Tuesday, June 4, 2013

உயர்கல்விக்கு வெளிநாடு செல்ல விருப்பமா..? - ஒரு நிமிஷம்! கல்வி விகடன் கட்டுரை.


    வெளிநாட்டுப் படிப்பு 
    உயர்கல்விக்கு வெளிநாடு செல்ல விருப்பமா..? - ஒரு நிமிஷம்!
    என்றால், மேற்படிப்புக்கும், ஆராய்ச்சிப் படிப்புக்கும்தான் எனும் நிலை மாறி, இப்பொழுது பட்டப்படிப்புக்கே வெளிநாடு செல்ல மாணவர்கள் படையெடுக்கிறார்கள். இதன் முக்கியக் காரணம்... இந்தியாவில் தலைசிறந்த கல்லூரிகள்கூட உலகத் தர வரிசையில் 200-க்கும் கீழே இருப்பதுதான். அந்த கல்லூரிகளில் இடம் கிடைக்க மிகுந்த போட்டி.

    உதாணத்துக்கு, ஐ.ஐ.டி. - மும்பைதான் இந்திய மாணவர்களின் முதல் தேர்வு. ஆனால், அது, உலக அளவில் கவனத்துக்குரிய தரவரிசைப் பட்டியலில் 200-க்கும் மேல் என்ற நிலையில்தான் உள்ளது.

    சிங்கப்பூர், சீனா, தைவான், ஜப்பான் போன்ற ஆசிய நாடுகள் மட்டுமின்றி, மலேசியா, சவுதி அரேபியா, கொரியாவில் உள்ள பல்கலைகழகங்கள்கூட நமக்குமேல் இருப்பது, நாம் எந்த அளவுக்கு கல்வித் துறையில் பின்தங்கி இருக்கிறோம் என்பதைக் காட்டுகிறது.

    இந்தியாவில் இருக்கும் டாப் 10 கல்லூரிகளில், அது எந்தத் துறையாக இருந்தாலும் இடம் கிடைப்பது அத்தனை எளிதும் இல்லை. உலகிலேயே மிகவும் போட்டி வாய்ந்த தேர்வுகளில் ஒன்று... ஐ.ஐ.டி. தேர்வு. அதுவும் லட்சகணக்கான மாணவர்கள் எழுதினால், தேர்ந்து எடுக்கப்படுவது என்னவோ சில ஆயிரம் மாணவர்கள் மட்டுமே. சரி என்று மதிப்பெண்கள் வழியாக தேர்ந்து எடுக்கும் கல்லூரிகள் பக்கம் போகலாம் என்றால், 100 சதவிகித மதிப்பெண்கள்தான் பல கல்லூரிகளில் கட் ஆஃப். அவர்களும் என்னதான் செய்வார்கள் பாவம். நம் நன்கு படிக்கும் இந்திய மாணவர்கள் பெருகி கொண்டே போகிறார்கள். அதேசமயம், தரமான கல்வி கொடுக்கும் நிறுவனங்கள் மிகவும் குறைவு. எப்படியாவது வடிகட்டும் முறையே இப்போது கல்லூரிகளில் உள்ளதே தவிர, மிகச்சிறந்த மாணவர்களைத் தேர்ந்து எடுக்கும் முறை இந்தியாவில் அதிகம் இல்லை.

    சிறந்த கல்லூரிகளில் 100 இடங்கள் இருந்தால், அதற்குக் குறைந்தபட்சம் 50 ஆயிரம் விண்ணப்பங்கள் வரும். 98 சதவிகித மாணவர்கள் வெளியேற்றப்படுகிறார்கள். உலகில் எங்கேயும் 99% மாணவர்கள் தேர்ந்து எடுக்கப்படாதது இந்தியாவில் மட்டுமே சகஜமாக நடக்கும் நிகழ்வு. பெற்றோர்களும் இதைப் புரிந்து கொள்ளாமல் மாணவர்களைக் குறை கூறுவதும், அந்த கல்லூரிகளில் இடம் கிடைக்க போராடுவதும் நடக்கிறது.

    இதைப் புரிந்துகொண்ட பள்ளிகள், கோச்சிங் சென்டர்கள் பணம் கொழிக்க கல்வி வியாபாரக் கடைகளை திறந்து வைத்துக்கொண்டு இருக்கின்றன. பெற்றோர்களும் அந்த வலையில், வேறு வழி இல்லாமல் விழவேண்டிய நிலைமை. கற்றுக் கொடுக்கும் இடம் போய் வியாபாரக் கேந்திரமாக பள்ளிக் கல்வியைக்கூட மாற்றிய நிலைமை நம் இந்திய கல்வி அமைப்பையேச் சேரும்.

    வெளிநாட்டுக்கு செல்வது மிகுந்த பொருட்செலவு. அடுத்தது, மாணவர்கள் 18 வயதில் இருந்து 25 வயது வரை எங்கு வாழ்கிறார்களோ, அந்த கலாசாரம், மொழி, உணவு அனைத்தும் அவர்களின் உணர்வோடு கலந்துவிடுவது சகஜம். இதனால், அந்நிய கலாசாரம், உணவு என்று பல விதத்தில் ஊடுருவல் இருப்பது உணராமல் இந்தியாவை கொஞ்சம் கொஞ்சமாத் தொலைக்கும் அபாயமும் கண்கூடு.

    பட்டப் படிப்புக்கு வெளிநாடு செல்லும் பல மாணவர்கள் இந்தியாவை மறந்துவிடுவதும் நிஜம். அங்கு வளரும் இந்தியக் குழந்தைகளை இந்தியப் பெற்றோர்களுடன் வளர்வது வீட்டில் ஒரு இந்திய சூழலை உணர முடியும். ஆனால் இங்கிருந்து செல்லும் சிறு வயது மாணவர்கள் பக்குவம் வருவதற்கு முன்பே அந்தச் சூழலில் சிக்கிக் கொள்வதால் ஏற்படும் சங்கடங்களும் பல இருக்கின்றன. ஆனால், மாணவர்களின் முன்னேற்றத்துக்காக பெற்றோர்கள் கொடுக்கவேண்டிய விலை? அந்த இந்தியக் குழந்தையைப் பாதி இழக்கும் மிகப்பெரிய விலையை கொடுக்கிறார்கள்.

    நாம் தரமான கல்வி நிறுவனங்களை நிறுவாவிடில், வசதி உள்ளவர்கள் வெளிநாடு செல்வதால் நமக்கு அந்நியச் செலவாணி இழப்பு மட்டும் அல்ல, நல்ல வேலைவாய்ப்புகள் வெளியே செல்கிறது. அதைத் தவிர மிக நன்கு படிக்கும் மாணவர்கள் வெளிநாடு சென்று அங்கேயே தங்குவதால் நம் நாட்டுக்கு மூளை இழப்பு  ஏற்படுகிறது. திறமையானவர்கள், வெளிநாடு செல்வதால் இந்தியாவின் முன்னேற்றமே பாதிக்கப்படுகிறது. இதை நம் அரசு எப்போது புரிந்துகொண்டு, நாம் எப்போது நல்ல பாதையில் செல்வோம் என்பதே இப்போதையக் கேள்வி.

    - கிர்த்திகா

No comments: