Wednesday, November 11, 2015

பொன்னியின் செல்வி

பொன்னியின் செல்வி (நன்றி அகல் மின்னிதழ்)

இவள் ஜீவ நதியா இல்லை, இவள் பாதிக்கும் மேற்பட்ட தமிழகத்தின் ஜீவன். இவள் பொன் கொடுக்கும் பொன்னி. பொன்னெழுத்துகளால் வடிக்கப்பட்டு இருக்கிறாள் பல கவிஞர்களால், இலக்கிய கர்த்தாக்களால்.

நான் பிறக்கும் பல ஆண்டுகளுக்கு முன்பு நான்கு பேருக்கு காவிரியை ஒட்டி பயணம் செய்ய ஆர்வம் உண்டாகிறது. அதுவும் சிலப்பதிகாரத்தில் கோவலன், கண்ணகி நடந்த பாதையில்.

சிலப்பதிகாரம் சோழ நிலங்களை பாடிய அழகில், காவிரியையும், இயற்கை அற்புதங்களையும் கம்பருடன் அந்த இடங்களை தரிசிக்க வேண்டும் என்று ஆவல் வருவது இயல்பு. மிளிர் கல் என்னும் நாவல் - அதில் கூட கண்ணகி சென்ற பாதையில் செல்ல ஆசைப்படும் ஒருவரை பற்றிய கதை. கம்ப இராமாயண காட்சிகளை கண் முன் தரிசிக்க தோன்றும் அளவுக்கு கம்பர் ஆழமாக வேரோடி போயிருக்கிறார் இலக்கிய மனங்களில்.

நான் பிறந்தது காவிரியின் கிளை நதிகளில் ஒன்றான நாட்டாறு பாயும் கிராமங்களில் ஒன்று. கிராமத்தில் ஆரம்ப காலத்தில் வாய்க்கால்களில் டிபன் பாக்ஸ் போட்டு விளையாடுவதில் இருந்து, ஆற்றில் பாயும் புது வெள்ளத்தை ஓடிப்போய் பார்ப்பது, வெயில் காலங்களில் மணலின் மடியில் விளையாடுவது என்று காவிரியின் நீர் மற்றும் மணலின் மடியில்தான் சிறு பிராய காலங்கள் கழிந்தது.

‘நடந்தாய் வாழி காவிரி’ (தி.ஜா, சிட்டி) என்னும் புத்தகத்தை ரத்னவேல் அப்பா அனுப்பி ‘உனக்கு பிடிக்கும்’ அவசியம் படி என்று கூறினார். என்னமோ அதில் மனம் ஆரம்பத்தில் லயிக்கவில்லை. ஏதோ ஒரு கட்டத்தில் என் காவிரியும், தி.ஜா அவர்களின் காவிரியும் இணைந்தது. பிறகு மனதோடு எழுத்துகள் ஓட ஆரம்பித்தன.

இந்த புத்தகம் செல்லுமிடங்கள் பாதிக்கு மேல் நான் பார்த்தவை, பரிச்சயமானவை. சிலது மட்டும் வாசிப்பில் உணர்ந்தவை. சமீபத்தில் கூர்க் சென்றேன். அது   காவிரியின் பிறந்த மடி. அவள் நீர் தொட்டு விசேஷமாய் செல்லும் இடங்கள். காவிரிக்கு பெய்யும் மாமழைதான் நான் தங்கி இருந்த 140  வருட பிரிட்டிஷ் பங்களாவின் காபி தோட்டத்திலும் பெய்தது. கூர்க்கின் மண் தொட்ட சொட்டுகள்தான் நதியாய் பிரவாகிக்கிறது. போகும் இடங்களில் எல்லாம் காவிரி. ‘டுபாறே யானை முகாம்’ பாருங்கள் என்றார்கள். காட்டுக்குள் இருக்கும் என்றுப் போனேன். காவிரியின்  கட்டுக்குள் இருந்தது அந்த காடு. யானைகள் காவிரியில் குளித்துக் கொண்டு இருந்தன. முகாமுக்கு படகின் இக்கரையில் இருந்து அக்கரைக்கு செல்ல வேண்டும். வேகமாக படகில் செல்லும் பொழுது நீரை கையில் அளந்தேன். இக்காவிரிதானே என்னை வளர்த்தது என்று மனம் சிலிர்த்து அடங்கியது.

நூல் ஆசிரியர் சரியான காலத்தில் தலைக்காவிரி முதல் கூர்க்கின் பல இடங்களுக்கு நதியுடன் சென்று இருக்கிறார். இந்த இடங்கள் நாற்பது வருடங்களுக்கு முன் காடாக இருந்திருக்கக் வேண்டும்..
சிதாப்பூர் என்ற இடத்தின் மேல் செல்கிறோம். அங்கும் ஓடுகிறாள். அங்கு ஆசிரியர் பாம்புகளை, புலிகளை தேடியதும் அப்பொழுதே. அவைகள் இல்லை என்று கேள்விப்பட்டது பற்றி குறிப்பிடுகிறார் ஆனால் அவர் குறிப்பட்ட மூங்கில் புதர்கள் பல அழிந்து போனதால்தான் காட்டு மிருகங்கள் காபி தோட்டங்களுக்குள் புக ஆரம்பித்தன என்று விடுதியில் ஒருவர் கூறியது நினைவுக்கு வந்தது. அடுத்து நிசர்கதாமா என்ற இடம். காவிரி மிக சிறிதாய் வளைந்து, நெளிந்து பாறைகளுக்கு நடுவில் ஓடுகிறாள். இத்தனை சிறியவளா அததனை வேலைகளை செய்வது என்று ஆச்சர்யமூட்டுகிறாள்.

கூர்க் புடவைக்கட்டுக்கு கூட கதை இருக்கிறதாம். அந்த சமூகத்தினரின் திருமணம் பற்றிக் கூறும் பொழுது, அவர்கள் விருந்துக்கு அழைத்து இருக்கிறார்கள் இவர்கள் சைவர்கள். அவர்கள் புலால் பழக்கம். விருந்தின் பொழுது நட்புகள் இன்னும் இறுக்கமாகும். ‘சில பழக்க வழக்கங்கள் இடைஞ்சல்கள்தான்’ என்று சைவ பழக்கத்தை குறிப்பிடுகிறார். அந்த காலத்தில் கூட சைவத்தை பெருமை கொள்ள ஏதுமில்லை என்பதற்கான வரிகளில், அவரின் உயரம் மனதில் மேலும் அதிகரித்தது.

இந்த முறை எனக்கு பல இடங்களில் காவிரிக் கரை ஓரமாகவே பயணம். தற்செயலான நிகழ்வு எனினும் அதனால் ஏற்பட்ட ஒரு கிலேசம் அல்லது நெகிழ்வு அல்லது ஆர்வம், உற்சாகம் ஏதோ ஒரு உணர்வு ஆட்கொண்டு விட்டது. ஒரு வெறியோடு கண்களில் காவிரியை விழுங்கினேன். அத்தனைக் கஷ்டபட்டு காவிரி பயணம் மேற்கொண்டவர்களை நினைத்துப் பார்த்து எனக்கு கிடைத்த அதிர்ஷ்டத்தை வியக்காமல் இருக்க முடியவில்லை.

அடுத்து காவிரி பிருந்தாவன் கார்டனின் விளக்குகளுக்கு மத்தியில் நடனம் ஆடிவிட்டு நீர்த்தேக்கத்தில் உறைகிறாள். அப்பொழுது ஆசிரியர் பெங்களூரில் இருந்து மிக கஷ்டப்பட்டு சிவ சமுத்திரம் சென்று இருக்கிறார். ககன சுக்கி, பார் சுக்கி நீர் வீழ்ச்சி பார்க்க போகும் பயணம் கொஞ்சம் கரடு முரடாகவே இருந்து இருக்கிறது. அந்த பரிசலில் நான் சென்றப் பொழுது தி.ஜா போனது தெரியாமல் இருந்தது.  இன்னும் ரசித்து இருக்கலாம். அடுத்து ஹோய்சால வடிவத்தில் கட்டப்பட்ட சோமநாத கோவில், அடுத்து ஸ்ரீரங்கப்பட்டினம். சிதாப்பூர் வழியாக தலைக்காவிரி, அங்கு அகஸ்திய மாமுனிவரின் கோயிலுக்கு சென்று இருக்கிறார். அவர் சென்ற  காவிரி கரை ஓரங்களின் பல்வேறு பகுதிகளில் அகஸ்தியர் கோவில்கள் காட்சி தருகின்றன. காவிரியோடு தமிழும் ஊடே சேர்ந்து பயணிக்கிறது.  

அவரின் புத்தகத்தில் கண்ட காவிரியை பற்றி நாம் எழுத வேண்டும் என்றால் அதைப் போல மூன்றுப் பங்கு எழுத வேண்டும். அத்தனை நேர்த்தியான நடை. தேவையான விஷயங்களை மட்டும் சொல்லிவிட்டு மிச்ச விஷயங்களை மெலிதாகதொட்டுவிட்டு செல்கிறார். அதற்கு முன் காவிரிக்கரையில் உள்ள கோவில்களை பற்றி ஒரு புத்தகம், அதுவும் உதவி இருக்கிறது. அவர்கள் பார்த்த காவிரியோடு ஆசிரியர் தான் பார்த்த காவிரியை ஒப்பிடுகிறார். நான் பார்த்த காவிரியை என்னால் இயன்ற அளவு ஒப்பிடுகிறேன். ஆக மனம் என்பது ஒப்பீடுகளின் உருவமாக இருக்கிறது.

ககன சுக்கி, பார் சுக்கி நீர் வீழ்சிகளை பார்த்து விட்டு, அதைத் தாண்டி அர்காவதியை கடந்து காவிரி காட்டுக்குள் ஒரு இடத்தில் நதி ‘ஹன்னிரேடு சக்கர’ என்று பன்னிரண்டு முறை சுழலுமாம். எப்பேர்ப்பட்ட பொருளும் இந்த சுழலுக்குள் மாட்டிக்கொண்டால் தப்பிக்க முடியாதாம். இந்த சுழலை ஒரு முறையேனும் பார்த்து விட வேண்டும் என்ற ஆவல் தோன்றியது.

மனதில் நெடு நாள் ஆசை என ஒன்று உண்டு. காவிரி எந்த இடத்தில் நான் கண்ட, குளித்த ஆறாக மாறுவாள் என்று. கூர்க், மைசூர் போன்ற பெரும்பான்மையான பகுதிகளில் காவிரி, கற்கள் மேல் தான் பயணம் செய்வாள். கல்லும் முள்ளும் உள்ள பாதை திருச்சி அருகில் பட்டுப்பாய் போட்டது போல வெள்ளி ஜரிகை மணலாக இருக்கும். ஒகேனக்கல் தாண்டி காவிரி ஆறாக மாறுவாள் என்று நினைத்துக் கொண்டுருந்தேன். ஒரு முறை பவானியை தாண்டும் பொழுது அங்கும் காவிரி கற்களின் மேல்தான் பயணம் செய்தாள். இதைப்பற்றி பயணத்தில் சொல்லிக் கொண்டே வந்தேன் ஆனால் வீட்டில் இதெல்லாம் மேட்டரா? இதையெல்லாம் ஆராய்ச்சி செய்கிறாளே என்ற பார்வை பார்த்தவுடன் மனசுக்குள் அந்த விஷயத்தை புதைத்துவிட்டேன். ஆசிரியர் அந்த இடத்தையும் சுட்டிக் காட்டுகிறார். ஈரோடு அருகில்தான் காவிரி மணல் பாதையில் ஓடுகிறாளாம். அங்கு அதிகளவில் கூழாங்கற்கள் கிடைக்கும் என்று அதனையும் எடுக்க ஆசைப்பட்டு பார்த்து, பார்த்து அள்ளி கனம் தாங்காமல் அங்கேயே கொட்டிவிட்டு வந்திருக்கிறார். எனக்கு பூம்புகாரில் என்னுடைய சங்கு பொறுக்கும் காலம் நினைவு வந்தது. இதை படித்துவிட்டு உடனே ஈரோடு பக்கம் போய் ‘அந்தக் காவிரியை பார்க்க வேண்டும்’ என்ற ஆவலை தடுக்க முடியவில்லை. அந்தக் கூழாங்கற்களில் ஆசிரியரின் ரேகை பதிந்த கற்களும் இருக்கலாம். அந்த கற்களை பொக்கிஷமாக பத்திரப்படுத்த வேண்டுமென மனம் ஆசைப்பட்டது.

நொய்யல், சிறுவாணி, அமராவதி, பவானி போன்ற ஆறுகள் கொங்கு பிரதேசத்தை சேர்ந்தவை. அவற்றுக்கும் தஞ்சை பகுதிக்கும் உள்ள சம்பந்தம் பற்றி தெரியவில்லை. கொங்கும், தஞ்சையும் கொண்டான் கொடுத்தான் உறவு என்று ஆசிரியர் சொல்லுகிறார். மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகி கொங்கு பிரதேசத்தை வளமையாக்கும் அத்தனை ஓடைகளும், நதிகளும் காவிரியை நோக்கியே வருகின்றன. குடகும், மைசூரும் அவளின் பிறந்த பூமி மட்டுமே ஆனால் அவள் பங்கை எடுத்துக்கொண்டே அனுப்புகின்றனர். சேர நாடும், கொங்கு நாடும் சற்று மாறுதலாய் அவளுக்கு ஊட்டம் கொடுத்து சோழ நாட்டுக்கு அன்பாக அனுப்பி வைக்கின்றனர்.  காவிரியின் படத்தை இத்தனை நாள் கவனிக்காமல் போய் விட்டோம் என்று தோன்றி திரும்ப நதிகளை உற்று காண தூண்டியது.

சாயக் கழிவு பிரச்னை காவிரிக்கும் உண்டு என்று புரிந்தது. காவிரி நீர் குடித்து வளர்ந்தவன்(ள்) என்று சொல்லாத அறிமுகம் குறைவு ஆனால் அவளைப் பற்றி அதிகம் அறியாமல் இருக்கிறோம் என்று ஆசிரியர் தலையில் தட்டுகிறார். சேர நாடு அளிக்கும் நீரை சுமந்தபடி அகன்ற காவிரியாய் உருமாறுகிறாள். கொல்லி மலை போன்ற எத்தனையோ மலைகளில் உருவாகும் ஓடைகளும் காவிரியை நோக்கியே செல்கின்றன. அவளோ சோழபட்டிணமான பூம்புகாரை நோக்கி செல்கிறாள். ஆராய்ச்சியில் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கடற்கரை பட்டினத்தில் தமிழர்கள் வசித்து இருக்கிறார்கள். காவிரிக் கதையும், பூம்புகார் கதையும் அத்தனை தொன்மையோடு இருக்கிறது. இந்திர விழா காட்சிகளை கற்பனை செய்தபடி காவிரிப்பட்டினத்தை காண சென்றால் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும். ‘எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்’ என்றே பல இடங்கள் கடல் கொண்டு சென்றுவிட்டது. ஆசிரியர் கால் பதித்த பூம்புகார் கடற்கரையின் மணல் தடம் இன்று கடலுக்குள் இருக்கும் என்றே நினைக்கிறேன். மேலும் மேலும் கடல் நம் அருகில் நெருங்கி வந்தபடியே இருக்கிறது.

அதுபோல கர்நாடகத்தில், காவிரியின் கரையோரமாக சென்றால் மேகதாட்டிலில் இருந்து ஹோகனேக்கலுக்கு முப்பது மைலில் சென்றுவிடலாம் ஆனால் காரில் நூற்று இருபது மைல் சுற்றிப் போக வேண்டும் என சுவாரசியங்களை போகும் போக்கில் தூவிக்கொண்டே ஆசிரியர் செல்கிறார். அணைக்கட்டு விவரங்கள், அதன் மூலம் பாசனம் செய்யும் பகுதிகள் போன்ற விவரங்களையும் தெரிவிக்க தவறவில்லை. கிட்டத்தட்ட காவிரியின் வரலாற்றை 1971 ல் மீட்டு எழுதியதுப் போல இருக்கும்.



அடுத்து நான் படித்த இடமும் காவிரிக்கரைதான். ஸ்ரீரங்கத்தில் குளித்து இருக்கிறேன். அப்பாவுடன் அகன்ற காவிரி பாலத்தில் நடந்த ஞாயிற்றுகிழமை பேச்சுகள் வாழ்நாளில் மறக்க முடியாதவை. ‘க்வாலிடி டைம்’ எனப்படும் தனிமை நேரத்தை எப்படி உபயோகிக்க வேண்டும் என்று காவிரிக் கரையில்தான் அப்பா எனக்குசொல்லிக்கொடுத்தார். ஆண், பெண் கவர்ச்சியில் இருந்து அல்ஜிப்ரா வரை அனைத்தும் அந்த காவிரிக் காற்றின் ஊடே பேசி இருக்கிறோம்.

திருப்பாராய்த்துறையையும் விடவில்லை ஆசிரியர். அங்கே NSS கேம்ப் நடத்தி கிட்டத்தட்ட இருபது நாட்கள் அந்த அகன்ற காவிரியில் ஒரு ஓரமாக செல்லும் தெள்ளிய சூரியன் மின்னும் பாதரச நீரில் குளித்துவிட்டு மணல் புதைய புதைய நடந்து இக்கரைக்கு வரும்பொழுதே உடை காயும் அதிசயத்தில் நான் வாழ்ந்து இருக்கிறேன். ஹையோ... இப்படியா ஒரு புஸ்தகம் நம் வாழ்க்கை நினைவுகளை அணு அணுவாய் புரட்டிப் போடும்? ஆம் புரட்டிப் போட்டதே நிஜம். காவிரியின் ஒவ்வொரு இடமும் நினைவிடுக்கில் இருந்து அருவியாக கொட்டி ஆறாக பாய்ந்து ஓடையாக தழுவி மனதில் சாரலை வீசிக்கொண்டே இருக்கிறது.

அகன்ற காவிரியின் அகலத்தை அத்தனை எளிதாய் பார்வையில் கடந்து விட முடியாது. நீர் பாயும் பொழுது அக்கரை என்னும் எல்லையே இல்லாமல் பாய்வது போல தோற்றம் தரும். ஸ்ரீரங்கத்தில் கொள்ளிடமாக பிரியும் வரை காவிரி ஒரு தனி அழகு. கொள்ளிடம் வடிகாலாக இருப்பினும் அதன் பயன்களையும் ஆசிரியர் குறிப்பிட தவறவில்லை. கண்ணகி, கோவலன் இருவரும் திருச்சி வரை வந்து இருக்கின்றனர்.

உறையூர், சோழர்களின் தலைநகர் என்னும் அடையாளமே இல்லாமல் நிற்பதையும், ஒரு காலத்தில் கரூர் சேர மன்னர்களின் தலைநகர் என்பது கரூரில் யாருக்குமே தெரியாமல் போனதையும் காவிரிப்பூம்பட்டினம் கடலோடு சென்றதையும்... காலம் எதையும் மாற்றும் காட்சிகளை கண் முன்னே கொண்டு வருகிறார்.

காவிரி வழியாக கல்லணை வரை சென்று இருக்கிறார்கள். கல்லணை நினைவுகள் எனக்கும் உண்டு. வெறும் களிமண்ணால் கட்டப்பட்ட கல்லணை ஆங்கிலேயர்களுக்கு எப்போதும் வியப்புக்குரியதே. அன்றைய சோழ சாம்ராஜ்யத்தில் கல்லணையை காண்பதற்காக மட்டும் வெளிநாட்டுப் பயணிகள் வருகை புரிந்து வியந்திருக்கிறார்களாம்.

 கணவர் வழியில் முப்பாட்டானார்களில் ஒருவர் சித்தராகி ஜீவ சமாதி அடைந்துவிட்டார் என்று கேள்வி. அவரின் சமாதிக்கு ஒரு முறை குடும்பத்துடன் சென்று இருக்கிறோம். அப்பொழுது ஏதோ விஷ ஜுரம் வந்து கொத்து கொத்தாக மக்கள் மடிந்து இருக்கின்றனர். இந்த சுவாமிகள் ஏதோ மருந்து கொடுத்தும், ஊரை சுற்றி மருந்துக் கலந்த விபூதியை தெளித்து மக்களை காப்பாற்றியதில் அவர் ஊருக்கே சாமியாகி விட்டார். அவரின் சிஷ்யர்கள் தொடர்ந்து வந்து அங்கேயே சமாதி ஒன்றை கட்டியுள்ளார்கள். இதுபோன்ற சித்தர் கதைகள் எக்கச்சக்கமாக காவிரிக் கரை முழுக்க உள்ளது. இதையும் ஆசிரியர் விடவில்லை. எத்தனை தொன்மையாக காவிரிக்கரைப் பகுதிகள் இருகின்றன, எத்தனை எத்தனை கோவில்கள், தல வரலாறுகள், கதைகள் என்று அனைத்தையும் தன்னுடைய வசீகரிக்கும் எழுத்து நடையில் லேசாக கரையை தொடும் நதி போல நளினமாக குறிப்பிடுகிறார்.

அர்க்காவதியில் இருந்து அமராவதி வரை வந்து சேரும் ஆறுகள் ஒரு பக்கம் என்றால் குடமுருட்டி, கொள்ளிடம், வீர சோழனாறு போன்ற கிளை ஆறுகள் அடுத்த பக்கம். ஒவ்வொரு கரையுமே பெருங்கதைகளை தன்னகத்தே கொண்டு இருக்கிறது. அவற்றை ஒரு பயணத்திலோ, ஒரு புத்தகத்திலோ அடக்க முடியவில்லை என்பதை ‘நான் ஹிப்பியாகவோ, பண்டாரமாகவோ இல்லையே’ என்று சொல்லுகிறார்.

திருவையாறு தியாகராஜர் இசை மனச் செவியில் ஒலிக்க தொடங்கியது. பாட்டி, தாத்தா கை பிடித்து ஆற்றங்கரையோரம் அழைத்து செல்ல ஒரு பந்தலுக்குள் பலர் படுத்து இருந்தனர். அங்கயே படுத்துக் கொள்ள சொன்னார் தாத்தா. சவுக்கு கம்புகள் இருபக்கமும் கட்டப்பட்டு இருந்தன. காலையில் எழுப்பி காவிரியில் குளிக்க சொன்னார். பெண்கள் படித்துறை என்று நினைவு, லேசான குளிர். அங்கே குளித்துவிட்டு படுத்த இடத்துக்கு கொஞ்சம் தள்ளி உட்கார்ந்தால் எல்லாரும் சேர்ந்து ஒரே குரலில் பாட... அதுதான் தியாகய்யர் உற்சவம் என்று தெரிந்துக்கொண்டேன். சிறு வயதிலேயே அந்த இசை மெய் சிலிர்க்க வைத்து இன்னும் இடுக்குகளில் இசை துணுக்குகள் ஒட்டிக்கொண்டு மீட்கும் போதெல்லாம் இசைக்கின்றன.
அவர் சொன்ன கும்பகோண வீதிகளில் நடந்து இருக்கிறேன். அய்யம்பேட்டை தெருவில் நடமாடி இருக்கிறேன். சுந்தரபெருமாள் பாலத்தை நானும் தாண்டி இருக்கிறேன். அங்கு இருக்கும் நல்லூர் என் கணவரின் மூதாதையர் ஊர். அங்கு உள்ள சிவன் கோவிலில் லிங்கம் சுயம்பு. ஐந்து நிறத்தில் இரண்டரை நாழிகைக்கு ஒரு முறை வர்ணத்தை மாற்றிக்கொள்ளும் இயல்புடையது. இதுபோன்ற எண்ணற்ற மர்ம கதைகளை, மகத்துவங்களை, சித்தர் கதைகளை சுமந்துக் கொண்டே திரிகிறாள் காவிரி. பாபநாசம், சுவாமி மலை, கும்பகோணம், திருபுவனம், ஆடுதுறை, மல்லியம், கொரநாடு வரை வந்து மயிலாடுதுறையில் உள்ள லாக்கடம் என்னும் இடத்தில் மிக முக்கியமாக கருதப்படுகிறாள். ஐப்பசி மாதத்தில் மயிலாடுதுறையே விழாக்கோலம் பூண்டிருக்கும். ஒவ்வொரு கோயிலிலும் விசேஷங்கள், தேர்கள் என கண்கள் சுழலும் இடங்கள் அனைத்திலும் விழாக்கள்.


துலாக்கட்டம் என்று பெயரே மருவி லாக்கடம் என நிலைத்து விட்டது. கடமுழுக்கு கூட்டத்தை பற்றியும் ஆசிரியர் அழகுற பிரஸ்தாபித்திருக்கிறார். நான் சிறு வயதில் நதியா தோடு, டிஸ்கோ ரப்பர் பேண்டுகள் வாங்கிய விழா. கங்கை காவிரியில் ஐக்கியமாவதாக ஐதீகம். எனவே கூட்டம் அள்ளும். மாசி மக கூட்டத்தை இங்குள்ள காவிரியிலும் காணலாம்.

மயிலாடுதுறையில் வள்ளலார் கோவில் இருக்கும் பூம்புகார் பாதையின் ஊடேதான் சிலப்பதிகாரம் பயணப்படுகிறது. வரலாற்று சிறப்பு மிக்க பாதை என்பதையே நாங்கள் மறந்து விட்டோம். அதனையும் நூல் மீட்டிருக்கிறது. உவகை கொள்ளும் கரிப்பாய் பூம்புகார் கடற்கரை நினைவுகள் வேறு. பவுர்ணமி அன்று அமைதியாக பார்த்த இடத்தில இந்திர விழாவையும், மாதவியின் யாழையும் மனதோடு இசைத்து பார்த்து லயித்தபடி இருக்கிறேன்.

அடுத்து எங்களூர் வாஞ்சியாறு எங்களுக்கு வடிகால் என்னும் திட்டமிட்ட வடிவமைப்பு அதே சமயம் வேறு பகுதியில் உள்ள வயல்களுக்கு அது வாய்க்கால். தற்போது தூர் வாரும் பணி என்று திட்டமிடாது செய்வதாக கேள்வி.

ஒரு புத்தகம் எந்தளவுக்கு ஒருவரை பாதிக்கிறது என்பது வாசகனாக மாறும் பொழுது மட்டும் உணர முடியும். இந்த புத்தகம் அதற்கும் மேல். காவிரி பற்றி யார் எத்தனை எழுதினாலும் தீராது.
நன்றி http://www.pratilipi.com/read?id=4998994631589888&page=16

அது தீரா நதி.. உணர்வுப்பூர்வமாக 

Tuesday, November 3, 2015

வாத்து ராஜா

வாத்து ராஜா.

ஒரு புஸ்தகத்தை எளிதாக நான் படித்து எடைப் போட முடியும் என்ற எண்ணத்தை  ஒரு எளிய கதையால் பொடி பொடியாக ஆக்க முடியும் என்று எதிர்பார்க்கவில்லை.

சிறுவர்களை சிறுவர்களின் மனதோடு மட்டுமே அணுக முடியும் என்று விஷ்ணுபுரம் சரவணன் அழுத்தி சொல்லி இருக்கிறார். ஆனால் மிக மிக எளிமையாக.கதை என்று பெரிதாக இல்லை, அழுத்தமான எழுத்து இல்லை. மிக எளிமை..எல்லாமே எளிமை. அத்தனை எளிமையில்தான் குழந்தைகளை கவர் முடியும் என்று சொல்லி இருக்கிறார்.


ஒரு ராஜா தன் முட்டாள்தனத்தால் வாத்து ராஜா என்று ரகசியமாக அழைக்கப்படுகிறார். அதை காவலன் வாத்து ராஜா வருகிறார் பராக், பராக் என்று டங் ஸ்லிப் ஆகி உளறிவிடுகிறான். அதுவும் அந்த காட்சிக்கு ஒஜு சிரித்த சிரிப்பு..அதை திருப்பி படிக்க சொல்லி கேட்டுவிட்டு உடனே இதை அங்கிள் (விழியன்) எழுதினாரா என்று கேட்டான். இல்லடா இது வேற அங்கிள் என்று வாய்ஸ் நோட் அனுப்ப சொன்னேன். முகத்தில் நல்லக் கதை கேட்ட மகிழ்ச்சி தெரிந்தது.

அந்த சிறுமி வாத்தை காப்பாற்ற போராடும் பொழுது ஒரு எளிய யோசனை செய்து காப்பாற்றுவது குழந்தைகளுக்கு பொருத்தமாக இருக்கிறது. இப்படி கதை முழுக்க அவர்களாகவே யோசித்து இருக்கிறார். எந்த பேண்டசியும் இல்லாமல் கவர்ந்து இருக்கிறார்.

குழந்தைகள் மேல் மிகுந்த ஆழமான நேசம் இருந்தால் மட்டுமே அவர்கள் மனதுடன் அந்த உலகில் இறங்கி சஞ்சரிக்க முடியும். அத்தனை உயரங்களையும், வளர்ச்சியையும் நிறுத்தி விட்டு ஒரு ரிவர்ஸ் கியரில் அந்த வயதுக்கு செல்வது பேசும் அளவுக்கு எளிதான விஷயமில்லை. 

இது போன்ற எளிய படைப்புகளின் மூலமே குழந்தைகளை கொஞ்சமாவது தமிழ் புத்தகங்களின் பக்கமும், தமிழ் கதைகள் மீது ஆர்வமும் கொண்டு வர முடியும். மிக்க நன்றி மிக அழகான சிறுவர் படைப்புக்கு..இன்னும் நிறைய புத்தகங்கள் எதிர்பார்க்கிறோம்.