Thursday, April 30, 2015

கல்விச் சிறகை விரிக்கலாம்..கார்த்திக் பகுதி.

கல்விச் சிறகை விரிக்கலாம்- 67

இந்த தொடரில் வெறும் தகவல்கள் மட்டுமல்லாமல் .பல இந்திய மாணவர்களின் கல்வித்தேடலான பெருமுயற்சிகளையும்  எடுத்து சொல்வதே நோக்கமாகும். வெளிநாட்டுக் கல்வி என்பது அனைவரும் நினைப்பதுபோல்  பணமிருந்தால் மட்டும் போதும் அல்லது மதிப்பெண்கள் மட்டும் இருந்தால் போதும் இந்த இரு சாரார்களும் எளிதாக போய் படித்து வந்து விடலாம் என்று. ஆனால்  குடும்பத்தை விட்டு, தனிமையாக இருக்க நேரிடும். எத்தனையோ பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும். மொழிப் பிரச்னை, புது ஊர், தட்பவெப்ப சூழல் என்று பல விஷயங்களுக்குப் பழக வேண்டி இருக்கும்.

எனவே இதை  வெறும் தகவல் தொடராக இல்லாமல் பல்வேறு மாணவர்களின் அனுபவங்களை பகிர்ந்துக் கொள்ளும் தொடராகவும் நாம் இந்த கட்டுரையைத் தந்து கொண்டிருக்கிறோம்.  ஒரு மாணவரின் அனுபவம் மூலமே சரியான தகவல்கள் கிடைக்கும். ஆனால் ஒவ்வொரு மாணவனுக்கும் ஒரு அனுபவம். எனவே பல்வேறு விஷயங்கள்.. இந்த வரிசையில் இன்றைய பகுதியில்  ஒரு கிராமத்து விவசாயக் குடும்பத்து மாணவனின் பயணக் கதை பற்றி பார்ப்போம் .. கண்கள் பனிக்கவும் மனம் கனத்துப் போகவும் செய்த இவரின் அனுபவம் நிறைய பேருக்கு ஒரு வழி காட்டியாக இருக்கலாம் என்ற எண்ணத்தில் அவருடனான இந்த நேர்காணலை இனி அவர் சொல்லவே கேட்போம்.
நான் பிறந்து வளர்ந்தது மதுரை பக்கத்தில் உள்ள மீனாட்சிபுரம் என்ற சிறியக் கிராமம். ஸ்டேட் போர்ட் ஆங்கில வழியில் படித்தேன். இருந்தாலும் பெரிய அளவில் ஆங்கிலத்தில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை. அடுத்து பொறியியல் ராஜா இன்ஜினியரிங் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன். அப்போது அந்த துறைதான் முதலிடத்தில் இருந்தது

ஆங்கில வழி என்பதால் பாடங்கள் எளிதாக இருந்தன. தமிழ் மீடிய மாணவர்களை விட விரைவாக  படிக்க முடிந்தது. ஆனால் வெளிநாட்டுக்கு செல்ல வேண்டிய அளவுக்கு ஆங்கிலத் தகுதி இல்லை. நம் ஊரில் அந்த வித்தியாசம் இருக்கிறது.

நான் படித்துமுடித்துவிட்டு எம்.எஸ் அல்லது எம்.பி. ஏ வெளிநாட்டில் படிக்க முடிவெடுத்து இருந்தேன். அமெரிக்கா அல்லது இங்கிலாந்து போகலாம் என்று முடிவெடுத்தேன். முதலில் அமெரிக்காவிற்கு முயற்சி செய்தேன். இரண்டுக்கும் வேறு விதமான முயற்சிகள் . எம். எஸ் படிக்க ஜி.ஆர். , TOEFL படிக்க முடிவெடுத்தேன். ஆனால் என்னால் சுயமாக படிக்க முடியவில்லை. எனவே சென்னையில் தங்கி  படிக்க முடிவெடுத்து கோச்சிங் சேர்ந்தேன். சென்னையில் படிக்கும் பொழுதே எனக்கு கலாசார மாறுபாடு  இருந்தது. அங்கு நகரத்தில் படித்த மாணவர்களும், பணக்கார மாணவர்களும் மட்டுமே இருந்தனர். என்னைப் போன்ற கிராமத்து மாணவர்கள் இருவர் மட்டுமே இருந்தோம். சென்னை என்பதால் அவர்களுக்கு எல்லாமே எளிது. நமக்கு அப்படி இல்லை. அங்குப் போய் தங்குவது கூட பெரிய செலவு உள்ள விஷயம்.

அவர்களோடு போட்டி போட வேண்டுமென்றால் கடுமையான உழைப்பால் மட்டுமே முடியும் என்று தீர்மானித்தேன். ஒரு நாளைக்கு இருபது மணி நேரம் உழைத்தேன். அவர்களுக்கு அது கடினம்.  காலையில் இருந்து மாலை வரை வகுப்புக்கு சென்று விட்டு இரவு வரை படித்துக் கொண்டே இருப்பேன். என்னை சுற்றியுள்ள உறவுகள் வசதியாக இருந்தாலும் நான் கொஞ்சம் ஏழைக் குடும்பத்தில் இருந்து வந்ததால் மிக சிக்கனமாகவும் இருக்க வேண்டிய காலமாக இருந்தது. 2007 ல் இருந்து 2010 வரை ஊரில் இருந்தவரை  மாதம் இரண்டாயிரத்துக்குள் சமாளித்துக் கொள்வேன்.

ஆனால் பயிற்சி வகுப்புகளுக்கு  அதிக செலவு. ஐம்பதினாயிரம் ருபாய்  வரை ஆனது. அதற்கு என் உறவினர்கள் உதவி செய்தார்கள், அன்பாக பார்த்துக் கொண்டனர்கிராமத்தில் இருந்து வந்ததால் எனக்கு கோச்சிங் இல்லாமல் தனியாக எழுத நம்பிக்கை இல்லை. அங்கு நன்கு படித்து ஓரளவுக்கு நல்ல மதிப்பெண்கள் வாங்கினேன்.

ஆனால் நான் படித்து முடித்து தற்பொழுது படித்துக் கொண்டிருக்கும் கல்லூரிக்கு வர மூன்று வருடம் ஆனது. ஏன் இந்த மூன்று வருடம். எப்படி போக வேண்டும் என்ற விவரங்கள் இல்லாதது  மிக முக்கிய காரணம். யாரும் சரியாக வழி காட்டவில்லை. அப்படியே சொன்னாலும் அதில் பல விதமான பிரச்னைகளை சந்திக்க வேண்டி இருந்தது.

முதலில் நான் அமெரிக்காவில் கல்லூரிகளை இணையத்தில் தேட ஆரம்பித்தேன். சரியாக புரிபடவில்லை. சரி என்று அங்குள்ள என் உறவினர்களிடம் கேட்டேன். அவர்களும் சரியாக சொல்ல முடியவில்லைஅதற்குப் பிறகு இதற்கென்று உள்ள ஆலோசனை மையங்களை  கலந்து விவரங்கள் கேட்டுக் கொள்ளத் தொடங்கினேன் . அவர்கள் ஆசை வார்த்தைகள் காட்டுவார்கள். சில கல்லூரிகளில் சேர தூண்டில் போடுவார்கள். அதில் சமர்த்தியமாக மாட்டிக் கொள்ளமால் அவர்களிடமே வெளிநாட்டு கல்லூரிகளுக்கு செல்ல முதலில் வழி கேட்க வேண்டும். அவர்கள் கொடுக்கும் கல்லூரி தகவல்களை வைத்துக் கொண்டு நாமே தேடிக் கொள்ள வேண்டும். அடுத்து அமெரிக்க தூதரகம்  இருக்கிறது. அங்கு தொடர்புக் கொண்டாலும் சரியான விவரங்களை அளிப்பார்கள்.

ஆனால் தேர்வு எழுதிவிட்டுதான் நான் இந்த ஆலோசனை மையங்கள் , அமெரிக்கன் கான்சுலேட்  எல்லாம் தொடர்புக் கொண்டேன். ஆனால் தேர்வு எழுதுவதற்கு முன்பே எந்த கல்லூரிக்கு செல்லப் போகிறோம் என்று யோசித்துக் கொண்டு அதற்கான தேர்வுக்கு தயாரிப்பது மிக நல்லது.  நிறைய இடங்களில் மாக் டெஸ்ட் எனப்படும் பயிற்சி தேர்வும் உண்டு. அதில் எத்தனை மதிப்பெண்கள் என்று தெரியும். அதன் மூலம் எந்தக் கல்லூரிகளில் இடம் கிடைக்கும் என்று ஒரு ஐடியா கிடைக்கும்.

எனக்கு நார்த் டோக்கோடா பல்கலைக்கழகம் உள்பட மூன்று இடங்களில் இடம் கிடைத்தது. அதற்குப் பிறகு நான் இந்த மூன்று இடத்திற்கும் விண்ணப்பித்தேன். இடம் கிடைத்து விட்டது. அதற்கான செலவுப் பணம் நம் கணக்கில் இருந்தால் விசா வாங்கிக் கொண்டு நாம் கிளம்பி விடலாம். ஆனால் அதற்குப் பிறகுதான் உணமையான சோதனை ஆரம்பித்தது. அமெரிக்க  விசா என்றால் ஒரு வருட வங்கி கணக்கு. சொத்து விவரங்கள் காட்டினால் பெரும்பாலும் விசா கிடைத்து விடும். ஆனால் கணக்கில் கையிருப்பு மிக அவசியம். சில சமயம் கிடைக்காமலும் போகலாம். அடுத்து அமெரிக்க விசாவைப் பொருத்தவரை எதற்காக நம்மை தள்ளுபடி செய்கிறார்கள் என்று புரிந்துக் கொள்ளவே முடியாது .

அங்கு முதலில் பார்ப்பது நம் மதிப்பெண்களை..அதில் அரியர்ஸ் இருந்தால் கண்டிப்பாக யோசிப்பார்கள்,. அடுத்து பணம், குடும்ப நிதி நிலைமை இதையும் பார்ப்பார்கள். ஆனால் நிராகரிக்கும் பொழுது எதுவும் சொல்ல மாட்டார்கள். உங்கள் விண்ணப்பத்தில் திருப்தி இல்லை என்று அனுப்பி விடுவார்கள்படிப்பா, நிதி நிலைமையா, ஆங்கிலத் திறமையா எதுவும் புரியாது எனவே சொத்து விவரங்களை ஆடிட்டரிடம்  சொன்னால் அவர்கள் அமெரிக்க கான்சுலேட் திருப்தியாகும் வண்ணமாக ஆவணங்களை சரிசெய்து தருவார்கள்.

ஆனால் நான் கிராமத்தில் இருந்து போனவன்.  என்னிடம் பணம் இல்லை. எனவே வங்கிகளை நாடினேன். RBI  விதிப்படி ஒரு மாணவர் கடன் கேட்டால் உள்ளூர் கல்லூரி என்றால் நான்கு லட்சமும் வெளி நாடு என்றால் ஏழு லட்சமும் கடன் கொடுக்க வேண்டும். இது எந்தவித அடமானமும், பிடிமானமும் இல்லாமல் கொடுப்பார்கள். கண்டிப்பாக கொடுத்தே ஆக வேண்டும். இதில் பெரிய பிரச்சனை இருக்காது. ஆனால் சரியான கல்வி சான்றிதழ்கள் அது தொடர்பான ஆவணங்கள் தேவை. அதற்கு மேல் வேண்டும் என்றால் சொத்துகளை அடகு வைத்து வாங்கிக் கொள்ள வேண்டும்அது பங்கு பத்திரங்கள், காப்பீட்டு பத்திரங்கள் இப்படியான  சொத்து எதுவாக வேண்டும் என்றாலும் இருக்கலாம்.

இதே இங்கிலாந்து என்றால் மிகக் கடுமையான விசா விதிகள் இல்லை. முதல் மூன்று மாதங்கள் செலவும், கல்லூரிக் கட்டணம் இவற்றைக் காட்டினால் போதுமானது. அதுவும் சொத்து, வங்கி இருப்பு, பத்திரங்கள், பாண்டுகள் இருந்தால் கூட போதுமானது. ஆனால் அமெரிக்கா என்றால் ஒரு வருடம் காட்ட வேண்டும். என்னிடம் அத்தனைப் பணம் இல்லை.

பனிரண்டு முதல் பதினேழு லட்சம் ரூபாய் விசாவிற்கு  காட்ட வேண்டும். ஒரு ஏழை விவசாயி இருப்பதோ ஒரு ஏக்கர் நிலம். சரி என்று சொத்து மதிப்பு போட்டதில் அதிர்ஷ்டவசமாக  இருபத்தியைந்து லட்சம் மதிப்பு வந்தது. அதை வைத்துக் கொண்டு வங்கியில் கல்விக் கடன் வாங்கலாம் என்று முடிவெடுத்தேன்.

நான் ஏறி இறங்காத வங்கிகளே இல்லை . பாங் ஆப் இந்தியா தவிர அத்தனை வங்கிகளும் ஏறி இறங்கி பார்த்து விட்டேன்அடுத்து என் உறவினரான மாமா ஒருவர் மூலமாக ஒரு எம். பி க்கு கடிதம் எழுதினேன். " ஏன் விவசாயி மகன் படிக்க கூடாதா? ஏன் விவசாய நிலத்துக்கு கடன் அளிக்க மறுக்கிறார்கள் என்று ...அது வழக்கம் போல குப்பை தொட்டிக்கு உணவாக சென்றது. வசனம் எல்ல்லாம் சினிமாவில் தான் பேச முடியும்.. பிரச்னை சந்திக்க களத்தில் இறங்கித்தான் ஆக வேண்டும். அடுத்து ஆர்.பி ஐ தலைமைக்கு நேரடியாக போன் செய்து கேட்டேன். அவர்கள் விதிகளை பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டார்கள். அடுத்து ப. சிதம்பரம் அமைச்சராக இருந்தார். கூகிளில் அவரின் போன் நம்பர் எடுத்து அவரின் வீட்டுக்கே போன் செய்தேன். செகரட்டரி பேசினார். அவரும் எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக் கொண்டு ரூல்ஸ் படிதான் செய்வாங்க தம்பி அது என்ன சொல்லுதோ அப்படித்தான் செய்ய முடியும்  என்று சொல்லி விட்டார். எந்தப் பக்கம் போனாலும் எல்லா கதவுகளும் சாத்தியே இருந்தன
என்ன செய்வது..கடைசியில் லோக்கல் எம்.பி பற்றி யோசிக்க ஆரம்பித்தேன். எங்கு போனாலும் விவசாய நிலத்துக்கு கடன் இல்லை. நான்கு மாதத்தில் . ஒரு பெரிய உண்மை தெரிந்துவிட்டது. ஒரு விவசாயி அவன் நிலத்தை வைத்துக் கொண்டு சாப்பிட முடியும் தவிர  அவனால் அதை வைத்துக் கொண்டு கடன் வாங்க முடியாது ..அது எதற்கும் உதவப் போவதில்லை..ஒரு மகனின் கல்விக்கு கூட உதவாத நிலம் எதற்குத்தான் என்பதில் மனம் கனத்து போனது. ஆனால் தன் முயற்சியில் சற்றும் தளராத விக்ரமாதித்தன் போல அடுத்து என்ன செய்வது என்று யோசித்தேன்.

எந்த விஷயம் முடியாது என்று நாம் நினைக்கிறோமோ அதை முடிக்க என்று உலகத்தில் யாராவது இருப்பார்கள். நாம் அணுகும் நபர்கள் தவறு என்று யோசிக்க ஆரம்பித்தேன். சரியான கதவுகளைத்  தட்ட வேண்டும். அணுக வேண்டும். சரி செய்து இதை எல்லாம் முடித்து விட வேண்டும் என்ற நோக்கில் செயல்படத்தொடங்கினேன்.
மதுரையில் லோக்கல் எம்,பி யை அணுகலாம் என்று முடிவெடுத்தேன். அவரை அணுகுவது அத்தனை எளிது இல்லை. எனக்கு தேவையான பணம் பதிமூன்று லட்சம்  ..அதுவும் விவசாய நிலத்தை அடமானம் வைத்துக் கொண்டு
கடன்..வாங்கினேனா?
அமெரிக்கா விசா அலுவலகத்தில் அடுத்த நேர்ந்த  பிரச்சனைகள்?
ஏன் எனக்கு வெளிநாட்டுக் கல்வி ..?
அடுத்த பகுதியில் சொல்கிறேன்

இந்த மாணவன் போல எத்தனையோ மாணவர்களின் போராட்டத்தை நம் நாடு சந்தித்துக் கொண்டு இருக்கிறது..இந்த ஒரு மாணவர் பற்றியே தெரிந்துக் கொள்ள இத்தனை விஷயங்களா என்று மலைத்து போனேன். நிஜமாக  நான் கிராமத்து பெண்ணாக இருந்தாலும் ஒரு நகரத்து வாழ்க்கைக்கு வந்துவிட்டதால் அந்த சிரமங்கள் எதுவும் இல்லாமல் என் பையன் அமேரிக்கா சென்று விட்டான்.. இன்னும் கார்த்திக் என்ற மாணவனின் பயணத்தை படிக்கப் போகிறோம்..

கல்விச் சிறகை விரிக்கலாம் 68

 எப்படி எனக்கு கடன் கிடைத்தது?

நேற்று வெளிநாட்டில் கல்வி பயணத்தில் உள்ள பல தடைக் கற்களை நிஜமாகவே படிக்கற்களாக மாற்றிக் கொண்ட கிராமத்து மாணவனின் கதை தொடர்ச்சி..

எங்கள் ஊர் எம்.பி, முக்கிய பிரமுகர், கட்சி ஆட்கள் எப்பவும் சுற்றி இருந்தனர். ஆனால் எனக்கு  எப்படியாவது லோன் வாங்கி கல்விக்கு வெளிநாடு போக வேண்டும். கட்சி பேதம் எதுவும் இல்லை. செயல் முடிக்க வேண்டும் என்ற குறிக்கோள் மட்டுமே என் கண் முன். எனவே எப்படியாவது அந்த முக்கிய பிரமுகரை சந்திக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன்.

தினமும் தினசரி பத்திரிக்கை   வாங்கி அவர் நடவடிக்கைகளை கவனிக்க ஆரம்பித்தேன். அவர் செல்லும் இடங்கள், விழாக்கள் எல்லாம் குறித்து வைத்துக் கொண்டேன். ஒரு முறை அவர் தமுக்கம் மைதானத்தில் ஒரு விழாவில் கலந்துக் கொள்ள, உடனே நானும் ஓடினேன். எல்லாரும் கட்சி ஆட்கள். மிகுந்த தயக்கமாக, பயமாக இருந்தது. தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டே இருந்தேன். எப்படி நெருங்கி பேசுவது என்று தெரியவில்லை. பார்த்தால் அவர் நான் நிற்கும் இடம் நோக்கி படை சூழ வந்துக் கொண்டு இருந்தார். உடனே பேனாவை எடுத்து தூய தமிழில் என் கதையை எழுதினேன்.

"ஒரு விவசாயி மகனுக்கு ஏன் கல்வி கற்க இத்தனை சிரமங்கள்.. நல்ல மதிப்பு உடைய விவசாய நிலத்தை  அடமானம் வைக்க  தருகிறோம் என்று சொல்லியும் கடன் கொடுக்கவில்லையே, அப்படி என்றால் விவசாயிக்கு இந்த நாட்டில் எந்தப் பலனும் இல்லையா? ஒரு மாணவன் கல்வி வேண்டும் அதற்கு உதவுங்கள், அதுவும் கடன் கொடுத்து என்று பொறுப்புடன் கேட்கிறேன்..இதற்கு வழி இல்லையா?" என்றெல்லாம்  கேள்விக் கேட்டு உருக்கமாக கடிதத்தை முடித்தேன். அவர் நான் இருக்கும் பக்கம் வர..எழுந்து அருகில் செல்லும் சமயம்..ஒரு கார் உள்ளே புகுந்து அவரை அள்ளிக் கொண்டு வேகமாக சென்று மறைந்து விட்டது.

உடனே அடுத்த நடவடிக்கையாக அவரை அவர் அலுவலகத்தில் சந்திக்க சென்றேன். நேரம் எல்லாம் தெரிந்துக் கொண்டு. எங்கள் ஊருக்கு போக வர பேருந்து நேரம் பெரிய பிரச்சனை. அதை பார்த்துக் கொண்டுதான் என் வேலைகளை நான் முடிக்க வேண்டும். எங்கள் ஊரில் இணையம் கிடையாது. எனவே ஒரு மெயில் பார்க்க வேண்டும், கல்லூரியில் இருந்து ஏதும்  செய்தி வந்து இருக்கா என்றுப் பார்க்க கூட பேருந்தில் ஏறி மதுரை வரத் தேவை. அப்பொழுது மணிக்கு இருவது ரூபாய் இன்டர்நெட், பல இடங்களில் மிக மெதுவாக வேலை செய்யும். இதில் கல்லூரி விண்ணப்ப வேலைகளை முடிக்க வேண்டும். முடித்து பேருந்தில் ஏறி ஊருக்கு சென்று விட்டு மறுநாள் திரும்ப வருவேன். இதே நகரத்து மாணவர் என்றால் மிக எளிதாக செய்து இருக்க முடியும். வாய்ப்புகள் இல்லாத இடத்தில்தான் அந்த வாய்ப்புகளுக்கான போராட்ட வலிகள் பற்றி அறிய முடியும்.

முக்கிய பிரமுகர் அலுவலகம் சென்றால் முழுவதும் கட்சி ஆளுமைகள். அதிக  தயக்கம்  இருந்தது. ஆனால் மனம் முழுவதும் இதை விட்டால் வேறு வழியில்லை என தெரிந்தவுடன் உள்ளே சென்றேன். அங்கு பலர் அமர்ந்து இருந்தனர். மூதாட்டி, கட்சிக்காரர்கள் என சிலர்.

ஒரு கட்சிக்காரர் உள்ளே செல்வதைப் பார்த்தேன். அவர் அமரவில்லை. அவரிடம் கோவமாக ஏதோ பேசியதைப் பார்த்து திரும்பவும் தயக்கம் ஒட்டிக கொண்டது. அடுத்து சென்ற மூதாட்டியிடம் பிரமுகர் கவனமாக பேசி கோரிக்கை கடிதத்தை பெற்றுக் கொள்வதைப் பார்த்து திரும்ப நம்பிக்கை துளிர்த்தது. இப்படியான மனப் போராட்டத்தில் காத்துக் கொண்டு இருந்தேன். என்னை அழைத்தார்கள்.

மாணவன் என்றவுடன் தம்பி உக்காருங்க, சொல்லுங்க என்றவுடன்,  அந்த நொடி வரை இருந்த பயம், தயக்கம் எல்லாம் விலகி மகிழ்ச்சி பூத்தது. உடனே கடிதம் எடுத்துக் கொடுத்தேன். நான் வாழ்கையில் எழுதிய சிறந்த தமிழ்க் கடிதம். அன்றுதான் உணர முடிந்தது தமிழின் சிறப்பை. ஒரு மொழியால் உணர்வுகளை வெற்றிக் கொள்ள முடியும், செயல்களை சிறப்பாக்க முடியும் என்பதையும்.
அவர் எடுத்து படித்துவிட்டு பக்கத்தில் இருந்த உதவியாளரிடம் கேட்க..அவர் ரிசர்வ் வங்கி  விதிகள்படி ஏழு லட்சம்தான் கொடுக்க முடியும் என்று சொன்னார். அடமானம் இருக்கே..இதற்கு விதிகள் இல்லையா என்றுக் கேட்க..உதவியாளர் முடியும் என்றார். உடனே அவர் வங்கி மேலாளருக்கு கடிதம் கொடுத்து  அனுப்பி வைத்தார்.

வங்கிக்கு சென்றேன்..ஆவணம், மேல் ஆவணம்..இதுதான் என்று இல்ல..எத்தனையோ ஆவணங்கள். அத்தனையும் ஒவ்வொன்றாக கொடுத்துக் கொண்டே இருந்தேன். எல்லாம் சரியாக இருந்தது..ஒரு மாதம் ஆகி விட்டது. வங்கியில் இருந்து தகவல் இல்லை. திரும்ப என்ன செய்வது என்று யோசனை.. ஒரு சின்ன சலிப்பு வரத் தொடங்கிய நேரம் அது.

ஒரு நாள் காலை எழுந்து பார்த்தால்..இரவில்  மொபைலுக்கு அம்பது மிஸ்ட் கால்ஸ்.வங்கி மேலாளர் அழைத்து இருந்தார். பள்ளிக்கரணை என்ற ஊரில் மாணவர்களுக்கு  கடன் கொடுக்கும் விழா நடக்கிறது . நீங்களும் வாங்க என்று சொன்னார். உடனே அவசரமாக கிளம்பி ஓடினேன். அங்கு சென்றால் ஆனந்த அதிர்ச்சி நான் விண்ணப்பம் கொடுத்த முக்கிய பிரமுகர் வந்து இருந்தார். அவர் மேடையில் பேசும் பொழுது மாணவர்களுக்கு  கல்விக் கடனை எளிதுப்படுத்த வேண்டும் என்று சொல்லிவிட்டு என்னைப் பற்றியும் என் விண்ணப்பம் பற்றியும் குறிப்பட்டார். உடனே எனக்கு அங்கு ஒரு அந்தஸ்து வந்து விட்டது. என்னை மேடைக்கு அழைக்க லோன் சாங்ஷன் ஆவணம் கைக்கு வந்து சேர்ந்தது.

உடனே எல்லா காமிராக்களும் மின்ன ஒரே நாளில் உள்ளூர் வி. ஐ.பி ஆகிவிட்டேன். உடனே தமிழ் தினசரி, டி,வி என்று எல்லா இடத்திலும் காட்டினார்கள். வீட்டில் செய்தி பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு அதில் என் முகத்தை பார்த்து ஆனந்த அதிர்ச்சி. ஊருக்கு வந்து சேர்ந்தேன் மகிழ்ச்சியோடு. மறுநாள் போனில் நண்பர்கள் ஹிந்து நாளிதழில் உன்னைப் பற்றி ஆர்டிகள் வந்து இருக்கிறது என்று சொல்ல ..ஆங்கில ஹிந்து எங்க ஊர்ப் பக்கம் கூட எட்டிப் பார்க்காது. அதை வாங்க பஸ் பிடித்து ஓடினால் இரண்டாம் பக்கம் நான் கடன் வாங்கிய செய்தியும் என் போராட்டங்களை பற்றியும் விரிவாக எழுதி இருந்தனர்.

சரி இனிமே இவற்றைக் காட்டி அமெரிக்கா செல்ல ஏற்பாடு செய்ய வேண்டியதுதான் என்று விசாக்கு விண்ணப்பித்தேன். ஒரு மாணவன் விவசாய குடும்பம் மட்டும் பின்னணி என்றால் இத்தனை போராட்டங்களை சந்திக்க வேண்டி இருக்கும் என்ற நிஜத்தை அங்கும் அறிந்துக் கொண்டேன். முதல் முறை சென்ற்ப்போழுது எதற்கு விசாவை எனக்கு நிராகரிக்கிறார்கள் என்று புரியாமலே வந்தேன். திரும்ப எல்லாம் சரிப் பார்த்து விசா விண்ணப்பித்தேன்..இரண்டாம் முறை மட்டுமல்ல மூன்றாம் முறையும் விசா நிராகரிக்கப்பட்டது.  அமெரிக்கா செல்ல ஆவணங்கள், ஆங்கிலம், வங்கி கணக்கு, நம் பின்புலம் என்று நிறைய விஷயங்கள் இருக்கின்றன. எனக்கு அதிக விவரம் தெரியாமல் என்ன செய்ய வேண்டும் என்ற உதவி இல்லாத  காரணத்தால் நிராகரிக்கப்பட்டேன். ஆனால் அமெரிக்க விசா யாருக்கு கிடைக்கும், கிடைக்காது என்று கணிப்பதும் கஷ்டம். அது முழுக்க எம்பசி விருப்பம் சார்ந்தது. குறிப்பிட்ட விதிகள் எதுவுமில்லை. ஆனால் அங்கு கல்விக்குப் போனால் கற்றுவிட்டு வருகிறார்களா இல்லை அங்கேயே செட்டில் ஆவார்களா என்பதை உன்னிப்பாக கவனிப்பார்கள்.

இதற்கு நடுவில் வருடங்கள் உருண்டோடி விட்டன. என் கூட படித்த மாணவர்கள் அனைவரும் நல்ல நிலைமைக்கு வந்துக் கொண்டு இருந்தனர். ஏற்கனவே என் குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரி நான். நான் வீட்டில் இருப்பது அதிகக் கடினமாக் மாறிக் கொண்டு இருந்தக் காலம். ஒரு மாணவன் வீட்டில் வருடக் கணக்கில் சும்மா இருப்பதைப் போல கொடுமையான் காலக் கட்டம் கிடையாது. தெரிந்தவர்கள், அறிந்தவர்கள், வருபவர், போகிறவர் எல்லாம் அறிவுரை என்றப்  பெயரில் அள்ளி வழங்கிக் கொண்டு இருந்தனர். நாம் செய்யும் முயற்சிகள் பயனில்லாமல் போய் கொண்டு இருப்பதாக அனைவருக்கும் எண்ணம் வந்துவிட்டது. ஒரு நேரத்தில் அனைவரும் ஏன் நீ வெளிநாட்டில் படிக்க தீவிரமாக இருக்கிறாய்? உள்ளூரில் வாய்ப்புகளா இல்லை..உன் கூட படித்த பசங்க வேலைக்கு போய்க்கூட வெளிநாடு செல்ல ஆரம்பித்து இருக்கிறார்கள் என்று விதவித அறிவுரைகள்..

இங்கு கார்த்திக் பேச்சை நிறுத்திவிட்டு..நானும் கேட்டேன்..ஏன் உங்களுக்கு வெளிநாட்டுக் கல்வி மேல் இப்படி ஆர்வம் என்று? அவர்கள் சொல்லுவதும் நிஜம்தானே?

ஆமாம் அக்கா.. ஆனால் என் அம்மா எங்களை சுற்றி உள்ள சொந்தங்களில் உள்ள மெத்த படித்தவர்களை எடுத்துக் காட்டி இதுப்போல படிக்கணும் என்று சொல்வார்கள். நான் நன்றாக மேலே வரணும் என்பதில் தீராத விருப்பம் கொண்டு இருந்தார்கள். அந்தக் காலத்தில் பள்ளியில் வேலைப் பார்த்தார்கள். மாதம் இரண்டாயிரம் வரும் அதில் ஆயிரத்தி ஐநூறு ரூபாய் எனக்காக செலவு செய்வார்கள். அவர்களின் ஒரே ஆசை நான் மேற்கல்வி வெளிநாட்டில் சென்று படிக்க வேண்டும் என்பதே..

அது அவர்களின் கடைசி ஆசையாகவும் அமைந்து விட்டது என் துரதிர்ஷ்டம். அம்மாவின் ஆசை மட்டுமில்லாமல் எனக்குள்ளே அந்த எண்ணம் வேர் விட்டு இருந்தது எனவே ஆரம்பித்த வேலையில் பின் வாங்க கூடாது என்ற தீர்மானம்..

மூன்று முறை சென்றும் விசா கேன்சலாகி விட்டது..அடுத்து என் நிலைமை பற்றி சொல்கிறேன்..

நாளையும் மாணவர் கார்த்திக் பயணத்தில் நாமும்..

அவரின் தாய் விருப்பம் நிறைவேறியதா? எப்படி?


கல்விச் சிறகை விரிக்கலாம் -  69

இங்கிலாந்தில் படித்துவிட்டு  தற்பொழுது அங்கேயே வேலைப்பார்க்கும் கார்த்திக் பாரதிமணியின் பேட்டி தொடர்ச்சி.

மூன்று வருடங்கள் வீட்டில் இருப்பதை போன்று கடினமான காலம் எதுவும் இல்லை. அதுவும் சுற்றி  இருப்பவர்கள் நமக்கு நல்லது என்று நினைத்துக்கொண்டு சொல்லும் அறிவுரைகள் மிகக் கொடுமையானதாக இருக்கும்.

உன்னோட படித்தவர்கள் டி.சி.எஸ், இன்ஃபோசிஸ் என்று போய் அங்கிருந்துக் கூட வெளிநாடு செல்கிறார்கள்..எதற்கு தேவையில்லாமல் வெளிநாட்டுக் கல்வி கனவு என்றும் கேள்வி வந்தது. என் தந்தை என்னுடைய  விருப்பம் முக்கியம் என நினைப்பவர், அவரும் ஒரு கட்டத்தில் நிறைவேற  முடியாத கனவை காண்கிறாய் என்று நினைக்கிறேன் என்றார்.

அதற்கு அவரிடம் நான், அப்பா வாழ்வது ஒரு முறை, என் வாழ்வின் கனவை நான் தீர்மானித்து விட்டேன். எனவே அதன்படி செயல்படுகிறேன்" என்று சொன்னேன். வீட்டில் பெரும்பாலும் எனக்கு பிரச்னை இல்லை.
ஆனால் பல உறவுகளுக்கும், ஊருக்கும் பதில் சொல்வது தான்  சிரமமாக  இருந்தது. அந்த சமயத்தில் புத்திசாலித்தனமாக ஜோசியர் எனக்கு வெளிநாட்டில்தான் படிப்பு என்று சொல்லி இருக்கிறார். அங்குதான் முயற்சி செய்யணும் என்று கண்ணுக்கு தெரியாத ஜோசியத்தை  துணைக்கு வைத்துக் கொள்ள அந்த பதில் பலருக்கு சரியாக இருந்தது. இப்படி பல வழிகளில் மூன்று வருடம் சமாளித்தேன்.

அமெரிக்கா விசாவிற்கு செல்லும் பொழுது எனக்கு வழிகாட்ட யாரும் இல்லை. முக்கியமாக நிதி நிலைமை கையிருப்புக்கு வங்கியில் கொடுத்த ஒரு கடிதம் போதும் என்று நினைத்து சென்றேன். நிராகரிக்கும் வரை என்ன தவறு என்று தெரியவில்லை. மிகத்தெளிவாக எல்லா படிவங்களும், ஆவணங்களும் இருப்பது அவசியம்.

சரி அமெரிக்கா இனி இல்லை..அடுத்த தேர்வு இங்கிலாந்து. நான் முன்பே இங்கிலாந்தை தேர்ந்து எடுத்து இருந்தால் மூன்று வருடம் வீணாகி இருக்காது. ஏன் என்றால் இங்கு எனக்கு எட்டு லட்சம் கையிருப்பு காட்டினால் போதும் என்று இருந்தது. எளிதாக வங்கியில் ஏழு லட்சமும், வீட்டில் ஒரு லட்சமும் எப்படியாவது சமாளித்து விடலாம். எனவே மாணவர்கள் நிதி நிலைமையை பார்த்துதான் நாட்டையும் தேர்ந்து எடுக்க வேண்டும்.

ஒரு கிராமத்து மாணவனின் சுய முயற்சியில் இதுதான் முடிந்தது. சரியாக வழி காட்ட யாராவது இருந்திருந்தால் இத்தனை அலைச்சல்கள் மிச்சமாயிருக்கும். ஆனால் ஒவ்வொரு போராட்டமும் வாழ்கையில் ஏதோ ஒன்றை கற்றுக் கொடுப்பதை மறுப்பதற்கு இல்லை. தேடல் தீவிரம் இருந்தால் எந்த அடிப்படை இல்லாமலும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை இது கற்றுக்  கொடுத்தது.

இங்கிலாந்து நாட்டுக்கு IELTS மதிப்பெண்கள் தேவைப்பட்டது. ஏற்கனவே TOEFL எழுதிய அனுபவம் இருந்ததால் இதற்கு பயிற்சி தேவைப்படவில்லை. நல்ல மதிப்பெண்கள் எடுக்க முடிந்தது. உடனே இங்கிலாந்து நாட்டு கல்லூரிகளை தேடி விண்ணப்பித்தேன். திரும்ப ஒரு தவறு செய்துவிட்டேன். ஒரு ஆவணம் வைக்காமல் விட்டுவிட்டேன். எனவே அங்கும் ரிஜக்ட் ஆகிவிட்டது.

அதற்குள் ஒன்றரை லட்சம் செலவாகி விட்டது. அப்பாவுக்கு பெரிதாக வருமானம் இல்லாத நேரத்தில் இது மிகப்பெரிய செலவு. ஆனால் அடுத்தமுறை விசா கிடைத்து இங்கிலாந்து வந்துவிட்டேன்.

இங்கு வந்தவுடன் பெரிய அதிர்ச்சிகள் காத்து இருந்தது. செலவுகள் விண்ணை முட்டும் அளவுக்கு தெரிந்தது. ஒரு மாணவனுக்கு பொருந்த முடியாத உயரத்தில் வாடைகை, சாப்பாட்டு செலவுகள். கஷ்டப்பட்டு குறைந்த வாடகைக்குக் இடம் பிடித்து வாழ ஆரம்பித்துவிட்டேன்/

ஆனால் மூன்று வருட போராட்டத்துக்கு பலன் கிடைக்காமல் போகவில்லை. எப்போதும்  ஒருவருக்கு சோதனையாகவே அமையாது என்பதுப் போல இங்கு வந்தவுடன் பல நல்ல விஷயங்கள் நடந்தது. இங்கு முக்கியமாக கல்வியைப் பற்றி சொல்ல வேண்டும். மனப்பாட முறை சுத்தமாக கிடையாது. ஒரு விஷயத்தை பற்றி சொன்னால் நாமே சுயமாக அறிந்துக் கொள்ள வேண்டும். இங்கு வந்தபிறகு ஒரு நாளைக்கு பத்து மணி நேரம் நூலகத்தில்  செலவழிப்பேன். மிகக் கடினமான பாடத்திட்டமாக இருந்தாலும் கடின உழைப்பினால் என்னால் நல்ல மதிப்பெண்கள்  வாங்க முடிந்தது.

இங்கு ஒரு விஷயம் கற்க வேண்டும் என்றால் அதைப் பற்றி பலரிடம் கேட்க வேண்டும். புத்தகங்கள் படிக்க வேண்டும், செயல்முறை நடவடிக்கைளை கவனிக்க வேண்டும். இதுபோன்று பலவிஷயங்களை உள்வாங்கிக் கொண்டு நம் முடிவைப் பற்றி சொல்ல வேண்டும். ஒவ்வொரு விஷயமும் சுய சிந்தனை அடிப்படையில் இருக்க வேண்டுமே தவிர புத்தகத்தில் இருப்பதை என்றுமே எழுத முடியாது.

எடுத்துக்காட்டாக இந்த கட்டுரையை எழுத பலரிடம் நீங்கள் கருத்துகள் வாங்கினாலும், அதை சொல்பவர்களை விட நீங்கள் எப்படி உள்வாங்கிக்  கொண்டீர்கள்  என்பது முக்கியம். அதை சுவாரசியமாக வாசிப்பவர்களுக்கு  எப்படி எடுத்து சொல்வது என்பதும் முக்கியம். எல்லோரும்  சொன்னதையும் சொல்லிவிட்டு உங்கள் கருத்து என்ன என்பதையும் வெளிப்படுத்த தவறுவது இல்லை...இல்லையா..இதுபோன்றுதான் ஒவ்வொரு வகுப்பிலும் நாங்கள் படிக்க வேண்டும். சிறு விஷயத்துக்கு கூட உழைப்பும், பல கோணங்களில் பார்ப்பதும்  அவசியாமாகும். அந்த ஒரு வருடம் கல்வி பற்றி நான் வைத்து இருந்த அத்தனை பார்வையும் உடைத்து போட்டது. ஆனால் மிக மகிழ்ச்சியாக , மன நிறைவுடன் படித்தேன்.

ஒரு வருட படிப்பில் இரண்டு செமெஸ்டர் இருக்கும். தேர்வும், பேப்பர் வொர்க்கும் இருக்கும். தேர்வுக்கு முப்பது மதிப்பெண்கள் இருக்கும். பேப்பர் வேலை எழுபது மதிப்பெண்களுக்கு இருக்கும். இரண்டையும் சரியாக செய்தால்தான் வெளியே வர முடியும்.. நான் சேர்ந்தது எம். எஸ். மாஸ்டர் இன் பிசினெஸ் அட்மினிஸ்ட்ரேஷன் சிஸ்டம். இது பொறியியல், மேலாண்மை என்ற இரு துறைகளையும் சேர்ந்தது. MS (BIS) இதில் சேர்ந்தால் கணினி, மேலாண்மை ஆகிய இரு துறைக்கும் செல்ல முடியும். எனவே இதைத்  தேர்ந்து எடுத்தேன்.
கல்லூரியில் இருக்கும் வரை அந்த ஊரில் காஃபி ஷாப்பில் வேலை பார்த்தேன். வாரத்துக்கு இருபது மணி நேரம் வேலை. கே.எஃப்.சி, மெக் டொனல்ட்ஸ் போன்றவற்றில் வேலைப் பார்த்தால் கடினமாக இருக்கும். ஆனால் பணம் ஓரளவுக்கு கிடைக்கும். இதே சமயத்தில் இந்திய உணவகங்களில் வேலைப் பார்த்தால் மிகக் கடுமையாக உழைக்க வேண்டும் . பணம் குறைவு, காஃபி ஷாப்பில் வேலை செய்ய பாரிஸ்டா பயிற்சி கொடுப்பார்கள். பிறகுதான் வேலை. ஆனால் மெஷின் இருக்கும் . சரியாக கலந்துக் கொடுத்தால் போதும். வேலை மிகக் கடுமையாக இல்லை. ஆனால் ஓரளவுக்கு நல்ல சம்பளம் கிடைத்தது. மணிக்கு ஏழரை பவுண்டுகள் கிடைத்தது. கிட்டத்தட்ட மாதத்துக்கு ஐநூறு பவுண்டுகள் மேலே கிடைத்ததுஎனவே பணம் கொஞ்சம் சேமிக்கவும் முடிந்தது.

நான் படித்து முடிக்கும் வேளையில் விசா மாற்றங்கள் வந்து இரண்டு வருட கூடுதல் விசா அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. அப்போது  ஒரு பயம் வந்துவிட்டது. திரும்ப ஊருக்கு வர வேண்டி இருக்கோமோ என்று யோசனை வந்துவிட்டது. ஆனால் நான் முன்னாடியே வந்து இருந்ததால் விசா கிடைத்து விட்டது. படித்து முடித்தவுடன் இந்தியக் கம்பெனியில் வேலை கிடைத்தது.

பொதுவாக இங்கிலாந்திற்கு செல்வதற்கு விவரங்கள் வேறு எங்கும் தேடத் தேவையில்லை. பிரிட்டிஷ் கவுன்சில் சென்றுக் கேட்டால் எல்லா விவரங்களும் பொறுமையாக கூறுவார்கள். அவர்கள் சொல்லும் இணையத் தளங்களை பார்த்து விட்டு அதில் இருந்து கல்லூரிகளை தேர்ந்து எடுத்து விண்ணப்பம் அனுப்பலாம்.

கல்லூரி A ரேட்டட் என்பதை மட்டுமே கவனித்தால் போதுமானது. அதில் மிகக் கவனமாக் இருக்க வேண்டும்.  "யார் எது சொன்னாலும் அதை முழுக்க நம்புவதோ, நம்பாமல் இருப்பதோ கூடாது.. சரிபார்க்க வேண்டும்" இதை தாரக மந்திரமாக  அனைத்து மாணவர்களும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அனைத்து தகவல்களையும். தகவல்களை  குறித்து வைத்துக் கொண்டு பிரிட்டிஷ் கவுன்சில் சென்றால் அவர்கள் அந்தக் கல்லூரியின் தரத்தை பற்றி சொல்லிவிடுவார்கள்மாணவர்கள் எல்லாவற்றையும் ஒரு முறைக்கு இருமுறை சரிப் பார்த்துக்கொள்ள வேண்டும். ஜனவரி, செப்டம்பர் இரு முறை மாணவர் சேர்க்கை இருக்கும். இதற்கு மூன்று மாதம் முன்பு ஆரம்பிக்க வேண்டும். பிரிட்டிஷ் கவுன்சிலில் செமினார்கள் நடக்கும். அதைத் தவிர IELTS புத்தகங்கள் கிடைக்கும்சில சமயம் இலவச பயிற்சியும் நடக்கும்.

அமெரிக்காவை பொருத்தவரை GRE தேர்வை நேரடியாக எழுதாமல் மாக் டெஸ்ட் எனப்படும் பயிற்சி தேர்வை எழுதிவிட்டு அதில் ஐம்பது மதிப்பெண்கள் முன், பின் வைத்துக்கொண்டு தேட வேண்டும். கன்சல்டன்சியில் இந்த மதிப்பெண்களுக்கு இந்த இடங்கள் கிடைக்கும் என்று லிஸ்ட் கொடுப்பார்கள், அதற்கு பெரும்பாலும் பணம் இருக்காது. பிறகு நாம் தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம்அதைத் தவிர என் சகோதரர் சிகாகோவில் இருந்ததால் அவரும் உதவி செய்தார்.

அமெரிக்கா போக இருபது லட்சம் கணக்கு போட்டோம். ஆனால் இங்கிலாந்துக்கு பனிரண்டு லட்சம் மட்டுமே செலவாகியது . முழுக்க    முழுக்க வங்கி மட்டுமே கடனாக கொடுத்தது. அதுவும் முழுவதுமாகத் தர  மாட்டார்கள். தவணை முறையில் கொடுப்பார்கள். ஆனால் நான் சிக்கனமாக இருந்ததால் கடன் தொகை முழுக்க பெறவில்லை. மாதம் 350 பவுண்டுகளில் செலவைக் கட்டுபடுத்திக் கொண்டேன். தோராயமாக வருடம் பத்து முதல் பனிரண்டு லட்சம் பணம் இருந்தால் இங்கிலாந்தில் படித்து விட்டு செல்ல முடியும்.

அமெரிக்காவில் இரண்டு வருடம் எம்.எஸ்..இங்கு ஒரு வருடம். ஒரு வருடத்தில் நிறைய படிக்க வேண்டி இருக்கிறது. இங்கு வேலை கிடைக்காவிட்டால் ஊருக்கு திரும்பவது நல்லது. சரியான வேலை இல்லாமல் அங்கு செட்டில் ஆக முயற்சிப்பது மிகத் தவறாக முடியும்.

வேலைக்கு முயற்சி செய்துக் கொண்டே இருக்க வேண்டும். அதிலும் கவனம் தேவை. சில கம்பெனிகளில் வேலை செய்தால் மட்டுமே விசா கிடைக்கும். எனவே அந்தக் கம்பெனிகளுக்கு  விண்ணப்பம் அனுப்புவது மிக முக்கியம் ஆகும். வேலை வாய்ப்புத்தரும் ஆலோசனை மையங்கள்  இருக்கிறது.அவர்களும் உதவி செய்வார்கள் வேலை கிடைத்தவுடன் விசா வாங்கிக் கொள்ளலாம். இங்கு வளர்த்துக் கொள்ள வேண்டிய முக்கிய விஷயம் தொடர்பாற்றல் வல்லமை (Communication Skills) மட்டுமே  . இங்கு அனுபவம் இருந்தால் வேலை எளிதில் கிடைக்கும்.

இங்கு இன்னொரு விஷயம் வாரம் இருநாள்  விடுமுறை. ஐந்து மணிக்கு மேல் வேலை பார்க்க மாட்டார்கள். கிராமத்தில் இருக்கும் மாணவர்களுக்கு கடைசியாக சொல்வது.. ஒன்றே ஒன்றுதான்
பல்கலைக்கழகங்களை கவனமாக தேர்ந்து எடுக்க வேண்டும் .
அடுத்து கடனுக்கு RBI விதி முறைகளை பிரிண்ட் எடுத்துக் கொண்டு போய் வங்கியில் கடன் கேக்கலாம்.மேலாளர் முடிவே கடைசியாக இருக்கும். இருப்பினும் கடன் கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.
படிக்க வந்த இடத்தில் வேலைக்கு ஆசைப்பட்டுக் கொண்டு படிப்பை கோட்டை விட்டுவிடக் கூடாது. இன்னும், தமிழக கிராமத்து மாணவர்கள் கல்வியில் மேலே வர வேண்டும் என்பதே என் ஆவல்.

கீழ்க்கண்ட இணையத்தளங்கள் மேலும் உங்களுக்கு உதவக்கூடும்.
https://www.gov.uk/government/organisations/uk-visas-and-immigration  link is for any new rules in visa

Below link is list of jobs and their equivalent salary a company should provide to get a tier 2 sponsor visa without any issue
There is also a visa category called Tier 2 ICT ,which will allow some one from abroad to get into uk, remember this is the visa by citibank,infosys gives to their employer.


So if anyone says i will get you a visa from india to uk through their company they have to check whether that company can give tier 2 Ict visa or a business visa
Guardian news papers survey and ranks of university always very authentic.Link below for it


2 comments:

ஆறகழூர் பொன்.வெங்கடேசன் said...

அருமையான மிக பயனுள்ள கட்டுரை

Avargal Unmaigal said...

இந்த பதிவை படிக்கும் போது அருமையான கட்டுரை மனதை நெகிழ வைத்தது என்று எளிதாக சொல்லிவிட்டு போய்விடலாம் ஆனால் அந்த மாணவன் இடத்தில் பார்த்தால்தான் அதன் வலி புரியும் ஆனால் விடாது முயற்சி செய்த மாணவனை பார்க்கும் பெருமை மனதில் தோன்றுகிறது சினிமாக்காரர்கள்ன் பின்னால் ஒடாமல் தான் நினைத்தை சாதிக்க நினைத்து ஒடிய இந்த மாணவனின் செயல் பாராட்டுக்குரியது