Sunday, April 27, 2014

கண்ணீர், கண்ணீர்.

கண்ணீர் ,கண்ணீர்..
கண்ணீர் பற்றி அதிக கவனிப்பு கொஞ்ச நாளாக அடிக்கடி ஏற்படுகிறது. பொசுக் என்றால் கண்ணீர் விடும் குணம் எனக்கு உண்டு. அதனால்  நமக்கு Emotional Quotient மிக குறைவோ என்று தோன்றுவதுண்டு..
அலசலில் மிக கடினமான அலசல் நம்மை பற்றிய அலசல்தான். அதில் இருபக்கம் பார்த்து அலசுவது மிக கடினம். ஒரு பக்கம் அதுவும் நம் பார்வையை வைத்து மட்டுமே நம்மை அலசுவோம்..அப்படி அலச நினைக்கையில் இந்த கண்ணீர் விஷயம் என்னை அடிக்கடி இடிக்கும்.
.
சண்டை, பிரச்சனைகள் மட்டும் இல்லை சோக நிகழ்ச்சி மட்டுமே கண்ணீருக்கு காரணமாக இருப்பதில்லை..உச்சபட்ச டென்ஷனில் மெல்லிய அதிர்வு போதும்..கண்கள் கடலாக...  ஒரு வேலை முடியாத டென்ஷனில் சிறிது யாராவது அசைத்து விட்டால் போதும் .. அது கண்கள் வியர்க்க காரணமாகும்.

நான் மிக ஸ்ட்ராங் என நினைத்து கொண்டே இருப்பேன்..பெண்ணால் இது முடியாது என்று மூடி திறப்பதை தவிர வேறு எதற்கும் நினைத்ததே இல்லை..ஆனால் அவ்வப்பொழுது இந்த கண்ணீர் விஷயம் ஆட்டி பார்க்கும்.

ஒரு நண்பரிடம் கேட்டேன்..அதற்கு பெண்கள் வளர்ப்புதான் காரணம். அடுத்த நிமிடம் நீங்கள் அதை பற்றி யோசிக்க காரணம், அவரவர்  வளர்த்துக்கொண்ட   சுய ஆற்றல் என்று..பெண்ணுக்கும், பெண் போல வளர்க்கப்பட்ட ஆணுக்கும் கண்ணீர் வெளிப்படுவது சகஜம் என்று காரணம் கூறினார்..பெண்ணாக அடக்கிவைக்கப்பட்டு இயலாமையில் கண்ணீர் வெளிப்படுத்த சொல்லிகொடுப்பது சமூகம் என்பது அவர் கருத்து..அதில் இருந்து மீண்டு வர நினைத்தாலும் வருவது மிக கஷ்டம்..பெண்களுக்குள் உள்ளே அது சமூகத்தால் செலுத்தப்பட்டு இருக்கு என்பதும் அவரின் கருத்து..

எதை பற்றியும் முடிவான கருத்து வைத்துக்கொள்ளாமல் இருப்பது மட்டுமே..என்னுடைய ஒரே கருத்து. விவாதங்கள் மட்டுமே முடிவை சொல்லி விடுவதில்லை...இத்தனை எமொஷனாலாக ஏன் இருக்கவேண்டும்?.. கண்ணீர் விடாமல் இருந்து நாம் ஸ்ட்ராங் என்பதை ஏன் நிருபிக்க முடியவில்லை?

கண்ணீர் தேவைதான்..மிகபெரிய துக்கத்தில் வெடித்து அழுவது, தோள் கிடைத்தவுடன் அழுவது போன்ற ஆறுதல் உலகத்தில் எதுவுமில்லை..கண்ணீர் இல்லாவிட்டால் உலகில் இன்னும் பல தற்கொலைகள் நடந்து இருக்கும். மன நோயாளிகள் அதிகரித்து இருப்பர். கண்ணீரும் வரமே..ஆனால் அது தேவை இல்லாத இடத்தில் அதுவும் அடுத்தவர்கள் முன் எட்டிப்பார்ப்பது போன்ற தர்மசங்கடமான விஷயம் எதுவுமில்லை..அதுவும் அடுத்த முறை அவர்களை எதிர்கொள்ளும் பொழுது ஒரு சிறு கூச்சம் ஏற்படும்..

மகனின் அன்பு, சிறு டென்ஷன், விருந்தினர் முன்னிலையில்  வீட்டினரின் சிறு விமர்சனமோ, கிண்டலோ, அவசரமாக வெளியே போகும் வேளையில் சாவியோ, இல்லை அது சம்பந்தமான பொருளோ தொலைவது , பழைய சோகமான நினைவுகள் , ஒரு சிலநெகிழ்ச்சியான பாடல்கள், அபரிதமான அன்பு,  தலை சூடாகி ஏறும் கோபத்தில் துளிர்ப்பு, கேள்விப்படும் இள வயது மரணம், எங்கோ ஏற்படும் புறக்கணிப்பு, நெகிழ்ச்சியான பேச்சு, தனிமை, பொறாமை, இயலாமை, வலி, மகிழ்ச்சி எத்தனையோ உணர்வுகளுக்கு  வடிகால் கண்ணீர் துளிகள்தான்..ஒரு சொட்டு விழும் நேரம் நெகிழ வைக்கும்..தொடர்ச்சியான கண்ணீர் எரிச்சலை தரும்.. எல்லாமே தருணம்..கண்ணீர் விழும் வேளை அன்புக்கு மனம் அலைகிறதோ என்று தோணும..ஏன் அலைய வேண்டும்? மனித மனம் ஏதோ ஒரு அன்புக்கும், அரவணைப்புக்கும் ஏன் அலைந்து கொண்டே இருக்கிறது..பெண் என்றால் கண்ணீர் வழியே தேடுவதும்,,ஆண் என்றால் பணம், கோபம் போன்றவற்றை வெளிக்காட்டியும்  (சில சமயமும் கலங்கியும் ) அன்பை நிருபித்து கொண்டே இருக்கிறது..

நிருபித்தல் எங்கே வருகிறது? எங்கு சந்தேகம் வருகிறதோ அங்கே நிருபித்தல்..ஆனால் மனிதன் அன்பை தவிர அத்தனையும் நிருபித்து கொண்டு இருக்கிறான்..பெண்கள் கண்ணீர் படாத தலையணைகள் இல்லை. ..ஒரு சொட்டாவது துளிர்த்து அமிழ்ந்து இருக்கும்..நிருபித்த அன்பை தேடியும், இயலாமை கோபமும் வடியும் இரவுகளில்..

பலமாக நினைக்கும் கண்ணீர் பலவீனமாக....

மூக்கை துடைத்தப்படி
ஜலதோஷம் என்றே
சிரிக்கையில் சிவந்த
கண்கள் பேசியதே..
   


Wednesday, April 23, 2014

அந்த காலத்தில் அனைத்தும் அற்புதமில்லை..

அப்பொழுது எல்லாம் காற்று , நீர் எல்லாம் சுத்தமாக இருந்தது..எனக்கு தெரிந்து ஆற்றில் குளித்துவிட்டு குடத்தில் நீரை சுமந்துகொண்டு வருவார்கள்..சில வீடுகளில் மட்டுமே சொந்தமாக கிணறு இருக்கும்.

எங்கள் வீட்டின் உள்ளே கிணறு இருக்கும். கிணறு இருக்கும் முன்பக்கத்தை சேர்த்து கட்டியதாலோ இல்லை  ஏதோ ஒரு தாத்தா பெண்கள் மேல இருக்கும் அன்பாலோ இல்லை வம்பாலோ வீட்டுக்குள்ளேயே கிணறு கட்டி வைத்தார்.. அங்கு வெந்நீர் தவலை , விறகு அடுக்க ரூம் எல்லாம் உண்டு. சிறு வயதில் இருந்தது. பிறகு கைபம்பு, போர்வெல் போன்றவை வந்தப்புறம் மூடி அது வீட்டின் பகுதியாக ஆகிவிட்டது.

உழைத்து, உள்ளூரில் விளையும் காய்கறிகள், சுத்தமான காற்று லோக்கல் வம்புகள், இரவானால் தூக்கம்..பொது வம்புகளுக்கு நாட்டாமை, கல்யாணம் கார்த்தி என்று போய் கொண்டிருத்த வாழ்க்கை முப்பது வருடங்களில் தலைகீழாக மாற ஆரம்பித்தது..தெருவில் விளையாட போனால் பெண் என்ன, ஆண் என்ன எங்க இருக்கோம் என்று வீட்டில் இருப்பவர்களுக்கு தெரியாது..எல்லா வீடுகளுக்கும் நுழையும் உரிமை தெரு குழந்தைகளுக்கு உண்டு..இப்பொழுது போல பாலியல், காணாமல் போவது போன்ற பிரச்சனைகள் பற்றி அறியவும் இல்லை..அதிகம் இல்லவும் இல்லை..அதனால் கவலையும் இல்லை..

அந்த காலம் மிக அழகானதாக இருந்து இருக்கலாம்..நினைவில் அற்புதமாக இருக்கலாம். ஆனால் சில விஷயங்களும் இருக்கிறது. உதாரணம் மருத்துவ வசதி..கனவுப்ரியன் அவர் போஸ்ட் ல் எட்டு குழந்தைகளை அவர் அம்மா எந்த சிரமமும் இல்லாமல் வீட்டிலயே பிரசவம் பார்துகொண்டார் என்று...ஆனால் Infant mortality, Delivery deaths  மிக அதிகம்.

எங்க வீட்டு கொல்லைப்புறத்தில் சிறு மேடுகள் இருக்கும். சிறு குழந்தைகள் அதுவும் பிறந்து விரைவில் இறந்துவிட்டால் அவர்களுக்கு ஈம கிரியை கிடையாது. அதனால் வீட்டின் பின்பக்கம் புதைக்கும் வழக்கம் இருந்து இருக்கிறது. என் பாட்டி, அப்பாவின் தாயாருக்கு மூன்று குழந்தைகள். முதல் குழந்தை இறந்து இருக்கிறது. பிறகு அப்பா...அப்பாவிற்கு மூன்று வயதில் அடுத்த குழந்தை ..அது பிறந்ததும் ஜன்னி..பிரசவ ஜன்னி என்று பெயர்..சாதாரண ஜுரமாக கூட இருக்கலாம்..சரியான மருத்துவ வசதி இல்லாததால் அப்பா தாயாரை சிறு வயதில் பறி கொடுத்தார்.பிறகு அந்த குழந்தையும் சரியான கவனிப்பு இல்லாமல் இறந்தது.

     அதுவும் இல்லாமல் கத்தி சரியாக சுத்தபடுத்தாமல் பிரசவம் செய்வதிலும் நிறைய இன்பெக்ஷன் இறப்புகள். எனக்கு தெரிந்து கிராமத்தில் பிரசவம் செய்துகொண்ட  என் மாமியாரின் உறவினர் கர்ப்பபை வெளியே வந்து மருத்துவ வசதி இல்லாததால் உடனே இறந்துவிட்டார். அந்த குழந்தை தாயில்லாமல் வளர்ந்த கொடுமை வேறு...அந்த காலத்தில் பெண்கள் விகிதம் அதிகம் ஆதலால் உடனே இரண்டாம் திருமணம்.

எங்க தாத்தாக்கும் நடந்தது..சிறிய பாட்டி மிக அன்பாக இருப்பார்கள்..எங்களிடமும். ஆனால் அவர்களுக்கு அடுத்து அடுத்து ஆறு குழந்தைகள்..எனக்கு இருப்பது இரு சித்தப்பாக்கள்..மட்டுமே..மிச்ச நான்கு பேரும் எங்கள் வீட்டின் கொல்லைபுற மேட்டில் அமைதியாக உறங்கிக்கொண்டு இருக்கிறார்கள். என்ன ஆச்சு..அத்தனையும் சரியான மருத்துவ வசதி இல்லாததால் இறந்த குழந்தைகள்..ஒரு தாய் சேயை இழப்பதும்,  சேய் தாயை இழப்பதும் எத்தனை கொடுமையான விஷயம்.

சின்ன பாட்டிக்கு எப்பொழுதும் தலைவலி உண்டு..என் சிறு வயதில் இருந்து தலையில் தைலம் தடவியோ இல்லை துணி கட்டிகொண்டோ இருப்பார்கள். எத்தனையோ ஊர்கள், மருத்துவர்கள் எதுவும் சரிப்படவில்லை..இப்பொழுது உள்ளது போல ஒரு MRI அல்லது CT எடுத்து இருந்தால் அவரின் மூளைகட்டியை சிகிச்சை மூலம் சரி செய்து இருக்க வாய்ப்பும் இருந்து இருக்கிறது. ஏதோ ஒன்று உள்ளே வெடித்து இறந்ததாக கூறினார்கள்..

ஒன்றல்ல, இரண்டல்ல எக்கச்சக்க இழப்புகள் ஒவ்வொரு வீட்டிலும்..சரியான மருத்துவ வசதிகள் போய் சேராததால் இன்னொரு பாட்டி 99 வயது வரை ஆரோக்கியமாக இருந்து இருக்கிறார்..தெம்பாக இருந்த பாட்டிகளை விட தவற விட்ட  குடும்ப பெண்கள் அதிகம்

வீட்டில் ஒன்பது பேர் இருக்க வேண்டிய இடத்தில் மூன்று பேர்..இந்த சமயத்தில் அரசாங்கம் ஒவ்வொரு ஊரிலும் சிறு அளவிலாவது மருத்துவ வசதி செய்ததால் மட்டுமே இப்பொழுது இறப்பு விகிதம் குறைந்து இருக்கிறது. இன்னும் கிராமப்புறம் போய் ஒரு வருடமாவது வேலை செய்ய மருத்துவ மாணவர்கள் தயாராக இல்லை..சேவை மனப்பான்மை இல்லாத கல்வியும், பின்புலம் அறியாத வளர்ப்பும் ஒரு காரணமாக இருக்கலாம். சிறு வயதில் இருந்து சமூக சேவை பற்றிய விழிப்புணர்வு இல்லாததும் காரணம்..

அந்த காலத்தில் அனைத்தும் அற்புதம் இல்லை..

Tuesday, April 22, 2014

நன்றி குங்குமம் தோழி..fb page.

வணக்கம்...and Welcome to
செல்லியுடன் ஒரு chai

தோழிகளுடனான செல்லியின் கலக்கல் பேட்டி
__________________________________________________


செல்லி :உங்கள நீங்களே அறிமுகப் படுத்திக்கிட்டா எப்படி அறிமுகப் படுத்திப்பீங்க?

கிர்த்தி :இடத்துக்கு தகுந்தாப் போல..மனைவியா, தாயா, மருமகளா, மகளா, கற்றவளா, ஏதும் அறியாதவளா, வசதி படைத்தவளா, வசதி குறைந்தவளா, எளிமையா, பெருமையா எங்கு எப்படி வேண்டுமோ அப்படித்தான் என்னை அறிமுகப்படுத்திப்பேன்.

செல்லி :உங்க வெற்றிக்கான ரகசியம் என்ன..?

கிர்த்தி :எதையும் கற்றுக் கொள்ள ஆர்வமாக இருப்பது. என்னால் முடியாவிட்டால் உலகத்தில் யாராலும் முடியாது என நம்புவது.

செல்லி :உங்க முன்னாடி கடவுள் தோன்றி மூன்று வரங்கள் கேட்கச் சொன்னா என்ன கேப்பீங்க.?

கிர்த்தி :
1.உலக எல்லைகளை அழிக்கணும்.
நாடுகளே இருக்க கூடாது.
2.மனிதர்கள்.., அழிவுப் பணிகளை மறந்து
ஆக்கப் பணிகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.
3.அந்த உலகம் முழுவதும் என் காலடித் தடம் பதிய வேண்டும்.[ஆனா இந்தியாவில் நடக்கும் அரசியல் நடைப் பயணம் போல அல்ல..]

செல்லி :உலகத்துல எந்த எடத்துக்குப் போகணும்னு ஆசை..ஏன்?

கிர்த்தி :ஆசைன்னா மார்ஸ் தான்..போனாப் போவுது உங்களுக்காக விருப்பத்தை குறைச்சுக்கறேன்.. அமேசான் காடுகள்.
அந்த மாசுமருவற்ற இயற்கையை ரசிக்கணும்.அதில் நடக்கணும்..

செல்லி :வாழ்வு ங்றத எப்படி டிஃபைன் பண்ணுவீங்க?

கிர்த்தி :நம்முடைய இன்று--ம் இப்பொழுதும்-தான் ரசனையாய், மகிழ்ச்சியாய் வாழும் தருணம். நாளை நமக்கெதுக்கு ?

செல்லி :FBல உங்களுக்குப் பிடித்த மூன்று நண்பர்கள் ..
எதனால் அவங்களப் பிடிக்கும் ?

கிர்த்தி:நிறைய பேரப் பிடிக்கும்... குறிப்பிட்டுச் சொல்றது கஷ்டம்
எனினும் மூணே மூணு பேருன்னு சொன்னதுனால வட்டத்தை குறுக்கிக்கொண்டு சொல்றது..

வடுவூர் ரமா :
Vaduvur Rama
_______________
மனம் விட்டு பாராட்டுபவர் ..மிக இயல்பாய் இருக்கத் தெரிந்தவர். என்னைப் பொறுத்தவரை வாழ்வில் மிகக் கடினமான விஷயம் - இயல்பாய் நாம் நாமாய் வெளிப்படுவதுதான். அது ரமாவால் முடியும்.

ஆத்மார்த்தி :
Aathmaarthi RS
____________
ஆத்மா மிகக் குறுகிய காலத்தில் தன் எழுத்தால் மேலே வந்தவர். அவரின் உழைப்பின் மூலம் சாதித்துக் கொண்டு இருப்பவர். அவரின் வித்யாசமான யோசிக்கும் பாணியும் , உழைப்பும் ,தமிழை எல்லாவிதங்களிலும் கையாளுவதும் பிடிக்கும்.

ரத்னவேல் ஐயா:
________________
நல்ல எழுத்துகளை தேடிப்பிடித்து பாராட்டுவதில் வல்லவர். எந்த நல்ல ப்ளாக் இருந்தாலும் அவர் அங்கு இருப்பார். நல்ல வாசிப்புக்கு அடையாளம் அவர்தான். மனசு விட்டு அவர் அளிக்கும் பாராட்டுகள் பல பேரை ஊக்குவித்து மேலும் எழுத வைக்கும். முகநூலில் ஒரு அரிய, பெரிய மனிதர் நம் ஐயா.செல்லி :பெண்களுக்கு பாதுகாப்பு தருவது எதுன்னு நினைக்கறீங்க?

கிர்த்தி :அவர்களுடைய தன்னம்பிக்கைதான்.
கழிவிரக்கம் அவர்களை அழித்துவிடும்.

செல்லி :உங்க பலம் என்ன ?பலவீனம் என்ன?

கிர்த்தி :ரெண்டுமே ஒண்ணுதான். ரொம்பப் பேசுவேன்.

செல்லி :உங்கள் மனம் கவர்ந்த தமிழ் திரைப்பட இயக்குநர் யார்?..மத்த இயக்குநர்களிடம் இல்லாத ஒரு அம்சமா அவரிடம் பாராட்டுவது எது?

கிர்த்தி :மணிரத்னம். எல்லாவற்றையும் open ஆக காட்சிப்படுத்தாமால் சில நுணுக்கங்களை ஒளித்து வைத்து பார்வையாளனுக்கு யோசிக்க ஒரு சந்தர்ப்பம் கொடுப்பது.

செல்லி :உங்களுக்குப் பிடித்த உடை எது ?ஏன் பிடிக்கும்?

கிர்த்தி :ஜீன்ஸ்தான் ....துப்பட்டா, முந்தானை என்று கால் தடுக்கும் சமாச்சாரங்களும் Continuous Conscious Confusion சமாச்சாரங்கள் ஏதும் இல்லாததாலும்..

செல்லி : ஒரு மகள்,மனைவி ,தாய் இதில் எந்த பாத்திரம் கடினம் ஏன்?

கிர்த்தி :மகளோ,தாயோ சில காலங்களில் அந்த கடமை முடிந்துவிடும். அதுவும் இல்லாமல் அதில் இருக்கும் ரத்த பந்தம் ஒரு ஈர்ப்பைக் கொடுக்கும். ஆனால் மனைவி என்பது திருமணம் ஆன அன்றில் இருந்து ஆரம்பிக்கும். நிறைய விட்டுக்கொடுத்தல், அனுசரிப்பு, பழக்கவழக்கம் மாறுதல் என்று கடைசி வரை சமன் செய்து கொண்டு போக வேண்டிய உறவு அது. இந்த காலத்தில் ஒரே அலைவரிசையில் ஒத்துப் போய் செய்யும் மனைவி ரோல் கடினமானது.

செல்லி : ஒரு நாள் மட்டும் வேறு ஒருவராக இருக்க உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் யாராக இருக்க விரும்புவீர்கள் ?ஏன்?

கிர்த்தி :ஐ.நா பொதுச் செயலராக..
உலக நாடுகளைக் கூட்டி இலங்கையில் நடந்த ...............களை,அநியாயங்களை ஓரளவுக்காவது
தட்டிக் கேட்க முயற்சிப்பேன்.

செல்லி : வாழ்க்கையில் இனி நீங்க எதிர் பார்க்கும் விஷயம் அல்லது தருணம் எது?

கிர்த்தி :இப்போதைக்கு ஒரு தாயாக பையனின் கல்லூரி அட்மிஷன்தான்..வேறென்ன இந்த வருஷம் யோசிக்க முடியும்..?

செல்லி :உங்களுக்கு மிகப் பிடிச்ச இந்த உலகின் மிகச் சிறந்த ஆண்மகன் யார் ..?ஏன்?

கிர்த்தி :என் பெரிய பையன் நிகின். அவன் யோசனைகள் அனைத்தும் வித்தியாசமாக இருக்கும். திருமணம் ஆனால் மனைவியை எப்படி நடத்துவாய் என்று கேட்டதற்கு இரு தனி மனிதர்கள் ஒரு இடத்தில் வாழ இடம் கொடுப்பதே உண்மையான திருமணமாக இருக்க முடியும் என்று சொன்ன ஒரு சிந்தனைக்காகவே நான் அவனை அதிகம் ரசிக்கிறேன்.. வியக்கிறேன்
என் பையன் என்பதால் அவன் சிறந்த ஆண்மகன் ஆகிவிடவில்லை தெளீந்த சிந்தனையால் மட்டுமே ஆண்கள் சிறந்த ஆண்மகன்கள் ஆகிறார்கள்.

செல்லி: நீங்கள் கடைசியாக அழுதது எப்போது?

கிர்த்தி :ஐயே ...இன்னாமே இது..
ஒரு பொம்பள எப்பஅழுவான்னு கேட்டுக்கினு..
..எப்ப வேணாலும் அழுவுறதுதான்...நீ இப்ப நான் ஓன் ஃப்ரென்ட் இல்லைன்னு சொன்ன வச்சுக்க அதுக்கும் அழுதுடுவேன்..அதனால் கட்ச்சி இப்பவா வேணாலும்.இருக்கலாம்..ஆனா பிறக்கிறப்ப அழுதுட்டு உடனே சிரிச்சிட்டேன்..அது இன்னிக்கு வரைக்கும் தொடருது .. ஏன்னா .தொட்டில் பழக்கம்.எதுவரைக்குமோ தொடருமாமே..?

செல்லி : ஒரு பெண் தன்னை எப்படி வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும் என நினைக்கிறீர்கள்..?

கிர்த்தி : அர்த்தநாரியாக...வெளியே ஆணாகாவும் வீட்டில்
தாய்மையுடனும்..

செல்லி: நன்றி கிர்த்தி
கிர்த்தி: நாந்தாம்ப்பா சொல்லணும். எனக்கும் சந்தோஷம்பா.. and one more thing.. டீ சூப்பர்.. ஒங்க பொடவையும் தான்..


An interview by chelli sreeni
Set and Properties-CS bavan BGLRE
Guest-MsKirthika Tharan
HOSTED BY -THOZHI fb
Template Design ByKannappan Nmr
Creative Head in assistance- Annapurani Narayanan
 — with Vaduvur Rama,Aathmaarthi RSAnnapurani NarayananN.Rathna VelKannappan NmrChelli Sreenivasan and Kirthika Tharan.
நன்றி குங்குமம் தோழி..

agnostic மண்டையும்
acoustic மண்டையும்
_________________________

அது ஒரு கொரியர் கலெக்க்ஷன் இடம்.
அங்கு இருந்த வயதானவரிடம் கோந்து வாங்கி ,
முகவரியை எழுதிக் கொடுக்கப் போனா..,
இந்த இருக்கையில் உக்காரும்மா என உக்கார வைத்து
மின்விசிறியைப் போட்டு ஏக வசதி செய்து கொடுத்தார்.

பிறகு ஹிந்துஸ்தானி இசை தெரியுமா என்று கேட்டுவிட்டு
பதிலுக்குக் காத்திராமல் பாடகர்களின் இசையை
யூ ட்யூபில் வழிய விட்டார்.
மெய் மறந்து க்யா பாத்..க்யா பாத்..
என்று கையைத் தூக்கி ரசித்த
அவரின் ரசனையை ஏனோ ரசிக்கத் தோன்றியது.

அடானா ராகம் ..அது ,இது என்று ஆரோகணத்துக்குப் போய்
பின் அவரோகணத்துக்கு வந்து
இசையை மேலே சுழலவிட்டு
கீழே தள்ளிவிட்டு என
நான் அங்கே இருந்த நேரத்துக்குள் ஏக இசை ரகளைகள்..

