Tuesday, April 22, 2014

அப்பா-4

அப்பா-4..

அப்பாவின் சிறுவயது டைரி கதைகள் அவ்வப்பொழுது கிடைக்கும்..

அதில் ஒன்று கொசு அடிக்கும் இயந்திரம்..

அப்போ கொசுவத்தி சுருள், மேட் எதுவும் இல்லாத காலம். சில ஹாஸ்டல் ரூம்களில் கொசு மிக அதிகமாக இருக்குமாம்.

விளம்பரத்தில் பார்த்த கொசு ஒழிக்கும் இயந்திரத்தை ஆர்டர் செஞ்சு இருக்கேன்..அதுவும் பத்து ரூபாய்க்கு மேல் என்று நினைவு..ரொம்ப காஸ்ட்லி என்று சொன்னார்..அந்த பையனின் இரு மாத செலவாம். கொஞ்சம் வசதி குறைவு வேறு.

மிச்ச பசங்களுக்கு கொசு ஒழிக்கும் இயந்திரத்தை பார்க்க மிக ஆவல். ஒரு நாள் வந்தது. பார்சல் வந்தவுடன் அனைவரும் குழுமிவிட்டனர்.

ஒரு சுத்தியல், ஒரு வலை, ஒரு தாங்கு கல்(எடை கல் ) இவை இருந்தது. செய்முறை புத்தகம் படத்தோடு. அதில் பின்வருமாறு..

"கொசு அதிகம் இருக்கும் இடத்தில இந்த வலையை வீசி கிடைக்கும் கொசுவை பிடிக்கவும், ஒவ்வொரு கொசுவாக எடை கல் மேல் வைத்து சுத்தியால் தட்ட வேண்டும். இப்படி ஒவ்வொரு கொசுவாக அடித்து ஒழித்தால் கொஞ்ச நாட்களில் அத்தனை கொசுவும் ஒழிந்துவிடும். சந்தேகங்களுக்கு பட குறிப்புகளை பார்க்கவும்'.

அழுகை முட்டிக்கொண்டு வந்தாலும் அத்தனை பேரும் சிரித்துவிட்டனர்.

இப்பொழுது ஈமு கோழிகள் நம்மை பார்த்து சிரிப்பதை போல..

காலங்கள் மாறுவதில்லை..

அப்பா-5

அப்பா-5

வெயிலானுபவம்..

வெயில் காலத்தை அனுபவிப்பது என்றால் ரிசார்ட், ஊட்டி செல்வது மட்டுமல்ல..ஊரில் உதிர்ந்தும், காய்ந்தும் கிடக்கும் வெயிலோடு மகிழ்வது. 

காலையில் எழுப்பும்பொழுது அலுப்பாகாதான் இருக்கும். ஆனால் அப்பாவுடன் கதைகள், நகைச்சுவை நிமிடங்களை தவற மனம் வராது. அந்த காலத்தில் முதுமக்கள் தாழி என்று ஒன்று உண்டு. அதிக வயதாகிவிட்டால் ரொம்ப சுருங்கி போய்விடுவார்கள். ஒரு கொட்டாங்குச்சியில் சாதமும்..குத்தி சாப்பிட ஊசியும், ஒரு கொட்டாங்குச்சியில் நீரும் வைத்து வைத்து மூடி பூமிக்குள் புதைத்து விடுவார்கள். பாவம் இப்பொழுது போல கொள்ளை அடிக்கும் ஐ-சி-யூ இல்லாத காலம்.

சில மியுசியங்களில் இன்னும் அந்த தாழி காணக்கிடைக்கும். அது போன்ற ஒரு பெரிய மண் ஜாடி ஒன்று இருந்தது. ஒரு வருடத்துக்கு பல குடும்பங்களுக்கு தேவையான மாவடுக்கள் அதில் மிதக்கும். அப்பாக்கு கீழே விழும் மாவடுக்களை வீணாக்க மனம் வராது. பெரிய பைகள் எடுத்துகொண்டு கிளம்புவோம். அம்மாக்கு இறக்கின வடு வேண்டும் என ஆசை..அது எங்கள் வீட்டில் நடக்காது.

சிறு வடுக்கள் தோப்பில் இறைந்து கிடக்கும். வெயில் ஏறும் முன் பொறுக்க போய் விடுவோம். எத்தனையோ கதைகள்..வெம்பிய மாவடுக்களை பொறுமையாக தூக்கிபோட்டுவிட்டு கெட்டிய வடுக்களாக பார்த்து பொறுக்கி கொண்டு வருவோம். தோப்பை ஒரு சுற்று சுற்றினால் அரை பை தேறும். இது பத்து பதினஞ்சு நாள் நடக்கும். கொத்தவரங்காய், அவரைக்காய் போன்று சில சமயம் ஊடு பயிர் உண்டு. அது பறிக்கவும் போக வேண்டும். ஒவ்வொன்றையும் பழக்கி கொடுத்தது இன்று வெயிலோ, மழையோ எதையும் கண்டுக்காம, உஸ், உஸ் என்று இல்லாமல் இருக்க வசதியாகத்தான் இருக்கு.

புளியம்பழம் பொறுக்க, வேப்பங்கொட்டை பொறுக்கி விலைக்கு போட எல்லாம் ஒவ்வொரு சீசனில் செய்த அனுபவங்கள். எத்தனை லட்சங்கள் கொடுத்தாலும் அந்த அனுபவங்கள் திரும்பி வராது. எல்லாம் முடித்துவிட்டு ஒரு போர் செட் குளியல் போட்டால் அத்தனை மகிழ்ச்சியாகவும், குளுமையாகவும் இருக்கும்.

ஏ.சி யில் கிடைக்குமா வெயிலானுபவம் ? நன்றிப்பா..

அப்பா-6

அப்பா-6 ..."DO what I say...Don't do what I do"
அதிக கேள்விகளுக்கோ,எதிர்த்து பேசினாலோ அப்பாக்கிட்டேர்ந்து இது மட்டுமே பதில்.அப்ப அப்பாக்கு ரொம்ப மதிப்பு கொடுத்து பயந்த காலம்..ஏம்பா நீ இப்படி பண்றப்ப நாங்க பண்ண கூடாதா என்று கேட்டாள் கோவம் வந்துடும்..உடனே இதுதான் வரும் அவரிடமிருந்து..
இங்கு கணவரின் பீரோவில் இருந்து வைத்து இருந்த  சூயிங்கம் எடுத்து சின்ன பையன் சாப்பிட்டு விட்டான்..குழந்தைகள் சாப்பிட கூடாது என்றால் கேக்காமல் எதிர்த்து வேறு பேசுகிறான்..நல்லது இல்லையென்றால் நீங்க செய்யலாமா என்று..பிறகு எதாவது சொன்னால் இது மட்டுமே வருகிறது பதிலாக..

"Do what I say mom"..
..
இதான் மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் அடியா..#நம்ம_தலைமுறை..

அப்பா -7

அப்பா -7 

எங்க வீட்டில், இரவில் பால் குடிக்காமல் தூங்கக்கூடாது..அக்கா, தம்பிக்கு தூக்க்கதிலேயே அம்மா கொடுத்துவிடுவார்கள். எனக்குதான் கஷ்டம்.

நானும் பால் குடிக்காமல் தவிர்க்க தூங்குவது போல பாவ்லா செய்வேன். இதை பார்த்த அம்மா அப்பாவை கூட்டிக்கொண்டு வருவார்கள். 

அப்பா "தூங்கினா கால் ஆடும், அவ கால் ஆடுதா பாரு"ன்னு சொல்வார்கள்..நானும் உடனே விவரம் தெரியாம கால் ஆட்டிவிடுவேன்..உடனே சிரித்துக்கொண்டே எழுப்பி பால் கொடுத்துவிடுவார்கள்.

இது ரொம்ப நாள் புரியல..தப்பா கால் ஆட்டிட்டோம்..அதான் கண்டுபிடிசிட்டாங்கன்னு யோசித்து விதம், விதமா ஆட்டி பார்ப்பேன்..விவரமா ஆயிட்டேன் என்று வேறு நினைப்பு எனக்கு..இன்னிக்கு வரைக்கும் விவரம் வரல ஏன்னா..

பெரியவன்கிட்ட முயற்சித்தேன்..உடனே அவன் எழுந்து சயிண்டிபிக்கா பேச ஆரம்பிச்சிட்டான்..சின்னதுகிட்ட ஒரு தடவ முயற்சித்தேன்..உடனே தூங்கரப்ப இந்த அம்மா டிஸ்டர்ப் பண்றான்னு ஊரையே கூட்டிடான்..

வழக்கம் போல நான்..ஞே...

அப்பா -8

அப்பா -8

பருத்தி விளைச்சல் புதிது அப்போ..பருத்திப்புழுவை ஒழிக்க ரொம்ப கஷ்டப்படுவாங்க.. அப்பாவும் நிறைய முயற்சி செஞ்சுட்டு கடைசியா வீரியமிக்க ஒரு பூச்சி மருந்தை அடிச்சார்.

வீட்டில் எல்லா விஷயமும் சொல்லுவார். முக்கியமாக குழந்தைகளிடம் பகிருவார். பருத்திக்காயில் புழுவை ஒழித்ததில் கொஞ்சம் பெருமை.

பேச்சுவாக்கில் காயில் இருந்து புழு காட்டினால் அஞ்சு ரூபாய் ஒரு புழுக்கு கொடுக்கறேன் ..முடிஞ்சா தேடிப்பாருங்கனு சவாலா சொன்னார். நானும், கசினும் (என்றே நினைவு) புழுவை தேடி பயணத்தை தொடங்கினோம்.

ஒரு ஏக்கருக்கு மேலே சுத்தியாச்சு..பருத்தி செடிகள் உள்ளே புகுந்து புறப்பட்டு வந்தோம்..ஒரு புழு கூட இல்லை.அஞ்சு ரூபாய் கண் முன்னால..சரி வெளில புழு இல்ல..உள்ளே உடைச்சு பார்போமேன்னு ஒண்ணு. ஒண்ணா பருத்திக்காய்களை எடுத்து உடைக்க ஆரம்பிச்சிட்டேன்..நிறைய காய்கள் வேஸ்ட்..

ஒரு புழு கண்டுபிடிச்சி..பெருமையா அப்பாகிட்ட போய் நின்னேன்..அப்பா புழுவை பார்த்துட்டு உண்மையை சொல்லு இது காய் உடைச்சி எடுத்தியான்னு கேட்டார்..நானும் தலைகீழா அஞ்சு ரூபாய்க்காக பொய் சொல்லிப்பார்த்தேன்..ம்ஹூம்..பாச்சா பலிக்கல..

அஞ்சு ரூபாயை வாங்கினது தனி கதை..ஆனால் இன்னி வரைக்கும் வயலுக்கே போகாம அப்பா அந்த புழுவை பற்றி எப்படி கண்டுபிடிச்சார் என்பதுதான் ஆச்சரியம்..

விவசாயி.

அப்பா -9

அப்பா -9,

அப்பா விவசாயம் சார்ந்த தொழில்..நெல், உளுந்து, பயறு,எள், பருத்தி விவாசயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து மொத்த வியாபாரிகள் அல்லது பேக்டரிகளுக்கு அனுப்புவது பழக்கம்.

அப்பொழுது எல்லாம் வெறும் பேச்சுதான். போனில் பேசி முடிவு செஞ்சுடுவாங்க..அப்புறம் நேரே லோடு போய்விடும். ஒரு முறை பயங்கர ஏற்றத்தாழ்வு..குறைஞ்ச விலைக்கு பேசிட்டார்..திடீர்னு மார்க்கெட்டில் விலை அதிகரிச்சு போச்சு..விவாசயிகளுக்கு மார்கட் விலை கொடுத்தே ஆகணும். ஆனால் குறைந்த விலைக்கு விற்று ரொம்ப நஷ்டம்.

விலை வீழ்ச்சியின் பொழுது நஷ்டத்தை சமாளிக்க கொடவுனில் வைத்து விடும் வழக்கமும் உண்டு. அப்பொழுது பேசி அனுப்புவார்கள். ஒரு முறை ஸ்டாக் பேசி முடித்த ஒரே நாளில் விலை அதிகம் உயர்ந்துவிட்டது. இருப்பினும் பழைய விலைக்கே அப்பா பேசாம அனுபிட்டார். நான் கேட்டேன் ஏன்பா..கொஞ்சம் பேசி பாருங்க..விலை அதிகமா கொடுத்தா நல்லதுதானே அப்படின்னு..

