Monday, May 2, 2016

நேற்றைய நாளை.

நேற்றைய நாளை.

உபயோகிப்பது எல்லாம் OLA என்றாலும் நான் அதற்கு எதிரானவள். ஏனெனில் எந்த மோனோகாமியில்(Monogamy) இறங்கும் முதலாளித்தத்தவமும் தங்கள் நரி முகத்தை காட்டியே தீருவார்கள். உள்ளூர் பானங்களை தேடி தேடி காலி செய்த பெப்சி, கோலா ஆரம்பித்து இன்று அக்காமாலா OLA வரை.

உள்ளூர் பாஸ்ட் ட்ராக் போன்றவற்றில் கை வைத்தால் கூட பரவாயில்லை, தெருக்கோடி டாக்சி டிரைவர் முதல், ட்ராவல்ஸ் வரை ஒழித்துக் கட்டிக் கொண்டு முக்கோடி தேவர்களையும் ola லா,லா என்று சொல்ல வைத்து விட்டது. அடுத்து கொடியெல்லாம் கட்டி ஒற்றுமையாக சங்கம் வைத்து கொள்ளையடித்துக் கொண்டிருத்த தனிப்பட்ட ஆட்டோக்களுக்கும் செக் வைக்க ஆரம்பித்து இருக்கிறது. இருக்கும் நாலு நல்ல ஆட்டோகாரார்கள் கூட ஒலாவில் சேர்ந்து அவர்களுக்கு கொள்ளையில் பங்கு கொடுத்து மிச்சத்தை எடுத்துக்கொண்டு முதலாளி நிலமையில் இருந்து தொழிலாளி நிலைமைக்கு வருவார்கள். இவர்களுக்கு கஸ்டமர் மார்க் கொடுத்தாதான் அடுத்து அடுத்து சவாரிகள் கிடைக்கும். இதில் எங்கு முதலாளி ஆவது.

அதன் ஆப் கூட சரியாக சண்டைப் போடுவேன். OLA app. ஒரு வேலை. சுத்தி சுத்தி பிளாஷ்பேக் காட்டி மஞ்சள் கருப்பில் மின்னியது. இந்கிட்டு..தோ பாரு உன் வீட்டாண்ட மினி இருக்கு 1.6 x தான் போவிர்களா என்றது. இல்லை என்றேன். சரி மைக்ரா, ஏ.சி புச்சு நைனா புச்சு காசும் குறைச்சல் போவியா என்றது. சரி அனுப்பு என்றேன்..நைனா இப்போ பீக் ( பெங்களூர் ட்ராபிக் எப்பவும் பீக் தான்) 1.8 X தர்றியா நைனா...வாயில் கெட்ட வார்த்தை வந்தே விட்டடது. வர வர கிராமத்து நினைவுகளும் அவர்களின் கெட்ட வார்த்தைகளும் நினைவுக்கு வருகின்றன. முக்கியமா ஃபேஸ் புக் கில் ஒரு மிக நல்ல பெண்ணை வம்புக்கு இழுத்தால் நிகின் பேசும் நான்கு மொழி வார்த்தைகளும், ஊரில் பேசும் அத்தனை கெட்ட வார்த்தைகளும் அந்த போஸ்ட் மேலேயே எச்சிலோடு விழுகின்றன. அதற்கு ஜிங் ஜாங் கமென்ட் செய்தவர்களின் கதி அதை விட மோசமாய். அந்த நல்ல பெண்ணை பற்றி பிறகு சொல்கிறேன். அவர் நமக்கு மிக வேண்டப்பட்டவரே. இந்த மெண்டல் லட்டி நல்லதா என்று யோசிக்க வேண்டும். வயசுதான் ஆகிறது. இதற்கு ப்ளாக் நல்லது (blog இல்ல block) என்றே தோன்றுகிறது.

இந்த ஃபேஸ்புக் கதை வேண்டாம். டென்ஷனை கிளப்பு. ஆங் ஓலா க்கும் எனக்கும் போராட்டாடம்டம் . இப்ப எவ்வளவு என்றேன். வண்டிகள் இல்லை என்றது. பிறகு ஐந்து நிமிடம் கழித்து எம்புட்டு சொல்ற..பீக் போச்சா என்றேன்.. போச்சே 1.2X என்றது..ம்ஹூம் மெக்ரா எம்புட்டு..அது இங்கிட்டு இல்ல என்றது. 
விடுவேனா ஆட்டோ என்றேன் ..அது மீட்டரில் வரும். பத்து ரூபா மேல போட்டுக் கொடு என்றது. சீல் வைத்த ஆட்டோவையை சந்தேகப்படும் இனம். என்கிட்டவா என்று கொஞ்ச நேரம் சும்மா இருந்தேன்.
அப்பொழுது இணைய நண்பரரிடம் கிளம்புகிறேன் என்று சொல்லிவிட்டு ஒலாவில் போவதா காரில் போவதா குழுப்பம் இந்த இரண்டில் ஒண்ணு சொல்லுங்க என்றேன். பக்கத்தில் யார் இருந்தாலும் கேப்பேன். உங்கள் இஷ்டம் என்று அவர் தல தெறிக்க ஓடுவது தெரிந்தது.

