Monday, July 13, 2015

லா.ச.ரா

 லா.ச.ரா. 
பெங்களூரு நண்பர்கள் ஏற்பாட்டில் நடக்கும்  "இரண்டாம் ஞாயிறு" கூட்டம் அல்சூர் தமிழ் சங்கத்தில்..இந்த முறை லா.ச.ரா அவர்களின் மகன் சப்தரிஷி அவர்கள் பேசுவதற்கு ஏற்பாடு செய்து இருந்தார்கள்.

ஒரு அழகிய எழுத்தை வாசிக்கும் பொழுது அந்த எழுத்தாளைனை  பற்றி அறிந்துக் கொள்ளும் ஆவல் அனைவருக்கும் வரும். அதுவும் இன்றும், என்றும் மனதை பாதிக்கும் எழுத்துகளை ஒரு நூற்றாண்டுக்கு முன் பிறந்த மனிதர் தமிழில் எழுதி இருப்பது ..அது என்று வாசித்தாலும் அழகாக இருப்பது என்பது பெரிய விஷயம்.

தேர்ந்தெடுத்த வாசிப்புகளில் இப்பொழுதான் இறங்கி இருக்கிறேன். இதில்  லா.ச.ரா கதைகள் கொஞ்சமே வாசித்து இருப்பதால்..ஏதாவது அவரைப் பற்றி கேக்கலாம் என்று சப்தரிஷி அவர்கள் கேட்டப் பொழுது மனதில் தோன்றியது இதுதான்.. அவர் ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் நடக்கும் விஷயங்களைப் பற்றி மட்டும் எழுதுவதாக எனக்கு தோன்றியது ஏன் அப்படி!?  என்றுக்  கேட்டேன்..

மிக அழகான பதில்...ஒரு ஒரு ஏரோப்ளேன் பற்றி  எழுதனும்னா என்னை விட ஏரோனாடிக்கள் இஞ்சினியருக்கு விவரம் தெரியும்..எழுதினால் தவறுகள் ஆகலாம்..அவன் நாளைக் கேள்விகள் கேக்கலாம்..ஒரு குறிப்பட்ட  விஷயத்தைப் பற்றி எழுத சரியான தகவல்களுடன் அந்த துறை  ஜாம்பாவான்கள் இருப்பார்கள்..அவர்கள் எழுதட்டும்..எனக்கு தெரிந்தது இந்தக் கூட்டுக் குடும்பம், சுற்றியுள்ள மனிதர்கள்,..இவர்களின் வாழ்க்கை, அதை சார்ந்த சமூகம்..அதையே நான் பதிவு செய்கிறேன். அதே சமயத்தில் இதில் சிறப்பாக என்னால் செய்ய முடியும் என்பதை யோசிச்சு செய்கிறேன் என்பது லா.ச. ரா பதிலாக இருந்ததாக கூறினார்.

அவரிடம் எல்லாக் கேள்விகளுக்கும் தயாரான பதில்கள் இருப்பதாய் குறிபிட்டார். எப்படி அப்பா என்றுக் கேட்டால்..கிணற்றில் பல விஷயங்கள் விழுந்து கீழே ஆழமாக கிடக்கும்..என்றாவது மோதிரம் விழம்பொழுது பாதாள சல்லடைக் கரண்டி போட்டு எடுக்கும் பொழுது எல்லாம் வெளி வரும்..அதுப் போன்றுதான் இந்தக் கேள்விகள்..எல்லா பதில்களும் ஆழமாய் உள்ளேக் கிடக்கிறது..உன் கேள்விகள் மூலம் கொண்டு வருகிறாய் என்று சொல்வாராம்.

அவர்களின் குடும்பம் மிகப்பெரிது..கூட்டுக் குடும்பத்தின் மேல் அதிக நம்பிக்கை வைத்து இருக்கிறார். அவரின் பாற்கடல் கதையில் வருவதுப் போல கூட்டுக் குடும்பம் என்பது பாற்கடல் போல..கடைய கடைய அமிர்தம், காமதேனு, ஆலகால விஷம் எல்லாமே எது வேண்டுமானாலும் வரலாம் ..ஆனால் அது மிக முக்கியம்..என்பதுதான் அவரின் கருத்து.

