Monday, January 25, 2016

அன்பெனும் மாயை, அன்பெனும் ஜாலம். நன்றி தி இந்து.

ஒரு நிஜக்கதை. இளவரசன்கள் வாழும் ஒரு நாட்டில் இந்தப் பக்கம் இப்படிப்பட்ட கதைகளும். என் மகனின் நண்பனுக்கு ஆடம்பரக் கடை ஒன்றில் பிறந்த நாள் பார்ட்டி வைத்திருந்தார்கள். அங்கெல்லாம் ''வாங்க'' என்ற வரவேற்பு சொல்லைத் தவிர வேறு எந்த வேலையும் இருப்பதில்லை. பலூன் கொடுத்து, விளையாட்டுக் காட்டி, உணவு பரிமாறி எல்லாவற்றுக்கும் பணத்தை வாங்கி பிறந்தநாள் வியாபாரத்தை கச்சிதமாக செய்யும் இடம் அது.

என்னைப் போன்ற கிராமத்துப் பின்னணி ஆட்களுக்குதான் மனசு வருவதில்லை. இன்னொன்று, எனக்கு கொண்டுவிட வந்த அம்மாவை விடைகொடுத்து அனுப்புவது கொடுமையாக இருக்கும்.

மகன்கள் பிறந்தநாள் என்றால் அம்மா, அப்பா, குழந்தைகள் என்று குடும்பத்தோடு வீட்டுக்கு கூப்பிட்டு இடம் பற்றாமல் ரகளையாக முடியும் நிகழ்வுக்கு முன், இந்த மாதிரியாக திட்டமிடப்பட்ட கச்சித செயற்கை பார்ட்டிகள் மனதில் ஏனோ ஒட்டுவதில்லை. மகனைக் கொண்டு விட சென்றப்பொழுது என்னை அவர்கள் விடவில்லை. நான்கு அம்மாக்கள் சேர்ந்துகொண்டோம். விழாவுக்கான உடையாக இல்லாமல் வெகு சாதாரண தொளதொள டாப்ஸ், ஜீன்ஸ் அந்த இடத்துக்கு பொருத்தமில்லை.

என்றாலும் சற்று நேரத்தில் உடை தயக்கத்தை உடைத்து விரைவில் உள்புகுந்து கலகலவென்று ஆகிவிட்டேன். மகனின் நண்பன் மிக புத்திசாலி. அது என்னவோ மகனின் நண்பர்கள் அளவுக்கதிக ஸ்மார்ட்டாகவோ அல்லது அதிகம் விஷமம் செய்பவர்களாக அமைந்து விடுவார்கள். இந்தப் பையன் பற்றியில்லை இந்த நிஜக் கதை. இந்தக் குடும்பத்தில் என்னைப் போன்ற டீன் மகன்களை வைத்திருக்கும் அம்மாவின் கதை.

டயட், நல்ல உணவு என்று போய் அதற்கான மனத்திடம், மனநலம் என்று பேச்சு வந்து நின்றது. இவர் அபுதாபியில் வசித்த மரபார்ந்த அதேசமயம் மாடர்ன் இஸ்லாமிய குடும்பம். பணம், வசதி, குடும்ப ஆதரவு எதற்கும் கவலையில்லை. பெரியவன் இந்தியாவுக்கு வந்து இரண்டு வருடம் தங்கி வருடம் எட்டு லட்சம் கட்டும் பெரிய உலகத்தரம் என்று சொல்லும் விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பள்ளியிலும் படித்து இருக்கிறான். கொஞ்சம் புத்திசாலிக்கும் அதிக ரகம். படிப்பில், விளையாட்டில் முதல் அதைத்தவிர கொஞ்சம் பார்வைக்கும் மிடுக்கு.
மத்திய கிழக்கு நாடுகளை பொறுத்தவரை பள்ளிகளில் ஆண், பெண் குழந்தைகளுக்கு கட்டுப்பாடு உண்டு என்று கூறினார்.

