Tuesday, May 20, 2014

இசையும், நானும்.

ஏதோ எழுதினோம் என்று எழுதிவிட்டு போக முடியுமா இந்த சந்திப்பை..

காலையில் இருந்தே பரபரப்பு, தரன் அசதியில் தூங்கிக்கொண்டு இருந்தார், எழுப்பி உடனே கிளம்புங்க போகனும்னு சொன்னேன்..மனதில் சொல்ல முடியாத பரபரப்பு..காரில் போனோம், நண்பர் கூட்டிக்கொண்டு போனோர், காத்திருந்தோம், நண்பர் பழனி பாரதி அவர்கள் அறைக்கு கூட்டிக்கொண்டு சென்றார் என்று ஒரு பதிவாக அன்றே போட்டுவிட்டு சென்று இருக்கலாம். அப்படியே போட்டோவையும் போட்டுவிட்டு இரு நாளில் மறந்தும் இருக்கலாம்.

ஆனால் இசை என்பது அப்படி இல்லை..அதுவும் இளையராஜா இசை..நம் காலத்தில் அவரோடு பிறந்து, அவரோடு வளர்ந்துவிட்டோம். ஒரு நாள் கூட அவர் இசை இல்லாமல் கழிந்தது இல்லை. நான் அதிகம் இசையில் மூழ்குபவள் இல்லை..நானே என்னை ப்ராடிகல் ஆசாமியாக கருதிக்கொண்டு இருப்பவள்.

ஆனால் இளையாராஜா அவர்களின் இசையை முகநூல் வந்தப்புறம் அதிகம் கேட்க ஆரம்பித்தேன். எந்த வரிகளுக்கும் இழைந்து  போய் கற்பனையை தூண்டும் இசை. கேட்க, கேட்க அலுக்காத இசை. எந்த இடத்துக்கும் பொருந்தி போகும் இசை.  எரிமலை கிளறி, கொதிக்கும் சாந்து குழைய பொங்க வைக்கும் இசை..

நண்பர் வாங்க பார்க்க ஏற்பாடு செய்கிறேன் என்று அழைத்தவுடன் உடனே கிளம்ப தயார் ஆகிவிட்டேன். எப்பவுமே படைப்பாளிகளை பார்க்கும் ஆர்வம் இருந்தது இல்லை. தூரத்தில் இருந்து பிம்பம் கலையாமல் ரசிக்கவே பிடிக்கும். ஒவ்வொருவருக்கும் உள்ள பிம்பதை மனதில் கலையாமல் பார்த்துக்கொள்ள நினைப்பேன். அருகே நெருங்கினால் பிம்பம் உடைந்து இயல்பான நம்மை போன்று மனிதர்களாக நினைக்க வைக்கும்.அதனாலேயே நெருங்கி போக தயக்கம் உண்டு.

சிறு வயதில் பிடித்த பாட்டு "மயங்கினேன் சொல்ல தயங்கினேன்"..முதல் நாள் மாலை எங்கிருந்தோ ஒரு பாட்டு "பனி விழும் மலர் வனம், உன் பார்வை ஒரு.." என்று காற்றில் தவழ்ந்து வந்தது. இந்த பாட்டுகள் எப்படியோ மனதில் ஒரு முறை வந்துவிட்டால் போதும்.மனம் தானே ரீவைண்ட் செய்து, தேய்ந்த ரிகார்ட் ப்ளேயர் போல திரும்ப திரும்ப ஒலிக்க செய்வதில் வலியது. அதுவும் இளையராஜா அவர்கள் பாட்டின் வரிகளுக்கு ஒரு சிறப்பு உண்டு..பச்சக் என்று நன்றாக ஒட்டிக்கொண்டு ரிகார்டரில் ஓட விடும்.
அன்று முழுக்க பனி விழும் மலர் வனம்..நண்பரோடு காரில் செல்லும் வேளையில் அவரின் பாட்டுகள்..எங்குதான் இல்லை ராச இசை....தாலாட்டுக்கு அவரின் இசை..என் தம்பி மிக சிறிய குழந்தை..ராசாத்தி உன்னை பாட்டு பாடித்தான் தூங்க வைப்போம். என் இரண்டு குழந்தைகளுக்கு கண்ணே கலைமானே பாட்டுதான் தாலாட்டு...அது கிட்டத்தட்ட குடும்ப பாட்டு போல ஆனது.அது பாடாமல் குழந்தைகளை தூங்க வைத்தது இல்லை.

அடுத்து அடுத்து அவரின் பாட்டுகள் பரந்து விரிந்த இடங்கள் கட்டுக்குள் அடங்காதவை..ஊருக்கு வந்தால் கொதிக்கும் வெயில் இடைவேளையில் சுட, சுட பாய்லர் டீ குடித்துக்கொண்டு அவரின் பாட்டை கேக்கும் நேரத்தில் தமிழ்நாட்டின் மண் பாசம் பொங்கும். பக்கத்துல இருக்கும்  கல்யாண மண்டபத்தில் அரைச்ச சந்தனம் பாட்டு மஞ்சள் நீராட்டு விழாவை முன்னிட்டு ஒலிக்கும். கல்யாண வீடு முதல் கருமாதி வரை ஸ்பீக்கர் கட்டிய இடமெல்லாம் ராசாவின் இசை கேட்டு வளர்ந்த தலைமுறை நாம். இரண்டு கரோக் பார்ட்டிகளில்  சமிபத்தில் கலந்துக்கொண்டேன்..ஆன்ம இசையாக ராச இசையையே பெரும்பாலும் தேர்ந்து எடுத்து பாடி, உருகி கொண்டு இருந்தோம்.

அவரை சந்திக்க பிரசாத் ஸ்டுடியோ வரசொன்னார். ரிசப்ஷனில் பேராசிரியர் பர்வீன் சுல்தானா .பார்த்தேன். குட்டியான, அழகான சந்திப்பு. பிறகு உள்ளே அமர வைத்தார்கள். பிரசாத் ஸ்டுடியோ..ஒரு நிமிடம் இசை உடலில் எழும்பி அடங்கியது. மெதுவாக நோட்டம விட்டேன். மனம் யாருடனும் பேச்சில் லயிக்கவில்லை..அந்த காலத்து நாற்காலிகள். எத்தனை பேர் இங்கு நாம் கேக்கும் ஒரு துளி இசைக்கு வேலை செய்து இருப்பார்கள் என்று நினைவு வந்தது. எந்த, எந்த  கவிஞர்கள் பாடல் எழுத் போயிருப்பார்கள் என்றெல்லாம் யோசனை, ஒரு வரலாற்று சின்னத்தை  பார்க்கும் வேளையில் என் கண் முன்னே ராஜா, ராணி, மக்கள், யானை என்று அனைத்தையும்
you tube video ஆக்கி கற்பனையில் ஓட விடுவேன்.. போர்க்களம், சந்தை என்று எந்த வரலாற்று தளத்துக்கும் கதையோடு கற்பனை செய்வேன். எனவே எங்கு போனாலும் அரசாங்க கைடு தேடி அவரோடுதான் கதை கேட்டுக்கொண்டு சொல்வேன்.

பிரசாத் ஸ்டுடியோவும் ஒரு இசை வரலாற்று மற்றும் நிகழ்வு சாட்சியாகதான் தோன்றியது.  இசை மேதைகள், பாடகர்கள், இசை அமைப்பாளர்கள், இயக்குனர்கள், கவிஞர்கள், நடிக, நடிகையர்..எத்தனை இசை வல்லுனர்கள், எடிட்டர்கள், தொழில் நுட்ப வல்லுனர்கள் நடமாடி இருப்பர் என்று மனதில் காட்சிகள் விரிந்தது..
முன்பு போட்டோவில் பார்த்த ப்ரசாத ஸ்டுடியோ இசை கோர்ப்பு நிகழ்ச்சிகள் மனக்கண் முன் வந்து ஓடியது. அவர்களை அங்கு பொருத்தி பார்த்து மனதில் இசையை ஓட விட்டேன். என்னை விசித்திரமாக பக்கத்தில் இருந்தவர்கள் பார்த்து இருக்கலாம்..என்னடா இது ஒரு music studio வை இப்படி ரசிக்கிறா என்று..ஆனால் நாம் ரசிக்க பிறந்தவர்கள்..ஒவ்வொரு நிகழ்வையும் ரசிக்கவே பிறந்தவர்கள் என்று தீர்மானமாக நம்புகிறேன். அங்கு அமைதியாக இருக்க வேண்டும் என நண்பர் என் குணம் தெரிந்து வலியுறுத்தி இருந்தார்..ஆனால் ஒஜுவை எப்படி அமைதியாக இருக்க செய்வது என்று புரியவில்லை.. நிமிடத்துக்கு நான்கு கேள்விகள் உதிக்கும், அனைத்தையும் நான் விளக்க வேண்டும்..எப்படியோ சமாளித்து விட்டேன்.


ஆனால் நண்பர் பழனி பாரதி அவர்களுடன் பேச முடியாத நிகழ்வாக போய் விட்டது. அந்த சூழலில் என்ன பேசுவது என்பது கூட தெரியவில்லை. காற்றே, காற்றே பாடலை பற்றி பேசாமல் போய்விட்டோம் என்ற வருத்தம் பிறகு வந்தது.. அவருடன் புகைப்படம்  எடுத்துக்கொண்டு உள்ளே சென்றோம். அமைதியாக உள்ளே நுழைந்தோம். வெண்ணிற உடையில் இசை அரசர்.. ஒஜுவை ஆசிர்வாதம் வாங்கி கொள்ள சொன்னேன்..உனக்கு நல்லா பாட்டு வரும்..ஆசிர்வாதம் வாங்கிக்கோ என்று கூறியபொழுது ஓடிவிட்டான். உடனே இளையராஜா அவர்கள் குழந்தையை விடும்மா என்று மெதுவாக கூறினார். குழந்தைகளின் இயல்பை சிதைக்காத அனைவரையும் மிகப்பிடிக்கும். அவரின் அமைதியை குலைக்கும் விதமாக குழந்தை நடந்துக்கொன்டாலும் அதை இயல்பாக  அதுவும் சந்தோஷமாக எடுதுக்கொண்டதற்க்ககாவே அவர் மன சிம்மாசனத்தில் உயரத்தில் அமர்ந்தார்.

அதிகம் பேசவில்லை, எதுவும் சொல்லவில்லை..பாடல்கள் பற்றிய பாராட்டுகளுக்கு சந்தோஷமாக தலை அசைத்தார்..முதலில் எனக்கு பேச்சே வரவில்லை..அவரை பார்த்தவுடன் நதி மூலத்தை தரிசித்த உணர்வு..இங்கிருந்துதானே அத்தனை ஒலிகளும் புறப்பட்டு இருக்கு..உலகம் முழுதும் காற்றில் பரவும் ஒலிகளுக்கு சொந்தகாரார்..அன்டார்டிகா முதல் ஆர்டிக்வரை இந்த இசை பயணம் போகாத தூரமே இல்லையே..அருவியாய், நதியாய், கடலாய், அலையாய் பரந்த இசையின் மூலம் இந்த சின்ன அறையில் அமைதியாக இருக்கிறதை வியந்த  மன உணர்வுகள்.. அமைதியாக வெளியே வந்தோம்.


திரும்ப காரில் வரும்பொழுது யாரிடமும் பேசவில்லை. அந்த கணங்களில் இருந்து மீள விரும்பவில்லை..ஒவ்வொன்றாக இசை அதிர்வுகள் மனதை ஊஞ்சல்

இருப்பினும் நன்றிகள் நட்புகளுக்கு.. நண்பர் ராஜாராமன் அவர்களுக்கும் நண்பர் பழனி பாரதி அவர்களுக்கும்.

9 comments:

shanmuga vadivu said...

அருமை கிர்த்தி .. வாழ்க வளமுடன் ..

Unknown said...

அருமையான சந்திப்பு ... அற்புதப் பதிவு
வாழ்த்துக்கள் கிருத்திகா + தரன்

Unknown said...

அருமையான பதிவு ......34 ..

ushasoundar said...

அருமையான சந்திப்பு ...நல்ல பதிவு .நல்லா எழுதி இருக்கீங்க கிருத்திகா!! வாழ்த்துக்கள்.

gurumani said...

எல்லோருக்கும் இந்த மதிரியான வாய்ப்புகள் கிடிபது இல்லை . உங்கள் ரசனை .. மிக அழகானது..பதிவு..மிக அருமை..

சக்திவேல் said...

ராஜாவுடனான சந்திப்பு ஒரு அற்புதம்
அந்த சந்திப்பை வார்த்தைகளால்
கோர்த்து உங்களது மனதின்
படிமானங்களுடன் பதிய வைத்த
விதம் அருமை. வாழ்த்துக்கள்

Balaji Sathya Moorthy said...

ராகதேவன் உடனான உங்கள் சந்திப்பின் பதிவை படித்தேன் .……தேனில் ஊறின எறும்பு போல் நான் அதை படிக்கிறபோது உணர்கிறேன்
ராஜாவின் ஒசை என் வாழ்வில் பல மாறுதலை ஏற்படுத்தி உள்ளது.
உங்களின் பதிவு இன்னும் இன்னும் அவரின் மதிப்பை பன்மடங்கு உயர்ந்தியது :))

Dr J.R.SIVARAMAKRISHNAN said...

அற்புதமான பகிர்வு & அருமையான எழுத்தாக்கம் வாழ்த்துக்கள்...MAM

jayakumar said...

..................
..................