அடுத்து அவரின் வாசக அனுபவம்..நாற்றம் என்ற வார்த்தையில்  மூக்கைப் பொத்திக் கொள்ள வேண்டும். மல்லிகைப் பற்றி எழுதினால் அந்த வாசனை நம்மை சூழ்ந்துக் கொள்ள வேண்டும்..நெருப்பு என்றால் வாய் வேகுமா..என்று ஒரு எழுத்தாளன் நினைக்க கூடாது..அவன் நெருப்பு என்று எழுதினால் அந்த சூடு படிப்பவர் உணர வேண்டும்...அதுவே நல்ல எழுத்து என்பதும் அவர் கருத்து.

அத்தனைப் பெரிய கூட்டுக் குடும்பத்தில் தனியே எழுத முடியாது..அவருக்கு தனிமை தேவைப் படவில்லை..குழந்தைகள் வரிசையாக ஓடி விளையாடும் பொழுது வரிசையாக பேப்பர், பேனாவை தட்டிவிட்டு செல்வார்களாம்..ஒவ்வொரு முறையும் அவர்களை கடிந்துக் கொள்ளாமல் கீழிருந்து பொறுக்கி, சரி செய்து திரும்ப எழுதுவாராம். அவர் எழுத்துக்கு தனிமை தேவைப்படவில்லை என்பதும் ஒரு நல்ல விஷயமகா தோன்றியது..

குடும்பத்துடன் மிக மிக ஆத்மார்த்தமாக இருந்து இருக்கிறார். குழந்தைகளுக்கான சுதந்திரம் என்பதில் இந்தக் காலத்தை விட தீர்மானமாக இருந்து இருக்கிறார். சிகரெட் உனக்கு கெடுதல் என்று குடிக்காவிட்டால்  மட்டுமே குடிக்க மாட்டாய்.. அப்பாக்கு பயந்து என்றால் நான் இல்லாத பொழுது துணிச்சல் வந்து குடிப்பாய் என்று கூறி இருக்கிறார்.  குழந்தைகள் சொல்வதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இருந்து இருக்கிறது. அவரின் குழந்தை வளர்ப்பு பற்றி கேட்டப் பொழுது..இதில் நான் செய்ய ஒன்றுமே இல்லை..நீங்கள் ஐவரும் ஒழுக்கமாய் வளர்ந்து இருப்பது எனக்கு அமைந்து இருக்கிறது. இன்னொரு விஷயம்,,,லா.ச.ரா ஆத்திகர்..அதுவும் அந்தக் காலத்திலியே அவரின் பெண் நாத்திகவாதி..எத்தனை அழகாய் சுதந்திரம் கொடுத்து இருக்கிறார். தலைப்பிரசவம்..அப்பொழுது சிசெரியேன் மிகப்பெரிய விஷயம்..தியேட்டர் வாசலில் மகளின் நெற்றியில் சுவாமி விபூதியை தடவி விட்டு..இப்பயாவது கடவுளை நம்புகிறாயா என்றுக் கேட்டு இருக்கிறார்..இல்லையப்பா இந்த நொடி வரை வரவில்லை..உள்ளே வந்தால் வெளியே வந்து சொல்கிறேன்..என்று கூறியுள்ளார்..அந்தக் கருத்தையும் ஆமோதித்து இருக்கிறார். இது இதுதான் இந்தக்  பேச்சின் பாகம் லா.ச.ரா வை என் மனதில் மிகப்பெரிய உயரத்தில் வைத்தது.

அடுத்து எம்.ஜி. யார் அவர்களின் புத்தக கலக்ஷனில் லா.ச.ரா புத்தகம் இருந்து இருக்கிறது. அதுவும் வாசிக்க மிகக் கடினமான கதை. வாத்தியார் எளிமையாக காட்டிக் கொண்டு இருக்கிறார்..ஆனால் மிக ஆழ்ந்த வாசிப்பும் அவருக்கு இருக்கிறது. அவர் வாழ்கையில் நடந்த ஒரு சம்பவம்..திருடாதே  படத்துக்கு தலைப்பு தந்த லக்ஷ்மணன் கூட விருந்து. ஜானகி அம்மையார் பரிமாறி இருக்கிறார். அப்பொழுது லக்ஷ்மணன் ஐயா இரு யுகத்துக்கு பிறகு இது நடக்கிறது என்றாராம். உடனே பையில் ஐயாயிரம் இருந்துதாம் உடனே கொடுத்தாராம். இதில் உள்ள சூட்சுமம் புரிகிறதா என்றார்சப்தரிஷி அவர்கள்....அதற்கு விளக்கமும் கொடுத்தார்..ராமன்(எம்.ஜி.ஆர்), லக்ஷம்னன் அமர ஜானகியம்மை பரிமாறுவது ராமாயணம் ஆகி இரு யுகத்துக்கும் மேல் திரும்ப நடக்கிறது  என்பதை ஒரு வாக்கியத்தில் சொல்லி இருக்கிறார்.

இதுப் போன்றுதான் அவர்கள் வீட்டிலும் பல உரையாடல்கள் இருக்கும் எனக் குறிப்பட்டார். வீட்டில் நகைச்சுவையாக சிலேடையாக பேசுவது வழக்கத்தில் இருந்து இருக்கிறது. அந்த சூழல் எல்லாம் அவரின் எழுத்துக்கு இன்னும் கைக் கொடுத்து இருப்பதாக தெரிவித்தார்.


லா.ச.ரா. இறந்தப் பொழுது சிவக்குமார் போன்ற பிரபல நட்சத்திரங்கள் வந்தப் பிறகுதான் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுக்கு அவர் மிகப்பெரிய எழுத்தாளர் என்பதே தெரிய வந்துதாம். இதை மனதுக்கு ஏற்றுக் கொள்ள சங்கடமாக இருந்தது. என் தோழி ஒரு முறை நடிகர் செந்தில் என் தெருதான் என்று கூறினார். இன்னொரு தோழி எங்கள் பிளாட்டில்தான் இந்த நடிகை வசிக்கிறார் என்றார்.

ஆனால் மிக அருமையான எழுத்தாளரை பற்றி அவரின் அக்கம் பக்கம் எப்படி அறிந்து வைத்து இருக்கிறது என்பதைக் கேட்டு கொஞ்சம் மனம் சங்கடப்பட்டது. ஆனால் சப்த ரிஷி அவர்கள் இதையும் பாசிடிவாகத்தான் சொன்னார்.

யாரையும், எதற்கும் நொந்துக் கொள்ளாமல், கடிந்துக் கொள்ளாமல், தனக்கு எதிராக வரும் விமர்சனங்களையும் மிக எளிமையாக, நேர்மையாக கையாண்டு ஒரு பாஸிடிவ் வாழ்கையை வாழ்ந்து இருக்கிறார். பல உளவியாளர்கள் சொல்லி..பல மக்கள் செய்ய முடியாத வாழ்க்கை இவருடையது. " அக் கணத்தில் மட்டும் வாழ்வு"..எத்தனை அழகானது.

ஒரு மகனாக மட்டும் இல்லாமல் ஒரு எழுத்தாளனாக, வாசகனாக தந்தையுடன் பழகும் பாக்கியம்.. அவருக்கு  தந்தை மேல் தீராக்காதல். சிவகுமார் ஆறுதலாய் சொன்னாராம்..ஐம்பது இரண்டு வருடம் தந்தை உன்னுடன் இருந்து இருக்கிறார்.. பெரிய பாக்கியம்..நானெல்லாம் தந்தையை போட்டோவில் மட்டுமே பார்த்து இருக்கிறேன் என்று..ஐம்பது இரண்டு வருடங்கள் அவருடன் வாழ்ந்து விட்டேன்..இனி எப்படி அவரில்லாமல் என்பதுதான் என் பிரச்னையே என்று இருக்கிறார். அது சொல்லும் பொழுதே குரல் மாறி ஒலிக்கிறது..இன்னும் தந்தையை இழக்க தயாராகாத பிள்ளை மனம். எத்தனைப் பெரிய எழுத்லாராய் இருக்கலாம். இதுப் போன்ற பாசமுள்ள குழந்தைகளை வளர்த்ததே அவரின் மிகப்பெரிய வெற்றி என்று தோன்றியது.

அதுப் போல வார்த்தைகளின் காதலர். வார்த்தைகளோடு அப்படி விளையாடுவாராம். ஒரு முறை உடல்நலம் சரியில்லாதப் பொழுது எழுதும் பொறுப்பை லா.ச.ரா கடினம் என்று கூறியும் பிடிவாதமாக மகன் கேட்டு வாங்கி இருக்கிறார். இரவு இரண்டு மணிக்கு எழுந்து பத்தாவது பாராவில் இருக்கும் நான்காவது வரியை அடித்து..பதினோன்றாவது பாராவில் கடைசியில் சேரு என்பாராம். வாக்கியங்களை டைப்  அடித்து போஸ்ட் செய்து விட்டு மறந்தே போகும் எனக்கு இந்த விஷயம் வியப்பு என்பதை விட...என்ன ஒரு அர்பணிப்பு என்று யோசிக்க வைத்தது..

அடுத்து எழுத்துப் பற்றி..அவரின் எடிட்டிங் சிறப்பே அதற்க்கு மேல் ஒரு வார்த்தையைக் கூட கட் செய்ய முடியாதது என்பதே... அப்பவே ஆங்கில வார்த்தைகளை ஆங்கிலமாக எழுதும் பழக்கம் இருந்து இருக்கிறது. அதை பிரசிரிதும் இருக்கிறார்கள். விகடன் கூட விதிவிலக்கில்லாமல் பிரசுரிப்பது உண்டாம்.


நான் இங்கு..இந்த தலைப்பு லா.ச. ரா என்று மட்டும் கொடுக்க காரணம்..அவர்  ஒற்றை சொல்லில் அத்தனை அர்த்தத்தை புதைத்து வைப்பவர்..அழ, சிரிக்க, பதற வைப்பவர். ..இங்கு லா.ச. ரா என்ற ஒற்றை வார்த்தைக்கும் எத்தனை அர்த்தம் என்று அவரை வாசிப்பவர்களுக்கு புரியும்.

தந்தை, மகன் இருவருக்கும் ஒரு நாளைக்கு நானூறு பக்கங்கள் வாசிக்கும் பழக்கம் இருந்து இருக்கிறது..இன்றும் இருக்கிறது..இது சாதா, இலக்கியம் என்று ஒதுக்காமல் ஓரளவுக்கு நல்லவற்றை வாசிக்கும் பழக்கம் இருந்து இருக்கிறது .இலக்கியம் என்பது இலக்கணமில்லை என்பதும் அவர் கருத்தாம். அவருக்கு தமிழ் இலக்கணம் அத்தனை தெரியாது  என்பது கூடுதல் செய்தி.

என்னைப் பொறுத்தவரை வாசிப்பு என்பது ஒரு அனுபவம்.. ஒரு செய்தியில் கூட அந்த அனுபவம் கிடைக்கலாம். அந்த அனுபவங்களே இலக்கியம் என  நினைத்துக் கொள்வேன்.

அடுத்து வார்த்தைகளை கையாண்ட விதம்.. முதலிரவு அறையில் நுழையப் போகும் பெண் மாடிபடிக்கு கீழே நின்றுக் கொண்டு மாடியில் இருக்கும் அறைக்கு ஏறப் போகிறாள்..அவள் நினைக்கிறாள்.. "இன்றைய மாடிக்குதான் எத்தனைப் படிகள்" ..அந்த இடத்தில அந்தக் கணத்தை அழகாக குறைந்த வார்த்தைகளில் விவரித்து இருப்பதைப் பற்றி சொன்னார்.

அவரின் வார்த்தைப் போக்குப் போல அடுத்து வந்த சுஜாதாவும் சரியாக கையாண்டு இருந்தார் அதாவது விமானம் விர்ர்ர்ரென்று கிளம்பியது..போன்ற பதங்களை..


இரண்டரை நேரம் பேசியது மட்டுமில்லாமல்..இன்னும் அவரின் கதைகள், அதன் சூழல்கள் பற்றி பேசவும் அவர் தயாராக இருந்தார். அவரின் பேச்சு அவரின் தந்தை மேல் உள்ளக் காதலைப் போல தீராமல் வந்துக் கொண்டே இருந்தது.  லா. ச. ராவின் பிரமாண்டத்தில் ஒரு பகுதியை தரிசித்த மகிழ்ச்சி எங்களுக்கு..கிளம்பும் பொழுது வாசிப்பின் மேல் இன்னும் காதல் கூடி இருப்பதை மனம் உணரச் செய்தது. நன்றி..மணிகண்டனுக்கு.

கிளம்பும் பொழுது லா.ச.ரா புகைப்படம் ஒன்றை எங்களுக்கு பரிசாக வழங்கினார். காலையில் கைப்பையில் இருந்து பர்ஸ் எடுக்கும் பொழுது தட்டுப்பட அதை எடுத்து ஷோ கேசில் வைத்தேன்..ஆழமாக என்னை பார்ப்பதாக உணர்ந்தேன். இருக்கட்டும்..அவரின் எழுத்துகளை  இன்னும் நான் வாசிக்கும் வரை அப்படியே பார்க்கட்டும்.