சொந்தப் பள்ளியில் படிக்கும் அதே வயது பெண்கள் கூட பழகும் ஒரே வாய்ப்பு இணையம். சிறு வயதில் அதிகம் விஷமம் செய்யும் ஒற்றைக் குழந்தை. இரண்டாவதாக பதினொன்று வருடம் கழித்து அம்மாக்கு டிவின்ஸ் ஒன்பதாம் வகுப்பில் அம்மாவுடன் கொஞ்சம் விலகலோ, பதின்பருவத்துக்கே உள்ள மாற்றமோ பேச்சு குறைந்து அமைதியாக ஆகிவிட்டான். அப்பொழுது அவனுக்கு கிடைத்தது ஃபேஸ்புக். அவனின் திறமை எல்லாம் அவனின் எழுத்தில், தொடர்புகொள்ளலில் வெளிப்பட்டன. இணையத்துக்கு வந்த கொஞ்ச நாட்களில் பல பெண்கள் விரும்பும் ஹீரோ ஆகிவிட்டான்.

ஃபேஸ்புக் பிள்ளைகளுக்கு இருக்கும் அடிப்படை பிரச்சினை, நண்பனுக்கு 'ரிக்வஸ்ட்' கொடுத்துவிட்டு நம்முடைய 'ரிக்வஸ்ட்'-ஐ வலுக்கட்டாயமாக மறுதலிக்கும் பெண்கள். இதைப் பார்த்து நண்பன் மேல் பொறாமை வரும், இல்லாவிடில் அவனைப் பிடித்து எப்படியாவது தோழி ஆக்க சிபாரிசுக்கு கேட்பார்கள்.

ஒரு பையன் பள்ளியில் பிரபலம், ஆனால் இணையத்தில் அப்படி ஆக முடியவில்லை. இவன் மேல் பொறாமை வந்து பெண்களோடு சண்டைப் போட்டு, இவன் பெயரில் ஏதோஏதோ எழுதி பெரிய பிரச்னை ஆகிவிட்டது. பள்ளி வரை ஃபேஸ்புக் பிரச்னை போனது. இவன் மேல் தவறு இல்லை என்று சிறிது கண்டிப்புடன் பள்ளியில் விட்டுவிட்டார்கள். ஆனால் ஃபேஸ்புக்கை பொறுத்தவரை இவன் புகழ் ஓங்கிக்கொண்டு இருந்தது. பல பெண் குழந்தைகள் 'ரிக்வெஸ்ட்'டும் 'லைக்ஸ்', 'கமெண்ட்ஸ்' என்று நாளொரு பொழுதும் வளர்ந்தான்.

இப்படி போய்கொண்டிருந்த வாழ்வில் பன்னிரெண்டாம் வகுப்பில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் 92%க்கு மேலே எடுத்து பள்ளியில் அதிக மதிப்பெண்கள் எடுத்ததில் ஒருவனாக தேர்ந்து எடுக்கப்பட்டான்.

மத்திய கிழக்கு நாடுகளைப் பொறுத்தவரை பெங்களூரு கல்லூரிகள் மிகப் பிரபலம். அங்கிருந்து வந்து வீடு எடுத்து நிறைய மாணவர்கள் இங்கு தங்கி படிக்கும் வழக்கம் உண்டு. அதேபோல நிறைய மதிப்பெண்கள், பணத்துக்கும் கவலை இல்லை என்பதால் பணக்கார கல்லூரியில் ஹாஸ்டலில் சேர்ந்து விட்டான்.

இங்குதான் திருப்பம். முதல் ஆறு மாதங்கள் நன்றாக சென்று கொண்டிருந்தது. வழக்கம் போல பணக்கார கல்லூரி, பணக்கார பளப்பள நவீன பெண்கள், மத்திய கிழக்கில் இருந்து தப்பித்த கட்டுபாடற்ற சுதந்திரம், அனைத்தும் கிடைக்கும் காஸ்மோபாலிடன் நகரம். ஆயிரம் விஷயங்கள் அடுக்கிக்கொண்டு போகலாம். பிரிகேட் ரோட், பஃப், போதை, நவீனம், சுதந்திரம் எதற்கும் குறைவு இல்லை.

