Wednesday, April 3, 2013

மாற்று முறைக் கல்வி


கடந்த இரு தொடரில்  பல்வேறு சிலபஸ்கள் அறிமுகம் ஆகிவிட்டது.சில பெற்றோருக்கு ஏன் இந்த சிலபஸ் முறைகளில்தான் எல்லா பிள்ளைகளும் கற்று கொள்ளவேண்டுமா? இந்த பள்ளி கல்வி முறைக்கு மாற்று கிடையாதா என்ற ஏக்கம்,தேடுதல் இருந்து கொண்டுதான் இருகிறது.இதற்கு வரமாய் வித்தியாசமாய் சிந்திக்கும் பெற்றோர்களுகாக மாற்று கல்வி முறை அதாவது Alternative Education மாற்று வழி முறை பள்ளிகள் அங்கும்,இங்கும் தோன்றி வருகிறது.
இந்த கட்டுரைக்காக நான் சென்றது ஒரு மாற்று முறை பள்ளி..பள்ளி என்று சொல்வதை விட கற்று கொள்ளும் ஒரு இடம். ஏன் இந்த முறை கல்வி என்று தெரிய அவர்களிடம் பேசிய பொழுது கிடைத்த தகவல்கள்.
Education - kirthu -mar11 -1
குழந்தைகளின் சிறகுகளை வெட்ட நமக்கு உரிமை இல்லை..
பெற்றோரின் விருப்பம் குழந்தைகளின் மேல் திணிக்கக்கூடாது.அதாவது தன்னால் மருத்துவர் ஆக முடியவில்லை என்ற ஏக்கத்தில் குழந்தையிடம் அதை திணிப்பது. தானாக யோசிக்க முடியாமல் செய்வது.
பெற்றோர்கள் குழந்தையின் வாழ்கையை தீர்மானிக்க கூடாது. தனியாக குழ்ந்தைகளுக்கு என்ற சொந்தமான வாழ்கையை வாழ அனுமதிக்கவேண்டும்.
பெற்றோர்கள் இதை செய்ய வேண்டும் என்று வற்புறுத்துவது..ஆனால் குழந்தைக்கு எது இயற்கையாக வருகிறது என்று பார்க்க மறுப்பது.
குழந்தைகள் தான் தானாக இருக்க வேண்டிய இடத்தில் சிந்திக்க விடாமல் செய்வது.
போட்டிகள் மூலம் சிறுவர்களுக்கு மன அழுத்தம் கொடுக்க விரும்பாதது.
மதிப்பெண்கள்,க்ரேடுகள் போன்றவற்றின் மூலம் மாணவர்களை தரம் பிரிப்பது போன்றவற்றுக்கு மாற்று வேண்டும் என்று சில பெற்றோர்களின் ஆதங்கமாகவும் இருக்க வழி சொல்லும் விதமாக அங்கங்கு உள்ள மாற்று முறை கல்வி கூடங்கள்.
மாணவர்களை ஒப்பிட்டு பார்க்க விரும்பாதது.
அனைத்து பொருளாதார தளங்களிலும் உள்ள குழந்தைகள் ஒன்றாய் கல்வி கற்பது.அதன் மூலம் அனைத்து தளங்களிலும் வசிக்கும் சமூகத்திற்கு மரியாதை கொடுப்பது,மரியாதையாக வாழ்வது.
சக மனிதருக்கு உள்ள மரியாதையை கொடுப்பது,பெறுவது.
முழு மனிதனாக,இயற்கையை மதித்து, அன்பை செலுத்தி, நேர்மையாக வாழ கற்று கொடுப்பதற்கு பதிலாக போட்டிகள், தேர்வுகள் அதன் மூலம் அழுத்தங்கள்,பொறாமைகள்,பிரச்சனைகள் பள்ளிகுள்ளும்,வெளியிலும் ஏற்படுத்தி கற்று கொள்ளும் ஆர்வத்தை சிதைப்பது பள்ளிகளில் நடக்கிறது
இப்படியெல்லாம் வித்தியாசமாய் யோசித்து செயல்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை கேள்விபடும்போது நாளைய தலைமுறையின் நிம்மதியை இப்போதே உணர முடிகிறது.. சரி நம் கட்டுரைக்காக ஒரு மாற்று முறை பள்ளியை பார்த்துவிடுவோம் என்று கிளம்பினால் அங்கு பார்த்தது மிகுந்த ஆச்சர்யம் கொடுத்தது.
Education - kirthu -mar11 -2
விவசாயம் செய்யும், காய்கறி விளைவிக்கும் மாணவர்களை எங்காவது பார்த்து இருக்கிறோமோ? நூறு பேர்களுக்கு சமையல் செய்யும் மாணவர்கள்..அதாவது சந்தைக்கு சென்று காய்கறி, மளிகை பொருட்கள், அத்தனையையும் குறிப்பிட்ட விலைக்குள் வாங்கி பாத்திரம் கழுவி..முக்கியமாக வெளியில் விறகு வைத்து அடுப்பு மூட்டி சமைத்து பரிமாறும் மாணவர்களை பார்த்து ஆச்சர்யமாகத்தான் இருந்தது. முன்பே திட்டமிட்டு போகாததால் அவர்களுடன் சாப்பிடும் வாய்ப்பை நழுவ விட்டேன்.
ஆசிரியர்களை பேர் சொல்லி அழைத்து..ஒரு குழந்தை நேராக தலைமை ஆசிரியரை சந்தித்து எனக்கு சிறிய பிரச்சனை கேக்க போறீங்களா இல்லையா என்று உரிமையாக கேட்டது மிகுந்த ஆச்சர்யம். ஆங்கில வகுப்புக்காக வார்த்தைகளின் கட்டமைப்புக்கு வகுப்புக்கு வெளியில் குழந்தைகளை அழைத்து சென்று பேச வைத்து அதன் மூலமாக ஆங்கில வகுப்பு எடுத்தது ஆச்சர்யம் என்றால்..அங்கு பறித்த நெல்லிகனிகளை ஆசிரியர் கையில் இருந்து உரிமையாக ஒவ்வொரு குழந்தையும் எடுத்து சுவைத்தது எனக்கு ஒரு கவிதையாகவே இருந்தது.
பெரிய கலைஞர்கள் ,ஓவியர்கள் அவ்வபொழுது வந்து பாடம் நடத்தி செல்கின்றனர்.ஆனால் நான் வியந்த விஷயம் இருபது சதவிகித மாணவர்கள் கற்றல் குறைபாடு உள்ளவர்கள்.பெரும்பாலான பள்ளிகள் கற்றல் குறைபாடு பற்றிய விழிப்புணர்வே இல்லாத பொழுது, இருபது சதவிகித அவர்களுக்காக இடம் ஒதுக்கி இருப்பது மிகுந்த பாராட்டுக்குரிய விஷயம்.அதே போல இருபது சதவிகித மாணவர்கள் பொருளாதார நிலையில் பின் தங்கியவர்கள். அங்கு சென்ற பொழுது அனைவரிடமும் தன்னம்பிக்கை மிளிர்வதை கண்டேன்.
சுற்று சூழல் விழிப்புணர்வை நன்கு கற்றுகொடுக்கிறார்கள்..மழை நீர் சேகரிப்பு,காகிதத்தை திரும்ப மறு சுழற்சி செய்வது..முடிந்த வரை காகிதத்தை வீணாக்காமல் உபயோகிப்பது, எதையும் பார்த்து,உணர்ந்து கற்று கொள்ள உதவுவது ,இயற்கையோடு முடிந்தவரை சூழலை சிதைக்காமல் வாழ கற்றுகொடுப்பது , சமூகத்தில் நடைபெறும் நிகழ்வுகள் பற்றிய விழிப்புணர்வு, சமநிலையில் மனதை வைத்து கொள்ளுதல் (emotional well-being ), தான் வாழும் பூமியை மதித்தல், இவை மூலம் சமூகத்தை நேசிக்கும் ஒரு மனிதன் வெளிவர ஒத்துழைப்பது இந்த பள்ளியின் நோக்கமாகும்.
ஆறு குழந்தைகளோடு ஆரம்பிக்கப்பட்ட பள்ளி இன்று வளர்ந்து வருகிறது.அங்கு கற்ற மாணவர்கள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகிறார்கள்.மருத்துவ துறை உள்பட.
ஆசிரியர்களும் மாணவர்களும் ஒரு குழுவாக செயல்பட்டு விவாதித்து கற்று கொள்கிறாகள். இங்கு ஆசிரியரின் மனமும் கவனிக்க படுகிறது.இன்றைக்கு என் வகுப்பு அருமையாகக் இருந்தது, இன்று வகுப்பு நினைத்த மாதிரி இல்லை என்று அவர்களும் மாணவர்களோடு விவாதிக்கிறார்கள். பெரும்பாலும் கதைகள்,செயல் வழி மூலமே கற்றல் நிகழ்கிறது.வகுப்புக்குள் அடைந்து இருக்க வேண்டிய நிர்பந்தம் இல்லை.பெரும்பாலும் வெளி சூழல்கள், அடிக்கடி கற்றல் சம்மபந்தப்ட்ட சிறு சுற்றுலாக்கள் மூலம் கற்றல் நடைபெறுகிறது. எதையும் பார்த்து உணர்ந்து கற்றுகொள்வதால் மறப்பது இல்லை.
இதே போன்ற பள்ளிகளும் இருக்கின்றன என்று அறிமுகம் செய்யவே அங்கு சென்று தகவல் சேகரித்தேன்.ஆனால் வியக்க வைக்கும் விஷயங்கள் அங்கு நடைபெறுவது கண் கூடாக பார்த்து தெரிந்து கொண்டேன்.
அவர்கள் கொடுத்த சில விவரங்கள்..
நல்ல பள்ளி என்பவை..
பள்ளியில் மாணவர்கள் மிகுந்த ஒழுக்கமுடன் ,பணிவுடன் நடக்கிறார்கள்.ஆசிரியருக்கு கட்டுப்பட்டு வகுப்பறை இருக்கிறது.
பாடங்கள் திட்டமிட்டு நடத்தபடுகிறது.
அமைதியான மாணவர்கள்.
ஆசிரியரும்,மாணவர்களும் குறிப்பிட்ட இலக்கை நோக்கி பயணிக்கின்றனர்.
மாணவர்கள் படிக்க உற்சாக படுத்த படுகிறார்கள் (motivate)
ஆசிரியருக்கு மாணவர்கள் நன்கு ஒத்துழைகிரார்கள்.
ஆனால் பூர்ணாவின் விவாதம்.
ஆசிரியருக்கு பயத்தினால கட்டுப்பட்டு இருக்கலாம்.ஒத்துழைப்பும் கொடுக்கலாம்.
அமைதியாக வகுப்பறை உள்ளதால மட்டுமே ஒழுக்கம் வந்துவிடாது.
மாற்றங்களினால் ஒழுக்கங்கள் மாறாது.
மனப்பாடம் செய்யாமல் மனதில் அறிந்து படிப்பதால் இலக்குகள் பற்றிய யோசனைகளை கிடையாது.
ஆசியரின் குணம் வகுப்பறைக்கும் கடத்தபடுகிறது..அவர் ஸ்ட்ரிக்டாக ,அன்பாக,கடு கடுவென்றோ இருந்தால் மாணவர்களின் மனநிலையிலும்,வகுப்பின் போக்கிலும் மாற்றம் வரும்.அப்படி இல்லாமல் குழுவாக உணர்ந்து கற்று கொள்வது மேலும் சிறப்பு.

Education - kirthu -mar11 -3
மேலும் நான் அங்கு கற்று கொண்டது ….படைப்பு திறன் என்பது ஒருவரை விட சிறந்ததாய் இருப்பது அல்ல…. அது யோசனை செய்து, சுயமாய் உணர்ந்து, கண்டுபிடித்து, பரந்த வெளியில் மனதை திறந்து வைத்து கற்பனை செய்து வெளியே படைப்பை கொண்டு வருவது..அது பெரும்பாலும் திறமை,புத்திசாலித்தனம் மற்றும் வெளியே வரும் முடிவடைந்த படைப்புகள் மூலம் குழப்பி கொள்ளபடுகிறது.
ஒரு மாணவருக்கு இருக்கும் படைப்பு திறனை (creativity ) போட்டிகள் மூலம் கொண்டு வர முடியாது. கதை சொல்லும் போட்டி என் பையனின் பொது பள்ளியில் நடந்தது…சொந்தமாய் கதையை தயாரிப்பதும் போட்டிக்காக கதை சொல்லுவதுக்குமான வேறுபாடு என் மனதில் வந்து நிஜம் சுட்டது.
இந்த பள்ளியின் உருவாக்கிய இந்திரா விஜய சிம்ஹா , இப்போது அசிம் பிரேம்ஜி பவுண்டேஷனில் செயல்பட்டுவருகிறார். இந்த பள்ளியின் ஒரு ஆசிரியர் விவசாயம் செய்தவர்..ஆத்ம திருப்திக்காக இங்கு வந்து சேவை செய்யும் ஆசிரியர்களும் உள்ளனர். நான் சந்தித்தது ஜெயந்தி, தலைமை ஆசிரியை..மாணவர்களிடம் நட்போடு பழகுபவர்.அன்பானவரும்.
ஒரு குழந்தை ஏன்,எதை எப்படி கற்க வேண்டும்.முழு மனிதனாக,சமூகத்தை நேசிக்கும், சுயமாக யோசிக்க ,எதையும் தனித்துவ பார்வையில் இருந்து பார்க்க கற்று கொடுக்க வேண்டும்(Holistic Education) என்று சில பள்ளிகள் ஜே.கிருஷ்ணமூர்த்தி கொள்கையில் செயல்படுகிறது. ஜே.கே. பவுண்டேஷன் சில பள்ளிகளை நடத்தி வருகிறது. ஆனால் அங்கங்கு சில பெற்றோர்களால் இதே போன்ற பள்ளிகள் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக நடந்துகொண்டு இருக்கின்றன.
நான் சென்ற பள்ளியின் லிங்க் ..
http://www.poorna.in/
Holistic Education article link.
http://en.wikipedia.org/wiki/Holistic_education.
மாற்றுமுறை பள்ளிகள்.
http://www.theschoolkfi.org/
http://www.thevalleyschool.info/
http://www.jkrishnamurti.org/worldwide-information/schools.php

No comments: