Sunday, April 27, 2014

கண்ணீர், கண்ணீர்.

கண்ணீர் ,கண்ணீர்..
கண்ணீர் பற்றி அதிக கவனிப்பு கொஞ்ச நாளாக அடிக்கடி ஏற்படுகிறது. பொசுக் என்றால் கண்ணீர் விடும் குணம் எனக்கு உண்டு. அதனால்  நமக்கு Emotional Quotient மிக குறைவோ என்று தோன்றுவதுண்டு..
அலசலில் மிக கடினமான அலசல் நம்மை பற்றிய அலசல்தான். அதில் இருபக்கம் பார்த்து அலசுவது மிக கடினம். ஒரு பக்கம் அதுவும் நம் பார்வையை வைத்து மட்டுமே நம்மை அலசுவோம்..அப்படி அலச நினைக்கையில் இந்த கண்ணீர் விஷயம் என்னை அடிக்கடி இடிக்கும்.
.
சண்டை, பிரச்சனைகள் மட்டும் இல்லை சோக நிகழ்ச்சி மட்டுமே கண்ணீருக்கு காரணமாக இருப்பதில்லை..உச்சபட்ச டென்ஷனில் மெல்லிய அதிர்வு போதும்..கண்கள் கடலாக...  ஒரு வேலை முடியாத டென்ஷனில் சிறிது யாராவது அசைத்து விட்டால் போதும் .. அது கண்கள் வியர்க்க காரணமாகும்.

நான் மிக ஸ்ட்ராங் என நினைத்து கொண்டே இருப்பேன்..பெண்ணால் இது முடியாது என்று மூடி திறப்பதை தவிர வேறு எதற்கும் நினைத்ததே இல்லை..ஆனால் அவ்வப்பொழுது இந்த கண்ணீர் விஷயம் ஆட்டி பார்க்கும்.

ஒரு நண்பரிடம் கேட்டேன்..அதற்கு பெண்கள் வளர்ப்புதான் காரணம். அடுத்த நிமிடம் நீங்கள் அதை பற்றி யோசிக்க காரணம், அவரவர்  வளர்த்துக்கொண்ட   சுய ஆற்றல் என்று..பெண்ணுக்கும், பெண் போல வளர்க்கப்பட்ட ஆணுக்கும் கண்ணீர் வெளிப்படுவது சகஜம் என்று காரணம் கூறினார்..பெண்ணாக அடக்கிவைக்கப்பட்டு இயலாமையில் கண்ணீர் வெளிப்படுத்த சொல்லிகொடுப்பது சமூகம் என்பது அவர் கருத்து..அதில் இருந்து மீண்டு வர நினைத்தாலும் வருவது மிக கஷ்டம்..பெண்களுக்குள் உள்ளே அது சமூகத்தால் செலுத்தப்பட்டு இருக்கு என்பதும் அவரின் கருத்து..

எதை பற்றியும் முடிவான கருத்து வைத்துக்கொள்ளாமல் இருப்பது மட்டுமே..என்னுடைய ஒரே கருத்து. விவாதங்கள் மட்டுமே முடிவை சொல்லி விடுவதில்லை...இத்தனை எமொஷனாலாக ஏன் இருக்கவேண்டும்?.. கண்ணீர் விடாமல் இருந்து நாம் ஸ்ட்ராங் என்பதை ஏன் நிருபிக்க முடியவில்லை?

கண்ணீர் தேவைதான்..மிகபெரிய துக்கத்தில் வெடித்து அழுவது, தோள் கிடைத்தவுடன் அழுவது போன்ற ஆறுதல் உலகத்தில் எதுவுமில்லை..கண்ணீர் இல்லாவிட்டால் உலகில் இன்னும் பல தற்கொலைகள் நடந்து இருக்கும். மன நோயாளிகள் அதிகரித்து இருப்பர். கண்ணீரும் வரமே..ஆனால் அது தேவை இல்லாத இடத்தில் அதுவும் அடுத்தவர்கள் முன் எட்டிப்பார்ப்பது போன்ற தர்மசங்கடமான விஷயம் எதுவுமில்லை..அதுவும் அடுத்த முறை அவர்களை எதிர்கொள்ளும் பொழுது ஒரு சிறு கூச்சம் ஏற்படும்..

மகனின் அன்பு, சிறு டென்ஷன், விருந்தினர் முன்னிலையில்  வீட்டினரின் சிறு விமர்சனமோ, கிண்டலோ, அவசரமாக வெளியே போகும் வேளையில் சாவியோ, இல்லை அது சம்பந்தமான பொருளோ தொலைவது , பழைய சோகமான நினைவுகள் , ஒரு சிலநெகிழ்ச்சியான பாடல்கள், அபரிதமான அன்பு,  தலை சூடாகி ஏறும் கோபத்தில் துளிர்ப்பு, கேள்விப்படும் இள வயது மரணம், எங்கோ ஏற்படும் புறக்கணிப்பு, நெகிழ்ச்சியான பேச்சு, தனிமை, பொறாமை, இயலாமை, வலி, மகிழ்ச்சி எத்தனையோ உணர்வுகளுக்கு  வடிகால் கண்ணீர் துளிகள்தான்..ஒரு சொட்டு விழும் நேரம் நெகிழ வைக்கும்..தொடர்ச்சியான கண்ணீர் எரிச்சலை தரும்.. எல்லாமே தருணம்..கண்ணீர் விழும் வேளை அன்புக்கு மனம் அலைகிறதோ என்று தோணும..ஏன் அலைய வேண்டும்? மனித மனம் ஏதோ ஒரு அன்புக்கும், அரவணைப்புக்கும் ஏன் அலைந்து கொண்டே இருக்கிறது..பெண் என்றால் கண்ணீர் வழியே தேடுவதும்,,ஆண் என்றால் பணம், கோபம் போன்றவற்றை வெளிக்காட்டியும்  (சில சமயமும் கலங்கியும் ) அன்பை நிருபித்து கொண்டே இருக்கிறது..

நிருபித்தல் எங்கே வருகிறது? எங்கு சந்தேகம் வருகிறதோ அங்கே நிருபித்தல்..ஆனால் மனிதன் அன்பை தவிர அத்தனையும் நிருபித்து கொண்டு இருக்கிறான்..பெண்கள் கண்ணீர் படாத தலையணைகள் இல்லை. ..ஒரு சொட்டாவது துளிர்த்து அமிழ்ந்து இருக்கும்..நிருபித்த அன்பை தேடியும், இயலாமை கோபமும் வடியும் இரவுகளில்..

பலமாக நினைக்கும் கண்ணீர் பலவீனமாக....

மூக்கை துடைத்தப்படி
ஜலதோஷம் என்றே
சிரிக்கையில் சிவந்த
கண்கள் பேசியதே..
   


4 comments:

ரிஷபன் said...

மனிதன் அன்பை தவிர அத்தனையும் நிருபித்து கொண்டு இருக்கிறான்..

வெளிப்படையாய் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் அனபைக் கொண்டு வந்து வைத்ததுதான் அதன் சிரமம் !

கரந்தை ஜெயக்குமார் said...

கண்ணீர் ஒரு வடிகால்
கண்ணீர் வந்தால்
மன அழுத்தம் குறையும்
நிம்மது பிறக்கும்
கருத்துரை பகுதியில் உள்ள Word Verificationஐ நீக்கிவிடுங்கள் சகோதரியாரே

பால கணேஷ் said...

அன்பை நிரூபிக்க கண்ணீர். மட்டுமின்றி... மன உணர்வின் வெளிப்பாடு. கண்களைச் சுத்தம் செய்ய இயற்கை செய்து தநத் சாதனங்களில் அதுவும் ஒன்று என்கிறது விஞ்ஞானம். எதுஎப்படியோ... கண்ணீர் விடுவதன் மூலம் (துக்கமோ சந்தோஷமோ) உணர்வுகள் பகிரப்பட்டு மனம் லேசாவது உடனடிப் பலன்.

Unknown said...

மிகப்பெரிய துக்கத்தில் வெடித்து அழுவது, தோள் கிடைத்தவுடன் அழுவது போன்ற ஆறுதல் உலகத்தில் எதுவுமில்லை..கண்ணீர் இல்லாவிட்டால் உலகில் இன்னும் பல தற்கொலைகள் நடந்து இருக்கும். மன நோயாளிகள் அதிகரித்து இருப்பர். கண்ணீரும் வரமே...
உண்மை உண்மை உண்மை...