Saturday, June 27, 2015

நட்பென்பது..

ஃபேஸ்புக் என்பது படைப்புக்கான தளம், வாய்ப்புக்கான தளம், பல மனிதர்களை சந்திக்கும் தளம் என்று ஆயிரம் இருந்தாலும் நான் முக்கியமாக நினைப்பது நட்புக்கான தளமாகதான்.

ஆயிரக்கணக்கான நட்புகள்..நூற்றுக்கணக்கான உள்டப்பி செய்திகள்..இதில் ஆணோ பெண்ணோ உண்மையான நட்பாக மாறுவது மிகச்சிலரே..ஏன் என்றால் நல்ல நட்பு என்பது ஒரு நாளிலோ, ஒரு மாதத்திலோ உருவாவது இல்லை. அது ஒரு ப்ராசெஸ்..சரியாக பக்குவமாக புரிதல் வளர வேண்டும்..பத்து வருடங்கள் கூட பழகலாம்.இருப்பினும...வா ..என் வீட்டு ரகசியம் மட்டுமல்ல..என்னுடைய ரகசியமும் பகிர்ந்துக் கொள்ள ஒரு தோள் ..அதுவும் சரியான தோள் வேண்டும் என்பது மிகசிலருக்கே அமைகிறது.

ஒரு நட்பூ பூக்கும், மலரும், உதிரும் காலம் தெரியாது..ஆரம்பக் கால மோகங்கள் திருமணம் மட்டுமல்ல புது நட்புக்கும் உண்டு..படிப்படியாக அது தேயும்..மறைந்து விடாமல் செய்யும் அன்பு சிலருக்கே வாய்க்கப் படுகிறது.

சில நட்புகள் வெளிநாடு வீதிகள் போல வழுக்காமல் செல்லும்..சிலதோ பல மேடுபள்ளங்களில் உருண்டு செல்லும்.இந்த கடினமான பாதையில் செல்லும் நட்புகள் இன்னும் பலமானதாக உறுதியாக மாறுகின்றன.

நேற்று அதிக நாட்கள் கழித்து தோழியை சந்தித்தப் பொழுது இதுதான் தோன்றியது. நேரம் சென்றதே தெரியவில்லை..பேசினோம் என்பதை விட அன்பு பரிமாற்றம்தான்..இத்தனை நாள் ஒருவருக்கொருவர் இருந்த சிறு தவறான் புரிதல்களை கூட உடைத்துப் போட ஒரு சந்திப்பு வழி வகுத்தது.

ஆயிரம் இருப்பினும் நேருக்கு நேர் சந்திப்பு போல எதுவும் அமைவதில்லை.. வெறும் டெக்னாலஜி தொடர்புகள் பல புரிதலின்மைக்கு வித்திடுகின்றன.

ஒரு பாடமும்..எப்படி கணவன், மனைவி உறவில் யாருக்கும் இடமில்லையோ..அதுப் போல நட்புகளின் உறவிலும் யாருக்கும் இடம் கொடுத்தால் ஒட்டகம் கூடாரம் புகுந்த கதையாக ஆகிவிடுகிறது. லேசாக தூண்டிவிட்டு நம்மிடமே வார்த்தைகளை விட்டு பாவம் என்றுக் கேட்டுகொண்டால் அதை நமதான வார்த்தைகளாக மாற்றி வம்பு செய்யவே பலருக்கு விருப்பமான பொழுதுப் போக்காக இருக்கும் என்று நேரடி வாழ்க்கையை விட இங்கு அதிகம் தெரிந்துக் கொள்ள முடிகிறது. பொறாமை என்பது எந்தளவுக்கு ஒருவரை தாக்கும் என்றும் புரிந்த இடம்.

ஒரு அற்புதமான நட்பு ஒரு அன்பான, அழகான மனதிடம் மட்டுமே அமையும். காலம் அந்த நட்பை கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கி செல்லும். அப்படி செதுக்கி சென்ற நட்பில் முக்கியமானவர் செல்லி..
ஒரு விஷயம் என்று சொன்னால் அதை அப்படியே ஏற்றுக் கொள்ளும் பக்குவம் அவருக்கு உண்டு..என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்..ஆய்ந்து அறிவதில்லை..ஜட்ஜ் செய்து இது தவறு சரி என்று குற்றம் சாட்டுவதில்லை..பொறுமையாக கேட்டுக் கொண்டு அவர் கருத்தை சொல்லுவார். பெரும்பாலும் சரியாக இருக்கும்.

மிக பக்குவம் மட்டுமில்லை..மிக மிக உறுதியான அதே சமயத்தில் நகைச்சுவை மிக்க ஒரு தோழி..எதையும் மிக இலகுவாக்கும் தன்மை...தன்னுடைய கஷ்டங்களை கூட நகைச்சுவையாக்கும் சக்தி..அரிதிலும் அரிது..

