Monday, May 5, 2014

சென்னையும், நானும் 1..

ஒரு நான்கு நாட்கள் நாற்பது நாட்களுக்கான அனுபவங்களை ஒளித்து வைத்துகொண்டால் எப்படி இருக்கும்? ..மணி நேரங்கள் நிமிஷங்களாக பிரிக்கப்பட்டு ஓடிக்கொண்டு இருந்தன..ஊருக்கு வந்து அலுப்பாக தூங்கினால் போதும் என்பதை விட அனுபவங்களை வரிக்க நான்கு மணிக்கு எழுந்து எழுத சொல்கிறது மனது..

எழுத, பகிர ஆரம்பித்து விட்டால் ஏதோ ஒரு வடிவில் எழுதிக்கொண்டே இருக்க வேண்டும், இல்லாவிட்டால் ஏதோ இழந்தது போல தோன்ற ஆரம்பித்து விடுகிறது..இதற்கு பேஸ்புக் ஸ்டேடஸ்களும் விதிவிலக்கல்ல..சொல்ல முடியாது..எங்கோ பகிரப்படுவது நம் மனதை ஒரு நிமிடம் உலுக்கிவிட்டு செல்வது போல இதுவும் எங்கோ ஒரு மனதை தொடலாம் அல்லது  ஒதுங்கி போக செய்யலாம்.  புகழ்பெற்ற எழுத்தர்கள் எழுதிய புத்தகங்கள் வாசிக்கப்படாமல் என் புத்தக அலமாரியில் இருக்கும்பொழுது இங்கு பகிர(எழுத) வந்திருப்பது சரியா என்றும் தோன்றுகிறது.

 அடியில் நாய் படுத்திருக்கும் பெஞ்சை கவனமாக விலக்கிவிட்டு நெரிசலுடன் இருந்த பிளாட்பாரம் பெஞ்சை பகிர்ந்துகொண்டு வழக்கம் போல பேஸ்புக் லைக்குகள் வாரி வழங்கி கொண்டு இருந்தேன்..முன்பெல்லாம் நிறைய புத்தகங்கள் இல்லாமல் எந்த பிராயணமும் நடைபெறாது..எங்கும் கையில் பத்திரிக்கையோ , புத்தகமோ கைவசம் இருக்கும்..எந்த நேரத்தில் மாறியதோ இப்பொழுது வாங்குவதில்லை..வாங்கினாலும் புரட்டிவிட்டு செல்போனை நாடுகிறது மனம்..நல்ல எழுத்துகளை விட அறிமுகமான நண்பர்களின் பதிவுகள் அதிகம் ஈர்க்கிறது..வாசிப்பானுபவம் எப்பொழுதாவது ப்ளாக் ஷேர் செய்யப்படும் பதிவுகளிலும், சிலரின் கவிதைகளிலும் கிட்டிவிடுவதால் அதைக்கண்டு மனம் திருப்தி அடைந்து விடுகிறது.

ஒரு மணி நேர ரயில் தாமதம்..இரவு தூக்கம் போச்சே என்ற கவலையில் பயணிகள். அடுத்த ரயிலுக்காக காத்திருக்கும் அறிமுகமான தம்பதியருடன் குசலம் விசாரித்துவிட்டு வாட்ஸ் அப் அரட்டை தொடர்ந்து கொண்டு இருந்தது. ப்ளாக் போய் பேஸ்புக் வந்து பேஸ்புக் போய் வாட்ஸ் அப் வந்து வெறும் அரட்டையில் பொழுது போய் விடும் போல..இரவு ரயிலில் பர்த் ல் படுத்துக்கொண்டு நிறைய பயணிகள் யாரோ யாரிடுமோ வாட்ஸ் அப் ல் கதைத்து கொண்டு வருவது கண் கொள்ளா காட்சி.பக்கத்தில் உள்ள மனிதர்களை தவற விட்டாலும் எங்கோ உள்ள மனிதர்களிடம் தொடர்பு கொண்டு இருப்பது..மனிதர்கள் மனித மனங்களை அன்புக்காக தேடி அலைந்துக்கொண்டே இருப்பதை நிரூபிக்கிறது.

காலையில் வழக்கம் போல தாமதம் ஆனதை சபிக்காமல் தூக்கம் தொலையாமல் வந்ததுக்கு சந்தோஷப்பட்டுகொண்டே நடந்து வரும் பாதையில் கொசுக்காக கலர், கலராக பாக்ஸ் அமைப்பு தற்காலிக தூங்கும் அறை அமைத்து தூங்கி கொண்டு இருப்பவர்களை பார்த்து இத்தனை மனிதர்கள் தினமும் இங்கே தூங்குகிறார்கள்..இவர்கள் எதற்கு இங்கே ? ஏன்? பயணிகளா? கூலி தொழிலாளிகளா? தினம் ஒருவரே கொசு வலை கட்டி நிரந்தரமாக ஒரே இடத்தில்   தூங்க முடியுமா என்று யோசனைகள்..ஒவ்வொரு முறையும் இது பற்றி கேக்க வேண்டும் என்பது மட்டும் தள்ளிக்கொண்டே போகிறது.

ரூமுக்கு வந்து சிறிது நேரத்தில் "
R u Safe " என்ற எழுத்து வாட்ஸ் அப் ல் மிளிர்ந்தது. உடனே டி.வி போட்டால் நாங்கள் வந்த ரயிலுக்கு பிறகு வந்த ரயிலில்  குண்டு வெடிப்பு. போகும், வரும் ரயில்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. அடுத்த ரயிலில் வந்திருந்தாலோ, இன்னும் தாமதம் ஆகி இருந்தாலோ எந்த இடத்தில் தவித்துக்கொண்டு இருந்து இருப்போம் என தெரியாது. என்னோடு அடுத்த ரயிலுக்காக  அமர்ந்து இருந்த வயதான தம்பதிகள் பற்றி ஒரு கவலை வந்து போனது.உடனே காலிங்பெல்.. .போலீசார் விசாரணைக்கு ..வெளியூரில் இருந்து வந்து தங்கி இருப்பவர்களை விசாரிக்கிறோம் என்று கூறினர். விசிட்டிங் கார்ட் காட்டியவுடன் மரியாதை கொஞ்சம் கூடியது போல தெரிந்தது. போலிசுக்கு கொஞ்சம் கடுமையாக இருந்தே பழக்கம் ஆனதோ?

வெளியே வந்தால் எங்கு பார்த்தாலும் போலிஸ் தலைகள். சரி சென்னை போலிஸ் வேகமாக செயல்ப்படுகிறார்கள் என்று கொஞ்சம் மனதுக்கு இதமாக இருந்தது. சில சமயம் கோழி குஞ்சு அணைப்பு போல மக்களுக்கு அரசாங்கத்தின் பாதுக்காப்பு பற்றிய நிம்மதி தேவையாக இருக்கு.

அன்று இரவில் ஒரு பார்ட்டி.. அது அடுத்த பதிவில்...ஸ்டேடஸ் பார்த்துவிட்டு தந்தி டி.வி கோகுல் போன்.. குண்டுவெடிப்பு போலிஸ் விசாரனை பற்றி என்று..சரி என்று..எல்லா அனுபவத்தையும் சொல்லுங்க எடிட்டிங் செஞ்சுக்கறோம் என்று சொல்ல..இருவது நிமிஷம் மூச்சு விடாமல் பேசிக்கொடுத்தேன்..மூச்சு மட்டும் பதிவு பண்ணி எப்படி போட்டார்கள்? ஆனால் இருவரை தூக்க கலக்கத்தில் எழுப்பி என்னை டி.வி ல் சில நொடிகள் பார்க்க வைத்ததுக்கு எனக்கு தூக்கம் வராமல் போகட்டும் என்று சபித்து விட்டார்கள்..எனவே தூக்கம் போய் இந்த பதிவு.

3 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

//ஏதோ ஒரு வடிவில் எழுதிக்கொண்டே இருக்க வேண்டும், இல்லாவிட்டால் ஏதோ இழந்தது போல தோன்ற ஆரம்பித்து விடுகிறது..///
உண்மைதான் சகோதரியாரே
எனக்கும் அதே உணர்வுதான்.
ஒரு வேண்டுகோள், தங்களின் commentபகுதியில் இருக்கும் Word Verification நீக்கிவிட்டீர்களேயானால், கருத்துரை வழங்குவது எளிமையாக்கப்பட்டுவிடும் என எண்ணுகின்றேன்

Unknown said...

தொடரட்டும் பயணங்கள்

Rathnavel Natarajan said...

அருமை.
வாழ்த்துகள்.