 எதையும் பொதுமைப் படுத்துவதில் அவருக்கு ஒப்புமை இல்லை. சப்த ரிஷியும் அதையே சொன்னார். யாரையும் இப்படிதான் என்று பொதுமைப் படுத்தும் கருத்துகள் இல்லை என்றார். சுஜாதாவிடம் விஞ்ஞானி என்றால் ஏன் குறுந்தாடி, கண்ணாடி, நீளக் கோட் என்றுக் கேட்டுள்ளார்..அதற்கு என்னைப் போன்ற பல அறிவியலாளர்கள் இப்படி இல்லாமல் சாதரணமாகதான் இருக்கிறோம். இதெல்லாம் மீடியா மனதில் பதிய வைத்த விஷயங்கள்..என்று விளக்கியதாக தெரிவித்தார், ஆனால் அவரே பேச்சின் நடுவில் நான் கிராமத்துக்காரி என்றவுடன் அதிர்ச்சியாக நேரடியாக மேலும், கீழும் என்னை உற்று  பார்த்துவிட்டு பார்த்தால் கொஞ்சம் கூட தெரியவில்லையே என்றார்..மனதில் கிராமத்துப் பெண் என்றால் இப்படிதான் என்ற பதிவில் இருந்து அவரால் கூட இன்னும் மீள முடியவில்லை .இந்த சமூகத்தில் ஆழமாக சில விஷயங்கள் பதிந்து உள்ளன. எத்தனைப் படித்தவர்களாலும் அதில் இருந்து மீளுவது கடினம் என்று தோன்றியது.. அடுத்து கல்லூரியில் படிக்கும் மகன் இருக்கிறான் என்ற விஷயத்தையும்  சொல்லிவிட்டு வந்தேன். அவரின் கண்களில் உள்ள  ஆச்சரியத்தை ரசித்துக் கொண்டே..

இந்த சந்திப்பை இன்னும் இன்னொரு பார்வையில் வாசிக்க

http://www.nisaptham.com/2015/07/blog-post_13.html












9 comments:

Unknown said...

லா.ச.ரா எனக்கும் பிடித்த எழுத்தாளர். இந்த பதிவு அருமை....லா.ச.ரா பற்றிய புதிய கோணங்கள் அவரின் மகன் வாயிலாகக் கிடைக்கப்பெற்றதும் அருமை....

Unknown said...

லா.ச.ரா எனக்கும் பிடித்த எழுத்தாளர். இந்த பதிவு அருமை....லா.ச.ரா பற்றிய புதிய கோணங்கள் அவரின் மகன் வாயிலாகக் கிடைக்கப்பெற்றதும் அருமை....

Padmanabhapuram Aravindhan said...

நல்லப் பதிவு .. நானும் லா.ச.ரா வின் சிறுகதைகளின் தீவிர ரசிகன். அவர் எழுத்தில் அதற்குமேல் ஒருவார்த்தையைக் கூட எடிட் செய்யவோ, சேர்க்கவோ முடியாது. அத்தனை துல்லியமாய் இருக்கும். சரி உங்களுக்கு எந்த கிராமம்? - பத்மநாபபுரம் அரவிந்தன் -

saravanan said...

i LIKE SAPTHARISHI SPECH IN SO MANY TIME IN HOSUR,

SARAVANAN,MEACHERI

திண்டுக்கல் தனபாலன் said...

முதல் கேள்வியின் பதிலே அவரின் சிறப்பை மனதின் உச்சிக்கு சென்று விட்டது...

நன்றி...

கிருத்திகாதரன் said...

நன்றிகள் அனைவருக்கும்.

மாறன் said...

/அடுத்து கல்லூரியில் படிக்கும் மகன் இருக்கிறான் என்ற விஷயத்தையும் சொல்லிவிட்டு வந்தேன். அவரின் கண்களில் உள்ள ஆச்சரியத்தை ரசித்துக் கொண்டே./ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா...முடியல

'பரிவை' சே.குமார் said...

லா.ச.ரா. அவர்கள் மிகச் சிறந்த எழுத்து ஆளுமை....
அவர் குறித்த பகிர்வுக்கு நன்றி அக்கா...

umakanth tamizhkumaran said...

இந்த பதிவு அருமை...அவர் குறித்த பகிர்வுக்கு நன்றி