Saturday, December 12, 2015

கடலூரில் தன்னார்வலர்களை தாக்கும் 'பேரிடர்கள்'- ஒரு கதறல் கடிதம்

கடலூர் பற்றிய விஷயங்கள், அனுபவங்கள், நடப்பது என்ன? முதல்நாளில் இருந்தே குழுவினரோடு இருப்பதால் அனுபவங்கள், மனக்கசப்புகள், இயலாமை எல்லாம் வருத்த வடுக்களாக வலிக்கின்றன.

இத்தனை நிவாரணங்கள் இருந்தும் ஏன் இன்னும் ஒரு வேளை உணவுக்கு கையேந்தும் நிலைமை? அனுபவங்களைப் பகிரலாமா?
ஒரு பக்கம் லாரிகள் களவு... மறுபக்கம் லாரிகளுக்கு பாதுகாப்பு; ஒரு பக்கம் நிவாரணம், மறுபக்கம் பசியில் தவிக்கும் மக்கள். இதற்கிடையிலும், நிற்காமல் நீள்கிறது கடலூர் செய்திகள்.

பசியில் 750 பேர் துடிக்கிறார்கள் என்று ஓர் இரவில் தகவல் வந்தது. இதுபோன்று தகவல் வந்தால் நம்பி சமைத்து எடுத்துக்கொண்டு போனால் பெரும்பாலும் அதை வாங்கிக்கொள்ளும் கூட்டம் வேறாக இருக்கும்.

சேற்றிலும், சகதியிலும், மழையிலும் நனைந்துகொண்டு பெரிய பெரிய வேலைகளை விட்டுவிட்டு வந்த களப்பணியாளர்களை சோர்வடைய வைத்த விஷயம் இவை. எனவே சில நண்பர்கள் கவலைப்பட வேண்டாம்... பெரும்பாலும் இவை பொய்யான தகவல்களாக இருக்கும் என்று சொன்னார்கள்.

ஆனால், தகவல்களை பொய் என்று சொல்லமுடியவில்லை. அதுவும் உண்மை. தோழி அனிதா தொடர்புகொண்டு கடும் உழைப்பில் 350 பேருக்கான உணவை ஏற்பாடு செய்து இரவு பதினோரு மணிக்குள் கொண்டுபோய் சேரச் செய்தார். இந்த உண்மை என்னை கடலூர் நோக்கி பார்வையை இன்னும் ஆழமாக செலுத்த வைத்தது.

மாயூரத்தை சேர்ந்த அக்கா சுதா சத்யநாராயணாவை நிவாரண நிலவரத்தைக் கண்டு பகிரச் சொன்னேன். குறைந்தபட்சம் மூன்று கிராமங்கள் பற்றியாவது தகவல் வேண்டும் என கேட்டேன்.

சுதா அக்காவின் மகள் பத்தாம் வகுப்பு படிக்கிறாள். நிவாரண உதவிக்காக களப் பணிக்கு சென்றவள் வருத்தம் தோய்ந்த முகத்துடன் திரும்பி வந்தாள்.
''நான் கொடுக்க நினைத்த எல்லா பொருட்களையும் பிடுங்கிச் சென்றுவிட்டார்கள்'' என கவலையுடன் சொன்னாள்.

உதவ நினைத்து உற்சாகமாகக் கிளம்பிய பத்தாம் வகுப்பு மாணவிக்கு மனக்கசப்பை உருவாக்கியது யார்? ஏன்?

அக்கா சுதாவின் குழுவினர் கடலூர் கிளம்பும்போது இந்த பகுதிக்குதான் கொடுக்க வேண்டும் என்று சிலரால் மறைமுகமாக போனில் வற்புறுத்தப்பட்டது. ஆனால் சுதா குழு சமயோசிதமாக போனை ஸ்விட்ச் ஆப் செய்து விட்டு வேறு கிராமத்து குடிசைப் பகுதிக்கு கொடுத்தனர்.

அடுத்து, சாத்தப்பாடி கிராமத்தில் உதவி இல்லாமல் தவிப்பதாக சங்கர் செய்தி சொன்னார். சில களப்பணியாளர்கள் "இதுபோன்ற செய்தி வந்த பிறகு செல்வது ஆபத்து. நாங்கள் கிராமம் கிராமமாக செல்கிறோம்" என்றும் தெரிவித்தனர்.

சுதா அக்காவை எப்படியாவது போய் பார்த்துவிட்டு வரச் சொன்னேன். பார்த்துவிட்டு அங்கிருந்தே போன் செய்தாள்.

''பிஞ்சுக் குழந்தைகள் கூடசேற்றில் நிற்கும் அவலம் பார்த்து மனம் பதறுகிறது'' என கதறினாள். அந்த பதற்ற தருணத்திலும் புகைப்படங்களை அனுப்பினாள்.

நிலைமையின் தீவிரம் உணர்ந்து அன்று இரவே அபிலேஷ், அபிலேஷ், தீபன், நவீன் குழுவினர் நிவாரணப் பொருட்கள் கொடுத்ததும் மிக அமைதியாக வாங்கிகொண்டனர். குறிப்பாக, அங்கு எந்த பிரச்சினையோ, தள்ளு முள்ளோ நிகழவில்லை.

மறுநாள் சிதம்பரம் பகுதி கொத்தடைக்கு தம்பி திராவிட மணி நண்பர் சக்தி சரவணனிடம் இருந்து பொருட்கள் வாங்கிக்கொண்டு சென்றார்.

கிராமத்து மக்கள் என்னிடம் போனில் பேசினர். கிட்டத்தட்ட அவர்கள் கிராமத்தை காப்பாற்ற வந்த ரட்சகியாக நினைத்து உருகினர்.

"ஸ்டவ், பாத்திரம், தார் பாய் கொடுங்க. அதை வச்சு சமாளிப்போம்" என்றார்கள். எதுவுமே இல்லாதபோதும் எத்தனை மிக மிக எளிமையான கோரிக்கையை முன்வைத்தார்கள் என்று நினைக்கையில் இப்போதும் சிலிர்க்கிறது எனக்கு.

இதுபோன்ற பல கிராமங்களுக்கும், இருளர் குடியிருப்பு பகுதிகளுக்கும் ஜெயபிரகாஷ், கனிமொழி போன்ற நண்பர்கள் சென்று பார்த்து பார்த்து தேவைபட்ட பொருட்களைக் கொடுத்து உதவி செய்தனர். அவர்கள் மிகச்சரியாக தேவைப்படுபவர்களை அடையாளம் கண்டு வைத்து இருந்தனர்.

பாஸ்கர் சார் முதல் நாளில் இருந்தே தகவல்கள் கொடுத்து விவசாயத்தை மேம்படுத்த வேண்டிய அவசியத்தைப் பற்றியும், தார் பாயின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
ஆனால், இன்னும் நிவாரணம் கிடைக்காமல் நூற்றுக்கணக்கான கிராமங்கள் இருக்கின்றன என்றால் நம்ப முடிகிறதா உங்களால்?

இது முழுக்க முழுக்க உண்மை. இந்த உண்மை சுடும்போது தான் இன்னொரு கேள்வி எழுகிறது.

வண்டி வண்டியாக லாரிகளில், வாகனங்களில் செல்லும் பொருட்கள் எங்கே போகின்றன? யாருக்கு கிடைக்கின்றன? அதற்கான பதில் உங்களுக்கு வியப்பாகக் கூட இருக்கலாம்.
முதலில் உணவுக்கு வழியில்லாமல் தர்ணா செய்யும் மக்களை போலீஸ் சமாதானப்படுத்துகிறது. அந்த வழியில் வரும் லாரியில் உள்ள பொருட்களை கேட்கத் தொடங்குகின்றனர். இதனால் தர்ணா செய்யும் மக்களின் நலன் கருதி லாரியில் உள்ள பொருட்கள் கொடுக்கப்படுகின்றன. நாளடைவில் இதுவே பழக்கமும், வழக்கமும் ஆகிப் போகிறது.

மக்கள் தர்ணா செய்வதும், போலீஸ் அடுத்த லாரியை குறிவைப்பதும், இடத்தை நோக்கி செல்லும் லாரியில் உள்ள பொருட்கள் பாதி வழியிலேயே காலியாவதும் இப்படித்தான்.
சட்டம் - ஒழுங்கை காப்பாற்ற அரசை நாட வேண்டியவர்கள் முகநூல் நண்பர்களை, தன்னார்வலர்களை நம்பி, பல இடங்களில் வலுக்கட்டாயமாக பொருட்களைப் பறிப்பது எந்த மாதிரியான செயல்?

இப்படி பல சிக்கல்களை சந்திக்க வேண்டிய சூழல் உருவானது.
ஆற்றங்கரை, ஏரிக்கரைகளில் கண்ணுக்கு தெரியாத புறம்போக்கு இடங்களிலும் ஏழைகள் வசிக்கின்றனர். காட்டுப்பள்ளம் கிராமத்தில் முதல் வெள்ளத்தின்போதே 9 அருந்ததியினர் அடித்துச் செல்லப்பட்டனர். ஆனால், நிவாரணப் பொருட்கள் இவர்களை சேர்வதே இல்லை.
எல்லா கிராமங்களிலும் ஐந்து முதல் ஐநூறு வரை குடிசைப் பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. விழுப்புரம், பண்ருட்டி, சிதம்பரம், கடலோரப் பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டன.

எதுவுமே தெரியாமல் வண்டியை கடலூருக்கு எடுத்துக்கொண்டு சென்றவர்கள் எல்லாம் பக்கத்தில் இருக்கும் பகுதியிலேயே கொடுத்ததால்,திரும்பத் திரும்ப ஒரே இடத்தில கொடுத்தது அதிகம் நடந்தது.

அடுத்த இடியாப்ப சிக்கல் கடுமையான சாதிய அமைப்பு. இதில் எந்தக் கட்சியும் விலக்கில்லை. பெருங்கொடுமை என்னவென்றால், சில தோழர்களிடமும் இது மறைந்தே இருக்கிறது. நல்லவர்கள் என அடையாளம் காணப்பட்டவர்களின் அடி மனதில் கூட சாதிப் பேய் கொழுந்து விட்டு எரிகிறது. அவர்கள் தங்கள் சமூகத்தில் உள்ள நலிந்தவர்களுக்கு கொடுக்க மட்டுமே அனுமதிக்கிறார்கள். ஆனால், நிஜ பொருளாதரத்தில் பின்தங்கி வாழும் குடிசைப் பகுதிகளுக்கு செல்ல விடாமல் தடுத்து விடுகின்றனர். இது நிராயுதபாணியாக சென்ற தன்னார்வலர்களுக்கு பெரும் அச்சுறுத்தல்.

அடுத்த சிக்கலை உருவாக்குபவர்கள் மிக முக்கியம் கட்சி பேதமில்லாத லோக்கல் அரசியல்வாதிகள். தங்களை முன்னிறுத்த என்ன வேண்டும் என்றாலும் செய்யத் துணிந்தவர்கள். பொருட்களை வாங்கி அல்லது பிடுங்கி தாங்கள் கொடுப்பது போல போட்டோ எடுத்துக்கொன்டனர். இதுவும் தன்னார்வலர்களை மனதளவில் மிக பாதித்த விஷயம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நண்பர் ஒருவர் பாய் கொடுத்துக்கொண்டிருந்தார். அப்போது, அந்தக் கிராமத்தில் அரசியல் தலைவர் அந்த வழியாகச் சென்றார். கிராமத்தில் இறங்கவில்லை. ஆனால், டிவியில் பாய் அவர் கையால் வழங்கப்பட்டதாக செய்தி. நடுநிலை என்று ஒன்று எங்குமே இல்லை.

அடுத்து ஊரில் செல்வாக்கு உள்ளவர்கள் எல்லாருக்கும் கொடுங்க என்று வற்புறுத்த வசதியானவர்கள் வந்து வாங்கிச் செல்வதைப் பார்த்த பலர் கடலூர் சரியாகி விட்டது என்ற தகவலை பரப்பத் தொடங்கினர்.

அடுத்து, போலீஸ் வண்டியை மறித்து சமுதாயக்கூடத்துக்கு செல்லுங்கள் என்று சொல்வார்கள். நேற்று மட்டும் கலெக்டர் ஆபிஸ் அருகே எக்கச்சக்கமான லாரிகள், சிதம்பரம் போலீஸ் ஸ்டேஷன் அருகிலும் கண்டதாக தோழி சொன்னாள். அங்கும் இங்குமாக சென்றுகொண்டிருந்த லாரிகளை வழிமறித்து அத்தனையும் சமுதாயக்கூடத்துக்கு திருப்பி அனுப்பபட்டது. இன்று கடலூரில் லாரிகள் பார்ப்பது மிக கடினம்.

ஒரு வாரமாக மக்கள் பசியால் துடித்துக்கொண்டு இருகின்றனர். பிஞ்சுக் குழுந்தை கூட சேற்றில் இருக்க இடமின்றி சேற்றில் நிற்கிறது. அவர்கள் கேட்பது கொஞ்சம் அரிசி, தார் பாய், ஸ்டவ் போன்ற எளிமையான பொருட்கள் மட்டுமே.

ஒரு தாய்க்கிழவி போனில் சொன்னது... "பசியில் கிழிந்த பாய் போல கிடக்கிறோம். உள்ளூர் ஆட்கள், அரசியல் தலைவர்கள் எல்லாரும் கை விட்டு விட்டார்கள். உங்களால்தான் இதுவாவது கிடைக்கிறது. எங்களுக்கு நீங்கள்தான் வழி செய்ய வேண்டும்". இந்த வார்த்தைகளைக் கேட்ட பிறகு கண்ணீர் சிந்தாமல் இருக்க முடியுமா?

இந்த அவசர அவசிய சூழலுக்கு இடையிலும், நிவாரணப் பொருட்களை டாஸ்மாக் கடைகளில் சிலசமயம் பார்க்கும் அவலம் நீடிக்கிறது. பெண்கள் அடுத்த புடவைக்கும், அடுத்த வேளை அரிசிக்கும் கையேந்தி கொண்டு இருக்க, சில குடி அடிமைகள் பாத்திரம், தார் பாய் போன்றவற்றை விற்று, டாஸ்மாக்கில் குடிப்பதும் நடக்கிறது. ஏற்கெனவே குழந்தைகளுடன் ரோட்டில் நிற்கும் பெண்களுக்கு இன்னும் துயரத்தை அரசே வெள்ள நிவாரணமாக வழங்கி இருக்கிறது.

இவற்றையெல்லாம் பார்த்துப் பார்த்து எங்களின் கையறு நிலையை மிக அதிகமாக நொந்துகொள்ள வேண்டி இருக்கிறது.

எந்த மீடியாவும் போலீஸையும், அதிகாரிகளையும் அவர்கள் பதுக்கி வைத்துள்ள கோடிக்கணக்கான பொருட்களையும் அடையாளம் காட்டத் தயாராக இல்லை. இரு நாட்களாக அவர்களிடம் பேசி மன உளைச்சலுக்கு ஆளானது தான் மிச்சம்.
தாழ்த்தப்பட்ட மக்களை ரட்சிக்க வந்த தலைவர்கள், தமிழின தலைவர்கள் என ஒருவரையும் களத்தில் காணவில்லை. 10 நாட்கள் ஆகியும் அவர்கள் காணாமல் போனவர்களின் பட்டியலிலேயே இருக்கிறார்கள். இன்னும் எப்பொழுதுதான் வரப் போகிறார்கள்?

அன்பால் நீளும் நேசக் கரங்கள் மட்டும் இல்லையென்றால் பல மக்கள் பட்டினியால் வாடி இறந்திருக்கக் கூடும். இல்லையென்றால் பெருமளவில் வழிப்பறி, கொள்ளை அதிகமாகி கொள்ளைகள் நடைபெற்று இருக்கும். இன்று சென்னை, கடலூரில் வசதியாக இருக்கும் மக்களுக்கு ஓரளவு சட்டம், ஒழுங்கு பாதுகாப்பு உள்ளது என்றால் தன்னார்வலர்களே காரணம்.

கடலூரில் இணையம்.

அரசு தன் ஆட்சியின் அனைத்து வேலைகளையும் தன்னார்வலர்களை விட்டு செய்ய வைக்கலாம். ஆனால் அது கட்சிகளுக்கு பெரும் அச்சுறுத்தல். எங்களுக்கு அரசியல் வேண்டாம். ஆனால், மக்களுக்கு உதவி வேண்டும். அந்த உதவி முழுமையாகச் சென்று சேர வேண்டும். என்ன செய்ய திட்டம் உங்களுக்கு?

ஃபவர்புல் மீடியா என்பது பவர்லெஸ் ஆகிக் கொண்டு இருக்கிறதோ என்ற சந்தேகமும் எழுகிறது. இனி சமூக வலைத்தளம்தான் மக்களின் மீடியா. இனி இந்த மீடியாக்கள் மூலம் மீடியா பவர் ஒழியும். ஆனால், அதில் நல்லதும் கெட்டதும் சேர்ந்தே இருக்கும். மீடியாக்கள் இந்த சமயத்தில் விழிக்காவிட்டால் யாரும் உங்களை நம்ப மாட்டார்கள். நீங்கள் சினிமா செய்திகள், நடிகர் சங்கத் தேர்தல் மட்டுமே கவர் செய்ய வேண்டி வரும். போனால் போகட்டும் என்று நினைத்தால் நீங்கள் கடையை மூடிக்கொண்டு போகும் காலம் வந்துவிடும்.

அத்தனையும் மாற்றி எழுத வற்புறுத்துகிறார்கள். ஆனால் நாங்கள் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். நிவாரண நிதி, கார்ப்பரேட் அளித்த நிதி, மத்திய அரசு நிதி, கட்சி நிதி, கப்பலில் தேங்கி நிற்கும் பொருட்கள் எல்லாவற்றையும் தேர்தலுக்கு வைத்துக் கொள்ளுங்கள்.

முதலில் சமுதாயக்கூடத்தில் இருக்கும் பொருட்களை நசுக்கப்பட்ட சமூகத்துக்கு உடனே கொடுங்கள். எங்களுக்கும் வேலை இருக்கிறது. எங்களை உங்கள் வேலைகளை செய்ய வற்புறுத்த வேண்டாம். மக்களை காப்பாற்றி ஓட்டுகளை சேகரிக்கவாவது களத்தில் இறங்குங்கள். பசியை நீங்கள் போக்காவிட்டாலும் பரவாயில்லை. நாங்கள் பசியை போக்க தயார். அதற்கு வழிவிடுங்கள் போதும்.

- நிவாரண உதவிகளைத் திரட்டி, அதை உரியர்வர்களுக்குப் போய்ச்சேர போராடும் நபர்கள் ஒருவர், கிர்த்திகா தரண்

http://m.tamil.thehindu.com/opinion/blogs/கடலூரில்-தன்னார்வலர்களை-தாக்கும்-பேரிடர்கள்-ஒரு-கதறல்-கடிதம்/article7980559.ece

நன்றி  தி ஹிந்து. 

Wednesday, November 11, 2015

பொன்னியின் செல்வி

பொன்னியின் செல்வி (நன்றி அகல் மின்னிதழ்)

இவள் ஜீவ நதியா இல்லை, இவள் பாதிக்கும் மேற்பட்ட தமிழகத்தின் ஜீவன். இவள் பொன் கொடுக்கும் பொன்னி. பொன்னெழுத்துகளால் வடிக்கப்பட்டு இருக்கிறாள் பல கவிஞர்களால், இலக்கிய கர்த்தாக்களால்.

நான் பிறக்கும் பல ஆண்டுகளுக்கு முன்பு நான்கு பேருக்கு காவிரியை ஒட்டி பயணம் செய்ய ஆர்வம் உண்டாகிறது. அதுவும் சிலப்பதிகாரத்தில் கோவலன், கண்ணகி நடந்த பாதையில்.

சிலப்பதிகாரம் சோழ நிலங்களை பாடிய அழகில், காவிரியையும், இயற்கை அற்புதங்களையும் கம்பருடன் அந்த இடங்களை தரிசிக்க வேண்டும் என்று ஆவல் வருவது இயல்பு. மிளிர் கல் என்னும் நாவல் - அதில் கூட கண்ணகி சென்ற பாதையில் செல்ல ஆசைப்படும் ஒருவரை பற்றிய கதை. கம்ப இராமாயண காட்சிகளை கண் முன் தரிசிக்க தோன்றும் அளவுக்கு கம்பர் ஆழமாக வேரோடி போயிருக்கிறார் இலக்கிய மனங்களில்.

நான் பிறந்தது காவிரியின் கிளை நதிகளில் ஒன்றான நாட்டாறு பாயும் கிராமங்களில் ஒன்று. கிராமத்தில் ஆரம்ப காலத்தில் வாய்க்கால்களில் டிபன் பாக்ஸ் போட்டு விளையாடுவதில் இருந்து, ஆற்றில் பாயும் புது வெள்ளத்தை ஓடிப்போய் பார்ப்பது, வெயில் காலங்களில் மணலின் மடியில் விளையாடுவது என்று காவிரியின் நீர் மற்றும் மணலின் மடியில்தான் சிறு பிராய காலங்கள் கழிந்தது.

‘நடந்தாய் வாழி காவிரி’ (தி.ஜா, சிட்டி) என்னும் புத்தகத்தை ரத்னவேல் அப்பா அனுப்பி ‘உனக்கு பிடிக்கும்’ அவசியம் படி என்று கூறினார். என்னமோ அதில் மனம் ஆரம்பத்தில் லயிக்கவில்லை. ஏதோ ஒரு கட்டத்தில் என் காவிரியும், தி.ஜா அவர்களின் காவிரியும் இணைந்தது. பிறகு மனதோடு எழுத்துகள் ஓட ஆரம்பித்தன.

இந்த புத்தகம் செல்லுமிடங்கள் பாதிக்கு மேல் நான் பார்த்தவை, பரிச்சயமானவை. சிலது மட்டும் வாசிப்பில் உணர்ந்தவை. சமீபத்தில் கூர்க் சென்றேன். அது   காவிரியின் பிறந்த மடி. அவள் நீர் தொட்டு விசேஷமாய் செல்லும் இடங்கள். காவிரிக்கு பெய்யும் மாமழைதான் நான் தங்கி இருந்த 140  வருட பிரிட்டிஷ் பங்களாவின் காபி தோட்டத்திலும் பெய்தது. கூர்க்கின் மண் தொட்ட சொட்டுகள்தான் நதியாய் பிரவாகிக்கிறது. போகும் இடங்களில் எல்லாம் காவிரி. ‘டுபாறே யானை முகாம்’ பாருங்கள் என்றார்கள். காட்டுக்குள் இருக்கும் என்றுப் போனேன். காவிரியின்  கட்டுக்குள் இருந்தது அந்த காடு. யானைகள் காவிரியில் குளித்துக் கொண்டு இருந்தன. முகாமுக்கு படகின் இக்கரையில் இருந்து அக்கரைக்கு செல்ல வேண்டும். வேகமாக படகில் செல்லும் பொழுது நீரை கையில் அளந்தேன். இக்காவிரிதானே என்னை வளர்த்தது என்று மனம் சிலிர்த்து அடங்கியது.

நூல் ஆசிரியர் சரியான காலத்தில் தலைக்காவிரி முதல் கூர்க்கின் பல இடங்களுக்கு நதியுடன் சென்று இருக்கிறார். இந்த இடங்கள் நாற்பது வருடங்களுக்கு முன் காடாக இருந்திருக்கக் வேண்டும்..
சிதாப்பூர் என்ற இடத்தின் மேல் செல்கிறோம். அங்கும் ஓடுகிறாள். அங்கு ஆசிரியர் பாம்புகளை, புலிகளை தேடியதும் அப்பொழுதே. அவைகள் இல்லை என்று கேள்விப்பட்டது பற்றி குறிப்பிடுகிறார் ஆனால் அவர் குறிப்பட்ட மூங்கில் புதர்கள் பல அழிந்து போனதால்தான் காட்டு மிருகங்கள் காபி தோட்டங்களுக்குள் புக ஆரம்பித்தன என்று விடுதியில் ஒருவர் கூறியது நினைவுக்கு வந்தது. அடுத்து நிசர்கதாமா என்ற இடம். காவிரி மிக சிறிதாய் வளைந்து, நெளிந்து பாறைகளுக்கு நடுவில் ஓடுகிறாள். இத்தனை சிறியவளா அததனை வேலைகளை செய்வது என்று ஆச்சர்யமூட்டுகிறாள்.

கூர்க் புடவைக்கட்டுக்கு கூட கதை இருக்கிறதாம். அந்த சமூகத்தினரின் திருமணம் பற்றிக் கூறும் பொழுது, அவர்கள் விருந்துக்கு அழைத்து இருக்கிறார்கள் இவர்கள் சைவர்கள். அவர்கள் புலால் பழக்கம். விருந்தின் பொழுது நட்புகள் இன்னும் இறுக்கமாகும். ‘சில பழக்க வழக்கங்கள் இடைஞ்சல்கள்தான்’ என்று சைவ பழக்கத்தை குறிப்பிடுகிறார். அந்த காலத்தில் கூட சைவத்தை பெருமை கொள்ள ஏதுமில்லை என்பதற்கான வரிகளில், அவரின் உயரம் மனதில் மேலும் அதிகரித்தது.

இந்த முறை எனக்கு பல இடங்களில் காவிரிக் கரை ஓரமாகவே பயணம். தற்செயலான நிகழ்வு எனினும் அதனால் ஏற்பட்ட ஒரு கிலேசம் அல்லது நெகிழ்வு அல்லது ஆர்வம், உற்சாகம் ஏதோ ஒரு உணர்வு ஆட்கொண்டு விட்டது. ஒரு வெறியோடு கண்களில் காவிரியை விழுங்கினேன். அத்தனைக் கஷ்டபட்டு காவிரி பயணம் மேற்கொண்டவர்களை நினைத்துப் பார்த்து எனக்கு கிடைத்த அதிர்ஷ்டத்தை வியக்காமல் இருக்க முடியவில்லை.

அடுத்து காவிரி பிருந்தாவன் கார்டனின் விளக்குகளுக்கு மத்தியில் நடனம் ஆடிவிட்டு நீர்த்தேக்கத்தில் உறைகிறாள். அப்பொழுது ஆசிரியர் பெங்களூரில் இருந்து மிக கஷ்டப்பட்டு சிவ சமுத்திரம் சென்று இருக்கிறார். ககன சுக்கி, பார் சுக்கி நீர் வீழ்ச்சி பார்க்க போகும் பயணம் கொஞ்சம் கரடு முரடாகவே இருந்து இருக்கிறது. அந்த பரிசலில் நான் சென்றப் பொழுது தி.ஜா போனது தெரியாமல் இருந்தது.  இன்னும் ரசித்து இருக்கலாம். அடுத்து ஹோய்சால வடிவத்தில் கட்டப்பட்ட சோமநாத கோவில், அடுத்து ஸ்ரீரங்கப்பட்டினம். சிதாப்பூர் வழியாக தலைக்காவிரி, அங்கு அகஸ்திய மாமுனிவரின் கோயிலுக்கு சென்று இருக்கிறார். அவர் சென்ற  காவிரி கரை ஓரங்களின் பல்வேறு பகுதிகளில் அகஸ்தியர் கோவில்கள் காட்சி தருகின்றன. காவிரியோடு தமிழும் ஊடே சேர்ந்து பயணிக்கிறது.  

அவரின் புத்தகத்தில் கண்ட காவிரியை பற்றி நாம் எழுத வேண்டும் என்றால் அதைப் போல மூன்றுப் பங்கு எழுத வேண்டும். அத்தனை நேர்த்தியான நடை. தேவையான விஷயங்களை மட்டும் சொல்லிவிட்டு மிச்ச விஷயங்களை மெலிதாகதொட்டுவிட்டு செல்கிறார். அதற்கு முன் காவிரிக்கரையில் உள்ள கோவில்களை பற்றி ஒரு புத்தகம், அதுவும் உதவி இருக்கிறது. அவர்கள் பார்த்த காவிரியோடு ஆசிரியர் தான் பார்த்த காவிரியை ஒப்பிடுகிறார். நான் பார்த்த காவிரியை என்னால் இயன்ற அளவு ஒப்பிடுகிறேன். ஆக மனம் என்பது ஒப்பீடுகளின் உருவமாக இருக்கிறது.

ககன சுக்கி, பார் சுக்கி நீர் வீழ்சிகளை பார்த்து விட்டு, அதைத் தாண்டி அர்காவதியை கடந்து காவிரி காட்டுக்குள் ஒரு இடத்தில் நதி ‘ஹன்னிரேடு சக்கர’ என்று பன்னிரண்டு முறை சுழலுமாம். எப்பேர்ப்பட்ட பொருளும் இந்த சுழலுக்குள் மாட்டிக்கொண்டால் தப்பிக்க முடியாதாம். இந்த சுழலை ஒரு முறையேனும் பார்த்து விட வேண்டும் என்ற ஆவல் தோன்றியது.

மனதில் நெடு நாள் ஆசை என ஒன்று உண்டு. காவிரி எந்த இடத்தில் நான் கண்ட, குளித்த ஆறாக மாறுவாள் என்று. கூர்க், மைசூர் போன்ற பெரும்பான்மையான பகுதிகளில் காவிரி, கற்கள் மேல் தான் பயணம் செய்வாள். கல்லும் முள்ளும் உள்ள பாதை திருச்சி அருகில் பட்டுப்பாய் போட்டது போல வெள்ளி ஜரிகை மணலாக இருக்கும். ஒகேனக்கல் தாண்டி காவிரி ஆறாக மாறுவாள் என்று நினைத்துக் கொண்டுருந்தேன். ஒரு முறை பவானியை தாண்டும் பொழுது அங்கும் காவிரி கற்களின் மேல்தான் பயணம் செய்தாள். இதைப்பற்றி பயணத்தில் சொல்லிக் கொண்டே வந்தேன் ஆனால் வீட்டில் இதெல்லாம் மேட்டரா? இதையெல்லாம் ஆராய்ச்சி செய்கிறாளே என்ற பார்வை பார்த்தவுடன் மனசுக்குள் அந்த விஷயத்தை புதைத்துவிட்டேன். ஆசிரியர் அந்த இடத்தையும் சுட்டிக் காட்டுகிறார். ஈரோடு அருகில்தான் காவிரி மணல் பாதையில் ஓடுகிறாளாம். அங்கு அதிகளவில் கூழாங்கற்கள் கிடைக்கும் என்று அதனையும் எடுக்க ஆசைப்பட்டு பார்த்து, பார்த்து அள்ளி கனம் தாங்காமல் அங்கேயே கொட்டிவிட்டு வந்திருக்கிறார். எனக்கு பூம்புகாரில் என்னுடைய சங்கு பொறுக்கும் காலம் நினைவு வந்தது. இதை படித்துவிட்டு உடனே ஈரோடு பக்கம் போய் ‘அந்தக் காவிரியை பார்க்க வேண்டும்’ என்ற ஆவலை தடுக்க முடியவில்லை. அந்தக் கூழாங்கற்களில் ஆசிரியரின் ரேகை பதிந்த கற்களும் இருக்கலாம். அந்த கற்களை பொக்கிஷமாக பத்திரப்படுத்த வேண்டுமென மனம் ஆசைப்பட்டது.