ஆனா பாவம்..
நான் இருந்த அவசரத்துல
என்னாலதான் எதையும் ரசிக்க முடியவில்லை.

பாடல்களைப் போட்டுவிட்டு
அப்பாடல்களைப் பாடிய பாடகர்களோடு
எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் ஒவ்வொன்றையும்
ஒரு குழந்தையின் ஆர்வத்துடன் எனக்குக் காட்டினார்

என்ன செய்தும் என்ன செய்ய ?
என் அவசரம் எனக்கு..

\கடைசியாக வருகிறேன் என்று சொல்லும்பொழுது
அவர் சுழலவிட்ட கன்னட பக்திப் பாடல்கள் அனைத்தும் அருமை..
எனினும் உருகி, உருகி பக்தி செய்ய முடியாத
என் அக்னாஸ்டிக் மண்டையைக் குட்டிக் கொண்டேன்.
சற்றே குறை சொல்லிக் கொண்டேன்..

அப்புறம் முக்கியமான ஒரு விஷயம்..
அவருக்கு இசையையும், தன் இசை ரசனையும் பகிர்வதில் அத்தனை ஆர்வம்.
கூடவே பொக்கிஷமாகப் பேணி பாதுகாத்துவரும் அந்த
புகைப்படங்களையும்
யாருக்கேனும் காட்டி மகிழ வேண்டும்.

ஆனா இதையெல்லாம் கேட்கவும் பகிரவும் மனிதர்கள் வேண்டுமே.
ஹாங்....நல்ல ஐடியா
அதற்கு பேஸ்புக்தான் சரி..
அடுத்த தடவை போகும்பொழுது
அவரை ஒரு ஃபேஸ்புக் கணக்கு ஆரம்பிக்க
பரிந்துரைக்க வேண்டும்..

அப்போதுதான் நம்மைப் போன்ற மனிதர்களைப் பார்க்காமல்
தானுண்டு தன் ஜோலியுண்டு என
வெளியுலகே அறியாது
செல்பேசியில் இல்லாவிடில் கணினியில் மூழ்கி இருப்பார்.

நானும், தோழியும்

நானும், தோழியும்..

ரொம்ப நாளாக எழுத நினைத்த 
மனதில் சுமந்த கட்டுரை..தள்ளிக்கொண்டே போகிறது.
ஒவ்வொரு முறை படிக்கும் வேளையிலும் ஒவ்வொரு விதமான கட்டுரை மனதில் பொங்குவதும்
அப்படியே வேறு வேலைகளின் காரணமாய் அச் சூடு தணிந்து அமுங்கிப் போவதும் வழக்கமே.
இன்று எழுத யோசிக்கவில்லை..உடனே எழுதிவிட்டேன்
மனதில் படுவதை மட்டுமே எழுதுவது என் வழக்கம்..அபப்டித்தான் இப்பவும் எழுதி இருக்கேன்.
மேலும் மனசை அலங்காரமான சொற்களால் கோர்க்க கை வருவது இல்லை..ஏனெனில் நாம மனதோடு பேசும் இனம்.

எப்போதுமே பெண்கள் பத்திரிக்கை பற்றி மிகபெரிய அபிப்ராயம் கிடையாது..காரணம்..
பெண்களுக்கு ஏன் தனி பத்திரிக்கை என்றுதான்..
ஆண்களுக்கு என அதிகம் தனி பத்திரிகைகள் இல்லை..
அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கான பத்திரிகைகள் ஆங்கிலத்திலோ , தமிழிலோ உள்ளே அழகும், சமையலும் போட்டி போட்டுகொண்டு இருக்கும்.
அதனால் கொஞ்சம் புரட்டுவதோடும் சில கட்டுரைகள் மேம்போக்காக பார்ப்பதோடும் சரி.

எல்லா பெண்கள் பத்திரிக்கைகளும் ஒரு பேட்டர்ன் இருப்பது போல தோன்றும்.ஒரு பேட்டி, ஒரு பாசிடிவ் முடிவு யூகிக்க கூடிய கதை, ஒரு மெகா சீரியல் குடும்ப தொடர், சில கட்டுரைகள், போட்டி, சமையல், அழகு குறிப்புகள்..இவ்வளவுதான்.

இப்ப இந்தியாவில் உள்ள எந்த மாலுக்குள் போனாலும் என்னால் எளிதாக வழி கண்டுபிடிக்க முடியும்.
அவர்களின் ஸ்டைல் அத்துபடி..ஒரு மேக்ஸ், பெண்டலூன், சூப்பர் மார்கட், லைப் ஸ்டைல்..தூள் துப்பட்டி கடைகள்..மேலே உணவு கோர்ட் இன்னும் மேலே சினிமா..மற்றும் விளையாட்டு இடங்கள்..இரண்டு அல்லது மூன்று தளங்கள் கார் பார்க்கிங்கள்..கொஞ்சம் லேசாக முன்ன பின்ன ..அவ்வளவுதான்..
அது போல பெண்கள் பத்திரிக்கை அமைப்பும் எந்த மொழியில், எந்த ஊரில் இருந்து வந்தாலும் கொஞ்சம் அப்படி இப்படி மாறி உள்ளே இருக்குமே ஒழிய உள்ளே உள்ள விஷயங்கள் அநேகமாய் அதேதான்

மால்களில் புது பொருள்கள் விற்றாலும் மால் அமைப்பில் மாற்றம் இல்லாததால் கொஞ்ச நாளில் அலுத்தும் போகிறது..
முதன் முதலில் குங்குமம் தோழியைப் படித்த பொழுது உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் அதிகம் கவரவில்லை..ஆனால் நாள் ஆக நாள் ஆக கொஞ்சம் கொஞ்சமாக படிக்க ஆரம்பித்தேன். மாலை(mall) கொஞ்சம் இடித்து செப்பனிட ஆரம்பித்து இருப்பது சந்தோஷமே..

பேஸ்புக் கில் எழுதும் அருமையான எழுத்துகளின் சொந்தக்காரர்களுக்கு வாய்ப்பு அளிக்கிறார்கள்
அதுவும் அவை அனைத்தும் மிக தரமான இலக்கியமும், ஜன ரஞ்சகமும் சார்ந்த கட்டுரைகள்..
பொது அறிவை வளர்ப்பதுவும் புது புது துறைகளை அறிமுகப்படுத்துவதும்..
உணவுக்கான தொழில் முறை போட்டோகிராபி போன்ற புது துறைகளில் சாதிக்கும் பெண்களைப் பேட்டி எடுத்து எங்கெல்லாம் வாய்ப்பு இருக்கு என்று அறிமுகப்படுத்துவதும்.செய்கிறார்கள்..

.கூடவே சாதனைப் பெண்மணிகள் ,வரலாற்றுப் பெண்மணிகள் பற்றிய சஹானா கட்டுரை, தமிழினி, வைதேகி அவர்களின் அழகான கட்டுரைகள்..மகிழ்ச்சி என்பது யாதெனில் அப்புறம், ..தோழிகளின் ஒரு வரி பேட்டிகள்..இப்படியாக ஒவ்வொரு பக்கம் பற்றியும் சொல்லிக்கொண்டே போகலாம்.கூடவே அவர்கள் தருவது பல சாமானிய தோழிகளுக்கு தங்களது முகத்தையும் அச்சில் பார்க்கும் ஒரு சந்தோஷம்..

சமையல் என்றாலும் சமைக்கும் ஆண்கள் பற்றி எழுதுவதும், குழந்தை வளர்ப்பு பற்றி மொக்கை போடாமல் அவர்களுக்கு நல்ல தொடுகை, செக்ஸ் விழிப்புணர்வு பற்றிய கட்டுரைகள் வெளிவருவதும், பல தொழில்கள் அறிமுகமும், சட்டங்கள் அறிமுகமும் அட போட வைக்கிறது.

கொடுத்த காசுக்கு மேலேயே ஜோதிகா நடிகிறார் என்று கல்லூரி காலங்களில் பேசுவோம்..அது போல கொடுத்த காசுக்கு மேலேயே கன்டென்ட் கள் அதிகம்..
அவ்வளவு விஷயங்கள் இருக்கு..இன்னும் பெண்கள் பற்றியே கட்டுரைகள் இல்லாமல் பெண்கள் தெரிந்துகொள்ளவேண்டிய அரசியல், இனம், பொதுஅறிவு, டெக்னாலஜி கட்டுரைகள் வந்தால் மிக சிறப்பாக இருக்கும். இனி வரும் காலங்களில் வரப்போகும் பெண்கள் பத்திரிக்கைகள் மேல் நம்பிக்கை துளிர்க்க வைக்கிறாள் தோழி

மிகுந்த ரசனையாக இருக்கு சில பக்கங்கள்..
உலகின் டாப் 50 டிரிங்க்ஸ், உலகின் பல்வேறூ டாப் டென் விஷயங்கள் உணவுகள்,சுற்றுலா இடங்கள் Etc.. என்று படத்துடன் வந்த /வரும் தொகுப்புகள் ரசிக்கத்தக்கவை..
அதைத் தவிர பல இடங்களில் வெற்றி பெண்மணிகள் கதைகள் வந்தாலும் அதை ரசனையோடு தொகுத்த விதத்தில் வித்தியாசப்படுகிறாள்..

தமிழினியின் வீடு பற்றிய தொடர்..அருமை..
ஆங்கிலத்தையும், தமிழையும் அழகாகக் கலந்து ஒரு காக்டெயில் பரிமாறுகிறாள்..
எனர்ஜெடிக் விஷயங்கள், பொருளாதாரம் , பொது அறிவு பற்றி கூறினாலும் இன்றும் பெரும் அளவில் வீட்டில் இருக்கும் குடும்பத்தலைவிகளின் ரசனைகள், சாதனைகளையும் வெளிக்கொணரத் தவறுவது இல்லை தோழி.

முக்கியமாக நம் பேஸ்புக் தோழிகள் எழுதும் வாரத்தை ஜாலம் பகுதி இன்னும் கவர்கிறது..அநேகமாக உலகப் பெண் பத்திரிகை வரலாற்றில் மொழிக்கான முதல் பத்தி இதுதான் என நினைக்கிறேன்.. நம் தோழிகள் தீபா ராமும் அனிதா ஜெயராமும் கலக்குகிறார்கள்.. இது சிறந்த முயற்சி மட்டுமல்ல.புது முயற்சியும் கூட..
இது மட்டுமல்லாது தோழியின் மற்ற எல்ல புதிய முயற்சிகளும் அழகு.

குடும்பத் தலைவிகள் சம்பாதிக்கவில்லையே என்று சோரும் சமயத்தில் உற்சாகத் தோள் கொடுக்கும் தோழியாகவும் விளங்குகிறாள்..

பெண்கள் மட்டும் சுற்றுலா போக நிறுவனம் நடத்தும் தோழி பற்றியும் அதே சமயத்தில் சுற்றுலா போக கொஞ்சம், கொஞ்சமாக சேமிக்கும் தோழி பற்றியும் குறிப்பிட்டு வாழ்க்கையின் எல்லா பக்கங்களையும் நமக்குக் காட்டித் தருகிறாள் தோழி...ஆக மொத்தம் சின்னச் சின்ன ரசனைகளை ஆங்காங்கே பாசிட்டிவாக தூவி கொண்டே போகிறாள் தோழி..

இந்தளவுக்கு பாராட்ட ஏதாவது காரணம் இருக்கும் இல்லையா.ஆமாம் இருக்கு..கிட்டத்தட்ட ஒரு வருடமாக எனக்குத் தோழியாக இருப்பதால் நான் அவளுடன் இன்னும் அதிக அந்யோன்யத்தை உணர்கிறேன் ..சென்ற முறை தோழி பற்றி பல பேருக்குத் தெரியாமல் இருந்தது..இப்பொழுது தமிழ்நாடு சென்ற பொழுது ஒவ்வொரு கடையிலும் முதல் வரிசையில் தோழியைப் பார்த்தபொழுது அழகிய நட்பை நல்ல நிலைமையில் பார்த்த பெருமையும் , மகிழ்ச்சியும்.
சிலரிடம் நல்லாருக்கு படிங்க என்று சொன்னபொழுது..அட, ஆமாம் என்று மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டார்கள்..

மகிழ்ச்சி என்பது யாதெனில்..

யாம் பெற்ற மகிழ்ச்சியை பகிர்ந்து
அனைவரையும் மகிழ்சியாக்குதல்.

அப்பா-1

அப்பா..1.

சின்ன வயதில் அப்பாக்கு ரேடியோ கேட்டால் பிடிக்காது..டி.வி கூட பார்க்கலாம்..ரேடியோ பல கற்பனைகளை தூண்டும் ..சின்ன வயதில் தேவை இல்லை என்று அவர் வாதம்..

எங்கோ கேட்ட பாட்டு..அர்த்தமே தெரியாமல் மிகச்சிறிய வயதில் பாடினேன்..

"ஒரு நாள் இரவில் தனிமையில் இருந்தேன் திருடன் வந்தான்"என்ற பாட்டை..

அப்பாக்கு என்னமோ செம கோவம்..அடிக்காத அப்பா அன்று ஒன்று வைத்து விட்டார்..

அதனால் நடந்த நன்மை..இன்று வரை அந்த பாட்டு நினைவில்..

ம்ம்ம்...பொண்ணுங்க..

அப்பா -2

அப்பா -2..

அப்பாவோடு வயலுக்கு போகும்பொழுது சிறு வயதில் பாம்பை பார்த்தவுடன் அப்பா பாம்பு, பாம்பு என்று கத்தினேன். உடனே வேலை செய்தவர்கள் ஏறி வந்து பாம்பு எங்கே என்று பேச்சு மும்முரத்தில் வேலை ஒரு மணி நேரம் கெட்டு போனது.

அப்பா கூப்பிட்டு..வயல்ல பாம்புகள் சாதாரணம், பார்த்தா ஒதுங்கி போகணும், அது எலியை சாப்பிட்டு நமக்கு நன்மை செய்ய வந்துருக்கு, அதை அடிக்கணும் என்று நினைக்க கூடாது..பிறகு வேலை கெடும் அளவுக்கு இப்படி நடந்து கொள்ள கூடாது என்று அறிவுரை.

ஒரு நாள் அறுவடை செய்த வயலில் இறங்கி நடக்கும் பொழுது நிறைய பாம்புகளை பார்த்தப்பொழுது சிறு பதட்டம்..ஆனால் பயமில்லை...அன்றில் இருந்து இன்று வரை பாம்பை கண்டால் ஒதுங்கி போகும் வித்தை அப்பா சொல்லி தந்தது..ஆனால் தேனிக்கு கூட பயப்படும் பசங்களை மாற்ற முடியவில்லை என்னால்.

அப்பா -3

அப்பா -3,

சின்ன குழந்தை அவளுக்கென்ன தெரியும் என்ற உறவினர்களின் கமெண்ட்ஸ்ஐ காதில் போட்டு கொள்ளாத அப்பா..

நாத்தாங்கால் என்று பெயர்..நாற்றுகள் ஒரு இடத்தில விதைத்து பிறகு அதை பறித்து உழவு செய்த வயல்களில் நடுவார்கள். கிராமங்களில் திருட்டு அதிகம். அதற்காக வண்டியில் நாற்று கட்டுகளை அனுப்பும் பொழுது பின்னாடி அப்பா என்னை அனுப்புவார் சில சமயம்.

குதித்து கொண்டு ஓடினாலும், சில சமயம் அலுப்பாக வரும். என்னப்பா இங்க எண்ணிட்டு அங்க எண்ணிக்க வேண்டியதுதானே அப்படின்னு கேட்டு இருக்கேன். ஒரு நாள் இதென்ன ஆட்கள் மேல நம்பிக்கை இல்லையா என்று கேட்க அப்பா சொன்னது....

"உன் பொருளை நீ கவனமாக பாதுகாத்து கொள்ளாவிட்டால் அது உன் பொருள் இல்லை..பிறகு அடுத்தவரை குற்றம் சொல்லுவதோ, பழி சுமத்துவதோ, வாய்ப்பு கொடுத்துவிட்டு திண்டாடுவதோ கூடாது..அப்படி உன்னால் முடியாவிட்டால் அந்த பொருளை மறந்துடனும் இல்லாவிட்டா கவலைப்படாம எக்கேடு கெட்டு போனா என்னன்னு விட்டுடனும்".

மாட்டு வண்டியின் பின்னால் சந்தோஷமாக போக ஆரம்பித்தேன்..

குழந்தைகள் காரணம் சொல்லாவிட்டால் காரியம் செய்யமாட்டார்கள்.

அப்பா-4

அப்பா-4..

அப்பாவின் சிறுவயது டைரி கதைகள் அவ்வப்பொழுது கிடைக்கும்..

அதில் ஒன்று கொசு அடிக்கும் இயந்திரம்..

அப்போ கொசுவத்தி சுருள், மேட் எதுவும் இல்லாத காலம். சில ஹாஸ்டல் ரூம்களில் கொசு மிக அதிகமாக இருக்குமாம்.

விளம்பரத்தில் பார்த்த கொசு ஒழிக்கும் இயந்திரத்தை ஆர்டர் செஞ்சு இருக்கேன்..அதுவும் பத்து ரூபாய்க்கு மேல் என்று நினைவு..ரொம்ப காஸ்ட்லி என்று சொன்னார்..அந்த பையனின் இரு மாத செலவாம். கொஞ்சம் வசதி குறைவு வேறு.

மிச்ச பசங்களுக்கு கொசு ஒழிக்கும் இயந்திரத்தை பார்க்க மிக ஆவல். ஒரு நாள் வந்தது. பார்சல் வந்தவுடன் அனைவரும் குழுமிவிட்டனர்.

ஒரு சுத்தியல், ஒரு வலை, ஒரு தாங்கு கல்(எடை கல் ) இவை இருந்தது. செய்முறை புத்தகம் படத்தோடு. அதில் பின்வருமாறு..

"கொசு அதிகம் இருக்கும் இடத்தில இந்த வலையை வீசி கிடைக்கும் கொசுவை பிடிக்கவும், ஒவ்வொரு கொசுவாக எடை கல் மேல் வைத்து சுத்தியால் தட்ட வேண்டும். இப்படி ஒவ்வொரு கொசுவாக அடித்து ஒழித்தால் கொஞ்ச நாட்களில் அத்தனை கொசுவும் ஒழிந்துவிடும். சந்தேகங்களுக்கு பட குறிப்புகளை பார்க்கவும்'.

அழுகை முட்டிக்கொண்டு வந்தாலும் அத்தனை பேரும் சிரித்துவிட்டனர்.

இப்பொழுது ஈமு கோழிகள் நம்மை பார்த்து சிரிப்பதை போல..

காலங்கள் மாறுவதில்லை..

அப்பா-5

அப்பா-5

வெயிலானுபவம்..

வெயில் காலத்தை அனுபவிப்பது என்றால் ரிசார்ட், ஊட்டி செல்வது மட்டுமல்ல..ஊரில் உதிர்ந்தும், காய்ந்தும் கிடக்கும் வெயிலோடு மகிழ்வது. 

காலையில் எழுப்பும்பொழுது அலுப்பாகாதான் இருக்கும். ஆனால் அப்பாவுடன் கதைகள், நகைச்சுவை நிமிடங்களை தவற மனம் வராது. அந்த காலத்தில் முதுமக்கள் தாழி என்று ஒன்று உண்டு. அதிக வயதாகிவிட்டால் ரொம்ப சுருங்கி போய்விடுவார்கள். ஒரு கொட்டாங்குச்சியில் சாதமும்..குத்தி சாப்பிட ஊசியும், ஒரு கொட்டாங்குச்சியில் நீரும் வைத்து வைத்து மூடி பூமிக்குள் புதைத்து விடுவார்கள். பாவம் இப்பொழுது போல கொள்ளை அடிக்கும் ஐ-சி-யூ இல்லாத காலம்.

சில மியுசியங்களில் இன்னும் அந்த தாழி காணக்கிடைக்கும். அது போன்ற ஒரு பெரிய மண் ஜாடி ஒன்று இருந்தது. ஒரு வருடத்துக்கு பல குடும்பங்களுக்கு தேவையான மாவடுக்கள் அதில் மிதக்கும். அப்பாக்கு கீழே விழும் மாவடுக்களை வீணாக்க மனம் வராது. பெரிய பைகள் எடுத்துகொண்டு கிளம்புவோம். அம்மாக்கு இறக்கின வடு வேண்டும் என ஆசை..அது எங்கள் வீட்டில் நடக்காது.

சிறு வடுக்கள் தோப்பில் இறைந்து கிடக்கும். வெயில் ஏறும் முன் பொறுக்க போய் விடுவோம். எத்தனையோ கதைகள்..வெம்பிய மாவடுக்களை பொறுமையாக தூக்கிபோட்டுவிட்டு கெட்டிய வடுக்களாக பார்த்து பொறுக்கி கொண்டு வருவோம். தோப்பை ஒரு சுற்று சுற்றினால் அரை பை தேறும். இது பத்து பதினஞ்சு நாள் நடக்கும். கொத்தவரங்காய், அவரைக்காய் போன்று சில சமயம் ஊடு பயிர் உண்டு. அது பறிக்கவும் போக வேண்டும். ஒவ்வொன்றையும் பழக்கி கொடுத்தது இன்று வெயிலோ, மழையோ எதையும் கண்டுக்காம, உஸ், உஸ் என்று இல்லாமல் இருக்க வசதியாகத்தான் இருக்கு.

புளியம்பழம் பொறுக்க, வேப்பங்கொட்டை பொறுக்கி விலைக்கு போட எல்லாம் ஒவ்வொரு சீசனில் செய்த அனுபவங்கள். எத்தனை லட்சங்கள் கொடுத்தாலும் அந்த அனுபவங்கள் திரும்பி வராது. எல்லாம் முடித்துவிட்டு ஒரு போர் செட் குளியல் போட்டால் அத்தனை மகிழ்ச்சியாகவும், குளுமையாகவும் இருக்கும்.

ஏ.சி யில் கிடைக்குமா வெயிலானுபவம் ? நன்றிப்பா..

அப்பா-6

அப்பா-6 ..."DO what I say...Don't do what I do"
அதிக கேள்விகளுக்கோ,எதிர்த்து பேசினாலோ அப்பாக்கிட்டேர்ந்து இது மட்டுமே பதில்.அப்ப அப்பாக்கு ரொம்ப மதிப்பு கொடுத்து பயந்த காலம்..ஏம்பா நீ இப்படி பண்றப்ப நாங்க பண்ண கூடாதா என்று கேட்டாள் கோவம் வந்துடும்..உடனே இதுதான் வரும் அவரிடமிருந்து..
இங்கு கணவரின் பீரோவில் இருந்து வைத்து இருந்த  சூயிங்கம் எடுத்து சின்ன பையன் சாப்பிட்டு விட்டான்..குழந்தைகள் சாப்பிட கூடாது என்றால் கேக்காமல் எதிர்த்து வேறு பேசுகிறான்..நல்லது இல்லையென்றால் நீங்க செய்யலாமா என்று..பிறகு எதாவது சொன்னால் இது மட்டுமே வருகிறது பதிலாக..

"Do what I say mom"..
..
இதான் மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் அடியா..#நம்ம_தலைமுறை..

அப்பா -7

அப்பா -7 

எங்க வீட்டில், இரவில் பால் குடிக்காமல் தூங்கக்கூடாது..அக்கா, தம்பிக்கு தூக்க்கதிலேயே அம்மா கொடுத்துவிடுவார்கள். எனக்குதான் கஷ்டம்.

நானும் பால் குடிக்காமல் தவிர்க்க தூங்குவது போல பாவ்லா செய்வேன். இதை பார்த்த அம்மா அப்பாவை கூட்டிக்கொண்டு வருவார்கள். 

அப்பா "தூங்கினா கால் ஆடும், அவ கால் ஆடுதா பாரு"ன்னு சொல்வார்கள்..நானும் உடனே விவரம் தெரியாம கால் ஆட்டிவிடுவேன்..உடனே சிரித்துக்கொண்டே எழுப்பி பால் கொடுத்துவிடுவார்கள்.

இது ரொம்ப நாள் புரியல..தப்பா கால் ஆட்டிட்டோம்..அதான் கண்டுபிடிசிட்டாங்கன்னு யோசித்து விதம், விதமா ஆட்டி பார்ப்பேன்..விவரமா ஆயிட்டேன் என்று வேறு நினைப்பு எனக்கு..இன்னிக்கு வரைக்கும் விவரம் வரல ஏன்னா..

பெரியவன்கிட்ட முயற்சித்தேன்..உடனே அவன் எழுந்து சயிண்டிபிக்கா பேச ஆரம்பிச்சிட்டான்..சின்னதுகிட்ட ஒரு தடவ முயற்சித்தேன்..உடனே தூங்கரப்ப இந்த அம்மா டிஸ்டர்ப் பண்றான்னு ஊரையே கூட்டிடான்..

வழக்கம் போல நான்..ஞே...

அப்பா -8

அப்பா -8

பருத்தி விளைச்சல் புதிது அப்போ..பருத்திப்புழுவை ஒழிக்க ரொம்ப கஷ்டப்படுவாங்க.. அப்பாவும் நிறைய முயற்சி செஞ்சுட்டு கடைசியா வீரியமிக்க ஒரு பூச்சி மருந்தை அடிச்சார்.

வீட்டில் எல்லா விஷயமும் சொல்லுவார். முக்கியமாக குழந்தைகளிடம் பகிருவார். பருத்திக்காயில் புழுவை ஒழித்ததில் கொஞ்சம் பெருமை.

