Monday, May 18, 2015

நேர்மறை வருத்தங்கள்.

         மனநிலை மாற்றம் என்பது மிக சகஜம். எப்படி வானிலை மாற்றம் இருக்கோ அப்படியான இயற்கை சம்பவம். எப்பவும் உற்சாகம், பாஸிடிவ் என்பது ஓரளவு சரிதான்.
           ஏற்கனவே மனம் நிலைக் கொள்ளாமல் இருந்து வந்தது. நேற்றுக் காலையில் மே பதினெட்டு நினைவாக ஒரு புகைப்படம் பார்த்தவுடன் இன்னும் வருத்தம் கொண்டது..அதையே ஸ்டேடஸ் ஆக போட்டேன். பலர் உற்சாகமாக இருங்கள்..நீங்களா இப்படி ? நம்ப முடியவில்லை என்று சொல்லி இருந்தார்கள்..உடனே சந்தோஷமாக இருக்க மனதை மாற்றிக் கொள்ளவும் அறிவுரை கூறி இருந்தார்கள்.

          வருத்தம், வலிகள் என்பதுதான் இயற்கை மனிதனுக்கு அளித்த மிகப்பெரிய கொடை..ஆறாம் அறிவும்..இல்லாவிடில் உலகமே கொடுரமாக ஆகி இருக்கும். வருத்தப்படும் நேரங்களில் நம்மை சுயமாக அலசிப் பார்க்க இயலும். எங்கே நம் தவறு என்றுப் புரிந்துக் கொள்ள இந்தக் காலக் கட்டம் உதவும். உடனே மனதை மாற்றுகிறேன் என்று சந்தோஷங்களில் ஈடுப்பட்டால் நாம் திருந்தவே முடியாத இடத்துக்கு போய் விடுவோம். வருத்தத்தை எப்படி கையாளுகிறோம் என்பது மிக முக்கியம்.

   என்னைப் பொறுத்தவரை இயற்கை கொடுத்த ஒவ்வொரு உணர்வும சரியானதே. குழந்தைகளுக்கு பயப்படாதே என்று சொல்லிக் கொடுக்கிறோம். அதை விட எப்படி பயத்தைக் கையாள வேண்டும் என்று சரியாக சொல்லிக் கொடுக்க வேண்டும். துணிச்சலும் தேவை. உள்ளுணர்வுதான் பல பயங்களுக்கு காரணம். காட்டில் வாழ்ந்த வேட்டை மனிதர்களின் மிச்ச உணர்வுகளே நாம் கொண்டு இருப்பது. அதில் பத்து சதவிகிதம் கூட இப்பொழுது இல்லை. எல்லாவற்றையும் தொலைத்து விட்டோம். உணர்வுகள் சரியானவை.. காதல், நேசம், பயம், வலி, கோபம், வருத்தம், துணிச்சல், அமைதி, மௌனம், பரபரப்பு எல்லாமே இயற்கைதான்..

        நாகரிகம் என்ற பெயரில் வெடித்து வரும் அழுகையை விழுங்கிக் கொள்கிறோம். அழுதுவிட்டு முகத்தை துடைத்துக் கொண்டு அடுத்த வேலைக்கு செல்லும் மனிதர்களே உணர்வுகளை சரியாக கையாள தெரிந்தவர்கள்..அழுகையை அடக்கி வைப்பவர்கள் அல்ல...அது இன்னும் அழுத்தத்தை கொடுக்கும். என்னைக் கேட்டால் ஆண்களுக்கு வரும் ரத்த அழுத்தம், இதயக் கோளாறுகள் பல எல்லாவற்றையும் அடக்கி வைப்பதால்தான் வருகிறது. அவர்களும் அழுது தீர்த்து விட்டால் மனம் லேசாகும். அழும் நேரத்தில் அழ வேண்டியது மிக அவசியம். இயற்கை அளித்த கொடை அது. என் அக்கா திருமணத்தில் என் கம்பீரமான, ஆளுமையான அப்பா அழுத அழுகை வாழ்நாளில் மறக்க முடியாது..அந்த அன்புக்கும , தவிப்புக்கும் அந்த உணர்வை சரியாக கையாண்டதால் அருமைப்பெண் பிரிவின் துயரத்தை கொஞ்சமாவது கரைத்துக் கொள்ள முடிந்தது.

