வெல்லுமா நேசம்?
நாங்கள் சிறுமியாக இருந்த காலத்தில் நடிகர்கள் சிகரெட் பிடிப்பார்கள், கல்லூரி மாணவர்கள் வளையம் விடுவது கூட பேஷனாக கருதப்பட்ட காலம். வீட்டில் சிலருக்கு பழக்கம் இருந்தது.
இவர்தான் இந்த பதிவுக்கு ஹீரோ..அவருக்கு விளையாட்டாக கல்லூரியில் ஆரம்பித்த பழக்கம், கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கொள்ள தொடங்கி இருக்கு. வியாபாரத்தில் மிகபெரிய வெற்றிகளை சந்தித்தார். இரவு,பகலாக அயராத உழைப்பு, அனைவருக்கும் உதவும் குணம், ஊரில் நல்ல பெயர் எடுத்து பெரிய மனிதர்களில் ஒருவர் என்ற தகுதியும், மரியாதையும்..அதுவும் சிறிய வயதில்..
மூன்று குழந்தைகள், அருமையான மனைவி, மிகப்பெரிய குடும்பம், நல்ல வசதி என்று எல்லாவிதத்திலும் வளர்ந்து கொண்டு வந்தவருக்கு ஒரே ஒரு பிரச்சனை..ஆம்..சிகரட்..குழந்தைகளுக்கு தெரிந்தும், தெரியாமலும் சிகரெட் பழக்கம் தொடர்ந்தது .மிக அதிகப்படியான வேலை..டென்ஷன்..ஒரே தீர்வு சிகரெட்...முதலில் மெதுவாக பழகும்,..கொஞ்சம், கொஞ்சமாக சுகம் தரும்..டென்ஷன் குறைவது போல இருக்கும்..ஒரு கட்டத்தில் அது இல்லாவிட்டால் டென்ஷன் வரும்..அதுவே டென்ஷனாகி போகும்.
ஒரு வேலை இல்லாவிட்டால் வாழ்வு சூன்யமாகி போகும்..
எத்தனை பெரிய மனிதர்களையும் இத்தனூண்டு சிகரெட் வீழ்த்தி இருக்கிறது. ஹீரோவிற்கு அப்ப 39 வயது..நெஞ்சு அடைத்துக்கொண்டு வருவது போல இருந்தது..குடும்ப மருத்துவர் உணவினால் ஏற்பட்ட வாயு தொல்லை என்று சொல்லிவிட்டு சென்றார்..மூச்சு விட முடியாமல் போகவே உடனே காரைக்கால் பெரிய ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கொண்டு போங்க என்று சொன்னவுடன் உறவினவர்களுக்கு விபரீதம் உறைத்தது.
பெரியப்பெண் ஹாஸ்டலில், அடுத்து இரு சிறு குழந்தைகள்..மனைவியும் கதறி அழுதப்படி ஐ.சி.யூ வாசலில் கை பிசைந்தபடியான துக்க காத்திருப்பு. மூன்று நாள் செல்ல வேண்டும் என்று டாக்டர்கள் கெடு..ஆஸ்பத்திரி முழுக்க உறவினர்கள், ஊர்காரர்களின் கூட்டம்..கட்டுப்படுத்த முடியாத பேரன்பு அது..டாக்டர்கள் பார்வையாளர்கள் கூட்டம் செல்லாவிட்டால் மருத்துவம் பார்க்க முடியாது என்று கூறியவுடன்,.கார், வண்டி, பேருந்து என்று எப்படி, எப்படியோ வந்தவர்களை முகத்தை கூட காட்டாமல் நெருங்கிய உறவினர்கள் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துக்கொண்டு இருந்தனர்.
கொஞ்சம் மனநிலை சரியில்லாத ஒருவர் எப்படியோ தப்பி ஐ.சி.யூ வாசலுக்கு ஒரு கிலோ திராட்சை பழத்துடன் வந்து ..ஐயா நல்லா எழுந்து பிழைக்க வேண்டும் என்று கூறியபோது கண்ணீர் விடாதவர்கள் பாவம்.. மருத்துவமனை ஊழியர்கள் உள்பட..அத்தனை அன்புக்கு பாத்திரமானவர் நினைவிழந்து உள்ளே..அப்பொழுது எல்லாம் இதய பாதிப்புக்கு இத்தனை நவீன சிகிச்சைகள் இல்லை..இருந்தும் சிறு டவுன்களில் எட்டி பார்க்கவில்லை..உடம்பில் சொருகி இருக்கும் அத்தனை குழாய்களையும் பிய்த்து விட்டு ஓடுவதை பார்க்க அத்தனை வேதனையாக இருக்கும்..
அவர் பேச்சுக்கு யாரும் மறுபேச்சு பேசியதில்லை..ஆனால் கட்டுப்பட்டு இருக்கவேண்டுமே மருத்துவமனையில்..ஒரு மாதத்துக்கு மேலே மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டு இருந்ததாக நினைவு. குழந்தைகள் தனி, தனியே...வீட்டு பெரிய பாட்டி ஏதோ ஒரு பாடலை பாடி குழந்தைகளை கட்டிப்பிடித்து அழுதது நினைவு இருக்கு..
முப்பத்தியொன்பது வயதில் இத்தனை பெரிய பிரச்சனை வர ஒரே காரணம் சிகரெட்..அன்னிக்கு தப்பித்தது மிகப்பெரிய விஷயம். அன்றில் இருந்து சிகரெட் பழக்கத்தை விட்டார்..நடுவில் அது அவரை விடவில்லை என்று பிறகு கேள்விப்பட்டோம்..
பத்து வருடம் பார்த்து, பார்த்து கழிந்தது..அவ்வபொழுது டெஸ்ட் அது, இது என்று.. மகள்களுக்கு படித்த உடனே திருமணம் செய்து முடித்தார்..மரண பயம் இருந்து இருக்குமோ..கடமைகளில் அவசரம்..
ஹீரோ வீட்டில் மிகப்பெரிய விசேஷம். பத்திரிக்கை அடித்து அனைவரும் வருகை..உறவினர்களுடன் குதூகல பேச்சு..காலை நான்கு மணி. மனைவியின் அழகிய கோலம் வாசலில்..மனைவியிடம் பாராட்டை தெரிவித்துவிட்டு உள்ளே வந்தார்..இருவர் படம் ரிலீசான நாள். அத்தனை பணத்தையும் மணிரத்னம் எப்படி எடுக்க முடியும் என்று பேசிக்கொண்டு காபியை ஏந்தியவர் பனியன் முழுது காபி சிந்தியது..அப்படியே சாய்ந்தார்..இந்த முறை சிகரெட் ஜெயித்துவிட்டது..அதுவும் சின்ன வயதில் சில காலங்கள்.. பிடித்த சிகரெட்..இந்த முறை வயது 49 மட்டுமே..பட்டுப்புடவையில் இருந்த உறவினர்கள் அவசரமாக உடை மாற்றினர்.. மருமகன் இறந்ததை தாங்க முடியாத மாமனார் மயக்கமடைந்தார்..90 வயது பாட்டிக்கூட திடமாக வளைய வந்த நேரத்தில்..சிறுவயதில் முக்கியமானவரை குடும்பம் இழந்தது..
மனம் கனக்கிறது..இறந்தது என் அப்பா..என்னுடைய ஹீரோ..
ஒரு மகளாக எத்தனை சாபங்கள் கொடுத்து இருக்கிறேன் அந்த சிகரெட்டுக்கு..அப்பொழுது மனதில் பயங்கர வேகம்..அப்பாவை அழித்த அத்தனை சிகரெட் முதலாளிகளையும் பழிவாங்க வேண்டும் என்ற வெறி கூட எழுந்தது. சிகரெட்டை ஒழிக்க பாடுபட வேண்டும் என்று சபதம் எடுத்ததாக நினைவு..மசான வைராக்கியம். .43 வயதில் இருந்து வாழ்கையை அம்மா தனியாக எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம்.
சாக்குபோக்குகள் ஆயிரம் இருக்கலாம்..ஆயிரம் முகேஷ்களை பறிகொடுத்து இருக்கிறோம்..அண்ணன், தம்பி, மகன், மருமகன், தந்தை, கணவர் என்று சிகரெட் க்கு பலிகொடுத்துக்கொண்டே இருக்கிறோம்..ஆனால் அது ஜெயித்துக்கொண்டே இருக்கிறது.. அது நம்மை அடக்கி ஆள்வதா? என்ற கோபத்தில் விட்டொழிக்க வேண்டும்..ஜஸ்ட் தூக்கி ஏறிய வேண்டும்..இதுவே கடைசி என்று..அன்பானவர்களின் முகத்தை நெஞ்சில் தேக்கினால் எதுவும் எளிது..
5 comments:
அண்ணன், தம்பி, மகன், மருமகன், தந்தை, கணவர் என்று சிகரெட் க்கு பலிகொடுத்துக்கொண்டே இருக்கிறோம்..ஆனால் அது ஜெயித்துக்கொண்டே இருக்கிறது.. அது நம்மை அடக்கி ஆள்வதா? என்ற கோபத்தில் விட்டொழிக்க வேண்டும்..ஜஸ்ட் தூக்கி ஏறிய வேண்டும்..இதுவே கடைசி என்று..அன்பானவர்களின் முகத்தை நெஞ்சில் தேக்கினால் எதுவும் எளிது.. = அருமையான பதிவு. நானும், எனது வாழ்வில் நிறைய நெருங்கிய சொந்தங்களில் அனுபவிக்கிறேன். எனது பக்கத்தில் பகிர்கிறேன். அருமை, வாழ்த்துகள் அருமை மகள் Kirthika Tharan.
என்ன காரணத்திற்கென்றே தெரியாமல்எல்லோரையும் போலத்தான் ஒரு ஆண்மையின் சின்னமாக அந்த சிகரெட்டினை தொட்டேன். அழகுமகளை முத்தமிடக்கூட முடியாத ஒரு நிலையில் அதை விட்டொழிக்க எண்ணியிருந்தேன். அப்போது பானா காத்தாடி எனும் படத்தில் தன் மகனை நடிக்கவைத்து தானும் கெஸ்ட் ரோல் செய்திருந்தார் முரளி, மகளுக்கு திருமணத்திற்கு நாள்கூட நிச்சயித்து இருந்தார்.ஆனால் மகளின் திருமணத்தினை பார்க்க முடியாத துரதிர்ஷ்டசாலி ஆனார் சங்கிலித்தொடராக புகைப்பிடிக்கும் முரளி. அவர் இறந்த அன்று அவரது மகள் நிலமை என்னை பெரிதும் பாதிக்கவே அன்றே விட்டேன் புகையை. மகளை கட்டியணைப்பதைக்காட்டிலும் அவளது விரல்களை நன் விரல்களோடு கோர்த்துக்கொள்வதைக்காட்டிலும் அந்த விரலிடுக்குக்கு வேறு பெருமை இருப்பதாய் நம்பவில்லை. ஒரு பொல்யூஷன் ஃப்ரீ முத்தம் அவளிடமிருந்து அனுதினமும் பரிசாக கிடைக்கிறது.
வணக்கம்
வெண்சுருட்டின் அட்டைப் பெட்டியில்
மனிதன் வியக்கும் படத்தை பார்த்தும் கூட
புகைக்கிற மனிதன் மனிதனா.அதாவது
கைக்கு அடக்கமான சவப்பெட்டி
அது அவன் கையில்
அதைஎரிக்க அவன் கையில் தீப்பெட்டி.
பத்தவைக்கும் போது அவர்கள் தட்டும் சாம்பல்
அவரிகளின் உடல் எரித்த சாம்பளை
அவனே பாரக்கிறான் நேரில்
மிக அருமையாக எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நல்ல பதிவு கிரித்திகா.....விட தைரியம் வேண்டும்..... டெம்ப்ட் ஆனாலும் அன்பானவர்களை நம்மேல் அன்பு வைத்திருப்பவர்களுக்காகவாவது விட வேண்டும்..
உலகம் பூராகவும் இதை ஒழிக்க போராடுகிறார்கள். இன்றைய பிபிசி யில், இலங்கையில் புகைப்பிடிப்போர் குறைந்த போதும், வடக்கு, கிழக்கில் அதிகரித்துள்ளதாம்.
ஒரு காலத்தில் மிகக் கட்டுப்பாட்டுடன் வாழ்ந்தவர்கள். இன்று மாறிவிட்டார்கள்.
இன்று பாடசாலை செல்லும் சிறுவர்களே இதற்கு அடிமையாவதே வேதனை.
அவர்களாக உணரவேண்டும்.
உங்கள் வேதனையை உணரமுடிகிறது. பலரை இழந்ததால்...
Post a Comment