தற்பொழுது பிறக்கும் முன்பே, பிறந்த உடனேயே போதிக்கும் வகுப்புகள் வந்துவிட்டன. உங்கள் குழந்தை மேதை ஆக வேண்டுமா? என்ற விளம்பரங்கள் எங்கும் காணப்படுகின்றன. அதிலும் விளம்பரங்களில் பிக்காசா, ஐன்ஸ்டீன், சாக்ரடீஸ் போன்ற வெளிநாட்டு அறிவாளிகளை காட்டுவார்கள். ராமானுஜம், சி.வி.ராமன், ஆர்யபட்டர் போல என்று காட்டுவதே இல்லை. நம் பெற்றோர் நம் குழந்தைகள் இந்தியர் ஆயிற்றே... எப்படி அவர்களை போல ஆக முடியும் என்று யோசிப்பது இல்லை.
பழங்காலத்தில் சிறு குழந்தைகளுக்கும் விளையாட்டு வைத்து இருந்தனர். தற்பொழுது போல கெடுதலான பிளாஸ்டிக் பொம்மைகள் இல்லையே தவிர, மரத்தாலான பொம்மைகள் உண்டு. ஆனால் அப்பொழுது கூட்டு குடும்பம் என்பதால் நாள் முழுவதும் குழந்தைகளுக்கு விளையாட ஆள் இருந்து கொண்டே இருக்கும். அவர்களுக்கு பொழுது போகவில்லை என்பதை விட அவர்களுக்கு பொழுது போதவில்லை என்பதே சரியாக இருக்கும்.
சின்ன குழந்தை கொஞ்சம் உட்கார ஆரம்பித்தவுடன் 'சாஞ்சாடம்மா சாஞ்சாடு..' ஆரம்பித்து விடுவோம். அடுத்து 'கை வீசு..' அதற்கான பாடல்கள் ஆரம்பிக்கும். உட்காரும் வயதுக்கே பாட்டு பாடி விளையாடுவது நம் பாரம்பரியம். நிறைய குழந்தைப் பாடல்கள் உள்ளன.
குழந்தையை மடியில் உட்கார வைத்து, முன்னும் பின்னும் ஆட்டி...
"சாஞ்சாடம்மா சாஞ்சாடு
சாயக்கிளியே சாஞ்சாடு
குத்து விளக்கே சாஞ்சாடு
கோயில் புறாவே சாஞ்சாடு
மானே மயிலே சாஞ்சாடு
மரகதக் கிளியே சாஞ்சாடு
கண்ணே மணியே சாஞ்சாடு
கட்டிக் கரும்பே சாஞ்சாடு
மயிலே குயிலே சாஞ்சாடு
மடியில் வந்து சாஞ்சாடு"
இது அவரவர் இடத்துக்கு தகுந்தவாறு மாறுபடும். அதைத் தவிர, நிறைய குழந்தைப் பாடல்களும் உள்ளன. அடுத்து கைவீசம்மா கை வீசு, சோறூட்ட நிலா, நிலா ஓடிவா போன்றவை தமில் ரைம்ஸ் போட்டு விற்க ஆரம்பித்து உள்ளனர். நல்லது. அப்பா அல்லது அண்ணன், அம்மா மேலே உக்கார வைத்து யானை விளையாட்டு பாடி கொண்டே தாழ்வாரம் முழுக்க தவழ்ந்து யானை போல சுத்தி வருவர். பத்துக்கு பத்தில் எங்கு சுத்தி வருவது என்று கேட்டால் பதில்.. மனமிருந்தால் மார்க்கமுண்டு.
"யானை யான அழகர் யானை
அழகரும் சொர்க்கரும் ஏறும் ஆனை
குட்டி ஆனைக்குக் கொம்பு மொளச்சுதாம்
பட்டணம் எல்லாம் பறந்தோடிப் போச்சுதாம்"
அடுத்து பருப்பு கடைதல். குழந்தையை வைத்து சோறுட்டி சாப்பாட்டின் மேல் ஆர்வத்தைத் தூண்டும் விளையாட்டு. குழந்தையின் கையை எடுத்து வைத்து கொண்டு அதன் மேல் முட்டி கை வைத்து பருப்பு கடைய வேண்டும் அப்புறம் ஊட்டுவது போல செய்து காட்டவேண்டும். தொட்டுக்க வேணுமா என்று கேட்டு விரல்களை வைத்து இது சாம்பார், பொரியல் என்று விளையாட்டை நீட்டி கொண்டு போகலாம். கீரை பற்றியும் சொல்லலாம்.
"பருப்பு கடைஞ்சு,
நெய் ஊத்தி,
நல்லா பிசைஞ்சு
அப்பாவுக்குக் கொஞ்சம்
அம்மாவுக்குக் கொஞ்சம்
பாட்டிக்குக் கொஞ்சம்
தாத்தாவுக்குக் கொஞ்சம்
பாப்பாவுக்குக் கொஞ்சம்
கொடுத்திட்டு அடுப்பு கழுவி (அந்த காலத்தில் விறகடுப்பை கழுவி கோலம் போடும் வழக்கம் உண்டு)
சிலர் வெறும் கிச்சு, கிச்சு மூட்டுவர். சிலர் நண்டு ஊறுது நரி ஊறுது என்று சொல்லி கொண்டு கையை பிடித்து விரல்களால் ஊர்ந்து கைக்கு அடியில் கிச்சு, கிச்சு மூட்டுவர். குழந்தைகள் மிக விரும்பும் விளையாட்டு.
அடுத்து இரண்டு வயதுக்கு மேல் குழந்தைகளை கையை குழித்து வைத்து கொள்ள சொல்லி நாம் முஷ்டியை மடக்கி குத்த வேண்டும்.
அம்மா குத்து,
அப்பா குத்து,
பாட்டி குத்து,
பேரன் குத்து
பிள்ளையார் குத்து,
பிடிசிக்கோ குத்து.
இந்த பிடிச்சிக்கோ குத்து சொல்லும்பொழுது குழந்தை கையைப் பிடித்துக்கொள்ள வேண்டும். மாற்றி, மாற்றி விளையாடலாம். பிடிக்காமல்விட்டால் அவரின் முறை மாறும். சிறுவர், சிறுமிகளும் விளையாடும் பொழுதுபோக்கு விளையாட்டு.
இந்த விளையாட்டு முறைகள், பாடல்கள் வீட்டு வீடு, இடத்துக்கு இடம் கொஞ்சம் வேறுபடலாம். ஆனால் தலைமுறை தலைமுறையாக விளையாடி வந்த விளையாட்டுகளை நம் தலைமுறையோடு முடித்தால் அத்தனையும் மறந்தும், அழிந்தும் விடும். இது போன்ற விளையாட்டுகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது நம் கடமையாகும்.
நன்றி..தி இந்து.
நன்றி..தி இந்து.
2 comments:
நல்ல கட்டுரை... வாழ்த்துக்கள்.
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...
அறிமுகப்படுத்தியவர் : ராஜி அவர்கள்
அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காணாமல் போன கனவுகள்
வலைச்சர தள இணைப்பு : ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே!
Post a Comment