  ஆனால் இதே உணர்வுகளை பெண்கள் மிகக் அதிகமாக வெளிக் காட்டுவதால் அவர்களுக்கும் பிரச்னைகள். ஒரு கட்டுரைப் படித்தேன்..ஒருப் பெண் காதலின் மிகுதியால் பிரிந்த அவனுடைய காதலுனுக்கு ஒரே வாரத்தில் லட்சக்கணக்கான மெசேஜ், இரண்டாயிரம் இ.மெயில், எத்தனனையோ போன் கால்கள் என்று இடைவிடாமல் அவனை அழுது அழுது தொல்லைப் படுத்தி..அவன் தாங்க முடியாமல் போலீசிடம் சொல்லி..இப்பொழுது எல்லாம் பிடுங்கப்பட்டு அவள் ஜெயிலில் இருக்கிறாள். அவள் வருத்தத்தை, கோபத்தை, அன்பை சரியாக பயன்படுத்த தெரியாமல்  சிறையில்..எல்லாவற்றுக்குமே ஒரு அளவுதான்..

   கோபமும் அப்படிதான்..காந்திஜி சரியான நேரத்தில் கோபப்பட்டு அஹிம்சை முறையில் அந்தக் கோபத்தை ஒத்துழையாமை இயக்கமாக மாற்றி காட்டினார். உலகில் சரியாக கோபத்தை கையாண்டவரில் காந்திஜி ஒருவர். தன ஆளுமையினால் அக்கிரமம் கொண்டு அடிவயிறில் இருந்து எழும் கோபத்தை சரியான திசையில் மக்களை திருப்ப் வைத்தார்..சுதந்திர போர் மலர்ந்தது. யார் என்ன தவறு செய்தாலும் அவர் உண்ணாவிரதம் இருப்பார். அவருக்கு ஓரளவு அத்தனை உணர்வுகளையும் சரியாக கையாள தெரிந்து இருந்தது..ஆனால் கஸ்தூரி பாய் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கவில்லை என்று எனக்கு தோன்றும். இங்குதான் அனைவரும் மனிதர்கள் என்று உணர்கிறோம்.

  நேர்மறை என்பது எப்பவும் சந்தோஷமாக, உற்சாகமாக இருப்பது அல்ல..நமக்கு நேர்மையாக இருக்க வேண்டும். நாம் செய்த தவறுகளின் மூலமே நமக்கு வருத்தங்கள் பல வரும்..பல சமயம் சூழலும் காரணம்..பல வருத்தங்களை நம்மால் எளிதில் சரி செய்ய முடியாது.. அந்த சமயத்தில் வருத்தமாய் இருப்பது அந்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வழி வகுக்கும்..வாழ்வு என்ப து Trial and Error தான்..கற்றுகொண்டே இருக்கும் பொழுது ஒரு நாள் வாழ்வு முடியும்.

  ஒவ்வொரு விஷயத்தில் இருந்து கற்றுக்கொள்ள எத்தனையோ இருக்கிறது..அந்த நேரத்தில் அந்த உணர்வுகளுக்கு மதிப்பளித்து பாடம் கற்றுக்கொண்டு வெளியில் வர வேண்டும்.

    கற்றுக்கொண்ட பிறகு சரியாக நடந்தால் நிஜமாகவே வாழ்வு மகிழ்ச்சி பெறும்..ஆனால் அதுவும் நிரந்திரமில்லை....வாழ்க்கை சக்கரத்தில் நாம் சுழன்றுக் கொண்டேதான் இருக்க வேண்டும். எதுவும் நிரந்தரமில்லை..மகிழ்ச்சி, கோபம், வலி,வருத்தம், இனபம், துன்பம்..அனைத்தும்..

    எல்லாம் மாயை என்று சொல்ல நன்றாக இருக்கும்..எதுவுமே மாயை இல்லை என்ற விஷயம் இருப்பதால் மட்டுமே அறிவியல் வளர்ந்து இருக்கிறது. ஆராய்ந்து அறிவோம்..உணர்வுகளையும்.













3 comments:

Avargal Unmaigal said...

தோளில் தட்டிக் கொடுக்கும் போது நமக்கு வலிப்பது இல்லை ஆனால் சும்மா தட்டினால் நமக்கு கோபம் வருகிறது. அப்படி சும்மா தட்டிக் கொடுக்கும் போது நம்மை தட்டிக் கொடுப்பதாக நினைத்து கொண்டால் வலி தெரியாது கோபம் வராது என்ன நான் சொல்லுறது

கிருத்திகாதரன் said...

நன்றி..துரை சார்.

krish said...

மிகவும் தெளிவாக அலசியுள்ளீர்கள்,நன்று.