பேச்சுவாக்கில் காயில் இருந்து புழு காட்டினால் அஞ்சு ரூபாய் ஒரு புழுக்கு கொடுக்கறேன் ..முடிஞ்சா தேடிப்பாருங்கனு சவாலா சொன்னார். நானும், கசினும் (என்றே நினைவு) புழுவை தேடி பயணத்தை தொடங்கினோம்.

ஒரு ஏக்கருக்கு மேலே சுத்தியாச்சு..பருத்தி செடிகள் உள்ளே புகுந்து புறப்பட்டு வந்தோம்..ஒரு புழு கூட இல்லை.அஞ்சு ரூபாய் கண் முன்னால..சரி வெளில புழு இல்ல..உள்ளே உடைச்சு பார்போமேன்னு ஒண்ணு. ஒண்ணா பருத்திக்காய்களை எடுத்து உடைக்க ஆரம்பிச்சிட்டேன்..நிறைய காய்கள் வேஸ்ட்..

ஒரு புழு கண்டுபிடிச்சி..பெருமையா அப்பாகிட்ட போய் நின்னேன்..அப்பா புழுவை பார்த்துட்டு உண்மையை சொல்லு இது காய் உடைச்சி எடுத்தியான்னு கேட்டார்..நானும் தலைகீழா அஞ்சு ரூபாய்க்காக பொய் சொல்லிப்பார்த்தேன்..ம்ஹூம்..பாச்சா பலிக்கல..

அஞ்சு ரூபாயை வாங்கினது தனி கதை..ஆனால் இன்னி வரைக்கும் வயலுக்கே போகாம அப்பா அந்த புழுவை பற்றி எப்படி கண்டுபிடிச்சார் என்பதுதான் ஆச்சரியம்..

விவசாயி.

அப்பா -9

அப்பா -9,

அப்பா விவசாயம் சார்ந்த தொழில்..நெல், உளுந்து, பயறு,எள், பருத்தி விவாசயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து மொத்த வியாபாரிகள் அல்லது பேக்டரிகளுக்கு அனுப்புவது பழக்கம்.

அப்பொழுது எல்லாம் வெறும் பேச்சுதான். போனில் பேசி முடிவு செஞ்சுடுவாங்க..அப்புறம் நேரே லோடு போய்விடும். ஒரு முறை பயங்கர ஏற்றத்தாழ்வு..குறைஞ்ச விலைக்கு பேசிட்டார்..திடீர்னு மார்க்கெட்டில் விலை அதிகரிச்சு போச்சு..விவாசயிகளுக்கு மார்கட் விலை கொடுத்தே ஆகணும். ஆனால் குறைந்த விலைக்கு விற்று ரொம்ப நஷ்டம்.

விலை வீழ்ச்சியின் பொழுது நஷ்டத்தை சமாளிக்க கொடவுனில் வைத்து விடும் வழக்கமும் உண்டு. அப்பொழுது பேசி அனுப்புவார்கள். ஒரு முறை ஸ்டாக் பேசி முடித்த ஒரே நாளில் விலை அதிகம் உயர்ந்துவிட்டது. இருப்பினும் பழைய விலைக்கே அப்பா பேசாம அனுபிட்டார். நான் கேட்டேன் ஏன்பா..கொஞ்சம் பேசி பாருங்க..விலை அதிகமா கொடுத்தா நல்லதுதானே அப்படின்னு..

அப்பா சொன்னது ..வியாபாரம் செஞ்சா கோடி ரூபாய் நஷ்டம் வந்தாலும் வாக்கு முக்கியம். வாக்கு தவறி பேர் போச்சுன்னா அதுதான் மிகப்பெரிய நஷ்டம். வாக்கு மட்டும் தவறவேக்கூடாது.
பணம் போகும் வரும்..வாக்கு முக்கியம்.

அப்பா வாக்கு தவறக்கூடாதுன்னு சொல்லிக்கொடுதார். நேற்று ஒரு நல்ல வாசிப்பாள நண்பருக்கு மொக்கை ஸ்டேடஸ் போடமாட்டேன்னு சொன்னேன். இன்னிக்கு வந்துடுச்சு..

அப்பா மன்னிப்பாராக..

அப்பா -10

அப்பா -10..

மிக சிறு வயதில் என் உறவினர்கள் சிலர் சேர்ந்துகொண்டு உன்னை தவிட்டுக்கு வாங்கிட்டோம் என்று கிண்டல் செய்வார்கள்.

எனக்கு அழுகையாக வரும்..எத்தனை தவிடுன்னு கேட்டதுக்கு மரக்கா தவிடுக்கே உன்னை கொடுத்துட்டாங்கன்னு சொல்ல..எனக்கு கனவுல கூட தங்கம் குவிச்சு வச்சது போல மரக்கால் அதில் நிரம்பிய தவிடு நினைவுக்கு வரும்.

அம்மாகிட்ட போய் கேட்டேன்..ஆமாம்னு அம்மாவையும் சொல்ல வச்சிட்டாங்க..அப்புறம் எதுக்கோ தலையில குட்டிட்டாங்க ,உடனே அழுதுகிட்டே இவங்க என் அம்மா இல்லையானு கேட்டுகிட்டு அப்பாகிட்ட போனேன்.

உடனே அப்பா பக்கத்துல உக்கார வச்சுக்கிட்டு.."ஆமாம்மா நீ இவங்களுக்கு பிறக்கல..ஆனா தவிட்டுக்கு எல்லாம் வாங்கல..நீ பெரிய பணக்கார வீட்டு பொண்ணு..உங்க அம்மா பெரிய பணக்காரி.. செருப்புக்கு மேட்சா இருக்கிற ஏரோப்ளேன்லதான் போவா..அத்தனை வசதி..நீ நல்ல பொண்ணா வளர இங்க விட்டுருக்கா"..ன்னு சொல்ல,

"ஆனா எனக்கு அப்பா நீதான்",அப்பாவை மட்டும் பெண்குழந்தைகள் விட்டுக்கொடுப்பதில்லை..

"அந்த அம்மா எப்ப வருவாங்க? ஏன் இன்னும் என்னை வந்து பார்க்கல"?

வருவாங்க..ரொம்ப பிசி..எப்போதும் பறந்துக்கிட்டே இருப்பாங்க..கூடிய சீக்கிரம் வந்து பார்ப்பாங்க..

ரொம்ப நாள் எங்கம்மா செருப்புக்கு மேட்சா ஏரோப்ளேன்ல போவாங்களாம்னு சொல்லிக்கிட்டு அலைஞ்சேன்.நினைவுல அம்மா பயங்கர ஸ்டைலா..கொஞ்சம் நடிகைகள் போல..பெரிய பங்களா, சொந்தமா ஏர்போர்ட் , விதம் விதமா, கலர் ,கலரா செருப்புகள்ன்னு ....ஒரு கெத்தா திரிவேன்.. அம்மாவை பற்றிய வித வித கற்பனைகள், உடைகள், வசதிகள்..மட்டுமே..பாசம் பற்றியெல்லாம் நினைவு இல்லை..

அம்மா திட்டினா நீ ஒன்னும் என் அம்மா இல்லை..எங்கம்மா யார்ன்னு தெரியுமான்னு சவுண்டு விடுவேன்..சில தோழி குழந்தைகள்கிட்ட சொல்லி இருந்ததாய் நினைவு.

தவிட்டுக்கு வாங்கினேன்னு கேலி பண்ணினதுக்கு பதிலடி கொடுத்து ஏரோப்ளேன் சத்தம் கேட்டா ஓடி போய் பார்ப்பேன்.

கற்பனை வளத்தை அப்பா எப்படி எல்லாம் தூண்டி, சில மறக்க முடியாத நினைவுகளை கொடுத்து இருக்கார்.

லவ் யூ அப்பா..

அப்பா-11

அப்பா-11..

நிகின் பாருடா ஆண்டி பொண்ணு முதல் மாத சம்பளத்துல எவ்ளோ வாங்கி கொடுத்து இருக்கா தெரியுமா ? 

நீ என்கிட்ட ரொம்ப எதிர்பார்க்காதம்மா ..நான் எனக்கே செலவு பண்ண மாட்டேன்..உனக்கு எப்படிம்மா பண்ணுவேன்?

டேய்..அம்மாடா..எனக்கு செய்யமாட்டியா..நான்னா எதா இருந்தாலும் முதல்ல உனக்குத்தான் செய்வேன்..

உங்கப்பா சொல்லி இருக்காங்கன்னு நீதானே சொன்ன..அதே பதில்தான்..

அப்பா சொன்னதை தெரியாம சொல்லிட்டேன்..அப்பாக்கிட்ட கேட்டேன் ஒரு தடவை..என்கிட்ட பாசமா இருக்கிற மாதிரி உங்கப்பாகிட்டையும் இருப்பியானு?..

அதுக்கு "ஆறு என்னிக்குமே முன்னாடிதான் பாயும்..திரும்பி பார்க்காது..தாத்தா என்கிட்டவும், நான் உன்கிட்ட, நீ உன் குழந்தைகள்கிட்ட அதிக பாசமா இருப்பதுதான் இயல்பு..அதனால என் குழந்தைகள்கிட்ட அதிக பாசமா இருப்பேன்னு".

இதை ஒரு தடவ லூஸ்டாக்ல இந்த தலைமுறை பையன்கிட்ட சொல்லிட்டேன்..இப்ப பல்பு வாங்கறதே வேலையா போச்சு..

அப்பா-12

அப்பா-12..

ஒரு முறை ஏதோ இறப்புக்கு போயிட்டு வந்து ஒரே சோகம்..அம்மாவும், அப்பாவும் புத்திர சோகம்..கொடுமைன்னு பேசிக்கிட்டு இருந்தாங்க..

அப்பாக்கிட்ட ஊஞ்சல ஆடிகிட்டே கதை கேக்கறது வழக்கம்..ஏம்பா புத்திர சோகம் அவ்ளோ கொடுமையாப்பா?

ஆமாம்..எந்த கஷ்டம் வந்தாலும் தாங்கிடலாம்..புத்திர சோகத்தை மட்டும் தாங்க முடியாது..ஒரு கதை சொல்றேன் கேளு..

ஒரு தடவை புத்தன்கிட்ட ஒருத்தன் ஆசிர்வாதம் பண்ணுங்க சாமின்னு கேட்டு இருக்கான்..

அதுக்கு புத்தன்,"முதல்ல உங்க தாத்தா சாகணும், அப்புறம் உங்கப்பா சாகணும், நீ சாகணும், அப்புறம் உன் புள்ளை சாகணும்..இதான் ஆசிர்வாதம்..உனக்கு மட்டுமல்ல, உன் குடும்பத்துக்குன்னே"....

அதுக்கு அவனுக்கு செம கோவம்..நீயெல்லாம் சாமியா..ஆசிர்வாதம் பண்ண சொன்னா சாபம் விடறன்னு கோவத்துல கத்தி இருக்கான்..

புத்தன் அமைதியா இந்த வரிசையை எந்த இடத்துலே வேணாலும் மாற்றி பாரு..அப்புறம் புரியும் கொடுமைன்னா என்னன்னு சொல்லி அறிவுக்கண்ணை திறந்து வைக்க அவனுக்கு புரிஞ்சது..

அப்புறம்தான் அதன் கொடுமைன்னா என்னனு புரிஞ்சது..அது நமக்கும் வந்துடுமோன்னு பயப்படற கட்டம் ஒரு முறை அப்பாக்கும், எனக்கும் வந்தது..

தொடரும்..

அப்பா-13

அப்பா-13. 

நான் நான் அஞ்சாப்பு, அக்கா ஒன்பதாப்பு ...அப்படி என்றே நினைவு...அந்த நாள் வரை விடுமுறை நாட்களில் வயலில் வேலை இருந்தால் அப்பாக்கு இருவரும் சாப்பாடு எடுத்துக்கொண்டு போவோம். 

வீட்டில் என்னை தவிர அனைவருக்கும் முடி மிக நீளமாய் இருக்கும்..எனக்கு சுருட்டை.. சாப்பாடு கொடுத்துவிட்டு போர்செட்டில் குளிப்பது வழக்கம்.

அழகான பச்சை கம்பளம்..ஓரமாய் போர்செட்..தண்ணீர் பீச்சி கொண்டு கொட்டும் போர் ரூம் உள்ளே எலெக்ட்ரிக் மோட்டர் வச்ச போர் தண்ணி குழாய். அவசரத்துக்கு அதிக தண்ணீர் வேண்டி வெளியே வைத்த டீசல் போர் செட். அது தள்ளிக்கொண்டு போகலாம். கருப்பா புகை வரும் அதில்.

இரண்டும் நீரை பாய்ச்சி கொண்டு இருக்கிறது. மிக வேகமாக..அப்பாக்கு உணவு கொடுத்துட்டு அக்காவும், நானும் போர் பாயும் இடத்தில் இறங்கி செம குளியல் போட்டுட்டு, போர் ரூமில் உடை மாற்றிவிட்டு வெளியே வந்தோம். கொஞ்ச நீள பதிவுதான் இது.

போர் ரூம் சுற்றி குழந்தை கால் வைக்கும் அளவுக்கு இடம்..அதில் நடப்பது எனக்கு பிடிக்கும். டீசல் போர் செட்டில் வெந்நீர் சின்ன குழாய் மூலம் வரும்.அது மிக வேடிக்கையாக இருக்கும். அக்கா நீள முடியை உலர்த்திக்கொண்டே போய் அப்பாக்கிட்ட போயிட்டு வரேன்னு சொல்லு..என்று சொல்ல..நான் விளையாட்டாக அந்த போர் ரூமை சுற்றி இருக்கும் விளிம்பில் சுவற்றை பல்லி போல பிடித்துக்கொண்டே போனேன். பத்து நிமிஷம் ஆச்சு போர் ரூமின் பின்பக்கம் வர..விளிம்பில் நடந்துக்கொண்டே இருக்கும் பொழுது அப்பா, அத்தான், ஆட்கள் என்னை நோக்கி கத்துவது காதில் விழுந்தது.

என்ன என்று என்னால் குதிக்க முடியவில்லை..அப்படியே பல்லி போல சுவற்றை ஒட்டிக்கொண்டு போவதற்குள் அத்தனை பேரும் ஓடிப்போனார்கள்..கிட்டக்க போய் பார்த்தால் போரிலிருந்து நீர் கொட்டும் குளம் ரத்தமாகி இருந்தது..அக்கா டீசல் போர் வீல் மேல் படுத்து இருந்தாள்.

எனக்கு ஒன்றுமே புரியவில்லை..நீரில் ஒரு பூபந்து போல தலைமுடியின் பந்து ரத்தத்தோடு மிதந்து சென்றது இன்று வரை கண் முன்னால். அப்பாக்கு ரத்தத்தை அதுவும் தன் பெண்ணின் ரத்தத்தை பார்த்தவுடன் ஆறடி உடம்பு , எதற்கும் கலங்காத,ஊரில் பிரச்சனை என்றால் ஒற்றை ஆளாக போய் நிற்கும் அப்பா, திருடனை நடுராத்திரியில் துரத்தி பிடிக்கும் வீரமுள்ள அப்பா, கண் கலங்கி மயக்கத்துடன் கீழே மடங்கி விழுந்ததை பார்த்தேன்.

உடனே அத்தான் பைக் எடுத்துக்கொண்டு பின்னாடி வேலையாளை ஏற்றி அக்காவை மடியில் போட்டுக்கொண்டு பக்கத்து ஊர் மருத்துவமனைக்கு சென்றார்கள். பயங்கரமாக கலங்கிவிட்டார் அப்பா. அதற்குள் ஊர் முழுக்க செய்தி பரவி அப்பாவை கூட்டிக்கொண்டு போக பைக் வந்துவிட்டது.

நான் வீட்டுக்கு போகிறேன்பா என்று சொல்லிவிட்டேன். அம்மாக்கிட்ட அப்புறம் சொல்லிக்கலாம் என்று சொல்லிவிட்டு கிளம்பினார்கள். அப்பொழுது அக்காவின் காது மடலின் ஒரு துண்டு விழுந்து இருந்ததை ஒரு கவரில் எடுத்துக்கொண்டு செல்லும்பொழுது அப்பா மிகவும் உடைந்து இருந்தார்.

அங்கு இருந்து கார் பிடித்து பக்கத்து டவுனுக்கு ஆபரேஷன் செய்ய கூடிக்கொண்டு போனார்கள். அதன் நடுவே அம்மாவை வீட்டில் வேலை செய்யும் பையன் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு மிதிக்க முடியாமல் மிதித்து கொண்டு வருகிறான். நான் மட்டும் தனியே வீட்டுக்கு செல்கிறேன்.

அக்கா நான் சென்றவுடன் தாகத்துக்கு வெந்நீர குடிக்கலாம் என்று அந்த டீசல் போர் மெஷின் அருகே குனிந்து இருக்கிறாள்...நீள முடி பறந்து சுற்றும் சக்கரத்தில் மாட்டி அவள் மயக்கம் போட்டு விழுந்து முடியின் அடர்த்தியினால் அவ்வளவு பெரிய போர் இன்ஜின் நின்று அதன் மேல அவள் படுத்து இருந்தாள். அவள் அன்று தப்பித்ததை இதை என்ன செயல் என்று சொல்வது? ..கடவுள் புண்ணியம் என்றுதான் அம்மா சொன்னார்கள்.

ஒரே நாள் வீடு தலைகீழாக மாறியது.அம்மா, அப்பா யாரும் வீட்டில் இல்லை. என்னை பாட்டி வீட்டில் விட்டதாக நினைவு..உடனே ஆபெரேஷன்,இருவது நாட்களுக்கு மேல் ஆஸ்பத்திரி வாசம், அந்த சமயத்தில் கண்ணாடி காட்டாமல் வைத்து இருந்தார்களாம்..பெற்றோரின் வேதனைகளை சம்பவமாக உணர்ந்த தருணம் அது..அக்காக்காக பல வேண்டுதல்கள்.பல இடங்கள் புனித பயணம்.

திருப்பதியில் முடி இறக்க வேண்டுதல் நிறைவேற்றும் பொருட்டு அக்காவின் முடி கொடுக்கப்பட்டது.. திடீர் என்று என் தோளை யாரோ ஆந்திராவாளா முடி இறக்கியவர் தொட்டார். என்ன புரியலியா என்று கேட்க..அது அப்பா..மீசை, தலைமுடி எதுவுமில்லாமல்..

ஏன்பா ,உனக்கு வேண்டுதல் இல்லையே..என்று கேட்க இந்த வயதில் என் பெண்ணுக்கு முடி இல்லை..அது எனக்கும் தேவை இல்ல..என்று சொன்னது அவரின் தியாகம், பாசம், அன்பு ஒரு குடும்பம் என்றால் குழந்தைகளிடம் எப்படி இருக்க வேண்டும் என்று உதாரணமாக திகழ்ந்ததை எப்படி மறக்க முடியும்.

அன்றில் இருந்து அக்காக்கு முடி வளரும் வரை எத்தனையோ தொப்பிகள்..எங்கு போனாலும் தேடி, தேடி வாங்குவார்..அவளுக்கு முடி இல்லாத வருத்தம் எந்த வயதிலும் வந்து விடக்கூடாது என்று கவனமாக இருப்பார். இங்கிலாந்து இளவரசி போல அக்காவும் அந்த தொப்பிகளோடு மிக ஸ்டைலகா இருப்பதை பார்த்து சின்ன பொறாமை வந்தது தனி கதை.

அந்த ஆஸ்ப்பதிரியில் பக்கத்து பெட் பெண்ணும் அடிபட்டு மாவுகட்டோடு இருந்தார். ஹை ஹீல்ஸ் வழுக்கிவிட்டதாம். அன்றில் இருந்து ஹை ஹீல்ஸ் எங்களை போட விடவில்லை.

ஒரு நாள் நினைவு கூறலின் பொழுது எனக்கு புத்திர சோகம் வந்துவிடக்கூடாது கடவுளே என்றுதான் நினைத்தேன் அந்த வேளையில் என்றார்....கண்கலங்கியபடி..

அப்பா-14

அப்பா-14..

எந்த ஹோட்டலிலும் உணவு நல்லா இல்லை என்றால் தயங்காமல் திருப்பி கொடுப்பேன்..வேறு உணவு கொடுக்காவிடில் பில் தர மாட்டேன்.

இது என்று இல்லை..எங்கும் ரொம்ப தயக்கமே இருந்தது இல்லை..எனக்கு இல்லாத ஒரே ப்ராப்ளம் ஸ்டார்ட்டிங் ப்ராபளம்தான்..

எங்கேர்ந்து வந்துச்சு என்றால்..சின்ன சின்ன சிறு வயது சம்பவங்கள் நம் கேரக்டரை தீர்மானிக்கும்.

திருப்பதிக்கு ரயிலில் பயணம். தம்பிக்கு பன்னிரண்டு வயது..தம்பிக்கு அரை டிக்கெட் வாங்கியாச்சு..டிக்கெட் செக் செய்யும் வேளையில் தம்பியின் பிறந்த வருடத்தில் குழப்பம்...

அப்பா பன்னிரண்டு முடியலன்னு சொல்ல, பதினொன்று வரைதான்னு TTR சொல்ல பயங்கர பிரச்சனை. ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி வாக்குவாதம்..அப்பா விட்டுக்கொடுக்கவே இல்லை..கடைசியில் பைன் கட்டாமல் திருமலைக்கு சென்றோம்.

திரும்பி வரும்பொழுது கன்பர்ம் ஆகவில்லை. ஆனால் அதே TTR..அப்பாவை அடையாளம் கண்டு..நீங்கள் சொன்னது சரிதான்..எங்கள் ரயில்வேயில் சரியாக குறிப்பிடப்படவில்லை..இது குறித்து மீட்டிங் எல்லாம் வைத்தோம். இனி பன்னிரண்டு வயது ஆரம்பிக்கும் தினம் வரைதான் அரை-டிக்கெட் என்று அறிவிப்பில் தெளிவாக குறிப்பிடுகிறோம். உங்களால் நன்மை என்று பாராட்டிவிட்டு..டிக்கெட் சிலதை கன்பர்ம் செய்துவிட்டு சென்றார்.

அப்பா சண்டை போடும்பொழுது அனைவருக்கும் கோவம்..பைன் கட்டிவிட்டு வரலாமே..ஏன் அலைக்கழிப்பு என்று..ஆனால் அந்த போராட்ட குணத்தை..சரி என்றால் துணிந்து நிற்கும் குணத்தை எங்களுக்கு சொல்லாமல் செய்து காட்டி இருக்கிறார்.

நன்றி அப்பா.

அப்பா-15

அப்பா-15..

கும்பகோணத்தில் ஒரு விசேஷம்... அக்கா, அம்மா, அப்பா மூவரும் போய் இருக்காங்க. அம்மாக்கும், அப்பாக்கும் பயங்கர வாக்குவாதம். உனக்கு உங்கப்பா(ன்) புத்தின்னு திட்டிட்டார் அம்மாவை..அப்படிதான் நினைவு..பொது இடத்தில....இதுல தாத்தாவும், அப்பாவும் பயங்கர க்ளோஸ் ப்ரெண்ட்ஸ்..எந்த முக்கிய முடிவும் இருவரும் கலந்து ஆலோசித்தே செய்வார்கள். மாமனார் , மருமகன் உறவுக்கு உதாரணம்.

அப்ப அக்கா கொஞ்சம் விவரம் தெரிய ஆரம்பிச்ச வயசு..அவளுக்கு பயங்கர கோவம்..நீயும் அந்த தாத்தாவை திட்டுன்னு அம்மாக்கு
சொல்லிக்கொடுத்து இருக்கா..பெண்கள் மாமனாரை எதுவும் சொல்லாத காலம். அப்பாகிட்டவும் பேசல..

அப்பாக்கு நாம பாசமா இருக்கிற பொண்ணு நம்மை இப்படி சொல்லிட்டாளேன்னு வருத்தம். ரெண்டு பேரும் பத்து நாள் பேசிக்கல..

ஒரு நாள் அம்மாக்கிட்ட என் பொண்ணை நினைச்சு பெருமைப்படறேன். நாளைக்கு போற இடத்துல என்னை விட்டுக்கொடுக்கமாட்டான்னு சொல்லிட்டு..இனிமே அப்படி பேசலேன்னு சொல்லி அக்காவோட சேர்ந்துட்டார்..

அதுக்கு அப்புறம் அம்மாவை அப்படி திட்டுவதை விட்டுட்டார் ..ஆனால் அப்பாவின் பாசம் பொண்ணு என்ன சொன்னாலும் அதை பாசிட்டிவாக எடுத்துக்கொள்ள வைத்தது.

பெண் குழந்தைகள் பெற்ற அம்மாக்களும் கொடுத்து வைத்தவர்கள்.

அப்பா -16

அப்பா-16..

உங்கள் குழந்தையை நம்பி எந்த வயதில் பெரிய வேலையை எப்பொழுது ஒப்படைக்க ஆரம்பித்தீர்கள் ? 

இந்த கேள்வியை கேட்டால் பெரும்பாலான பதில் பதினாறு முதல் முப்பது வயது வரை கூட வரும்.

அக்கா ஆறாவது, நான் இரண்டாவது இருவரையும் கூப்பிட்டு... கற்பனை செய்துக்கொள்ளுங்கள் எண்பதின் ஆரம்பத்தில்.. அவசரமாக ஒருவரிடம் பத்தாயிரம் கொடுக்க வேண்டி இருந்தது. மாயுரம் பக்கத்தில் ஒரு கிராமத்தில் பெரிய ரைஸ் மில்..அங்கு வேலை செய்பவரிடம் ஒப்படைக்க வேண்டும்.

