Tuesday, November 11, 2014

அமெரிக்க பயணம்..ஏழு..


ப்ராங்கபர்ட் விமான நிலையம்..நம்ம மெஜஸ்டிக் பஸ்  நிலையம் பரபரப்பில் விமானங்கள் வந்து போகும் இடம்..சிறு வயதில் தமிழ்வாணன் நாவலில் துப்பறியும் இடங்கள் வரும் ஊர்களில் பிராங்க்பர்ட் நகரமும் ஒன்று,..மிக அழகாய் வருணித்து இருப்பார்..என் கனவுகளில் ஒன்று பிராங்க்பர்ட் செல்வது..

கனவுகள் கண்டால் நிறைவேறும் என்ற நம்பிக்கை உடையவள் நான்..ஏதோ ஒரு வடிவத்தில் கனவுகள் நிறைவேறிக்கொண்டே வருகிறது..எனக்கான விருப்பமான செயல்கள் எப்படியாவது எந்த வழியிலாவது நடைபெறும். சில கனவுகளை அடுத்தவர்களுக்காகவும் மேற்கொள்வேன்..பெரும்பாலும் விருப்பப்பட்ட நேரத்திலோ, வடிவத்திலோ அவை அமையாது..ஆனால் நிறைவேறும்..

பிராங்க்பர்ட்ல்  நாலு மணி நேரம்..
A,B,C,D,E Z என்று டெர்மினல்கள்..நூறுக்கும் மேல் விமானங்கள் நிறுத்தப்பட்டு இருக்கும் இடம்.டெர்மினல்களுக்கு இடையில் ரயில்,பஸ் இலவச சேவை உண்டு..எந்த இடம் போனாலும் சும்மா வை-பையில் மூழ்காமல் அங்குள்ள இடங்களை பார்க்கவும் மனிதர்களை கவனிக்கவும் மிகப்பிடிக்கும்..

சரி என்று ரயிலில் ஏறி அடுத்த டெர்மினலில் உள்ள கடைகளை சுற்றி வந்தோம்..முதன் முதலில் ஈரோவை தரிசிப்பதால் ஒவ்வொரு விலையும் பயமுறுத்தியது..பையனிடம் காபி குடிக்கலாம் என்றதற்கு மிரண்டு போய் கொஞ்சம் இரும்மா ப்ளைட் ல பார்த்துக்கலாம் என்று விட்டான்..


     ஜெர்மனி மண்..ஹிட்லர், இரண்டாம் உலகப்போர் என்று மனதின் நினைவில்.. அங்கு உள்ள டிரடிஷனல் பேக்கரி என்று  இடத்தில் மப்பின் (
muffin) மற்றும் புயுகள்..வேறு ஏதோ என்று பொறுக்கிக்கொண்டு உக்கார்ந்தோம்..நிஜமாகவே மிக அருமையான சுவை. ஜெர்மனி பேக்கரிகள் பற்றி ஸ்டுடன்ட் எக்ஸ்சேஞ் க்காக வந்த ஜெர்மன் பெண் சொல்லி கேள்விப்பட்டு இருக்கேன். அங்கு  பிரெட் வகைகள் அதிகம்..நீளமா, வளைவா, உருண்டையா என எல்லா வடிவங்கள், சுவைகளில், தானியங்களில் பிரெட் வைத்து இருப்பார்கள்..அதுதான் மிக முக்கிய உணவு என்பதால்..எனவே அங்கு பேக்கரி உணவை சாப்பிட்டே ஆக வேண்டுமென்று தீர்மானம்..விலையும் மோசமில்லை..(ஒரு சுற்று வந்தால் விலை ஜீரணமாகும்). போகும் வழிகளில்  மிக நீளமான ட்ராவேலட்டர்கள்...ஒரு குழந்தை போல போய்விட்டு வர சொல்லியது..கொஞ்சம் உல்டாவாக நடந்து பார்த்துவிட்டு பையன் முறைப்புக்கு அஞ்சி நேராக நடக்க ஆரம்பித்தேன்.. மகனும்  அப்பாவாகும்  தருணங்கள் பயணத்தில் பல இடங்களில் வந்தது..

முதல் பயணமாக இருந்தால் வரிசையில் பொறுமையாக நிற்க கண்டிப்பாக கற்றுத்தரும்..அதுவும் இடைவெளி விட்டு...யாரும் யார் அருகிலும்நிற்பது இல்லை..எல்லாமே ஒரு இடைவெளி..கார்களும்..மனிதர்களும்..ஈஷிகொள்ளவே முடியாது..

பிராங்க்பர்ட் ஏர்போர்ட் கொடுக்கும் சர்விஸ் பல விதங்கள்..குழந்தைகள் சுத்தி பார்க்க, ஷாப்பிங் செய்ய என்று போய் ஏர்போர்ட் லையே திருமணம் செய்துக்கொள்ள கூட சர்வீஸ் செய்கிறார்கள்...ஒரு முறை அங்கு ஸ்பா செய்யும் செலவில் நம் பியூட்டி பார்லர்க்கு வருடக்கணக்கில் செலவிடலாம்..

நண்பர் சதீஸ்குமார் வெளிநாடு வெண்ணை தேவதைகள் பற்றி கூறுவார்..நிறைய வெண்ணெய் தேவதைகள் பறந்துக்கொண்டுதான் இருந்தனர்..அதுவும் இமிக்றேஷனில் எமிரேட்ஸ் விமான பணிப்பெண்கள் சேர்ந்து நின்றுகொண்டிருந்ததை பார்த்த பொழுது தேவதை கூட்டமே மேககங்களில் இருந்து இறங்கியது போல இருந்தது..

ஆனால் ஒரு வருத்தம்..ஒருவர் கூட தேவன்களை பற்றி கூறவே இல்லை..அதுவும் ஜெர்மனி போலிஸ்..நம் ஊர் சிக்ஸ் பேக் எல்லாம் ஒன்றுமே இல்லை என்று  சொல்லிவிடலாம்..அத்தனை கட்டுகோப்பான உடம்பு, உயரம் எல்லாம் கச்சிதம்..ஒரு கமோண்டா போல உடலமைப்பு ஒவ்வொரு போலிசும் ..முகமோ பால் போன்ற ஒரு அழகு..அதில் சிறிது கடுமையான கனிவும்..ஒவ்வொரு போலீசையும் பார்த்துக்கொண்டே வந்தோம்..பெண்ணோ, ஆணோ..அத்தனை கட்டுகோப்பான உடலமைப்பில், அழகான போலிஸ் பார்ப்பது முதல் தடவை..அசர செய்தது..

    விமானத்தில் நம்ம விஜய் படம் தமிழில் ஒன்று..ஏதேதோ படங்கள் மேய்ந்துக்கொண்டு , கொறித்துகொண்டு இறங்கியாச்சு..இமிக்ரேஷனில் செம கூட்டம்..ஏற்கனவே தோழி நியுயார்க் இமிக்ரேஷன் அளவுக்கு பாஸ்டன் இமிக்ரேஷன் இருக்காது என்று சொல்லி இருந்தார்.. ஸ்விட்சர்லாந்து, அமேரிக்கா இரண்டும் என் வெளிநாடு பயணத்தில் மனதில் இருந்தவை..ஆனால் போக முடியாமலே இருந்தது..அமெரிக்க மண்ணில் காலடி எடுத்து வைத்ததும்..அட்லாண்டிக் பெருங்கடலை பார்த்துக்கொண்டே கடக்கும் வேளையில் ஏதோ ஏதோ எண்ணங்கள் ..எத்தனை குடியேறிகள் இந்த அட்லாண்டிக கடல் வழியே..எத்தனை ஆப்ரிக்க அடிமைகள் உள்ளே வலுகட்டயாமாக கொண்டு வரப்பட்டனர்..அட்லாண்டிக் சமுத்திரம்..பெரிய சரித்திரங்களை விழுங்கிக்கொண்டு..சம்பவ சாட்சியாய் மேகங்கள் தவழ இருந்தது. குடியேறிகளின் நாட்டில் கால் வைத்தேன்.

அங்கு அமெரிக்க போலிசுக்கே உள்ள வழக்கமான கொஞ்சம் பூசின உடல்...ஜெர்மனி போலிசை பார்த்துவிட்டு வந்த கண்ணுக்கு அமெரிக்க போலிஸ் ஏமாற்றியது..வழக்கம் போல கியு அரட்டை..அரைவாசிக்கு மேல் மாணவர்கள்தான்..பாஸ்டன் கல்விக்கு பெயர்ப்பெற்ற இடம்.. குஜராத்தி பொண்ணு  ஒற்றையாக பிறந்தும் அப்பாவை சமாளித்து எப்படி கல்வி கற்க வந்தேன் என்று விவரிதுக்கொண்டு வந்தாள்.

ஆனால் இமிக்ரேஷன் ஆபிசர்..எதுக்கு வந்தாய் என்று கேட்க..விளக்க..உன் பையனா என்று விழி உயர்த்தினார்..நம்பவே முடியவில்லை என்றவுடன்..ஜீன்சை ஜேசு ஸ்டைலில் பையன் முறைக்க.நான் அவருடன் பேச ஆரம்பித்தேன்..


இந்தியா எனக்கு பிடிக்கும் எனக்கு பிரியாணி பிடிக்கும்..நீ செஞ்சு தருவியா என்றார்...இமிக்ரேஷன் மாமாவை ஐஸ் வச்சாவது வெளியே போக வேண்டிய கட்டாயமாச்சே..கண்டிப்பா என்று சிரிக்க..இங்கு பிரியாணி செய்ய முடியுமா.அதுக்கு சாமான் எல்லாம் கொண்டு வந்து இருக்கியா என்று கேக்க..யாருக்கிட்ட என்று தோன்றியது..

அரிசி, பருப்புகள்  உள்ள அனுமதி இல்லை என்று எனக்கு தெரியும் என்றேன்...நல்லா விவரமாக இருக்கிறாய் என்று சொல்லி காமிராக்கு முன்னாடி நிற்க சொல்ல..நானும் ப்ரோபைல் படம் எடுக்க போவது போல போஸ் கொடுக்க..கடைசியாக ஒரு வார்த்தை சொன்னார்.அந்த வார்த்தை பயணம் முடியும்  வரை என்னை துரத்த போவது அறியாமலே சந்தோஷமாக சிரித்தேன்...


7 comments:

Unknown said...

நல்ல சிறப்பான வட்டார வழக்கு சொல்லாடல்....நல்ல எழுத்து திறன்.இணையத்தில் இது போல கட்டுரைகள் பல நடுத்தர குடும்ப நண்பர்களுக்கு உதவும்....சிக்கனமாக செலவு செய்யவும் சொல்லி தரும் உங்கள் சொல்லாடல் அழகு சகோதரி.

வடுவூர் குமார் said...

கூடவே பயணிப்பது போல் உள்ளது.

கவிதை பூக்கள் பாலா said...

ஜீன்சை ஜேசு ஸ்டைலில் பையன் முறைக்க, இது தான் கிருத்திகா டச் போல , வார்த்தை கோர்வை மிக அழகு , கதை சொல்ற விதம் ஹம் கொட்ட சொல்லுது ..... நேர்த்தியான எழுத்து நடை

Rathnavel Natarajan said...

அமெரிக்க பயணம்..ஏழு..= முதல் பயணமாக இருந்தால் வரிசையில் பொறுமையாக நிற்க கண்டிப்பாக கற்றுத்தரும்..அதுவும் இடைவெளி விட்டு...யாரும் யார் அருகிலும்நிற்பது இல்லை..எல்லாமே ஒரு இடைவெளி..கார்களும்..மனிதர்களும்..ஈஷிகொள்ளவே முடியாது..= அருமையான பயண தொடர் பதிவு - எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி Kirthika Tharan.

டாக்டர் பெ.சந்திர போஸ் said...

மிகச் சிறப்பாக சுவையாக எழுதப்பட்டுள்ளது. இந்த அமெரிக்க பயணம் கட்டுரையின் மற்ற பகுதிகளையும் படிக்க விரும்புகிறேன். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்கா செல்ல இருக்கும் எனக்கு வழி காட்டுதல்களாக இருக்கும்.லிங்க் அனுப்ப முடியுமா?

Avargal Unmaigal said...

சுவாரஸ்யமான நடையில் நல்லா எழுதியிருக்கீங்க.இப்பதான் தொடர் சூடு பிடிக்கிற மாதிரி இருக்கிறது.... இதை படிக்கும் போது நாங்கள் முதல் முறையாக அமெரிக்கா வந்த போது ஏற்பட்ட நிகழ்வுகள் மனதில் வந்து செல்கின்றன... தொடருங்கள்

”தளிர் சுரேஷ்” said...

இது முதல் வருகை! மதுரை தமிழன் தளம் மூலம் உங்கள் தளம் அறிந்தேன்! சுவாரஸ்யமாக செல்கிறது பயணக்கட்டுரை! முந்தைய பகுதிகளை நேரம் கிடைக்கையில் படிக்கிறேன்! தொடர்கிறேன்! நன்றி!