Thursday, January 29, 2015

ஒபாமா வருகையும் , எண்ணமும்... நன்றி தி ஹிந்து.

   இதற்கா போராட்டம்?- யு.எஸ். சிறு நகர மக்கள் தந்த வியப்பு

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் என்ன சொன்னாலும் கொஞ்சம் அட்வான்ஸாக இருப்பார்கள். அமெரிக்கா என்றால் உயர்ந்த கட்டிடங்கள், நவீன டெக்னாலஜி என்றெல்லாம் சொன்னாலும் அடிப்படையாக அங்கு ஒரு மரத்தைக்கூட எளிதாக வெட்டிவிட முடியாது.
வர்ஜீனியாவில் சார்லட்வில்லே (Charlottesville) என்ற சிறு நகரத்துக்குச் சென்றிருந்தோம். அங்கு கொஞ்சம் நபர்கள் அனைவருக்கும் நோட்டீஸ் வழங்கி போராட்டம் செய்துகொண்டு இருந்தனர். என்ன என்று அருகே சென்று பார்த்தால், அவர்கள் ஊருக்கு தண்ணீர் வசதி செய்து தர தண்ணீர் குழாய் வரும் திட்டத்தை எதிர்த்து.

அந்த தண்ணீர் குழாய் வரும் இடங்களில் சில மரங்கள் வெட்டப்படுவதை அவர்கள் விரும்பவில்லை. அது எத்தனை நல்ல விஷயமாக இருந்தாலும் சரி... இயற்கையை அழிக்க விரும்பவில்லை. இங்கு மெட்ரோவுக்கு லட்சக்கணக்கான மரங்கள் அழிக்கப்பட்டதை நினைத்து வருத்தமாக இருந்தது. அதைவிட கொடுமை, ஒரு ரோடுக்காக வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் GKVK காட்டின் ஒரு பகுதி வெட்டி அழிக்கப்பட்டது.
டெட்ராய்ட் தொழில் நகரம் பற்றி வரலாற்றில் படித்திருப்போம். அந்த நகரம் தொழில் இல்லாமல் முடங்கி இருக்கிறது. அந்த நகரத்தில் தொழில் சார்ந்த வேலைவாய்ப்புகள் நின்று நிறைய நபர்கள் வேறு ஊர்களுக்கு தொழில் தேடி கிளம்பிவிட்டார்கள். அமெரிக்கா முழுக்கவே தொழிற்சாலைகளை மிகக் குறைக்கப்பட்டுவிட்டன.
ஐரோப்பாவிலும் இதே கதை. மிக குறைந்த அளவே தயாரிப்பு. ஏன்? தொழிற்புரட்சியில் முன்னணியில் இருந்த ஐரோப்பா, அமெரிக்க நாடுகள் ஏன் பின்வாங்கி இருக்கின்றன. எங்கு பார்த்தாலும் சீன தயாரிப்புகள். இந்தியா, பிலிப்பைன்ஸ், கொரிய தயாரிப்புகளும். மிகச் சில சந்தைகளை மட்டும் அமெரிக்கா தன் பிடியில் வைத்து இருக்கிறது. ஆனால், ஆராய்ச்சிக்கு அவர்கள் செலவழிக்கும் பணம், புத்திசாலி மாணவர்களை மூளைக்கு பணம் கொடுத்து இறக்குமதி செய்தல் போன்றவற்றில் முன்னணியில் இருக்கிறார்கள்.
ஏன் தொழில் துறையில் இருந்து பின்வாங்க வேண்டும்? சேவைத் துறைகளிலும், சுற்றுலா, கல்வி, ஆராய்ச்சி துறைகளில் ஏன் கவனம். மிக அழகான அரசியல் இது. அவர்களின் மூலப் பொருட்கள் அப்படியே வைத்துக்கொள்கிறார்கள். சேமிப்பில் அவர்களின் எரிபொருள், தண்ணீர், மின்சாரம் அனைத்தும் இருக்கும். அவர்கள் சேவைக்கு மட்டும் செலவழித்துக் கொள்கிறார்கள். அதே சமயம் கடன் வாங்கி நம்
மூலப் பொருள்களை நம்மை வைத்தே தயாரித்து நம்மிடமே நம் பணத்தை கொண்டு வாங்கிக் கொள்வது மிகப்பெரிய புத்திசாலித்தனமாக தோன்றியது.
அப்படியே இறக்குமதி பிரச்சனை வந்தால், எப்போது வேண்டும் என்றாலும் தொழில்நுட்பத்தை வைத்துக்கொண்டு அவர்கள் நாட்டுக்குள் தன்னிறைவு செய்துக்கொள்ள முடியும். விவசாயம், காடு வளர்ப்பு போன்றவற்றில் கவனம் செலுத்த முடிகிறது. கொஞ்சம் கொஞ்சமாக நதி, நீர்நிலைகளைக் காப்பாற்ற முடியும்.
நான் பார்த்த சார்லஸ் நதியின் சுற்றுச்சூழல் பாதிப்பை 50 ஆண்டுகளாக சரிசெய்தும் இன்றும் முடியவில்லை. 50 ஆண்டுகளுக்கு முன்பே நதி நீரில் கழிவு நீர் கலப்பது நிறுத்தப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.
ஐம்பது ஆண்டுகளாக தங்கள் வசதியை விட்டுக் கொடுக்காமல் சேவைத் துறையை தேர்ந்தெடுத்துக்கொண்டு, ஆசிய நாடுகளை மறைமுகமாக சுரண்டுவதாகத் தோன்றியது.
நாமும் திருப்பூரில் இருந்து 3000 லிட்டர் நீரை எடுத்து, அசுத்தப்படுத்தி ஆயிரம் ரூபாய்க்கு வெளிநாட்டுக்கு ஜீன்ஸ் ஏற்றுமதி செய்து, அந்நிய செலவாணி பற்றி பேசிக்கொண்டு, ஒரு லிட்டர் தண்ணீரை பத்து ரூபாய்க்கு வாங்கிக் குடிக்கிறோம். இங்கு யார் சாமர்த்தியசாலி?
இந்தியா தொழில் வளர்ச்சி காண வேண்டிய தருணம் இது. அவர்கள் வளர்ந்துவிட்டார்கள், எனவே சுற்றுச்சூழல் பற்றி இப்போது நாம் கவலைப்பட்டுக் கொண்டிருந்தால் பொருளாதார மேம்பாட்டை இழக்க வேண்டியிருக்கும் என்ற வாதம் ஏற்கத்தக்கதுதான். ஆனால், சுற்றுச்சூழல் பாதிப்பைத் தவிர்த்த வளர்ச்சி மீது கவனம் செலுத்த வேண்டும் என்பதே முக்கியம் எனப்படுகிறது.
ஒபாமாவை பார்க்க கைகோர்த்துக்கொண்டு அரசியல்வாதிகள் கியூவில் நிற்பதை பார்த்து வாட்ஸ்-அப்பில் சந்தோஷப்படுகிறோம், யார் யாரை ஆட்சி செய்கிறார்கள் என்று புரியாமலேயே. கோட் சூட் பற்றியும், கட்டிப்பிடித்து கொடுக்கும் போஸ் பற்றியும், மேடை பேச்சுகள் பற்றி மட்டுமே யோசிப்போம். வேற எதையும் தற்போதைக்கு யோசிக்க முடியாது. யோசித்து என்ன செய்யப் போகிறோம்?
கிருத்திகா தரண் - தொடர்புக்கு kirthikatharan@gmail.com