நொய்யல், சிறுவாணி, அமராவதி, பவானி போன்ற ஆறுகள் கொங்கு பிரதேசத்தை சேர்ந்தவை. அவற்றுக்கும் தஞ்சை பகுதிக்கும் உள்ள சம்பந்தம் பற்றி தெரியவில்லை. கொங்கும், தஞ்சையும் கொண்டான் கொடுத்தான் உறவு என்று ஆசிரியர் சொல்லுகிறார். மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகி கொங்கு பிரதேசத்தை வளமையாக்கும் அத்தனை ஓடைகளும், நதிகளும் காவிரியை நோக்கியே வருகின்றன. குடகும், மைசூரும் அவளின் பிறந்த பூமி மட்டுமே ஆனால் அவள் பங்கை எடுத்துக்கொண்டே அனுப்புகின்றனர். சேர நாடும், கொங்கு நாடும் சற்று மாறுதலாய் அவளுக்கு ஊட்டம் கொடுத்து சோழ நாட்டுக்கு அன்பாக அனுப்பி வைக்கின்றனர்.  காவிரியின் படத்தை இத்தனை நாள் கவனிக்காமல் போய் விட்டோம் என்று தோன்றி திரும்ப நதிகளை உற்று காண தூண்டியது.

சாயக் கழிவு பிரச்னை காவிரிக்கும் உண்டு என்று புரிந்தது. காவிரி நீர் குடித்து வளர்ந்தவன்(ள்) என்று சொல்லாத அறிமுகம் குறைவு ஆனால் அவளைப் பற்றி அதிகம் அறியாமல் இருக்கிறோம் என்று ஆசிரியர் தலையில் தட்டுகிறார். சேர நாடு அளிக்கும் நீரை சுமந்தபடி அகன்ற காவிரியாய் உருமாறுகிறாள். கொல்லி மலை போன்ற எத்தனையோ மலைகளில் உருவாகும் ஓடைகளும் காவிரியை நோக்கியே செல்கின்றன. அவளோ சோழபட்டிணமான பூம்புகாரை நோக்கி செல்கிறாள். ஆராய்ச்சியில் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கடற்கரை பட்டினத்தில் தமிழர்கள் வசித்து இருக்கிறார்கள். காவிரிக் கதையும், பூம்புகார் கதையும் அத்தனை தொன்மையோடு இருக்கிறது. இந்திர விழா காட்சிகளை கற்பனை செய்தபடி காவிரிப்பட்டினத்தை காண சென்றால் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும். ‘எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்’ என்றே பல இடங்கள் கடல் கொண்டு சென்றுவிட்டது. ஆசிரியர் கால் பதித்த பூம்புகார் கடற்கரையின் மணல் தடம் இன்று கடலுக்குள் இருக்கும் என்றே நினைக்கிறேன். மேலும் மேலும் கடல் நம் அருகில் நெருங்கி வந்தபடியே இருக்கிறது.

அதுபோல கர்நாடகத்தில், காவிரியின் கரையோரமாக சென்றால் மேகதாட்டிலில் இருந்து ஹோகனேக்கலுக்கு முப்பது மைலில் சென்றுவிடலாம் ஆனால் காரில் நூற்று இருபது மைல் சுற்றிப் போக வேண்டும் என சுவாரசியங்களை போகும் போக்கில் தூவிக்கொண்டே ஆசிரியர் செல்கிறார். அணைக்கட்டு விவரங்கள், அதன் மூலம் பாசனம் செய்யும் பகுதிகள் போன்ற விவரங்களையும் தெரிவிக்க தவறவில்லை. கிட்டத்தட்ட காவிரியின் வரலாற்றை 1971 ல் மீட்டு எழுதியதுப் போல இருக்கும்.அடுத்து நான் படித்த இடமும் காவிரிக்கரைதான். ஸ்ரீரங்கத்தில் குளித்து இருக்கிறேன். அப்பாவுடன் அகன்ற காவிரி பாலத்தில் நடந்த ஞாயிற்றுகிழமை பேச்சுகள் வாழ்நாளில் மறக்க முடியாதவை. ‘க்வாலிடி டைம்’ எனப்படும் தனிமை நேரத்தை எப்படி உபயோகிக்க வேண்டும் என்று காவிரிக் கரையில்தான் அப்பா எனக்குசொல்லிக்கொடுத்தார். ஆண், பெண் கவர்ச்சியில் இருந்து அல்ஜிப்ரா வரை அனைத்தும் அந்த காவிரிக் காற்றின் ஊடே பேசி இருக்கிறோம்.

திருப்பாராய்த்துறையையும் விடவில்லை ஆசிரியர். அங்கே NSS கேம்ப் நடத்தி கிட்டத்தட்ட இருபது நாட்கள் அந்த அகன்ற காவிரியில் ஒரு ஓரமாக செல்லும் தெள்ளிய சூரியன் மின்னும் பாதரச நீரில் குளித்துவிட்டு மணல் புதைய புதைய நடந்து இக்கரைக்கு வரும்பொழுதே உடை காயும் அதிசயத்தில் நான் வாழ்ந்து இருக்கிறேன். ஹையோ... இப்படியா ஒரு புஸ்தகம் நம் வாழ்க்கை நினைவுகளை அணு அணுவாய் புரட்டிப் போடும்? ஆம் புரட்டிப் போட்டதே நிஜம். காவிரியின் ஒவ்வொரு இடமும் நினைவிடுக்கில் இருந்து அருவியாக கொட்டி ஆறாக பாய்ந்து ஓடையாக தழுவி மனதில் சாரலை வீசிக்கொண்டே இருக்கிறது.

அகன்ற காவிரியின் அகலத்தை அத்தனை எளிதாய் பார்வையில் கடந்து விட முடியாது. நீர் பாயும் பொழுது அக்கரை என்னும் எல்லையே இல்லாமல் பாய்வது போல தோற்றம் தரும். ஸ்ரீரங்கத்தில் கொள்ளிடமாக பிரியும் வரை காவிரி ஒரு தனி அழகு. கொள்ளிடம் வடிகாலாக இருப்பினும் அதன் பயன்களையும் ஆசிரியர் குறிப்பிட தவறவில்லை. கண்ணகி, கோவலன் இருவரும் திருச்சி வரை வந்து இருக்கின்றனர்.

உறையூர், சோழர்களின் தலைநகர் என்னும் அடையாளமே இல்லாமல் நிற்பதையும், ஒரு காலத்தில் கரூர் சேர மன்னர்களின் தலைநகர் என்பது கரூரில் யாருக்குமே தெரியாமல் போனதையும் காவிரிப்பூம்பட்டினம் கடலோடு சென்றதையும்... காலம் எதையும் மாற்றும் காட்சிகளை கண் முன்னே கொண்டு வருகிறார்.

காவிரி வழியாக கல்லணை வரை சென்று இருக்கிறார்கள். கல்லணை நினைவுகள் எனக்கும் உண்டு. வெறும் களிமண்ணால் கட்டப்பட்ட கல்லணை ஆங்கிலேயர்களுக்கு எப்போதும் வியப்புக்குரியதே. அன்றைய சோழ சாம்ராஜ்யத்தில் கல்லணையை காண்பதற்காக மட்டும் வெளிநாட்டுப் பயணிகள் வருகை புரிந்து வியந்திருக்கிறார்களாம்.

 கணவர் வழியில் முப்பாட்டானார்களில் ஒருவர் சித்தராகி ஜீவ சமாதி அடைந்துவிட்டார் என்று கேள்வி. அவரின் சமாதிக்கு ஒரு முறை குடும்பத்துடன் சென்று இருக்கிறோம். அப்பொழுது ஏதோ விஷ ஜுரம் வந்து கொத்து கொத்தாக மக்கள் மடிந்து இருக்கின்றனர். இந்த சுவாமிகள் ஏதோ மருந்து கொடுத்தும், ஊரை சுற்றி மருந்துக் கலந்த விபூதியை தெளித்து மக்களை காப்பாற்றியதில் அவர் ஊருக்கே சாமியாகி விட்டார். அவரின் சிஷ்யர்கள் தொடர்ந்து வந்து அங்கேயே சமாதி ஒன்றை கட்டியுள்ளார்கள். இதுபோன்ற சித்தர் கதைகள் எக்கச்சக்கமாக காவிரிக் கரை முழுக்க உள்ளது. இதையும் ஆசிரியர் விடவில்லை. எத்தனை தொன்மையாக காவிரிக்கரைப் பகுதிகள் இருகின்றன, எத்தனை எத்தனை கோவில்கள், தல வரலாறுகள், கதைகள் என்று அனைத்தையும் தன்னுடைய வசீகரிக்கும் எழுத்து நடையில் லேசாக கரையை தொடும் நதி போல நளினமாக குறிப்பிடுகிறார்.

அர்க்காவதியில் இருந்து அமராவதி வரை வந்து சேரும் ஆறுகள் ஒரு பக்கம் என்றால் குடமுருட்டி, கொள்ளிடம், வீர சோழனாறு போன்ற கிளை ஆறுகள் அடுத்த பக்கம். ஒவ்வொரு கரையுமே பெருங்கதைகளை தன்னகத்தே கொண்டு இருக்கிறது. அவற்றை ஒரு பயணத்திலோ, ஒரு புத்தகத்திலோ அடக்க முடியவில்லை என்பதை ‘நான் ஹிப்பியாகவோ, பண்டாரமாகவோ இல்லையே’ என்று சொல்லுகிறார்.

