர்களுடையது. புத்தர் ஒரு கதையில் சொன்னதுபோல நான் என் மனதில் வாங்கி அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

ஆம், மனிதர்கள் சிலருக்கு பாராட்டு கிடைக்கும் பொழுது சிலரால் அங்கீகரிக்க முடியாது. நான் தகுதி உடைவாளா இல்லையா என்ற கோணத்திற்கு செல்லவில்லை. எந்த அடிப்படை மனமும் யாராவது பாராட்டினால் ஏற்றுக்கொள்ளும். அதை மறுக்காது. அதுபோல எனக்கு வரும் அங்கிகாரங்களை மறுக்கவில்லை. விருதை திருப்பி கொடுக்கும் அரசியல் எல்லாம் பழகவில்லை.

கடினம்தான். அந்த நேரத்தில் ஒரு பெண்ணை அசிங்கமாக எழுதுவதை பார்த்துவிட்டு கடப்பது கொடிய நேரம்தான். அதற்கு பெண்களே பின்னூட்டம் இடுவது இன்னும் கொடுமையாக இருக்கும். இதை எதிர்க்காவிடில் எந்தப் பெண்ணுக்கும் முன்மாதிரியாக ஆகிவிடும். பெண்களை முடக்க எளிதில் எடுக்கும் ஆயுதமாகிடும் என்று யாரும் ஏன் உணரவில்லை என்று புரியாத புதிர்தான். இருப்பினும் ஒரு தோழி எல்லா இடங்களிலும் கடுமையாக எதிர்த்தாள். நிஜமாக அந்த நேரத்தில் தெய்வம் மனித வடிவம்தான் என்ற வார்த்தைக்கு அர்த்தம் கிடைத்தது. என்னிடம் எல்லாவற்றையும் தட்டிகேள் என்று துணிச்சல் ஊட்டினாள். என்னைப் பொறுத்தவரை புறக்கணிப்பே ஒரு தண்டனை. ஒதுங்குதல் இன்னும் நல்லது.

தவறுகள் இருக்கும்பொழுது நேரடியாக சுட்டிக்காட்டவே நண்பர்கள். அப்படி இல்லாமல் போனால் நமக்கு சாபம்தான். இந்த நேரத்தில் ஒரு பத்து அல்லது இருவது பேர் எதிர்த்தால், ஆயிரக்கணக்கில் வரமாக துணைக்கு இருந்தனர். இப்படிதான் கடந்தேன் சமூக வலைதளத்தின் கோரத் தாக்குதலில் இருந்து. யாரும் வேண்டுமென்று செய்யவில்லை. ஏதோ என் ஒரு செயல் அவர்களை தூண்டி இருக்க வேண்டும். நான் பெண் என்று இதற்கு பின் ஒளிந்துக்கொள்ள மாட்டேன். ஆனால் பெண்ணால் இருப்பதால் மட்டுமே ஒழுக்க குறைவான அசிங்கமான விமர்சனங்கள் எழுதப்பட்டது. ஒருவர் உச்சிக்கே சென்று மிக மோசமான ஒரு வார்த்தையை உபயோகித்து இருந்தார். இது காலம் காலமாக பெண்கள் மேல் போடப்படும் விலங்கு. உன்னை எதிர்க்க நான் கையில் எடுத்த ஆயுதம் என்ன தெரியுமா என்று கொக்கரிப்பு. வீட்டிலும் சமூகத்திலும் எல்லா மட்டத்திலும் பெண்கள் சந்திக்கும் பிரச்சனை. இன்னொரு பிரச்னை ஆண் நண்பர்களும் துணைக்கு வர யோசிப்பார்கள். பெண் நண்பர்கள் ஏன் வம்பு என்பார்கள் தனியாக சமாளிக்க வேண்டிய நேரம். இதற்கு இணையதளம் மட்டும் காரணம் என்று சொல்ல மாட்டேன். ஆனால், இணையத்தில் வக்கிரங்களை கொட்டிவிட்டு செல்வது எளிதாக உள்ளது.
நமக்கு இன்னும் தன்னம்பிக்கையை வளர்க்கும் பயிற்சி. என்னை எதிர்த்து எது செய்தாலும், அது எனக்கு மிகுந்த நல்லவற்றை மட்டுமே அளித்து இருக்கிறது. நாம் அந்த நேரத்தில் அமைதியாக வேடிக்கை பார்த்தால் போதும். எல்லாம் கடந்து விடும். என்னுடைய மன உறுதி மேம்பட்ட நேரமாகவே என் கடின நேரங்களை கருதுகிறேன். எதுவும் கெடுதல் இல்லை என்ற மனநிலை இருந்தால் போதும். எல்லாம் கடந்து நல்லதே நடக்கும்.