அப்பா சொன்னது ..வியாபாரம் செஞ்சா கோடி ரூபாய் நஷ்டம் வந்தாலும் வாக்கு முக்கியம். வாக்கு தவறி பேர் போச்சுன்னா அதுதான் மிகப்பெரிய நஷ்டம். வாக்கு மட்டும் தவறவேக்கூடாது.
பணம் போகும் வரும்..வாக்கு முக்கியம்.

அப்பா வாக்கு தவறக்கூடாதுன்னு சொல்லிக்கொடுதார். நேற்று ஒரு நல்ல வாசிப்பாள நண்பருக்கு மொக்கை ஸ்டேடஸ் போடமாட்டேன்னு சொன்னேன். இன்னிக்கு வந்துடுச்சு..

அப்பா மன்னிப்பாராக..

அப்பா -10

அப்பா -10..

மிக சிறு வயதில் என் உறவினர்கள் சிலர் சேர்ந்துகொண்டு உன்னை தவிட்டுக்கு வாங்கிட்டோம் என்று கிண்டல் செய்வார்கள்.

எனக்கு அழுகையாக வரும்..எத்தனை தவிடுன்னு கேட்டதுக்கு மரக்கா தவிடுக்கே உன்னை கொடுத்துட்டாங்கன்னு சொல்ல..எனக்கு கனவுல கூட தங்கம் குவிச்சு வச்சது போல மரக்கால் அதில் நிரம்பிய தவிடு நினைவுக்கு வரும்.

அம்மாகிட்ட போய் கேட்டேன்..ஆமாம்னு அம்மாவையும் சொல்ல வச்சிட்டாங்க..அப்புறம் எதுக்கோ தலையில குட்டிட்டாங்க ,உடனே அழுதுகிட்டே இவங்க என் அம்மா இல்லையானு கேட்டுகிட்டு அப்பாகிட்ட போனேன்.

உடனே அப்பா பக்கத்துல உக்கார வச்சுக்கிட்டு.."ஆமாம்மா நீ இவங்களுக்கு பிறக்கல..ஆனா தவிட்டுக்கு எல்லாம் வாங்கல..நீ பெரிய பணக்கார வீட்டு பொண்ணு..உங்க அம்மா பெரிய பணக்காரி.. செருப்புக்கு மேட்சா இருக்கிற ஏரோப்ளேன்லதான் போவா..அத்தனை வசதி..நீ நல்ல பொண்ணா வளர இங்க விட்டுருக்கா"..ன்னு சொல்ல,

"ஆனா எனக்கு அப்பா நீதான்",அப்பாவை மட்டும் பெண்குழந்தைகள் விட்டுக்கொடுப்பதில்லை..

"அந்த அம்மா எப்ப வருவாங்க? ஏன் இன்னும் என்னை வந்து பார்க்கல"?

வருவாங்க..ரொம்ப பிசி..எப்போதும் பறந்துக்கிட்டே இருப்பாங்க..கூடிய சீக்கிரம் வந்து பார்ப்பாங்க..

ரொம்ப நாள் எங்கம்மா செருப்புக்கு மேட்சா ஏரோப்ளேன்ல போவாங்களாம்னு சொல்லிக்கிட்டு அலைஞ்சேன்.நினைவுல அம்மா பயங்கர ஸ்டைலா..கொஞ்சம் நடிகைகள் போல..பெரிய பங்களா, சொந்தமா ஏர்போர்ட் , விதம் விதமா, கலர் ,கலரா செருப்புகள்ன்னு ....ஒரு கெத்தா திரிவேன்.. அம்மாவை பற்றிய வித வித கற்பனைகள், உடைகள், வசதிகள்..மட்டுமே..பாசம் பற்றியெல்லாம் நினைவு இல்லை..

அம்மா திட்டினா நீ ஒன்னும் என் அம்மா இல்லை..எங்கம்மா யார்ன்னு தெரியுமான்னு சவுண்டு விடுவேன்..சில தோழி குழந்தைகள்கிட்ட சொல்லி இருந்ததாய் நினைவு.

தவிட்டுக்கு வாங்கினேன்னு கேலி பண்ணினதுக்கு பதிலடி கொடுத்து ஏரோப்ளேன் சத்தம் கேட்டா ஓடி போய் பார்ப்பேன்.

கற்பனை வளத்தை அப்பா எப்படி எல்லாம் தூண்டி, சில மறக்க முடியாத நினைவுகளை கொடுத்து இருக்கார்.

லவ் யூ அப்பா..