Wednesday, September 7, 2016

பிள்ளையார் சுழி.

                                                                           ௨
                                                                           =
பிள்ளையார் சுழி.

எனக்கு ஒரு சந்தேகம். சிறிது தீர்த்து விட்டு செல்லுங்கள்.

நம் பாரம்பரியத்தை குழந்தைகளுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தே இல்லை. ஊருக்கு அழைத்து செல்வது, அங்குள்ள வழக்கங்களை அறிமுகப்படுத்துவது, திருமணங்கள் பற்றி சொல்வது , வீட்டில் பூஜைகள் செய்யும்பொழுது பழைய முறைகளை கதைகளாக சொல்வது, தமிழில் அதிகம் பேசுவது பழைய விளையாட்டுகள் சொல்லிக்கொடுப்பது போன்ற விஷயங்களில் ஆர்வம் அதிகம்.

திடீர் என்று ஒரு காகித தாளை எடுத்து எழுத ஆரம்பித்தப் பொழுது வழக்கம் போல ௨ அதாவது பிள்ளையார் சுழி போட்டு எழுத ஆரம்பித்தேன். இதற்கு ஒரு வரலாறே உண்டு. திடீரென்று யோசனை.. பசங்களுக்கு என்ன என்னவோ சொல்லிக் கொடுத்து இருக்கேன், பரம்பரை, பரம்பரையாக போடும் சுழியை மறந்து விட்டேன்.

முதன் முதலில் எம். எஸ். வோர்ட் டைப் அடிக்கும் பொழுது ௨ க்கு கீழே இரண்டு கோடு போட்டு டாலர் சைன் போல பிள்ளையார் சுழி சைன் வைத்தால் என்ன என்று திட்டிய ஆள் நான். இப்பொழுதோ எங்கு விட்டேன் அந்த பழக்கத்தை? வருடணக்காக பிள்ளையார் சுழி போடாமல் எழுதி இருக்கிறேன் என்பது நேற்றுதான் உறுத்தியது. எப்படி மாறினேன்!!!!!!

ஒண்ணாவது படிக்கும் பொழுது பிள்ளையார் சுழி இல்லாத நோட்டோ அல்லது புத்தகமோ என்னிடம் இல்லை. அது ஒரு மத சடங்கு போல தீவிரமாக பின்பற்றும் விஷயம். நாத்திக வாதிகள் கூட பிள்ளையார் சுழி போடும் வழக்கம் உண்டு. கர்நாடகா வந்து அவர்களும் பிள்ளையார் சுழி போடுவார்களா என்று தேடி இருக்கிறேன்.

சிவன் ஒரு போருக்கு சென்று தோற்றுவிட்டார் எனவும்..கடவுளே போரில் தோற்ற காரணம் தேடியப் பொழுது..மகன்தானே என்று அலட்சியமாக பிள்ளையாரை வணங்காமல் சென்றதே என்ற காரணம் அறிந்து மறுநாள் மன்னிப்பு கேட்டு பிள்ளையாரிடம் சொல்லிவிட்டு அவரின் ஆதரவோடு சென்று வெற்றி பெற்றார். எனவே எதைத்தொடங்கினாலும் பிள்ளையார் வழிபாடு இல்லாமல் தொடங்க கூடாது என்ற ஐதிகம் உண்டு. சைவ, வைணவ சாமிகள் இருந்தாலும் மந்திர பூஜைகளில் மஞ்சள் பிள்ளையாருக்குதான் முதல் இடம். புல் அடிச்சிவிட்டு பிள்ளையார் முன் ஆட்டம் போடுபவர்கள் கூட பிள்ளையார் கும்பிட்டு ஆரம்பிப்பதை இன்று விநாயகர் ஊர்வலத்தில் கண்டறிந்தேன்.

இப்படி புராண கதைகள் கேட்டு பிள்ளையார் சுழி இல்லாமல் எழுதினால் அது சரியான தொடக்காமக இருக்காது என்று உணர்ந்து அந்த பழக்கத்துக்கு அடிமையானது வேறு கதை.. செக் புக்கில் நிரப்பி, கையெழுத்து போடும் பொழுது கூட ௨ கீழே இரு கோடுகள் ஆட்டோமேடிக்காக போட்ட கதையும் உண்டு.

எங்கள் சொந்தங்களில் சிலர் கார்டில் நுணுக்கி, நுணுக்கி எழுதி இருப்பர்.. ' ௨' சுழி, ஸ்ரீராமஜயம் இல்லாமல் எழுதி இருக்க மாட்டார்கள். சில அந்தக்காலத்து தீவிர ஒழுக்கம் கற்பிக்கும் பெரியவர்கள் பிள்ளையார் சுழி இல்லாத கடிதங்களை திருப்பி அனுப்பிய கதைகளும் உண்டு. பிள்ளையார் சுழி இல்லாத பேப்பர்களை காணவே முடியாது. இப்போது பிள்ளையார் சுழிகளை நினைவுக்கூறலுக்கு கொண்டு வந்து விட்டோமோ??!!!.

எங்கே விட்டோம் என்று யோசிக்கும் பொழுது..முதன் முதலில் வட இந்திய முறையில் பெரிய பிள்ளையார் சிலை வைத்து கடலில் கரைக்கும் பொழுதா என்று சந்தேகம் வந்தது..நாம அப்போவே கிணற்றில் கரைச்சு இருக்கோம்..எனவே மெரினாவில் அந்த சுழியை விட்டு இருக்க முடியாது என்ற தீர்மானம் வந்தது. பிறகு...அப்பா, அம்மா, அக்கா,தோழிகள், நண்பர்கள் எல்லார் கடிதத்திலும் நீக்கமற இருந்தது, பிறகு ஆபிஸ் லெட்டர் பேடுகள், கணக்கு புத்தகங்கள் எல்லாவற்றிலும் வந்தது..நடுவில் தொலைத்த பிள்ளையார் சுழி...ஆங் இந்த ப்ளாக், ஃ பேஸ்புக் வந்தப்பிறகு தொலைத்து இருக்கிறேன். மனிதன் மாறிவிட்டான் என்ற BGM இப்போ மனசில் ஒலிக்கிறது.

பேனா எழுதி பார்க்க, இங்கு ரீபில் பண்ண, பென்சில் கூர்ப்பு செக் செய்ய எல்லாவற்றுக்கும் உதவியாக இருந்தது பிள்ளையார் சுழியே. இரட்டை சுழி தலையில் இருந்தால் அதிர்ஷ்டம் என்று சொல்லுவார்கள். ஆனால் தலைப் பகுதியில் பிள்ளையார் இல்லாமல் எதுவும் தொடங்கியதே இல்லை. இல்லாவிடில் இரவில் சிவன் தோற்றது கனவாகவே வரும்.

இப்படியெல்லாம் வாழ்வில் ஒன்றாக இணைந்த ஒன்றை இழந்ததுக் கூட எப்போ நினைவுக்கு வந்தது தெரியுமா..டிராக்டர் பின்னாடி அபார்ட்மென்ட் பிள்ளையாரை கரைக்க செல்லும்பொழுது ஆடிக்கொண்டே பார்த்தேன்..மூன்று பட்டை விபூதி..திடிரென்று பிள்ளையாருக்கு ஏன் பிள்ளையார் சுழி போடாமல் வெறும் மூன்று கோடுகள் போட்டு உள்ளார்கள் என்று மண்டையில் பிளாஷ் அடித்தது. இப்படிதான் காரணமே இல்லாமல் சில விஷயங்கள் மண்டைக்குள் உதிக்கும். ஐன்ஸ்டீன் க்கு உதித்தால் ஆராய்ச்சி மேதை என்பார்கள்..நமக்கு உதித்தால் வேற வேலை இல்லையா என்பார்கள். இதான் உலகம்.

சரி..ஆங் பிள்ளையார் சுழியை விட்டு விட்டு சுழன்று போகிறது மனசு..ஒவ்வொருவரும் ஒரு ஸ்டைல் வைத்து இருப்பார்கள் இதற்கு. ௨ போடும் விதம்..சிலரர் அலை அலையாக போடுவார்கள். ஒரு அக்கா ரிகார்ட் நோட்டில் செம்பருத்தி பூ அத்தனை அழகாக இருந்தது. அதை விட அந்த பிள்ளையார் சுழியை படமாகவே வரைந்து இருந்தாள். முழு மார்க் அதற்கே கொடுக்கலாம். இப்பொ போல FB மார்க் இல்லாத காலம் என்பதால் சுழிக்கு நிறைய வேலைபாடுகள் எல்லாம் செய்ய நேரம் இருந்தது. இரண்டு  போட்டு..இரண்டு  கோடுகள்  போடுவதில்  கூட  எவ்ளோ  இருக்கு எழுத..தீராமல்.

கையெழுத்து ஜோசியம் போல பிள்ளையார் சுழி ஜோசியம் ஆரம்பித்து இருப்பார்கள்.. அதற்குள் அது குறைந்து விட்டது. எனக்கு ஒரு சந்தேகம்..எம்.எஸ். வோர்ட் ல பிள்ளையார் சுழி ஏன் போடுவதில்லை?

இன்னும் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள குழந்தைகள் பிள்ளையார் சுழி போடும் வழக்கம் இருக்கிறதா?

என் பையனுக்கு சொல்லிக்கொடுத்தால் எங்கு போடுவான்?