என் மனதில் பகைமை இல்லாமல் இருப்பது மட்டுமே எனக்கு நல்லது என்பதால் யார் மேலும் எந்த பகைமையும் இல்லாமல் நிம்மதியாக இருக்கிறேன். எனவே எந்தப் பகைமையும் என்னிடம் ஓட்டுவதே இல்லை. கொஞ்ச நாள் இணையத்தில் இருந்து விலகி முழுக்க மீண்டேன். திரும்ப எதிர்க்கொள்ளும் தைரியம் மட்டும் போதும். நாம் எந்த இடத்திலும் நிம்மதியாக இருக்க முடியும்.

இணையதளம் இல்லாவிடில் என் கட்டுரைகள் விகடன், தி இந்து ஆன்லைன், தோழி, அவள் விகடன், தின இதழ் போன்ற பத்திரிகைகள், அதைத் தவிர பல செய்திகள், சமூகம் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரங்கள், பல எழுத்து ஆளுமைகளின் தொடர்புகள், பல்வேறு குழு மூலமாக பல்வேறு சமூக உதவிகள் எதுவும் சாத்தியம் ஆகி இருக்காது.

ஒரு முக்கிய கடைசிக் குறிப்பு...
எனவே, சமூக வலைதளங்களில் இருக்கும் சிறு முட்களை அகற்றிவிட்டு ரோஜாக்களின் வாசனையை முகர்ந்து பெண்கள் அனைவரும் இணையத்தை சுதந்திரமாக பயன்படுத்த வேண்டும் என்பதே என் ஆசை. அதுவும் ஆண்கள் போல அரசியல் பதிவுகள், பப்ளிக் செட்டிங்க்ஸ் பதிவுகள் இடப்பட வேண்டும். தனிப்பட்ட நிகழ்வுகளின் புகைப்படங்கள் என்று துணிச்சலாக பகிர முன்வர வேண்டும். அனைவரும் வரும் வேளையில் எல்லாமே மிக சாத்தியமான விஷயம் ஆகிவிடும். ஆனால் காலப்போக்கில் இணையம் அனைத்தையும் சாத்தியம் ஆக்கிவிடும். அதுவும் எளிதில் வேகமாக. எனவே, நம்பிக்கையுடன் ஒவ்வொருவரும் பயணிக்க வேண்டிய நேரமிது.

ம்... இன்னொரு முக்கியமான விஷயத்தைச் சொல்ல மறந்துவிட்டேன். ஃபேஸ்புக்கில் புதிதாக வருபவர்கள் நிச்சயம் ஒரு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். பலர் பல உறவுகளில் சகஜ தன்மைக்காக கூப்பிடுவது வழக்கம். ஆனால், அப்படிதான் பழகுவார்கள் என்று எதிர்பார்ததால் ஏமாற்றத்திற்கு ஆளாக நேரிடும். இன்பாக்ஸ் திறந்து அனைவருக்கும் பதில் சொல்லத் தேவையில்லை. வெளியில் வரும் நட்பு போதும் என்று இருப்பது பாதுகாப்பு. முக்கியமான தனிப்பட்ட விஷயங்களுக்கு மட்டும் உபயோகித்தால் போதும். ஃபில்டர் மெசேஜ்களை என்றைகாவது பார்த்து சுத்தம் செய்தால்போதும்...
http://tamil.yourstory.com/read/609add5004/-quot-as-men-and-women-on-facebook-with-photo-freely-to-day-tracking-taran-ventum-kirttika நன்றி