Friday, April 5, 2013

இந்தக் கதையைப் படிச்சிட்டீங்களா?

”விடியற்காலை வேலையை பரபரப்பாக பார்த்து கொண்டு இருந்தேன்.......” சிறுகதைன்னா இப்படித்தானே ஆரம்பிக்கணும். ஏன் என்றால் நான் இது வரை சிறுகதை, பெரியகதை எந்த கதையையும் எழுதியது இல்லை. அப்புறம் ஏன் உங்களை வதைக்க முயற்சி பண்றேன்னு கேக்கறீங்களா?  நல்ல கேள்வி .. பதில் சொல்றேன் ஆனா பெரிய பதில். கேள்வி கேட்டுடீங்க, இனிமே வழியே இல்லை, நீங்க தப்பித்து போக முடியாது. பதிலைச் சொல்லாம நான் விடுவதா இல்லை. இருங்க கதையை கேட்டா கடைசியா காப்பி சுட, சுட சூப்பரா கொடுப்பேன். என்ன கதையக் கேக்க போறீங்களா ..உங்க விதி உக்காருங்க சொல்றேன்.


நான் தமிழ் வாசகி.. வாசகின்னவுடனே இலக்கிய வாசகி அளவுக்கு நினைக்க வேண்டாம். வார, மாச பத்திரிக்கை வாசகி. ஆனால் பஜ்ஜியை சுத்தி  வரும் பேப்பர் எழுத்துகளைக் கூட தீவிரமா வாசிக்கும் அதிதீவிர வாசகி. இப்படிப்பட்ட வாசகர்களுக்கு ஒரு குணம் இருக்கும். எதையாவது எழுதிடனும்னு ஒரு வேட்கை இருக்கும் இல்ல. அப்படி இருக்கிறப்ப எனக்கு சிக்கினது ஃபேஸ்புக். அதைத் தமிழில் முகநூல், முகப்புத்தகம்னு போடற அதி தீவிர தமிழ் சாதி இல்ல நான். ஏதோ தமிழை அடிச்சோமா, (டைப்புங்க), படிச்சோமான்னு போற ஆள்.

வாழ்க்கைன்னா திடீர்த் திருப்பங்கள் இருக்கத்தானே செய்யும். அப்படிதான் ஆச்சு. முதல்ல ஒரு க்ரூப்ல எல்லாரும் தமிழ்ல பேசிக்கிட்டு இருந்தாங்க. ஒரே ஆச்சர்யமா போச்சு. நான் yendi yeppadi irukke..saaptiyaa, yeppo pree ? அப்படின்னு தமிழிலும்  இல்லாம ஆங்கிலத்திலும் இல்லாம ஒரு வலைதள பாஷை பேசிகிட்டு இருந்த காலம். அப்படியே போயிருந்தா உங்களுக்கு இந்த நிலைமை வந்திருக்காது. ஆனால் பாருங்க விதி யாரையும் விட்டு வைக்கிறது இல்ல. இருங்க கொஞ்சம் காதைக் கொடுங்க இந்த ரகசியத்தை உங்க கிட்ட மட்டும் சொல்றேன். ரகசியமா வச்சுக்கனும். ஏன் அப்படி டைப் செஞ்சேன்னா எனக்கு ரெண்டு பாஷையும் அரைகுறைதான்.

அப்படியே கொஞ்ச நாள்ல கவிதைன்னு சொல்லி  யாருக்கும் புரியாம, மொட்டையா போஸ்ட் பண்ற வழக்கம் .. ஓர் சாம்பிள்..

அற்புதங்கள் நடப்பதும்
வைரங்கள் இருப்பதும்
நொடிகள் கடப்பதும்
நேரம் பறப்பதும்
நாம் அறியாமல்..
கசிந்துருகுவது
ஏனோ புரியாமல்
உருகி,நெகிழும்
நெஞ்சங்கள்.



ஹையோ....... இது சும்மாங்க.. இருங்க காபி கண்டிப்பா உண்டு. தோ போய் பில்டர்ல டிகாஷன் போட்டுட்டு வரேன். சரி இருக்கீங்களா. இப்படி உடைச்சுப் போட்டு கவிதைன்னு பேர் பண்ணி கைதட்டல் வாங்குவோம். அதுவும் எப்படின்னு நினைக்கறீங்க. இருபது பேர் இருப்போம். அதுல பத்து கமென்ட் தேறிடும். இதுல கண்ணுக்கு தெரியாத ஒரு விதி. நீ எனக்கு கைதட்டனும், நானும் வந்து தட்டுவேன். வடிவேலு சொல்ற மாதிரி கோட்டுக்கு அந்த பக்கம் நானும் வரமாட்டேன் நீனும் வரக்கூடாதுங்கற டீலிங்கில் சுத்திகிட்டு இருந்தோம். அந்த டீலிங் எனக்கும் ரொம்ப பிடிச்சி போய் விடாம லைக் போட்டு அருமை, ஆஹா, சூப்பர், அட, எப்படி இப்படி, கலக்கிட்ட , செம அப்படின்னு வார்த்தைகளைப் போட்டு கைதட்டிட்டு வந்துடுவேன். அப்பதானே நான் எழுதறதுக்கு கைதட்டல் வரும்.

என்ன இருந்தாலும் மனுசப் பயபுள்ள மனசு பாராட்டுக்கு அப்படி ஏங்குது. எங்கயும் கிடைக்காத பாராட்டு இங்கு கொட்டு, கொட்டுன்னு கொட்டும். அது இந்த டீலிங் மூலமாதான் என்று தெரிஞ்சும் நம்மளை பாராட்ட நாலு பேர் இருக்காங்கன்னு சந்தோஷமா காலம் போகும். இப்படி போய்கிட்டு இருந்த காலத்துல எப்படியோ, எங்கயோ கோத்து, கோத்து விடப்பட்டு நிஜமாகவே தமிழ்ல எழுதற எழுத்தாளர்கள் இருக்கிற ஒரு வட்டத்துக்கு போயிட்டேன். அங்க போனா வாசிப்புன்னா, வாசிப்பு அப்படி ஒரு வாசிப்பு. நாம பொட்டல எழுத்தை கூட வாசிக்கிற சாதி. அல்வாவை உள்ள வச்சு வாசிக்க சொன்னா.. உடனே எண்ணெய் பேப்பர்ன்னு நினைக்க வேண்டாம். நிஜமா அப்படி ஒரு நல்ல அறிமுகங்களும் வாசிப்பும் கிடைச்சது.

அப்படி வாசிச்சிட்டு இருக்கிறப்ப நம்ம குணம் போகுமா ..பெரிய ஆளுங்க இருக்காங்க, நாம அடக்கி வாசிக்கனும்னு ஒரு மரியாதை கூட இல்ல. ஏன்னு கேக்கரீங்களா. அதாங்க இந்த பேஸ்புக் மகிமை. கைதட்டல் வியாதி தலைமுடியை பிடிச்சி ஆட்டும். அதில் இருந்து தப்பிக்க முடியாது. அதனால ஸ்டேட்டஸ் போடாம இருக்கவே முடியாது. எத பார்த்தாலும் ஸ்டேடஸ் போட்டே ஆகணும். இல்லாட்டி தலை வெடிச்சிடும். ஸ்டேடஸ்ண்ணா என்னனு நினைக்கறீங்க. வேற ஒன்னும் இல்ல. காலையில சாப்பிட்டா இட்லியப் பத்தி நேரா போட்டா இதெல்லாம் ஒரு ஸ்டேடஸ் ன்னு நினைப்பாங்க. அதனால இட்லி சுடுவது எப்படின்னு போட்டுட்டு, இல்லாட்டி ஒரு இட்லி கவிதை, ஒரு காமெடி ஏதாவது தேத்திடலாம். அப்படி கஷ்டப்பட்டு ஸ்டேடஸ் தேத்தி, கடைசியா இன்னிக்கு இட்லி வீட்டுலன்னு  போட்டு, போட்டோ போட்டு டேக் பண்ணனும். அது ரொம்ப முக்கியம்.

கேமிரா கைவசம் இல்லாட்டி கவலை இல்லை. கூகிள போய் தேடினா விதம்,விதம் நாலு வகை சட்னி,சாம்பார் உடன் சரவணபவன் இட்லி கூட கிடைக்கும்.அதை போட்டா இன்னும் பிச்சிக்கும். அதுதான் டேக் பன்றதோட மகிமை.அது நேரா எல்லா வால்லையும் உக்காந்துக்கும். அப்பத்தான் நாம எழுதினத நாலு பேர் படிப்பாங்க. மனுஷன் எப்போதும் தனக்கு அங்கீகாரம் வேணும்னு நினைக்கிறான். அத எப்படியோ மார்க் பய கண்டுபிடிச்சி நம்மளை வச்சு காசை அவன் அள்ளோ,அள்ளோன்னு அள்ளறான்.

இப்படி இட்லி,கவிதை,ஸ்டேடஸ்ன்னு போய்கிட்டு இருந்த வாழ்க்கை எங்க திசை மாறி வந்ததுன்னு கேக்கறீங்க இல்லை? இல்லையா ப்ச் ..சரி,சரி எனக்கு கேட்ட மாதிரி இருந்துச்சு. திடீர்னு அங்கையே நான் போடற ஸ்டேடஸ்ஐ ஷேர் பண்ண ஆரம்பிச்சாங்க. என்னடா இது இப்படி ஷேர் பண்ணி பாசத்தை பொழியிற மக்காஸ்க்கு கைமாறா ஏதாவது செய்யனும்னு நல்லதா ஒரு ரெண்டே ரெண்டு.. நம்ப மாடீங்க என் பேஸ்புக் வரலாற்றுல நான் போட்டது நிஜமா ரெண்டுதான் நல்ல ஸ்டேடஸ். ஆனா அதுதான்  ஹைலைட் ஆயிருக்கும், நிறைய ஷேர் ஆயிருக்கும். அதனால் நம்மகிட்ட ஏதோ விஷயம் இருக்குன்னு திரும்பி பார்த்தாங்க நம்ம நட்பூஸ். இதெல்லாம் பேஸ்புக் பாஷைங்க நாங்க மக்கா, நட்பூஸ், மாமே அப்படின்னு நிறைய வச்சு இருக்கோம். ஆனா ஒண்ணு சொல்றேங்க இந்த பேஸ்புக் அடிக்சன் ஆகறதுன்னு ஒரு விஷயம் இருந்தாலும் அறிமுகங்கள், நல்ல நட்புகள் கிடைக்க ஒரு வாய்ப்பு. சரியா பயன்படுத்திகிட்டோம் என்றால் சீரியல் பார்த்து கண்ணீர் விடறதை விட பேஸ்புக் நல்ல விஷயம்தாங்க.

அதுவும் வெளிநாட்டுல இருக்கிறவங்களுக்கு, வெளில போய் நம்ம பாஷை பேச முடியாம, பகிர முடியாம, குடும்பத்தையும் விட்டுட்டு இருக்கிறவங்களுக்கு இது பெரிய வடிகால். என்ன பொம்பள புள்ளைக கொஞ்சம் கவனமா இருக்கணும். இன்பாக்ஸ்,சாட் ன்னு போகாம பொதுவா சுத்திகிட்டு இருந்தா ஒரு பயமும் இல்லீங்க.

படிக்கலாம், கதைக்கலாம், சந்தோஷமா இருக்கலாம். சரி கோபமா இருக்கீங்களா அதுக்கும் வடிகால் இருக்கு. எதையாவது ஒரு மேட்டர் தேத்தி, அதுவும் ஆண், பெண் விஷயத்தை எடுத்தா கமெண்ட்ஸ் பிச்சிகிட்டு போகும். நல்லா குடுமிய முடிஞ்சுவிட்டுடு நாம வேடிக்கை பார்க்கலாம். ஏன் இந்த கொலைவெறின்னு கேக்கறீங்க இல்ல. நாங்க கிராமத்து ஆளுங்க. தெருவுல ஏதாவது சண்டை நடக்கும்  அதை வேடிக்கை பார்த்துட்டு வந்து தெருவே கொல்லுதுன்னு அதை பத்தியே பேச்சா இருக்கும். நல்லா சாப்பிட்டுட்டு திண்ணையில உக்கார்ந்து அதே வம்புதான் பேசுவோம். இதே திண்ணை மாதிரிதாங்க ஃபேஸ்புக். ஆனா இங்க இப்படிக் கோர்த்து விட்டாதான் சண்டை நடக்கும். அப்பதானே நாமும் திண்ணையில் உக்கார்ந்து நாள் கணக்கா பேச  முடியும்.

அப்புறம் நிஜமாகவே பேஸ்புக் மூலமா தொடர்ப்பு ஏற்படுத்தி ரத்ததானம், கல்வி உதவின்னு சமூக சேவை எல்லாம் நடக்குதுங்க. அதுக்கு  நல்லவங்களா நாலு பேர் இருக்காங்க. நாம ஏங்க அங்க போகப்போறோம். பிறவி எடுத்ததே பேச்சு, பேச்சு, பேச்சுதானே. அதனால நல்ல அரட்டை அடிக்கிறவங்களோட சேர்ந்து அரட்டை அடிச்சிகிட்டு இருப்பேன். அப்புறம் எப்படி கதை எழுதற விபரீத ஆசை வந்துச்சுன்னு கேக்கறீங்க இல்ல... நல்லதா போட்ட ரெண்டு ஸ்டேடஸை என் வட்டத்துல இருக்கிற பத்திரிக்கை ஆளுங்க பார்த்துட்டு நாம நிஜமாவே இப்படிதான் எழுதுவோம்னு கணக்கு போட்டுட்டாங்க. நல்ல ஸ்டேட்டஸ் வந்தா வலைப்பேச்சு பகுதில பத்திரிகையில வரும் அதை பார்த்துட்டு ஊருக்கு போன் செஞ்சு சொல்லி ஒரே சந்தோஷமா இருக்கும். அதுவும் நம்ம போட்டோவ தக்குனூன்டு போடுவாங்க பாருங்க அப்படி ஒரு சந்தோஷம். அதுவும் யாராவது கேப்பாங்க உன் போட்டோ பார்த்தேனேன்னு அப்படி கேக்கலையா நாம் அவங்கள இழுத்துப் பிடிச்சி அவங்க வீட்டு கதையெல்லாம் நைசா விசாரித்து. அவங்க அழுதா நாமும் அழுது இடுக்குல சமயம் பார்த்து சொல்லிடனும். நேரா சொல்லிட்டா இவ என்ன இப்படி பெருமை அடிச்சிகிறான்னு எண்ணம் வந்துடும். அவங்க உடனே நானும் வாங்கிப்போய் படிக்கிறேன்னு சொல்லுவாங்க. கண்டிப்பாச் செய்ய மாட்டாங்க. அதனால ஒரு பிரதிய வச்சிக்கிட்டு இருங்கதோ பைக்குள்ள எப்படியோ இருக்கு’னு சொல்லி உடனே காமிச்சிடனும், அவங்க முகத்தை பார்க்கக் கூடாது. லேசா பொறாமை வந்தாக் கூட கண்டுக்கக் கூடாது நாம பெருமை பட்டுக்கனும் அதான் முக்கியம்.

அப்படி வந்தா நான் எழுத்தாளர்தானே. அப்புறம் கதை எழுதாம எப்படி இருக்கிறது.அதனாலதாங்க ஆரம்பிச்சேன் விடிகாலையில் பரபரப்பாக வேலை பார்த்து கொண்டு இருக்கும் பொழுதுன்னு. இந்த காப்பிய குடிங்க நான் சொல்ல வந்த கதைய முடிச்சிடறேன். ஆனந்த பவன் போறீங்களா, இருங்க அங்க  சூடா முறுகல் தோசை கிடைக்கும். இன்னிக்கு எல்லாம் என் செலவு. வாங்க போகலாம்.அப்படியே என்னோட முதல் சிறுகதைய சுடச்சுட சாப்பிட்டுகிட்டே சொல்லிடறேன்.

விடியற்காலை வேலையை பரபரப்பாக பார்த்து கொண்டு இருந்தேன்.........”


15 comments:

Kamali said...
This comment has been removed by the author.
Kamali said...

கலக்கிட்டீங்க போங்க

கிருத்திகாதரன் said...

நன்றி கமலி. முதல் கமென்ட்.

miller paul said...

அருமை .....கிருத்திகா.....எழுதுவதற்கு தனித்திறமை வேண்டும் ...அதுவும் பிழை இல்லாமல் ....எழுதுவதற்கு ....வாழ்த்துக்கள் .....தொடர்க உம்...பணி.....

Unknown said...

அருமையான ஆரம்பம் நினைச்சதை சொல்றீங்க மனசுல உள்ளதை "இந்த முகநூல் கதையை கொஞ்சம் கேளுங்க காபி குடிச்சிட்டேன்னு சொல்றீங்க "

வாழ்த்துக்கள் ...


படிச்சிட்டே இருந்தேன் எங்கடா வெளிநாட்டு நட்பு பத்தி ஒன்னும் சொல்லாம யோசிச்சிட்டே வந்தப்ப நாலு வார்த்தை வந்துடுச்சி. கொஞ்சம் சந்தோசம் .தொடருங்கள் எங்கள் ஆதரவுடன் ... :)

sdsiva said...

உயிர்ப்பான எழுத்துக்கள்
கடைசிவரைக்கும் காபி தரவே இல்ல.
என்னவோ போங்க, இத படிக்கிறப்போ எங்க ஊர்ல நாங்க சின்ன வயசுல சண்ட வேடிக்கை பார்த்தது, சண்ட போட்டது ஞாபகம் வந்துச்சு.

iyarkai anu said...

அட...கதை ...இப்டி போகுதா ...?!அபிட்டி

iyarkai anu said...

அட கதை இல்லாமலும் கதை சொல்ல தனித்திறமை வேண்டும் ..வாழ்த்துக்கள் கிருத்தி...

srinivasan said...

அருமை கிர்த்திகா...... உங்கள் நட்பு கிடைததற்கு பெருமைபடுகிறேன் நன்றிகளுடன்......

selvishankar said...

நல்ல பில்டர் காபி குடிச்ச சந்தோஷம் கிருத்தி....

நிறைய எழுது..படிக்கக் காத்திருக்கோம்.

தமிழ் அமுதன் said...

நல்ல எழுத்து நடை...!

r.v.saravanan said...

வாழ்த்துக்கள்

raja said...

வாழ்த்துக்கள்...

வெண்ணிலா said...

செம்ம........... கல்லகிட்டடா கீர்த்த்.

Kathiravan Rathinavel said...

கண்டிப்பா சொல்றேன்..
உங்க எழுத்து நடைக்கு கதை எழுதுனா விறுவிறுப்பா போகும்