திருவையாறு தியாகராஜர் இசை மனச் செவியில் ஒலிக்க தொடங்கியது. பாட்டி, தாத்தா கை பிடித்து ஆற்றங்கரையோரம் அழைத்து செல்ல ஒரு பந்தலுக்குள் பலர் படுத்து இருந்தனர். அங்கயே படுத்துக் கொள்ள சொன்னார் தாத்தா. சவுக்கு கம்புகள் இருபக்கமும் கட்டப்பட்டு இருந்தன. காலையில் எழுப்பி காவிரியில் குளிக்க சொன்னார். பெண்கள் படித்துறை என்று நினைவு, லேசான குளிர். அங்கே குளித்துவிட்டு படுத்த இடத்துக்கு கொஞ்சம் தள்ளி உட்கார்ந்தால் எல்லாரும் சேர்ந்து ஒரே குரலில் பாட... அதுதான் தியாகய்யர் உற்சவம் என்று தெரிந்துக்கொண்டேன். சிறு வயதிலேயே அந்த இசை மெய் சிலிர்க்க வைத்து இன்னும் இடுக்குகளில் இசை துணுக்குகள் ஒட்டிக்கொண்டு மீட்கும் போதெல்லாம் இசைக்கின்றன.
அவர் சொன்ன கும்பகோண வீதிகளில் நடந்து இருக்கிறேன். அய்யம்பேட்டை தெருவில் நடமாடி இருக்கிறேன். சுந்தரபெருமாள் பாலத்தை நானும் தாண்டி இருக்கிறேன். அங்கு இருக்கும் நல்லூர் என் கணவரின் மூதாதையர் ஊர். அங்கு உள்ள சிவன் கோவிலில் லிங்கம் சுயம்பு. ஐந்து நிறத்தில் இரண்டரை நாழிகைக்கு ஒரு முறை வர்ணத்தை மாற்றிக்கொள்ளும் இயல்புடையது. இதுபோன்ற எண்ணற்ற மர்ம கதைகளை, மகத்துவங்களை, சித்தர் கதைகளை சுமந்துக் கொண்டே திரிகிறாள் காவிரி. பாபநாசம், சுவாமி மலை, கும்பகோணம், திருபுவனம், ஆடுதுறை, மல்லியம், கொரநாடு வரை வந்து மயிலாடுதுறையில் உள்ள லாக்கடம் என்னும் இடத்தில் மிக முக்கியமாக கருதப்படுகிறாள். ஐப்பசி மாதத்தில் மயிலாடுதுறையே விழாக்கோலம் பூண்டிருக்கும். ஒவ்வொரு கோயிலிலும் விசேஷங்கள், தேர்கள் என கண்கள் சுழலும் இடங்கள் அனைத்திலும் விழாக்கள்.


துலாக்கட்டம் என்று பெயரே மருவி லாக்கடம் என நிலைத்து விட்டது. கடமுழுக்கு கூட்டத்தை பற்றியும் ஆசிரியர் அழகுற பிரஸ்தாபித்திருக்கிறார். நான் சிறு வயதில் நதியா தோடு, டிஸ்கோ ரப்பர் பேண்டுகள் வாங்கிய விழா. கங்கை காவிரியில் ஐக்கியமாவதாக ஐதீகம். எனவே கூட்டம் அள்ளும். மாசி மக கூட்டத்தை இங்குள்ள காவிரியிலும் காணலாம்.

மயிலாடுதுறையில் வள்ளலார் கோவில் இருக்கும் பூம்புகார் பாதையின் ஊடேதான் சிலப்பதிகாரம் பயணப்படுகிறது. வரலாற்று சிறப்பு மிக்க பாதை என்பதையே நாங்கள் மறந்து விட்டோம். அதனையும் நூல் மீட்டிருக்கிறது. உவகை கொள்ளும் கரிப்பாய் பூம்புகார் கடற்கரை நினைவுகள் வேறு. பவுர்ணமி அன்று அமைதியாக பார்த்த இடத்தில இந்திர விழாவையும், மாதவியின் யாழையும் மனதோடு இசைத்து பார்த்து லயித்தபடி இருக்கிறேன்.

அடுத்து எங்களூர் வாஞ்சியாறு எங்களுக்கு வடிகால் என்னும் திட்டமிட்ட வடிவமைப்பு அதே சமயம் வேறு பகுதியில் உள்ள வயல்களுக்கு அது வாய்க்கால். தற்போது தூர் வாரும் பணி என்று திட்டமிடாது செய்வதாக கேள்வி.

ஒரு புத்தகம் எந்தளவுக்கு ஒருவரை பாதிக்கிறது என்பது வாசகனாக மாறும் பொழுது மட்டும் உணர முடியும். இந்த புத்தகம் அதற்கும் மேல். காவிரி பற்றி யார் எத்தனை எழுதினாலும் தீராது.
நன்றி http://www.pratilipi.com/read?id=4998994631589888&page=16

அது தீரா நதி.. உணர்வுப்பூர்வமாக 

Tuesday, November 3, 2015

வாத்து ராஜா

வாத்து ராஜா.

ஒரு புஸ்தகத்தை எளிதாக நான் படித்து எடைப் போட முடியும் என்ற எண்ணத்தை  ஒரு எளிய கதையால் பொடி பொடியாக ஆக்க முடியும் என்று எதிர்பார்க்கவில்லை.

சிறுவர்களை சிறுவர்களின் மனதோடு மட்டுமே அணுக முடியும் என்று விஷ்ணுபுரம் சரவணன் அழுத்தி சொல்லி இருக்கிறார். ஆனால் மிக மிக எளிமையாக.கதை என்று பெரிதாக இல்லை, அழுத்தமான எழுத்து இல்லை. மிக எளிமை..எல்லாமே எளிமை. அத்தனை எளிமையில்தான் குழந்தைகளை கவர் முடியும் என்று சொல்லி இருக்கிறார்.


ஒரு ராஜா தன் முட்டாள்தனத்தால் வாத்து ராஜா என்று ரகசியமாக அழைக்கப்படுகிறார். அதை காவலன் வாத்து ராஜா வருகிறார் பராக், பராக் என்று டங் ஸ்லிப் ஆகி உளறிவிடுகிறான். அதுவும் அந்த காட்சிக்கு ஒஜு சிரித்த சிரிப்பு..அதை திருப்பி படிக்க சொல்லி கேட்டுவிட்டு உடனே இதை அங்கிள் (விழியன்) எழுதினாரா என்று கேட்டான். இல்லடா இது வேற அங்கிள் என்று வாய்ஸ் நோட் அனுப்ப சொன்னேன். முகத்தில் நல்லக் கதை கேட்ட மகிழ்ச்சி தெரிந்தது.

அந்த சிறுமி வாத்தை காப்பாற்ற போராடும் பொழுது ஒரு எளிய யோசனை செய்து காப்பாற்றுவது குழந்தைகளுக்கு பொருத்தமாக இருக்கிறது. இப்படி கதை முழுக்க அவர்களாகவே யோசித்து இருக்கிறார். எந்த பேண்டசியும் இல்லாமல் கவர்ந்து இருக்கிறார்.

குழந்தைகள் மேல் மிகுந்த ஆழமான நேசம் இருந்தால் மட்டுமே அவர்கள் மனதுடன் அந்த உலகில் இறங்கி சஞ்சரிக்க முடியும். அத்தனை உயரங்களையும், வளர்ச்சியையும் நிறுத்தி விட்டு ஒரு ரிவர்ஸ் கியரில் அந்த வயதுக்கு செல்வது பேசும் அளவுக்கு எளிதான விஷயமில்லை. 

இது போன்ற எளிய படைப்புகளின் மூலமே குழந்தைகளை கொஞ்சமாவது தமிழ் புத்தகங்களின் பக்கமும், தமிழ் கதைகள் மீது ஆர்வமும் கொண்டு வர முடியும். மிக்க நன்றி மிக அழகான சிறுவர் படைப்புக்கு..இன்னும் நிறைய புத்தகங்கள் எதிர்பார்க்கிறோம்.

Friday, October 30, 2015

அழகென்ற சொல்லுக்கு..

அழகென்ற சொல்லுக்கு...

