Sunday, March 27, 2016

கொண்டாட்டாட்ட்ட்டடட்ட வாழ்வு.

  கொண்டாட எத்தனையோ விஷயங்களை வாழ்வு வாரி இறைத்துக்கொண்டே செல்கிறது. கோவிலுக்கு சென்றால் ஒரு வகை கொண்டாட்டம், பயணம், இசை நிகழ்ச்சி, தனிமை, மலை, இயற்கை, மழை, புது உடை, ஷாப்பிங், நட்பூக்கள்,விளையாட்டு, புத்தகம், இணையம்  சினிமா, உணவு, ஏன் பானி பூரியில் கூட சிறு கொண்டாடத்தை மறைத்தே வைத்து இருக்கிறது.

ஆனால் கொண்டாடத்தை தேடுவதை விட மனம் ஏதோ ஒரு சஞ்சலத்தை பிடித்து தொங்கிக் கொண்டு இருக்கிறது. ஒரு குடும்பம் வீட்டுக்கு வந்தார்கள். ஓரளவு வீடு, வசதி உள்ள லோயர் மிடில் கிளாஸ் குடும்பம். வேலை இல்லை..சிக்கனமாக குடும்பம் நடத்த வேண்டிய நேரம். வந்ததில் இருந்து அவர்களுக்கு வேலை கொடுத்தவர்கள் பற்றியும், கொடுக்காதவர்கள் பற்றியும் புகார் வாசித்துக் கொண்டே இருந்தனர்.. சென்ற முறை வந்தப் பொழுதே ஓரளவுக்கு நம்பிக்கை அளித்தேன். அப்பொழுது மிக நொந்து இருந்தார்கள். இந்த முறை தெம்பாக எல்லாரையும் திட்ட ஆரம்பித்து இருந்தனர்.

மனைவி உள்ளே வந்து என்னிடம் தனியாக எல்லாம் புலம்பியபோழுது அமைதியாக கேட்டுக் கொண்டேன். எதிலும் குறையே பார்க்காதீர்கள். ஏதோ நன்மைக்கே எல்லாம் நடக்கிறது என்று நினைத்துக் கொள்ளுங்கள். அரிசி இல்லை என்று புலம்புவதை விட, அரிசி வேண்டும் அதற்கு என்ன வழி என்று யோசிப்பதே இந்த நேரத்தின் தேவை.

ஆன்மிகத்தில் ஈடுபாடு உள்ளதால் அவர்கள் வழியில் சொன்னேன்..நம்மை சுற்றி ஆசிர்வதிக்க தேவதைகள் சுத்திக் கொண்டே இருக்கும். அவை நாம் என்ன நினைக்கிறோம், சொல்கிறோமோ அதற்கு ஏற்ப ததாஸ்து என்று சொல்லும். அதாவது அப்படியே ஆகட்டும் என்று அர்த்தம். நீங்கள் நல்லது நினைத்தாலும் சரி , எதிர்மறையாக நினைத்தாலும் சரி அப்படியே ஆகும்.
நல்லது நினைக்க நினைக்க நம்மை சுற்றி நல்ல விஷயங்கள் அழகாக அமையும். ஒரு உறவு சரியாக இல்லை என்று சந்தேகம் வந்தால் முறிவதும், நன்றாக இருக்கிறோம் என்று நினைக்கும் பொழுது சேர்வதும் இதனால்தான் என்று பேசிக்கொண்டே சென்றேன்.

அவரும் மனம் கொஞ்சம் இளகி ஆர்வமாக இன்னும் சொல்ல சொன்னதால், குறை மட்டும் பேசவே பேசாதீர்கள்...முதலில் குறை சொல்லுவது உங்களுக்கு வேண்டாதவர்களுக்கு கேட்க போவதில்லை, அதனால் நன்மை இல்லை அப்படி கேட்டாலும் இன்னும் பகைமை வளரும் அதுவும் நல்லதில்லை. எனவே குறை சொல்லுவது எப்பவும் நல்லதில்லை. ரொம்ப புலம்ப வேண்டுமென்றால் மிக மிக நெருக்கமாக இருப்பவர்களிடம் சொல்லிவிட்டு மனதை அத்துடன் கழுவிவிட்டு வெளியே வர வேண்டும். கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். கொஞ்சம் கொஞ்சமாக பயிற்சி செய்தால் சரியாகிவிடும் என்றேன்.

நமக்கு வேண்டியவர்களை குறை சொல்லுவது மிக தவறுதானே என்றார்.. ஆமாம் ..அது உறவை குலைக்கும் செயல், ஒவ்வொருவருக்கும் ஒரு இயல்பு இருக்கும் அதை முடிந்தவரை அப்படியே ஏற்றுக்கொள்வது, அல்லது எனக்கு பிடிக்கவில்லை என்பதை அழகாக எடுத்து சொல்வது தீர்வாக அமையுமே தவிர குறை பேசிக்கொண்டே இருந்தால் மன அமைதி போய் சிக்கலாகத்தான் முடியும் என்றேன். உடனே சத்தமாக இங்கே சீக்கிரம் உள்ளே வாங்க என்றார்..இங்க பாருங்க கீர்த்தி எவ்ளோ அழகா ஒரு விஷயம் சொல்லிருக்கா...யாரையும் குறை பேசவே கூடாதும், பேசினால் ததாஸ்து தேவதைகள் அப்படியே ஆகட்டும் என்று சொல்லுமாம், காலையில் இருந்து என்னை திட்டிக்கொண்டே இருக்கறீங்க, என்னை பற்றி ஏதாவது புகார், அது வரல இது வரல என்று மட்டம் வேறு தட்டறீங்க, அதாவது பராவாயில்லை நான்  என்ன செய்தாலும் உங்களுக்கு ஒரே குறை என்று அடுக்கிக்கொண்டே சென்றார்.
எனக்கு பயங்கரமாக தலை சுத்தத் தொடங்கியது. 

சிறு மகாபாரத தொனி இருவரிடமும் எழ ஆரம்பித்து இருந்தது. என்றைக்காவது குரு  ஷேத்திரம் நம்ம வீட்டிலும் உண்டு. ஒவ்வொரு விஷயத்தையும் குருஷேத்திரம் ஆக்கும் கலையில் இருவரும் வித்தகராக இருந்தனர். உங்களிடம் பேசினால் நன்றாக இருக்கு என்று அவர்கள் சொல்லுவதை நம்பி நாம் பேசி விடக் கூடாது. அவர்களிடம் பேசினால் நாம் அடுத்து நன்றாக இருப்போமா என்று யோசிக்க வேண்டும் என்று புரிந்ததது.  என்ன செய்வது..முடிந்தவரை  இயல்பை மாற்றிக் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்று இன்னொரு மனமும் எனக்குள் சண்டையிட தொடங்கின.

இப்படி கொண்டாடங்களை விட்டுவிட்டு நல்ல விஷயங்களை கூட  பிரச்னையாக எடுத்துக் கொள்வது பலருக்கு கை வந்தக் கலையாக இருக்கின்றன.

யாருக்குதான் பிரச்னை இல்லை. எங்குதான் வருத்தம் இல்லை,  சோகம் இல்லை. எங்கோ இருப்பதை தோண்டிக் எடுத்துக்கொண்டு மனதில் சுமக்கும் பொழுது கண்ணுக்கு எதிரில் வாழ்வு தட்டில் ஏந்திக் கொண்டு இருக்கும் கொண்டாட்டங்கள் மறந்துப் போகிறது.

சமீபத்தில் வாசித்ததில்  மனதில் பதிந்த பகுதி  மனம் விட்டு, சுற்றம் மறந்து நடனம் ஆடுவதைப் பற்றியது. இங்கு எங்கள் பகுதியில் உள்ள வட இந்தியர்களுக்கு எல்லாவற்றிலும் நடனம் இருக்க வேண்டும். ஆண்களோ, பெண்களோ தன்னை மறந்து ஆடுவார்கள். தனக்கு என்ன தெரியும் என்பதுப் பற்றி பிரச்னையில்லை. நம்மை கவனிப்பவர்கள், கேலி செய்பவர்கள் பற்றி கவலைப்படாமல் ஆடுவதும், நடனம் என்று ஆடாமல் கை காலை நடனம் என்று நினைத்து அசைத்து சுற்றம் மறந்து ஆடுவதும் நடக்கும்.

இதில் குழந்தைகள் முதல் எழுவது வயது வரை விதி விலக்கிலை. எப்படி கெட்ட விஷயங்கள் தொற்று நோயாக இருக்கிறதோ அதுப் போல நல்ல விஷயங்களுக்கும் உண்டு. இவர்களைப் பார்த்து பார்த்து நாமும் வாழ்வை அவ்வபொழுது கொண்டாட கற்றுக் கொள்ளலாம். எங்குமே ஆடி பழகி இல்லாதவர்கள் கூட எங்கள் பகுதியில் நடக்கும் ஏதாவது ஒரு கொண்டாடத்திற்கு வந்தால் மனமகிழ ஆடிவிட்டுப் போவார்கள்
இதற்காகவே நான் நண்பர்களுக்கு அழைப்பு விடுவது உண்டு. ஆனால் என் பார்வையில் தென்ன்னிந்தியாவை பொறுத்தவரை எந்த விழா நடத்தினாலும் நேர்த்தி. திட்டமிடல் என்பதில் கவனம் செலுத்துவோம். அதில் கொண்டாட்டம பின் தள்ளபட்டு எதற்காக செய்கிறோம் என்று மறந்து மிக சின்சியராக விழா செய்வோம்.

ஒவ்வொரு விழாவும் கொண்டாடவே என்ன்னும் அடி நாதத்தை புரிந்துக் கொள்ளும் பொழுது மகிழ்ச்சி பீரிட்டு வரும். விழா  என்பது மனமகிழ்வுக்கே என்ற அடி நாதத்தை அங்கே அங்கே தொலைத்துக் கொண்டு இது எங்கள் வீட்டு பழக்கம், இது இந்த ஊர் வழக்கம் இதெல்லாம் மிக சரியா நடக்கணும் என்பதில் மிகக் கவனமாக இருக்கிறோம். அதில் ஒரு இறுக்கம் வந்துவிடுகிறது.

சக மனிதர்களிடம் தளர்வாக இல்லாமல் இறுகும் எந்த இருப்புமே சரியாக வராது. அப்படி இருக்கும் பொழுது கொண்டாட்டத்தில் வரும் இறுக்கங்கள் அதன் தன்மையே மாற்றி விடும் இங்கு நடக்கும் புத்தாண்டு, ஹோலி, கணேசா, நவராத்திரி போன்ற நடன கொண்டாட்டங்கள் தவிர்த்து புதிது புதிதாக செய்வார்கள்.

ஒரு மணி நேரம் விளக்குகளை அணைத்து விட்டு பூமி நேரம் கொண்டாடியப்பொழுது மெல்லிய வெளிச்சத்தில் பாட்டும், அந்தாக்ஷரியும் குதூகலப்படுத்தின.

வேலேண்டைன்ஸ் டேயின் பொழுது எல்லாரும் சிவப்பு சட்டை போட்டுகொண்டு மிக சின்சியராக மாரத்தான் நடத்தினோம். ஹோலிகா தகனம் அன்று நெருப்பை வைத்து நடன காட்சி. குழந்தைகளை மகிழ்ச்சிப்படுத்தும் கோடை கொண்டாட்டம் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.



நம் வாழ்வை நம் விளையாட்டுகளை குழந்தைகளுக்கு நாம் கொடுக்க முடியா நகர சூழல். ஆனால் இந்த சூழலில் அவர்கள் கொண்டாட எத்தனையோ இருக்கு. அதற்கான வாய்ப்புகளை உருவாக்கியும், அனுமதிக்கவும் செய்யம் பொழுது நம்மைப் போல ஒரூ அழகிய இளம்பிராயம் அவர்களுக்கும் கிடைக்கும். நாமும் நம்மை மீட்டு எடுக்கலாம்.


ஒரு ஹோலி போட்டோ போட இத்தனைப் பெரிய பதிவா என்று கேட்பவர்களுக்கு என்னிடம் லைக்ஸ், கமெண்ட்ஸ் பற்றிய கொண்ட்டாட்ட  புன்னகை மட்டுமே மிச்சம் இருக்கிறது. 

4 comments:

chandrasekaran said...

அன்பு இருக்கும் இடத்தில் எல்லாம் கொண்டாட்டமே...

Unknown said...

Super akka

Anuprem said...

உண்மையான வரிகள் ...கொண்டாட்டத்தை நாம் தான் உருவாக்கி ..நம் பசங்களுக்கு பசுமையான இளமை நினைவுகளை கொடுக்க வேண்டும் ...

rajini said...

வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் முழுமையாக வாழ சொல்லும் ஜென் பவுத்தம் மற்றும் வேதாத்திரி மகரிஷி போன்றோரின் தத்துவங்களை கலந்து கட்டி ரொம்ப அழகா ரொம்ப சிம்பிளா சொல்லி இருக்கீங்க Kirthika Tharan. அதுவும் " நம்மை சுற்றி நம்மை ஆசிர்வதிக்க தேவதைகள் காத்து கொண்டு இருக்கின்றன " . வாழ்க்கையை ஒரு மனிதன் எவ்வளவு தூரம் பாசிடிவா எடுத்து கொண்டால் இப்படி பேச முடியும் . எனக்கு பேச வார்த்தைகள் இல்லை. இந்த பாசிடிவ் வைப்ரேஷன் எல்லோருக்கும் பரவட்டும் . நம்மை சுற்றி உள்ள இந்த உலகம் முழுவதும் ஆனந்த மயமாகட்டும். வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் ஜென் நொடிகளாக முழுக்க அனுபவித்து, நாமும் ஆனந்தித்து நம்மை சுற்றி உள்ள மற்றவர்களையும் ஆனந்தபடுத்தி வாழ்வை ஒரு ஆனந்த நர்த்தனமாக தினம் ஆடி கொண்டாடுவோம்.