Monday, May 2, 2016

நேற்றைய நாளை.

நேற்றைய நாளை.

உபயோகிப்பது எல்லாம் OLA என்றாலும் நான் அதற்கு எதிரானவள். ஏனெனில் எந்த மோனோகாமியில்(Monogamy) இறங்கும் முதலாளித்தத்தவமும் தங்கள் நரி முகத்தை காட்டியே தீருவார்கள். உள்ளூர் பானங்களை தேடி தேடி காலி செய்த பெப்சி, கோலா ஆரம்பித்து இன்று அக்காமாலா OLA வரை.

உள்ளூர் பாஸ்ட் ட்ராக் போன்றவற்றில் கை வைத்தால் கூட பரவாயில்லை, தெருக்கோடி டாக்சி டிரைவர் முதல், ட்ராவல்ஸ் வரை ஒழித்துக் கட்டிக் கொண்டு முக்கோடி தேவர்களையும் ola லா,லா என்று சொல்ல வைத்து விட்டது. அடுத்து கொடியெல்லாம் கட்டி ஒற்றுமையாக சங்கம் வைத்து கொள்ளையடித்துக் கொண்டிருத்த தனிப்பட்ட ஆட்டோக்களுக்கும் செக் வைக்க ஆரம்பித்து இருக்கிறது. இருக்கும் நாலு நல்ல ஆட்டோகாரார்கள் கூட ஒலாவில் சேர்ந்து அவர்களுக்கு கொள்ளையில் பங்கு கொடுத்து மிச்சத்தை எடுத்துக்கொண்டு முதலாளி நிலமையில் இருந்து தொழிலாளி நிலைமைக்கு வருவார்கள். இவர்களுக்கு கஸ்டமர் மார்க் கொடுத்தாதான் அடுத்து அடுத்து சவாரிகள் கிடைக்கும். இதில் எங்கு முதலாளி ஆவது.

அதன் ஆப் கூட சரியாக சண்டைப் போடுவேன். OLA app. ஒரு வேலை. சுத்தி சுத்தி பிளாஷ்பேக் காட்டி மஞ்சள் கருப்பில் மின்னியது. இந்கிட்டு..தோ பாரு உன் வீட்டாண்ட மினி இருக்கு 1.6 x தான் போவிர்களா என்றது. இல்லை என்றேன். சரி மைக்ரா, ஏ.சி புச்சு நைனா புச்சு காசும் குறைச்சல் போவியா என்றது. சரி அனுப்பு என்றேன்..நைனா இப்போ பீக் ( பெங்களூர் ட்ராபிக் எப்பவும் பீக் தான்) 1.8 X தர்றியா நைனா...வாயில் கெட்ட வார்த்தை வந்தே விட்டடது. வர வர கிராமத்து நினைவுகளும் அவர்களின் கெட்ட வார்த்தைகளும் நினைவுக்கு வருகின்றன. முக்கியமா ஃபேஸ் புக் கில் ஒரு மிக நல்ல பெண்ணை வம்புக்கு இழுத்தால் நிகின் பேசும் நான்கு மொழி வார்த்தைகளும், ஊரில் பேசும் அத்தனை கெட்ட வார்த்தைகளும் அந்த போஸ்ட் மேலேயே எச்சிலோடு விழுகின்றன. அதற்கு ஜிங் ஜாங் கமென்ட் செய்தவர்களின் கதி அதை விட மோசமாய். அந்த நல்ல பெண்ணை பற்றி பிறகு சொல்கிறேன். அவர் நமக்கு மிக வேண்டப்பட்டவரே. இந்த மெண்டல் லட்டி நல்லதா என்று யோசிக்க வேண்டும். வயசுதான் ஆகிறது. இதற்கு ப்ளாக் நல்லது (blog இல்ல block) என்றே தோன்றுகிறது.

இந்த ஃபேஸ்புக் கதை வேண்டாம். டென்ஷனை கிளப்பு. ஆங் ஓலா க்கும் எனக்கும் போராட்டாடம்டம் . இப்ப எவ்வளவு என்றேன். வண்டிகள் இல்லை என்றது. பிறகு ஐந்து நிமிடம் கழித்து எம்புட்டு சொல்ற..பீக் போச்சா என்றேன்.. போச்சே 1.2X என்றது..ம்ஹூம் மெக்ரா எம்புட்டு..அது இங்கிட்டு இல்ல என்றது. 
விடுவேனா ஆட்டோ என்றேன் ..அது மீட்டரில் வரும். பத்து ரூபா மேல போட்டுக் கொடு என்றது. சீல் வைத்த ஆட்டோவையை சந்தேகப்படும் இனம். என்கிட்டவா என்று கொஞ்ச நேரம் சும்மா இருந்தேன்.
அப்பொழுது இணைய நண்பரரிடம் கிளம்புகிறேன் என்று சொல்லிவிட்டு ஒலாவில் போவதா காரில் போவதா குழுப்பம் இந்த இரண்டில் ஒண்ணு சொல்லுங்க என்றேன். பக்கத்தில் யார் இருந்தாலும் கேப்பேன். உங்கள் இஷ்டம் என்று அவர் தல தெறிக்க ஓடுவது தெரிந்தது.

ஒலாவில் அறநூறு ரூபாய். அலுப்புபடாமல் ஓட்டினால் ஐநூறு மிச்சம். பார்கிங் செய்ய வேண்டுமென்றால் சிட்டி மார்க்கெட் அருகில் இருக்கும் ஒரே பார்கிங் மகாராஜா காம்ப்ளக்ஸ். நானோ SJP ரோடு செல்ல வேண்டும். தரன் அழகா ஒலாவில் கடை வாசலில் இறங்கி, ஏறி வா என்று பச்சை கொடியும் காட்டினார். நாம்தான் சொன்ன பேச்சை கேக்கும் ஊருக்கு போய் கூட தெரியாதே.
உடனே போனில் கூப்பிட்டு அந்த ஐநூறு க்கு ஒரு டாப்ஸ் வாங்கினா கூட உண்டு. (நீ ஐநூறு க்கு வாங்கிடுவியாக்கும் என்ற மைன்ட் வாய்ஸ் சத்தமா கேட்டது) நானே டிரைவ் செய்து போகிறேன் என்றேன். 

இந்த SJP ரோடில் பார்க்கிங் செய்ய காலையில் ஐந்து மணிக்கே வந்துவிடுவார்களா என்ற சந்தேகம் எப்பவும் உண்டு. கார்கள் அத்தனை குப்பையா, தூசியுடன் இருக்கும். ஆனால் காலை போனால் மிக மிக அழகாக மாலையும், பூக்களும், பொக்கைகளும கர்நாடக மாநிலத்திற்கே சப்ளை செய்வது போல சந்தைப்படுத்தப்பட்டிருக்கும். இப்பொழுது குப்பையும், கூளமும். காலையில் மணமும் பூக்களும் ஒரே தெரு கல்யாணம் மற்றும் ஆஸ்பத்திரிக்கு தனி தனி புடவை கட்டிக்கொள்ளும் பெண் போல எப்படி வேஷம் போடுகிறது என்று ஆச்சரயமாக இருக்கும்.

ஆங் ஒலாவில் விட்டு எங்கோ..கடைசியில் இன்னாதான்பா சொல்றே ன்னேன். ஆப் இவ நமக்கு ஆப்பு வைக்க வந்தவ போலன்னு சந்தேக கண்ணோடு பார்க்க ஆரம்பித்து விட்டது. உடன் 2.2X தான் இருக்கு போறியா என்றது. அதாவது 2.2. மடங்கு கட்டணம். போய்யா டிராபிக் எம்புட்டு இருந்தாலும் நோக்கு அஞ்சு பைசா தரமாட்டேன் என்று ஆப்பை ஆப் செய்தேன். உடனே 50% ஆட்டோவில் போக கோட் வச்சுக்கோ..நோக்கு மட்டுதான்.என் செல்லம்ல உடனே ஆட்டோ புச்சி போவியாம் என்றது.
கோடாம் கோடு..என்கிட்டேவா..காலா வையே வந்து பாரு என்பேன்..இந்த ஓலா சும்மா..என்று காரை எடுத்தேன்.

பார்கிங் அதிர்ஷ்டவசமா கிடைத்து விட்டது. ஒரு முறை பைக்க அந்த தெருவில் பார்க்கிங் செய்து இருந்தேன். கையில் முழுக்க சாமான்கள். பழம, காய்கறி வேறு, எத கம்மி என்று சொன்னாலும் பொறுக்கும் ஜாதி. திரும்பி வந்துப் பார்த்தல் வண்டியை காணும். அந்தளவுக்கு ஏரியா பழக்கமில்லை. வண்டி கலாசிபாளையம் போலீசிடம் இருக்கும் போங்க என்றார்கள். ஆட்டோவில் செல்ல கூட அதிக பணம் இல்லை. கார்டுகள் இல்லா காலம். நடந்து நடந்து களைத்து சென்றேன். நல்ல வேளை வண்டி இருந்தது. நூறு என்றார்கள். கையில் அத்தனை இல்லை. பெண் என்றால் கர்நாடக டிராபிக் போலீசார்கள் கண்டிப்பாக இரங்குவார்கள். சாரே கொத்தில்லா சாரே. நான் ஏன் மாடலி, அஷடு காடிகள் ஜதை ஆக்பிட்டு வந்தேன். இனி மாடல்லா, தப்பாயித்து என பாவமாக சொல்ல, வண்டியை கொடுத்துவிட்டார்கள். வரும்பொழுது டீ செலவுக்கு போலீசிடம் பணம் வாங்காமல் வந்தது ஏனோ நினைவுக்கு வந்தது. ஆனால் அவர்கள் அனுபவத்தில் எத்தனைப் பேர் பார்த்து இருப்பார்கள்.

அந்த தெருவில் போர் சாமன்கள், கிரைண்டர் சாமான்கள். குழாய் சாமன்கள் என்று எல்லா ஹோல்சேல் கடைகளும் உண்டு. ஒவ்வொரு குறுக்கு தெருவிலும் ஒரே பொருட்கள் பல கடைகளிலும் இருக்கும். கார்பன்டரி பிட்டிங்க்ஸ் ஒரு கடை, வெறும் இரும்பு பர்னிச்சர் ஒரு தெரு, எலட்டராணிக்ஸ் ஒரு தெரு, எலட்ரிகல் ஒரு தெரு. வெளியூர் வாசிகள் உள்ளே செல்வது அத்தனை நல்லதல்ல.


சில கடைகளில் தீவிரமாக பார்கயின் செய்து கொட்டேஷன் வாங்கினேன். பெங்களூருவை பொறுத்தவரை நன்றாக பேரம் பேசலாம். ஒன்றும் சொல்ல மாட்டார்கள். கோவமும் வராது.

ஒரு குறுக்கு தெரு நுழைவில் கபாலி டீசருக்கு ஆளுயர கட் அவுட்..தலைவரருடன் கூட அத்தனைபேர் ஆளுயுர போட்டோவும் இருந்தது. எல்லாருக்கும் தனக்கு கட் அவுட் சிட்டி மார்கடடில் வைக்க முடியுமா? தலைவர் பேர் சொல்லி வைத்தாயிற்று. தமிழனடா.. அத்தனை பர பர பர தெருக்கு முன் பெரிய பார்க். உயிரை கையில் பிடித்து கிராஸ் செய்து (அறுநூறு ரூபாய் மிச்சப்படுத்த அந்த தெருவில் பல தற்கொலை முயற்சிகளை தாண்டி வர வேண்டி இருக்கிறது) ஊரில் எது நடந்தாலும் எதுவும் பாதிக்காமல் மடியில் படுத்துக்கொண்டு, சாய்ந்துக் கொண்டு , முகம பார்த்து, சண்டைப் போட்டுகொண்டு வித வித போஸ்களில் லவ் பேர்ட்ஸ். எதிர் சாரியில் ஐம்பது ரூபாய்க்கு மாடு போல வண்டி இழுக்கிறார்கள் . இங்கு இப்படி என்ற கம்பியுனிச சிந்தனையை புதைத்து விட்டு வாலண்டைன் சிந்தனைக்கு தாவினேன். என்னவோ பார்க்கில் சிறுசுகளை பார்க்கும் பொழுது கல்யாணம் செய்து வைக்கும் சிவ சேனா நினைவும்..

ஒரு ஜாம் தவிர்க்க சந்தில் புகுந்து அரை மணி மிச்சப்படுத்தி திரும்பினால் பயங்கர டிராபிக் ..வலதுபக்கம் ஒரு சிலை கத்தி கேடயம் வைத்துகொண்டு. சிவாஜி ஜாடை..ஆனால் நின்றுகொண்டு. ஒரு ஆயிரம் முறை கடந்துருப்பேன். இன்று வரை சிலையும் தெரியல, அது யாருன்னும் தெரில. நம்ம ஊர் போல கண்ணகி சில, காந்தி சில பஸ் ஸ்டாப் வைக்கும் பழக்கம இல்ல. கப்பன் பார்க்கில் இருக்கும் சிலை விக்டோரியா என்பதே சில வருடங்களுக்கு முன் தெரிந்துகொண்ட பொது அறிவு. பத்து பேர் வெள்ளையும் சொள்ளையுமா ஒரு செல்பி ஸ்டிக் போல ஒரு கம்பில் மாலையை மாட்டி அதற்கு அணிவிக்க முயற்சி.போட்டோக்கு போஸ் கொடுத்தது காமெடியாக இருந்தது. நம்ம ஊர் சிலைக்கு மாலை போட போனா கலவரமால்ல ஆக்கிப்பிடுவாய்ங்க..ஆத்தாடி. வயலன்ட் தெரியாத சைலன்ட் பெங்களூர் அரசியல்.

வழியில் இன்பாக்ஸ் மிளிரியது. கீர்த்தி இது உண்மையா என்றார். ஐந்து வருடத்தில் பெங்களூர் சந்திக்கப்போகும் மிக பயங்கர பிரச்னைகளை எடுத்துரைத்த கட்டுரை.
ஏரிகள் ஆக்கிரமிப்பு, நீர் மேலாண்மை, காவிரியில் இருந்து ஆயிரம் அடி உயரே தண்ணிர் பம்ப் செய்யப்படும் விதம், வானுயுர கட்டிடம் , கடுமையான டிராபிக், வெட்டப்பட்ட லட்ச லட்ச மரங்கள் பற்றி IISC மாணவர்கள் எழுதிய கட்டுரை.

இருவது வருடம் முன்பு நானும் தரனும் சுசுகி பைக்கில் NEW BEL ரோடில் செல்வோம். இரு பக்கமும் சோலை மரங்கள். வண்டியில் போனாலே குளிரும். 365 நாட்களும். அந்த தெருவின் ஒரு பகுதி அப்படி. திருமண புது ஜோடி காலங்கள் அந்த குளிரில் மகிழ்ச்சி கொண்டாடியது. இந்த தெருவில் சுஜாதா ஒரு காலத்தில் வசித்தார். இப்பொழுது தெரு, ரோடு அல்ல கமர்ஷியல் ஏரியா. இன்று போனாலே கடுப்பாக இருக்கிறது. ஜோடியா போனா இருக்கும் காதலும் போய் கடுப்பு வரும்போல ஆகிவிட்டது அந்த சோலை தெரு. இப்பொழுது அதுபோன்ற குளு குளு தெருக்கள் நினைவில் மட்டுமே.

ஏரிகள் போதும் குடிநீர் தேவைக்கு. அத்தனை ஏரிகள் இங்கு. எல்லாம் போச்சு. மெட்ரோக்கு வெட்டிய லட்சகணக்கான மரங்களுக்கு பதிலே காணும். மரங்களை முளைகிறதோ இல்லையோ தெருக்கு ஒன்று மால்கள் முளைக்கிறது. அசுர வளர்ச்சி என்று சொன்னால் போதாது. அத்தனை கார்களுக்கு இடமே இல்லை இங்கு. கிருஷ்ணா காலத்தில் ஐடி வந்தது வரம் என்று நாங்கள் நினைத்தோம். அதுவே எங்களின் சாபம் ஆகியது.

அந்த கட்டுரைகள் நினைவை கிளறியது. பெங்களூரில் இருந்து தப்பி மாயவரம் போய்விடு என்றது இன்பாக்ஸ் செய்தி. மாயவரம் ஒரு குழந்தை என்றால் எனக்கு பெங்களூரு இன்னொரு குழந்தை. நான் ஒரு உண்மையான பெங்களூரியன். எத்தன்னை அழுக்காக ஆகட்டும், குப்பைகள் சேரட்டும் அது என் குழந்தைதான். விடுவது என்பது கனவில் கூட இல்லை என்றேன். லோக்கல் எம்.எம் ல " நீ யாரா இருக்கலாம். எங்க வேணா இருக்கலாம், எப்படி வேணா இருக்கலாம், எங்க ஊருக்கு வா, வந்தா கன்னடதவனா இரு". இதை அதிக மொழியில் மொழிபெயர்க்க சொல்லி பரிசு கொடுத்தார்கள். அத்தனை ஸ்பீடா போன் நம்பர் சொல்லியும் பலர் போன் செய்ய முடிவது ஆச்சர்யம். தமிழில் சொல்கிறேன் என்று கன்னட தமிழில் மாத்தாடினார்கள்.

கப்பன் பார்க்கின் இருபுறமும் பெயர தெரியாத வெள்ளைப் பூக்கள் . ஒருப் பெண் ஸ்கர்ட், நீள அழகிய கால்களுடன் பாயின்ட் ஷூ போட்டுகொண்டு காரில் ஏறினாள்.. நமக்கு ஹீல்ஸ் தடுக்குது..இதில் எங்கு பாயின்ட் ஷூ இதெல்லாம் காரில் போய் சொகுசா இறங்குபவர்களுக்குதான் லாயக்கு என்று கார் ஒட்டிக்கொண்டே சிந்தித்தேன். மனித முரண்

ஒரு ஆட்டோ குழந்தை தூறலை கை நீட்டி எடுத்துகொண்டது. பிரசாதத்தை தெய்வம் வாங்குவதுப் போல. கார் கண்ணாடிகளை இறக்கி விட்டேன். தூறலை ரசித்தேன். போனில் இங்கு மழை டிராபிக்கில் மாட்டிகொள்வாய்..சீக்கிரம் வீட்டுக்கு வா என கேட்க..வீட்டுக்கு வந்து ஒரு காபி, மிக்சருடன் மெல்லிய காற்றில் பெங்களூரை ரசிக்கிறேன். என் குழ்ந்தை என்றும் என் நம்பிக்கையை பொய்க்காமல் மீண்டு வரும், தன்னை மாற்றிக்கொள்ளும் என்று புரிந்தது. அதற்குள் சமாளித்து விடுவோம். we are bangaloreans.

Saturday, April 9, 2016

என் கதை. நன்றி Your Story

'நள்ளிரவில் கழுத்து நிறைய நகைகளுடன் என்றைக்கு ஒரு பெண் தனியாக அச்சமின்றி தெருவில் நடந்து செல்ல முடிகிறதோ, அன்றைக்குத்தான் உண்மையான சுதந்திரம் கிடைத்ததாகச் சொல்ல முடியும்' என்று கூறினார் தேசப்பிதா மகாத்மா காந்தி. அவருக்கு இன்று ஃபேஸ்புக்கில் அக்கவுண்ட் இருந்திருந்தால் இப்படிச் சொல்லியிருக்கலாம்...
"ஒரு பெண், தான் விரும்பி எடுத்த செல்ஃபியையும், தன் மனதில் உதித்த எண்ணத்தை எடிட் செய்யாமலும் 'பின்விளைவுகள்' ஏதுமின்றி என்றைக்கு ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட முடிகிறதோ..."

ஆம், ஃபேஸ்புக்கில் நட்பு வட்டாரத்துடன் தங்கள் படங்களைப் பகிர்ந்து மகிழ்ந்தால், அது எங்கெங்கோ வெவ்வேறு அவதாரத்தில் வலம் வந்து அதிர்ச்சி அளிக்கின்றன. கொஞ்சம் கவனம் பெறும்படி செயல்களில் ஈடுபட்டாலோ அல்லது தீவிரமாக எழுதினாலோ வேறு விதமான எதிர்வினைகளை சந்திக்க நேரிடுகிறது.




இத்தகைய சூழலில், ஃபேஸ்புக்கில் மிகத் தீவிரமாக இயங்கி, அதன் மூலம் பல தளங்களில் கவனம் ஈர்த்துள்ள கிர்த்திகா தரண், பெண் என்பதாலேயே ஃபேஸ்புக்கில் சந்திக்க நேர்ந்தப் பிரச்சினைகள் பற்றியும், அதை எதிர்கொண்ட விதம் குறித்தும் தமிழ் யுவர் ஸ்டோரியுடன் அனுபவங்களைப் பகிர்ந்தார். அது அப்படியே அவர் மொழி நடையில்...


நாங்க தனி ஆள் அல்ல...\
ஆங்கிலத்தில் இரு வரி பதிவுகள், அங்கே போனேன், இங்கே போனேன் என்று சில புகைப்படங்கள், இரண்டு புத்தர் அல்லது ஜென் தத்துவ பகிர்வுகள்... பத்து சொந்த பந்தம், அக்கம் பக்கம், கல்லூரி, பள்ளித் தோழர்களைக் கண்டுபிடித்து அளவாடுதல்கள்... இப்படிதான் பல பேரின் ஃபேஸ்புக் பக்கங்கள் போல என் பக்கமும் சென்றது.

ஒருநாள் தோழி, 'வா கவிதைப் பக்கம் திறந்து இருக்கிறோம். வெறும் கல்லூரி மற்றும் தெரிந்தவர்கள்' என்று கூற, அப்பொழுதுதான் தமிழில் எழுதும் இத்தனை பேர் இருக்கிறார்கள் என்றுக் கண்டுகொண்டேன். அப்படியே வெளியேறி ஒவ்வொரு பக்கமாக போய் நானே சேர்த்துக்கொண்டு, அவர்கள் கொடுப்பதை ஏற்று கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்தேன். ஒரு தோழி சொன்னதால் பப்ளிக் செட்டிங் வைத்து பதிவுகள் போட ஆரம்பித்தேன். அதனால் ஃபாலோவர்ஸ் ஆரம்பித்து இன்று 20 ஆயிரத்தைத் தொடப்போகிறது.
இது எல்லாவற்றையும் விட நண்பர் ஒருவர் ஆரம்பித்த டயட் குழுவில் இணைந்து என் உடல் எடையை பதினெட்டு கிலோ குறைத்தேன். இன்றும் நன்றிக்கு உரிய மனதில் மறக்க முடியா நபர் அவர். இன்று எங்கள் வாட்ஸ்அப் குழுமத்தில் 130 பெண்கள். அதில் 60-க்கும் மேலே உடல் இளைப்பு. ஆரோக்கிய மாற்றம். இதற்கு ஒரு ஃபேஸ்புக் நல்ல நட்பின் வழிக்காட்டுதல் இல்லாமல் சாதித்து இருக்க முடியாது. அது அடுத்தடுத்து ஃபேஸ்புக் பக்கமாக விரிவடைய காத்து இருக்கிறது.

இப்படி பல பல நன்மைகள் இங்கு வந்ததால் கிடைத்தது. அடுத்து கிறுக்கி வைத்தேனா, எழுதினேனா என்றெல்லாம் தெரியாது. தோழி ஃபேஸ்புக் பரண் என்று பக்கம் வைத்து இருந்தார். அவரின் ஊக்குவிப்பு இல்லாமல் நான் எழுதியிருக்க மாட்டேன். அவர் ஒற்றைப் பெண்ணாக பின் இருந்து வளர்த்து விட்டவர்கள் பலர். இதுபோன்ற மனிதர்கள் சமூக வலைதளத்தில் அரிது.
ரிலாக்ஸ் ப்ளீஸ், வலைபேச்சு என்று பகிரத் தொடங்கினார்கள். ஏன் என்றால் தேடித்தேடி பெண்கள் பதிவை படிக்க வேண்டிய காலம் அது. வெகு சில பெண்கள் மட்டுமே பப்ளிக் செட்டிங்க்ஸில் பதிவு போடுவார்கள். எனவே, எங்களை போன்ற பெண்கள் மிக எளிதில் வெளியே வர முடிந்தது.
இப்படி போய்க்கொண்டிருந்த வாழ்க்கையில் சில பிரச்சனைகள் வராமல் இல்ல. உடைக் கட்டுப்பாடு, பெண்ணியம் என்று பேச ஆரம்பித்தால் பலருக்கு பிடிப்பதில்லை. பெண்கள் என்றால் ஒரு மொக்கை, ஜோக், கவிதை, கட்டுரை என்று போய்கொண்டு இருக்கும் வரை பிரச்சனை இல்லை. இதுவே அரசியல், சாதி, சமூகம், சமூக உதவி என்று இறங்கி விட்டால் மிகப் பெரிய பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஆண்களுக்கும் உண்டு. ஆனால் பெண்களுக்கு வேறு விதம்.

அந்த மோசமான அனுபவமும் திரண்ட தோழிகளும்...
ஒருமுறை என்னுடையே புகைப்படத்தை ஒரு மோசமான பக்கத்தில் கண்டு அதிர்ந்தேன். அதில் மிக மோசமான பின்னூட்டங்கள். அது வரை இந்த உலகின் மறுபக்கத்தை அறியாப் பெண் நான். உள்ளே போய் பார்க்க பார்க்க இணையத்தின் நடமாடும் அத்தனை கொடூரமும் புரிந்தது. தூக்கமே வரவில்லை. என்ன மாதிரியான உலகம் என்று மறுபக்கத்தை முதன் முதலில் பார்த்த அதிர்ச்சி. இப்படி கூட நடக்குமா என்றெல்லாம் யோசனை.
இதற்கு முதல் படியாக அனைவரும் ஒரு கோரமான முகமூடி முகத்தை ஃப்ரோபைலில் வைத்துக்கொண்டோம். அன்று முதன்முதலில் தீ பற்றியது. உடனே அடுத்து ஒரு குழுவை ஆரம்பித்தோம். அனைவரும் ஒன்று சேர்ந்து எங்கள் புகைப்படங்கள் பகிர்ந்து இருந்த பல பக்கங்களை முடக்கினோம். பிடோபில் எனப்படும் குழ்நதைகளை வைத்து செயல்படும் ஐம்பது பக்கங்களை எங்கள் குழு தோழி பானுவின் உதவியுடன் மூடச் செய்தோம். இதுபோன்று அந்தக் குழு பல விஷயங்களை செய்துகொண்டு பல பெண்களுக்கு நம்பிக்கையை அளித்தது.

யார் வந்தாலும் கவலைப்பட வேண்டாம். எல்லாருக்கும் நம்பிக்கை அளித்த நேரம். பலர் புகைப்படங்களை, அதாவது முகத்தை வெளியே காட்ட அந்தக் குழு ஒரு நம்பிக்கையை அளித்தது. இன்றும் பெண்கள் குழுக்கள் மூலமே பல பெண்களுக்கு சமூக வலைதளத்தில் நடமாட நம்மை போன்று இருக்கிறார்கள் என்று பார்த்து துணிச்சல் வருகிறது. அந்த வகையில் பெண்கள் குழுக்கள் வரவேற்கப்படுவது மிக நல்லது.

எங்கு சென்றாலும் நம் புகைப்படம் பகிரும் இடம் உண்டு. அது ஃபேஸ்புக்கின் மூலம் மட்டுமே போக வேண்டும் என்பது இல்லை. கூகுள் போட்டோஸ் சியர்ச் இஞ்சின் சென்று நம் போட்டோ வைத்து எங்கெங்கு பகிரப்பட்டு இருக்கிறது என்று கண்டுபிடித்து விடலாம்.

பத்திரிக்கையில் வருகிறது, பொதுக் கூட்டங்களில், பொது இடங்களில் இருக்கும்பொழுது பல கேமரா கண்கள் கவனிக்கின்றன. எனவே எதைப் பற்றியும் யோசிக்காமல் ஆண்கள் போல பெண்களும் சுதந்திரமாக பப்ளிக் செட்டிங்க்ஸ் வைத்து புகைப்படம் போட வேண்டும் என்பதே விருப்பம். எல்லாரும் செயல்பட்டால் மட்டுமே இதற்கு ஒரு முடிவு வரும். 

பயந்துகொண்டே இருந்தால் கற்காலத்தில் இருக்க வேண்டியதுதான்.
அப்படி போடும்பொழுது பல நல்ல பின்னூட்டங்கள், சில வேறு விதமான பின்னூட்டங்கள் வரும். அதைப் பிடிக்காவிடில் டெலிட் செய்யும் அதிகாரம் நம்மிடம் எப்பவும் உண்டு. நான் அதை பெரிதாக எண்ணி இருக்கவில்லை. யார் பாராட்டியோ, இல்லை நக்கல் செய்தோ பின்னூட்டம் இட்டால் மனதுக்கு ஏற்ப வார்த்தைகள் என்றே கடந்துக்கொண்டு இருந்தேன்.

நடுவில் ஒரு நண்பர் எங்கள் புகைப்படங்களை பகிர்ந்தார். அதனால் அவரை நட்புப் பட்டியலில் இருந்து எடுக்கச் சொல்லி பெண்களுக்கு குழுவில் அழைப்பு விடுத்தோம். ஆனால் அவர் அதை பலரின் வேண்டுகோளுக்கு இணங்க எடுத்துவிட்டதால் பிரச்சனை அதோடு முடிந்துவிட்டது. இந்த முயற்சியில் சில நட்பு இழப்புகள். நாம் துணிவோடு செய்யும் விஷயங்களுக்கு என்றும் உடனே ஆதரவு கிடைத்து விடாது. ஆனால் பலவீனமான பெண்களை பலவீனமகவே வைத்திருக்க விரும்பும் சமூகம் என்று புரிந்துகொண்டேன்.
சில பெண்களும் பின்னால் இருந்து முன்னே வரும்பொழுதுதான் எல்லாவற்றையும் உடைக்க முடியும். கமல்ஹாசன் போன்றோரது படங்கள் போல நாம் காலத்துக்கு முன்னே பயனப்பட்டால் தோல்வியை சந்திக்க வேண்டும். ஆனால் என்றுமே நம் முதல் முயற்சிக்கு மதிப்பு இருக்கும். ஒரு வருடத்தில் எல்லாம் மாறிவிடும். ஒவ்வொருத்தராக தங்கள் எண்ணங்களை மாற்றிக்கொண்டு வருவார்கள்.



என்னை 'கவனித்த' கண்கள்...
ஆனால், இத்தனைக்கு பிறகு என்னை பல கண்கள் கவனிப்பதை கவனிக்கத் தவறிவிட்டேன். சில சமூக பிரச்னைகளை கவனித்து கட்டுரை எழுதியும், அதை முகநூலில் பதிந்ததும் பல எதிர்ப்பாளர்களை எனக்கே தெரியாமல் சேமித்து இருக்கிறேன். அதற்கு நான் மட்டுமே பொறுப்பு என்பதை அறிந்தும் வைத்திருக்கிறேன்.

சிலர் என் படங்களுக்கு போட்ட பின்னூட்டங்களை வைத்து சிலர் கேலியாக விடாமல் பதிவுகள் போட்டு தாக்க ஆரம்பித்தனர். என்னுடைய பதில் வெறும் அமைதி மட்டுமே இருந்தது. மதிப்பு உள்ள சிலவற்றை மட்டுமே எதிர்க்க வேண்டும் என்ற முடிவு செய்தேன். கண்டிப்பாக அதுபோன்ற பதிவுகளில் பலவும் சைபர் சட்டப்படி கிரிமினல் குற்றங்கள்தான். சிலவற்றை இப்படியும் பார்த்து கடக்க, புறக்கணிக்க கற்றுக்கொண்டேன். பெரிய புகழ் பெற்ற ஆட்களைக்கூட ஃபேஸ்புக் விட்டு வைப்பது இல்லை. நம் போன்ற சாதாரண நிலைமையில் இருந்து வந்த ஆட்களை விட்டு வைக்குமா?

மிகக் கடினமான நேரம்தான். நெருங்கிய நண்பர்கள் என்றும் பார்க்காமால் நட்பில் இருந்து விலக வேண்டி இருந்தது. மனதில் பகமையில்லை, நட்பு மட்டுமே. ஆனால் கருத்தில் பகைமை. ஒரு பெண்ணை பலர் முன்னிலையில் அவமானப்படுத்தும் பொழுது பெண்கள் நம்மை ஆதரிக்க வேண்டாம். ஆனால், ஒதுங்கியாவது இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தேன். அது நடக்கவில்லை. என்னைச் சுற்றி நடந்த கதைகள் பல எனக்கே புரியவில்லை. ஏதாவது தப்பு இருந்தால் மன்னிப்பு கேட்டு சரி செய்யலாம். என் சுவற்றில் விவாதிக்கலாம். ஆனால் அதை நேரடியாக சொல்ல யாருக்கும் துணிவு வராமல் பதிவுகளில் புகழுக்கு ஆசைப்படுபவள் என்ற வார்த்தையை மட்டும் எடுத்துக்கொண்டு விளம்பரம் செய்கிறேன் என்று ஏதோ ஏதோ அவர்கள் கற்பனைக்கு எழுதி கொண்டார்கள். நான் யாருக்கும் எந்த பதிலும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஒரு நட்பு போதும் எனக்கு, திரும்ப எல்லாவற்றையும் பெற.
எல்லாவற்றில் இருந்தும் விலகி என்னை தனிமையாக வைத்துக்கொண்டேன். கடின நேரங்களில் தனிமை அவசியம். யாரிடமும் புலம்பி வார்த்தைகளை விட்டு விட்டால் இன்னும் காலம் மோசமாக்கும். நெருங்கிய இரு தோழிகளை தவிர எல்லா தொடர்புகளில் இருந்தும் வெளியே வந்தேன். ஆனால், கொட்டிய வார்த்தைகள் அவர்களுடையது. புத்தர் ஒரு கதையில் சொன்னதுபோல நான் என் மனதில் வாங்கி அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

ஆம், மனிதர்கள் சிலருக்கு பாராட்டு கிடைக்கும் பொழுது சிலரால் அங்கீகரிக்க முடியாது. நான் தகுதி உடைவாளா இல்லையா என்ற கோணத்திற்கு செல்லவில்லை. எந்த அடிப்படை மனமும் யாராவது பாராட்டினால் ஏற்றுக்கொள்ளும். அதை மறுக்காது. அதுபோல எனக்கு வரும் அங்கிகாரங்களை மறுக்கவில்லை. விருதை திருப்பி கொடுக்கும் அரசியல் எல்லாம் பழகவில்லை.

கடினம்தான். அந்த நேரத்தில் ஒரு பெண்ணை அசிங்கமாக எழுதுவதை பார்த்துவிட்டு கடப்பது கொடிய நேரம்தான். அதற்கு பெண்களே பின்னூட்டம் இடுவது இன்னும் கொடுமையாக இருக்கும். இதை எதிர்க்காவிடில் எந்தப் பெண்ணுக்கும் முன்மாதிரியாக ஆகிவிடும். பெண்களை முடக்க எளிதில் எடுக்கும் ஆயுதமாகிடும் என்று யாரும் ஏன் உணரவில்லை என்று புரியாத புதிர்தான். இருப்பினும் ஒரு தோழி எல்லா இடங்களிலும் கடுமையாக எதிர்த்தாள். நிஜமாக அந்த நேரத்தில் தெய்வம் மனித வடிவம்தான் என்ற வார்த்தைக்கு அர்த்தம் கிடைத்தது. என்னிடம் எல்லாவற்றையும் தட்டிகேள் என்று துணிச்சல் ஊட்டினாள். என்னைப் பொறுத்தவரை புறக்கணிப்பே ஒரு தண்டனை. ஒதுங்குதல் இன்னும் நல்லது.

தவறுகள் இருக்கும்பொழுது நேரடியாக சுட்டிக்காட்டவே நண்பர்கள். அப்படி இல்லாமல் போனால் நமக்கு சாபம்தான். இந்த நேரத்தில் ஒரு பத்து அல்லது இருவது பேர் எதிர்த்தால், ஆயிரக்கணக்கில் வரமாக துணைக்கு இருந்தனர். இப்படிதான் கடந்தேன் சமூக வலைதளத்தின் கோரத் தாக்குதலில் இருந்து. யாரும் வேண்டுமென்று செய்யவில்லை. ஏதோ என் ஒரு செயல் அவர்களை தூண்டி இருக்க வேண்டும். நான் பெண் என்று இதற்கு பின் ஒளிந்துக்கொள்ள மாட்டேன். ஆனால் பெண்ணால் இருப்பதால் மட்டுமே ஒழுக்க குறைவான அசிங்கமான விமர்சனங்கள் எழுதப்பட்டது. ஒருவர் உச்சிக்கே சென்று மிக மோசமான ஒரு வார்த்தையை உபயோகித்து இருந்தார். இது காலம் காலமாக பெண்கள் மேல் போடப்படும் விலங்கு. உன்னை எதிர்க்க நான் கையில் எடுத்த ஆயுதம் என்ன தெரியுமா என்று கொக்கரிப்பு. வீட்டிலும் சமூகத்திலும் எல்லா மட்டத்திலும் பெண்கள் சந்திக்கும் பிரச்சனை. இன்னொரு பிரச்னை ஆண் நண்பர்களும் துணைக்கு வர யோசிப்பார்கள். பெண் நண்பர்கள் ஏன் வம்பு என்பார்கள் தனியாக சமாளிக்க வேண்டிய நேரம். இதற்கு இணையதளம் மட்டும் காரணம் என்று சொல்ல மாட்டேன். ஆனால், இணையத்தில் வக்கிரங்களை கொட்டிவிட்டு செல்வது எளிதாக உள்ளது.
நமக்கு இன்னும் தன்னம்பிக்கையை வளர்க்கும் பயிற்சி. என்னை எதிர்த்து எது செய்தாலும், அது எனக்கு மிகுந்த நல்லவற்றை மட்டுமே அளித்து இருக்கிறது. நாம் அந்த நேரத்தில் அமைதியாக வேடிக்கை பார்த்தால் போதும். எல்லாம் கடந்து விடும். என்னுடைய மன உறுதி மேம்பட்ட நேரமாகவே என் கடின நேரங்களை கருதுகிறேன். எதுவும் கெடுதல் இல்லை என்ற மனநிலை இருந்தால் போதும். எல்லாம் கடந்து நல்லதே நடக்கும்.

என் மனதில் பகைமை இல்லாமல் இருப்பது மட்டுமே எனக்கு நல்லது என்பதால் யார் மேலும் எந்த பகைமையும் இல்லாமல் நிம்மதியாக இருக்கிறேன். எனவே எந்தப் பகைமையும் என்னிடம் ஓட்டுவதே இல்லை. கொஞ்ச நாள் இணையத்தில் இருந்து விலகி முழுக்க மீண்டேன். திரும்ப எதிர்க்கொள்ளும் தைரியம் மட்டும் போதும். நாம் எந்த இடத்திலும் நிம்மதியாக இருக்க முடியும்.

இணையதளம் இல்லாவிடில் என் கட்டுரைகள் விகடன், தி இந்து ஆன்லைன், தோழி, அவள் விகடன், தின இதழ் போன்ற பத்திரிகைகள், அதைத் தவிர பல செய்திகள், சமூகம் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரங்கள், பல எழுத்து ஆளுமைகளின் தொடர்புகள், பல்வேறு குழு மூலமாக பல்வேறு சமூக உதவிகள் எதுவும் சாத்தியம் ஆகி இருக்காது.

ஒரு முக்கிய கடைசிக் குறிப்பு...
எனவே, சமூக வலைதளங்களில் இருக்கும் சிறு முட்களை அகற்றிவிட்டு ரோஜாக்களின் வாசனையை முகர்ந்து பெண்கள் அனைவரும் இணையத்தை சுதந்திரமாக பயன்படுத்த வேண்டும் என்பதே என் ஆசை. அதுவும் ஆண்கள் போல அரசியல் பதிவுகள், பப்ளிக் செட்டிங்க்ஸ் பதிவுகள் இடப்பட வேண்டும். தனிப்பட்ட நிகழ்வுகளின் புகைப்படங்கள் என்று துணிச்சலாக பகிர முன்வர வேண்டும். அனைவரும் வரும் வேளையில் எல்லாமே மிக சாத்தியமான விஷயம் ஆகிவிடும். ஆனால் காலப்போக்கில் இணையம் அனைத்தையும் சாத்தியம் ஆக்கிவிடும். அதுவும் எளிதில் வேகமாக. எனவே, நம்பிக்கையுடன் ஒவ்வொருவரும் பயணிக்க வேண்டிய நேரமிது.

ம்... இன்னொரு முக்கியமான விஷயத்தைச் சொல்ல மறந்துவிட்டேன். ஃபேஸ்புக்கில் புதிதாக வருபவர்கள் நிச்சயம் ஒரு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். பலர் பல உறவுகளில் சகஜ தன்மைக்காக கூப்பிடுவது வழக்கம். ஆனால், அப்படிதான் பழகுவார்கள் என்று எதிர்பார்ததால் ஏமாற்றத்திற்கு ஆளாக நேரிடும். இன்பாக்ஸ் திறந்து அனைவருக்கும் பதில் சொல்லத் தேவையில்லை. வெளியில் வரும் நட்பு போதும் என்று இருப்பது பாதுகாப்பு. முக்கியமான தனிப்பட்ட விஷயங்களுக்கு மட்டும் உபயோகித்தால் போதும். ஃபில்டர் மெசேஜ்களை என்றைகாவது பார்த்து சுத்தம் செய்தால்போதும்...
http://tamil.yourstory.com/read/609add5004/-quot-as-men-and-women-on-facebook-with-photo-freely-to-day-tracking-taran-ventum-kirttika நன்றி  

Thursday, March 31, 2016

விகடனில்..

நன்றி  ஆனந்த  விகடன்.




உன்னை ஓர் அறையில் எட்டு மணி நேரம் அடைச்சுவெச்சு, உனக்குப் பிடிச்சிருக்கோ இல்லையோ, நான் ஏதாவது சொல்லித்தருவேன். அதை நீ படிக்கணும். சில சமயம் 
A, B, C, D-கூட எட்டு மணி நேரம் சொல்லிக்கொடுப்பேன். 

நீ அமைதியா உட்கார்ந்து படிக்கணும். முடியுமா?’ - ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த மகன், தன்னிடம் இப்படிக் கேட்டதாகச் சொல்கிறார் கிர்த்திகா தரன். பெங்களூரில் வசித்துவரும் இவர், தன் மகனை ஹோம் ஸ்கூலிங் முறையில் படிக்க வைத்து இன்று வெற்றிகரமாக கல்லூரிக்கு அனுப்பியிருக்கும் தாய்.

``ஆறாம் வகுப்பில் `ஸ்கூலுக்குப் போக மாட்டேன்' என்று அவன் சொன்னவுடன் வேறு என்ன வழிகள் இருக்கின்றன எனத் தேடி அலைந்தோம். மாற்றுப்பள்ளிகளில் சேர்த்துப் பார்த்தோம். அங்கேயும் சரிவரவில்லை. சலித்துப்போய் கடைசியாக நின்ற இடம்தான் ஹோம் ஸ்கூலிங். அப்போது முதல் என் மகனுக்கு வீடுதான் பள்ளி. 14 வயது ஆனவுடன் IGCSE முறையில் பத்தாம் வகுப்புக்குத் தேர்வு எழுத அவனைத் தயார்ப்படுத்தினேன்.

`யாராவது பத்தாம் வகுப்பில் ஹோம் ஸ்கூலிங் செய்வார்களா? பணம் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. ஒரு நல்ல பள்ளியில் அட்மிஷன் வாங்கிடுங்க' என்று அறிவுரை சொன்னவர்கள் பலர். ஆனால், மகன் `எக்காரணம் கொண்டும் ஸ்கூலுக்குப் போக மாட்டேன்' என்பதில் உறுதியாக இருந்தான். 14 வயதில் அசாத்திய உறுதி அது. ஓர் அம்மாவாக அவனின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அவன் விருப்பம் என்னவோ அதன்படியே படிக்கவைத்தேன்.

3 லட்சம் முதல் 10 லட்சம் வரை வாங்கும் இன்டர்நேஷனல் பள்ளிகள், IGCSE சிலபஸில்தான் பாடம் நடத்துகின்றன. எங்களுக்குத் தேர்வு செலவு 30 ஆயிரம் மட்டுமே. லண்டனில் இருந்து சான்றிதழ் வந்துவிடும். சாதாரண தேர்வு எழுதும் மாணவர்களுக்கும் இந்த மாணவர்களுக்கும் சான்றிதழில் பெரிய வித்தியாசம் கிடையாது. சரியாக 16 வயதில் 12-ம் வகுப்பு முடித்துவிட்டு தற்போது முழு ஸ்காலர்ஷிப்பில் அமெரிக்காவில் உள்ள பாஸ்டனில் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்ப்யூட்டர் (இரட்டை டிகிரி) இன்ஜினீயரிங் படிக்கிறான்.

இந்தியாவில் ஹோம் ஸ்கூலிங் என்றால், பலரும் பயமுறுத்துவார்கள். `எதிர்காலம் கேள்விக்குறி’ என்பார்கள். அப்படி எதுவுமே இல்லை. மிகச் சரியாகத் திட்டமிட்டால் பள்ளியில் ஒரு வருடம் சொல்லிக்கொடுப்பதை, நான்கு மாதங்களில் முடித்துவிட முடியும். அவ்வளவுதான் இருக்கிறது நம் பாடத் திட்டத்தில்’’ 

Sunday, March 27, 2016

கொண்டாட்டாட்ட்ட்டடட்ட வாழ்வு.

  கொண்டாட எத்தனையோ விஷயங்களை வாழ்வு வாரி இறைத்துக்கொண்டே செல்கிறது. கோவிலுக்கு சென்றால் ஒரு வகை கொண்டாட்டம், பயணம், இசை நிகழ்ச்சி, தனிமை, மலை, இயற்கை, மழை, புது உடை, ஷாப்பிங், நட்பூக்கள்,விளையாட்டு, புத்தகம், இணையம்  சினிமா, உணவு, ஏன் பானி பூரியில் கூட சிறு கொண்டாடத்தை மறைத்தே வைத்து இருக்கிறது.

ஆனால் கொண்டாடத்தை தேடுவதை விட மனம் ஏதோ ஒரு சஞ்சலத்தை பிடித்து தொங்கிக் கொண்டு இருக்கிறது. ஒரு குடும்பம் வீட்டுக்கு வந்தார்கள். ஓரளவு வீடு, வசதி உள்ள லோயர் மிடில் கிளாஸ் குடும்பம். வேலை இல்லை..சிக்கனமாக குடும்பம் நடத்த வேண்டிய நேரம். வந்ததில் இருந்து அவர்களுக்கு வேலை கொடுத்தவர்கள் பற்றியும், கொடுக்காதவர்கள் பற்றியும் புகார் வாசித்துக் கொண்டே இருந்தனர்.. சென்ற முறை வந்தப் பொழுதே ஓரளவுக்கு நம்பிக்கை அளித்தேன். அப்பொழுது மிக நொந்து இருந்தார்கள். இந்த முறை தெம்பாக எல்லாரையும் திட்ட ஆரம்பித்து இருந்தனர்.

மனைவி உள்ளே வந்து என்னிடம் தனியாக எல்லாம் புலம்பியபோழுது அமைதியாக கேட்டுக் கொண்டேன். எதிலும் குறையே பார்க்காதீர்கள். ஏதோ நன்மைக்கே எல்லாம் நடக்கிறது என்று நினைத்துக் கொள்ளுங்கள். அரிசி இல்லை என்று புலம்புவதை விட, அரிசி வேண்டும் அதற்கு என்ன வழி என்று யோசிப்பதே இந்த நேரத்தின் தேவை.

ஆன்மிகத்தில் ஈடுபாடு உள்ளதால் அவர்கள் வழியில் சொன்னேன்..நம்மை சுற்றி ஆசிர்வதிக்க தேவதைகள் சுத்திக் கொண்டே இருக்கும். அவை நாம் என்ன நினைக்கிறோம், சொல்கிறோமோ அதற்கு ஏற்ப ததாஸ்து என்று சொல்லும். அதாவது அப்படியே ஆகட்டும் என்று அர்த்தம். நீங்கள் நல்லது நினைத்தாலும் சரி , எதிர்மறையாக நினைத்தாலும் சரி அப்படியே ஆகும்.
நல்லது நினைக்க நினைக்க நம்மை சுற்றி நல்ல விஷயங்கள் அழகாக அமையும். ஒரு உறவு சரியாக இல்லை என்று சந்தேகம் வந்தால் முறிவதும், நன்றாக இருக்கிறோம் என்று நினைக்கும் பொழுது சேர்வதும் இதனால்தான் என்று பேசிக்கொண்டே சென்றேன்.

அவரும் மனம் கொஞ்சம் இளகி ஆர்வமாக இன்னும் சொல்ல சொன்னதால், குறை மட்டும் பேசவே பேசாதீர்கள்...முதலில் குறை சொல்லுவது உங்களுக்கு வேண்டாதவர்களுக்கு கேட்க போவதில்லை, அதனால் நன்மை இல்லை அப்படி கேட்டாலும் இன்னும் பகைமை வளரும் அதுவும் நல்லதில்லை. எனவே குறை சொல்லுவது எப்பவும் நல்லதில்லை. ரொம்ப புலம்ப வேண்டுமென்றால் மிக மிக நெருக்கமாக இருப்பவர்களிடம் சொல்லிவிட்டு மனதை அத்துடன் கழுவிவிட்டு வெளியே வர வேண்டும். கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். கொஞ்சம் கொஞ்சமாக பயிற்சி செய்தால் சரியாகிவிடும் என்றேன்.

நமக்கு வேண்டியவர்களை குறை சொல்லுவது மிக தவறுதானே என்றார்.. ஆமாம் ..அது உறவை குலைக்கும் செயல், ஒவ்வொருவருக்கும் ஒரு இயல்பு இருக்கும் அதை முடிந்தவரை அப்படியே ஏற்றுக்கொள்வது, அல்லது எனக்கு பிடிக்கவில்லை என்பதை அழகாக எடுத்து சொல்வது தீர்வாக அமையுமே தவிர குறை பேசிக்கொண்டே இருந்தால் மன அமைதி போய் சிக்கலாகத்தான் முடியும் என்றேன். உடனே சத்தமாக இங்கே சீக்கிரம் உள்ளே வாங்க என்றார்..இங்க பாருங்க கீர்த்தி எவ்ளோ அழகா ஒரு விஷயம் சொல்லிருக்கா...யாரையும் குறை பேசவே கூடாதும், பேசினால் ததாஸ்து தேவதைகள் அப்படியே ஆகட்டும் என்று சொல்லுமாம், காலையில் இருந்து என்னை திட்டிக்கொண்டே இருக்கறீங்க, என்னை பற்றி ஏதாவது புகார், அது வரல இது வரல என்று மட்டம் வேறு தட்டறீங்க, அதாவது பராவாயில்லை நான்  என்ன செய்தாலும் உங்களுக்கு ஒரே குறை என்று அடுக்கிக்கொண்டே சென்றார்.
எனக்கு பயங்கரமாக தலை சுத்தத் தொடங்கியது. 

சிறு மகாபாரத தொனி இருவரிடமும் எழ ஆரம்பித்து இருந்தது. என்றைக்காவது குரு  ஷேத்திரம் நம்ம வீட்டிலும் உண்டு. ஒவ்வொரு விஷயத்தையும் குருஷேத்திரம் ஆக்கும் கலையில் இருவரும் வித்தகராக இருந்தனர். உங்களிடம் பேசினால் நன்றாக இருக்கு என்று அவர்கள் சொல்லுவதை நம்பி நாம் பேசி விடக் கூடாது. அவர்களிடம் பேசினால் நாம் அடுத்து நன்றாக இருப்போமா என்று யோசிக்க வேண்டும் என்று புரிந்ததது.  என்ன செய்வது..முடிந்தவரை  இயல்பை மாற்றிக் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்று இன்னொரு மனமும் எனக்குள் சண்டையிட தொடங்கின.

இப்படி கொண்டாடங்களை விட்டுவிட்டு நல்ல விஷயங்களை கூட  பிரச்னையாக எடுத்துக் கொள்வது பலருக்கு கை வந்தக் கலையாக இருக்கின்றன.

யாருக்குதான் பிரச்னை இல்லை. எங்குதான் வருத்தம் இல்லை,  சோகம் இல்லை. எங்கோ இருப்பதை தோண்டிக் எடுத்துக்கொண்டு மனதில் சுமக்கும் பொழுது கண்ணுக்கு எதிரில் வாழ்வு தட்டில் ஏந்திக் கொண்டு இருக்கும் கொண்டாட்டங்கள் மறந்துப் போகிறது.

சமீபத்தில் வாசித்ததில்  மனதில் பதிந்த பகுதி  மனம் விட்டு, சுற்றம் மறந்து நடனம் ஆடுவதைப் பற்றியது. இங்கு எங்கள் பகுதியில் உள்ள வட இந்தியர்களுக்கு எல்லாவற்றிலும் நடனம் இருக்க வேண்டும். ஆண்களோ, பெண்களோ தன்னை மறந்து ஆடுவார்கள். தனக்கு என்ன தெரியும் என்பதுப் பற்றி பிரச்னையில்லை. நம்மை கவனிப்பவர்கள், கேலி செய்பவர்கள் பற்றி கவலைப்படாமல் ஆடுவதும், நடனம் என்று ஆடாமல் கை காலை நடனம் என்று நினைத்து அசைத்து சுற்றம் மறந்து ஆடுவதும் நடக்கும்.

இதில் குழந்தைகள் முதல் எழுவது வயது வரை விதி விலக்கிலை. எப்படி கெட்ட விஷயங்கள் தொற்று நோயாக இருக்கிறதோ அதுப் போல நல்ல விஷயங்களுக்கும் உண்டு. இவர்களைப் பார்த்து பார்த்து நாமும் வாழ்வை அவ்வபொழுது கொண்டாட கற்றுக் கொள்ளலாம். எங்குமே ஆடி பழகி இல்லாதவர்கள் கூட எங்கள் பகுதியில் நடக்கும் ஏதாவது ஒரு கொண்டாடத்திற்கு வந்தால் மனமகிழ ஆடிவிட்டுப் போவார்கள்
இதற்காகவே நான் நண்பர்களுக்கு அழைப்பு விடுவது உண்டு. ஆனால் என் பார்வையில் தென்ன்னிந்தியாவை பொறுத்தவரை எந்த விழா நடத்தினாலும் நேர்த்தி. திட்டமிடல் என்பதில் கவனம் செலுத்துவோம். அதில் கொண்டாட்டம பின் தள்ளபட்டு எதற்காக செய்கிறோம் என்று மறந்து மிக சின்சியராக விழா செய்வோம்.

ஒவ்வொரு விழாவும் கொண்டாடவே என்ன்னும் அடி நாதத்தை புரிந்துக் கொள்ளும் பொழுது மகிழ்ச்சி பீரிட்டு வரும். விழா  என்பது மனமகிழ்வுக்கே என்ற அடி நாதத்தை அங்கே அங்கே தொலைத்துக் கொண்டு இது எங்கள் வீட்டு பழக்கம், இது இந்த ஊர் வழக்கம் இதெல்லாம் மிக சரியா நடக்கணும் என்பதில் மிகக் கவனமாக இருக்கிறோம். அதில் ஒரு இறுக்கம் வந்துவிடுகிறது.

சக மனிதர்களிடம் தளர்வாக இல்லாமல் இறுகும் எந்த இருப்புமே சரியாக வராது. அப்படி இருக்கும் பொழுது கொண்டாட்டத்தில் வரும் இறுக்கங்கள் அதன் தன்மையே மாற்றி விடும் இங்கு நடக்கும் புத்தாண்டு, ஹோலி, கணேசா, நவராத்திரி போன்ற நடன கொண்டாட்டங்கள் தவிர்த்து புதிது புதிதாக செய்வார்கள்.

ஒரு மணி நேரம் விளக்குகளை அணைத்து விட்டு பூமி நேரம் கொண்டாடியப்பொழுது மெல்லிய வெளிச்சத்தில் பாட்டும், அந்தாக்ஷரியும் குதூகலப்படுத்தின.

வேலேண்டைன்ஸ் டேயின் பொழுது எல்லாரும் சிவப்பு சட்டை போட்டுகொண்டு மிக சின்சியராக மாரத்தான் நடத்தினோம். ஹோலிகா தகனம் அன்று நெருப்பை வைத்து நடன காட்சி. குழந்தைகளை மகிழ்ச்சிப்படுத்தும் கோடை கொண்டாட்டம் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.



நம் வாழ்வை நம் விளையாட்டுகளை குழந்தைகளுக்கு நாம் கொடுக்க முடியா நகர சூழல். ஆனால் இந்த சூழலில் அவர்கள் கொண்டாட எத்தனையோ இருக்கு. அதற்கான வாய்ப்புகளை உருவாக்கியும், அனுமதிக்கவும் செய்யம் பொழுது நம்மைப் போல ஒரூ அழகிய இளம்பிராயம் அவர்களுக்கும் கிடைக்கும். நாமும் நம்மை மீட்டு எடுக்கலாம்.


ஒரு ஹோலி போட்டோ போட இத்தனைப் பெரிய பதிவா என்று கேட்பவர்களுக்கு என்னிடம் லைக்ஸ், கமெண்ட்ஸ் பற்றிய கொண்ட்டாட்ட  புன்னகை மட்டுமே மிச்சம் இருக்கிறது. 

Monday, March 21, 2016

ஒரே ஒரு நிறைய ஊரிலே..

உலக கதை சொல்லல் தினம்.

தாய், தந்தை பிறக்கும் பொழுதே கதை சொல்லிகள் பிறந்து விடுகிறார்கள். டி.வி பிறக்கும் முன்பு பிறந்து விட்டதால் கதைகளுக்கு நடுவே வாழ்ந்தவள். ஒரு கொள்ளு பாட்டி விளையாட்டுகளில் எக்ஸ்பர்ட்..சொன்ன இடத்தில சோழி விழும், உருட்டிய இடத்தில தாயம் நிற்கும். இன்னொரு பெரிய பாட்டியோ கதைகள். அவர் சொன்ன கதைகள் கற்பனையை மிக அதிகம் தூண்டுபவை.

ஒவ்வொரு மனிதனும் சக மனிதர்களால் வார்த்து,வளர்த்து எடுக்கப்படுகிறார்கள். கதை சொல்லல் மேல் இன்னும் ஆர்வம் வந்ததிற்கு காரணம் விழியன் என்றால் கதை சொல்லும் நிகழ்வு என்று பெங்களூரில் முதல் அடி எடுத்து வைத்திருக்கும் பிரபு பாராட்டுக்குரியவர்.

மிக முக்கிய வேலை கொடுத்த தரன், மறுநாள் தேர்வு, வாசலில் ஒஜுவை விளையாட கூப்பிட வந்தசிறுவர் குழாம், 25 கி.மி தூரம் எல்லாவற்றையும் சமாளிக்க முடிந்த என்னால் மனமுருகி கேட்டுக்கொண்டிருந்த SBB யின் இளைய நிலாதாவைத்தான் சமாளிக்க முடியவில்லை. நட்புகள் வேறு ஸ்டேடஸ்களாக போட்டு இந்த மாலையை மிஸ் பண்ணிட கூடாது என்கிற அளவுக்கு மனதை இலகுவாக்கி வைத்தார்கள்.

எப்படியோ திடப்படுத்தி ஒஜுவை அவன் குழாமில் இருந்து பிரித்து அந்த ஏரியா பெயர் புதிதாக இருந்ததால் கூகிள் மேப் ல் தடவி தடவி எனக்கு மிக பரிச்சியமான சாலையில் சென்றுக் கொண்டிருந்தேன்.

முதலில் ராஜேஷ் அருமையாக ஆரம்பித்தார். மரமே இல்லாத ஊரில் விறகு வெட்டிக் கதை. நூறு வருடங்கள் பின் மரமில்லா வாழ்வை கற்பனை செய்ய தூண்டியது. அடுத்து பிரபுவின் வண்ணத்துப்பூச்சியும், எறும்பும் என்ற கி.ரா கதை மனதில் நின்றது. வரும் வழியில் ஹோர்டிங்கில் ஒரு வண்ணத்து பூச்சி பார்த்துவிட்டு ஒஜு அம்மா இதானே போய் அழுதுச்சு என்றான். நிகழ்வில் நிறைய தமிழ் வார்த்தைகள் அறிமுகம் ஆகின. முக்கியமா மொச்சைக்கொட்டை என்றால் என்ன என்று மொபைல் இமேஜ் ல பார்த்து தெரிந்துக் கொண்டனர்.







அடுத்து அ, ஆ வைத்து ஒரு விளையாட்டு. பெங்களூரை பொறுத்தவரை தமிழ் சொல்லிக்கொடுக்காமல் ஒரு தலைமுறை வளர்ந்துக் கொண்டு இருக்கிறது. இப்படி நிகழ்வுகள் அடிக்கடி நிகழும் பொழுது தமிழ் மேல் குழந்தைகளுக்கும் அதிக ஆர்வம் வரும். அங்கும் ஃபேஸ் புக் மூலம் ஒருவருக்கு அறிமுகம ஆகிருந்தேன். இணையத்தின் இணைப்புகள் மனதில் இனிமையாக.



அடுத்து நான் எங்கள் பாட்டி சொன்ன கதை சொல்லவா என்றேன். நிஜமாக எந்த தயாரிப்பும் இல்லை. சொல்லவும் யோசனை இல்லை. ஏன் என்றால் நிகழ்வு பார்த்துவிட்டு எப்படி அதுப் போல நாமும் செய்யலாம், குழந்தைகள் தமிழ் கதைகள் மேல் எந்தளவுக்கு ஆர்வமாக இருக்கிறார்கள் என்பதே நோக்கம்.

பிரபு சொல்லுங்க என்றதும் மிக பரிச்சியமான கொழுக்கட்டை கதை சொன்னேன். அதில் எண்கள், உடல் உறுப்புகள் பெயர் எல்லாம் இருக்கும். 

"அம்மா அம்மா கொழுக்கட்டைக்கு காது உண்டோடி,
அம்மா அம்மா கொழுக்கட்டைக்கு மூக்கு உண்டோடி
அம்மா அம்மா கொழுக்கட்டைக்கு வாயும் உண்டோடி"

என்று வரிசையாக போகும். நாயகர்களுக்கு குழந்தைகளுடன் கலந்து பெயர் வைக்கப்பட்டது. பெரிய கதை. முடிந்தளவு சுருக்கியே சொன்னேன். ஆனால் அந்த நிமிடங்கள் உலகமே மறந்து விட்டது. குழந்தைகளும் நானும் ஒரு உலகத்தில் கொழுக்கட்டைகள், ரோஜா, பிள்ளையார் என்று பயணித்தோம். திட்டமிடாமல் கூட அழகாக அமைந்தது. நான் நயன்தாரா போல ஆக்ஷன் செய்வதாக நினைத்துக் கொண்டு கலாபவன் போல செய்ததை குழந்தைகள் ரசித்து சிரித்தார்கள். இருப்பினும் கொண்டாட்டம் குறைவில்லாமல்.




அடுத்த முறை இன்னும் இதை எடுத்து செல்ல ஆர்வ விதை மனதினுள். ஒஜு வரும் பொழுது கதைகளை பற்றி பேசிக்கொண்டே வந்தான். இதே கதையை எத்தனையோ முறை தனியாக சொல்லி இருக்கேன். ஆனால் இந்த முறை இன்னும் ஆர்வமாக கேட்டு இருக்கிறான். எல்லாருடனும் சேர்ந்து சந்தோஷமாக இருக்கும் பொழுது குழந்தைகளின் ஆர்வம் இன்னும் கூடியே இருக்கிறது.

அடுத்து கதை கேட்க நேரமில்லாமல் ஓடி வர வேண்டியதாகி விட்டது. இருப்பினும் மனது நிகழ்வை சும்ந்தப்படியே. வீட்டுக்கு வந்தவுடன் ராஜேஷ் அவர்களின் பையன் கதைக்கு feedback கொடுத்து மனதை நெகிழ செய்து இருந்தான். அதே கதையை தெலுங்கில் சொல்லி அசத்தி இருந்தான். அந்த விடியோ பதிவில் இருக்கும் குரலின் கற்பனையும், கதையும் மிக அதிக நாள் ஒலிக்கும்.

கதை சொல்லல் வீடை தாண்டி பொதுவெளியில் வர வேண்டிய அவசியம் உணர்கிறேன். இதை இன்னும் முன்னெடுத்து செல்லல நண்பர்களோடு கை கோர்க்கும் ஆர்வம் மேலெழும்புகிறது. ஒவ்வொருவருக்கும் தனி தனியே நன்றி சொல்ல மனம் விரும்புகிறது. மிக அழகிய மாலைக்கு நன்றி.

ஒரு இளைய நிலாதான் மிஸ் செய்தேன். அங்கு இருபதுக்கும் மேல் குழந்தை நிலாக்கள் மனதில் பொழிந்துக் கொண்டே இருந்தனர். இப்பவும் அவை தளும்பிக்கொண்டே இருக்கிறது. கொழுக்கட்டை கதையை விரைவில் பகிர்கிறேன். அதும் ஒரு குட்டி நிலாவின் ஒளியில் மனம் தடுமாறித்தான் போனது. வேறென்ன வேண்டும்.

Thursday, February 25, 2016

ஏன் பயம்?

இரண்டு நாட்கள் சென்னை பயணம். ஒரு நிகழ்வு..நிகழ்வில் மணிமாறன் அவர்களின்  புத்தர் கலைக்குழு பறையில் அறுநூறு மாணவர்கள் மெய் மறந்து இருந்தனர். முக்கால்வாசி மாணவர்கள் பறை நிகழ்ச்சி பற்றி அதிகம் கேள்விப்பட்டு இல்லாதவர்கள். அவர்களுக்கு அந்த இசையில் இயைந்து மெய் சிலிர்த்து போனது நிஜம்.

இப்படி நம் இசை நம்மை இரத்தத்திற்குள் புகுந்து வேர் வரை ஆட்டும் சக்தி படைத்தது. உணர்வுக்குள் ஊடுருவும் தன்மை உடையது. கண்டிப்பாக இதை ஒரு புரியாத மொழி சங்கீதம் செய்வது கடினம்.

மண் பற்றி இத்தனை பேசும் நிகழ்வுகள் மலர்ந்துகொண்டு வருவது நல்ல விஷயம். ஆனால் இப்போ சொல்லப் போவது எனக்கு நடந்த இரு தனிப்பட்ட நிகழ்வுகள்.

எப்பவும் ஆட்டோவில் அல்லது டாக்சியில் பயணிக்கும் பொழுது லோக்கல் அரசியலை பற்றி கேள்விக்கேட்டு பொறுமையாக கேட்டுக்கொண்டு வருவது உண்டு. இம்முறை ஆட்டோ முத்து நண்பரே ஆகிவிட்டார்.

அவர் சொன்னது..அம்மாவிடம் பணமும், பவரும் இருக்கு..நானே ஒட்டு போட மாட்டேன்..வெள்ள நேரத்தில் மிக பாதிக்கப்பட்டேன்..ஆனால் இன்றும் அம்மா வராங்க என்றால் ஒரு தெருக்கு ஐம்பது லட்சம் வரை செலவில் பேனர் வைக்கிறாங்க.. அந்த பணத்துக்கு நல்லது செய்தாலே போதும்..நிறைய பேர் அம்மாக்குதான் ஒட்டுப்போடுவாங்க..இப்போ நாங்க ஆதரிக்காவிட்டாலும் அம்மாதான் வருவாங்க ஏன்னா பவர் அப்படி என்று அவர் அறிந்த நிலவரத்தை பிட்டு, பிட்டு வைத்தார்.

ஆட்டோ பிரி பெயிட் என்பதால் நூற்று ஐம்பது ஆகும் இடத்தில வெறும் நூறு ரூபாய் ஆயிற்று.

அடுத்த பயணங்கள் எல்லாமே OLA தான். அது வசதியாகவும் இருந்தது. இரவு முடிச்சூர் தாண்டி உறவினர் வீட்டுக்கு செல்ல வேண்டும். காலையில் ஒரு விஷயமாக ரயில் பிடிக்க வேண்டும். உறவினர் வீடு தாம்பரம் தாண்டி வெளியே இருந்தது. அங்கும் மக்கள் நெருக்கமாகத்தான் வசிக்கிறார்கள். போகும்பொழுது ஒரு மணி நேரத்துக்கு அதிகமாக பயணம் செய்தது இடுப்பை நோக செய்து இருந்தது.

இரவு ஒரு வெட்டி ஓட்டும் பணி..முடித்து விட்டு நிமிரும் பொழுது பன்னிரண்டு தாண்டியாச்சு. உறவினர் பல விஷயங்கள், தத்துவங்கள் பற்றி பேசினார். அதில் அந்த இரவு முழுவதும் அசைபோட வைத்தது இந்த வரி..
"என் உயிர் என்று சொல்கிறோமே...நான்தான் உயிர் என்று சொல்கிறோமா?" என்று..மனதிற்குள் பல கேள்விகளை எழுப்பியது அவரின் தத்துவ விசாரங்கள்..அப்படியே தூங்கியும் ஆயிற்று..

காலை நான்கு மணி..சென்ட்ரல் செல்ல வேண்டும். இரவே OLA வில் Ride Later புக் செய்தாகி விட்டது. எதற்கும் போன் செய்வோம் என்று செய்தால் எட்டு நிமிடத்தில் வரும் என்றார்கள். பிறகு .இங்கு ஒரு வண்டியைக் கூட GPS காட்டவில்லையே என்று கேட்டேன். ஆமாம் மன்னிக்கவும் வண்டி இல்லை என்றார்.

திரும்ப திரும்ப வாதங்கள் விவாதங்கள்..OLA என்று இல்லை பொதுவாக எல்லா சிறு தொழில்களையும் அழிக்கும் கார்பரேட் கோவங்கள் அன்று அவர் மேல் திரும்பியது. நமக்கு தெரிந்த டாக்சி டிரைவர், நம் வீட்டு ஆட்டோக்காரர் எல்லாவற்றையும் மறந்துகொண்டு இருப்பதால் வரும் வினை. முன்பெல்லாம் சென்னை சென்றால் எங்களிடம் பரிச்சியமான மூன்று டாக்சி நம்பர்கள் கைவசம் இருக்கும். அண்ணே போட்டு அழைக்கும் உறவாக வைத்து இருப்போம். உடம்பு சரியில்லை வீட்டில் என்றால் தரனுக்கு போன் செய்வார்கள். நான் இரவு எத்தனை மணியானாலும் அவர்களுடன் தனியே செல்லுவேன். ஏன் என்றால் சென்னை நட்பு, உறவுகளின் எண்ணிக்கை மிக அதிகம். Fast track ஐ விட OLA போன்றவை வந்து அத்தனை டாக்சி, ஆட்டோ உறவுகளை அழித்து விட்டு அவர்கள் வைத்ததே சட்டமாகி விட்டது. அந்த ஏரியாவுக்கு வண்டி இல்லை மன்னிக்கவும் என்ற பதில், மாற்று ஏற்பாடு செய்யாவிடில் ரயிலை தவற விடும் அபாயம். அவர்கள் எதற்கும் தயாராக இல்லை. ரெடிமேட் புன்னகை, ரெடிமேட் சாரி..ச்சே என்று ஆகி போனது.

உடனே நிறைய இடங்களுக்கு போன் செய்து FAST TRACK புக் செய்து ஒரு மணி நேரம் மன உளைச்சல். எப்படியோ கிளம்பி விட்டோம்..

இதன் நடுவே காலை எழுந்துகொள்கிறேன் கால் அசைக்க முடியவில்லை. முதல்நாள் காலை நான்கு மணிக்கு பெங்களூரில் ஆரம்பித்து இரவு பன்னிரண்டு வரை அலைச்சலில்..முதுகு போய்விட்டது..உடனே அங்கு ஏதோ ஏதோ ஸ்ப்ரே தடவி அசைக்க முடிந்தது. கடும் வலியோடு OLA பிரச்னை. அவசரமாக குளித்து விட்டு வந்தால் குனிந்து உடை அணிய முடியவில்லை. முதுகை வெட்டி எடுப்பதுப்போல வலி. இன்னொருவர் உதவியுடன் உடை அணிந்தேன்.

காலையில் ரயில்வே ஸ்டேஷன் சென்று வழி அனுப்பிவிட்டு நிமிர்ந்தப்பொழுது காலை ஆறேகால். அந்த நேரத்துக்கு டாக்டர் கிடைக்கவில்லை. சரி என்று அப்போல்லோ போய்விடலாம்.யாரவாது இருப்பார்கள்..ஒரு நாள் சரி செய்துகொண்டால் நிகழ்ச்சி முழுக்க நடமாட முடியும் என்று உள்ளே சென்றேன்.
சென்றவுடன் படுக்க வைத்து காலை அசைக்க சொன்னார்கள். அப்சர்வ் செய்ய வேண்டும்..ஒரு நாள் இருக்கலாம் என்றார்கள். இல்லை மிக அதிக வேலை இருக்கு. ஒரு ஊசி மட்டும் போடுங்கள்..நான் மருத்துவ துறையில் வேலை செய்கிறேன். கணவர், தம்பி அனைவரும் மருத்துவர்கள். பிரச்னை இல்லை. IM கொடுங்கள்( சதையில் செலுத்தும் ஊசி) என்று கேட்டேன்.

இல்லை. அட்மிட் ஆக வேண்டும். IV (நரம்பில்) மாத்திரமே இங்கு கொடுப்போம் என்றார்கள். இல்லையன்றால் வலியுடன் OPD திறக்கும் வரை காத்திருங்க என்றார்கள். எந்த வாக்குவாதங்களும் எடுபடவில்லை. இது எங்கள் protocol என்று உறுதியாக இருந்தார்கள். கடைசியில் வீட்டுக்கு போன் செய்துவிட்டு வேறு வழியில்லாமல் மாத்திரை வாங்கிக்கொண்டேன். இந்த கூத்துக்கு டிஸ்சார்ஜ் சம்மரி வேற.

எப்படியோ அந்த நாளை வலியுடன், அதை மறந்து ஒரு உற்சாகத்தை வரவழைத்துக்கொண்டு ஒட்டிவிட்டேன். திரும்ப ரயிலில் படுக்கும் பொழுது சுரீர் சுரீர் என்று அடிக்க ஆரம்பித்தது. வீட்டை அடைந்தவுடன் நிம்மதி பிறந்தது.

OLA, APOLLO என்று தேடி தேடி சென்று கடைசியில் அவர்களின் protocol என்று ஒன்று ஒன்றாக சத்தமே இல்லாமல் திணிப்பார்கள். ஒன்றரை பங்கு பணம். ஒரு அறைக்கு பத்தாயிரம் வாடகை, அவசரத்துக்கு சென்றால் அப்சர்வேஷன் என்று. காசு கரையும். நேரடியாக பேச, கேள்வி கேக்க யாரும் இருக்க மாட்டார்கள். கேட்டால் காவலாளி தூக்கி வெளியே போடுவார். எந்த நகரத்துக்கு சென்றாலும் எனக்கு தெரிந்த மருத்துவர்கள் உள்ளனர். சரி செய்துகொள்வேன். இருந்தாலும் என்னால் கேள்வி கேக்காமல் அந்த இடத்தை விட்டு நகர முடியவில்லை.

இரு நாட்கள் ரெஸ்ட்..படுத்துக்கொண்டே ஸ்டேடஸ்கள் போட்டுத் தள்ள முடிவு. சரியாகிடும்.

சாமியாரில் ஆரம்பித்து காய்கறி வரை கார்பரேட் மயம்.
அவர்களின் கரங்கள் நகரங்களை சுற்றி விழுங்க ஆரம்பித்து இருக்கின்றன. நாம் மவுனமாக வேடிக்கை பார்ப்பதை தவிர வேறு வழி இருப்பதாக தெரியவில்லை.

Sunday, February 7, 2016

ஒரு நினைவு.

பெங்களூர் செய்தி ஒரு பழைய நினைவை கிளறியது. ஒரு முறை கோவையில் இருந்து பெங்களூரு ரயிலில் திரும்பிக்கொண்டு இருந்தேன். திருப்பூர் ஸ்டேஷனில் ஒரு ஆப்ரிக்கப் பெண். குட்டி, குட்டியா பின்னியிருந்த முடிகளை விட்டுக்கொண்டு, கைக்குழந்தையை கட்டிக்கொண்டு ஏறினாள். எக்கச்சக்க லக்கேஜ் வேறு. யாரும் பெரிதாக உதவிவில்லை. அவள் சத்தம் போட்டு பேசினாள். கடின உழைப்புகாரி என்று தெரிந்தது.

ரயில் கிளம்பியதும் படு பயங்கரமா கூச்சலிட்டாள். அவள் சின்ன கைப்பை ஐ  லக்கேஜ் ஏற்றும் பொழுது யாரோ திருடிவிட்டார்கள். அவளின் பணம், பாஸ்போர்ட் எல்லாம்  இருந்தது என்று கூறினாள். அவளுக்கு என்ன செய்வதன்று தெரியாமல் கம்பார்ட்மென்ட் கம்பார்ட்மென்ட் ஆக பைத்தியகாரி போல அலைந்தாள். பின்னாடி குழந்தை. வேறு. மனசு கேக்காமல் விசாரித்ததில் சொன்னாள். ஆனால் மிகுந்த பதட்டம் அடைந்து மிக அதிகமாக சத்தம் போட்டு பேசினாள். அவளை யாருக்கும் புரிந்துகொள்ள முடியவில்லை. யாரும் தேடவோ, உதவவோ முன் வரவில்லை.

மனசு கேக்காமல் பேசி, உக்கார வைத்து. TTR கூப்பிட்டு, கடைசியில் ஈரோட்டில் இறக்கி போலீசிடம் ஒப்படைத்தோம். சிலர் சேர்ந்து சிறிது பணமும் கொடுத்தோம்.

இதே ஒரு சாதாரண பெண் என்றால் கண்டிப்பாக உடனே உதவிக்கு யாராவது வந்து இருப்பார்கள். ஒரு ஆப்பிரிக்கபெண் , சத்தம் போட்டு பேசுகிறாள் என்றவுடன் யாரும் உதவிக்கு வரவில்லை. சென்ற என்னையும் எச்சரித்து அமர சொன்னார்கள். உலகம் தெரியவில்லை என்றும் குறை கூறினார்கள்.


நிற பேதமும் ஆழமாக வேருன்றி இருக்கும் சமூகத்தில் உள்ள நாம்தான் வெளிநாடு செல்லும் வேளைகளில், சில நாடுகளில்  ரேசிசம் இருக்கு, நம்மை மதிக்க மாட்டார்கள் அந்த நாடு மிக மோசம் என்கிறோம்.