பெண் என்பது இரண்டெழுத்துதான்..அதை உச்சரிக்கும் அளவுக்கு உணர்தல் அத்தனை எளிமையில்லை...பெண் எங்கு எப்படி அழகு என உணரப்படுகிறாள்? அவள் அழகு எதில் ஒளிந்து இருக்கிறது? உலகில் அனைவருக்கும் மிக அழகு தாய்..பாட்டியின் சுருங்கிப் போன விரல்கள் பேரப் பிள்ளைகளுக்கு பேரழகு..தங்கை, அக்காக்களின் அன்பில், வருடல்களில் இல்லாத அழகா என்ன..காதலித்தால் பெண் மட்டுமல்ல உலகில் எல்லாமே அழகுதான்.
ஆனால் இன்று பெண்கள் என்ன உடை உடுத்தினால் அழகு, இந்த மேக் அப் போட்டா அழகு..இந்த ஹேர் ஸ்டைல் அழகு..வாக்சிங், பேடி க்யூர் பியுட்டி பார்லர் விஷயங்கள், மேக் அப் சாதனங்கள்..இன்னும் எத்தனையோ வியாபார, விற்பனை பொருட்கள்..எல்லாம் அழகு, அழகு..அழகு வர்த்தகம்.பில்லியன் டாலர்களில் புழங்கும் இடம்.. மிக நுண்ணியமாக புகும் ஆபத்து..இதான் அழகு என்று வரவேற்பறையில் புகுத்தும் வஞ்சம்..பணம் பிடுங்கும் வழிகள்..எல்லா இடங்களிலும் துணிக் கடைகள், வளையல் கடைகள் முதல் முக்குக்கு முக்கு பியுட்டி பார்லர்கள் வரை சம்பாதித்து போகட்டும்..இவற்றை அடைய முடியாதவர்கள் என்னாகிறார்கள்..உடனே ஒரு தாழ்வு மனபான்மை..உனக்கு பருவால் தாழ்வு மனப்பான்மையா..வா..தன்னம்ப்பிக்கையா நடை போட எங்கள் பொருளை வாங்கு என்றும் வலை விரிப்பு.. தமிழக..ஏன் இந்திய பெண்களில் 95% யாரும் விளம்பர பெண் போல இருக்க முடியாது..உடுத்த முடியாது..அவை வெறும் விளம்பர கவர்ச்சி மட்டுமே.
இருப்பினும் இப்படி இருந்தால் அழகு என்று பெண்களுக்கு மட்டுமல்லாமல் ஆண்களுக்கும் போட்டப்படுகிறது, மாய எண்ணம் திணிக்கப்படுகிறது....சிறு வயதில் இருந்தே..உடனே அவன் மனதளவில் பெண் அழகு என்பற்கு எடுத்துக்காட்டாக நயன், திரிஷா, சமந்தா இல்லாவிடில் காஜல், அனுஷ்கா என்று கற்பனை வடிவமைப்பில் மூழ்குகிறான். அப்படிப்பட்ட காதலியை எதிர்பார்க்கிறான்..சூப்பர் பிகர் என்று சிலரை நினைத்து பின்னாடியே செல்கிறான்.சிலருக்கு மட்டும் டிமான்ட்..பெண்களிலும் பலர் சாதரணமாக இருந்தால் மதிப்பு இல்லை என்று தலை முடி வரை கால் விரல் நுனி வரை மாற்றிக்கொண்டு ஆணை கவர முற்படுகிறார்கள். வாழ்கை என்னதான் இருந்தாலும் எதிர்பாலின ஈர்ப்பும் இங்கு முக்கியம். அது இயற்கை. அதுவும் பெண்கள் பாதுக்காப்பு சம்பந்தப்பட்டு உளவியல் ரீதியாக ஆழமாக இருப்பதால் ஆண்களின் அன்பு அவளுக்கு தீவிர தேவையாக இருக்கிறது. தன்னை இன்னும் அழகுப்படுதிக்க முற்படுகிறாள்..இது ஒரு தீரா தலைவலியாக முடிவில்லாமல் போய்க் கொண்டு இருக்கும். நுகர்வோர் விற்பனை பல பில்லியன் டாலர்கள் தொடர்ந்துக் கொண்டிருக்கும்.
என்னதான் தீர்வு..சிறு வயதில் இருந்தே குழந்தைகளுக்கு ..இதை செய்தால் அழகு இல்லை...அதைவிட தன்னம்பிக்கை, உள்ள செயலை சுயமாக செய்வதுதான் சிறப்பு என்று கற்றுக் கொடுக்கும் தேவை மிக முக்கியம். சுயமாக இருக்கும் பெண்கள் முக்கியமாக எமோஷனல் இன்டலிஜென்ஸ் உள்ள பெண்களை எளிதில் வீழ்த்த முடியாது.
நாம் ஐ.கியு வை இம்ப்ரூவ் செய்வதுப் போல பெண் குழந்தைகளுக்கு EQ அதாவது உணர்வு அறிவை மேம்படுத்த பயிற்சி கொடுப்பதில்லை. ஒரு ஜாதி கட்சி சேர்ந்த நண்பர் சொன்னார்..பதினெட்டு வயதில் உள்ள பெண்களுக்கு உடனே திருமணம் செய்துவிடுகிறோம்..இல்லாவிடில் வேறு ஜாதி பையன்கள் மயக்கி விடுகிறார்கள் என்றார்.. நான் உங்கள் ஜாதி பெண்களுக்கு தன் கணவனை தேர்ந்தெடுக்கும் அறிவை, தன்னம்பிக்கையை, பொருளாதாரத்தை, சுய உணர்வை அளியுங்கள். உணர்வில் பலமாக இருக்கும், சுய அறிவும், நல்லதை, கெட்டதை பகுத்துப் பார்க்கும் எந்தப் பெண் குழந்தையும் பதினெட்டு வயதில் ஓடிப்போக துணிய மாட்டாள். அதை விட்டுவிட்டு நீங்கள் எது செய்தாலும் அது சமூக தீர்வாக இருக்காது என்றேன். அடிமைத்தனம் அதிகமாகும்..இல்லாவிடில் உங்கள் ஜாதியில் பெண்ணடிமை அதிகமாகி முன்னேற்றம் தடைபடும்..கல்வி முதலியவற்றில் பின்னாடி செல்வீர்கள் ..அது இன்னும் உங்களுக்குத்தான் இழப்பு..என்று அவருக்கு ஏற்றார் போல சொன்னேன்.

எனவே தாயாய், தமைக்கையாக், மனைவியாய் இயற்கையில் உணர்வுப் பூர்வமானவள் பெண்.ஆனால் உணர்வுகளை எப்படி, எங்கு, எவ்வளவு காட்ட வேண்டும்..குறைக்க வேண்டும், மறைக்க வேண்டும், மறக்க வேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை யாருக்கும் செவிக் கொடுக்காது, எந்த நுகர்வோர் விளம்பரத்திற்கும் அசையாது..தான் இஷ்டப்படி..தனக்கு விருப்படி அன்பாக , பொறாமை இல்லாமல் இருப்பது சிறப்பும் அழகும்...ஆனால். எல்லாவற்றையயும் விட உணர்வுகளை மிகச்சரியாக தன்னம்பிக்கையுடன், சுயமாக கையாள தெரிந்த பெண்ணே மிக மிக அழகானவள்.

Monday, October 19, 2015

உணர்வின் நிழல்.

ஒரு அழகிய மாலை..உங்ககிட்ட பேசணுமே ..இன்பாக்ஸ் ஒளிர்ந்தது. அவ்வப்பொழுது சந்தித்த பெயர்தான்..ஆனால் நெருங்கிய பழக்கமில்லை. ஆனால் நம்பி நம்பர் கொடுத்து பேசத் தோன்றியது. யாரை எப்போ எதுக்கு எப்படி சந்திக்கறோம், சில விஷயங்களில் நட்பாகிறோம் என்பது புரியாத புதிர்தான்.

அவர் பேசிய விஷயங்கள் தலைக்குள் ஏற கொஞ்ச நேரங்கள் ஆனது. ஆனால் பேச பேச ஆச்சர்யம. இதிலும் இவ்ளோ விஷயம் இருக்கிறது என்று வியப்பு. அவரிடமிருந்து சில விஷயங்களை நானும்..என்னிடமிருந்து கொஞ்சம் கூடுதல் துணிச்சலையும் கொடுத்து, வாங்கிக் கொண்டோம். அந்த சமயத்தில் பலர் குழப்பி விட கடைசியில் என் நினைவு வந்து இன்பாக்ஸ் செய்து இருக்கிறார். நீண்ட நேர உரையாடலில் கொஞ்சம் இன்னும் தெளிவும் துணிவும் கூடியிருக்கலாம்.

மறுநாள் போலிஸ் பேசி உள்ளனர். ஸ்பாட் பற்றி விசாரித்து உள்ளனர். இவர் அழகாக, தீர்மானமாக பேசினார். தான் பார்த்து பார்த்து வளர்த்த குழந்தை கஷ்டப்படுவது எந்தத் தாயால் சகிக்க முடியும். எதிராளிகளை அவதூறு பேசாமல் உறுதியாக தனக்கு நேர்ந்த பிரச்சனையை மட்டும் பேசியுள்ளார். இன்னொரு விஷயம் இது கடவுள் நம்பிக்கை, மதம் சார்ந்தது என்பதால் அவர் மிகுந்த கவனமாக பேசி உள்ளார். அதைத் தவிர ஒரு அமைப்பும் அவருக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக உறுதி அளித்துள்ளனர. போலிசுக்கு செல்லாவிட்டால் இதெல்லாம் குற்றமில்லை..யார் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்..யார் வீட்டிலும் அத்து மீறலாம்..எதற்கும் அனுமதி தேவையில்லை என்றாகி விடும் என்பதே எண்ணமும்.

சம்பவம் நடந்த பொழுது பிள்ளையார் சதுர்த்தி விழா..பக்கத்து தெருவினர் மிக விமர்சையாக கொண்டாட விரும்பினர். சென்னையின் பரபரப்பான அதே சமயத்தில் கொஞ்சம் அமைதியும் உள்ள நகரத்தின் முக்கிய பகுதி. கொண்டாட்ட உற்சாகம் இப்பொழுதெல்லாம் மிகுதியாக ஆகி சிலருக்கு என்ன செய்கிறோம் என்றே தெரிவதில்லை. இவர் ஆசை ஆசையா குழந்தை போல வளர்த்த மரத்தின் ஒருப் பகுதி பிள்ளையாரை சிறிது மறைத்து உள்ளது. (அப்படி தெரியவில்லை இருப்பினும் மறைத்ததாக எண்ணி உள்ளனர்) கிளைகளை வெட்ட இவரிடம் அனுமதி வாங்கி உள்ளனர். இவர் யோசிக்கிறேன் என்று சொல்ல..மீறி கொஞ்சம் கிளைகளை வெட்டுகிறோம் என்று மரத்தில் ஏறி உள்ளனர். எல்லாரும் கொடுத்த உற்சாகத்தில் மரத்தில் ஏறிவர் இவர் சொல்ல சொல்லக் கேக்காமல் இவரின் வருத்தம், கோபம், ஆற்றாமை எல்லாவற்றையும் உதறிவிட்டு கூட்டம் கொடுத்த சத்தத்தில் கொஞ்சம் தான் செய்வது என்னவென்று அறியாமல் வெட்டியே விட்டார். எக்கச்சக்க கிளைகளை. சில கூடுள்ள கிளைகளும் அடக்கம்.


கணவரும், அவரும் வீட்டுக்கு வரும்பொழுது வைத்த மரம்..வெளியில் தெருக்காரர்களும் கார் நிறுத்துவார்கள்..அவர்களுக்கும் நிழல் கொடுத்து வந்திருக்கிறது. இவர் திரும்ப திரும்ப மரத்தை வெட்டுப்படாமல் காப்பாற்றுவது பற்றிய கவலை,, காம்பவுண்டுக்குள் அத்து மீறி வெட்டியவர்கள் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் சென்றது இரண்டும் இவரை பாதித்து இருக்கிறது. அதைத் தவிர அது உணர்வோடு கலந்த மரம்.

நிழல் என்ற அமைப்பு இருக்கிறது. http://www.nizhaltn.org/ அதன் ட்ரஸ்டி திரு. ஷோபா மேனன் அவர்கள் போலீசில் தகவல் சொல்ல அறிவுறுத்தி உள்ளார். சுற்றம், நட்பு எல்லாரும் இதற்கு எதிர்ப்பு. தேவையில்லாமல் அக்கம்பக்கத்தை பகைத்துக் கொள்ள வேண்டாம் என்று. மரத்துக்கு அதுவும் கிளைகளுக்கு போய் பேச வேண்டுமா என்று.
அன்றுதான் எனக்கு போன் செய்தார். நீண்ட நேரம் பேசினோம். நான் மெசேஜில் கொடுத்தது ஒரு ஹக் அல்லது அணைப்புதான். மறுநாள் போலீசில் நிதானமாக போய் பேசினார். அவர்களை குற்றம் சொல்லாமல் மரத்தையும் அதன் பிணைப்பையும், அதன் வளர்ந்த விதத்தை..அதை வெட்டியதால் அவர்களுக்கு நடந்த மன சங்கடங்கள் ..கொஞ்சமாக வெட்ட அனுமதி அளித்தும் இப்படி அத்து மீறியது எல்லாம் தெரிவித்து இருக்கிறார்.
போலிஸ் அவர்களை அழைத்து எச்சரிக்கை செய்து இருக்கிறது. இனி வெட்ட மாட்டோம் என்று வாக்கு அளித்து இருக்கிறார்கள். வருத்தமும் தெரிவித்து கலைந்து சென்று உள்ளனர்.

மரம் வெட்டுவதை பற்றி புகார் அளித்தால் சட்டப்படி ஏற்றுக்கொள்ளப்படுகிறது.


மரம், மனிதம் விலங்கு என்று இல்லாமல் உணர்வோடு பிணைந்த எல்லாமே உயிரோடு இருப்பவைதான். ஏற்கனவே கான்கரிட் காடுகளில் இருக்கும் ஒன்று இரண்டு மரங்களையும் வெட்டிவிட்டு என்ன சாதிக்க முடியும்? இதில் மரம்தானே என்று விடாமல் இதற்கும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும் என்று நிருபித்த என் தோழி சுமதிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

மரம் காப்போம்..கிளைகளையும் சேர்த்தே..

Friday, October 16, 2015

நான் எங்கதான் போறது?


நான் எங்கதான்  போறது?

எங்கப் போனாலும் என்னை போராளியாக்கி பார்க்காம விடறதில்லைன்னு  உலகமே கங்கணம் கட்டிகிட்டா நான் எங்கே போறது?
ஊருக்கு போயிட்டு இன்னிக்கு பெங்களூரு வந்தாச்சு..எப்பவும் OLA கார் அல்லது ஆட்டோ புக் பண்ற வழக்கம்..திடீர்னு மனசுக்குள்ள தூங்கிகிட்டு இருக்கிற கம்புயுனிஸ்ட் பூனை முழிச்சிகிட்டு..கார்பரெட் முதலைகளை நாம் ஆதரிக்க கூடாதுன்னு மியாவ், மியாவ் ன்னு சுரண்டிச்சி..

சரி..அது கத்தினா சும்மா காதுல வாங்காம போயிருக்கனும்ல..போவாம அது சொன்ன பேச்சை கேட்டு..தனியொரு ஆட்டோவை வாழ வைச்சு பாரதத்தை காப்பாற்ற பொட்டியும் கையுமா கிளம்பிட்டேன்.

ஆட்டோக்காரர்கிட்ட "மீட்டர் ஆகித்திறே பர்த்தினி" என்றேன்.."ஒந்து ஓரை பெலகே இல்வா"..என்றார்(மீட்டர்  விலைல  ஒன்றரை பங்கு கொடுக்கணும்)

சரின்னு ஏறி உக்கார்ந்தேன்..முன்னாடி போற ஆட்டோ கூப்பிட்டு ஏம்பா இப்படி சத்தம் வருது..இது இதெல்லாம் செக் செய்ன்னு சொன்னார்..சரி நல்ல மனுஷர்..நல்ல ஆட்டோன்னு நினைச்சேன்..

ஒரு ரவுண்டு அடிச்சுது..இரண்டு கி.மீ..சரி போகட்டும்னு பார்த்தேன்.. கட கடவென்று மீட்டர் எகிறியது..விடிகாலை பெங்களூர் குளிர் உறைக்கவே இல்லை..மனசு கொதிக்குது..என்னடா இது சோதனை என்று..
போகும் பொழுது 150 ரூபாய் கொடுத்த OLA புத்தம் புது ஹுண்டாய் டாக்சி ..அவரின் பணிவு எல்லாம் மனசுக்குள் திரும்ப தூங்கப் போன  கம்ப்யூனிஸ்ட் பூனையை பெருச்சாளியாக  கடித்து குதறியது..

சரியாக வீட்டுக்கு வந்தது..325 அதைத்தவிர அதில் பாதி..கிட்டத்தட்ட ஐநூறு ரூபாய்..வெறும் பன்னிரண்டு கி.மீ க்கு..

வரும் வழியில் காமிராவை மியுட் ல் வைத்து ஆட்டோ ஓட்டுனரின் ஐ.டிய போட்டோ எடுத்துக் கொண்டேன்..இறங்கும் முன். அதற்கு முன் என்று மீட்டரின் போட்டோ எடுத்துக்கொண்டேன். வீட்டில் இருந்து ஏறிய இடம் வரை உள்ள தூரம் காட்டும் கூகிள் மேப் போட்டு ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைத்துக் கொண்டேன்.

என் பாதுகாப்பு வளையத்துக்கு வரும் வரை என் போராளி முகத்தை மறைத்து வைத்தேன். வீட்டின் அருகில் இறங்கினேன்..இது நம்ம ஏரியா..
எஷ்டு கொடு பேக்கு..என்று பேக்கு போல முகம் வைத்துக் கொண்டு கேட்டேன்..
மீட்டர் துட்டு one and half  கொடி சாக்கு..என்றார்..( இதுல போதும்னு வேற டயலாக்) களத்தில் இறங்கியாச்சு..

"இருவதினாலு கி.மீ க்கு நான் மாரத்தஹள்ளி தாண்டி போவேன்..என்ன நினைசிகிட்டு இப்படி பண்றீங்க.. எப்படி மீட்டர் இப்படி ஓடுது?
நான் வேற வழில வந்தேன்..கூகிள் வேற வழி காட்டுது

இல்ல..உங்க வழியை கூகிள் மேப் ல போட்டுதான் காட்டறேன்..சரி அப்படியே வச்சுப்போம்..என்ன சுத்தி சுத்தி போனாலும் அந்த இடம் 15 கி.மி க்கு மேல போவாது" இது நானு.

இன்னாம்மா என்னங்கற ..அப்படின்னு கொஞ்சம் அவர் எகிற..

அமைதியா  நான் எந்த நடவடிக்கைலயும் இறங்க விரும்பல..பிரச்னை செய்ய விரும்பல..இந்தாங்க  இருநூறு ரூபாய்..விடிகாலையில் ஒட்டியதுக்கு..உங்க பணம் எனக்கு வேண்டாம்..அதேப் போல அடுத்தவங்க பணத்தை நீங்க பறிக்க நினைக்காதீங்க..இப்படில்லாம் செய்யறதாலதான் பெரிய கம்பனிகளை மக்கள் நம்பறாங்க..உங்க மேல நம்பிக்கையை வளர்த்துக்க பாருங்க.(கிட்டத்தட்ட நான் நல்ல மூடுல இருக்கேன்.தப்பிச்சு போயிடு )என்ற தொனியில சொன்னேன்..
லிப்ட் ல் கால் வைக்கும் பொழுது பின்னாடி முதுகை பார்த்துக் கொண்டிருந்த இரு  கண்கள் ஆட்டோவை ஸ்டார்ட் செய்யும் சத்தம் கேட்டது..


ஆமா என்னைப் பார்த்தா எப்படி தெரியுது? உலகை திருத்தறேன்னு ஏதாவது சொன்னேனா? ஜாலியாதானே இருக்க ஆசைபடறேன்..நான் வெறும் முத்து, தங்கம், பவுனு..ச்சே..டக்குனு வரல..ஆங்... மாணிக்கம்..  பாட்சா காட்ட வைக்கறீங்களே...நியாயமாரே..

Friday, September 25, 2015

அன்பைத் தேடி..

வாழ்வில் திரும்ப பார்க்க விரும்பாத சில கணங்கள் இருக்கும். ஆனால் யாருமே வாழ விரும்பாத ஒரு வாழ்வு என்னவென்றால் மன பிறழ் நிலையில் வாழ்வதாகும்.

ஒரு புத்தகத்தில் உள்ள கடின பக்கங்களை கூட நம்மால் பொறுமையாக படிக்க முடியாத கால வேகத்தில் ஓடிக்கொண்டு இருக்கிறோம்.  ஆனால் நான் சந்தித்த ஒரு கடின நாள் மனதை விட்டு அகலாமல்.

அந்த அன்பான இடம்  மயிலாடுதுறையில் இருக்கிறது. நுழைந்தவுடன் வாயிலில் சில குழந்தைகள்..அம்மாவை சுற்றி சுற்றி வந்தன..ஒரு கைக்குழந்தை அவர் கையை விட்டுப் போகவில்லை. அவர் கலா அம்மா. அப்படியே உள்ளே ஒரு குழந்தைக்கு பூப்ய்த்து நீராட்டு விழா நடந்தது..அந்த அலங்காரத்தை தொட்டு தொட்டு அந்த பெண் ரசித்துக் கொண்டுருந்தார்.  அன்றைக்கு ஸ்நாக்ஸ் பரிமாறப்பட்டது அந்த சிறு கூட்டத்துக்கு மட்டும். ..ஆனால் அந்த பெண் குழந்தைக்கு இவர்கள் மட்டுமே சொந்தங்கள்.மகிழ்ச்சியுடன்  அவளுக்கு எல்லாம் செய்தனர். நாங்களும் ஆசி செய்து..மஞ்சள், குங்குமம் இட்டோம்.

அக்கா நிறைய சொல்லுவாள் அப்பொழுதெல்லாம் உணராத விஷயத்தை   நேரே சென்றபொழுது மனம் நெகிழ, அதிர உணர்ந்தேன். பலர் வீட்டால் புறகணிக்கபட்டவர்கள்..பலருக்கு விலாசமே அன்பகம். இங்கு இருக்கும் ஒவ்வொருவரும் மன நலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள்..

இன்னொரு அறையில் வலதுப் புறத்தில் வரிசையாக குழந்தைகள் படுக்க வைக்கபட்டு இருந்தன..அவர்கள் ஒவ்வொருவருக்கும் தாய் வடிவில் ஒருவர்..ஊட்டிக்கொண்டும், துடைத்துக் கொண்டும் , வெறுமே மடியில் கிடத்திக் கொண்டும் இருந்தனர். மலம் போக வேண்டும் என்ற உந்துதல், உணர்வுகள் இல்லாத குழந்தைகள்..குழந்தைகள் என்று சொல்வதுக் கூட தவறு..பலர் சிறுவர்கள்..ஆறு வயது, ஏழு வயதுக்கு கூட வளர்ச்சி இல்லாமல் குழந்தையாகவே இருந்தனர். அவர்கள் திரும்ப திரும்ப கழிப்பது, வாய் ஒழுகுவது என்றபடியே இருந்தனர்..பொறுமையாக அந்த வாசனைகளை பொறுத்துக்கொண்டு ஒரு தாய் போல் அங்கு சேவை செய்பவர்களை பார்த்தப்பொழுது தாய்மை எல்லாம் புனிதமே அல்ல என்று தோன்றியது..பிசியோதெரபி அறைகள்....சாதரணமானவரை பயிற்சி செய்ய வைப்பதே கடினம்..இந்த குழந்தைகளை? ஆனால் அவர்களை நடக்க வைத்து சாதரணமாக ஆக்கிய பல வெற்றிக் கதைகளை கேட்கும் பொழுது வலி நல்லது என்பதின் மகத்துவமும்..இடைவிடாத கடின முயற்சியின் வெற்றி பற்றி நமபிக்கையும் வந்தது.

