Wednesday, April 3, 2013

நினைவு தீண்டல்,விவசாயம்.


என் சொந்த ஊர் தஞ்சையின் கடைமடைப் பகுதி. இப்போது சுத்தமாக நீர் இல்லை. இருக்கும் நீரைப் பயன்படுத்தவும் மின்சாரம் இல்லை. விவசாயம் கடுமையான பாதிப்பில். விவசாயிகள் பாதி நிலம் கூட விதைக்கவில்லை. விதைத்த நிலங்களும், அறுவடை வீட்டுக்கு வருமா ,வராதா என்ற நிலையில்..

நகர் பகுதிகளில் திருட்டு அதிகமாகிவிட்டதற்கு கடுமையான வறுமையும் ஒரு காரணம். அடுத்த மாநிலத்தை நீருக்கு நம்பி பிரயோஜனம் இல்லை என்ற முடிவில்தான் விவசாயிகள் உள்ளனர். காவிரியின் அனுபவபாத்தியதை வெறும் பத்திரத்தில் மட்டுமே. கர்நாடக விவசாய நிலம் பல மடங்காகக பெருக்கப்பட்டு விட்டது. தமிழ்நாடு டெல்டா பகுதியில் விவசாய நிலம் பாதியாக சுருக்கப்பட்டுவிட்டது.

பெங்களூரு போன்ற அசுர வளர்ச்சி அடையும் நகரங்களின் தாகம் தீர்க்க வேண்டிய நிலையில் கர்நாடக மாநிலம். நதிநீர் தேசிய மயமாக்கல் வெறும் பேச்சில் மட்டுமே. அந்த வழியும் இல்லை. எல்லா வழிகளும் அடைபட்ட நிலையில் டெல்டா விவசாயிகள்.

விவசாயத் துறைக்கு போதுமான பணம் ஒதுக்கி இருந்தும் அதிகாரிகள் மெத்தனமாக உள்ளனர். தூர் வார, ஏரி, குளங்களைச் சீரைமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசாங்கம் ஒதுக்கும் பணத்தில் பாதி செலவு செய்தாலாவது கொஞ்சம் சீரமைக்கலாம். அத்தனை பணமும் எங்கே செல்கிறது என்று அனைவருக்கும் வெளிச்சம்.

நான் விளையாடின ஆற்று மணல் ஒரு சொட்டு இல்லாமல் அள்ளப் பட்டுவிட்டது. நிலத்தடி நீரில் உப்பு கலக்கும் அபாயம் கடலோர விவசாய பகுதிகளில். நிலத்தடி நீரும் குறைந்து வரும் அபாயம். சோழர் காலத்து ஏரி, குளங்கள், குட்டைகள், வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பு மற்றும் சரியாக தூர் வாரபடாத நிலைமை. அழியும் நிலையில் அனைத்து நீர் நிலைகளும்.

கடந்த இருபது வருடங்களில் மனிதன் பேராசையால் அழித்த அத்தனை இயற்கை வளங்களும் ..ஒரு காரணி. பிளாட் போட்டு அருகில் இருக்கும் விவசாய நிலங்களில் விவசாயம் செய்ய முடியாத நிலைமை. உடனடி தேவை நீர் சேமிப்புத் திட்டங்கள், நீர் நிலைகள் சீர் அமைப்பு, சொட்டு நீர்ப் பாசனம் போன்ற புதிய முறைகளை அறிமுகப்படுத்துதல், மாற்றுப் பயிர் விவசாயம் முக்கியமாக மின்சாரம்.. இதை செய்தால் ஓரளவுக்கு கை ஏந்தாமல் இருக்கலாம்.

கடைசிச் செய்தி விவசாய பிரச்னையை அயல்நாட்டு பிரச்சனை என்ற வகையில் அணுகி வந்த தமிழக பிற மக்கள். இப்போ அனைவருக்கும் பாதிப்பு உணரும் வகையில் அரிசி விலை உயர்வு. லாபம் நம் விவசாயிகளுக்கு இல்லை....இங்குதான் விளைச்சலே இல்லையே...

யார் என்ன செய்ய போகிறார்கள்.. ..என் ஊர் விவசாயிகளை, எந்த தேவ தூதன் வந்து மீட்டு எடுக்கப் போகிறார் (நாங்களும் விவசாயக் குடும்பமே).... மனம் கனக்கிறது ..

No comments: