Wednesday, April 23, 2014

அந்த காலத்தில் அனைத்தும் அற்புதமில்லை..

அப்பொழுது எல்லாம் காற்று , நீர் எல்லாம் சுத்தமாக இருந்தது..எனக்கு தெரிந்து ஆற்றில் குளித்துவிட்டு குடத்தில் நீரை சுமந்துகொண்டு வருவார்கள்..சில வீடுகளில் மட்டுமே சொந்தமாக கிணறு இருக்கும்.

எங்கள் வீட்டின் உள்ளே கிணறு இருக்கும். கிணறு இருக்கும் முன்பக்கத்தை சேர்த்து கட்டியதாலோ இல்லை  ஏதோ ஒரு தாத்தா பெண்கள் மேல இருக்கும் அன்பாலோ இல்லை வம்பாலோ வீட்டுக்குள்ளேயே கிணறு கட்டி வைத்தார்.. அங்கு வெந்நீர் தவலை , விறகு அடுக்க ரூம் எல்லாம் உண்டு. சிறு வயதில் இருந்தது. பிறகு கைபம்பு, போர்வெல் போன்றவை வந்தப்புறம் மூடி அது வீட்டின் பகுதியாக ஆகிவிட்டது.

உழைத்து, உள்ளூரில் விளையும் காய்கறிகள், சுத்தமான காற்று லோக்கல் வம்புகள், இரவானால் தூக்கம்..பொது வம்புகளுக்கு நாட்டாமை, கல்யாணம் கார்த்தி என்று போய் கொண்டிருத்த வாழ்க்கை முப்பது வருடங்களில் தலைகீழாக மாற ஆரம்பித்தது..தெருவில் விளையாட போனால் பெண் என்ன, ஆண் என்ன எங்க இருக்கோம் என்று வீட்டில் இருப்பவர்களுக்கு தெரியாது..எல்லா வீடுகளுக்கும் நுழையும் உரிமை தெரு குழந்தைகளுக்கு உண்டு..இப்பொழுது போல பாலியல், காணாமல் போவது போன்ற பிரச்சனைகள் பற்றி அறியவும் இல்லை..அதிகம் இல்லவும் இல்லை..அதனால் கவலையும் இல்லை..

அந்த காலம் மிக அழகானதாக இருந்து இருக்கலாம்..நினைவில் அற்புதமாக இருக்கலாம். ஆனால் சில விஷயங்களும் இருக்கிறது. உதாரணம் மருத்துவ வசதி..கனவுப்ரியன் அவர் போஸ்ட் ல் எட்டு குழந்தைகளை அவர் அம்மா எந்த சிரமமும் இல்லாமல் வீட்டிலயே பிரசவம் பார்துகொண்டார் என்று...ஆனால் Infant mortality, Delivery deaths  மிக அதிகம்.

எங்க வீட்டு கொல்லைப்புறத்தில் சிறு மேடுகள் இருக்கும். சிறு குழந்தைகள் அதுவும் பிறந்து விரைவில் இறந்துவிட்டால் அவர்களுக்கு ஈம கிரியை கிடையாது. அதனால் வீட்டின் பின்பக்கம் புதைக்கும் வழக்கம் இருந்து இருக்கிறது. என் பாட்டி, அப்பாவின் தாயாருக்கு மூன்று குழந்தைகள். முதல் குழந்தை இறந்து இருக்கிறது. பிறகு அப்பா...அப்பாவிற்கு மூன்று வயதில் அடுத்த குழந்தை ..அது பிறந்ததும் ஜன்னி..பிரசவ ஜன்னி என்று பெயர்..சாதாரண ஜுரமாக கூட இருக்கலாம்..சரியான மருத்துவ வசதி இல்லாததால் அப்பா தாயாரை சிறு வயதில் பறி கொடுத்தார்.பிறகு அந்த குழந்தையும் சரியான கவனிப்பு இல்லாமல் இறந்தது.

     அதுவும் இல்லாமல் கத்தி சரியாக சுத்தபடுத்தாமல் பிரசவம் செய்வதிலும் நிறைய இன்பெக்ஷன் இறப்புகள். எனக்கு தெரிந்து கிராமத்தில் பிரசவம் செய்துகொண்ட  என் மாமியாரின் உறவினர் கர்ப்பபை வெளியே வந்து மருத்துவ வசதி இல்லாததால் உடனே இறந்துவிட்டார். அந்த குழந்தை தாயில்லாமல் வளர்ந்த கொடுமை வேறு...அந்த காலத்தில் பெண்கள் விகிதம் அதிகம் ஆதலால் உடனே இரண்டாம் திருமணம்.

எங்க தாத்தாக்கும் நடந்தது..சிறிய பாட்டி மிக அன்பாக இருப்பார்கள்..எங்களிடமும். ஆனால் அவர்களுக்கு அடுத்து அடுத்து ஆறு குழந்தைகள்..எனக்கு இருப்பது இரு சித்தப்பாக்கள்..மட்டுமே..மிச்ச நான்கு பேரும் எங்கள் வீட்டின் கொல்லைபுற மேட்டில் அமைதியாக உறங்கிக்கொண்டு இருக்கிறார்கள். என்ன ஆச்சு..அத்தனையும் சரியான மருத்துவ வசதி இல்லாததால் இறந்த குழந்தைகள்..ஒரு தாய் சேயை இழப்பதும்,  சேய் தாயை இழப்பதும் எத்தனை கொடுமையான விஷயம்.

சின்ன பாட்டிக்கு எப்பொழுதும் தலைவலி உண்டு..என் சிறு வயதில் இருந்து தலையில் தைலம் தடவியோ இல்லை துணி கட்டிகொண்டோ இருப்பார்கள். எத்தனையோ ஊர்கள், மருத்துவர்கள் எதுவும் சரிப்படவில்லை..இப்பொழுது உள்ளது போல ஒரு MRI அல்லது CT எடுத்து இருந்தால் அவரின் மூளைகட்டியை சிகிச்சை மூலம் சரி செய்து இருக்க வாய்ப்பும் இருந்து இருக்கிறது. ஏதோ ஒன்று உள்ளே வெடித்து இறந்ததாக கூறினார்கள்..

ஒன்றல்ல, இரண்டல்ல எக்கச்சக்க இழப்புகள் ஒவ்வொரு வீட்டிலும்..சரியான மருத்துவ வசதிகள் போய் சேராததால் இன்னொரு பாட்டி 99 வயது வரை ஆரோக்கியமாக இருந்து இருக்கிறார்..தெம்பாக இருந்த பாட்டிகளை விட தவற விட்ட  குடும்ப பெண்கள் அதிகம்

வீட்டில் ஒன்பது பேர் இருக்க வேண்டிய இடத்தில் மூன்று பேர்..இந்த சமயத்தில் அரசாங்கம் ஒவ்வொரு ஊரிலும் சிறு அளவிலாவது மருத்துவ வசதி செய்ததால் மட்டுமே இப்பொழுது இறப்பு விகிதம் குறைந்து இருக்கிறது. இன்னும் கிராமப்புறம் போய் ஒரு வருடமாவது வேலை செய்ய மருத்துவ மாணவர்கள் தயாராக இல்லை..சேவை மனப்பான்மை இல்லாத கல்வியும், பின்புலம் அறியாத வளர்ப்பும் ஒரு காரணமாக இருக்கலாம். சிறு வயதில் இருந்து சமூக சேவை பற்றிய விழிப்புணர்வு இல்லாததும் காரணம்..

அந்த காலத்தில் அனைத்தும் அற்புதம் இல்லை..

5 comments:

Unknown said...

Unmai!

chandrasekaran said...

அருமை.

சங்கர் நீதிமாணிக்கம் said...

மலரும் நினைவுகள்.

ISR Selvakumar said...

தலைப்பே அருமை... டியர் தங்ஸ்!

Unknown said...

நான் ஐந்து சகோதரிகள் ஆறு பேரும் வீட்டில் பிறந்தவர்கள்

35 வருடங்களுக்கு முன்பு மருத்துவ வசதி இல்லாமல் நானும் இரண்டு சகோதரிகளை இழந்திருக்கிறேன்.

ஒரு சகோதரி மஞ்சள் காமாலை இன்னொரு சகோதரி முள்குத்தி
அந்த இழப்புக்கு பெற்றோரின் அறியாமையும் கூடன்னு நினைக்க தோன்றுகிறது...