எல்லாருக்கும் கல்வி வகுப்பும் யார் யாருக்கு எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு பாடத்திட்டமும், கைப் பயிற்சிகளும் இருந்தன. ஒவ்வொன்றையும் மனம் ஒப்பிட்டுக் கொண்டே இருந்தது..ஒரு குழந்தையை சரியாக படிக்க உக்கார வைப்பதைக் கூட பெரிய வேலையாக உணரும் என்னை என்னவோ செய்தது..அந்த இடம்..

அடுத்து ஒரு பெரிய அறை..சிறுவர்கள்..கிட்டத்தட்ட அடைத்து வைக்கப்பட்டு இருப்பதுப் போல தோற்றம்..ஆனால் ஒரு ஒழுங்கு, அமைதி..அவர்களை கட்டுக்குள் கொண்டு வருவது..நினைத்தாலே கலங்கியது.மிக புத்திசாலியான அதிக கேள்விகள் கேட்கும் சிறுவனைப் பார்த்து ஏன் இவன் எங்கே என்று கேட்டப் பொழுது..அப்போ அப்போ மனம் பிறழுமாம்..அப்பொழுது தன்னை தானே காயப்படுத்திக் கொள்வானாம். தலையில் சில காயங்களும்..மனம் கசிந்து உருகியது..உணர்வுகள் மோதியதில் ஏன் நாம் இங்கு இருக்க வேண்டும்?  ஓடிவிடுவோமே இந்த இடத்தை விட்டு என்று தோன்றியது..அந்தளவுக்கு கனத்த  உணர்வுகள்..

ஊரை விட்டு ஓடி வந்தவர்கள், பேருந்து நிலையத்தில் மீட்கப் பட்டவர்கள்..வயதான பெண்கள், வெளியே பாதுகாப்பு இல்லாததால் அங்கேயே இருப்பவர்கள்..

ஒவ்வொரு முறையும் அக்கா பன் வாங்கி செல்வாள்..அதற்கு எத்தனை ஆசை..ஓடி வந்து வாங்கிக் கொண்டார்கள்..தினசரி உணவைத் தவிர ஸ்நாக்ஸ் என்றால் என்ன என்று அறியாத பல குழந்தைகள்..பன் மட்டும்தான் செரிமானம் ஆகும் பலருக்கு.


ஒரு அரை நாளை அங்கு கழிக்க மனஉறுதி  இல்லாத என்னால் அதை நிர்மாணித்த கலா, ஞானசம்பந்தம் தம்பதிகளை கையடுத்துக் கும்பிட தோன்றியது. நிஜமாக அவர்கள் காலில் விழ்ந்து ஆசி வாங்க வேண்டுமென்ற உணர்வைக் கட்டுபடுத்திக் கொள்ள முடியவில்லை. வசதியாக வாழ்ந்து, சொந்த வீடு, சொத்துகளை விற்று இவர்களுக்காக வாழ்வை அர்பணித்த தம்பதிகளை பார்த்தபொழுது சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட அலைக்கழிக்கும் மனம் கொண்ட என்னைக் கண்டு கொஞ்சம் கூச்சம் வந்தது நிஜம்.


அவர்கள் வெளியே உதவி எதுவும் கேட்பதில்லை..ஒரு முறை தோழி பானு ரேகா சென்றுவிட்டு அவர்களுக்கு ஃபேன் போட இன்வர்ட்டர் நண்பர்கள் உதவியுடன் வழங்கினார்.

பல குழந்தைகளுக்கு இட்லியை ஊறவைப்பது கடினம் என்பதால் அக்கா  உதவிகள் மூலம் நெஸ்டம் ரைஸ் மாதம் ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி தருகிறார்கள்..ஓரளவுக்கு..ஒப்பேத்த முடியும்..இதைப் பற்றி நண்பர் ராஜா கே.வி இடம் தெரிவித்தேன்..உடனே மாதம் ஆயிரம் ரூபாய் வழந்குவதாக ஒப்புக் கொண்டார். ஆனால் இன்னும் நெஸ்டம் ரைஸ் தேவைப் படுகிறது. வாங்கிக் கொடுத்தால்.அந்த சிறப்பு குழந்தைகளுக்கு உணவு எளிதாக இருக்கும். மாதம் ஆயிரம் என்பது நமக்கு ஒரு வேளை ஹோட்டல் உணவு..ஆனால் அந்த சிறப்பு குழந்தைகளுக்கு தினசரி உணவு. மனமிருப்பவர்கள் வாங்கித் தரலாம்.
மிக்க நன்றிகள் ராஜா அவர்களுக்கு..சொன்ன அடுத்த நொடி யோசிக்காமல் உடனே உதவ முன்வந்ததில் மனதிலும் ராஜாவாக..
ஒவ்வொரு முறையும் நம்மால் முடிந்த சிறு அடி அடுத்த அடி வைக்க வேண்டும் என்றே ஆசை..இதுப் போன்று தேவைப்படுவர்களையும் கொடுக்க நினைப்பவர்களுக்கும் ஒரு பாலமாக இருக்க ஆசை. கொடுக்க மனமுள்ளவர்கள் தொடர்புக் கொள்ளலாம். 

கடைசியாக அவர்கள் பாடங்கள் பற்றிய பேசிய பொழுது..வெளி உலகில் இருக்கும் பல வார்த்தைகளுக்கு இவர்களுக்கு அர்த்தமே தெரியாது. ஒவ்வொன்றையும் விளக்க வேண்டும் என்றார்..ஒரு குழந்தை சந்தேகம் கேட்டதாம " ஊருக்கு போறதுன்னா என்ன அம்மா ? ஊர் ன்னா எப்படி இருக்கும்" னு என்று..ஊரையோ, பயணத்தையோ பார்த்திராத அக்குழந்தை..

ஒன்றா இரண்டா..நாம் வாழும் வாழ்கையின் ருசியை பத்து சதவிகிதம் கூட ருசிக்காமல்..ஆனால் வாழ அன்பான அன்பகம் கிடைத்து இருப்பதும் வரம். மனம் இன்னும் அன்பைத் தேடி..Wednesday, July 22, 2015

மன வேர்ப் பிடிக்கும் கிளைகள்.

எனக்கு இங்கு வந்தபொழுது ஒரு தடுமாற்றம்.. நீங்களும் எழுதலாம் என ஒரு சிறு நம்பிக்கை விதையை விதைத்து சென்றவர் ஈரோடு கதிர்.. நன்றிகள்.

கட்டுரை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இவர் எழுத்துகள் உதாரணம், எந்த எழுத்தும் நம் கற்பனையைத் தூண்டி காட்சிப்படுத்த வேண்டும். இவரின் ஒரு வார்த்தைக் கூட கண் முன் காட்சியைக் கொண்டு வந்து விடும். 

கட்டுரை என்றால் செய்திகள் இருக்கும், தகவல்கள், விவாதங்கள், நடைமுறைகள் என்றுப் போகும்..ஆனால் கட்டுரையைக் கவித்துவமாக படைப்பது இவருக்கு கை (கி போர்ட்) வந்தக் கலை.

எத்தனையோ வாசிக்கிறோம், கடக்கிறோம். ஆனால் ஒவ்வொன்றிலும் தனித்துவத்தை உணரச்செய்வது கதிரின் தமிழ்.

வாசிக்கும் நேரங்களில் ஒரு வார்த்தையில் சிக்குண்டு, அடுத்ததற்குப் பயணப்பட முடியாமல், அந்தக் காட்சியில் நின்று விடுவதுண்டு அது ஒரு அழகிய படக்காட்சியை ஸ்டில் போட்டுப் பார்ப்பதைப் போ. அதே சமயம் சில பாடல்களை ஒன்ஸ் மோர் போட்டுக் கேட்பதைப் போல... சில பாராக்கள் திரும்பத் திரும்ப படிக்கச்சொல்லும்..

இலக்கிய வாசிப்பு என்றால் அதன் தரத்திலும், வாசகனின் முதல் வாசிப்பு என்றால் அந்த எளிமையிலும் இருக்கும். யார் வேண்டுமானாலும் வாசித்து, எழுத்துகளோடு வசித்து பயணப்பட முடியும்.

எளிமை, அழகியல், கவித்துவம்,மென் சோகம், குறும்பு, இயல்பு எல்லாம் இருக்கும் எழுத்து..

ஒரு வரியில் புரட்டிப் போடவும், அழ வைக்கவும், இளகிடச் செய்யவும், நிமிர்ந்து உட்கார வைக்கவும், இப்படியும் இருக்கா? என யோசனை செய்யவும் வைக்கும் மாயாஜால எழுத்து..

நம் மனம் தொட்டு உலுக்கிச் செல்வது மட்டுமல்லாமல், கொஞ்சம் நல்லவழியில் மாற்றிக் கொள்ளவும், சொல்லாமல் சொல்லும் பாஸிடிவ் வரிகள் பல.

ரசனையாக எப்படியெல்லாம் இருக்க முடியும்.
அதை எப்படி அழகியலோடு வடிக்க முடியும் என்று சொல்லும் எழுத்து.

ஒரே காட்சியை ஓராயிரம் பேர் பார்த்துக் கடந்திருப்பார்கள். அது கதிரின் கண்ணில் பட்டு, கையில் வடியும் பொழுது அந்தக் காட்சி புதுவிதமாக ஆயிரக்கணகான மனதிற்குள் பயணப்பட்டிருக்கும்..

இன்னும் சொல்ல ஆயிரம் வார்த்தைகள் உண்டு. அவை புத்தக விமர்சனத்திற்காக சேமித்து வைத்திருக்கிறேன்.

மிக்க மகிழ்ச்சி.
புத்தகம் போடும் கணங்கள் இன்னும் ஐம்பது முறையாவது அமைய இது தொடக்கமாக அமையட்டும்.

இனி வாசகர்களின் மனதில் கிளைகள் விருட்சமாகும்.