Tuesday, June 4, 2013

உதட்டளவில் தங்கள் கீழ்ப்படிந்த மாணவன் (கல்வி விகடன் கட்டுரை)

    மதிப்புக்குரிய ஆசிரியர்களுக்கு,
    நான் இப்போது பனிரெண்டாம் வகுப்பு செல்லும் மாணவன். உங்கள் மொழியில் என்னைப்பற்றி குறிப்பிடவேண்டும் என்றால், 'நன்கு படிக்கும் மாணவன்'.

    உங்களுக்காக எழுதும் இந்தக் கடிதம், ஏதோ ஒரு காலக்கட்டத்தில், ஏதோ ஒரு சூழலில் உங்களுக்குக் கிடைக்கும் என நம்புகிறேன். இதை ஒரு இ-மெயில் கடிதமாகக் கருதினால், கல்வி அமைச்சருக்கு CC; பெற்றோர்களுக்கு BCC இட்டிருப்பதாகக் கருதிக்கொள்ளுங்கள்.

    நேரடியாக விஷயத்துக்கு வருகிறேன். இது, என் கதை மட்டும் அல்ல; பள்ளியில் படிக்கும் பல மாணவர்களின் அனுபவம்.

    நான் சிறுவயதில் மாற்றுமுறை பாடத்திடம் உள்ள  பள்ளியில் சந்தோஷமாக இருந்தவன். அங்கு ஐந்தாம் வகுப்பு வரை மட்டும் இருந்ததால், வழக்கமான தனியார் பள்ளிகளுள் ஒன்றில் ஆறாம் வகுப்பில் சேர்ந்தேன்.
    புதிய பள்ளியில் சில மாதங்கள் நகரமாகக் கழிந்தது. அங்கு அட்ஜஸ்ட் செய்துகொள்ளவே முடியவில்லை. பிறகு, இதுதான் 'பள்ளி' என்று உணர்ந்து பழகிக் கொண்டேன்.

    சுதந்திரமாக பாடம் கற்று கொண்டிருந்த என்னை, டீச்சர்கள் அறையில் அடைத்துவைத்து எப்பவும் 'படி... படி...' என்று கூறுவது, பக்கம் பக்கமாய் வீட்டுப் பாடம் செய்யவைப்பது என்று எல்லாமே வேதனைக்குரியது ஆனது.
    இவையாவது பரவாயில்லை... 40 நிமிடங்கள் அவர்களுக்குத் தெரிந்ததை கொட்டிவிட்டு போவார்கள். புரிந்ததோ, புரியவில்லையோ உட்கார்ந்து நாம் கவனமா கேட்கவேண்டும்.போர் அடித்து, அந்தப் பக்கம் இந்தப் பக்கம் திரும்பினால் திட்டு விழும். ஒழுக்கத்தை போதிக்கறேன் என்று எங்களை ஜெயில் கைதி போல நடத்துவார்கள்.
    எங்கும் ஸ்ட்ரிக்ட்... எதை செய்தாலும் பனிஷ்மென்ட்... எங்களை கண்காணிக்க வேறு இன்னும் சிலர் சுற்றிக்கொண்டு இருப்பார்கள். யாரும் எதுவும் ஸ்கூல்ல பேசி சிரிச்சிடக்கூடாது. நண்பர்களை ஸ்கூலில் பார்க்காமல் எங்கு பார்க்க முடியும்? சக மாணவிகளிடம்கூட நட்புடன் சகஜமாகப் பேசமுடியாது. மீறிப் பேசினால், தண்டனைகூட உண்டு.

    ஆசிரியர்கள்  மாணவர்களை மூன்று வகையாகப் பிரித்து வைத்திருப்பார்கள். மிக நன்கு படிப்பவர்கள், ஆவரேஜ், மந்தமானவர்கள். முதல் மற்றும் மூன்றாம் வகையினர் பத்து சதவிகிதம் இருப்பார்கள். மீதி உள்ள எல்லாரும் சராசரியில் வருவார்கள்.