அந்த ஊருக்கு முன்பின் இருவரும் சென்றது இல்லை..ஆனாலும் இருவருக்கும் தன்னம்பிக்கை அதிகம்..பஸ் ஏற்றி விடும் வழக்கம் எல்லாம் எங்கள் வீட்டில் என்றும் கிடையாது. இன்று மகனை பத்திரமாக பள்ளி கூட பஸ்ஸில் ஏற்றி, இறக்கும் சமயத்தில் சுதந்திரமே இல்லையே இவர்களுக்கு என்று நினைத்து கொள்வேன்.

சித்தர்காடு என்ற ஊர்...பத்தாயிரம் ரூபாய் உள்ள பை..பத்திரமாக அக்கா வைத்து இருந்தாள். நானும் அதை கவனித்துக்கொண்டே இருந்தேன். இருவருக்கும் பெரிய மனுஷிகள் போன்ற நினைப்பு. பத்திரமாக கொண்டு சேர்க்க வேண்டிய கவலையும். இன்று கிட்டத்தட்ட ஒரு லட்சத்துக்கு நிகரான பணம் அது...

அங்கு பஸ் இறங்கி ஒரு கடைக்கு அருகில் நிற்க சொல்லி உத்தரவு. மில்லில் இருந்து மேனேஜர் வந்து பணத்தை வாங்கி கொள்வார்.

நேரமாகியது..மில்லில் இருந்து அவர் வரவில்லை..நாங்கள் உக்கார்ந்து இருந்தது ஒரு கிளினிக் வாசலில் .அங்கு ஒரு போர்ட்..

தலைவலி- ஒரு ரூபாய்..
ஜுரம்-இரண்டு ரூபாய்..
வயிற்றுபோக்கு-மூன்று ரூபாய்.
ஊசி -இரண்டு ரூபாய்..

இதை பார்த்துவிட்டு நானும் அக்காவும், விழுந்து, விழுந்து சிரிச்சோம்..அரை மணி கழித்து அவர் வந்து பணத்தை வாங்கி கொண்டு எங்களை தட்டிகொடுத்து சமத்து குழந்தைகள் என்று சொன்னது இன்றும் மறக்கவில்லை..

வாழ்கையில் அந்த அரை மணி நேரமும்..அக்காவும், நானும் பொறுப்புடன் உக்கார்ந்து இருந்ததும், பெருமையாகஉணர்ந்ததும் அப்பா கொடுத்த பெரிய பரிசு.

அப்பாக்கு எங்களை பற்றியும், எங்களுக்கு அப்பாவை பற்றியும் பெருமை.

மனதார சந்தோஷப்பட வேண்டுமா?..மனதிற்குள் பெருமை பட வேண்டுமா? உங்கள் குழந்தைகளை நம்புங்கள்..இது போன்று இல்லாவிடினும் ஓரளவுக்காவது பொறுப்புகளை கொடுங்கள்..பிறகு உணருங்கள்..அவர்களின் தன்னம்பிக்கையையும், பொறுப்பையும்..

எந்த பொருளையும், பணத்தையும் விட பெரிய பரிசு கிடைக்கும்.

அப்பா -17

அப்பா -17,

ஊட்டி..பேரை சொன்னாலே நெஞ்சம் குளிரும். அங்கு அக்கா திருமணமாகி சென்றாள். எங்கள் ஊரில் இருந்து செல்ல பஸ் அல்லது கார்தான். அப்பாக்கு நினைத்தால் பெண்ணை பார்த்துவிட வேண்டும். என்னையும் அழைத்துக்கொண்டு ஊட்டிக்கு கிளம்பினோம்.

அந்த முறை டிசம்பர் குளிர். சமவெளி மனிதர்களுக்கு ஊட்டி டிசம்பர் தாக்குப்பிடிப்பது கஷ்டம்..அப்பாக்கு இருக்கமுடியவில்லை..இரு நாட்களுக்குள் கிளம்பிட்டோம்.

திரும்பி கோவையில் இருந்து ஊருக்கு இரவுப்பயணம். அந்த காலத்து டீலக்ஸ் பஸ். வழக்கம்போல ஜன்னல் ஓரம் நான். ஜன்னல் ஓர பயணங்கள் பயணத்தை சிறக்க செய்யும் என்பது இன்று வரை நம்பிக்கை. பேருந்துக்கு பின்னால் பாய்ந்து ஓடும மரங்கள், மலைகள், கால்நடைகள், கிராமங்கள் அழகு என்றால் கீழே குனிந்து பார்ப்பேன்..பேருந்து நிற்பது போலவும் தார் பூசிய கறுப்பு ரோடு கன்வேயர் பெல்ட் போல ஓடுவது போல ஒரு தோற்றம் கொடுக்கும்..அதை மணிக்கணக்கில் ரசிப்பேன்..கற்பனைகளில் பொருத்திக்கொள்வேன்.

அப்பாவும் ,நானும்..நடுஇரவில் ஒரு குறுகுறுப்பு..பெண்களுக்கு உள்ளுணர்வு அதிகம்..ஒரு ஆணின் பார்வை, நெருக்கம், கை ஸ்பரிசம் எல்லாவற்றிலும் அன்பா, காமமா என்று எளிதாக பிரித்து விட முடியும். பார்வையே சரியில்லை என்று சொல்வது இப்படிதான்..

முதுகுக்கு பின்னால் பூச்சி ஊர்வது போல உணர்வு..அப்பா நல்ல தூக்கத்தில்..எழுப்ப மனம் வரவில்லை..அப்படி சீட்டின் இடுக்கில் நான்கு விரல்கள் நுழைந்தது..சீட்டில் நிம்மதியாக சாய்ந்து உக்கார முடியவில்லை. பெண்கள் பெரும்பாலும் இவை சகஜம் என்ற மனப்போக்கில் சீட்டின் நுனியில் அமர்வது, சீட்டை மாற்றி அமர்வது என்று அட்ஜஸ்ட் செய்து கொள்வார்கள். அடுத்து சீட்டின் கீழே விரல்கள்..அரை மணி நேரம் முடியவில்லை..சீட்டின் நுனியிலையே அமர்ந்து இருந்தேன்..மிகச்சிறிய வயது..

அடுத்து கால் உள்ளே நுழைந்தது..அருவருப்பின் உச்சம் சிறு வயதில் அனுபவித்தது..இன்று நினைத்தாலும் ஒரு வாந்தி போன்ற அருவருப்பு..வந்ததே கோவம்..எழுந்து பார்த்தால் நாற்பது வயது மனிதன்..அப்பா போல இருந்தான்..தூங்குவது போல பாவ்லா செய்தான்..சரி வம்புக்கு வரமாட்டான் என்று உக்கார்ந்தால் திரும்ப ஆரம்பித்தான்..கோவம் தாங்கவில்லை..பஸ் முழுக்க அனைவரும் தூக்கம்..அப்படியே ரத்தம் சூடாகி தலைக்கு சென்றது..செருப்பை எடுத்தேன்..பொளிச்..பொளிச்.பொளிச்...செருப்பால் அடித்தும் தூங்குவது போலவே பாவ்லா செய்தான்.

கோவம் தாங்கவில்லை...உடம்பு கோவத்தில் நடுங்கியது..பேருந்தை நிப்பாட்ட சொல்லி கத்தினேன்..அனைவரும் எழுந்தார்கள்..அப்பாக்கு ஒண்ணுமே புரியவில்லை..அனைவரும் நைய புடைத்தார்கள்..நான் பிடிவாதம் பிடித்து போலிஸ் ஸ்டேஷனுக்கு வண்டியை அனுப்ப வேண்டும் என்று அதிக பிடிவாதம் பிடித்தேன். அனைவரும் ஒப்புக்கொண்டு பக்கத்து ஊர் போலிஸ் ஸ்டேஷன் நோக்கி பஸ் சென்றது.

அனைவரும் இறங்கினர். நானும் கம்ப்ளயின்ட் கொடுக்க எழுந்தேன்..அப்பா என்னை அமர்த்திவிட்டு கூப்பிடறப்ப வந்தா போதும் என்று இறங்கினார்கள்..எதுவும் பேசவில்லை.. அனைவரும் ஏறி பஸ் கிளம்ப பார்த்தது..எனக்கு கோவம் என்னப்பா FIR பதிய என் கையெழுத்து வேண்டுமே என்று கேட்டேன்..அதற்கு வேறு கேஸில் உள்ளே தள்ளிட்டோம் என்று சமாதானம் செய்தார்கள். பெரும்பாலும் பெண்களை போலிஸ் ஸ்டேஷன் படியை மிதிக்க விடாத காலம்...

எல்லாம் முடிந்து தூங்க போகலாம் என்று நினைக்கும் வேளையில் முதல் வார்த்தை அப்பா சொன்னார்கள்..ஏம்மா கையால தடவ வந்தான் என்று வெளியில் சொன்ன..செயின் அறுக்க வந்தான்னு சொல்லி இருக்கலாம் இல்லையா என்று..

அப்பாக்கள் என்றுமே பெண் குழந்தைகளின் பெயரை காப்பாற்றத்தான் நினைப்பார்கள். அதுக்கு துணிச்சலை ஊட்டிய என் அப்பாவும் விதிவிலக்கல்ல..

அப்பா-18

அப்பா-18,

அப்பாவின் குறும்புகள் அதிகம்..அந்த காலகட்டத்தின் ஊடாக நாம் பயணிக்க ஏதுவாக அப்பா கூறும் குறும்புக்கதைகள் சுவாரசியமானவை..

குழந்தையாக இருக்கும்பொழுது ஆறில் குளிக்க ஆசை..அப்பாக்கு அவரின் அம்மா சிறு வயதில் இறந்துவிட்டார். அதனால் பெரியப்பாட்டிக்கு மிக செல்லம். அவருக்கு, தாத்தாக்கும் ஆற்றில் போய் தனியாக குளிப்பது எல்லாம் பிடிக்காது.

அப்பாக்கோ ஊர் பசங்களுடன் பள்ளி முடிந்தவுடன் ஆற்றில் குளிக்கஆசை. ஆனால் தாத்தாக்கு தெரியக்கூடாது. தோல் உறிஞ்சுடும் அப்பல்லாம் தப்புக்கு...ஸ்கூல்ல தப்பு செஞ்சா ஸ்கேல் அடி, வீட்டுல பிரம்பாலன்னு பசங்களை அடிக்க யோசிக்கவே மாட்டாங்க. அடியாத மாடு படியாதுன்னு கூட இருக்கிறவங்களும் இன்னும் போட்டுக்கொடுப்பாங்க.

இப்ப என் பையனை லேசா அடிச்சா அவங்கப்பா என்னையவே அடிக்க வந்துடுவார்..பாட்டியோ என்னை கொடுமைக்காரி போல பார்ப்பாங்க..அதை விட மோசம் நான்.. அவன் அழுதா ஸாரி சொல்லிட்டு நானும் அழுதுடுவேன்..அடிதடின்னா அண்ணன், தம்பிகளுக்குள்ள மட்டும்தான் இப்ப..

பள்ளி விட்டு வந்தவுடன்..உடைகளை களைந்துவிட்டு மதகில் இருந்து குதித்து இந்த பக்கத்தில் இருந்து அந்த பக்கத்துக்கு நீச்சல் அடிப்பார்கள். ஆற்றில் நீச்சல் போட்டி, இக்கரையில் இருந்து அக்கரைக்கு போறது, உள்நீச்சல்ன்னு செமயா ஆடுவாங்க.பிறகு உடையை போட்டுகொண்டு வீட்டுக்கு போவாராம். தாத்தா தலையை தொட்டு ஈரத்தை வைத்து கண்டுபிடித்து விடுவாராம். உடனே பனிஷ்மென்ட்தான்.

அப்பாகிட்ட கேட்டேன் என்னப்பா செய்வார்ன்னு ..உனக்கு தெரியாது..இப்ப மாதிரி எங்கப்பா செல்லம கொடுக்க மாட்டார்..தலைகீழா கட்டிவிட்டுட்டு கீழே மிளகாய் போட்டு எரிப்பார்..கண்ணு பயங்கரமா எரியும்..இல்லாட்டி பிரம்பு, சாட்டைதான் தோல் உறிஞ்சுடும்னு சொன்னார். கண்ணை இறுக்க மூடி கற்பனை செஞ்சு பார்த்தேன்..பயந்துட்டேன்..அப்பாவை கட்டிக்கொண்டேன். நாம எவ்ளோ செல்லமா இருக்கோம்..அம்மா என்னிக்கோ குட்டுவது, அப்பா கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் அவ்வளோதான் நமக்கு..ஆனா அப்பா பாவம்னு தோணிச்சு.தாத்தா மேல கொஞ்சம் கோவமா வந்துச்சு..