ஆனால் வந்தவுடன் மாட்டிகொண்டது அதில் எல்லாம் இல்லை. அதை விட மிகப்பெரிய போதை காதல். உலகத்தில் காதலை விட துக்கமும் மகிழ்ச்சியும் இல்லை. காதலை விட ராஜ போதை இல்லை. காதல் இருந்தால் வேறு எதுவும் நினைவில் இருக்காது. பெண், ஆண், இடம், காலம், படிப்பு, குடும்பம் அனைத்தையும் மறக்க, துறக்க செய்யும் போதை.

காமம் மட்டுமல்ல காதல். கல்யாணம் அல்ல. அது ஓர் உணர்வு. பேய்ப்பசி கொண்ட உணர்வு. எத்தனைப் தீனி போட்டாலும் தீரவே தீராது. கூடி இருக்கையில் கோபிக்கும். நினைவில் யாசிக்கும், கனவில் மோகிக்கும். இவனுக்கு பெங்களூரில் வசிக்கும் நவீன யுவதியுடன் காதல் வந்தே விட்டது.

ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழும் கட்டுப்பாடு உள்ள பின்னணியில் இருந்து வந்த பையன். காதலில் கட்டுண்டான். அவளே வாழ்க்கை, அவளே இன்பம், அவளே துன்பம். அவளே எதிர்காலம், எல்லாம். வீட்டில் அனுப்பும் பணத்தை சேகரித்து அவளுக்காக செலவு செய்து இருக்கிறான். அம்மாக்கு ''என்னடா எப்ப பாரு பையன் குழம்பு நல்லா இல்லை, சாதம் நல்லா இல்லைன்னு சொல்றானேன்''னு யோசனை. சரியாக சாப்பிடவே இல்லையாம்.

அம்மா ஹாஸ்டலில் உணவு பிடிக்காவிடில் வெளியே சாப்பிட சொல்லி அனுப்பும் பணத்தையும் அவளுக்காகவே சேகரம் செய்து இருக்கிறான். சனி வந்தால் பணம் எடுத்துக்கொண்டு அவளுக்கு செலவு செய்ய சந்தோஷமாக ஓடுவான். அவளுக்கு செய்யும் ஒவ்வொரு செயலும் உச்சப்பட்ச சந்தோஷத்தை அவனுக்கு கொடுத்து இருக்கிறது. அதானே காதல்.

காதலிக்கும் பொழுது உலகம் நினைவில் இருப்பதில்லை, உறவுகள் பிடிப்பதில்லை, நட்புகளை நெருங்குவதில்லை, ஒருவரை தனிமைப்படுத்த வேண்டும் என்றால் அதிகபட்சக் காதலில் ஈடுபட செய்தால் போதும். ஆனால் அது உணர்வு, பொங்கிக்கொண்டு வரும். காதில் விழும் பாட்டுகள், வார்த்தைகள் எல்லாமே காதலுக்கு என்று தோன்றும். எங்கோ இருக்கும் செய்திகள், படிக்கும் புத்தகங்கள் எல்லாமே தம் காதலுக்கு அர்ப்பணிக்கப்பட்டவையாக மாயம் கொள்ள செய்யும்.

காதல் சூழ் உலகில் தினசரி வேலைகளுக்கே செம்பரம்பாக்கம் நீர் சூழ் உலகை விட அதிக முயற்சியில் மீட்பு பணிகள் தேவையாயிருக்கும். கற்பனை உலகில் இரு விழிகளும் ஆர்ப்பரிக்கும். சீரியல் இல்லத்தரசிகள், கேண்டி கிராஷ் அடிமைகள் அரை மணி நேரம் தவறினாலும் தவிப்பார்கள். அந்தக் கண்கள் போல வெறுமையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் கண்களாக காதலர்களின் கண்களும் இருக்கும். இணைய அடிமைகள் போல தூக்கத்தை தொலைத்து இருப்பார்கள். தூக்கமில்லா கனவுகளை தலையணையில் கொட்டுவார்கள்.