    கடைசியாக வரும் பத்து சதவிகித மாணவர்களை 'டேக்' செய்து, முத்திரைக் குத்தி இந்த ஆசிரியர்கள் படுத்தும் பாடு இருகிறதே... சொல்ல முடியாத அளவுக்கு மாணவர்கள் வேதனைப்படுவார்கள்! வீட்டிலும் சொல்ல முடியாமல் மனதுக்குள் புழுங்கி ஒரு வித தாழ்வு மனப்பான்மை வந்து விடும். அப்படி ஒரு நெருக்கடியில் சிக்கி, மிகத் திறமையான மாணவர்கள்கூட வீணாக போய்விட்டதை பார்த்து இருக்கிறேன்.

    ஒரு சில ஆசிரியர்களைத் தவிர, அனைவருமே மார்க்கை வைத்துதான் மாணவர்களை எடை போடுகிறார்கள். குறைந்த மார்க் வாங்கும் மாணவர்களை, 'ஒன்றுக்கும் லாயக்கு இல்லை' என்று அடிக்கடி திட்டி, மட்டம் செய்து, நிஜமாக அவர்களை மோசமான நிலையை எட்ட செய்து விடுகிறார்கள். அதனால, அவர்களில் சிலர் கெட்டப் பழக்க வழக்கங்களுக்கு அடிமையாவதும் நடக்கிறது.

    ஆசிரியர்கள் நினைத்தால் எங்களை உற்சாகப்படுத்தி, எந்த உயரத்துக்கும் கொண்டு செல்ல முடியும். ஆனால், அவர்களுக்கு நிறைய மார்க் எடுக்கும் டாப் 10 சதவிகிதம்தான் முக்கியம். மற்றவர்கள் முக்கியம் இல்லை. மிகுந்த பாரபட்சம். ஒரு மாணவனுக்கு ஒரு பாடம் மட்டும் வரவில்லை என்றாலும், எதுவும் வராது என்று முடிவு கட்டும் பழக்கமும் உண்டு.

    அப்புறம் இன்னொரு விஷயம்... அவர்களுக்கு தெரியாத எதையும் நாங்கள் கேட்டுவிட கூடாது. கேட்டால் அவ்வளவுதான். 'தெரியாது... கற்றுக்கொண்டு வருகிறேன்' என்று கூறினால், அவர்களுக்கு மரியாதை போய்விடும். சந்தேகம் கேட்டால்கூட அவர்களுக்கு தெரிந்ததை மட்டும் கேட்கவேண்டும். புரியாத, தெரியாத விஷயத்தை கேட்டாலோ, விவாதம் செய்தாலோ 'அதிகப்பிரசங்கி' என்று கூறி நம்மை அடக்கி விடுவார்கள்.

    நாமாக எதுவும் செய்யக் கூடாது; கேட்கக் கூடாது. அவர்களும் புத்தகத்தை, அன்றைய தனி பாடத்தைத் தவிர வேறு எதுவும் சொல்லித்தர மாட்டார்கள். அதுவும் அவர்களுக்குப் பிடித்த மாதிரி சொல்லி கொடுத்துவிட்டு போவார்கள். நாம் புரியவில்லை என்று கூறினால், 'மக்கு' பட்டம் வந்துவிடும். பிறகு, டியூஷன் சென்று திரும்ப புரிந்துப் படிக்கணும். அப்புறம் எதற்கு எட்டு மணி நேரம் வெறும் பாடங்கள்?

    சில பள்ளிகளில் விளையாட்டு பீரியட்கள்கூட கேன்சல் செய்து பாடங்கள் எடுப்பார்கள். ஆனால், சில ஆசிரியர்கள் மட்டுமே நன்கு நடத்துவார்கள். பிறகு, பள்ளி செல்ல எங்களுக்கு எப்படி பிடிக்கும்?

    நாங்கள் இப்போது இருக்கும் தகவல் தொழில் நுட்பப் புரட்சியில் யூடியூப்பிலும், கூகிளிலும் இதை விட நன்றாகக் கற்று கொள்வோம். அப்படி இருக்கையில், எங்களை சோர்வடைய விடாமல் சுவாரசியமாக, நன்றாக கற்றுத் தருவது ஆசிரியர்களின் கடமை. ஆனால், அவர்கள் அதை உணர்ந்து கொள்வதே இல்லை. மார்க் வந்தால் போதும். அது எப்படி வந்தது என்ற கவலை இல்லை அவர்களுக்கு. புரிந்ததா, புரியவில்லையா என்ற பிரச்னை அவர்களுக்கு இல்லை.

    பிறகு, பள்ளிகளும் மாணவர்களை வதைப்பதை சந்தோஷமாக செய்கின்றன. ஸ்ட்ரிக்ட் பள்ளிகள் என்று பெயர் எடுக்க, தேவை இல்லாத தண்டனைகள் எங்களுக்கு உண்டு. பெரிய வகுப்பு செல்லச் செல்ல நிறைய ஆசிரியர்களின் தரம் சொல்லி கொள்ளும்படி இல்லை. ஆனால், எங்களை அடக்குவதில் யாரும் சளைத்தவர்கள் இல்லை.

    எனக்குத் தெரிந்து பள்ளியை விட்டு நின்ற, கெட்டப் பழக்கங்களுக்கு ஆளான மாணவர்கள் நிறையபேர் உள்ளனர். அதில் பெரும்பாலோர் ஆசிரியர்களின் மதிப்பீடுகளால் ஒரு வித தாழ்வு மனப்பான்மைக்கு சென்று வழி தவறி விடுகிறார்கள். மாணவர்களை நல்வழியில் ஈடுபடுத்தும் கடமையை விட்டுவிட்டு, அவர்களை மட்டம் தட்டி வழிமாறச் செய்வதில் என்ன சாதிக்க முடியும்? இது போன்ற மாணவர்களை நான் உதாரணமாக காட்ட முடியும். கண்ணால் பார்தததைதான் சொல்லுகிறேன். இதுதான் ஆசிரியர்கள் செய்யும் சாதனைகளா?

    கட்டமைப்பு, தொழில் நுட்பம், நல்ல விசாலமான அறிவு எல்லாம் இருந்தாலே இந்த காலத்து மாணவர்களின் அறிவுக்கு ஈடு கொடுக்க முடியாது. ஆனால், பெரும்பாலான பள்ளிகளில் இவை ஏதும் இல்லை. எங்களை சொந்தமாக ஒரு ப்ராஜக்ட்கூட செய்ய விடுவது இல்லை. அவர்கள் சொல்லுவதை கேட்டு, ஆட்டு மந்தை போல தலையாட்ட வேண்டும். எங்களை யோசிக்கவிடாமல் செய்வதில் அத்தனை சந்தோஷம்.

    இப்படி இருந்தால் நாட்டுக்கு எப்படி ஆராய்ச்சியாளர்கள் கிடைப்பார்கள். எந்தத் தனித்துவமும் இல்லாத மாணவர்களை உருவாக்கி, என்ன சாதிக்கப் போகிறார்கள்? அனைவரும் நூற்றுக்கு நூறு வாங்கினால் சமுதாயம் முன்னேறிவிடுமா? இந்த ஐந்து பாடங்களில் மட்டும் வாழ்கைக்கு தேவையான அத்தனையும் கற்று கொள்ள முடியுமா?

    பதினைந்து வருடங்கள்... வாழ்கையில் முக்கியமான வருடங்களை காலையில் இருந்து சாயங்காலம் வரை பள்ளியில் செலவு செய்கிறோம். ஆனால், என்ன கற்று கொள்கிறோம் என்றால், மிக குறைவே. ஆனால், அதைவிட அதிகமாக வெளியில்தான் கற்றுகொள்கிறோம். நல்லதோ, கெட்டதோ வெளியில் கற்றுக்கொள்வதை விட செலவிடும் நேரத்தில் பள்ளியில் கற்றுக்கொள்வது மிகக் குறைவு.

    எனக்குத்தான் இப்படியெல்லாம் தோன்றுகிறதோ என்று எண்ணி, இதுபற்றி என் நண்பன் ஒருவனிடம் விவாதித்தேன். அவன் வன்முறையை கையில் எடுக்கும் அளவுக்கான மனநிலையை இந்தக் கல்வி முறை போதித்து உள்ளது என்பதை உணர்ந்தேன்.

    என்னைப் போன்ற பெரும்பாலான மாணவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல் 'இந்த காலத்து பிள்ளைகள்' என்று  குறைசொல்வதில் என்ன பயன்?

    கல்வி சீர்திருத்தம் தேவையான ஒன்று. அது நடக்காவிட்டால் பெரும் கலாசார சீரழிவை எதிர்நோக்க வேண்டி இருக்கும் என்று உங்களுக்கு புரிய வைக்கவே இந்தக் கடிதம். இன்னும் எத்தனையோ இருக்கு... ஒரே கடிதத்தில் அத்தனையும் கொட்ட முடியவில்லை.

    ஆசிரியர்களாகிய நீங்கள், மாணவர்களாகிய எங்கள் நிலையில் இருந்து கொஞ்சம் யோசித்துப் பார்த்து செயல்படுங்கள்.

    இனி, இந்தியாவை ஒளிர வைக்கும் பங்கு யார் கையில் என்று தீர்மானம் செய்யுங்கள்!
    இப்படிக்கு,
    உதட்டளவில் தங்கள் கீழ்ப்படிந்த மாணவன்,
    கார்த்திக்.
    * மாணவர் கார்த்திக் விவரிக்க, எழுதியவர்: கிர்த்திகா  

7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...

நல்லதொரு (சிந்திக்க வேண்டிய) ஆக்கம்... பாராட்டுக்கள்...

வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_12.html) சென்று பார்க்கவும்... நன்றி...

Anonymous said...

உண்மை தான்,பெரும்பாலான ஆசிரியர்கள் மாணவர் பக்கம் நின்று அவர்களின் பிரச்சனைகளை புரிந்துகொள்ள முயலவதில்லை.அதைப் போல் கல்வியில் பின்தங்கியுள்ள மாணவர்களை ஊக்கப்படுத்துவதும் இல்லை.பல மாணவர்களின் எதிர்காலம் இதனால் வீணாகின்றது.புரிந்துகொள்வார்களா ஆசிரியர்கள்.சாட்டை படமும் இதை மையமாக கொண்டுதானே எடுக்கப்பட்டது

Ranjani Narayanan said...

வணக்கம் கிருத்திகா.
வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வந்தேன். வலைசர அறிமுகத்திற்கு முதலில் வாழ்த்துகள்.

பல மாணவர்களின் உள்ளத்தில் இருப்பதை அப்படியே எழுதி இருக்கிறீர்கள். மனது மிகவும் வருத்தப் பட்டு போனது. ஒவ்வொரு தலைமுறையிலும் இப்படி நடந்திருக்கிறது. மாணவர்களை மட்டம் தட்டிப் பேசும் ஆசிரியர்களை நினைக்கையில் எத்தனை பிஞ்சு உள்ளங்களை இவர்கள் நோக அடிக்கிறார்கள் என்று யார் இவர்களுக்கு எடுத்துச் சொல்வது என்று தெரியவில்லை.

மேலும் சிறப்பாக எழுத வாழ்த்துகள்!

arul said...

great post of what every one had experienced in their school days

திண்டுக்கல் தனபாலன் said...

Once Again :

Visit : http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_25.html

ஜீவா said...

உள்மனச யாரோ படம் பிடிச்சு காட்டின எபக்ட்...

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

எழிலின் வலைச்சரப் பகிர்வின் மூலம் வந்தேன். வாழ்த்துகள்!
நம் கல்வி முறையை அப்படியேப் பதிவு செய்து விட்டீர்கள்! நெஞ்சை சுடும் உண்மை!!! விரைவில் மாற்றம் ஏற்பட வேண்டும்...