இந்த கதையை பெரிய பையன்கிட்ட சொன்னேன். விழுந்து, விழுந்து சிரிக்கிறான். அம்மா ஜட்டி ஈரம் ஆகாமா எப்படி குளிக்க முடியும்? முகத்தை பார்த்தாலே போதும்..அது எதுக்கு தலையை தொட்டு பார்த்து கண்டுபிடிக்கனும்..எப்படி தலைகீழா தொங்கவிட்டார்ன்னு கேட்டியான்னு கேட்டான்.

இப்படி எல்லாம் கேக்க தெரிஞ்சா நாம ஏன் இப்படி இருக்கோம்? அப்பா சொன்னதையும் நம்பறோம்..பசங்க சொல்றதையும் நம்பறோம்..

வேறன்ன செய்யறது நம்பிக்கைதானே வாழ்கை......

அப்பா -19

அப்பா -19 

அடுத்து,அடுத்து.. உருகி,உருகி அப்பா பத்தி எழுதினா அப்பாவே வந்து ரொம்ப பீல் பண்ணாத,என்னை விட்டுடு, வலிக்குதுன்னு, அவ்வ்வ்வ்வ்வ்வ்...ன்னு அழுவார்..அதுக்காக அவர் செய்த ஜாலி குறும்புகள்.

அப்பா என்ஜினியரிங் படிக்கும் பொழுது ஹாஸ்டலில் இருந்தார். எப்பவும் ஹாஸ்டல் லைப்ல ஷேரிங் மற்றும் கேரிங் எல்லாம் பக்காவா இருக்கணும். அது இல்லாத பசங்களை ஒதுக்கி வச்சுடுவாங்க..அப்பா சொல்வது பதினாறு வயது வரைதான் வீட்டில் இருக்கணும் அப்புறம் ஹாஸ்டல் லைப் கண்டிப்பா வேணும்.அங்க போய் பலதரப்பட்ட பழக்கங்கள், மனிதர்கள் பார்த்து நிறைய கத்துக்கணும். அது ரொம்ப முக்கியம் பிறகான வாழ்க்கைக்கு என்று கூறுவார். அது போலவே எங்களையும் வளர்த்தார். அது மிக முக்கியம் என்று பல சமயங்களில் உணர்ந்து இருக்கேன்.

இவங்க ரூம் மேட் ஒரு பையன் பாவம்..எதுவும் தெரியாது. எதுவும் ஷேர் செய்வதில்லை. ஏதாவது வீட்டில் கொடுத்தால் ஒளித்து வைத்து சாபிடுவானாம். அவருக்கும் இப்ப அப்பா வயசு..வசதிக்காக இப்ப பையன் என்றே சொல்லுகிறேன். எல்லா பொருட்களையும் ஒளித்து வைத்து கொள்ளும் வழக்கம் இருந்து இருக்கு..எதையும் ஷேர் செய்வது இல்லை..

இது அதிக நாட்களாக இந்த பசங்களுக்கு கடுப்பாக இருந்து இருக்கு.இவர்கள் பொது பேஸ்ட், சோப்பு கூட பொதுவில் வைக்கும் பொதுவுடமை கொள்கைவாதிகள்..தனிவுடமையை கண்டால் கோவம்தான் வரும்..அவசரத்துக்கு பேஸ்ட் கேட்டு இருக்காங்க..அப்பா காலத்தை பொருத்தவரை பல்பொடி டு பேஸ்ட் காலமாற்றம் அடைந்து கொண்டிருந்த நேரம்..பேஸ்ட் எல்லாம் முக்கியமான பொருளாக கருதப்பட்ட காலம். (இப்ப இம்போர்டட் காஸ்ட்லி perfume போலன்னு வச்சுக்கலாம் ) அவன் பேஸ்ட் காலி என்று சொல்லி இருக்கான்.

அவன் போனப்புறம் அவன் பையை தோண்டி பார்த்தால் புத்தம்புதிய பெரிய பேஸ்ட் இருக்கு.இத்தனை நாள் கடுப்பு..காலையில் பேஸ்ட் இல்லாத கோவம் எல்லாம் சேர்ந்து பேஸ்ட் எடுத்து ரூம் முழுக்க கோலம் போட்டு வச்சு இருக்காங்க..போட்டுட்டு சத்தம போடாம கிளம்பியாச்சு.

உள்ளே வந்து பார்த்தா இவன் பேஸ்ட் காணும்..ரூம் முழுக்க பேஸ்ட் கோலம். பசங்களை கோவமா கூப்பிட்டு இருக்கான். டேய் ஏண்டா என் பேஸ்ட் ஐ எடுத்து கோலம் போட்டிங்கன்னு..

டேய்..என்னடா சொல்ற..உன்கிட்டதான் பேஸ்ட் இல்லையே..நாங்களே ஒரு பட்டாணி அளவு பேஸ்ட் இல்லாம கஷ்டப்பட்டோம்..யாருடா நம் ரூமை அசிங்கம் பண்ணி வச்சது..அப்படின்னு இவர்களும் சேர்ந்துகொள்ள..அவன் அவன் கொஞ்சம் யோசித்து திருந்த ஆரம்பித்தான்..

சரிப்பா அப்புறம் ஷேரிங் செஞ்சானான்னு கேட்டேன்..ஆமாம்..ஏண்டா திருந்தினான்ன்னு ஆயிடுச்சு..சட்டை, பேன்ட்ன்னு எடுத்து போட ஆரம்பிச்சிட்டான்.கடசில உள்ளாடைகள் கூட விட்டு வைக்கல..நிலைமை மோசமா போச்சுன்னு சொன்னார்..

இங்க அப்பா என்ன சொல்ல வந்தார்? நான் என்ன கத்துகிட்டேன்?.. ..இந்த கதையின் கருத்து என்னனு யாராவது கேட்டா..கெட்ட கோபம் வந்துடும்..ஆமா...

ஏன்னா..கதைக்கு கால் கிடையாது..

அப்பா -20

அப்பா-20.. கொஞ்சம் பெரியயயயயயய பதிவு.

இரண்டு நாள் டென்ஷன்ல அப்பா கொஞ்சம் ஒதுங்கி விட்டார்.விடுவோமா பல்லில் ஒட்டி இருக்கும் முந்தாநாள் பாக்கு போல துழாவி, துழாவி மூளையின் மூலையில் உக்கார்ந்து இருக்கும் நினைவுகளை தோண்டி எடுத்து எழுதிவிட்டுதானே மறுவேலை. அப்பாவே வந்து போதும்மா, போதும்னு ஆவி அமுதா வழியா வந்து சொல்ற வரை விடப்போறது இல்லை.

அக்கா திருமணமாகி நாலுமாதம் வயிற்றில் குழந்தையுடன். ஊட்டியில் இருந்தார்கள். வெளியே பிக்னிக் செல்வதாய் பிளான்.
அந்த முறை அக்காவை அனுப்ப மாமாக்கு கொஞ்சம் யோசனை..ஆனால் அக்காவை விட்டுட்டு நாங்கள் மைசூர் போக விருப்பம் இல்லை. அப்புறம் முடிவு செஞ்சு எல்லாரும் போகலாம்னு வேனில் கிளம்பிட்டோம். மைசூர் போய் எல்லாம் சுத்தி பார்த்தவுடன் பெங்களூர் போகனும்னு அப்பாகிட்ட சொன்னோம்.எப்போதும் உற்சாகமா கிளம்பற அப்பா அன்னிக்கு அரை மனசா போகலாம்னு சொன்னார். ஜாலியா கிளம்பிட்டோம்.

பெங்களூரு விடிகாலை போய் சேர்ந்தோம் என நினைவு..எல்லைக்கு வந்தா ஊரே வெறிச்சோடி இருக்கு..கொலை வெறியோடு கும்பல்கள் அலைந்து கொண்டு இருக்கின்றன..தமிழ்நாடு ரிஜிஸ்ட்ரேஷன் வண்டிகள் கொளுத்தப்படுகின்றன. செல்போன்கள் இல்லாத காலம். என்ன ஆகியது என்று கேட்டால் கண்ணாடியை தட்டி ராஜீவ் காந்தியை சுட்டு கொன்னுட்டாங்க..சென்னைக்கு பக்கத்துல..எங்கயோ..(அப்பொழுது ஸ்ரீ பெரும்புதூருக்கும் சென்னைக்கும் சம்பந்தம் இல்லை..) உடனே தமிழ்நாட்டை நோக்கி கிளம்புங்க..ஜாக்கிரதை என்று சொல்லி பரபரப்பு ஆக்கினார்கள்.

வண்டியில் குழந்தைகள், நாலு மாதம் குழந்தையை சுமக்கும் குழந்தை..என்னதான் நம் குடும்பம் என்றாலும் மாமாக்கும் பதில் சொல்லும் பொறுப்பு..ஊரில் அனைவரையும் கொண்டு சேர்க்க வேண்டிய பயம் எல்லாம் சேர்ந்து கொண்டது. அப்பாவிடம் உள்ள நல்ல குணம் எதற்கும் பதறாமல் யோசிக்க ஆரம்பிப்பார்.. கோவமாக இருந்தாலும், டென்ஷனாக இருந்தாலும் செயலில் பதற்றம் இருக்காது.

வண்டி மைசூர் நோக்கி சென்றது..உடனே அப்பா கறுப்பு துணிகள் கேட்டார்..ஜாக்கெட், என் துப்பட்டா எல்லாம் இருந்தது. துப்பட்டாவை எடுத்து முன்னாடி கட்டி ஓரளவுக்கு ரிஜிஸ்ட்ரேஷன் நம்பரை மறைத்தார்..அவ்வபொழுது கூட்டம் தென்படும் இடங்களில் என்னை கறுப்பு துணியை ஆட்டிக்கொண்டே வர சொன்னார். கறுப்பு துணி இருக்கும் வண்டிகள் மீட்டிங் அல்லது அஞ்சலி செலுத்த போவதால் அதற்கு மட்டும் அனுமதி.

வழியே உணவு என்று எதுவுமே இல்லை..ஒரு பெட்டிகடையில் பிஸ்கட் கள் கிடைத்தன..காலை உணவுக்கு வழி கிடைத்தது. ஊட்டியோ காங்கிரஸ் கோட்டை..கொந்தளித்து கொண்டு இருந்தது..பல உயிர்கள், ஆம்புலன்ஸ்கள், பிரசவ அவசரங்கள் பற்றி யாருக்கும் கவலை இல்லை. மறியல், மறியல் மட்டுமே.. பால் இல்லை..ஒரு கிராமத்துக்கு புகுந்து மாடு கறந்து காய்ச்சி அப்பா கொடுத்தது இன்னும் மறக்க முடியவில்லை. வேனில் எப்பொழுதும் ஸ்டவ் எடுத்துக்கொண்டு போகும் வழக்கம் உண்டு.

வழியில் நாகப்பழம் தூரத்தில் பொறுக்குவதை பார்த்து வண்டியை நிறுத்தி அனுமதி கேட்டு அனைவரையும் வயிறு நிரம்ப நாகபழத்தை உண்ண செய்தார்.. எல்லா மெயின் ரோடுகளும் மறியலில் இருந்தன. ஒவ்வொரு கிராமமாக புகுந்து தமிழ்நாட்டு எல்லையை தொட்டால் ஊட்டி சாலை முழுக்க மரத்தை வெட்டி போட்டு இருந்தார்கள். படுபயங்கரமான பயணம். ஒத்தை எஸ்டேட் ரோடுகளில் புகுந்து, புகுந்து சென்றோம்..கிடு கிடு பள்ளம்..இதில் எதிர் பக்கம் வண்டி வந்து ரிவர்ஸ் வேற..இறங்கிடுவோம் என்று நினைக்கும் அளவுக்கு பட படப்பு..இறங்கி தங்கினால் நிலைமை சரியாக கியாரண்டி இல்லை..உணவும் இல்லை..போய் ஆக வேண்டிய கட்டாயம். எப்படியோ வந்து சேர்ந்தோம்.

அப்பா அக்காவை வீட்டில் விட்டுவிட்டு கலங்கி விட்டார்கள். மிக பெரிய ரிஸ்க் என்று சொல்லிக்கொண்டே இருந்தார்கள். சின்ன வயசு ஆதலால் எனக்கு சாகச பயணம் சென்றது போல இருந்தது..இப்ப நினைத்து பார்த்தால் அப்பாவின் பொறுப்பும், ரிஸ்க் ம் நடுக்கத்தை தருகிறது.

ராஜீவ் காந்தி கொலை பற்றிய செய்திகள் வரும் நேரங்களில் பெட்ரோல் கேன்களுடன் அலைந்தவ்ர்களும், நாங்கள் உயிர் பிழைத்து ஊருக்கு வந்து சேர்ந்ததும்தான் நினைவுக்கு வருகிறது..நாங்கள் தப்பினோம் அப்பாவால்..எத்தனை பேர் எங்கெங்கோ..ஒரு உயிருக்காக..

வாழ்க இந்தியா..வாழ்க மறியல்கள்..