எதையும் பாஸிடிவாக அணுகுவதால் அழகான வாழ்க்கை அவருக்கு...சிலர் நினைப்பார்கள்..அவர்களுக்கு மட்டும் எப்படி இப்படிப்பட்ட கஷ்டமில்லாத வாழ்க்கை என்று..அது அப்படியில்லை..வாழ்க்கையின் கடினப்பாதைகளை எளிதாக எடுத்துக்கொண்டு அதைப் பாடமாக அமைத்துக்கொண்டு நல்ல விஷயங்களை மேற்கொண்டு செல்லுவதால் மட்டுமே நல்ல வாழ்ககை அமையும்.

ஒரு நல்ல நட்பு தோள் கொடுப்பது மட்டுமல்ல..தேவையான நேரத்தில் சீரமைக்கவும் வேண்டும்..அதில் செல்லியிடம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் அதிகம் உள்ளது.. மூன்று வருடங்களுக்கு முன்பு லிட்டில் இத்தாலியில் நெருக்கமான நட்பு.நேற்றும் இன்னும் அன்பாக சியாநிடி இத்தாலி வரை தொடர்ந்து இருக்கு. இந்த மூன்று வருடங்களில் செல்லியிடம் பழகியவர்கள். தங்களை மேம்படுத்திக்கொண்டு இருப்பதை கண்ணால் கண்டு இருக்கிறேன்.

தன்னிடம் பழகியவர்கள் மேம்பட வேண்டும் என்றுதான் நினைப்பார் இந்த நட்பு... ஒரு பொதுவான தோழியை நான் சந்ததிதப்பொழுதுக் கூட அவளிடம் பேசும்பொழுது மிக நுணுக்கமாக அவளுக்கு சில விஷயங்களை எடுத்து சொன்னது மிக பிடித்து இருந்தது..இதெல்லாம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம்..

அதுப்போல அந்த அந்த சம்பவத்தை, பிரச்சனையை அப்படியே எடுத்துக்கொண்டு அதை சுமக்காமல் வேறு நல்ல விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்துவது..தவறு செய்யாத மனிதர்கள் உலகத்தில் இல்லை என்பதை உணர்ந்து ஏதாவது தவறான புரிதல் இருந்தால் உடனே மன்னிப்பு கேட்கும் குணம் சமிபத்தில் யாரிடமும் கண்டது இல்லை.நான் கடினமாக முயற்சித்துக் கொண்டு இருக்கும் விஷயம்.. அவரின் தனிமை விரும்பும் பண்பை புரிந்துக் கொண்டால் மட்டுமே..அவர் ஈகோ துளியும் இல்லாமல் இப்படி இருப்பது புரியும்.


வந்த புதிதில் ஃபேஸ்புக் அதிகமாக தெரியாது..தவறான வார்த்தைகள் போஸ்ட் ல் இருந்தால் உடனே போன் வந்துவிடும்..எனக்கு மட்டுமில்லை..அவளுடைய நண்பர்களின் நலனில் அக்கறை மிக அதிகம். அதுப்போல எந்த உடையாக இருந்தாலும் அதை ஸ்டைலாக சுமந்து உடைக்கு அழகை கொடுக்கும் வெகு சிலரில் இவர் ஒருவர். அவரிடமிருந்து நான் நிறைய கற்றுக்கொண்டு இருக்கிறேன். இன்னும் இருக்கு..அது எங்களுக்கான வார்த்தைகளாக வைத்துக் கொண்டு இருக்கிறேன்.

எங்களுக்கு இடையே எங்களாலும், அடுத்தவர்களாளும் எழுந்த ஆயிரமாயிரம் புகார்களை எங்களால் சரிப்படுத்திக் கொள்ள முடிந்தது மட்டுமல்லாமல்..அதை துளிக் கூட நினைக்காமல் அதை எல்லாம் ஒரு குழந்தைகளின் விளையாட்டாக, நகைச்சுவையாக கடக்க முடிந்தது எங்களின் வெற்றி என்று பெருமையாக சொல்லிக் கொள்ளலாம். முக்கியமான நண்பர்களுக்கான பாடம் என்னவென்றால் .. நீங்கள் மிஸ் பண்ணும் நண்பர் யாராக இருந்தாலும் சரியான சமயத்தில் லவ் யூ சொல்லி இணைந்து விட வேண்டும்..சில அன்பானவர்களை..நமக்கு சிறந்து ஒத்து வரும் தோழமைகளை தவறவே விடக் கூடாது.. அந்த தவறை நாங்கள் செய்யமால் இருப்பது எத்தனை சரியான விஷயம்.

