Saturday, December 27, 2014

மாதொரு பாகன்...வாசிப்பு தேவைப்படும் மக்கள்.

மாதொரு பாகன்..
ஆச்சரியம்..ஒரு புத்தகத்தை தமிழ் சூழலில் எதிர்ப்பது. சினிமா போல அடுத்து புத்தகத்துக்கும். ஆனால் படைப்பாளியை மன ரீதியாக காயப்படுத்துவது மிக வருத்தம் அளிக்கிறது.
சில படைப்புகள் படைப்பாளியை விட அதை அனுபவிக்கும் வாசகர்கள் அல்லது பார்வையாளருக்கு மிகுந்த நெருக்கத்தை ஏற்படுத்தும். அவை உலகின் சிறந்த படைப்புகள் ஆகும்.
அவை ஏற்படுத்தும் தாக்கம் சிலரின் வாழ்வை கூட மாற்றும் அளவுக்கு ஏற்படும்..புரட்சிக்கான தாக்கமும் நூல்களின் மூலம் சாத்தியம். மாதொரு பாகனை தம்பி வீட்டில் படித்தேன்..அவன் அதன் தாக்கம் அதிமாகி போன் நம்பர் தேடி எழுத்தாளருக்கு போன் செய்து பேசி இருக்கிறான். கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் உழைப்பு. தமிழில் ஒரு புத்தகத்துக்காக ஏழு வருடங்கள் அதுவும் பொருளாதார ரீதியாக அத்தனை லாபம் அதிகம் இல்லாவிடினும் ஒரு படைப்புக்கு இத்தனை வருடங்கள் உழைப்பு என்பது அவரின் அர்ப்பணிப்பை காட்டுகிறது.
இதை எதிர்ப்பவர்கள் முழுக்க படித்து இருந்தால் அந்த தாக்கத்தில் இருந்து மீள முடியாது. படைப்பை எப்படி அணுக வேண்டும், கருத்தியல் ரீதியாக எப்படி பதில் கருத்துகளை வைக்க வேண்டும் என்று அறியாத விளைவு இது. இதில் மூர்க்கத்தனம் என்பது நாம் எந்தளவுக்கு சமூகத்தில் பின் தங்கி இருக்கிறோம் என்றே உணர்த்துகிறது.
கொங்கு மனிதர்களின் பின்புலமும், வாழ்க்கை முறையும் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. ஒரு காலத்தை காட்டும் கண்ணாடியாக பெருமாள் முருகன் அவர்களின் புத்தகங்கள் இருக்கின்றன.. அவரின் பூக்குழி படித்து விட்டு நம் சமூக அமைப்பை நினைத்து என் உடம்பு முழுக்க நெருப்பு பட்ட எரிச்சல். அங்கு நானும் எரிந்து தணிந்தேன்.
மாதொரு பாகனின் ஒவ்வொரு எழுத்தும் அந்த மனிதர்களோடு , அந்த காலத்தில் நம்மை நடமாட வைக்கும் சக்தி கொண்டது. பெண்மையின் உணர்வுகளை..அதுவும் முடிவு நெருங்கும் இடத்தில் விவரித்து இருப்பது ..ப்ச் சான்ஸே இல்லை..
ஆனால் எல்லாமே நன்மைக்கே என்று தோன்றுகிறது. (அப்படி தோன்றுவது தவறும் கூட ) இதனால் புத்தகங்கள் கவனிக்கப்படுவது நல்லது. அது இன்னும் நிறைய தமிழர்களை அடைய வேண்டிய புத்தகம். இதன் மூலம் எழுத்தாளருக்கு ஏற்படும் மன உளைச்சல் மட்டுமே கவலை அளிக்கும் விஷயம்.
டி.வியில் பேசுங்கள், ஊர்வலம் செல்லுங்கள்..ஆனால் எதிர்க்க வேண்டும் என்று முடிவு செய்தால் சொந்த காசு கொடுத்து வாங்கி ஒரு வரி விடாமல் வாசியுங்கள்.. அந்த படைப்பை முதலில் அணுகவும், அனுபவிக்கவும் கற்றுக்கொள்ளுங்கள்..அதன் பிறகு அதன் இருந்து மீண்டு வந்தால், மனசாட்சியுடன் எதிர்க்க முடியுமா என்று பாருங்கள்.. உங்கள் மோசமான அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு..
முடியவே முடியாது. படைப்பு அப்படி. இது வாசக கர்வம்.

2 comments:

”தளிர் சுரேஷ்” said...

புரிதல் இல்லாமல் எழும் எதிர்ப்புக்கள்! விரைவில் சலசலத்துப் போகும்! பகிர்வுக்கு நன்றி!

Rajaram said...

இன்னிக்குத்தான் இதைப் பார்க்கிறேன்!! நிறைய கவனம் செலுத்தனும் நான்!! சுறு சுறுப்பா!! புது வருடத்திலே ஆயிடுவோம்,!!
நல்ல பதிவு!! மனக் குமுறலின் அமைதி வெளிப்பாடு!! அருமை!!