Wednesday, April 3, 2013

ஹோம் ஸ்கூலிங்

ஹோம் ஸ்கூலிங் ஒரு அறிமுகம்.

இத்தனை வாரங்களாக பள்ளிகள் ,பாடமுறைகள் அறிமுகம் பற்றிப் பார்த்தோம்..இந்த வாரம் பள்ளியே போகாமால் பள்ளிப் படிப்பை முடிக்கும் முறை பற்றி எழுதுகிறேன்.

என்னது பள்ளிக்கு போனாலே நம்ம பசங்க ஒழுங்கா படிக்கறது இல்லை பள்ளிக்கே போகாம படிக்க முடியுமா ?

ஆச்சர்யமா இருக்கேன்னு என்னிடம் நிறைய பெற்றோர்கள் சொல்லி இருக்காங்க.ஆமாம் இந்தியாவில் அதுக்கும் வழிமுறை இருக்கு..ஆனால் அதிகம் வெளியில் தெரிவது இல்லை அவ்வளவுதான்.

ஹோம் ஸ்கூல் ..அதாவது வீட்டில் இருந்தே படிக்கும் முறை .வெளிநாட்டில் இந்த முறையில் நிறைய மாணவர்கள் படிப்பது வழக்கம். இந்தியாவில் அதிகம் கேள்விப்படாத விஷயமாகவும் அதே சமயத்தில் பெற்றோர்கள் மாணவர்களின் எதிர்காலம் பற்றிய பயத்தாலும் அதிகம் யாரு முயற்சிப்பதில்லை..அப்படியேமுயற்சிக்க முனைந்தாலும் அனைவரும் பயமுறுத்துவதில் திரும்ப பள்ளிக்கே அனுப்பிவிடுவார்கள். வறுமையில் வாடும் சிலர்,பள்ளி படிப்பை முடிக்காமல் விட்டவர்கள், ஏதோ ஒரு காரணத்தால் பள்ளிக்கு போக முடியாதவர்கள் போன்றவர்களும் வீட்டில் இருந்தே படித்து பரீட்சை எழுதி வசதிகள் உண்டு.

சரி,சரி நான் நீ ன்னு எட்டா1ம்பு பாஸ் எல்லாம் கியூல வராதிங்க..இது முதியோர் கல்வி கட்டுரை இல்லை..ஸ்கூல பசங்க பத்தின கட்டுரை.

ஹோம் ஸ்கூலிங் இதை பற்றி ப்ளாக்ஸ் ,இணையதளம் என்று அது பற்றிய தகவல்கள் நிறைய இருந்தாலும் அனுபவம் உள்ள பெற்றோர்கள்,அதன் மூலம் வெளியே வந்த மாணவர்கள் பற்றிய அறிமுகங்கள் இல்லாததால் முயற்சிப்பவர்களுக்கு கூட பெரும் தயக்கம் இருக்கு.

இன்றைய கல்வியின் பயமுறுத்தும் வணிக சூழ்நிலை, இடமாற்றம் , பயமுறுத்தும் சில பள்ளிகளும் பாடமுறை களும்,உடல் நலம்,விளையாட்டு,கலைகளில் அதிகம் ஆர்வம் உள்ள மாணவர்கள் அதனால் பள்ளி கூடத்திற்கு செல்ல நேரமின்மை போன்றவர்களுக்கு வீட்டில் இருந்து படிப்பது அதாவது ஹோம் ஸ்கூலிங் ஒரு வரம்.

ஹோம் ஸ்கூலிங் எந்த அளவுக்கு நிறைகள் உள்ளதோ அந்த அளவுக்கு குறைகளும் சில ஆபத்தும் இருக்கு..முறையான கல்வி பற்றிய அனுபவமோ, தேடலோ , பயிற்சியோ இல்லாவிடில் மிக கஷ்டம். முறையான டைம் டேபிள் ,சிலபஸ் இல்லாவிடில் தனிப்பட்ட முறையில் உள்ள பாடத்திட்டம் ,மொழி பாடங்கள்,அதற்கு உரிய புத்தகங்கள்,உபகரணங்கள் எல்லாம் தேவை .

அவ்வபொழுது அவர்கள் கற்றுக்கொண்டதை அளவீடு செய்து சரியான முறையில் கற்றுகொடுக்க வேண்டும்.பெரிய குழந்தைகளுக்கு அதற்குரிய சிறப்பு வகுப்புகளில் சேர்த்து படிக்க வைக்க வேண்டும்.சரியான நேரம் ஒதுக்கி சரியான முறையில் கற்று கொடுக்கப்பட்டால் பள்ளியில் படிக்கும் மாணவர்களை போல அவர்களும் எளிதாக பரீட்சைகளை எதிர்கொள்ளலாம்.

எட்டாவது,பத்தாம்,பனிரெண்டாம் வகுப்பு பரிட்சைகள் இந்தியாவில் நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் ஓபன் ஸ்கூல் மூலம் நடத்தப்படுகிறது. வருடம் இருமுறை நடத்துகிறார்கள்.அவர்களே புத்தகம் விநியோகம் செய்துவிடுகிறார்கள். இங்கு வாங்கிய பத்து,பனிரெண்டாம் வகுப்பு சான்றிதழ்கள் இந்தியாவில் அனைத்து பள்ளி, கல்லூரிகளில் ஏற்றுக்கொள்ளபடுகிறது. பரீட்சை எழுத மையங்களும் இந்தியா முழுக்க உள்ளன.அது மட்டும் இல்லாமல் சில மாநில கல்வி வாரியங்களும் தனி தேர்வை அறிமுகபடுத்தி உள்ளன.

பதினைந்து வயது குறைந்தபட்ச தகுதி பத்தாம் வகுப்பு எழுத..வேறு எதுவும் தேவை இல்லை..எந்த வயதில் , யார் எப்பொழுது வேண்டுமானாலும் பத்தாம் வகுப்பு எழுதலாம்.பன்னிரெண்டாம் வகுப்பு எழுத பத்தாம் வகுப்பு சான்றிதழ் தேவை படுகிரது . .இங்கும் விருப்பபாடங்கள் தேர்வும் உண்டு.சரியான நேரத்தில் அப்ளை செய்தால் அவர்களின் இணைய தளத்தில் அத்தனை விவரங்களும் உள்ளன. வழக்கமான எந்த பாடத்திட்டம் படிகிறமோ அதே அளவான பாடத்திட்டம் இங்கும் உண்டு.மிக,மிக சுலபமான பாடத்திட்டம் என்று சிலர் சரியாக கவனிக்காமல் சொல்கிறார்ள். CBSE க்கு சமமான பாடத்திட்டத்தை கொண்டு உள்ளது. ஸ்பெஷல் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் இந்த பாடத்திட்டத்தை தேர்ந்து எடுத்து கொள்கிறார்கள்.

http://www.nios.ac.in/ இந்த லிங்க் சென்றால் அனைத்து விவரங்கள்,ஆன்லைன் புத்தகங்கள்,தேர்வு அட்டவணைகள் அனைத்தும் இருக்கு. மிக குறைந்த பரீட்சை கட்டணம். மிகுந்த வரவேற்பை பெற்று கொண்டு இருக்கிறது..சில் அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் இந்த முறையில் மாணவர்களை தயார் படுத்துவதாக கேள்விபடுகிறேன். ஓபன் ஸ்கூலை கூட தனியார் கல்வி மையங்கள் விட்டு வைப்பதில்லை.

இதை தவிர்த்து ஹோம் ஸ்கூலிங் மாணவர்களுக்கு இன்னொரு முறையும் இருக்கு.அதுதான் இண்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் எழுதும் IGCSE பாடத்திட்டம். இங்கு ஒரு வசதி என்னவென்றால் குறைந்தபட்ச வயது இல்லை. இங்கு தேர்ந்தெடுக்க அதிக பாடங்கள் இருப்பதால் விருப்பப்பட்ட ஐந்து பாடங்கள் படித்தால் போதும்.கட்டணம் கொஞ்சம் அதிகமாக இருந்தாலும் பள்ளியில் கொட்டி கொடுக்கும் கட்டணத்தை பார்த்தால் இது ஒன்றும் இல்லை என்றே தோன்றுகிறது.

IGCSE முறையில் படிக்கு பொழுது மிக கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டியது ..சரியான பயிற்சி.அந்த முறையில் பயிற்சி பெற்ற ஆசிரியர்களோ இல்லாவிடில் அந்த முறை பற்றி நல்ல அறிமுக உள்ளவர்கள் மட்டுமே சிறப்பாக பயிற்சி கொடுக்க முடியும்.நம் இந்திய முறைப்படி படித்த மாணவர்கள் சரியான பயிற்சி இல்லாவிட்டால் கேள்வி முறைகள் பார்த்து குழப்பம் அடைவார்கள்.

http://www.cie.org.uk/qualifications/academic/middlesec/igcse/overview இதில் இந்த தேர்வு பற்றி அத்தனை தகவல்களும் உள்ளன.மிக சில இண்டர்நேஷனல் பள்ளிகள் மட்டுமே தனி தேர்வை அனுமதிக்கின்றன. இதுவும் வருடம் இருமுறை எழுதும் வசதி உண்டு.இந்த முறை இந்திய அளவில் மாட்டும் இல்லாமல் சில வெளிநாடுகளிலும் ஏற்று கொள்ளப்பட்டதால் ஹோம் ஸ்கூல் மாணவர்களுக்கு இது ஒரு வரமே.

இப்படி எல்லாம் வசதி இருந்தா நாமும் படிச்சி பாஸ் பண்ணி இருக்கலாம் என்று தோன்றுகிறதா..ம்ம்ம் இப்பவும் ஒன்னும் மோசமில்லை..வாங்க முதல்ல பத்தாம்பு பாஸ் பண்ணிடுவோம்.

No comments: