Friday, November 21, 2014

நம்பிக்கை மனுஷிகள். குறும்படம் வெளியீடு.

நம்பிக்கை...

ஒரு வார்த்தை..அதில் என்ன இருக்க போகிறது..

ஆனால் அதில்தான் எல்லாமே அடங்கி இருக்கு..

எப்படி இருக்கீங்க அப்படின்னு யாரையாவது கேட்டா....ஏதோ இருக்கேன் என்றோ  ..என்னமோ போகுது இல்லாட்டி ஏதாவது பிரச்சனைகள் என்று  கொட்ட ஆரம்பிப்பார்கள்..ஆனால் நல்லா இருக்கேன்..சந்தோஷமா, நம்பிக்கையா இருக்கேன் என்று சொல்பவர்கள் மிக குறைவு..

தசை சிதைவு நோய்..கொஞ்ச நாளில் உன்னால் நடக்க முடியாது, நிற்க முடியாது..உனக்கு குணப்படுத்த முடியாத நோய் என்றெல்லாம் சொன்னால் எப்படி முடங்குவோம்..அதுவும் பெற்றோர்கள்..

அதை எல்லாம் மீறி இரு மனுஷிகள் நிமிர்ந்து இருக்காங்க..அவர்கள்தான் வானவன் மாதேவி,, இயல் இசை வல்லபி..

கீதா இளங்கோவன்..அவர்களுடனான சந்திப்பை ஒரு டாகுமேன்ட்ரியாக எடுத்து வெளியிட முடிவு செய்ய..இன்று வந்து இருக்கிறது.." நம்பிக்கை மனுஷிகள் " குறும்படம்....

இதுதான் வாழ்க்கை என்றவுடன் எப்படி பெற்றோர்களையும் மேலே கொண்டு வந்து தங்களையும் மேம்படுதிக்கொண்டார்கள் என்று தெரிகிறது..

அவர்களை பார்க்கும் பொழுது அப்படியே மனம் குழைந்து , நெகிழ்கிறது ச்சே..எப்பேர்ப்பட்ட வாழ்க்கை..எப்படியெல்லாம் தவற விடுகிறோம் என்று சம்மட்டியால் அடித்து தெளிந்தத்தை போல உணர்வு..சில உணர்வுகளை எழுத்தால் பகிர்வதை விட..பார்த்து தெளிய வேண்டும்..

தனக்கு வந்த கஷ்டங்களை மீறி , தங்கள் வாழ்க்கையே போரட்டாமாக இருக்கும் நேரத்தில் அடுத்தவருக்கு உதவ வேண்டும் என்ற மனம் எத்தனை அற்புதமானது..

ஆதவ் ட்ரஸ்ட்..அதுவும் கார்பரேட் உதவியே வேண்டாம் என்றும் பொழுதில் தனித்து தெரிகிறார்கள்..லவ் யூ பெண்களே..உச்சி முகர தோன்றுகிறது

எல்லா நேரங்களிலும் வாசிப்பும், அன்பும், அக்கறையுமாக தங்களையும் மேம்படுத்திக்கொண்டு அடுதவர்களையும் மேம்படுத்தும் சகோதரிகளே ..உங்களுக்கு என்ன செய்துவிட முடியும் எங்களால்..

செய்யலாம் என்றுதான் ஆதவ் ட்ரஸ்ட் இருக்கிறது..நம்மால் ஆன உதவிகளை அதற்கு செய்து நம்பிக்கை மனுஷிகளை இன்னும் மிளிர வைக்க முடியும்..ஆமாம் அடுத்தவருக்கு உதவி செய்வதால் தாங்கள் மிளிர்கிறார்கள்..அவர்களுடன் கை கொடுத்து மேலும் நாமும் அழகாக ஒரு வாய்ப்பு..

இந்த லிங்க் ஐ உங்கள் கருத்தோடு பகிர வேண்டிக்கொள்கிறேன்..நம்பிக்கை என்றும் ஜெயிக்கும்...என், நம் நம்பிக்கையும்..

https://www.youtube.com/watch?v=svH7fYOOnE4

...

Sunday, November 16, 2014

அமெரிக்க பயணம்-ஒன்பது..முத்தக்காட்சியும், நானும்.



         வெளிநாடு..மேற்கத்திய கலாசாரம்..என்று பேசிக்கொண்டு இருக்கிறோம்.கிட்டத்தட்ட ஒரு மாதம் இருந்தேன் அமெரிக்காவில் நிறைய முத்த காட்சிகள் பார்ப்போம் கணவன் மனைவியோ, ஜோடிகளோ அவ்வபொழுது முத்தமிட்டுக்கொண்டு இருப்பார்கள்..மிக சகஜம் என்று மனதை தயார் செய்துகொண்டு சென்று இருந்தேன்..

நான் கொஞ்சம் அதிகமாக சுற்றி இருக்கிறேன் என்று தோன்றுகிறது..கிட்டத்தட்ட ஏழு மாநிலங்கள்..போகும் ,வரும் வழிகளை கணக்கில் எடுத்தால் பத்து மாநிலங்களை கடந்து இருக்கிறேன்..ஆயிரகணக்கான மைல்கள் பயணம்..

சுற்றுலா  இடங்கள், பார்க், பஸ், மெட்ரோ, கார் என்று எல்லாவிதமான பயணத்தையும் மேற்கொண்டேன்..

கிட்டத்தட்ட எண்பது நாட்டு பெற்றோர்களை ஒரே இடத்தில் சந்ததிக்க வாய்ப்பு....அவர்களுடன் டீ பார்ட்டியில் கலந்துக்கொண்டேன்..அதில் பத்து நாடுகளின் அம்மாக்கள் ஒன்றாகவே மூன்று நாட்கள் சுற்றினோம்..கேக்கவா வேண்டும்..நாள் முழுக்க அவரவர் நாட்டு கதைகள்..

கல்லூரி மூலை முடுக்கு எங்கும் சுற்றினேன்..நம்ப முடியாது..நம் ஊர் பள்ளிகள் வாசலில் கூட சில ஜோடிகள் பார்ப்பேன்..ஆனால் கிட்டதட்ட நான்கு, ஐந்து கல்லூரிகள் சுற்றி இருந்தன..அங்கு அதிகம் நடந்து போயும் ஒரு ஜோடி கூட பார்க்கவில்லை..பார்த்த ஆணும, பெண்ணும் கூட ஜோடிகளாக காட்சி தரவில்லை..

மிக சகஜமாக இருக்கிறார்கள்..பேசுகிறார்கள்..ஹாஸ்டல் கூட ஆணுக்கு தனி , பெண்ணுக்கு தனி  இல்லை..ஆனால் பயம் இல்லை..ஒரு ஆணை பார்த்து இரவில் கடந்து போவது மிக சகஜம்..ஒருவரை ஒருவர் ஏறிட்டு கூட பார்ப்பது இல்லை..

வெயில் அபூர்வம் என்பதால் வைட்டமின் -டி உடம்புக்கு தேவை..அதனால் கல்லூரி வளாகத்தில் கூட சன் பாத் எடுத்துக்கொண்டுருக்கும் அழகான மாணவிகளை பார்த்தேன்..என்னை தவிர ஒருவரும் அவர்களை ஏறிட்டு கூட பார்க்கவில்லை..

ஒருவரின் கை நீட்டும் தூரத்துக்கு மேல் யாரும் அருகில் வருவது இல்லை..உச்சபட்ச ப்ரேவேசி என்ன என்பதை அங்குதான் காணலாம். தேவை இல்லாமல் எந்த ஆணியையும் பிடுங்குவது இல்லை..அதே சமயம் தங்கள் சுதந்திரத்தை விட்டுக்கொடுப்பது இல்லை..

போன முறை பெற்றோர் மீட்டிங் நடந்த பொழுது என்ன நிகழ்ச்சி என்று கேட்டேன்..அண்டர்வேர் ரன் நடப்பதாக சொன்னான்..அதுவும் அங்கு பெரிய விஷயமாக பார்க்கப்படவில்லை..சகஜமாக எடுத்துக்கொள்ளும் மனப்பக்குவம் இருக்கிறது..யாரும் யாரையும் இது தவறு, சரி என்று கலாச்சார விஷயங்களுக்கு சுட்டிக்காட்டுவதில்லை..

அமெரிக்காவிலும் கிராமங்கள் உண்டு..கடலோர நகரங்களில் எல்லாம் ஏற்றுகொள்ளபடும்..ஆனால் உள்நாடுகளில் கதை வேறு..மிக உச்சபட்ச கன்செர்வேடிவ் குடும்பங்கள் உண்டு..அவர்கள் ஸ்லீவ் லெஸ் அணிய மாட்டார்கள்..ஆண்களும் உடை கட்டுபாட்டை மேற்கொள்வார்கள்..அவர்களை குறிப்பிட்ட உடைகளில் மட்டுமே காண முடியும்..

மோகனா அவர்களுடன் ஒரு வாரம் எங்கு பார்த்தாலும் அதே கேள்வியைத்தான் கேட்டேன்..நான்கு கல்லூரிகள், சில நிகழ்ச்சிகள் , மன்ஹாட்டன் முழுக்க சுற்றி வந்தும் ஒரு முத்தக்காட்சி கூட கண்ணில் பட வில்லை..இருவரும் கேலியாக லட்சகணக்கில் செலவு செய்து நிஜ அமெரிக்காவை பார்க்காமலே போய்விடுவேன் போல இருக்கே என்று கூட பேசிக்கொண்டோம்..

கடைசியாக பார்த்தேன்..சில மெட்ரோ ரயிலில், மற்றும் பஸ் பயணத்தில்..அதுவும் காதலர்கள்..இயற்கையாக..யாரும் கவனிக்கக்கூட இல்லை..நானும் காணாதது போல இருந்துவிட்டேன்.. அப்படி இருப்பது கொஞ்சம் நமக்கு கடினம்..அவர்கள் அனுபவித்து கொடுக்கும் பொழுது கொஞ்சம் திரும்பி பார்க்க தோன்றுகிறது நம் இந்திய மனப்பான்மையில்..ஆனால் நாகரிகம் என்று ஒன்று இருக்கே..ஆனால் இரவு பார்ட்டிகள் நடக்கும் உலகம் வேறு. அதற்குள் செல்லவில்லை நான்.

முத்தம் என்பது பெரும்பாலும் சாதரணமாக ஹக் செய்து..கன்னத்தோடு லேசாக உரசுவதொடு அன்பை காட்டுவதை செய்துவிட்டு விலகுகிறார்கள்..அத்தனை எளிதில் அவர்களுடன் ஒட்டிக்கொள்ள முடியாது..ஒரு மெல்லிய சுவர் இருக்கும்..ஒவ்வொருவரின் மனதுக்குள்..எல்லாருக்குள்ளும் ஒரு தனிமை உணர்வு ப்ரேவேசி என்ற பெயரில் போர்த்தப்பட்டு இருக்கும்..அவர்களுக்கு அன்பை வெளியே காட்ட வேண்டிய அவசியம் அதிகம்..இல்லாவிடில் இன்னும் அதிகபட்ச தனிமை உணர்வு அவர்களை சூழும்..


நம்மை போல எளிதாக எங்கு வேணாலும், எப்படி வேணாலும் ஒட்டி பழகி, கலந்து கொள்வதை போல அவர்களால் முடிவதில்லை..எளிதில் கை கொடுக்கும், பேச முடியும் அவர்களால் மனதுக்குள் யாரையும் அனுமதிக்க முடிவதில்லை..நம்மை போல அன்பு செலுத்த என்றைக்கும் இயலாமல் போகிறது..

எது சரி, எது தவறு என்று இல்லை...மேற்கத்திய கலாசாரம் என்ன என்று பலரிடம் கேட்டேன்...ரயிலில் இரு பெண் சொன்னாள்.." .Mrs.கிர்த்திகா அமெரிக்காவை பொருத்தவரை தனி கலாசாரம் என்பது இல்லை..இது குடியேறிகள் நாடு..ஒவ்வொருவரும் ஒவ்வொரு கலாசாரத்தை கொண்டு வருகிறார்கள் என்றாள்..அதனால் ஒன்று அதற்கு கலாசாரம் என்பது இல்லை..இல்லாவிடில் இங்கு இருக்கும் அனைத்து மக்களின் கலாச்சாரங்களின் கலவை ..இரண்டி ஒன்று"  என்ற விடை அளித்தாள்..

அடுத்து இன்னொருவரிடம் கேட்டேன்..ஐரோப்பிய கலாச்சார பின்னணி வேறு..அங்கு குடும்பங்கள் மேல் மதிப்பு அதிகம்..ஆனால் இங்கு கம்மி என்றார்,..49% டைவர்ஸ் இங்கு உண்டு என்றார்.அப்ப ஐம்பது சதவிகிததுக்கு மேல் ஒருவனுக்கு ஒருத்தியாக்கதானே வாழ்கிறார்கள் என்றேன்..அதுவும் அஞ்சு வருடங்கள் பழகி பார்த்துவிட்டு ஒத்து வந்தால் மட்டுமே திருமணம்..மிக அதிகமாக கலந்து ஆலோசித்தே குழந்தை..இப்படியாகத்தான் இருக்கிறது..டைவர்ஸ் என்பது கடைசியான முடிவுதான்..ஆனால் தனியாக வாழும் பெண்கள் மிக அதிகம்.அவர்களுக்கு சமூக, அரசாங்க பாதுகாப்பும் இருக்கிறது. யாருடைய வாழ்கையும் யாராலும் விமரிசிக்கப்படாது..பல இளைஞர்கள் வாழ்க்கை என்றால் என்ன என்று தெரியாமல் பதினெட்டு வயதில் வெளியேறி மிக கஷ்டப்பட்டு வாழ்க்கையை கற்றுக்கொண்டு முப்பது வயதில் திருந்தி சரியான வாழ்க்கையை மேற்கொள்கிறார்கள்..டாட்டு வை உடம்பு முழுதும் குத்திக்கொண்டு , ஊர் சுற்றல், போதை பழக்கங்கள் எல்லாவற்றையும் முயற்சிப்பார்கள் அதற்கு வாய்ப்பும் உண்டு..ஆனால் இங்கு அப்படியெல்லாம் நாம் முயற்சித்து கூட பார்க்க முடியாது. அதுவும் பெண்கள் யோசிக்கவே முடியாது..நம் சமூக அமைப்பு வேறு..அவர்கள் ஒரு பாதுககாப்பான முன்னேறிய அமைப்பில் இருக்கிறார்கள் என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்

குடும்பம் என்ற அமைப்பு அத்தனை மோசமாக உடைபடவில்லை உலகம் முழுவதும்..அதை விட இன்னொரு சிறந்த கண்டுபிடிப்பு சமுகத்தில் இல்லாததால் அதையே கடைப்பிடிக்கிறோம்.. ஆனால் பெண்கள் மிக அடக்கப்படும் சமூகங்களில் குடும்பம் என்ற அமைப்பு மேல் அவநம்பிக்கை அதிகம் தோன்றும்..அப்பொழுது பெண்கள் தங்களை சுற்றி கட்டிய சுவரை உடைத்துக்கொண்டு வெளியேறும்போது மிக அதிக அடிகள் சமூகத்துக்கு ஏற்படும்..அதை தாங்கிக்கொள்ளமுடியாமல் இன்னும் உடை, கலாசாரம், பால் பாகுபாடு என்று வன்முறைகள் கட்டவிழித்து விடப்படும்..இன்னும் முடக்க முயற்சிப்பார்கள்..


இந்த எதிர்வினைகள் நடக்க, நடக்க அந்த பக்கம் பலமாகும்..இயற்கை எதையும் பேலேன்ஸ் செய்யும் ஆற்றல் பெற்றது..உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி நெல் மணிகள் இன்னும் இயற்கையின் தொண்டைக்குழியில் உறுத்திக்கொண்டு இருக்கலாம்..அதை வெளியே எடுக்கிறோம் பொழுது கொஞ்சம் எச்சிலும் தெறிக்கலாம் ..போக, போக எது தேவை, தேவையில்லை என்று சமூகம் கட்டமைத்துக்கொள்ளும்..

நாம் ஒரு பெரிய கால மாற்றத்துக்கு சாட்சியாக அமர்ந்து இருக்கிறோம் என்றே தோன்றுகிறது..எதையும் ஆதரிக்கவோ, எதிர்க்கவோ இல்லாமல் சாட்சியாக இருப்பது கூட பல இடங்களில் பல நிகழ்வுகள், நன்மைகள் நடக்கவும், நடக்காமல் இருக்கவும் உதவி செய்யும்..

எதுவும் கடந்துதான் போகும்.

Wednesday, November 12, 2014

அமெரிக்க பயணம்-எட்டு..

     பாஸ்டனில் இமிக்ரேஷன் ஆபிசர் "உன் கணவர் ரொம்ப கொடுத்து வைத்தவர்..லக்கி"  என்று கொஞ்சம் அழுத்தமாக சிரித்துக்கொண்டு கூற..மிக்க நன்றி என்று புன்னகையோடு நகர்ந்துவிட்டேன்..சில வார்த்தைகள் டீன் ஏஜ் பசங்களுக்கு அதுவும் அம்மாவை பார்த்து சொல்வது என்ன உணர்வில் பதியும் என்று தெரியவில்லை...அவன் ஏன் உன்னை பார்த்து அப்படி பேசறான் என்று கேட்டது மட்டுமல்லாமல் அவர் பேசிய வார்த்தைகள் பல இடங்களில் பயணம் முழுக்க காமடிகளாக, குட்டி பாராட்டாக!!!! மாற்றப்பட்டு வந்துக்கொண்டே இருந்தது..ஊருக்கும் போன் பண்ணி.நீ ரொம்ப லக்கியாம் என்று சொல்லப்பட்டது ..  ஆஹ மொத்தம் அது என்ன அர்த்தத்தில் உதிரப்பட்டது..எந்த அர்த்தத்தில் உணர்ந்துக்கொள்ளப்பட்டது..என்றே புரியவில்லை..மரங்களில் இருந்து உலர்ந்து பறக்கும் இலைக்கு தெரியாது..எங்கு, எதற்கு உரமாக போகிறோம் எங்கு , எதுவாக முளைக்க் போகிறோம்  என்று..சில சொற்களும் அப்படிதான்..விளையாட்டாக இருப்பினும்.. பயணம் முடியும் வரை வந்தது.. லக்கிதான்..

  பாஸ்டனில் இரண்டு மணி நேரம் முன்னாடியே தோழி மோகனா அவர்கள் குடும்பமும், ஊர் தோழியின் மகன் ஹரேஷ் ம்..வந்து இருந்தனர்..அவர்கள் அந்த சமயத்தில் செய்து இருக்கும் உதவிகள் மிகப்பெரிது.. எங்கு தங்குவது..என்ன செய்வது என்று எந்த திட்டமும் இல்லை..போய் பார்த்து கொள்ளலாம்..இல்லாவிடில் காலேஜ் பக்கத்தில் புக் செய்துக்கொள்ளலாம் என்று எளிதாக நினைத்து இருந்தேன்..ஒரு நாட்டின் அமைப்பை பற்றி தெரியாமல் இப்படி எல்லாம் போவது என்னை போன்ற துணிச்சல்காரர்களால்தான் (அசட்டு) முடியும்..அதுவும் இல்லாமல் நட்புகளின் நம்பிக்கைகள் வேறு.. வாங்க பார்த்துக்கலாம் ..எத்தனை அழகான அன்பு மனிதம்..

ஏற்கனவே அந்த பகுதியில் இருந்த முகநூல் நட்பு பாருகுமார் தங்கை தமிழிடம்  நேரில், போனில் பேசி இருந்தேன்..அதை தவிர என் போஸ்ட் பார்த்துவிட்டு பாஸ்டனில் இருந்து ரோகிணியும் மெசேஜ் செய்து இருந்தார்.. நியுஜெர்சியில் வசிக்கும் தோழி பெண், உறவுகள், நட்புகளும் பேசி இருந்தனர்..வாழ்க்கையில் சேர்த்து வைத்த பொக்கிஷங்களில் நட்பு பொக்கிஷம் எனக்கு மிக முக்கியமானது...எழுதும் வேளையில் மனம் முழுக்க அன்பும், நன்றியும் தளும்புகிறது..

யாரும் சாப்பிடாமல் காத்து இருந்தனர்..போனவுடன் நேராக ஹோட்டல் அழைத்து சென்றனர்..பெயர் தோசா பேக்டரி.டவுன் டவுனில் (
down town) இருந்த இந்திய ஹோட்டல்...உள்ளே நுழைந்தவுடன்..இந்திய சூப்பர் மார்கட்டில்  கிடைக்கும் அத்தனை பொருள்களும் இருந்தது..பொரி முதல் MTR வரை..எல்லாம் கிடைக்கும் என்று சொல்லி இருந்தாலும்..நேரில் இந்திய கடையை பார்க்கும் வரை மிகப்பெரிய கவலை..



முக்கியமாக பானி பூரிகள்..அழகாய் அடுக்கி வைக்கப்பட்டு இருந்ததை பார்த்து பூரித்து போய் விட்டேன்..எங்கு போனாலும் இந்த பானி பூரி  புத்தி போவதே இல்லை.. நார்த் இந்தியன் தாலி, தோசை எல்லாம் மிக அருமையாக இருந்தது..காலேஜ் பக்கத்தில் என்பதால் மனம் நிம்மதியாக  உணர்ந்துது..பணத்தை விட சில உணவு பழக்கங்கள் நமக்கு முக்கியமாக இருக்கின்றன..பையன் ஏதாவது சாப்பிடனும் போல இருந்தால் எங்கு போவான் என்ற யோசனைத்தான்..ஒரு அம்மாவாக அரித்துக்கொண்டே இருந்தது..அவனுக்கு எல்லா வகை உணவு பழக்கமும் உண்டு என்றாலும்..இந்திய உணவு முக்கியமாக வெஜிடேரியன் உணவு கிடைக்கவேண்டுமேன்று எனக்கு ..

வீட்டில் யாரும் வெஜிடேரியன் பழக்கம்தான் வேணும் என்று கட்டுப்படுத்த போவது இல்லை..இருப்பினும் எதற்கு மாற வேண்டும் என்ற எண்ணம்தான்.. பசங்களுக்கு சொல்வேன்...நாற்பது வயதுக்கு மேல் நிறைய மனிதர்கள் நான் வெஜ் லிருந்து வெஜ் க்கு மாற ஆசைப்படுகிறார்கள்..ஆனால் பழக்கத்தால் விட முடிவது இல்லை..அதனால் முடிந்தவரை மாற்றிக்கொள்ள வேண்டாம் என்று..ஆனால் என்றைக்கும் அவர்கள் முடிவில் தலை இடுவதில்லை என்ற கொள்கை உண்டு..ஆனால் அந்த முடிவு எடுத்தால் ஜீரணிப்பது கடினம்தான்.. ஒஜு கொஞ்ச நாள் முன்பு சிக்கன் வேணும், சாப்ட்டு பார்க்கணும்  என்று அடம்பிடிப்பான்..இப்பல்லாம் நான் உயிர்களை கொல்ல மாட்டேன் என்று வீர வசனம்...தவறோ சரியோ..நம் வழக்கங்களை மாற்றிக்கொள்ள அத்தனை எளிதில் மனம் இடம் கொடுப்பதில்லை..

அங்கிருந்து நேராக இரு கார்களில் கிளம்பினோம்..பாஸ்டன் ஹார்பர் என்ற இடத்துக்கு..கோட்டையும், புறாக்களும், புல்வெளியும் இடமே மிக அழகாக..நிறைய சைக்கிள் மனிதர்கள்.. ஆங்காங்கு இந்தியர்கள்..அத்தனை இந்திய முகங்களை எதிர்பார்க்கவில்லை..  அமெரிக்கா என்றால்  பொது இடங்களில் முத்தமிட்டுக்கொண்டும், நம் கண்ணுக்கு கொஞ்சம் மோசம் என்று சொல்லக்கூடிய உடைகளையே அணிந்து இருப்பார்கள் என்று நமக்கு போதிக்கப்பட்டு இருக்கும் விஷயம்..எனவே நிறைய ஹாலிவுட் முத்த காட்சிகளை , உடைகளை எதிர்பார்த்துக்கொண்டு போனேன்..ஆனால் பூங்காவில் அனைவரும் குடும்பத்துடன் மிக சந்தோஷமாக வந்து இருந்தனர்..இந்தியாவில் பார்க்கும் அளவுக்கு கூட ஜோடிபுறாக்கள் காணவில்லை.. கொஞ்சம், கொஞ்சமாக அமெரிக்க பிம்பம் உடைய ஆரம்பித்தது..நிறைய பிம்பங்கள் நல்லதும், கெட்டதும் உடையப்போவதை பற்றி அறியவில்லை அப்பொழுது..அந்த காட்சிகள் பார்த்தேனா இல்லையா ...இல்லை அத்தனை செலவு செய்து போய்விட்டு அந்த பக்கம் உள்ள அமெரிக்காவை தரிசிக்காம்லே வந்தேனா?  சொல்கிறேன்.. பாஸ்டன் ஹார்பருக்கும், காந்திஜிக்கும் உள்ள தொடர்பையும் சேர்த்தும்..அடுத்த பதிவில்..













Tuesday, November 11, 2014

அமெரிக்க பயணம்..ஏழு..


ப்ராங்கபர்ட் விமான நிலையம்..நம்ம மெஜஸ்டிக் பஸ்  நிலையம் பரபரப்பில் விமானங்கள் வந்து போகும் இடம்..சிறு வயதில் தமிழ்வாணன் நாவலில் துப்பறியும் இடங்கள் வரும் ஊர்களில் பிராங்க்பர்ட் நகரமும் ஒன்று,..மிக அழகாய் வருணித்து இருப்பார்..என் கனவுகளில் ஒன்று பிராங்க்பர்ட் செல்வது..

கனவுகள் கண்டால் நிறைவேறும் என்ற நம்பிக்கை உடையவள் நான்..ஏதோ ஒரு வடிவத்தில் கனவுகள் நிறைவேறிக்கொண்டே வருகிறது..எனக்கான விருப்பமான செயல்கள் எப்படியாவது எந்த வழியிலாவது நடைபெறும். சில கனவுகளை அடுத்தவர்களுக்காகவும் மேற்கொள்வேன்..பெரும்பாலும் விருப்பப்பட்ட நேரத்திலோ, வடிவத்திலோ அவை அமையாது..ஆனால் நிறைவேறும்..

பிராங்க்பர்ட்ல்  நாலு மணி நேரம்..
A,B,C,D,E Z என்று டெர்மினல்கள்..நூறுக்கும் மேல் விமானங்கள் நிறுத்தப்பட்டு இருக்கும் இடம்.டெர்மினல்களுக்கு இடையில் ரயில்,பஸ் இலவச சேவை உண்டு..எந்த இடம் போனாலும் சும்மா வை-பையில் மூழ்காமல் அங்குள்ள இடங்களை பார்க்கவும் மனிதர்களை கவனிக்கவும் மிகப்பிடிக்கும்..

சரி என்று ரயிலில் ஏறி அடுத்த டெர்மினலில் உள்ள கடைகளை சுற்றி வந்தோம்..முதன் முதலில் ஈரோவை தரிசிப்பதால் ஒவ்வொரு விலையும் பயமுறுத்தியது..பையனிடம் காபி குடிக்கலாம் என்றதற்கு மிரண்டு போய் கொஞ்சம் இரும்மா ப்ளைட் ல பார்த்துக்கலாம் என்று விட்டான்..


     ஜெர்மனி மண்..ஹிட்லர், இரண்டாம் உலகப்போர் என்று மனதின் நினைவில்.. அங்கு உள்ள டிரடிஷனல் பேக்கரி என்று  இடத்தில் மப்பின் (
muffin) மற்றும் புயுகள்..வேறு ஏதோ என்று பொறுக்கிக்கொண்டு உக்கார்ந்தோம்..நிஜமாகவே மிக அருமையான சுவை. ஜெர்மனி பேக்கரிகள் பற்றி ஸ்டுடன்ட் எக்ஸ்சேஞ் க்காக வந்த ஜெர்மன் பெண் சொல்லி கேள்விப்பட்டு இருக்கேன். அங்கு  பிரெட் வகைகள் அதிகம்..நீளமா, வளைவா, உருண்டையா என எல்லா வடிவங்கள், சுவைகளில், தானியங்களில் பிரெட் வைத்து இருப்பார்கள்..அதுதான் மிக முக்கிய உணவு என்பதால்..எனவே அங்கு பேக்கரி உணவை சாப்பிட்டே ஆக வேண்டுமென்று தீர்மானம்..விலையும் மோசமில்லை..(ஒரு சுற்று வந்தால் விலை ஜீரணமாகும்). போகும் வழிகளில்  மிக நீளமான ட்ராவேலட்டர்கள்...ஒரு குழந்தை போல போய்விட்டு வர சொல்லியது..கொஞ்சம் உல்டாவாக நடந்து பார்த்துவிட்டு பையன் முறைப்புக்கு அஞ்சி நேராக நடக்க ஆரம்பித்தேன்.. மகனும்  அப்பாவாகும்  தருணங்கள் பயணத்தில் பல இடங்களில் வந்தது..

முதல் பயணமாக இருந்தால் வரிசையில் பொறுமையாக நிற்க கண்டிப்பாக கற்றுத்தரும்..அதுவும் இடைவெளி விட்டு...யாரும் யார் அருகிலும்நிற்பது இல்லை..எல்லாமே ஒரு இடைவெளி..கார்களும்..மனிதர்களும்..ஈஷிகொள்ளவே முடியாது..

பிராங்க்பர்ட் ஏர்போர்ட் கொடுக்கும் சர்விஸ் பல விதங்கள்..குழந்தைகள் சுத்தி பார்க்க, ஷாப்பிங் செய்ய என்று போய் ஏர்போர்ட் லையே திருமணம் செய்துக்கொள்ள கூட சர்வீஸ் செய்கிறார்கள்...ஒரு முறை அங்கு ஸ்பா செய்யும் செலவில் நம் பியூட்டி பார்லர்க்கு வருடக்கணக்கில் செலவிடலாம்..

நண்பர் சதீஸ்குமார் வெளிநாடு வெண்ணை தேவதைகள் பற்றி கூறுவார்..நிறைய வெண்ணெய் தேவதைகள் பறந்துக்கொண்டுதான் இருந்தனர்..அதுவும் இமிக்றேஷனில் எமிரேட்ஸ் விமான பணிப்பெண்கள் சேர்ந்து நின்றுகொண்டிருந்ததை பார்த்த பொழுது தேவதை கூட்டமே மேககங்களில் இருந்து இறங்கியது போல இருந்தது..

ஆனால் ஒரு வருத்தம்..ஒருவர் கூட தேவன்களை பற்றி கூறவே இல்லை..அதுவும் ஜெர்மனி போலிஸ்..நம் ஊர் சிக்ஸ் பேக் எல்லாம் ஒன்றுமே இல்லை என்று  சொல்லிவிடலாம்..அத்தனை கட்டுகோப்பான உடம்பு, உயரம் எல்லாம் கச்சிதம்..ஒரு கமோண்டா போல உடலமைப்பு ஒவ்வொரு போலிசும் ..முகமோ பால் போன்ற ஒரு அழகு..அதில் சிறிது கடுமையான கனிவும்..ஒவ்வொரு போலீசையும் பார்த்துக்கொண்டே வந்தோம்..பெண்ணோ, ஆணோ..அத்தனை கட்டுகோப்பான உடலமைப்பில், அழகான போலிஸ் பார்ப்பது முதல் தடவை..அசர செய்தது..

    விமானத்தில் நம்ம விஜய் படம் தமிழில் ஒன்று..ஏதேதோ படங்கள் மேய்ந்துக்கொண்டு , கொறித்துகொண்டு இறங்கியாச்சு..இமிக்ரேஷனில் செம கூட்டம்..ஏற்கனவே தோழி நியுயார்க் இமிக்ரேஷன் அளவுக்கு பாஸ்டன் இமிக்ரேஷன் இருக்காது என்று சொல்லி இருந்தார்.. ஸ்விட்சர்லாந்து, அமேரிக்கா இரண்டும் என் வெளிநாடு பயணத்தில் மனதில் இருந்தவை..ஆனால் போக முடியாமலே இருந்தது..அமெரிக்க மண்ணில் காலடி எடுத்து வைத்ததும்..அட்லாண்டிக் பெருங்கடலை பார்த்துக்கொண்டே கடக்கும் வேளையில் ஏதோ ஏதோ எண்ணங்கள் ..எத்தனை குடியேறிகள் இந்த அட்லாண்டிக கடல் வழியே..எத்தனை ஆப்ரிக்க அடிமைகள் உள்ளே வலுகட்டயாமாக கொண்டு வரப்பட்டனர்..அட்லாண்டிக் சமுத்திரம்..பெரிய சரித்திரங்களை விழுங்கிக்கொண்டு..சம்பவ சாட்சியாய் மேகங்கள் தவழ இருந்தது. குடியேறிகளின் நாட்டில் கால் வைத்தேன்.

அங்கு அமெரிக்க போலிசுக்கே உள்ள வழக்கமான கொஞ்சம் பூசின உடல்...ஜெர்மனி போலிசை பார்த்துவிட்டு வந்த கண்ணுக்கு அமெரிக்க போலிஸ் ஏமாற்றியது..வழக்கம் போல கியு அரட்டை..அரைவாசிக்கு மேல் மாணவர்கள்தான்..பாஸ்டன் கல்விக்கு பெயர்ப்பெற்ற இடம்.. குஜராத்தி பொண்ணு  ஒற்றையாக பிறந்தும் அப்பாவை சமாளித்து எப்படி கல்வி கற்க வந்தேன் என்று விவரிதுக்கொண்டு வந்தாள்.

ஆனால் இமிக்ரேஷன் ஆபிசர்..எதுக்கு வந்தாய் என்று கேட்க..விளக்க..உன் பையனா என்று விழி உயர்த்தினார்..நம்பவே முடியவில்லை என்றவுடன்..ஜீன்சை ஜேசு ஸ்டைலில் பையன் முறைக்க.நான் அவருடன் பேச ஆரம்பித்தேன்..


இந்தியா எனக்கு பிடிக்கும் எனக்கு பிரியாணி பிடிக்கும்..நீ செஞ்சு தருவியா என்றார்...இமிக்ரேஷன் மாமாவை ஐஸ் வச்சாவது வெளியே போக வேண்டிய கட்டாயமாச்சே..கண்டிப்பா என்று சிரிக்க..இங்கு பிரியாணி செய்ய முடியுமா.அதுக்கு சாமான் எல்லாம் கொண்டு வந்து இருக்கியா என்று கேக்க..யாருக்கிட்ட என்று தோன்றியது..

அரிசி, பருப்புகள்  உள்ள அனுமதி இல்லை என்று எனக்கு தெரியும் என்றேன்...நல்லா விவரமாக இருக்கிறாய் என்று சொல்லி காமிராக்கு முன்னாடி நிற்க சொல்ல..நானும் ப்ரோபைல் படம் எடுக்க போவது போல போஸ் கொடுக்க..கடைசியாக ஒரு வார்த்தை சொன்னார்.அந்த வார்த்தை பயணம் முடியும்  வரை என்னை துரத்த போவது அறியாமலே சந்தோஷமாக சிரித்தேன்...


Saturday, November 8, 2014

அமெரிக்க பயணம்..கானல் நீரா? பாலைவன சோலையா? மைல் ஆறு...

      பயணம் ஆறு..

     பதிவு இழுத்துக்கிட்டே போவதால் இன்னிக்கு கொஞ்சம் பாஸ்ட் பார்வேர்ட்... பக்கத்தில் உக்கார்ந்து இருந்த தாத்தா வெற்றிலை போட்ட லாகவத்தையும், துப்புவதையையும் கவனித்து எழுதினால் அது டாகுமெண்டரி ஸ்டைல்...நாம ஹரி ஸ்டைல் இல்லாவிட்டாலும் கத்தி ஸ்டைலில் போகலாம் என்று,.என்ன கொஞ்சம் இழுத்து அறுக்கும்...ஆனால் வசூல் கியாரண்டி இல்ல..
ப்ளைட் டிக்கெட் வாங்குவது பற்றி.. நிறைய செலவாகும் விஷயம். இங்கு மிக கவனமாக இருக்க வேண்டும். வாரக்கடைசி, விடுமுறை நாட்களில் வாங்குவது அதிகம் செலவாகும்..முக்கியமாக ஆகஸ்ட், டிசம்பர் மாதங்களில் மிக அதிக விலை வைத்து இருப்பார்கள்..அங்கும் எல்லாமே திட்டமிட்டு செய்வதால் நாமும் நான்கு மாதங்கள் முன்னாடியே வாங்கி வைத்து விடுவது மிக உத்தமம்.
அடிக்கடி ஒரே வெப்சைட்டில் தேடினால் நமக்கு டீல்ஸ் வராது..அப்படி ஒரு செட்டிங்க்ஸ்ல இருக்கும்.தேவையானவர்களுக்கு டீல்ஸ் காட்டாது..அதனால் கொக்கு போல காத்து இருக்கணும்..நிறைய இணைய தேடல் தேவை...ஏதோ ஒரு இடத்தில் டீல் கிடைத்தால் படக் என்று புக் செய்து விடுவது உத்தமம்..எங்களுக்கு லூப்தன்னாசாவில் கிடைத்தது..இல்லாவிடில் இன்னும் அம்பதாயிரம் அதிகம் ஆயிருக்கும்.
அது போல காத்திருக்கும் நேரம், ப்ளைட் மாற்றும் நேரம் போகும் வழி எல்லாம் கணக்கில் எடுக்க வேண்டும்..சில சமயம் ஒரே ப்ளைட் , ரெண்டு ஏன் நாலு மாற்றுதல்கள் கூட இருக்கும்,..பணம் குறைவு என்பதற்காக புக் செய்துவிட்டு கஷ்டப்பட முடியாது..ட்ராவல்ஸ் வழியாக புக் செய்தால் கண்டிப்பாக இருபதாயிரம் முதல் லட்ச்கணக்கில் அதிகமாகும்..நாமே நன்கு அலசி ஆராய்ந்து புக் செய்வது நலம். பெரும்பாலும் நேரடியாக விமான நிறுவன வலைத்தளத்தில் செய்வது இன்னும் நல்லது. ஆனால் விலையை ஒரு இடத்துக்கு நாலு இடமாக செக் செய்து கொள்ளலால்ம்..ஒரு பத்து நாட்கள் கையில் வைத்துக்கொண்டு எந்த நாள் மலிவாக இருக்கிறதோ அன்றுக்கு ப்ளாக் செய்வது இன்னும் நலம்.

விமானத்தில் போகும் வேளையில் தண்ணீர் அனுமதி இல்லை..ஆனால் தண்ணீர் பாட்டில் காலியாக கொண்டு செல்வது நலம்.. ஜூஸை விட அதிக பணம் கொடுத்து தண்ணீர் வாங்கணும்..இல்லாவிடில் குரங்கு குனிந்து ஒரு போசில் தண்ணீர் குடிப்பது போல அங்கு இருக்கும் குழாய்களில் குடிக்க வேண்டும்.
ஆங்..பையன் டைபாயிட்..கொஞ்சம் சரியாகி இருந்தது..உடனே மளமளவென்று ஒரு செட் குளிர்கால உடைகள் (கமர்ஷியல் ஸ்ட்ரீட் வெஸ்டர்ன், ஈஸ்டர்ன் ஸ்டோர்ஸ்ல எல்லாம் இருக்கும்) ..தேவையான உடைகள், புதுசா ஷூ, பெல்ட் என்று ஒன்று விடாமல் இடுக்கில் எனக்கும் வாங்கி ஆயிற்று..திரும்ப அலைச்சலில் ஜுரம்..திரும்ப டைபாயிட்..கேன்சல் செய்ய வேண்டும் என்றால் டிக்கட் இல்லை அடுத்து வேறு விமானம் பார்த்தால் இன்னும் லட்சகணக்கில் அதிகம் செலவிட வேண்டும்..
சரி என்று கல்ச்சர் டெஸ்ட் க்கு அனுப்பிவைத்துவிட்டு கிளம்ப வேண்டிய வேலைகளை கவனிக்க ஆரம்பித்துவிட்டோம்..
நான் மிகவும் நம்பிக்கை வைத்து செய்யும் செயல்கள் கண்டிப்பாக நன்றாக நடக்கும்..மிகப்பெரிய நம்பிக்கை வைத்தால் நிறைவேறியே தீரும்..எங்க வீட்டில் அதிர்ஷ்டம் அவளுக்கு உண்டு என்பார்கள்..ஆனால் எல்லா இடங்களிலும் என் நம்பிக்கை என்னை மீட்டுக்கொண்டே வந்து இருக்கிறது..இந்த நொடி வரை என்னுடைய அதிர்ஷ்டம் என்கிற நம்பிக்கை என்னை கைவிட்டதில்லை..
கல்ச்சர் டெஸ்ட் லேட் ஆகிக்கொண்டு இருந்தது..ஆனால் சிம்ப்டம் நார்மலாக இருந்ததால் பிரச்சனை இல்லை என்று கிளம்பியாச்சு.. ஆனால் மனதுக்குள் கவலையுடன்.. விமான நிலைய போட்டோவில் சிரித்துக்கொண்டே போஸ் கொடுத்தாலும் உள்ளே அரிக்கும் கவலைகளை யார் அறிய முடியும்?
சொந்தபந்தங்கள் வழியனுப்ப பிராங்க்பர்ட் வழியாக சின்னவனிடம் மனதை விட்டுவிட்டு கிளம்பினேன்.முன்னாடியே போன் செய்து இருந்தேன்..நண்பர்களுக்கு..நடுவில் செக் இன் ல் நடந்தது என்ன?


Wednesday, November 5, 2014

அமெரிக்க பயணம்...கானல் நீரா, பாலைவன சோலையா? ஐந்து.



              சென்னையில் இருந்து விசா பெங்களூருக்கு அனுப்பி விடுவார்கள்.. இரு நாட்கள் கழித்து போய் வாங்கிக்கொண்டு வர வேண்டும்..ஒரே கட்டிடத்தில் கனடா, ஆஸ்த்ரேலியா, இங்கிலாந்து விசா கொடுக்கும் நிறுவனங்கள் இருந்தன. அவுட் சோர்ஸ் செய்து இருக்கிறார்கள் போல் ..எனக்கு விசா வாங்க போகும் வேளையில் பையன் தோழன் ஒருவன் ஈரான் .. இஸ்லாமிய பெயர்...அவனுக்கு அலபாமாவில் முழு ஸ்காலர்ஷிப் ல் சீட் கிடைத்து இருந்தது..ஒரு ஈரானிய மாணவனுக்கும் அமெரிக்காவில் இடம் உண்டு..ஆனால் விசா உண்டா? 

   இருவரும் ஒரே கியூவில் நிற்கிறோம்..டிப் டாப்பாக உடை அணிந்துகொண்டு மிக அழகாக வந்து இருந்தான்..ஆயிரம் அரசியல்கள் இருக்கலாம்..ஆனால் இங்கு ஒரு மாணவனின் வாழ்க்கை மிக முக்கியம்..என் பையனும், அவனும் அடிக்கடி சேர்ந்து படிப்பார்கள்..எனவே அவர்கள் மேல் அதிக வாஞ்சை உண்டு..

   வரிசையில் ஓரு சமூக சேவகி..மெக்சிகோ போகறாரம்..அப்படியே தங்கையை பார்க்க அமெரிக்கா போக வேண்டும்..என்று..ஹைதராபாத்தில் இருந்து ஒரு மாணவி..பெற்றோர்கள் திருமணம் செய்ய வேண்டும் என்பதை எதிர்த்து அமரிக்காவில் மேல்படிப்புக்கு சீட் வாங்கி இருந்தார்..விசா இல்லாவிட்டால் திருமணம் என்று சொல்லி இருக்கிறார்கள்..மிகப்பெரிய கவலை அந்த பெண்ணுக்கு..ஒரு பெண் குழந்தையாக அந்த பெண்ணுக்கு கண்டிப்பாக கிடைக்க வேண்டும் என்ற  மனம் முழுதும் நினைவு..

பையன் நண்பணிடம் பேசிக்கொண்டே இருந்தேன்..அவன் பதட்டம் குறைந்ததோ..இல்லை ஆண்டி நிப்பாட்டுவாங்களா என்று யோசித்தானோ தெரியாது..ஆனால்..பொறுமையாக பேசினான்..ஒரே ஒரு அறிவுரை மட்டும் கூறினேன்..உன்னுடைய டாக் (
tag) ஐ நீ எப்படி நினைத்தாலும் அத்தனை எளிதாக எடுத்துவிட முடியாது...எனவே என்ன பேசினாலும் கோவமே பட வேண்டாம்..டென்ஷன் ஆகவே ஆகாதே..உனக்கு எதிரா எது சொன்னாலும்..வேறு எதாவது வேண்டுமென்றே சீன்டினாலும் உன்னுடைய கூல்ன்ஸ் ஐ விட்டு விடாதே..பதினெட்டு வயது பையனுக்கு மிக கஷ்டம்தான்..ஆனால் உன் எதிர்காலத்துக்கு எது நல்லது என்று நன்றாக யோசிதுக்கொள்..நிமிட கோபம், டென்ஷன் அத்தனையும் கெடுக்க வாய்ப்பு இருக்கு என்று சொன்னேன்..

     இருவரும் சேர்ந்தே உள்ளே சென்றோம்.. புடவை கட்டிக்கொண்டு..கொஞ்சம் முடியெல்லாம் இறுக்கிக்கொண்டு வயதான லுக்கில் போக சொல்லி பையன் ஆர்டர்..வேறென்ன நிறைவேற்றினேன்..என்னிடம் என்னது பதினாறு வயதில் கல்லூரியில் சேர்கிறானா? என்று ஆச்சர்யம் காட்டினார் அதிகாரி.. அங்கெல்லாம் வயதாகி  கல்லூரிகளில் சேர்வது மிக சகஜம்.சில கல்லூரி .ஹாஸ்டலில் மனைவி கூட தங்கிக்கொள்ள வசதி உண்டு.பிறகு கல்லூரியின் பெற்றோர் அழைப்பு , விமான டிக்கட் எல்லாவற்றையும் காட்டியப்பிறகு பத்து வருடத்துக்கு விசிட்டர் விசா கொடுத்து விட்டார்கள். ஆனால் அந்த ஈரானிய பையன் இரண்டு மணி நேரம் ஆகியும் வெளிவரவில்லை..அவன் அம்மாவோ மொழி தெரியாத சென்னையில் மவுன்ட் ரோடில் நிற்கிறார்கள்..அவரை விட்டு விட மனம் இல்லை..ஆனால் அவசரமாக தோழிகளை பார்த்துவிட்டு, வேலைகளை முடித்துவிட்டு  இரவு மெயிலை பிடிக்க வேண்டும்.

   அவருக்கு தேவையாக பிஸ்கட் கொஞ்சம், நீர் எல்லாம் வாங்கினேன்...கூலாக காட்டிக்கொண்டாலும் டெண்ஷனின் உச்சத்தில் இருந்தார்..மதியம் வரை பையன் கான்சலேட் விட்டு வெளி வரவில்லை..போன் எதுவும் அனுமதி இல்லாததால் எந்த விதத்திலும் தொடர்புக்கொள்ள முடியாது..இந்த பையனின் டாகுமென்ட்ஸ் துபாய் அலுவலகத்தில் செக் செய்யப்படும்.பக் பக் என்று நேரம் சென்று கொண்டு இருந்தது..

    கடைசியாக இரண்டு மணிக்கு போன் வந்தது..ஆண்டி விசா இரண்டு வருடம் கொடுத்து இருக்காங்க என்று. மனிதர்கள் மேல் கொஞ்சம் நம்பிக்கை வந்த நேரம்..ஒரு நன்றாக படிக்கும் பையனின் படிப்பு எந்த அரசியலிலும் சிக்கி சீரழியக்கூடாது என்ற எண்ணமே மேலோங்கி இருந்த தருணம் அது.

   நான் விசா வாங்கும் நேரத்தில்.நண்பர் அப்படியே கனடா விசா வாங்குகள்  டொரோண்டோ, நயாகரா சென்று வரலாம் என்று கூறி இருந்தார்.பெங்களூர் அலவலகத்தில்  உள்ளே எட்டி பார்த்தேன்..அமரிக்கா அளவுக்கு கெடுபிடிகள் இல்லை..பதினைந்து முதல் இருவது நாட்கள் என்று சொல்ல..மீண்டும் எந்த அலைச்சலிலும் சிக்கி கொள்ள விரும்பாத மனம்..விலகி வந்தேன். அங்கு இருந்த ஒரு கல்வி கவுன்சிலர்  தோழியானார்..கனடா மைக்றேஷன் எளிது..தாய், தந்தை கூட கூட்டிப்போகலாம்..எளிதில் குடியுரிமை கிடைக்கும் நாடு..சமூக,அரசாங்க பாதுகாப்பும் அதிகம், வேலை கிடைப்பது மிக எளிது என்ற காரணங்களால் மாணவர்கள் கனடாவுக்கு படையெடுப்பது அதிகரித்து உள்ளது என்ற தகவல்கள் தந்தார்.

  அங்கேயே மாட்ரிக்ஸ் போன் கார்ட் இருவது நாளுக்கு அமெரிக்க நம்பர் நாலாயிரம் ரூபாய்க்கு எடுத்துக்கொண்டேன்.. ஆனால் அதைவிட கம்மியாக கூட கிடைக்கிறது என்று தோழி சொன்னார்.

  உறவினர் ஒருவர் மகளுடன் போய் தங்கி இருக்கிறார்..சரியான முறையில் இன்சூரன்ஸ் செய்யவில்லை..அங்கு உடல்நலம் கெட்டுவிட்டது..கால் விரலை எடுக்க முப்பத்தியாறு லட்சம் செலவு செய்து இருக்கிறார்..மெடிக்கல் பற்றி நிறைய இருக்கு..அது பற்றி மட்டும் தனிப்பதிவாக விரைவில். .எனவே விசாரித்து எல்லாமே கவர் ஆகும் பாலிசி எனக்கு ஒன்றும்..பையனின் பாலிசி இருவது நாட்கள் கழித்தே ஆரம்பிக்கும் என்பதால் அவனுக்கு குறைந்தபட்சமாக ஆறு மாத மாணவர் மருத்துவ பாலிசியும் எடுத்துக்கொண்டோம்..

  ஒரு நாள் கூட மெடிக்கல் பாலிசி இல்லாமல் அமெரிக்க மண்ணில் கால் வைக்க கூடாது என்ற கருத்தில் எங்க வீட்டு டாக்டர் உறுதியாக இருந்தார்..எல்லாம் ரெடி..பையன் நடுவில் பல்வேறு
NGO க்களுக்கு சென்று வகுப்புகள் எடுத்துக்கொண்டு இருந்தான்..ஏதோ ஒரு தண்ணியை குடிக்க..கிளம்பும் ஓர் மாதம்  முன்பு சரியான ஜுரம் ஆரம்பித்தது.

  ஒரு வாரம் சரியாகவில்லை..இனிமேல்தான் ஷாப்பிங் செல்லணும்..உடை கூட இரண்டு வருட பிசியில் சரியாக வாங்கவில்லை..காலேஜ் போகும் வேளையில் வாங்கலாம் என்று தள்ளி போட்டாச்சு..இவனோ சரியான ஜுரத்தில்..ப்ளட் டெஸ்ட் ரிசல்ட்..டைபாயிட்..இ-போலா உச்சத்தில் இருந்த நேரம்..ஜுரம் என்றால் திரும்பி வர வேண்டியதுதான்..

டிக்கட் கேன்சல் செய்யாமல் கிளம்பினோமோ? அடுத்த பதிவில்...















Tuesday, November 4, 2014

காகித படகில் ஒரு சாகச பயணம்.

புத்தக வெளியீட்டு விழா..

புத்தகம்:காகித படகில்  சாகச பயணம்.. 

ஆசிரியர்:பெ.கருணாகரன், புதிய தலைமுறை இதழ் ஆசிரியர்.
இடம்: முகநூல்..

தலைமை விருந்தினர்கள்..நாம் அனைவரும்.

நேரம்: இதை வாசிக்கும் நேரம்...வெளியிடும் நேரம்: புதன் பத்து மணி.

முதலில் நான் வாசகி..ஒரு புத்தகத்தை எப்படி வேணாலும் அணுகுவேன்..ஒரு பக்கம் எடுத்து படிப்பேன்..உள்ளுக்குள் இழுத்தால் அந்த புத்தகம் பாஸ்...சில புத்தகங்களை கொஞ்சம் கொஞ்சமாக ரசித்து வாசிப்பது வழக்கம். அல்வாவை லபக் என்று விழுங்காமல் டயட்ஐயும்,ரசனையையும் முன்னிட்டு மணிக்கணக்கில் சாப்பிடும் வேளையில் அல்வாவின் உண்மையான ருசி தென்படும்..அதில் என்ன போட்டு இருப்பார்கள்..திருநெல்வேலி தண்ணீருக்கு உள்ள ருசியா..இல்லை விறகடுப்பா..இல்லை கைவண்ணமா..இத்தனை நெய் உடம்புக்கு ஆகுமா.. என்று அதிகம் யோசிக்க வைக்கும்...

இரண்டு விதமாகவும் ஒரு புத்தகத்தை முதன் முறையாக படித்தேன்..வேகமாக படித்துவிட்டு திரும்ப ஆற அமர அந்த அந்த நேரத்தில் அவரின் மன நிலை, சூழல் எல்லாம் யோசித்து படித்தேன் எப்படி படித்தாலும் சுவையாகவே இருக்கும் எழுத்து. அற்புதமான எழுத்து சமையல்காரர் பெ.கருணாகரன்.

முகநூலில் அறிமுகமான நண்பர்..அவரின் வேறு தளங்கள் பற்றி அதிகம் அறியவில்லை. எப்பவும் அறிவு ஜீவி களமாக இல்லாமல் நகைச்சுவை, மொக்கைஸ் , நல்ல அரட்டை..அப்ப அப்ப கவிதை, சில சமயம் வாசிப்பு என்று ரசனையுடன், பொழுது போக்கு தளமாக இருக்க வேண்டும் என்பது என் கருத்து..அதே தளத்தில் அதே கருத்தில் இவர் பக்கமும் இருந்தது மிக பிடித்து விட்டது. இந்த புத்தகத்தில் வந்த அத்தனை பதிவுகளையும் ஒன்று விடாமல் வாசித்து இருக்கிறேன். அத்தியாயம் ஒன்று எழுதியவுடன் நோடிபிகேஷனில் வைத்துக்கொண்டு தவறாமல் படித்து இருக்கிறேன்..ஆனால் புத்தக வாசிப்பு போல எலக்ட்ரானிக் வாசிப்பு மனதுக்கு மிக அருகில் வர முடியவில்லைதான்..ஒப்புக்கொள்கிறேன்.

தலைப்பு கேட்டு கேட்ட பதிவு கூட இன்றும் நினைவில் உள்ளது..நானும் அவசரமாக மனதில் தோன்றியதை எழுதி விட்டு வந்தேன்..போட்டிப்போட்டுக்கொண்டு அவரவர் சொன்னார்கள்.அப்பொழுது தெரியவில்லை..இந்த தலைப்பு முக நூலையே அசைக்க போகிறது என்று..ஹையோ நாமும் ஒழுங்கா யோசிச்சு சொல்லி இருக்கலாமே என்று தோன்ற ஆரம்பிக்கிறது..அழகிய தலைப்பை முகநூல் முழுக்க காணும் வேளையில்..அழகிய புத்தகத்துக்கு மேலே காணும் நேரத்தில்..என்ன ஒரு அழகான தலைப்பு.. முகநூல் பாஷையில் சொல்வதென்றால், அலட்சியமாக அணுகியதால வந்த தட் வட போச்சே மொமென்ட்.. பட் செம தலைப்பு மொமென்ட் ம்..

ஒரு புத்தக மதிப்புரை என்பது புத்தகத்தை படிக்க தூண்ட வேண்டும் அல்லது உண்மையாக நல்லா இருக்கா, வாசிக்கும் அனுபவம் எப்படி என்று வாசகனுக்கு புரிய வைக்க வேண்டும் என்பது என் எண்ணம்..இந்த புத்தகம் வாசிப்பானுபவம் கொடுப்பது மட்டுமல்ல கூடவே அவரின் வாழ்கை பயணத்தை காட்டுவது மட்டுமல்லாமல் இதழியல் துறைகளில் உள்ள அந்த அந்த காலகட்டம், ஒரு தினசரிக்கும் வார இதழ் செய்திகளுக்கும் உள்ள வேறுபாடு, கட்டுரை, கதைகள் உருவாகும் விதங்கள் என்று போய்க்கொண்டே இருக்கிறது.

அதே சமயத்தில் ஒரு சாமானியனின் வாழ்வை பதிவு செய்து கொண்டே போகிறார்..நடுத்தர குடும்பத்தில் ஓரளவுக்கு மேலே வர வேண்டுமென்றால் அதில் உள்ள போராட்டங்கள் மலைக்க வைக்கிறது...என்னதான் பெண்ணியம் பேசினாலும் இந்தியாவில் ஆண்களுக்கு உள்ள பொருளாதார நிர்பபந்தங்கள் எழுத்துகளின் வழியே உணர முடிகிறது..ஒரு பெண்ணால் ஒரு வருடம் வேலையில்லாமல் வாழலாம்..தொழில் மாற்றிக்கொள்ளலாம்..சமூகம் எந்த நிர்பபந்தமும் அவள் மேல் திணிப்பது இல்லை..ஒரு ஆணால் பொருள் ஈட்டாமால் ஒரு நிமிடம் கூட உக்கார முடியாது இந்த சமூக கட்டமைப்பில்..அதை தாண்டி ஜெயிக்க போராடுவது மிக கடினம். அந்த வலிகளை வாழ்க்கை மூலம் பதிவு செய்த கணங்கள் மனதை அசைத்து பார்க்கிறது.. நடுத்தர வர்க்க மனிதர்களின் தினசரி அழுத்தங்கள் இந்த புத்தகத்தில் காலத்தை காட்டும் வரலாறாக பதியப்பட்டு இருக்கிறது.. இதை எந்த புத்தகத்திலும் கண்டது இல்லை. நம் எல்லாருக்குமான புத்தகமாக மனதுக்கு மிக நெருங்கி விடும் தருணம் அது.

அனைத்து பொருட்களும் போட்டு சமைத்த பக்குவமான பிரியாணியை பரிமாறி இருக்கிறார். அனைவருக்கும் புரியும் வகையில் எளிமையாகவும் இருப்பதால் எளிதாக ஜீரணமும் ஆகும். ஆனால் சுவை நாக்கில் நின்றுகொண்டு இருக்கும்..அதே சமயத்தில் உணர்வுகளை கொட்டி சமைத்து இருப்பதால் நேராக வயிறுக்கு போகாமல் உணவு இதயத்தையும் அசைத்து விடுகிறது. முக்கியமாக குடும்ப காட்சிகளில்..கண்ணீர் துளிகள் இல்லாமல் கடக்க முடியவில்லை..

இந்த உரையை பக்காவாக பிளான் செஞ்சு அழகாக அவர் விகடன், குமுதம் கட்டுரைகளை மணிக்கணக்காக ரசனையுடன் எடிட் செய்வதை போல எடிட் செய்ய வேண்டும் என்று நினைத்தேன்..ராக்கூத்து செய்தாவது உழைக்க வேண்டும் என்று மனதில்..ஆனால் தினசரிகளின் வழக்கம் போல டெட்லைன் நெருங்கி விட்டது..எனவே பெ.கருணாகரன் சார் அலுவலகத்தில் அச்சக அதிகாரி வந்து வாங்கி கொண்டு ஓடுவது மனதில் ஒப்பிட்டுக்கொண்டு (ஆஹா இதெல்லாம் உனக்கே ஓவரா இல்ல..இது என் மைன்ட் வாய்ஸ்..நாமெல்லாம் பேஸ்புக் இனம்..இப்படிதான்) அவசர அவசரமாக டைப்பி அனுப்புகிறேன்..ஆனால் புத்தகத்தில் மெய்..இல்லை பொய் மறந்து போய் உண்மையாக தங்கி விட்டதால் வந்த அவசரம்.. அமேசான் காடுகளின் புத்தகத்தில் ஈரோடு கதிரின் மகள் விமர்சனம் புதுமையாக இருந்தது என்று குறிப்பிட்டு இருப்பார்..அடுத்த புத்தகத்தில் நம் பெயரை குறிப்பிடும் அளவுக்கு ஏதாவது புதுமையாக செய்ய வேண்டும் என்றால்..மண்டைக்கு பல்பு எரியாதவர்கள் சங்கம் என்னை வா,வா என்று அழைத்துக்கொண்டு சென்று விட்டது.

பொய் கலக்காமல் ஒரு வாழ்கையை, அதுவும் பல இதழ்களில் பயணித்த அனுபவத்தை மனதை தொடும் வகையில் அந்த காலகட்டத்தை கண் முன்னால் கொண்டு வந்தும் , கைப்பிடித்து அழைத்து சென்றும் , மனதை தொட செய்தும் வந்த எழுத்து. படித்து அனுபவிக்க பரிந்துரை செய்கிறேன்.. பேருண்மையை தரிசித்த அனுபவம். நன்றி

Sunday, November 2, 2014

அமெரிக்க பயணம்..கானல் நீரா, பாலைவன சோலையா...பாகம் நாலு..

விசா பார்ட் 2

விசாவில் நிறைய வகைகள்  இருக்கு..மாணவர்கள் விசா, பிசினஸ் விசா, விசிட்டர் விசா, டிபண்டன்ட் , H1B ,  இம்மிகரன்ட் என்று..இதில் மிக எளிதானது விசிட்டர் அல்லது டூரிஸ்ட் விசா..அதில்தான் நான் அப்ளை செய்தேன்.

பையன் சென்றது மாணவர் விசா.. பெரிய பேங் லாக்கரில் இருப்பது போல் இரும்புக்கதவு..ஜெமினி மேம்பாலம் அருகே  நானும் உள்ளே போனேன்..என்னை ரொம்ப ஏற இறங்க சந்தேகமாக பார்த்தார்கள்..பதினெட்டு வயதுக்கு கீழே உள்ள மாணவர்களுக்கு மைனர் கார்டியன் கூட செல்ல வேண்டும்..ஆனால் நான் அம்மா என்று சொன்னத்துக்கு நம்பாமல் போனது எனக்கு மகிழ்ச்சியும் பையனுக்கு டென்ஷனும் ..புடைவைக்கட்டிக்கொண்டு கொஞ்சம் வயசான மாதிரி வான்னு சொன்னா கேக்கறியா என்று டென்ஷன் ஆகிவிட்டான். இடம் அது போல..சின்ன சந்தேகம் வந்தால் கூட விசாவை ரிஜக்ட் செய்வார்கள் என்று பயம்...

