Sunday, October 12, 2014

விமர்சினம்..கிளாஸ் ஆப் ரவுடிஸ்..

கிளாஸ் ஆப் ரவுடிஸ் (Short Film - Class of Rowdies)
ஒரு ஏழு நிமிடம்..வாழ்க்கைகான செய்தியை சொல்ல முடியுமா?
அற்புதமா..மனதை கனக்க செய்ய முடியுமா?
சுவாரசிய மசாலா போல ஆரம்பித்து முடிவில் அழகான செய்தியை புதைக்க முடியுமா?
மாடர்ன் பள்ளி என்று நாம் அழைக்கும் பள்ளிகளில் bullyingபற்றி சின்ன ஷாட் ல் உணர்த்த முடியுமா?
ஒவ்வொரு குழந்தையின் விஷமத்தனத்துக்கும் பிறகு இருக்கும் திறமையை கொண்டு வருவதை எளிதான விஷயமாக்க முடியுமா?
இப்ப இருக்கும் ஆசிரியர்களின் ஒரு பக்கத்தை உணர செய்ய முடியுமா?
இதெல்லாம் ஏழு நிமிடத்தில் கொண்டு வர முடியுமா? முடியும்..
ஜா(சா)ரா சான்ஸே இல்லை..அமுங்கி கிடக்கும் சில்வியா பாத் மன நிலை குழந்தையை போல..கொஞ்சம் பயம் கூட வருகிறது..
அப்படியே கொஞ்ச நாளில் அந்த வகுப்பை மாற்றிய ஆசிரியையின் சாதனை..
அத்தனை பேரும் குழந்தைகளிடம் இருந்து கற்றுக்கொள்ள மறந்துவிட்டு அவர்களை நாலு சுவரில் அடக்கி வைத்து முடக்குவதால் எப்படி மாறுகிறது என்று விளக்கி இருக்கிறது படம்..
ஒரு புத்திசாலி மாணவனை, அவனுக்கு தெரிந்த விஷயத்தை அடக்கி வைத்து இதைதான் கத்துக்கணும் என்று சொன்னால் என்ன ஆகும் என்று அனுபவபூர்வமாக உணர்ந்தவள்..ஒரு மாணவன் இல்லை பலரை பார்த்து இருக்கிறேன்..
மாணவனிடம் கேட்பதே இல்லை..உனக்கு என்ன கற்றுக்கொள்ள வேண்டும் என்று..கற்றுக்கொள்ளலை அழகாக ஆக்க வேண்டும்..
ஒரு ராக்கெட் ஷாட் ல் அவர்களின் கற்றுக்கொள்ளும் சுதந்திரத்தை காட்டி பறக்க விடுகிறார்..
ஏழு நிமிடத்தில் தவறும் இருக்கு..எல்லாரும் பணக்கார மாணவர்களாக தோற்றம் அளிப்பதும்..சாரா கவிதை வாசிக்கும் பொழுது பின்னணி இசையும்..
ஆனால் மொத்தத்தில் அது பெரிய விஷயம் இல்லை..எல்லா பள்ளிகளுக்கு போட்டு காட்ட வேண்டிய படம்..முக்கியமாக ஆசிரியர்களுக்கு..கொஞ்ச நேரம் முன்பு நண்பர் சொன்னார்..கற்றுக்கொள்ள வேண்டியது மாணவர்கள் அல்ல ஆசிரியர்கள் என்று..நிஜம்.
படத்தை பார்த்து விட்டு மூன்று நிமிடமாவது மனம் கனக்கும்..கொஞ்சம் துளி சொட்டு கண்ணில் எட்டி பார்க்கும்..கமர்ஷியலாகவும் அழகு படம்..
மாற்றங்கள் வர வேண்டும்..இல்லாவிட்டால் வகுப்பின் சூழல்..நினைக்க பயமாக இருக்கு..
அட்டகாசமான படத்தை பார்க்க வைத்த ஓசை செல்லா க்கு நன்றி..

ஜன்னல் 4

ஜன்னல் -நாலு..
தலைமை கோட்டை சுவர் கம்பீரமாக நின்றது..சுற்றி கார்பரேட் ஆபிஸ் புல்லட் ப்ரூப் கண்ணாடி சுவர்கள் சுற்றி வளைத்து சரியான டிரெஸ் கோடில் நின்றுகொண்டு இருந்தன..
வட்ட மேஜை மாநாடு..மிக ரகசியமாக எல்லா சுவர்களின் ஐ-டிக்கள் நிறங்கள் சரி பார்க்கப்பட்டு உள்ளே விடப்பட்டன..அப்பார்மென்ட் சுவர் தலைவர் முதலில் நின்றது..எல்லாம் Gated Community செய்துவிட்டோம்..சில வீடுகளை தரை மட்டமாக்கி விட்டால் போதும்..அத்திப்பட்டிகிராமம் மட்டும்தான் மிச்சம் என்றது..பக்கத்தில் இருந்த சுவர்..அதுதான் கெசட் ல இல்லையே ஏன் வாய்விட்டாய் என்று கல் தோளை தட்டிற்று..
கார்பரேட் சுவர்கள் மகிழ்ச்சியாக ஆரவாரம் ஜல்லி செய்தனர்...எல்லா மனிதர்களையும் அடைத்து ஆயிற்று..அடுத்து..
நாங்கள் விவசாய வேலி சுவர்கள்..விவசாயம் எல்லாம் சுவருக்குள்..உங்கள் சொந்த நிலங்கள்..விவசாயிகளுக்கு இனி நிலம் இல்லை..
ஆஹா, ஆஹா..என்று விவசாய காரபரேட் தலைமை சுவர் கல் தட்டிற்று..
நாங்கள் அரசாங்க சுவர்கள்..கோட்டை சுவர் சொல்படி எல்லா அதிகாரிகளும் நம் கையில்..
அடுத்து ஹோட்டல், கடைகள் அனைத்தும் அடங்கிய மால் சுவர்கள்..எல்லா வியாபாரமும் நம் மூலம் மட்டுமே..
கம்பீரமாக வந்த வெள்ளை சுவரை அனைவரும் மரியாதையோடு பார்த்தனர்..அத்தனை மருத்துவமனைகளும் நம் கையில்..ஒரு நோயாளி கூட தப்பிக்கவில்லை..வெளியே எங்கும் போக முடியாது..
வரிசையாக தொழிற்சாலைகள், மீடியாக்கள், அரசாங்க அலுவலகங்கள், வழிபாடு இடங்கள்..கண்ணுக்கு தெரியாத மெல்லிய தொடு திரை போல உள்ள ஆன்லைன் சுவர்கள்..பாங் சுவர்கள் எல்லாம் தத்தமது ரிப்போர்ட் சமர்ப்பித்தன...
கோட்டை சுவரும், கார்பரெட் சுவர்களும் எழுந்தது..நாம்தான் உலகை ஆள்கிறோம்..மனிதர்களுக்கு இது தெரியவேண்டாம்..அவர்கள் அப்படியே செயல்படட்டும்..ஏமாளிகள்..
ஒரு சுவரின் சந்தேகம்..நாம்தான் எல்லாவற்றையும் கட்டுக்குள் கொண்டு வந்தாயிய்ற்றே.இன்னும் எதற்கு அவர்கள் உதவி?
வேண்டும், வேண்டும்..அவர்கள் உழைப்பு இல்லாமல் ஒரு சுவர் கூட எழும்ப முடியாது..அனைவருக்கும் அனைத்து வசதிகளும் கிடைக்கட்டும்..உழைப்பதற்கு நாமே காசு கொடுப்போம்..மால், உணவு பொருள், மருத்துவமனை, ரோட் டாக்ஸ் , டால், பொது டாக்ஸ் எல்லாம் உற்பத்தி பொருட்கள் எல்லாம் நம்மிடம் வாங்குவான்..அவனே சந்தை..ஆனால் அவன் என்றுமே நம் தொழிலாளி..புரிகிறதா..
ஆஹா, ஆஹா கல் தட்டிற்று ஆணவமாக கார்பரேட் சுவர்கள்..
தூரமாக ஒரு சுவர் ஓடிக்கொண்டு இருந்தது..குழந்தைகள் கிறுக்கிய ஒற்றை பள்ளிசுவர்..குழந்தைகளை மட்டுமாவது என்ற துடிப்போடு..

ஜன்னல் 3

ஜன்னல் கதை 3
காரை விட்டிறங்கி பேருந்தினாள்..யுவதி... இருபக்கமும் மஞ்சள் தேய்த்து ,கனகாம்பரம் வைத்த பெண் கொஞ்சம் நகரும்மா என்ற கண்டக்டர் சொன்னதுக்கே சுற்றுமுற்றும் புன்னகை கண்ணோடு பார்த்து வெட்கபூரிப்புடன் ஒதுங்குவதை பார்த்து இன்னும் இதுபோன்ற மனங்களும் என்ற எண்ணத்துடன் ஸ்லேட், ஸ்லேட் ஆக கையில் வைத்திருந்த ஜீன்ஸ் யுவதிகள் வரிசையில் நின்றுக்கொண்டாள்.
பொதுவுடைமை பள்ளியிலும் பார்த்திராத பெண் பேருந்தில் தரிசித்துவிட்டு ஆண்களை நோக்க.. நோக்கியா போன்ற சிலவற்றில் கண்ணும் கருத்துமாய் அல்லது வெற்றிடம் நோக்கி, வெளியே நோக்கி என்றே பெண்ணை நோக்கிய பார்வை இல்லாமல் இருப்பது வித்தியாசமாய் இருந்தது..
வெளியெங்கும் உள்ள கண்களை நோக்கி, நோக்கி தரிசித்த கண்களில் எந்த கண்ணும் அவளை பார்க்காமல் போய்..கண்கள் பூத்து.. ஃபேஸ்புக் ல் எழுதினாள் ஆண்கள் பார்வை சரியில்லை என்று...

ஜன்னல் -2

ஜன்னல் கதை 2
நேசம் மைக் பிடித்து கத்திக்கொண்டு இருந்தது.."நேசியுங்கள், மனிதர்களை, மரங்களை, விலங்குகளை, இயற்கையை..நேசம் அற்புதமானது.. நேசமே மனதின் போதை..etc ...." உணர்ச்சிவசப்பட வைத்தது பேச்சால்..கூட்டம் நேசத்தின் மயக்கத்தில்..
கி,கி,கி,கி..மூலையில் சிரிப்பு..அவனை பார்த்த அவள்..ஏன் என்பது போல..வினாகுறி பார்வையில் பதில் தேடினாள்....கொஞ்ச நாளா நான் கொடுத்த போதை பேச வைக்கிறது என்றான்.. ஆவலாக இவள் நேசத்தை விட்டுவிட்டு திரும்பினாள்..
அவன் அமர்ந்த நாற்காலி, மைக், காலையில் தின்ன பிரியாணி, இப்ப குடிச்ச சோடா, சதுர அடி பத்தாயிரம் உள்ள இடம், தண்ணீர் ,கரண்ட்,மளிகை,EMI பில்கள், போட்டிருக்கும் உடை..முச்சா போக மூன்று ரூபாய் வரை நான் இருக்கும் போதை..என்று போக.....
நீ யார் என்றாள்..
நான் பணம்..ஒரு நாள் செல்கிறேன்..மைக் கில் என்ன சொல்கிறான் என்று கேள்..என்றான்..
இரு நான் உன்கூட வருகிறேன்..அவன் கதை நமக்கெதுக்கு நான் உன்னை நேசிக்கறேன்..என்று தோள் தழுவி பென்ஸ் ல் ஏறினாள்..
நேசம் சோர்வாக மைக் கில் விக்கி அழ ஆரம்பித்தது..
DOT

ஜன்னல் 1

ஜன்னல் கதை..1
காலையில் ஆன்லைன் எப்.எம் ல் ஒலித்த வாழ்வே மாயம் மனதிலும்.ஹம் செய்துக்கொண்டே குளித்து உயரக்கொண்டை துண்டுடன் அலமாரியை திறந்தவள் அதிர்ந்தாள்.
நீலத்தில் பல, கருப்பில் சில என அடுக்கிவைக்கப்பட்ட தடிம துணி கால்சராய்கள் ......அடுக்கிவைக்கப்பட்ட இடத்தில் பல முகங்கள் சிரித்துக்கொண்டு இருந்தன...ஒவ்வொன்றும் ஒரு வீர வசனம் பேசியப்படி...ஒன்றை விரட்ட இரண்டு, நான்கு, எட்டு, பதினாறாகி..பல்கி பரவியது..
பயந்து சாத்திவிட்டு உடல் நடுங்க அமர்ந்தவள் துணிந்து உதறினாள். உடுத்த இருந்த கால்சராயில் இருந்த முகங்கள் தரையெங்கும் சிதறி இன்னும் வீராவேச வசனங்கள். பேசியதை உற்று நோக்க.....
கொஞ்சம் நடிங்க பாஸ் மக்கள் பேசும் வீர வசனங்கள் நினைவுக்கு வந்து விழுந்து விழுந்து சிரித்துவிட்டு முகங்களை பத்திரமாக்கினாள் நாளைய ஆதித்யா என்டேர்டேயின்ட்மென்ட் க்கு..
Disclaimer..
இந்த கதை கற்பனை..


Sunday, October 5, 2014

எங்கெங்கும் மின்சாரம்....ஷாக்.

பயணம்...வாழ்கையின் கற்றுக்கொடுக்கும் பகுதி..வாழ்க்கையின் மிகப்பிடித்த பகுதியும்....எதுவுமே அலுத்தாலும் பயணம் மட்டும் அலுப்பது இல்லை.. லட்சியங்கள் என்று சில எனக்கு இருந்தால் அவை பயணம் சார்ந்ததாகவே இருக்கிறது..

இந்த அஞ்சு நாளில் சிங்கப்பூர் ட்ரிப் முதல் சிங்காநல்லூர் அம்மா வீடு வரையான பல கதைகளை கேட்கும் குழந்தைகள் கண்டிப்பாக நம்மை வீட்டில் இருக்க விட மாட்டார்கள். கடந்த மூன்று வருடங்களாக அக்கா வீட்டில் தசரா விடுமுறைக்கு போய்விட்டு விஜயதசமி அன்று சரஸ்வதி அம்மன் கோவில் போகும் பழக்கமும் இருந்தது..அங்கு ஹால் டிக்கெட் எண்களை குழந்தைகளும், பெற்றோர்களும் வேண்டுதலோடு எழுதி வைத்து இருப்பார்கள்..அந்த நம்பிக்கை நிறைவேற்றும் என்ற நம்பிக்கை வரும்.

பேச்சு ஜோக் நீர்வீழ்ச்சி ஆரம்பித்து, கூர்க், மைசூர் எல்லாம் சுற்றிவிட்டு கடைசியில் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக சிவனசமுத்திரம் நீர்வீழ்ச்சியில் வந்து நின்றது.(எத்தனையோ தடவை போக பிளான் செஞ்சு தவறிய இடம்)  முதல்நாள் முடிவெடுத்து கிளம்பியதால்..கூகிளாண்டவர் மைசூர் ரோட் வழியாக செல் என்று உத்தரவு கொடுத்ததாலும்...காமாட் லிருந்து காபி டே, எம்பயர் வரை வரிசை கட்டி நிற்கும் ஹோட்டல்களை நினைத்து நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு கிளம்பியாச்சு..வீட்டில் என்னை சாப்பாடு கட்டிக்க எடுத்து சொல்லியும் ( ஆமா இவங்களுக்கு வேற வேல இல்ல..எப்ப பாரு வீட்டு சாப்பாடுதானா....ம்ம்ம்க்கும்..என்று மனசுக்குள் தோளில்இடித்துக்கொண்டு..நேரில் எல்லாம் பயண நேரத்தில் முறைத்துக்கொள்ளப்பிடாது என்ற கொள்கை ) எதுவும் எடுத்துக்கொள்ளாமல் கிளம்பி ஆயாச்சு.ஜூஸ், பிஸ்கட் பாக்கெட்டுகள் மட்டும்.

மைசூர் ரூட் ல போகலாமா என்று தொங்கி கொண்டு இருந்த 
நெட்டு டன் உள்ள என் போனை கேட்டபொழுது..அப்படி ஒரு ரோடா..கனகபுரா வழியாக அல்லவா செல்ல வேண்டும் என ஆணையிட..இவரிடம்..ஹையோ..மைசூர் ரோட் இல்ல..தப்பா போறீங்கன்னு சொல்ல..நன்றாக வழி தெரிந்த ஆளையும் குழப்பி..நைஸ் வழியே கனகபுரா ரோட் போய் சேரலாம் என்று சொல்லி..கிளம்பியாச்சு..

நைஸ் டால் ரோட் தான்..ரொம்ப பிடித்த சாலை..அதன் நேர்த்தியை இது வரை எந்த சாலையிலும் கண்டது இல்லை..நிஜமாகவே வெளிநாட்டுத்தரம்..

இப்படியே சுற்றிக்கொண்டு  இருந்ததில் செம பசி..எப்படி இருந்தாலும் அங்கு தரமான உணவகம் இருக்கும் என்று..போறோம், போறோம், போய்க்கொண்டே இருக்கோம்....ஒரு காபி டே மட்டும் கண்ணில் பட்டது..பிறகு ஒரு அழகான உணவகம்..வாசலில் நிறைய கார்கள்.. அத்தனை பெண்களும் வேற்று நாட்டு கலாசார உடையில்..நல்ல வேளை நான் கம்பளி போர்த்திக்கொண்டுதான் சென்றேன்...எனவே எந்த ஆண்களும் என்னை மோசமாக பார்க்கவில்லை..கையை பிடித்து இழுக்கவில்லை...வேற்று நாட்டு பாணி உடையில் இருந்த அவர்கள்  கதியை நினைத்து கண் இரண்டும் கலங்கி..மனம் பதை பதைத்து..இவர்கள் பாதுக்காப்பை பற்றி நினைக்கவே உடல் நடுங்கியது..சரி..என்று கண்கலங்க வாயில் தோசையை வைத்தால் எண்ணை சகிக்கவில்லை.இட்லி கல்லுப்போல. (கனகபுரா ரோட் வழியில்)

வழியெல்லாம் உஷாரா இருந்தவர்கள் மரத்துக்கு ஒன்றாக பெட்ஷீட் விரித்து உணவு உண்டுகொண்டு இருந்தனர்...இனிமே நாமே இது போன்ற முக்கிய சாலைகளில் உணவகம் ஆரம்பித்து..ப்ரான்சைஸ் கொடுத்து..லட்சம், லட்சமா பணம் அள்ள வேண்டும் என்ற கனவை இவரிடம் புலம்பிக்கொண்டு..எதையோ சாப்பிட்டுக்கொண்டு போய் சேர்ந்தோம்...அரைபட்டினியா இவர்களும்..எதையோ அரைத்துக்கொண்டே  நானும்..

எங்கு பார்த்தாலும் மயூரா ரெஸ்டாரன்ட் என்று பலகை..(போர்ட்)..அதை கண்டுப்பிடிக்கவே முடியவில்லை..கர்நாடாக டூரிசம் போர்ட் வைப்பதோடு வேலையை முடித்துக்கொள்வார்கள் ..

முதலில் கங்கன சுக்கி பால்ஸ்..அது மட்டும் என்று நினைத்துக்கொண்டு போனால்...கொஞ்ச தூரம் சென்றால்தான் பற சுக்கி பாலஸ்..அதுதான் முக்கியம்..அங்குதான் நீர்வீழ்ச்சி அருகே பரிசலில் கொண்டு செல்வார்கள்..அவரிடம் எத்தனை அடி என்று கேட்டேன்..அம்பது..என்றார்..இது வரை விபத்து? குளிக்கிறப்ப சமீபமா நாலேஞ்சு பேர் போயாச்சு..அதுக்குதான் போலிஸ் என்றார்..நூற்றுக்கணக்கான மனித தலைகளுக்கு மத்தியில் இரு போலிஸ்க்காரர்கள் தெரிந்தனர்...பாதுக்காப்புக்கு.. 

ஆனாலும் கவலைப்படாம இரண்டு முறை பரிசலில்..நீர்வீழ்ச்சி அருகில் ... அதுவே முப்பது அடி தூரம் கண் சிமிட்டும் நேரத்தில் தள்ளி விடுகிறது..ஒரு நாளைக்கு எத்தனை பரிசல்களை இது தள்ளுது என்று நினைத்துக்கொண்டேன்..

வரும் வழி முழுக்க தஞ்சை நினைவு...அத்தனையும் பச்சை.. வாழை, தென்னை, நெல் ,கரும்பு, வாய்க்கால், தண்ணி...அந்த காலத்தில் நாங்களும் இப்படித்தானே என்ற பெருமூச்சு வராமல் இல்லை..ஆனால் அங்கயும் விவசாயிகள் வாழ்க்கை சொல்லிகொள்ளும்படியோ, பொறாமை கொள்ளும்படியோ இல்லை...

சாம்ராஜ்நகர் தொகுதியை தொட்டால் பதவி போகும் என்று ஒரு நம்பிக்கை உண்டு..சில முதல்வர்கள் பதவி இழந்த கதைகள் உண்டு..நல்ல வேளை எந்த பதவியும் இதுவரை  நான் ஏத்துக்கலை..

வழியில் குட்டியானையில் சீட்டு போட்டது போல ஒரு வாகனத்தில் பயணம்  போவதை நிறைய பார்த்தேன்.நம் ஷேர் ஆட்டோ போல..அதில் பின்னாடி கால் தொங்கபோட்டுகொண்டு மிக மகிழ்ச்சியாக கதையாடிக்கொண்டே வருவதை பார்க்கும் பொழுது கார்ல வருவது வரமா, சாபமா னு புரியவில்லை..ஆனால் அதில் சென்றவர்களும் சிலர்  மேல்நாட்டு பாணி உடை..அதுவும் கட்டுப்பாடான  மண்டியா மாவட்டத்தில் அணிந்துகொண்டு சென்றதை பார்த்து பக் என்று ஆனது..பாதுகாப்பு பயம்...கண்கள் தளும்பியது..நல்லவேளை போர்வையில் தான் நான் போனேன்..

திரும்ப GPS போட்டு மைசூர் ரோடு வழியா மதுர் டிபனிஸ் ல மதுர் வடை பார்சலும், அடிகாஸ்ல சாப்பாடும் முடிச்ச பிறகுதான் ஹப்பாடான்னு ஆச்சு..

ஆனால் மைசூர் ரோடு விடவில்லை..இந்த பக்கம் வந்ததுக்கு தண்டனை ட்ராபிக்..எப்படியோ நீந்தி நைஸ் ரோடு பிடித்து..முக்கிய கடமையா எழுதி தள்ளியாச்சு..

ஆசியால முதன் முதலா நீர் மின்சாரம் இங்குதானாம்..அது இன்னும் இயங்கி கொண்டு இருக்கு. அந்த நீரின் பிறந்தவீடு , புகுந்த வீடு மின்சாரமும்  இன்னும் இயங்கிக்கொண்டு.. ஆனால் காவிரிக்கு மட்டுமா  மைசூர் வரலாறு?. 

Tuesday, September 23, 2014

நானும், புத்தகமும்..

என்னை பாதித்த புத்தகம்..

"இது யாருடைய வகுப்பறை" ஆசிரியர்..ஆயிஷா.இரா.நடராசன்.

கல்வி முறைகள் பற்றிய கேள்விகளும் விவாதங்களும் எப்பவும் எனக்குள் உண்டு..எங்காவது கல்வி பற்றிய புத்தகம் பார்த்தால் போதும்..வாங்கி விடுவது வழக்கம்..பல்வேறு பாடத்திட்டங்கள், மெக்காலே கல்வி முறைகள் பற்றியே படித்திருந்த எனக்கு கல்வி உளவியல், வரலாறு, அதன் வகைகள், பல்வேறு நாட்டு கல்வி முறைகள் பற்றி எழுதியதை படித்து விட்டு மனம் இன்னும் வெளிவரவில்லை..

உழைப்பு, உழைப்பு அத்தனை அபார உழைப்பு ..ஒரு பத்தி எழுத ஒரு தலையணை அளவு புத்தகத்தை படித்து இருப்பார், அதை தவிர
கள ஆய்வுகள்..பொது தகவல்கள்...எத்தனையோ புத்தகங்களின்  சாரத்தை ஒரே புத்தகத்தில் வாசித்து விடலாம்..

கல்வி முறைகள் பற்றி அறியாத பெற்றோர்களும், ஆசிரியர்களும் கையில் கட்டாயம் வைத்து இருக்க வேண்டிய புத்தகம்...கைகட்டி , வாயில் விரல் வைத்து இறந்து போன கும்பகோணம் பள்ளி பிள்ளைகள் கூட இந்த கல்வி முறையின் துக்கம் என்பதை அறிந்துக்கொள்ளும் பொழுது கனக்கிறது புத்தகமும்....ஒரு பேரிடர் மேலாண்மை பற்றி கூட அறியாத மாணவர்களும், ஆசிரியர்களும் இருக்கும் இந்தியாவில் ஒரு பக்கம் கல்வி சீர்திருத்தம் , CCE முறைப்படி பாடத்திட்டங்கள் மதிப்பீடு, அமெரிக்காவின் பொறாமை, என்று தொட்டு செல்லாத விஷயங்களே இல்லை..

ஒவ்வொரு பத்தியையும் எடுத்து ஒரு விவாத மேடை அமைக்கலாம், அதை பற்றி யோசிக்கலாம், ஏன், எதற்கு என்று கேள்வி எழுப்பலாம்..அத்தனை செறிவுள்ளதாக இருக்கும் வரிகள்..கையில் எடுத்த புத்தகத்தை மூச்சு விடாமல் வாசித்து விட்டேன்..ஆனால் புத்தக முடிவில் புத்தகத்தை முடித்துவிடும் வேகத்தில் மிக அதிக , அறிந்த தகவல்களை சுருக்கி விட்டாரோ என்று தோன்றுகிறது..

அதிக நாள் கழித்து படித்த உபயோகரமான தமிழ் புத்தகம்..அதை அறிமுகப்படுத்திய   விழியன் உமாநாத் அவர்களுக்குதான் நன்றி சொல்ல வேண்டும்..நல்ல நட்புகள் உருவாக நல்ல புத்தகங்கள் வழி செய்யும்..இனி என்னுடைய  பரிசு பொருள் பட்டியலில் இந்த புத்தகமும் கண்டிப்பாக இடம் பெறும்...அடுத்து எந்த பெற்றோருக்கு வழங்குவது என்று யோசிக்க துவங்கி விட்டேன். இது ஆசிரியரின் ஆய்வுக்கும், உழைப்புக்கும், அறிவுக்கும் கிடைத்த வெற்றி,,

நல்ல புத்தகம் என்பது முடிவை தேடாமல் நிறைய கேள்விகளை நம்முள் உருவாக்க வேண்டும்..இரண்டு நாளாவது அதை அசை போட வேண்டும்..இன்னொரு வாசிப்பை கையில் எடுக்க விடாதவாறு அதை பற்றி பகிர ஆசைப்பட வைக்க வேண்டும்.அதை செய்ய வைத்து இருக்கிறது ..

"இது யாருடைய வகுப்பறை"

விரைவில் குழந்தைகளுக்கு வசப்படும் இந்தியாவிலும் வகுப்பறைகள்..நம்பிக்கையுடன்..