Wednesday, April 23, 2014

அந்த காலத்தில் அனைத்தும் அற்புதமில்லை..

அப்பொழுது எல்லாம் காற்று , நீர் எல்லாம் சுத்தமாக இருந்தது..எனக்கு தெரிந்து ஆற்றில் குளித்துவிட்டு குடத்தில் நீரை சுமந்துகொண்டு வருவார்கள்..சில வீடுகளில் மட்டுமே சொந்தமாக கிணறு இருக்கும்.

எங்கள் வீட்டின் உள்ளே கிணறு இருக்கும். கிணறு இருக்கும் முன்பக்கத்தை சேர்த்து கட்டியதாலோ இல்லை  ஏதோ ஒரு தாத்தா பெண்கள் மேல இருக்கும் அன்பாலோ இல்லை வம்பாலோ வீட்டுக்குள்ளேயே கிணறு கட்டி வைத்தார்.. அங்கு வெந்நீர் தவலை , விறகு அடுக்க ரூம் எல்லாம் உண்டு. சிறு வயதில் இருந்தது. பிறகு கைபம்பு, போர்வெல் போன்றவை வந்தப்புறம் மூடி அது வீட்டின் பகுதியாக ஆகிவிட்டது.

உழைத்து, உள்ளூரில் விளையும் காய்கறிகள், சுத்தமான காற்று லோக்கல் வம்புகள், இரவானால் தூக்கம்..பொது வம்புகளுக்கு நாட்டாமை, கல்யாணம் கார்த்தி என்று போய் கொண்டிருத்த வாழ்க்கை முப்பது வருடங்களில் தலைகீழாக மாற ஆரம்பித்தது..தெருவில் விளையாட போனால் பெண் என்ன, ஆண் என்ன எங்க இருக்கோம் என்று வீட்டில் இருப்பவர்களுக்கு தெரியாது..எல்லா வீடுகளுக்கும் நுழையும் உரிமை தெரு குழந்தைகளுக்கு உண்டு..இப்பொழுது போல பாலியல், காணாமல் போவது போன்ற பிரச்சனைகள் பற்றி அறியவும் இல்லை..அதிகம் இல்லவும் இல்லை..அதனால் கவலையும் இல்லை..

அந்த காலம் மிக அழகானதாக இருந்து இருக்கலாம்..நினைவில் அற்புதமாக இருக்கலாம். ஆனால் சில விஷயங்களும் இருக்கிறது. உதாரணம் மருத்துவ வசதி..கனவுப்ரியன் அவர் போஸ்ட் ல் எட்டு குழந்தைகளை அவர் அம்மா எந்த சிரமமும் இல்லாமல் வீட்டிலயே பிரசவம் பார்துகொண்டார் என்று...ஆனால் Infant mortality, Delivery deaths  மிக அதிகம்.

எங்க வீட்டு கொல்லைப்புறத்தில் சிறு மேடுகள் இருக்கும். சிறு குழந்தைகள் அதுவும் பிறந்து விரைவில் இறந்துவிட்டால் அவர்களுக்கு ஈம கிரியை கிடையாது. அதனால் வீட்டின் பின்பக்கம் புதைக்கும் வழக்கம் இருந்து இருக்கிறது. என் பாட்டி, அப்பாவின் தாயாருக்கு மூன்று குழந்தைகள். முதல் குழந்தை இறந்து இருக்கிறது. பிறகு அப்பா...அப்பாவிற்கு மூன்று வயதில் அடுத்த குழந்தை ..அது பிறந்ததும் ஜன்னி..பிரசவ ஜன்னி என்று பெயர்..சாதாரண ஜுரமாக கூட இருக்கலாம்..சரியான மருத்துவ வசதி இல்லாததால் அப்பா தாயாரை சிறு வயதில் பறி கொடுத்தார்.பிறகு அந்த குழந்தையும் சரியான கவனிப்பு இல்லாமல் இறந்தது.

     அதுவும் இல்லாமல் கத்தி சரியாக சுத்தபடுத்தாமல் பிரசவம் செய்வதிலும் நிறைய இன்பெக்ஷன் இறப்புகள். எனக்கு தெரிந்து கிராமத்தில் பிரசவம் செய்துகொண்ட  என் மாமியாரின் உறவினர் கர்ப்பபை வெளியே வந்து மருத்துவ வசதி இல்லாததால் உடனே இறந்துவிட்டார். அந்த குழந்தை தாயில்லாமல் வளர்ந்த கொடுமை வேறு...அந்த காலத்தில் பெண்கள் விகிதம் அதிகம் ஆதலால் உடனே இரண்டாம் திருமணம்.

எங்க தாத்தாக்கும் நடந்தது..சிறிய பாட்டி மிக அன்பாக இருப்பார்கள்..எங்களிடமும். ஆனால் அவர்களுக்கு அடுத்து அடுத்து ஆறு குழந்தைகள்..எனக்கு இருப்பது இரு சித்தப்பாக்கள்..மட்டுமே..மிச்ச நான்கு பேரும் எங்கள் வீட்டின் கொல்லைபுற மேட்டில் அமைதியாக உறங்கிக்கொண்டு இருக்கிறார்கள். என்ன ஆச்சு..அத்தனையும் சரியான மருத்துவ வசதி இல்லாததால் இறந்த குழந்தைகள்..ஒரு தாய் சேயை இழப்பதும்,  சேய் தாயை இழப்பதும் எத்தனை கொடுமையான விஷயம்.

சின்ன பாட்டிக்கு எப்பொழுதும் தலைவலி உண்டு..என் சிறு வயதில் இருந்து தலையில் தைலம் தடவியோ இல்லை துணி கட்டிகொண்டோ இருப்பார்கள். எத்தனையோ ஊர்கள், மருத்துவர்கள் எதுவும் சரிப்படவில்லை..இப்பொழுது உள்ளது போல ஒரு MRI அல்லது CT எடுத்து இருந்தால் அவரின் மூளைகட்டியை சிகிச்சை மூலம் சரி செய்து இருக்க வாய்ப்பும் இருந்து இருக்கிறது. ஏதோ ஒன்று உள்ளே வெடித்து இறந்ததாக கூறினார்கள்..

ஒன்றல்ல, இரண்டல்ல எக்கச்சக்க இழப்புகள் ஒவ்வொரு வீட்டிலும்..சரியான மருத்துவ வசதிகள் போய் சேராததால் இன்னொரு பாட்டி 99 வயது வரை ஆரோக்கியமாக இருந்து இருக்கிறார்..தெம்பாக இருந்த பாட்டிகளை விட தவற விட்ட  குடும்ப பெண்கள் அதிகம்

வீட்டில் ஒன்பது பேர் இருக்க வேண்டிய இடத்தில் மூன்று பேர்..இந்த சமயத்தில் அரசாங்கம் ஒவ்வொரு ஊரிலும் சிறு அளவிலாவது மருத்துவ வசதி செய்ததால் மட்டுமே இப்பொழுது இறப்பு விகிதம் குறைந்து இருக்கிறது. இன்னும் கிராமப்புறம் போய் ஒரு வருடமாவது வேலை செய்ய மருத்துவ மாணவர்கள் தயாராக இல்லை..சேவை மனப்பான்மை இல்லாத கல்வியும், பின்புலம் அறியாத வளர்ப்பும் ஒரு காரணமாக இருக்கலாம். சிறு வயதில் இருந்து சமூக சேவை பற்றிய விழிப்புணர்வு இல்லாததும் காரணம்..

அந்த காலத்தில் அனைத்தும் அற்புதம் இல்லை..

Tuesday, April 22, 2014

நன்றி குங்குமம் தோழி..fb page.

வணக்கம்...and Welcome to
செல்லியுடன் ஒரு chai

தோழிகளுடனான செல்லியின் கலக்கல் பேட்டி
__________________________________________________


செல்லி :உங்கள நீங்களே அறிமுகப் படுத்திக்கிட்டா எப்படி அறிமுகப் படுத்திப்பீங்க?

கிர்த்தி :இடத்துக்கு தகுந்தாப் போல..மனைவியா, தாயா, மருமகளா, மகளா, கற்றவளா, ஏதும் அறியாதவளா, வசதி படைத்தவளா, வசதி குறைந்தவளா, எளிமையா, பெருமையா எங்கு எப்படி வேண்டுமோ அப்படித்தான் என்னை அறிமுகப்படுத்திப்பேன்.

செல்லி :உங்க வெற்றிக்கான ரகசியம் என்ன..?

கிர்த்தி :எதையும் கற்றுக் கொள்ள ஆர்வமாக இருப்பது. என்னால் முடியாவிட்டால் உலகத்தில் யாராலும் முடியாது என நம்புவது.

செல்லி :உங்க முன்னாடி கடவுள் தோன்றி மூன்று வரங்கள் கேட்கச் சொன்னா என்ன கேப்பீங்க.?

கிர்த்தி :
1.உலக எல்லைகளை அழிக்கணும்.
நாடுகளே இருக்க கூடாது.
2.மனிதர்கள்.., அழிவுப் பணிகளை மறந்து
ஆக்கப் பணிகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.
3.அந்த உலகம் முழுவதும் என் காலடித் தடம் பதிய வேண்டும்.[ஆனா இந்தியாவில் நடக்கும் அரசியல் நடைப் பயணம் போல அல்ல..]

செல்லி :உலகத்துல எந்த எடத்துக்குப் போகணும்னு ஆசை..ஏன்?

கிர்த்தி :ஆசைன்னா மார்ஸ் தான்..போனாப் போவுது உங்களுக்காக விருப்பத்தை குறைச்சுக்கறேன்.. அமேசான் காடுகள்.
அந்த மாசுமருவற்ற இயற்கையை ரசிக்கணும்.அதில் நடக்கணும்..

செல்லி :வாழ்வு ங்றத எப்படி டிஃபைன் பண்ணுவீங்க?

கிர்த்தி :நம்முடைய இன்று--ம் இப்பொழுதும்-தான் ரசனையாய், மகிழ்ச்சியாய் வாழும் தருணம். நாளை நமக்கெதுக்கு ?

செல்லி :FBல உங்களுக்குப் பிடித்த மூன்று நண்பர்கள் ..
எதனால் அவங்களப் பிடிக்கும் ?

கிர்த்தி:நிறைய பேரப் பிடிக்கும்... குறிப்பிட்டுச் சொல்றது கஷ்டம்
எனினும் மூணே மூணு பேருன்னு சொன்னதுனால வட்டத்தை குறுக்கிக்கொண்டு சொல்றது..

வடுவூர் ரமா :
Vaduvur Rama
_______________
மனம் விட்டு பாராட்டுபவர் ..மிக இயல்பாய் இருக்கத் தெரிந்தவர். என்னைப் பொறுத்தவரை வாழ்வில் மிகக் கடினமான விஷயம் - இயல்பாய் நாம் நாமாய் வெளிப்படுவதுதான். அது ரமாவால் முடியும்.

ஆத்மார்த்தி :
Aathmaarthi RS
____________
ஆத்மா மிகக் குறுகிய காலத்தில் தன் எழுத்தால் மேலே வந்தவர். அவரின் உழைப்பின் மூலம் சாதித்துக் கொண்டு இருப்பவர். அவரின் வித்யாசமான யோசிக்கும் பாணியும் , உழைப்பும் ,தமிழை எல்லாவிதங்களிலும் கையாளுவதும் பிடிக்கும்.

ரத்னவேல் ஐயா:
________________
நல்ல எழுத்துகளை தேடிப்பிடித்து பாராட்டுவதில் வல்லவர். எந்த நல்ல ப்ளாக் இருந்தாலும் அவர் அங்கு இருப்பார். நல்ல வாசிப்புக்கு அடையாளம் அவர்தான். மனசு விட்டு அவர் அளிக்கும் பாராட்டுகள் பல பேரை ஊக்குவித்து மேலும் எழுத வைக்கும். முகநூலில் ஒரு அரிய, பெரிய மனிதர் நம் ஐயா.



செல்லி :பெண்களுக்கு பாதுகாப்பு தருவது எதுன்னு நினைக்கறீங்க?

கிர்த்தி :அவர்களுடைய தன்னம்பிக்கைதான்.
கழிவிரக்கம் அவர்களை அழித்துவிடும்.

செல்லி :உங்க பலம் என்ன ?பலவீனம் என்ன?

கிர்த்தி :ரெண்டுமே ஒண்ணுதான். ரொம்பப் பேசுவேன்.

செல்லி :உங்கள் மனம் கவர்ந்த தமிழ் திரைப்பட இயக்குநர் யார்?..மத்த இயக்குநர்களிடம் இல்லாத ஒரு அம்சமா அவரிடம் பாராட்டுவது எது?

கிர்த்தி :மணிரத்னம். எல்லாவற்றையும் open ஆக காட்சிப்படுத்தாமால் சில நுணுக்கங்களை ஒளித்து வைத்து பார்வையாளனுக்கு யோசிக்க ஒரு சந்தர்ப்பம் கொடுப்பது.

செல்லி :உங்களுக்குப் பிடித்த உடை எது ?ஏன் பிடிக்கும்?

கிர்த்தி :ஜீன்ஸ்தான் ....துப்பட்டா, முந்தானை என்று கால் தடுக்கும் சமாச்சாரங்களும் Continuous Conscious Confusion சமாச்சாரங்கள் ஏதும் இல்லாததாலும்..

செல்லி : ஒரு மகள்,மனைவி ,தாய் இதில் எந்த பாத்திரம் கடினம் ஏன்?

கிர்த்தி :மகளோ,தாயோ சில காலங்களில் அந்த கடமை முடிந்துவிடும். அதுவும் இல்லாமல் அதில் இருக்கும் ரத்த பந்தம் ஒரு ஈர்ப்பைக் கொடுக்கும். ஆனால் மனைவி என்பது திருமணம் ஆன அன்றில் இருந்து ஆரம்பிக்கும். நிறைய விட்டுக்கொடுத்தல், அனுசரிப்பு, பழக்கவழக்கம் மாறுதல் என்று கடைசி வரை சமன் செய்து கொண்டு போக வேண்டிய உறவு அது. இந்த காலத்தில் ஒரே அலைவரிசையில் ஒத்துப் போய் செய்யும் மனைவி ரோல் கடினமானது.

செல்லி : ஒரு நாள் மட்டும் வேறு ஒருவராக இருக்க உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் யாராக இருக்க விரும்புவீர்கள் ?ஏன்?

கிர்த்தி :ஐ.நா பொதுச் செயலராக..
உலக நாடுகளைக் கூட்டி இலங்கையில் நடந்த ...............களை,அநியாயங்களை ஓரளவுக்காவது
தட்டிக் கேட்க முயற்சிப்பேன்.

செல்லி : வாழ்க்கையில் இனி நீங்க எதிர் பார்க்கும் விஷயம் அல்லது தருணம் எது?

கிர்த்தி :இப்போதைக்கு ஒரு தாயாக பையனின் கல்லூரி அட்மிஷன்தான்..வேறென்ன இந்த வருஷம் யோசிக்க முடியும்..?

செல்லி :உங்களுக்கு மிகப் பிடிச்ச இந்த உலகின் மிகச் சிறந்த ஆண்மகன் யார் ..?ஏன்?

கிர்த்தி :என் பெரிய பையன் நிகின். அவன் யோசனைகள் அனைத்தும் வித்தியாசமாக இருக்கும். திருமணம் ஆனால் மனைவியை எப்படி நடத்துவாய் என்று கேட்டதற்கு இரு தனி மனிதர்கள் ஒரு இடத்தில் வாழ இடம் கொடுப்பதே உண்மையான திருமணமாக இருக்க முடியும் என்று சொன்ன ஒரு சிந்தனைக்காகவே நான் அவனை அதிகம் ரசிக்கிறேன்.. வியக்கிறேன்
என் பையன் என்பதால் அவன் சிறந்த ஆண்மகன் ஆகிவிடவில்லை தெளீந்த சிந்தனையால் மட்டுமே ஆண்கள் சிறந்த ஆண்மகன்கள் ஆகிறார்கள்.

செல்லி: நீங்கள் கடைசியாக அழுதது எப்போது?

கிர்த்தி :ஐயே ...இன்னாமே இது..
ஒரு பொம்பள எப்பஅழுவான்னு கேட்டுக்கினு..
..எப்ப வேணாலும் அழுவுறதுதான்...நீ இப்ப நான் ஓன் ஃப்ரென்ட் இல்லைன்னு சொன்ன வச்சுக்க அதுக்கும் அழுதுடுவேன்..அதனால் கட்ச்சி இப்பவா வேணாலும்.இருக்கலாம்..ஆனா பிறக்கிறப்ப அழுதுட்டு உடனே சிரிச்சிட்டேன்..அது இன்னிக்கு வரைக்கும் தொடருது .. ஏன்னா .தொட்டில் பழக்கம்.எதுவரைக்குமோ தொடருமாமே..?

செல்லி : ஒரு பெண் தன்னை எப்படி வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும் என நினைக்கிறீர்கள்..?

கிர்த்தி : அர்த்தநாரியாக...வெளியே ஆணாகாவும் வீட்டில்
தாய்மையுடனும்..

செல்லி: நன்றி கிர்த்தி
கிர்த்தி: நாந்தாம்ப்பா சொல்லணும். எனக்கும் சந்தோஷம்பா.. and one more thing.. டீ சூப்பர்.. ஒங்க பொடவையும் தான்..


An interview by chelli sreeni
Set and Properties-CS bavan BGLRE
Guest-MsKirthika Tharan
HOSTED BY -THOZHI fb
Template Design ByKannappan Nmr
Creative Head in assistance- Annapurani Narayanan
 — with Vaduvur Rama,Aathmaarthi RSAnnapurani NarayananN.Rathna VelKannappan NmrChelli Sreenivasan and Kirthika Tharan.
நன்றி குங்குமம் தோழி..

agnostic மண்டையும்
acoustic மண்டையும்
_________________________

அது ஒரு கொரியர் கலெக்க்ஷன் இடம்.
அங்கு இருந்த வயதானவரிடம் கோந்து வாங்கி ,
முகவரியை எழுதிக் கொடுக்கப் போனா..,
இந்த இருக்கையில் உக்காரும்மா என உக்கார வைத்து
மின்விசிறியைப் போட்டு ஏக வசதி செய்து கொடுத்தார்.

பிறகு ஹிந்துஸ்தானி இசை தெரியுமா என்று கேட்டுவிட்டு
பதிலுக்குக் காத்திராமல் பாடகர்களின் இசையை
யூ ட்யூபில் வழிய விட்டார்.
மெய் மறந்து க்யா பாத்..க்யா பாத்..
என்று கையைத் தூக்கி ரசித்த
அவரின் ரசனையை ஏனோ ரசிக்கத் தோன்றியது.

அடானா ராகம் ..அது ,இது என்று ஆரோகணத்துக்குப் போய்
பின் அவரோகணத்துக்கு வந்து
இசையை மேலே சுழலவிட்டு
கீழே தள்ளிவிட்டு என
நான் அங்கே இருந்த நேரத்துக்குள் ஏக இசை ரகளைகள்..

ஆனா பாவம்..
நான் இருந்த அவசரத்துல
என்னாலதான் எதையும் ரசிக்க முடியவில்லை.

பாடல்களைப் போட்டுவிட்டு
அப்பாடல்களைப் பாடிய பாடகர்களோடு
எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் ஒவ்வொன்றையும்
ஒரு குழந்தையின் ஆர்வத்துடன் எனக்குக் காட்டினார்

என்ன செய்தும் என்ன செய்ய ?
என் அவசரம் எனக்கு..

\கடைசியாக வருகிறேன் என்று சொல்லும்பொழுது
அவர் சுழலவிட்ட கன்னட பக்திப் பாடல்கள் அனைத்தும் அருமை..
எனினும் உருகி, உருகி பக்தி செய்ய முடியாத
என் அக்னாஸ்டிக் மண்டையைக் குட்டிக் கொண்டேன்.
சற்றே குறை சொல்லிக் கொண்டேன்..

அப்புறம் முக்கியமான ஒரு விஷயம்..
அவருக்கு இசையையும், தன் இசை ரசனையும் பகிர்வதில் அத்தனை ஆர்வம்.
கூடவே பொக்கிஷமாகப் பேணி பாதுகாத்துவரும் அந்த
புகைப்படங்களையும்
யாருக்கேனும் காட்டி மகிழ வேண்டும்.

ஆனா இதையெல்லாம் கேட்கவும் பகிரவும் மனிதர்கள் வேண்டுமே.
ஹாங்....நல்ல ஐடியா
அதற்கு பேஸ்புக்தான் சரி..
அடுத்த தடவை போகும்பொழுது
அவரை ஒரு ஃபேஸ்புக் கணக்கு ஆரம்பிக்க
பரிந்துரைக்க வேண்டும்..

அப்போதுதான் நம்மைப் போன்ற மனிதர்களைப் பார்க்காமல்
தானுண்டு தன் ஜோலியுண்டு என
வெளியுலகே அறியாது
செல்பேசியில் இல்லாவிடில் கணினியில் மூழ்கி இருப்பார்.

நானும், தோழியும்

நானும், தோழியும்..

ரொம்ப நாளாக எழுத நினைத்த 
மனதில் சுமந்த கட்டுரை..தள்ளிக்கொண்டே போகிறது.
ஒவ்வொரு முறை படிக்கும் வேளையிலும் ஒவ்வொரு விதமான கட்டுரை மனதில் பொங்குவதும்
அப்படியே வேறு வேலைகளின் காரணமாய் அச் சூடு தணிந்து அமுங்கிப் போவதும் வழக்கமே.
இன்று எழுத யோசிக்கவில்லை..உடனே எழுதிவிட்டேன்
மனதில் படுவதை மட்டுமே எழுதுவது என் வழக்கம்..அபப்டித்தான் இப்பவும் எழுதி இருக்கேன்.
மேலும் மனசை அலங்காரமான சொற்களால் கோர்க்க கை வருவது இல்லை..ஏனெனில் நாம மனதோடு பேசும் இனம்.

எப்போதுமே பெண்கள் பத்திரிக்கை பற்றி மிகபெரிய அபிப்ராயம் கிடையாது..காரணம்..
பெண்களுக்கு ஏன் தனி பத்திரிக்கை என்றுதான்..
ஆண்களுக்கு என அதிகம் தனி பத்திரிகைகள் இல்லை..
அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கான பத்திரிகைகள் ஆங்கிலத்திலோ , தமிழிலோ உள்ளே அழகும், சமையலும் போட்டி போட்டுகொண்டு இருக்கும்.
அதனால் கொஞ்சம் புரட்டுவதோடும் சில கட்டுரைகள் மேம்போக்காக பார்ப்பதோடும் சரி.

எல்லா பெண்கள் பத்திரிக்கைகளும் ஒரு பேட்டர்ன் இருப்பது போல தோன்றும்.ஒரு பேட்டி, ஒரு பாசிடிவ் முடிவு யூகிக்க கூடிய கதை, ஒரு மெகா சீரியல் குடும்ப தொடர், சில கட்டுரைகள், போட்டி, சமையல், அழகு குறிப்புகள்..இவ்வளவுதான்.

இப்ப இந்தியாவில் உள்ள எந்த மாலுக்குள் போனாலும் என்னால் எளிதாக வழி கண்டுபிடிக்க முடியும்.
அவர்களின் ஸ்டைல் அத்துபடி..ஒரு மேக்ஸ், பெண்டலூன், சூப்பர் மார்கட், லைப் ஸ்டைல்..தூள் துப்பட்டி கடைகள்..மேலே உணவு கோர்ட் இன்னும் மேலே சினிமா..மற்றும் விளையாட்டு இடங்கள்..இரண்டு அல்லது மூன்று தளங்கள் கார் பார்க்கிங்கள்..கொஞ்சம் லேசாக முன்ன பின்ன ..அவ்வளவுதான்..
அது போல பெண்கள் பத்திரிக்கை அமைப்பும் எந்த மொழியில், எந்த ஊரில் இருந்து வந்தாலும் கொஞ்சம் அப்படி இப்படி மாறி உள்ளே இருக்குமே ஒழிய உள்ளே உள்ள விஷயங்கள் அநேகமாய் அதேதான்

மால்களில் புது பொருள்கள் விற்றாலும் மால் அமைப்பில் மாற்றம் இல்லாததால் கொஞ்ச நாளில் அலுத்தும் போகிறது..
முதன் முதலில் குங்குமம் தோழியைப் படித்த பொழுது உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் அதிகம் கவரவில்லை..ஆனால் நாள் ஆக நாள் ஆக கொஞ்சம் கொஞ்சமாக படிக்க ஆரம்பித்தேன். மாலை(mall) கொஞ்சம் இடித்து செப்பனிட ஆரம்பித்து இருப்பது சந்தோஷமே..

பேஸ்புக் கில் எழுதும் அருமையான எழுத்துகளின் சொந்தக்காரர்களுக்கு வாய்ப்பு அளிக்கிறார்கள்
அதுவும் அவை அனைத்தும் மிக தரமான இலக்கியமும், ஜன ரஞ்சகமும் சார்ந்த கட்டுரைகள்..
பொது அறிவை வளர்ப்பதுவும் புது புது துறைகளை அறிமுகப்படுத்துவதும்..
உணவுக்கான தொழில் முறை போட்டோகிராபி போன்ற புது துறைகளில் சாதிக்கும் பெண்களைப் பேட்டி எடுத்து எங்கெல்லாம் வாய்ப்பு இருக்கு என்று அறிமுகப்படுத்துவதும்.செய்கிறார்கள்..

.கூடவே சாதனைப் பெண்மணிகள் ,வரலாற்றுப் பெண்மணிகள் பற்றிய சஹானா கட்டுரை, தமிழினி, வைதேகி அவர்களின் அழகான கட்டுரைகள்..மகிழ்ச்சி என்பது யாதெனில் அப்புறம், ..தோழிகளின் ஒரு வரி பேட்டிகள்..இப்படியாக ஒவ்வொரு பக்கம் பற்றியும் சொல்லிக்கொண்டே போகலாம்.கூடவே அவர்கள் தருவது பல சாமானிய தோழிகளுக்கு தங்களது முகத்தையும் அச்சில் பார்க்கும் ஒரு சந்தோஷம்..

சமையல் என்றாலும் சமைக்கும் ஆண்கள் பற்றி எழுதுவதும், குழந்தை வளர்ப்பு பற்றி மொக்கை போடாமல் அவர்களுக்கு நல்ல தொடுகை, செக்ஸ் விழிப்புணர்வு பற்றிய கட்டுரைகள் வெளிவருவதும், பல தொழில்கள் அறிமுகமும், சட்டங்கள் அறிமுகமும் அட போட வைக்கிறது.

கொடுத்த காசுக்கு மேலேயே ஜோதிகா நடிகிறார் என்று கல்லூரி காலங்களில் பேசுவோம்..அது போல கொடுத்த காசுக்கு மேலேயே கன்டென்ட் கள் அதிகம்..
அவ்வளவு விஷயங்கள் இருக்கு..இன்னும் பெண்கள் பற்றியே கட்டுரைகள் இல்லாமல் பெண்கள் தெரிந்துகொள்ளவேண்டிய அரசியல், இனம், பொதுஅறிவு, டெக்னாலஜி கட்டுரைகள் வந்தால் மிக சிறப்பாக இருக்கும். இனி வரும் காலங்களில் வரப்போகும் பெண்கள் பத்திரிக்கைகள் மேல் நம்பிக்கை துளிர்க்க வைக்கிறாள் தோழி

மிகுந்த ரசனையாக இருக்கு சில பக்கங்கள்..
உலகின் டாப் 50 டிரிங்க்ஸ், உலகின் பல்வேறூ டாப் டென் விஷயங்கள் உணவுகள்,சுற்றுலா இடங்கள் Etc.. என்று படத்துடன் வந்த /வரும் தொகுப்புகள் ரசிக்கத்தக்கவை..
அதைத் தவிர பல இடங்களில் வெற்றி பெண்மணிகள் கதைகள் வந்தாலும் அதை ரசனையோடு தொகுத்த விதத்தில் வித்தியாசப்படுகிறாள்..

தமிழினியின் வீடு பற்றிய தொடர்..அருமை..
ஆங்கிலத்தையும், தமிழையும் அழகாகக் கலந்து ஒரு காக்டெயில் பரிமாறுகிறாள்..
எனர்ஜெடிக் விஷயங்கள், பொருளாதாரம் , பொது அறிவு பற்றி கூறினாலும் இன்றும் பெரும் அளவில் வீட்டில் இருக்கும் குடும்பத்தலைவிகளின் ரசனைகள், சாதனைகளையும் வெளிக்கொணரத் தவறுவது இல்லை தோழி.

முக்கியமாக நம் பேஸ்புக் தோழிகள் எழுதும் வாரத்தை ஜாலம் பகுதி இன்னும் கவர்கிறது..அநேகமாக உலகப் பெண் பத்திரிகை வரலாற்றில் மொழிக்கான முதல் பத்தி இதுதான் என நினைக்கிறேன்.. நம் தோழிகள் தீபா ராமும் அனிதா ஜெயராமும் கலக்குகிறார்கள்.. இது சிறந்த முயற்சி மட்டுமல்ல.புது முயற்சியும் கூட..
இது மட்டுமல்லாது தோழியின் மற்ற எல்ல புதிய முயற்சிகளும் அழகு.

குடும்பத் தலைவிகள் சம்பாதிக்கவில்லையே என்று சோரும் சமயத்தில் உற்சாகத் தோள் கொடுக்கும் தோழியாகவும் விளங்குகிறாள்..

பெண்கள் மட்டும் சுற்றுலா போக நிறுவனம் நடத்தும் தோழி பற்றியும் அதே சமயத்தில் சுற்றுலா போக கொஞ்சம், கொஞ்சமாக சேமிக்கும் தோழி பற்றியும் குறிப்பிட்டு வாழ்க்கையின் எல்லா பக்கங்களையும் நமக்குக் காட்டித் தருகிறாள் தோழி...ஆக மொத்தம் சின்னச் சின்ன ரசனைகளை ஆங்காங்கே பாசிட்டிவாக தூவி கொண்டே போகிறாள் தோழி..

இந்தளவுக்கு பாராட்ட ஏதாவது காரணம் இருக்கும் இல்லையா.ஆமாம் இருக்கு..கிட்டத்தட்ட ஒரு வருடமாக எனக்குத் தோழியாக இருப்பதால் நான் அவளுடன் இன்னும் அதிக அந்யோன்யத்தை உணர்கிறேன் ..சென்ற முறை தோழி பற்றி பல பேருக்குத் தெரியாமல் இருந்தது..இப்பொழுது தமிழ்நாடு சென்ற பொழுது ஒவ்வொரு கடையிலும் முதல் வரிசையில் தோழியைப் பார்த்தபொழுது அழகிய நட்பை நல்ல நிலைமையில் பார்த்த பெருமையும் , மகிழ்ச்சியும்.
சிலரிடம் நல்லாருக்கு படிங்க என்று சொன்னபொழுது..அட, ஆமாம் என்று மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டார்கள்..

மகிழ்ச்சி என்பது யாதெனில்..

யாம் பெற்ற மகிழ்ச்சியை பகிர்ந்து
அனைவரையும் மகிழ்சியாக்குதல்.

அப்பா-1

அப்பா..1.

சின்ன வயதில் அப்பாக்கு ரேடியோ கேட்டால் பிடிக்காது..டி.வி கூட பார்க்கலாம்..ரேடியோ பல கற்பனைகளை தூண்டும் ..சின்ன வயதில் தேவை இல்லை என்று அவர் வாதம்..

எங்கோ கேட்ட பாட்டு..அர்த்தமே தெரியாமல் மிகச்சிறிய வயதில் பாடினேன்..

"ஒரு நாள் இரவில் தனிமையில் இருந்தேன் திருடன் வந்தான்"என்ற பாட்டை..

அப்பாக்கு என்னமோ செம கோவம்..அடிக்காத அப்பா அன்று ஒன்று வைத்து விட்டார்..

அதனால் நடந்த நன்மை..இன்று வரை அந்த பாட்டு நினைவில்..

ம்ம்ம்...பொண்ணுங்க..

அப்பா -2

அப்பா -2..

அப்பாவோடு வயலுக்கு போகும்பொழுது சிறு வயதில் பாம்பை பார்த்தவுடன் அப்பா பாம்பு, பாம்பு என்று கத்தினேன். உடனே வேலை செய்தவர்கள் ஏறி வந்து பாம்பு எங்கே என்று பேச்சு மும்முரத்தில் வேலை ஒரு மணி நேரம் கெட்டு போனது.

அப்பா கூப்பிட்டு..வயல்ல பாம்புகள் சாதாரணம், பார்த்தா ஒதுங்கி போகணும், அது எலியை சாப்பிட்டு நமக்கு நன்மை செய்ய வந்துருக்கு, அதை அடிக்கணும் என்று நினைக்க கூடாது..பிறகு வேலை கெடும் அளவுக்கு இப்படி நடந்து கொள்ள கூடாது என்று அறிவுரை.

ஒரு நாள் அறுவடை செய்த வயலில் இறங்கி நடக்கும் பொழுது நிறைய பாம்புகளை பார்த்தப்பொழுது சிறு பதட்டம்..ஆனால் பயமில்லை...அன்றில் இருந்து இன்று வரை பாம்பை கண்டால் ஒதுங்கி போகும் வித்தை அப்பா சொல்லி தந்தது..ஆனால் தேனிக்கு கூட பயப்படும் பசங்களை மாற்ற முடியவில்லை என்னால்.

அப்பா -3

அப்பா -3,

சின்ன குழந்தை அவளுக்கென்ன தெரியும் என்ற உறவினர்களின் கமெண்ட்ஸ்ஐ காதில் போட்டு கொள்ளாத அப்பா..

நாத்தாங்கால் என்று பெயர்..நாற்றுகள் ஒரு இடத்தில விதைத்து பிறகு அதை பறித்து உழவு செய்த வயல்களில் நடுவார்கள். கிராமங்களில் திருட்டு அதிகம். அதற்காக வண்டியில் நாற்று கட்டுகளை அனுப்பும் பொழுது பின்னாடி அப்பா என்னை அனுப்புவார் சில சமயம்.

குதித்து கொண்டு ஓடினாலும், சில சமயம் அலுப்பாக வரும். என்னப்பா இங்க எண்ணிட்டு அங்க எண்ணிக்க வேண்டியதுதானே அப்படின்னு கேட்டு இருக்கேன். ஒரு நாள் இதென்ன ஆட்கள் மேல நம்பிக்கை இல்லையா என்று கேட்க அப்பா சொன்னது....

"உன் பொருளை நீ கவனமாக பாதுகாத்து கொள்ளாவிட்டால் அது உன் பொருள் இல்லை..பிறகு அடுத்தவரை குற்றம் சொல்லுவதோ, பழி சுமத்துவதோ, வாய்ப்பு கொடுத்துவிட்டு திண்டாடுவதோ கூடாது..அப்படி உன்னால் முடியாவிட்டால் அந்த பொருளை மறந்துடனும் இல்லாவிட்டா கவலைப்படாம எக்கேடு கெட்டு போனா என்னன்னு விட்டுடனும்".

மாட்டு வண்டியின் பின்னால் சந்தோஷமாக போக ஆரம்பித்தேன்..

குழந்தைகள் காரணம் சொல்லாவிட்டால் காரியம் செய்யமாட்டார்கள்.