சில சமயம் இப்படியாவது போகனுமா..நம்ம நாட்டில் என்னதான் இல்லை என்று அலுப்பு வரும்..சரி காரியத்தில் இறங்கியாச்சு..ஒரு கை பார்த்துடுவோம் என்று மேலே செய்வோம்..அத்தனை பெரிய இரும்பு கதவை தாண்டி போனால்..அந்த கதவு வெறும் காம்பவுன்ட் சுவருக்கு..உள்ளே மரமெல்லாம் வைத்து கொஞ்சம் வெளி இருந்தது..அதற்கு  பிறகு கட்டிடம்..நல்லா பயந்துக்கிட்டுதான் இருக்காங்க போல..பாதுகாப்பு..உள்ளே பேப்பர் தவிர எதுவும் அனுமதி கிடையாது..பணம் கொஞ்சம் செலவுக்கு..அவ்வளவுதான்..பெல்ட் கூட கழட்டி செக் செய்யும் இடம். ஒரே ஒரு பைல்..தண்ணீர் கூட அனுமதி இல்லை..அதனால் வீட்டில் அத்தனையும் வைத்துவிட்டு வந்தோம்.

கிட்டத்தட்ட இருபதுக்கு மேற்பட்ட கவுண்டர்கள்..ஆங்கிலம்  தவிர சொந்த மொழியில் பேசவும் வாய்ப்பு உண்டு. தமிழ் வேண்டும் என்றால் முன்பே அதற்கு ஏற்றவாறு அனுமதி வாங்கி கொள்ளல்லாம்..ஆனால் மாணவர்களுக்கு நல்ல ஆங்கிலம் தெரிந்து இருப்பது அவசியம். வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தேன். இரு மாணவர்களை கொஞ்சம் உற்று கவனித்தேன்..அமெரிக்கர்கள், இன்டர்வியூ எடுப்பவர்கள் மைக் வைத்துக்கொண்டு இருந்தார்கள்..ஆனால் பெரும்பாலான இந்தியர்கள்  மைக்கை குழந்தையாக இருக்கும் பொழுதே முழுங்கி விட்டதால் தேவை இல்லை..அப்படியே பேசினால் போதும்..

ஒரு வட இந்திய மாணவன்..மேற்படிப்பு ஆங்கிலம் உ.பி ஆங்கிலம்..டெக்னிகலாக நிறைய படிப்பு பற்றியும், ப்ராஜக்ட் பற்றியும் கேள்வி கேட்டார்கள்..நல்லாத்தான் பதில் சொன்னான்..ஆனால் விவசாயி மகன்..சொத்து நிலங்களாக காட்டினான் போல..ரிஜக்டட்..ஆங்கில உச்சரிப்பு மைனஸ் பாயின்ட். ப்ச்

பக்கத்து கவுண்டர்...கொஞ்சம் முப்பது வயதுக்கு மேல்..நிறைய கேள்வி கேட்டார்கள்..சரியா பதில் சொல்லல ரிஜக்டட் என்றார்கள்..அவன் எனக்கு பயம்..முதல் முறை என்றான்..இல்லை எட்டாம் முறை என்று கோவமாக சொன்னார்..மேல் நாட்டவருக்கு அதுவும் அரசாங்கத்தில் , மிகப்பிடிக்காத விஷயம் பொய் சொல்வது.. உண்மையை ஒத்துக்கணும்..அது மிக முக்கியம்..ஏதாவது ஒரு டாகுமென்ட் பொய் என்று தெரிந்துவிட்டால் ஜென்மத்துக்கும் ப்ளாக் மார்க் இருக்கும். நிகின்கிட்ட கூட பெயர் குழப்பத்துக்கு எது கேட்டாலும் உண்மைய சொல்லு இல்லாட்டி தெரியலன்னு சொல்லு..ஆனால் பொய்யா எதுவும் சொல்லாதே..வாக்கும் கொடுக்காதே என்றேன்..

பொய் எந்தளவுக்கு வாழ்க்கையை பாதிக்கும் என்பது விசா வேளையில் தெரியும். நிகின் எழுந்து சென்றான்..அம்மா வராதே..இங்கயே அம்மா வராங்க அங்கயும் கூட வருவாங்களா என்று கேக்கக்கூடும்..எனவே அங்கயே உக்கார்ந்துக்கோ என்று சொல்ல வேடிக்கை பார்த்தேன்..மிக எளிய கேள்விகள்..எப்படி படிப்ப அது போலதான்..என்ன பண்ண போறே..இந்தியா வருவியா? என்று..

விசா கொடுப்பவர்களின் முக்கிய நோக்கம் முக்கால்வாசியை ரிஜக்ட் செய்துவிட்டு மிக திறமையானவர்களை அவர்கள் நாட்டுக்கு ஏற்றுமதி செய்வதுதான்.  ஆனால் பெரும்பாலும்  செட்டில் ஆவதை விரும்ப மாட்டார்கள்..அதனால் என்ன நோக்கமாக இருந்தாலும் இந்தியா திரும்பி வருவேன் என்பதை ஓங்கி சொல்ல வேண்டும்.. பிறகு இன்னொரு மாணவர் வீட்டில் இருந்தாலும் பிரச்சனை.. நிறைய நுணுக்கமான விஷயங்கள்..கொஞ்சம் வசதியாக இல்லாவிட்டாலும் ரிஜக்ட் செய்ய வாய்ப்பு அதிகம்..இங்கு திரும்பி வர வாய்ப்பு இல்லை என்ற காரணத்துக்காக ரிஜக்ட் செய்வார்கள்..முக்கியமாக மாணவர்கள் சின்ன காலேஜ்ல் அட்மிஷன் கிடைத்தால் குடைச்சல் அதிகம்..நிஜமாகவே படிக்க போகிறார்களா இல்லை தப்பித்து வேலைக்கு போய் சம்பாதிக்க போய்விடுவார்களா என்று...(அப்படி வேலை செய்பவர்களின்  நிலைமையையும் பார்த்தேன்..எழுதுகிறேன்) எதுவும் பேச வாய்ப்பு இல்லை..இல்லை என்றால் இல்லைத்தான்..திரும்ப பணம் கட்டி அப்ளை செய்யலாம்..ஆனால் லட்சக்கணக்காக அப்ளை செய்பவர்கள் அனைவரையும் அனுப்ப முடியாது..ஏற்கனவே சட்டப்படி இல்லாமல் குடியேறுபவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை..

எனக்கு தெரிந்து வயதான பெற்றோர்களை கூட ரிஜக்ட் செய்கிறார்கள்..சரியாக உரையாட தெரிந்து இருக்க வேண்டியது மிக அவசியம்.நேர்த்தியான தோற்றம், தன்னம்பிக்கையான பதில்கள், வில்லங்கம் இல்லாத சர்டிபிகேட்கள், உண்மை இவை இருக்க வேண்டும்.
எனக்கு தெரிந்து வீட்டு வேலை செய்ய வேலைக்காரார்களை பெற்றோர் போல, சொந்தம் போல பொய் டாகுமென்ட்ஸ் தயாரித்து அனுப்புவதல்லாம் நடந்து இருக்கிறது..மாணவர்களாக, டூரிஸ்ட் களாக போய் தப்பித்து வேலை செய்ய போய்விடுவது உண்டு..
 எப்படியாவது போனால் போதும்..பிழைத்து விடலாம்.என்ற நம்பிக்கை..Illegal immigrants  அதாவது சட்டப்படி இல்லாமல் குடியேறுபவர்கள்  அத்தனை கண்காணிப்பு உள்ள நாட்டில் தப்பிக்க முடியுமா? நடமாட முடியுமா? அவர்களின் கதை கேட்டேன்..அனுபவம் தொடர்களில் ..


பையன் விசா கிடைத்துவிட்டது அம்மா என்றான்..நம்ப முடியவில்லை..பெங்களூருக்கு போஸ்டல் ல வரும்..அப்ப தெரியும் எத்தனை வருஷம் என்று சொன்னான்..வரும் வரை பெரிதாக அலட்டிக்கொள்ள வேண்டாம் என்று நினைத்தேன்..தன்னம்பிக்கையா , நல்ல ஆங்கிலத்தில் பொறுமையா பதில் சொன்னேன்..என்னை வாழ்த்திவிட்டு விசா வரும் என்றார்கள் என்றான்..அந்த நொடி ஈன்ற பொழுதாக இருந்தாலும் வெளியே வந்து விக்கி, விக்கி அழ ஆரம்பித்து விட்டேன்,,அழுகையை கட்டுப்படுத்தவே முடியவில்லை..விசா இல்லாவிட்டால் இன்னும் நாலு வருஷம் நம்மோடு இருப்பானே என்று ஒரு மனம் இருந்து இருக்கு..எல்லா டென்ஷனும் போய் பிரியப்போகிறான் என்ற துக்கம் வந்துவிட்டது..பெற்றோராக கூடை விட்டு பறக்கும் குழந்தையை அனுப்பி வைப்பது அத்தனை எளிதான காரியம் இல்லை..முதல் தீபாவளி கூட கொண்டாடி ஆகி விட்டது..குழந்தையை தூரத்தில் அனுப்பிவிட்டு..அவனுக்கு அது புரியவில்லை சந்தோஷமாக எல்லாருக்கும் போன் செய்துக்கொண்டு இருந்தான்..சரி நல்ல விஷயமாக செல்கிறான் என்று கண்ணை துடைத்துக்கொண்டு மனதை தேற்றி..நெருக்கமானவர்களுக்கு போன் செய்ய ஆரம்பித்தேன்..

விசா கையில் வந்தவுடன் எனக்கு அப்ளை செய்யவேண்டும்..நடுவில் மிகப்பெரிய பிரச்சனை..டிக்கட் கேன்சல் செய்யும் அளவுக்கு போய்விட்டது..அடுத்த பதிவில்..