ஒலாவில் அறநூறு ரூபாய். அலுப்புபடாமல் ஓட்டினால் ஐநூறு மிச்சம். பார்கிங் செய்ய வேண்டுமென்றால் சிட்டி மார்க்கெட் அருகில் இருக்கும் ஒரே பார்கிங் மகாராஜா காம்ப்ளக்ஸ். நானோ SJP ரோடு செல்ல வேண்டும். தரன் அழகா ஒலாவில் கடை வாசலில் இறங்கி, ஏறி வா என்று பச்சை கொடியும் காட்டினார். நாம்தான் சொன்ன பேச்சை கேக்கும் ஊருக்கு போய் கூட தெரியாதே.
உடனே போனில் கூப்பிட்டு அந்த ஐநூறு க்கு ஒரு டாப்ஸ் வாங்கினா கூட உண்டு. (நீ ஐநூறு க்கு வாங்கிடுவியாக்கும் என்ற மைன்ட் வாய்ஸ் சத்தமா கேட்டது) நானே டிரைவ் செய்து போகிறேன் என்றேன். 

இந்த SJP ரோடில் பார்க்கிங் செய்ய காலையில் ஐந்து மணிக்கே வந்துவிடுவார்களா என்ற சந்தேகம் எப்பவும் உண்டு. கார்கள் அத்தனை குப்பையா, தூசியுடன் இருக்கும். ஆனால் காலை போனால் மிக மிக அழகாக மாலையும், பூக்களும், பொக்கைகளும கர்நாடக மாநிலத்திற்கே சப்ளை செய்வது போல சந்தைப்படுத்தப்பட்டிருக்கும். இப்பொழுது குப்பையும், கூளமும். காலையில் மணமும் பூக்களும் ஒரே தெரு கல்யாணம் மற்றும் ஆஸ்பத்திரிக்கு தனி தனி புடவை கட்டிக்கொள்ளும் பெண் போல எப்படி வேஷம் போடுகிறது என்று ஆச்சரயமாக இருக்கும்.

ஆங் ஒலாவில் விட்டு எங்கோ..கடைசியில் இன்னாதான்பா சொல்றே ன்னேன். ஆப் இவ நமக்கு ஆப்பு வைக்க வந்தவ போலன்னு சந்தேக கண்ணோடு பார்க்க ஆரம்பித்து விட்டது. உடன் 2.2X தான் இருக்கு போறியா என்றது. அதாவது 2.2. மடங்கு கட்டணம். போய்யா டிராபிக் எம்புட்டு இருந்தாலும் நோக்கு அஞ்சு பைசா தரமாட்டேன் என்று ஆப்பை ஆப் செய்தேன். உடனே 50% ஆட்டோவில் போக கோட் வச்சுக்கோ..நோக்கு மட்டுதான்.என் செல்லம்ல உடனே ஆட்டோ புச்சி போவியாம் என்றது.
கோடாம் கோடு..என்கிட்டேவா..காலா வையே வந்து பாரு என்பேன்..இந்த ஓலா சும்மா..என்று காரை எடுத்தேன்.

பார்கிங் அதிர்ஷ்டவசமா கிடைத்து விட்டது. ஒரு முறை பைக்க அந்த தெருவில் பார்க்கிங் செய்து இருந்தேன். கையில் முழுக்க சாமான்கள். பழம, காய்கறி வேறு, எத கம்மி என்று சொன்னாலும் பொறுக்கும் ஜாதி. திரும்பி வந்துப் பார்த்தல் வண்டியை காணும். அந்தளவுக்கு ஏரியா பழக்கமில்லை. வண்டி கலாசிபாளையம் போலீசிடம் இருக்கும் போங்க என்றார்கள். ஆட்டோவில் செல்ல கூட அதிக பணம் இல்லை. கார்டுகள் இல்லா காலம். நடந்து நடந்து களைத்து சென்றேன். நல்ல வேளை வண்டி இருந்தது. நூறு என்றார்கள். கையில் அத்தனை இல்லை. பெண் என்றால் கர்நாடக டிராபிக் போலீசார்கள் கண்டிப்பாக இரங்குவார்கள். சாரே கொத்தில்லா சாரே. நான் ஏன் மாடலி, அஷடு காடிகள் ஜதை ஆக்பிட்டு வந்தேன். இனி மாடல்லா, தப்பாயித்து என பாவமாக சொல்ல, வண்டியை கொடுத்துவிட்டார்கள். வரும்பொழுது டீ செலவுக்கு போலீசிடம் பணம் வாங்காமல் வந்தது ஏனோ நினைவுக்கு வந்தது. ஆனால் அவர்கள் அனுபவத்தில் எத்தனைப் பேர் பார்த்து இருப்பார்கள்.

அந்த தெருவில் போர் சாமன்கள், கிரைண்டர் சாமான்கள். குழாய் சாமன்கள் என்று எல்லா ஹோல்சேல் கடைகளும் உண்டு. ஒவ்வொரு குறுக்கு தெருவிலும் ஒரே பொருட்கள் பல கடைகளிலும் இருக்கும். கார்பன்டரி பிட்டிங்க்ஸ் ஒரு கடை, வெறும் இரும்பு பர்னிச்சர் ஒரு தெரு, எலட்டராணிக்ஸ் ஒரு தெரு, எலட்ரிகல் ஒரு தெரு. வெளியூர் வாசிகள் உள்ளே செல்வது அத்தனை நல்லதல்ல.


சில கடைகளில் தீவிரமாக பார்கயின் செய்து கொட்டேஷன் வாங்கினேன். பெங்களூருவை பொறுத்தவரை நன்றாக பேரம் பேசலாம். ஒன்றும் சொல்ல மாட்டார்கள். கோவமும் வராது.

ஒரு குறுக்கு தெரு நுழைவில் கபாலி டீசருக்கு ஆளுயர கட் அவுட்..தலைவரருடன் கூட அத்தனைபேர் ஆளுயுர போட்டோவும் இருந்தது. எல்லாருக்கும் தனக்கு கட் அவுட் சிட்டி மார்கடடில் வைக்க முடியுமா? தலைவர் பேர் சொல்லி வைத்தாயிற்று. தமிழனடா.. அத்தனை பர பர பர தெருக்கு முன் பெரிய பார்க். உயிரை கையில் பிடித்து கிராஸ் செய்து (அறுநூறு ரூபாய் மிச்சப்படுத்த அந்த தெருவில் பல தற்கொலை முயற்சிகளை தாண்டி வர வேண்டி இருக்கிறது) ஊரில் எது நடந்தாலும் எதுவும் பாதிக்காமல் மடியில் படுத்துக்கொண்டு, சாய்ந்துக் கொண்டு , முகம பார்த்து, சண்டைப் போட்டுகொண்டு வித வித போஸ்களில் லவ் பேர்ட்ஸ். எதிர் சாரியில் ஐம்பது ரூபாய்க்கு மாடு போல வண்டி இழுக்கிறார்கள் . இங்கு இப்படி என்ற கம்பியுனிச சிந்தனையை புதைத்து விட்டு வாலண்டைன் சிந்தனைக்கு தாவினேன். என்னவோ பார்க்கில் சிறுசுகளை பார்க்கும் பொழுது கல்யாணம் செய்து வைக்கும் சிவ சேனா நினைவும்..

ஒரு ஜாம் தவிர்க்க சந்தில் புகுந்து அரை மணி மிச்சப்படுத்தி திரும்பினால் பயங்கர டிராபிக் ..வலதுபக்கம் ஒரு சிலை கத்தி கேடயம் வைத்துகொண்டு. சிவாஜி ஜாடை..ஆனால் நின்றுகொண்டு. ஒரு ஆயிரம் முறை கடந்துருப்பேன். இன்று வரை சிலையும் தெரியல, அது யாருன்னும் தெரில. நம்ம ஊர் போல கண்ணகி சில, காந்தி சில பஸ் ஸ்டாப் வைக்கும் பழக்கம இல்ல. கப்பன் பார்க்கில் இருக்கும் சிலை விக்டோரியா என்பதே சில வருடங்களுக்கு முன் தெரிந்துகொண்ட பொது அறிவு. பத்து பேர் வெள்ளையும் சொள்ளையுமா ஒரு செல்பி ஸ்டிக் போல ஒரு கம்பில் மாலையை மாட்டி அதற்கு அணிவிக்க முயற்சி.போட்டோக்கு போஸ் கொடுத்தது காமெடியாக இருந்தது. நம்ம ஊர் சிலைக்கு மாலை போட போனா கலவரமால்ல ஆக்கிப்பிடுவாய்ங்க..ஆத்தாடி. வயலன்ட் தெரியாத சைலன்ட் பெங்களூர் அரசியல்.

வழியில் இன்பாக்ஸ் மிளிரியது. கீர்த்தி இது உண்மையா என்றார். ஐந்து வருடத்தில் பெங்களூர் சந்திக்கப்போகும் மிக பயங்கர பிரச்னைகளை எடுத்துரைத்த கட்டுரை.
ஏரிகள் ஆக்கிரமிப்பு, நீர் மேலாண்மை, காவிரியில் இருந்து ஆயிரம் அடி உயரே தண்ணிர் பம்ப் செய்யப்படும் விதம், வானுயுர கட்டிடம் , கடுமையான டிராபிக், வெட்டப்பட்ட லட்ச லட்ச மரங்கள் பற்றி IISC மாணவர்கள் எழுதிய கட்டுரை.

இருவது வருடம் முன்பு நானும் தரனும் சுசுகி பைக்கில் NEW BEL ரோடில் செல்வோம். இரு பக்கமும் சோலை மரங்கள். வண்டியில் போனாலே குளிரும். 365 நாட்களும். அந்த தெருவின் ஒரு பகுதி அப்படி. திருமண புது ஜோடி காலங்கள் அந்த குளிரில் மகிழ்ச்சி கொண்டாடியது. இந்த தெருவில் சுஜாதா ஒரு காலத்தில் வசித்தார். இப்பொழுது தெரு, ரோடு அல்ல கமர்ஷியல் ஏரியா. இன்று போனாலே கடுப்பாக இருக்கிறது. ஜோடியா போனா இருக்கும் காதலும் போய் கடுப்பு வரும்போல ஆகிவிட்டது அந்த சோலை தெரு. இப்பொழுது அதுபோன்ற குளு குளு தெருக்கள் நினைவில் மட்டுமே.

ஏரிகள் போதும் குடிநீர் தேவைக்கு. அத்தனை ஏரிகள் இங்கு. எல்லாம் போச்சு. மெட்ரோக்கு வெட்டிய லட்சகணக்கான மரங்களுக்கு பதிலே காணும். மரங்களை முளைகிறதோ இல்லையோ தெருக்கு ஒன்று மால்கள் முளைக்கிறது. அசுர வளர்ச்சி என்று சொன்னால் போதாது. அத்தனை கார்களுக்கு இடமே இல்லை இங்கு. கிருஷ்ணா காலத்தில் ஐடி வந்தது வரம் என்று நாங்கள் நினைத்தோம். அதுவே எங்களின் சாபம் ஆகியது.

அந்த கட்டுரைகள் நினைவை கிளறியது. பெங்களூரில் இருந்து தப்பி மாயவரம் போய்விடு என்றது இன்பாக்ஸ் செய்தி. மாயவரம் ஒரு குழந்தை என்றால் எனக்கு பெங்களூரு இன்னொரு குழந்தை. நான் ஒரு உண்மையான பெங்களூரியன். எத்தன்னை அழுக்காக ஆகட்டும், குப்பைகள் சேரட்டும் அது என் குழந்தைதான். விடுவது என்பது கனவில் கூட இல்லை என்றேன். லோக்கல் எம்.எம் ல " நீ யாரா இருக்கலாம். எங்க வேணா இருக்கலாம், எப்படி வேணா இருக்கலாம், எங்க ஊருக்கு வா, வந்தா கன்னடதவனா இரு". இதை அதிக மொழியில் மொழிபெயர்க்க சொல்லி பரிசு கொடுத்தார்கள். அத்தனை ஸ்பீடா போன் நம்பர் சொல்லியும் பலர் போன் செய்ய முடிவது ஆச்சர்யம். தமிழில் சொல்கிறேன் என்று கன்னட தமிழில் மாத்தாடினார்கள்.

கப்பன் பார்க்கின் இருபுறமும் பெயர தெரியாத வெள்ளைப் பூக்கள் . ஒருப் பெண் ஸ்கர்ட், நீள அழகிய கால்களுடன் பாயின்ட் ஷூ போட்டுகொண்டு காரில் ஏறினாள்.. நமக்கு ஹீல்ஸ் தடுக்குது..இதில் எங்கு பாயின்ட் ஷூ இதெல்லாம் காரில் போய் சொகுசா இறங்குபவர்களுக்குதான் லாயக்கு என்று கார் ஒட்டிக்கொண்டே சிந்தித்தேன். மனித முரண்

ஒரு ஆட்டோ குழந்தை தூறலை கை நீட்டி எடுத்துகொண்டது. பிரசாதத்தை தெய்வம் வாங்குவதுப் போல. கார் கண்ணாடிகளை இறக்கி விட்டேன். தூறலை ரசித்தேன். போனில் இங்கு மழை டிராபிக்கில் மாட்டிகொள்வாய்..சீக்கிரம் வீட்டுக்கு வா என கேட்க..வீட்டுக்கு வந்து ஒரு காபி, மிக்சருடன் மெல்லிய காற்றில் பெங்களூரை ரசிக்கிறேன். என் குழ்ந்தை என்றும் என் நம்பிக்கையை பொய்க்காமல் மீண்டு வரும், தன்னை மாற்றிக்கொள்ளும் என்று புரிந்தது. அதற்குள் சமாளித்து விடுவோம். we are bangaloreans.