இப்படிதான் இந்தப் பையனும். இந்த வயதில் காதல் சகஜம். நாளொரு மேனியாக வளர்ந்தப் பொழுது அந்தப் பெண்ணுக்கு இக்கால இணையக் காதல் போல நேரடிக் காதலும் போரடிக்க ஆரம்பித்து விட்டது. அவளால் ஒருவருடன் ஆறு மாதம் மேல் தாக்குப் பிடிக்க முடியாதாம். விரைவில் எல்லாம் போர் அடிக்கும் நவீன யுகத்தை சேர்ந்தவள். இவனோ காவியத்தலைவன். இப்படிதான் பெரும்பாலும் ஆணோ, பெண்ணோ ஜோடிகள் தவறாகவே அமைந்து விடுகிறது.

எத்தனை சொல்லியும் கேக்காமல் போயே விட்டாள். அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இந்த வயதிலையே தற்கொலை வரை சென்று இருக்கிறான். காதலின் இழப்பை விட நிராகரிப்பின் வலி கொடியது. அவனை ஊரே ஹீரோவாக போற்றும் ஓர் அழகனை, பெருமிதம் உடையவனை, புத்திசாலியை ஒதுக்கியது அவன் எதிர்பார்க்காதது. இதுவரை பெண்கள் அவனைத்தான் சுற்றி வந்து இருக்கிறார்கள். அவன் யாரிடமும் வாக்கு கொடுக்கவில்லை. இவன் நெருங்கிய முதல் பெண் இவள். அவளுக்கோ அவளை அணுகும் ஆண்களில் ஒருவன். அவ்ளோதான்.

இந்த நிராகரிப்பின் வலியைப் போல கொடிது ஏதுமில்லை. அந்த ஈகோ அடிப்பட்டு இருக்கிறது. நான் என்ற தன்னம்பிக்கையைப் பார்த்து அடிக்கும் வலு காதலுக்கு மிக அதிகமாக இருக்கிறது. உலகின் எந்த வலியை விட காதலின் வலி கொடிது. அந்த தோல்வியை சரியாக எதிர்க்கொள்ள முடியாமல் நீலாம்பரி பெண்கள், ஆசிட் ஆண்கள் என்று காதல் தீவிரவாதிகள் உருவாகி விடுகிறார்கள். இவன் விதிவிலக்கா என்ன? வலி, வலி, வலி. தாங்கவே முடியாத வலி அதனால் விட்ட கண்ணீர். போய் முடங்கிக்கொண்டான். அறையை விட்டு வெளி வரவில்லை. அம்மாக்கு செய்திப் போய் பதறிக்கொண்டு இரு குழந்தைகளாடு உடனே பெங்களூரு வந்துவிட்டார்கள்.

அம்மாவைக் கண்டவுடன் ''இறக்க போகிறேன்'' என்று கூறி இருக்கிறான். அவனுக்கு வாழத் தெரியவில்லை. வழக்கம் போல மாடர்ன் பெற்றோர்கள் என்பதால் கவுன்சலிங் அழைத்துக்கொண்டு போயிருக்கிறார். எங்கும் அதே வசனம். அதே கவுன்சலிங்... எப்படி சென்றாலும் முடிவில்லா பயணம். வாழ்க்கை முடிவில்லை, இதான் ஆரம்பம், காதல் ஒரு பகுதி என்று இடைவிடாமல் பேச்சு, அறிவுரைகள். அன்பை போதிக்கச் சொல்லி அம்மாவுக்கு ஆலோசனை. பொறுக்க முடியாமல் அம்மாவே கையில் நிலவரத்தை எடுத்துக்கொண்டு இருக்கிறார்.

ஒரே அறையில் இருந்து கத்துவது, உணவில்லாமல் இருப்பது, குளிக்காமல் இருப்பது, கல்லூரிக்குச் செல்வதை நிறுத்திவிட்டது என்று தோல்வியின் வலி பல விதங்களில் தன்னைத் தானே துன்புறுத்தும் விதமாக தொடர்ந்தது. அந்தப் பெண்ணை திரும்ப வகுப்பில் சந்திக்கும் துணிச்சல் இல்லை.