எதற்காக இதை பதிய வேண்டும் என்று தோன்றலாம்....ஃபேஸ்க் கில் கிடைத்த பொக்கிஷங்களைப் பற்றி இங்கு பேசாமல் வேறு எங்கு பேச வேண்டும். யார் வேண்டுமானாலும் நடுவில் நழுவலாம்..ஆனால் தவறவிடக் கூடாது. அதில் செல்லியின் நட்பும், உறவும் மிக முக்கியம்.

அன்புப் புரிதலே புதையல். 

8 comments:

ஷாஜி said...

அடிக்கடி இப்படி சுயபரிசோதனை மூலம் இந்த நட்புகளை உறுதியாகவும் நம்பிக்கையாகவும்
வைத்துக்கொள்வதில் தான் இருக்கிறது தொடர்ந்து பயணிப்பதற்கான சாத்தியங்கள் . வாழ்க உங்கள் நட்பு.. அருமையாய் பதிந்து பகிர்ந்திருக்கிறீர்கள்

ஷாஜி said...

அடிக்கடி இப்படி சுயபரிசோதனை மூலம் இந்த நட்புகளை உறுதியாகவும் நம்பிக்கையாகவும்
வைத்துக்கொள்வதில் தான் இருக்கிறது தொடர்ந்து பயணிப்பதற்கான சாத்தியங்கள் . வாழ்க உங்கள் நட்பு.. அருமையாய் பதிந்து பகிர்ந்திருக்கிறீர்கள்

Rathnavel Natarajan said...

நட்பென்பது..- .எப்படி கணவன், மனைவி உறவில் யாருக்கும் இடமில்லையோ..அதுப் போல நட்புகளின் உறவிலும் யாருக்கும் இடம் கொடுத்தால் ஒட்டகம் கூடாரம் புகுந்த கதையாக ஆகிவிடுகிறது. லேசாக தூண்டிவிட்டு நம்மிடமே வார்த்தைகளை விட்டு பாவம் என்றுக் கேட்டுகொண்டால் அதை நமதான வார்த்தைகளாக மாற்றி வம்பு செய்யவே பலருக்கு விருப்பமான பொழுதுப் போக்காக இருக்கும் என்று நேரடி வாழ்க்கையை விட இங்கு அதிகம் தெரிந்துக் கொள்ள முடிகிறது = நேருக்கு நேர் பேசினால் முடிந்து விடும். = நேற்று நேரமில்லாததால் முழுவதும் படிக்க முடியவில்லை. பகிர்ந்து விட்டேன். பகிர்ந்தால் எனது பக்கத்தில் இருக்கும், பொறுமையாக படித்துக் கொள்ளலாமென. அருமையான, அவசியமான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். வாழ்த்துகள் எங்கள் அருமை மகள்கள் Chelli Sreenivasan - Kirthika Tharan

sivakumarcoimbatore said...

Facebook-il கிடைத்த பொக்கிஷங்களைப் பற்றி இங்கு பேசாமல் வேறு எங்கு பேச வேண்டும். யார் வேண்டுமானாலும் நடுவில் நழுவலாம்..ஆனால் தவறவிடக் கூடாது.

”தளிர் சுரேஷ்” said...

நட்பு எப்படி இருக்க வேண்டும் என்று சிறப்பாக சொன்னது பதிவு! நன்றி!

திண்டுக்கல் தனபாலன் said...

Visit : http://blogintamil.blogspot.in/2015/07/3.html

G.M Balasubramaniam said...

ஃபேஸ் புக்கில் நட்பு நம்பமுடியாதது. சிலருக்குச் சிலர் விரிக்கும் தூண்டில் ஒரு செய்தியைப் பகிர்கிறேன் ஒரு ஆணும் பெண்ணும் முகநூல் நட்புகள். அந்த நட்பு காதலாய்ப் பரிணமிக்கிறது.ஒருவரை ஒருவர் காண ஒரு இடத்தில் சந்திக்க ஏற்பாடு. ஆண் இளைஞன் பெண் வயதானவர் . அறிமுகம் போது பெண்ணுக்கு 15 வயதில் ஒரு பெண் இருப்பது தெரியவருகிறது ஏமாற்றத்தில் இளைஞன் அந்த மாதைக்கொன்று விடுகிறான் இது நடந்தது கதை அல்ல நிஜம் பத்திரிக்கையில் படித்தது.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

வலைச்சரத்தில் கார்த்திக் புகழேந்தி தங்களை இன்று அறிமுகப்படுத்தியமையறிந்து வாழ்த்துக்கள். தங்களது தளத்தினைக் கண்டேன்.நன்றி.
http://drbjambulingam.blogspot.com
http://ponnibuddha.blogspot.com