Tuesday, April 22, 2014

அப்பா-11

அப்பா-11..

நிகின் பாருடா ஆண்டி பொண்ணு முதல் மாத சம்பளத்துல எவ்ளோ வாங்கி கொடுத்து இருக்கா தெரியுமா ? 

நீ என்கிட்ட ரொம்ப எதிர்பார்க்காதம்மா ..நான் எனக்கே செலவு பண்ண மாட்டேன்..உனக்கு எப்படிம்மா பண்ணுவேன்?

டேய்..அம்மாடா..எனக்கு செய்யமாட்டியா..நான்னா எதா இருந்தாலும் முதல்ல உனக்குத்தான் செய்வேன்..

உங்கப்பா சொல்லி இருக்காங்கன்னு நீதானே சொன்ன..அதே பதில்தான்..

அப்பா சொன்னதை தெரியாம சொல்லிட்டேன்..அப்பாக்கிட்ட கேட்டேன் ஒரு தடவை..என்கிட்ட பாசமா இருக்கிற மாதிரி உங்கப்பாகிட்டையும் இருப்பியானு?..

அதுக்கு "ஆறு என்னிக்குமே முன்னாடிதான் பாயும்..திரும்பி பார்க்காது..தாத்தா என்கிட்டவும், நான் உன்கிட்ட, நீ உன் குழந்தைகள்கிட்ட அதிக பாசமா இருப்பதுதான் இயல்பு..அதனால என் குழந்தைகள்கிட்ட அதிக பாசமா இருப்பேன்னு".

இதை ஒரு தடவ லூஸ்டாக்ல இந்த தலைமுறை பையன்கிட்ட சொல்லிட்டேன்..இப்ப பல்பு வாங்கறதே வேலையா போச்சு..

அப்பா-12

அப்பா-12..

ஒரு முறை ஏதோ இறப்புக்கு போயிட்டு வந்து ஒரே சோகம்..அம்மாவும், அப்பாவும் புத்திர சோகம்..கொடுமைன்னு பேசிக்கிட்டு இருந்தாங்க..

அப்பாக்கிட்ட ஊஞ்சல ஆடிகிட்டே கதை கேக்கறது வழக்கம்..ஏம்பா புத்திர சோகம் அவ்ளோ கொடுமையாப்பா?

ஆமாம்..எந்த கஷ்டம் வந்தாலும் தாங்கிடலாம்..புத்திர சோகத்தை மட்டும் தாங்க முடியாது..ஒரு கதை சொல்றேன் கேளு..

ஒரு தடவை புத்தன்கிட்ட ஒருத்தன் ஆசிர்வாதம் பண்ணுங்க சாமின்னு கேட்டு இருக்கான்..

அதுக்கு புத்தன்,"முதல்ல உங்க தாத்தா சாகணும், அப்புறம் உங்கப்பா சாகணும், நீ சாகணும், அப்புறம் உன் புள்ளை சாகணும்..இதான் ஆசிர்வாதம்..உனக்கு மட்டுமல்ல, உன் குடும்பத்துக்குன்னே"....

அதுக்கு அவனுக்கு செம கோவம்..நீயெல்லாம் சாமியா..ஆசிர்வாதம் பண்ண சொன்னா சாபம் விடறன்னு கோவத்துல கத்தி இருக்கான்..

புத்தன் அமைதியா இந்த வரிசையை எந்த இடத்துலே வேணாலும் மாற்றி பாரு..அப்புறம் புரியும் கொடுமைன்னா என்னன்னு சொல்லி அறிவுக்கண்ணை திறந்து வைக்க அவனுக்கு புரிஞ்சது..

அப்புறம்தான் அதன் கொடுமைன்னா என்னனு புரிஞ்சது..அது நமக்கும் வந்துடுமோன்னு பயப்படற கட்டம் ஒரு முறை அப்பாக்கும், எனக்கும் வந்தது..

தொடரும்..

அப்பா-13

அப்பா-13. 

நான் நான் அஞ்சாப்பு, அக்கா ஒன்பதாப்பு ...அப்படி என்றே நினைவு...அந்த நாள் வரை விடுமுறை நாட்களில் வயலில் வேலை இருந்தால் அப்பாக்கு இருவரும் சாப்பாடு எடுத்துக்கொண்டு போவோம். 

வீட்டில் என்னை தவிர அனைவருக்கும் முடி மிக நீளமாய் இருக்கும்..எனக்கு சுருட்டை.. சாப்பாடு கொடுத்துவிட்டு போர்செட்டில் குளிப்பது வழக்கம்.

அழகான பச்சை கம்பளம்..ஓரமாய் போர்செட்..தண்ணீர் பீச்சி கொண்டு கொட்டும் போர் ரூம் உள்ளே எலெக்ட்ரிக் மோட்டர் வச்ச போர் தண்ணி குழாய். அவசரத்துக்கு அதிக தண்ணீர் வேண்டி வெளியே வைத்த டீசல் போர் செட். அது தள்ளிக்கொண்டு போகலாம். கருப்பா புகை வரும் அதில்.

இரண்டும் நீரை பாய்ச்சி கொண்டு இருக்கிறது. மிக வேகமாக..அப்பாக்கு உணவு கொடுத்துட்டு அக்காவும், நானும் போர் பாயும் இடத்தில் இறங்கி செம குளியல் போட்டுட்டு, போர் ரூமில் உடை மாற்றிவிட்டு வெளியே வந்தோம். கொஞ்ச நீள பதிவுதான் இது.

போர் ரூம் சுற்றி குழந்தை கால் வைக்கும் அளவுக்கு இடம்..அதில் நடப்பது எனக்கு பிடிக்கும். டீசல் போர் செட்டில் வெந்நீர் சின்ன குழாய் மூலம் வரும்.அது மிக வேடிக்கையாக இருக்கும். அக்கா நீள முடியை உலர்த்திக்கொண்டே போய் அப்பாக்கிட்ட போயிட்டு வரேன்னு சொல்லு..என்று சொல்ல..நான் விளையாட்டாக அந்த போர் ரூமை சுற்றி இருக்கும் விளிம்பில் சுவற்றை பல்லி போல பிடித்துக்கொண்டே போனேன். பத்து நிமிஷம் ஆச்சு போர் ரூமின் பின்பக்கம் வர..விளிம்பில் நடந்துக்கொண்டே இருக்கும் பொழுது அப்பா, அத்தான், ஆட்கள் என்னை நோக்கி கத்துவது காதில் விழுந்தது.

என்ன என்று என்னால் குதிக்க முடியவில்லை..அப்படியே பல்லி போல சுவற்றை ஒட்டிக்கொண்டு போவதற்குள் அத்தனை பேரும் ஓடிப்போனார்கள்..கிட்டக்க போய் பார்த்தால் போரிலிருந்து நீர் கொட்டும் குளம் ரத்தமாகி இருந்தது..அக்கா டீசல் போர் வீல் மேல் படுத்து இருந்தாள்.

எனக்கு ஒன்றுமே புரியவில்லை..நீரில் ஒரு பூபந்து போல தலைமுடியின் பந்து ரத்தத்தோடு மிதந்து சென்றது இன்று வரை கண் முன்னால். அப்பாக்கு ரத்தத்தை அதுவும் தன் பெண்ணின் ரத்தத்தை பார்த்தவுடன் ஆறடி உடம்பு , எதற்கும் கலங்காத,ஊரில் பிரச்சனை என்றால் ஒற்றை ஆளாக போய் நிற்கும் அப்பா, திருடனை நடுராத்திரியில் துரத்தி பிடிக்கும் வீரமுள்ள அப்பா, கண் கலங்கி மயக்கத்துடன் கீழே மடங்கி விழுந்ததை பார்த்தேன்.

உடனே அத்தான் பைக் எடுத்துக்கொண்டு பின்னாடி வேலையாளை ஏற்றி அக்காவை மடியில் போட்டுக்கொண்டு பக்கத்து ஊர் மருத்துவமனைக்கு சென்றார்கள். பயங்கரமாக கலங்கிவிட்டார் அப்பா. அதற்குள் ஊர் முழுக்க செய்தி பரவி அப்பாவை கூட்டிக்கொண்டு போக பைக் வந்துவிட்டது.

நான் வீட்டுக்கு போகிறேன்பா என்று சொல்லிவிட்டேன். அம்மாக்கிட்ட அப்புறம் சொல்லிக்கலாம் என்று சொல்லிவிட்டு கிளம்பினார்கள். அப்பொழுது அக்காவின் காது மடலின் ஒரு துண்டு விழுந்து இருந்ததை ஒரு கவரில் எடுத்துக்கொண்டு செல்லும்பொழுது அப்பா மிகவும் உடைந்து இருந்தார்.

அங்கு இருந்து கார் பிடித்து பக்கத்து டவுனுக்கு ஆபரேஷன் செய்ய கூடிக்கொண்டு போனார்கள். அதன் நடுவே அம்மாவை வீட்டில் வேலை செய்யும் பையன் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு மிதிக்க முடியாமல் மிதித்து கொண்டு வருகிறான். நான் மட்டும் தனியே வீட்டுக்கு செல்கிறேன்.

அக்கா நான் சென்றவுடன் தாகத்துக்கு வெந்நீர குடிக்கலாம் என்று அந்த டீசல் போர் மெஷின் அருகே குனிந்து இருக்கிறாள்...நீள முடி பறந்து சுற்றும் சக்கரத்தில் மாட்டி அவள் மயக்கம் போட்டு விழுந்து முடியின் அடர்த்தியினால் அவ்வளவு பெரிய போர் இன்ஜின் நின்று அதன் மேல அவள் படுத்து இருந்தாள். அவள் அன்று தப்பித்ததை இதை என்ன செயல் என்று சொல்வது? ..கடவுள் புண்ணியம் என்றுதான் அம்மா சொன்னார்கள்.

ஒரே நாள் வீடு தலைகீழாக மாறியது.அம்மா, அப்பா யாரும் வீட்டில் இல்லை. என்னை பாட்டி வீட்டில் விட்டதாக நினைவு..உடனே ஆபெரேஷன்,இருவது நாட்களுக்கு மேல் ஆஸ்பத்திரி வாசம், அந்த சமயத்தில் கண்ணாடி காட்டாமல் வைத்து இருந்தார்களாம்..பெற்றோரின் வேதனைகளை சம்பவமாக உணர்ந்த தருணம் அது..அக்காக்காக பல வேண்டுதல்கள்.பல இடங்கள் புனித பயணம்.

திருப்பதியில் முடி இறக்க வேண்டுதல் நிறைவேற்றும் பொருட்டு அக்காவின் முடி கொடுக்கப்பட்டது.. திடீர் என்று என் தோளை யாரோ ஆந்திராவாளா முடி இறக்கியவர் தொட்டார். என்ன புரியலியா என்று கேட்க..அது அப்பா..மீசை, தலைமுடி எதுவுமில்லாமல்..

ஏன்பா ,உனக்கு வேண்டுதல் இல்லையே..என்று கேட்க இந்த வயதில் என் பெண்ணுக்கு முடி இல்லை..அது எனக்கும் தேவை இல்ல..என்று சொன்னது அவரின் தியாகம், பாசம், அன்பு ஒரு குடும்பம் என்றால் குழந்தைகளிடம் எப்படி இருக்க வேண்டும் என்று உதாரணமாக திகழ்ந்ததை எப்படி மறக்க முடியும்.

அன்றில் இருந்து அக்காக்கு முடி வளரும் வரை எத்தனையோ தொப்பிகள்..எங்கு போனாலும் தேடி, தேடி வாங்குவார்..அவளுக்கு முடி இல்லாத வருத்தம் எந்த வயதிலும் வந்து விடக்கூடாது என்று கவனமாக இருப்பார். இங்கிலாந்து இளவரசி போல அக்காவும் அந்த தொப்பிகளோடு மிக ஸ்டைலகா இருப்பதை பார்த்து சின்ன பொறாமை வந்தது தனி கதை.

அந்த ஆஸ்ப்பதிரியில் பக்கத்து பெட் பெண்ணும் அடிபட்டு மாவுகட்டோடு இருந்தார். ஹை ஹீல்ஸ் வழுக்கிவிட்டதாம். அன்றில் இருந்து ஹை ஹீல்ஸ் எங்களை போட விடவில்லை.

ஒரு நாள் நினைவு கூறலின் பொழுது எனக்கு புத்திர சோகம் வந்துவிடக்கூடாது கடவுளே என்றுதான் நினைத்தேன் அந்த வேளையில் என்றார்....கண்கலங்கியபடி..

அப்பா-14

அப்பா-14..

எந்த ஹோட்டலிலும் உணவு நல்லா இல்லை என்றால் தயங்காமல் திருப்பி கொடுப்பேன்..வேறு உணவு கொடுக்காவிடில் பில் தர மாட்டேன்.

இது என்று இல்லை..எங்கும் ரொம்ப தயக்கமே இருந்தது இல்லை..எனக்கு இல்லாத ஒரே ப்ராப்ளம் ஸ்டார்ட்டிங் ப்ராபளம்தான்..

எங்கேர்ந்து வந்துச்சு என்றால்..சின்ன சின்ன சிறு வயது சம்பவங்கள் நம் கேரக்டரை தீர்மானிக்கும்.

திருப்பதிக்கு ரயிலில் பயணம். தம்பிக்கு பன்னிரண்டு வயது..தம்பிக்கு அரை டிக்கெட் வாங்கியாச்சு..டிக்கெட் செக் செய்யும் வேளையில் தம்பியின் பிறந்த வருடத்தில் குழப்பம்...

அப்பா பன்னிரண்டு முடியலன்னு சொல்ல, பதினொன்று வரைதான்னு TTR சொல்ல பயங்கர பிரச்சனை. ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி வாக்குவாதம்..அப்பா விட்டுக்கொடுக்கவே இல்லை..கடைசியில் பைன் கட்டாமல் திருமலைக்கு சென்றோம்.

திரும்பி வரும்பொழுது கன்பர்ம் ஆகவில்லை. ஆனால் அதே TTR..அப்பாவை அடையாளம் கண்டு..நீங்கள் சொன்னது சரிதான்..எங்கள் ரயில்வேயில் சரியாக குறிப்பிடப்படவில்லை..இது குறித்து மீட்டிங் எல்லாம் வைத்தோம். இனி பன்னிரண்டு வயது ஆரம்பிக்கும் தினம் வரைதான் அரை-டிக்கெட் என்று அறிவிப்பில் தெளிவாக குறிப்பிடுகிறோம். உங்களால் நன்மை என்று பாராட்டிவிட்டு..டிக்கெட் சிலதை கன்பர்ம் செய்துவிட்டு சென்றார்.

அப்பா சண்டை போடும்பொழுது அனைவருக்கும் கோவம்..பைன் கட்டிவிட்டு வரலாமே..ஏன் அலைக்கழிப்பு என்று..ஆனால் அந்த போராட்ட குணத்தை..சரி என்றால் துணிந்து நிற்கும் குணத்தை எங்களுக்கு சொல்லாமல் செய்து காட்டி இருக்கிறார்.

நன்றி அப்பா.

அப்பா-15

அப்பா-15..

கும்பகோணத்தில் ஒரு விசேஷம்... அக்கா, அம்மா, அப்பா மூவரும் போய் இருக்காங்க. அம்மாக்கும், அப்பாக்கும் பயங்கர வாக்குவாதம். உனக்கு உங்கப்பா(ன்) புத்தின்னு திட்டிட்டார் அம்மாவை..அப்படிதான் நினைவு..பொது இடத்தில....இதுல தாத்தாவும், அப்பாவும் பயங்கர க்ளோஸ் ப்ரெண்ட்ஸ்..எந்த முக்கிய முடிவும் இருவரும் கலந்து ஆலோசித்தே செய்வார்கள். மாமனார் , மருமகன் உறவுக்கு உதாரணம்.

அப்ப அக்கா கொஞ்சம் விவரம் தெரிய ஆரம்பிச்ச வயசு..அவளுக்கு பயங்கர கோவம்..நீயும் அந்த தாத்தாவை திட்டுன்னு அம்மாக்கு
சொல்லிக்கொடுத்து இருக்கா..பெண்கள் மாமனாரை எதுவும் சொல்லாத காலம். அப்பாகிட்டவும் பேசல..

அப்பாக்கு நாம பாசமா இருக்கிற பொண்ணு நம்மை இப்படி சொல்லிட்டாளேன்னு வருத்தம். ரெண்டு பேரும் பத்து நாள் பேசிக்கல..

ஒரு நாள் அம்மாக்கிட்ட என் பொண்ணை நினைச்சு பெருமைப்படறேன். நாளைக்கு போற இடத்துல என்னை விட்டுக்கொடுக்கமாட்டான்னு சொல்லிட்டு..இனிமே அப்படி பேசலேன்னு சொல்லி அக்காவோட சேர்ந்துட்டார்..

அதுக்கு அப்புறம் அம்மாவை அப்படி திட்டுவதை விட்டுட்டார் ..ஆனால் அப்பாவின் பாசம் பொண்ணு என்ன சொன்னாலும் அதை பாசிட்டிவாக எடுத்துக்கொள்ள வைத்தது.

பெண் குழந்தைகள் பெற்ற அம்மாக்களும் கொடுத்து வைத்தவர்கள்.

அப்பா -16

அப்பா-16..

உங்கள் குழந்தையை நம்பி எந்த வயதில் பெரிய வேலையை எப்பொழுது ஒப்படைக்க ஆரம்பித்தீர்கள் ? 

இந்த கேள்வியை கேட்டால் பெரும்பாலான பதில் பதினாறு முதல் முப்பது வயது வரை கூட வரும்.

அக்கா ஆறாவது, நான் இரண்டாவது இருவரையும் கூப்பிட்டு... கற்பனை செய்துக்கொள்ளுங்கள் எண்பதின் ஆரம்பத்தில்.. அவசரமாக ஒருவரிடம் பத்தாயிரம் கொடுக்க வேண்டி இருந்தது. மாயுரம் பக்கத்தில் ஒரு கிராமத்தில் பெரிய ரைஸ் மில்..அங்கு வேலை செய்பவரிடம் ஒப்படைக்க வேண்டும்.

அந்த ஊருக்கு முன்பின் இருவரும் சென்றது இல்லை..ஆனாலும் இருவருக்கும் தன்னம்பிக்கை அதிகம்..பஸ் ஏற்றி விடும் வழக்கம் எல்லாம் எங்கள் வீட்டில் என்றும் கிடையாது. இன்று மகனை பத்திரமாக பள்ளி கூட பஸ்ஸில் ஏற்றி, இறக்கும் சமயத்தில் சுதந்திரமே இல்லையே இவர்களுக்கு என்று நினைத்து கொள்வேன்.

சித்தர்காடு என்ற ஊர்...பத்தாயிரம் ரூபாய் உள்ள பை..பத்திரமாக அக்கா வைத்து இருந்தாள். நானும் அதை கவனித்துக்கொண்டே இருந்தேன். இருவருக்கும் பெரிய மனுஷிகள் போன்ற நினைப்பு. பத்திரமாக கொண்டு சேர்க்க வேண்டிய கவலையும். இன்று கிட்டத்தட்ட ஒரு லட்சத்துக்கு நிகரான பணம் அது...

அங்கு பஸ் இறங்கி ஒரு கடைக்கு அருகில் நிற்க சொல்லி உத்தரவு. மில்லில் இருந்து மேனேஜர் வந்து பணத்தை வாங்கி கொள்வார்.

நேரமாகியது..மில்லில் இருந்து அவர் வரவில்லை..நாங்கள் உக்கார்ந்து இருந்தது ஒரு கிளினிக் வாசலில் .அங்கு ஒரு போர்ட்..

தலைவலி- ஒரு ரூபாய்..
ஜுரம்-இரண்டு ரூபாய்..
வயிற்றுபோக்கு-மூன்று ரூபாய்.
ஊசி -இரண்டு ரூபாய்..

இதை பார்த்துவிட்டு நானும் அக்காவும், விழுந்து, விழுந்து சிரிச்சோம்..அரை மணி கழித்து அவர் வந்து பணத்தை வாங்கி கொண்டு எங்களை தட்டிகொடுத்து சமத்து குழந்தைகள் என்று சொன்னது இன்றும் மறக்கவில்லை..

வாழ்கையில் அந்த அரை மணி நேரமும்..அக்காவும், நானும் பொறுப்புடன் உக்கார்ந்து இருந்ததும், பெருமையாகஉணர்ந்ததும் அப்பா கொடுத்த பெரிய பரிசு.

அப்பாக்கு எங்களை பற்றியும், எங்களுக்கு அப்பாவை பற்றியும் பெருமை.

மனதார சந்தோஷப்பட வேண்டுமா?..மனதிற்குள் பெருமை பட வேண்டுமா? உங்கள் குழந்தைகளை நம்புங்கள்..இது போன்று இல்லாவிடினும் ஓரளவுக்காவது பொறுப்புகளை கொடுங்கள்..பிறகு உணருங்கள்..அவர்களின் தன்னம்பிக்கையையும், பொறுப்பையும்..

எந்த பொருளையும், பணத்தையும் விட பெரிய பரிசு கிடைக்கும்.

அப்பா -17

அப்பா -17,

ஊட்டி..பேரை சொன்னாலே நெஞ்சம் குளிரும். அங்கு அக்கா திருமணமாகி சென்றாள். எங்கள் ஊரில் இருந்து செல்ல பஸ் அல்லது கார்தான். அப்பாக்கு நினைத்தால் பெண்ணை பார்த்துவிட வேண்டும். என்னையும் அழைத்துக்கொண்டு ஊட்டிக்கு கிளம்பினோம்.

அந்த முறை டிசம்பர் குளிர். சமவெளி மனிதர்களுக்கு ஊட்டி டிசம்பர் தாக்குப்பிடிப்பது கஷ்டம்..அப்பாக்கு இருக்கமுடியவில்லை..இரு நாட்களுக்குள் கிளம்பிட்டோம்.

திரும்பி கோவையில் இருந்து ஊருக்கு இரவுப்பயணம். அந்த காலத்து டீலக்ஸ் பஸ். வழக்கம்போல ஜன்னல் ஓரம் நான். ஜன்னல் ஓர பயணங்கள் பயணத்தை சிறக்க செய்யும் என்பது இன்று வரை நம்பிக்கை. பேருந்துக்கு பின்னால் பாய்ந்து ஓடும மரங்கள், மலைகள், கால்நடைகள், கிராமங்கள் அழகு என்றால் கீழே குனிந்து பார்ப்பேன்..பேருந்து நிற்பது போலவும் தார் பூசிய கறுப்பு ரோடு கன்வேயர் பெல்ட் போல ஓடுவது போல ஒரு தோற்றம் கொடுக்கும்..அதை மணிக்கணக்கில் ரசிப்பேன்..கற்பனைகளில் பொருத்திக்கொள்வேன்.

அப்பாவும் ,நானும்..நடுஇரவில் ஒரு குறுகுறுப்பு..பெண்களுக்கு உள்ளுணர்வு அதிகம்..ஒரு ஆணின் பார்வை, நெருக்கம், கை ஸ்பரிசம் எல்லாவற்றிலும் அன்பா, காமமா என்று எளிதாக பிரித்து விட முடியும். பார்வையே சரியில்லை என்று சொல்வது இப்படிதான்..

முதுகுக்கு பின்னால் பூச்சி ஊர்வது போல உணர்வு..அப்பா நல்ல தூக்கத்தில்..எழுப்ப மனம் வரவில்லை..அப்படி சீட்டின் இடுக்கில் நான்கு விரல்கள் நுழைந்தது..சீட்டில் நிம்மதியாக சாய்ந்து உக்கார முடியவில்லை. பெண்கள் பெரும்பாலும் இவை சகஜம் என்ற மனப்போக்கில் சீட்டின் நுனியில் அமர்வது, சீட்டை மாற்றி அமர்வது என்று அட்ஜஸ்ட் செய்து கொள்வார்கள். அடுத்து சீட்டின் கீழே விரல்கள்..அரை மணி நேரம் முடியவில்லை..சீட்டின் நுனியிலையே அமர்ந்து இருந்தேன்..மிகச்சிறிய வயது..

அடுத்து கால் உள்ளே நுழைந்தது..அருவருப்பின் உச்சம் சிறு வயதில் அனுபவித்தது..இன்று நினைத்தாலும் ஒரு வாந்தி போன்ற அருவருப்பு..வந்ததே கோவம்..எழுந்து பார்த்தால் நாற்பது வயது மனிதன்..அப்பா போல இருந்தான்..தூங்குவது போல பாவ்லா செய்தான்..சரி வம்புக்கு வரமாட்டான் என்று உக்கார்ந்தால் திரும்ப ஆரம்பித்தான்..கோவம் தாங்கவில்லை..பஸ் முழுக்க அனைவரும் தூக்கம்..அப்படியே ரத்தம் சூடாகி தலைக்கு சென்றது..செருப்பை எடுத்தேன்..பொளிச்..பொளிச்.பொளிச்...செருப்பால் அடித்தும் தூங்குவது போலவே பாவ்லா செய்தான்.

கோவம் தாங்கவில்லை...உடம்பு கோவத்தில் நடுங்கியது..பேருந்தை நிப்பாட்ட சொல்லி கத்தினேன்..அனைவரும் எழுந்தார்கள்..அப்பாக்கு ஒண்ணுமே புரியவில்லை..அனைவரும் நைய புடைத்தார்கள்..நான் பிடிவாதம் பிடித்து போலிஸ் ஸ்டேஷனுக்கு வண்டியை அனுப்ப வேண்டும் என்று அதிக பிடிவாதம் பிடித்தேன். அனைவரும் ஒப்புக்கொண்டு பக்கத்து ஊர் போலிஸ் ஸ்டேஷன் நோக்கி பஸ் சென்றது.

அனைவரும் இறங்கினர். நானும் கம்ப்ளயின்ட் கொடுக்க எழுந்தேன்..அப்பா என்னை அமர்த்திவிட்டு கூப்பிடறப்ப வந்தா போதும் என்று இறங்கினார்கள்..எதுவும் பேசவில்லை.. அனைவரும் ஏறி பஸ் கிளம்ப பார்த்தது..எனக்கு கோவம் என்னப்பா FIR பதிய என் கையெழுத்து வேண்டுமே என்று கேட்டேன்..அதற்கு வேறு கேஸில் உள்ளே தள்ளிட்டோம் என்று சமாதானம் செய்தார்கள். பெரும்பாலும் பெண்களை போலிஸ் ஸ்டேஷன் படியை மிதிக்க விடாத காலம்...

எல்லாம் முடிந்து தூங்க போகலாம் என்று நினைக்கும் வேளையில் முதல் வார்த்தை அப்பா சொன்னார்கள்..ஏம்மா கையால தடவ வந்தான் என்று வெளியில் சொன்ன..செயின் அறுக்க வந்தான்னு சொல்லி இருக்கலாம் இல்லையா என்று..

அப்பாக்கள் என்றுமே பெண் குழந்தைகளின் பெயரை காப்பாற்றத்தான் நினைப்பார்கள். அதுக்கு துணிச்சலை ஊட்டிய என் அப்பாவும் விதிவிலக்கல்ல..