ஒரு முறை போய் விட்டு வந்து அவள் இவன் இல்லாமல் சகஜமாக, சந்தோஷமாக இருப்பதைப் பார்த்து திரும்பவும் பைத்தியம் பிடிக்கும் நிலைமைக்கு ஆட்பட்டு விட்டான். நாம் இல்லாமல், நம் அன்பு இல்லாமல் அவளால் நார்மல் வாழ்க்கை வாழ முடிகிறது என்பதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவன் உணர்வுகளை வடிக்க ''லீக் ஆப் லெஜண்ட்ஸ்'' (என்றே நினைவு) என்ற கேமுக்கு அடிமை ஆகிவிட்டான். ஒருவரை மறப்பது, புறக்கணிப்பை புறந்தள்ளுவது எளிதில்லை. அதுவும் தன்னை பெரிதாக நினைத்துக் கொண்டிருக்கும் ஓர் ஆளுமைக்கு. அதனால் அவற்றால் இவற்றை நிரப்பினான். எதை நிரப்பி அதை மறப்பது என்ற நிலையில் கேமிங் ஆட்கொண்டு விட்டது.

தூக்கம் இல்லை, உணவு இல்லை, வெளி உலகம் இல்லை அம்மா உறவுகள் இல்லை. மாதம் முழுதும் இரவு பகலாக விளையாடி இருக்கிறான். பிடுங்கி வைத்தால் வெறி வந்துவிடும். அம்மாவை அடிக்க கூட கை ஓங்கி விடுவான். பயங்கரமாக கத்துவான். எல்லாம் காதல் படுத்திய பாடு. இப்போது இன்னொன்றும் சேர்ந்துகொண்டது.
என் தோழி மிகப் பொறுமையாக மீட்டு எடுக்க முடிவெடுத்தாள். அவன் எத்தனை கோபப்படுத்தினாலும் அன்போடு பொறுமையாக பேசுவாள். நாற்பது தாண்டியதால் பொறுமை எல்லை மீறும் சமயங்களில் கத்தி எல்லாம் பாழாகப் போகும். அவனும் கத்திவிட்டு பழைய நிலைமைக்கு போவான். கஷ்டப்பட்டு நிதானத்துக்கு கொண்டு வந்துவிட்டு ஒரு நிமிடம் தவறியதால் அத்தனையும் முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். மன்னிப்பு கேட்பாள். நீ எங்களுக்கு வேண்டும் என்று திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருந்தாள்.

மெசேஜில் ''லவ் யூ கண்ணா, செல்லம்'' என்று, ''சாப்பிட வர்றியா, என்ன பண்ணலாம், கடைக்கு போகலாமா'' என்று பேசிக்கொண்டே இருந்தாள். வெளியே கெஞ்சி, கூத்தாடி ஒரு மாற்றத்துக்கு அழைத்துக்கொண்டு போவாள். ஆனால் மனம் என்ற பேய் அவர்களை எங்கும் நிம்மதியாக இருக்க விடவில்லை.அடுத்த இரு குழந்தைகளை விட நீ மிக முக்கியம் என்பதை உணர செய்யும் விதமாக நடந்துகொண்டாள். பத்து வருடம் ஒற்றைக் குழந்தையாக வளர்ந்தவன் வேறு. அடுத்து அம்மாவை இரட்டைக் குழந்தைகள் ஆக்கிரமிக்க தொடங்கியபொழுது ஆரம்பித்த தனிமையும் சேர்ந்துகொண்டது.

அதையெல்லாம் போக்கும் விதமாக அம்மா அறைக்கு வெளியே நின்றுகொண்டு வாட்ஸ் அப்பில் இடைவிடாமல் அன்பை அனுப்பிக்கொண்டே இருந்தாள். திட்டுகளுக்கு நடுவில் உணவைப் புகட்டினாள். கணவர், வீடு எல்லாம் விட்டுவிட்டு இவனுக்காக மட்டும் ஆறு மாதத்தை நரகமாக பெங்களூரில் செலவழித்தாள். அமெரிக்கா அனுப்ப ஆலோசித்தாள். அவனிடமும் சொன்னாள். ''உலகத்தின் எந்த மூலைக்கு வேண்டும் என்றாலும் செல். ஆனால் மீண்டு வா'' என்று கூறினாள். அவனுக்கு கவுன்சலிங் என்று உணராதவாறு கவுன்சலிங் செய்துகொண்டே இருந்தாள்.

இடைவிடாமல் பேசிக்கொண்டே இருந்த அம்மாவின் பொறுமைக்கு ஒரு நாள் திடீர் என்று விடிவு வந்தது. எந்த விதத்தில் அந்த மாற்றம் வந்தது என்று தெரியாமலே வந்துவிட்டது. ஆனால் பல நாட்களாக ஆழ்ந்த யோசனையில் இருந்தானாம். ''அம்மா கல்லூரி செல்கிறேன்'' என்றான். ஒரு செமஸ்டர் போயாச்சு. ஆறு மாதம் படிப்பில்லாமல் வீட்டில் இருந்து இருப்பதால் அரியர்ஸ் வேறு சேர்ந்து விட்டது. ஆனால் திரும்ப அந்தப் பெண்ணை சந்திக்க அனுப்புவதில் அம்மாக்கு உதறல்.
''இல்லம்மா நான் சந்திப்பேன், படிப்பேன்'' என்று உறுதியோடு கூறினான். முதல் வாரம் பேயடித்தது போல வந்தான். அம்மா நண்பர்களிடம் பேசி சரி செய்ய சொன்னாள். எல்லாரும் ஒத்துழைத்து அவனை காதலில் இருந்து மீட்டனர். இப்பொழுது அரியர்ஸ் உடன் படிப்பையும் கிளியர் செய்து இருக்கிறான். அந்தப் பெண்ணும் அதே வகுப்பில் இருக்கிறாள். மிக உறுதியாக இருக்க கற்றுக்கொண்டு விட்டான்.
கண்ணீர் கலங்க கதையை கேட்டுக் கொண்டுருந்தேன். எழுந்து கட்டி அணைத்துக்கொண்டேன். ஒரு டீன் ஏஜ் குழந்தைகளின் தாயாக உணர்வுகளை அதிக வலியுடன் பரிமாறிக்கொண்டோம். எந்த போதையாக இருந்தாலும் ஒரு தாய் நினைத்தால் மீட்க முடியும் என்று நிருபித்து இருக்கிறார். அவர் ஒவ்வொரு இடத்திலும் மகனுக்கு ஆதரவாக நின்று மீட்டு இருக்கிறார். இந்த முறை நல்ல மதிப்பெண்கள் தெரிகிறது. உறுதியாக ஆகிவிட்டான். அம்மாவை இன்னும் ஆழமாக நேசிக்கிறான். வாழ்வில் இனி எத்தனை அடிகள் வந்தாலும் தாங்கும் வகையில் அந்த காதல் பாடம் கற்றுகொடுத்து இருக்கிறது.

 இந்த காலத்து பெற்றோர்களுக்கு இப்படி எல்லாம் பிரச்சினைகள். அப்போ போல முடியாது. சிக்கலை மெதுவாக அணுக தெரிந்திருக்க வேண்டியது அவசியம். எல்லாவற்றையும் சந்திக்கும் உறுதி அவசியம். காதல் என்றாலே கொதிக்கும் பெற்றோர்களைக் கண்ட தலைமுறையினர் நாம்.
இப்பொழுது தலைகீழான முறையில் அணுக வேண்டி இருக்கிறது. நம் பெற்றோர்களுக்கு தேவைப்படாத பொறுமையும், புத்திசாலித்தனமும் நமக்கு தேவையாக இருக்கிறது. புரிந்துகொள்ளல், இசைவாக இருப்பது போன்றவற்றில் திறமையாக நடக்க தேவையாக இருக்கிறது. சிறிது அலட்சியம் கூட குழந்தைகளை எங்கோ கொண்டு செல்லும் காலகட்டத்தில் வாழ்கிறோம் என்பதுதான் நிதர்சனம்.

கண்ணீருடன் மனம் நெகிழும் ஒரு தாயின் கதை கேட்பதைப் போல பகிர்வது அத்தனை எளிதாயில்லை. வலிகள். திரும்பத் திரும்ப அடிவாங்கியும் பொறுமையாக மீட்டு எடுத்த சாதனை வலி. மகனை மகனாக திரும்ப ஈன்றெடுத்த வலி. உணர்ந்த, உணர்த்த கண்ணீருடன் பகிர்கிறேன்.