Friday, June 10, 2016

என்னை வென்ற தருணம்.

என்னை வென்ற தருணம்.
மிக நெகிழ்வான ஒரு பயணம். எதிர்பார்த்து, இதற்காக உடை அதற்கு மேட்சாக கொலுசு முதல் ஜிமிக்கி வரை வாங்கி, கடைசி நிமிடம் வரை டைலரிடம் அலைந்து..ஆச்சு.
காரை மிதித்தால் ஆறு மணி நேரம்..வீட்டில் மூவருக்கும் கார் பயணம் பிடிக்கும் என்பதால் கார் முடிவாகிவிட்டது. எப்பவும் நடுவில் கொஞ்சம் வாங்கி ஓட்டுவேன். சென்ற இருமுறையாக நிறையவே லாங் டிரைவ் ஓட்ட ஆரம்பிச்சாச்சு.
சிறு முதுகு பிடிப்பால் சரியான வலி தரனுக்கு. மிகுந்த வேலைகளுக்கு நடுவில் வந்ததால் உடனே திரும்ப நிலைமையும். நான் டிரைவ் பண்றேன் கவலையை விடுங்க என்றவுடன் அவருக்கும் ஆசுவாசம் ஆகியது.
இங்கு தரன் முழுக்க நம்பி அவரின் வண்டியை கொடுத்தாலும் (இருவரும் ஒருவரின் வண்டியை அடுத்தவர் தொட மாட்டோம்..போன் போல..) என்னை நான் வெல்வதே எனக்கு மிகப்பெரிய பிரச்னை. அடுத்தவர்களை கவனிக்க முடியாமல்தான் ஓட்டமாய் வாழ்க்கை துரத்திக்கொண்டு இருக்கிறது. யாருக்காவது ஏதாவது சொல்ல வேண்டும் என்றாலும் சோதித்து கொள்ளாமல் சொல்லமாட்டேன். எனக்கான முதல் எலி நான்தான். நிற்க.
சில வருடங்களுக்கு முன் அக்காவின் காரை எடுத்துக்கொண்டு குழந்தைகளுடன் தஞ்சாவூரில் இருந்து மாயூரம் வந்துக்கொண்டு இருந்தோம். அதற்கு முந்தைய மூன்று நாட்கள் தூக்கமில்லாத அலைச்சல்.
ஆர்.ஜே பாலாஜியின் நகைச்சுவை தொகுப்பு..போன் போட்டு கலாய்ப்பது கேட்டு சிரித்துகொண்டே வந்தோம்.. ஒருசமயத்தில் காரில் அனைவரும் தூங்கி விட நானும் கேட்டுக்கொண்டே கார் ஒட்டினேன். கண் சொக்குவதாய் தோன்றியது..வழியில் கும்பகோணம் காபியின் ஒரிஜினல் வர்ஷன் அப்போவே..பித்தளை டபரா, டம்ளர் அழகிய வேலைப்பாடு உள்ள இடம் என்று காபி கண் சிமிட்டி கூப்டது. போயிருக்கலாம்.. கண் வேறு கெஞ்சியது...மன உறுதி அது இது என்று சமாதானப்படுத்திக்கொண்டு கண் கெஞ்சியதை ஓரம் கட்டினேன்.
சொன்னப் பேச்சை கேக்கும் உடல் என்று கொஞ்சம் கொழுப்பும். உடல் சொல்வதை கேக்காமல் சென்றதற்கு அது சரியான பழிவாங்கல் வைத்து இருந்தது தெரியாமல் போய்விட்டது. எதிரில் வேகமாக பேருந்துகள் அந்த ஒற்றை ரோடில்..
டமார் சத்தம். கார் ஒரு மரத்தின் மேல் மோதி நின்றது. ஒரு குடிசை வீடு. மரம் இல்லாமல் இருந்தால் என்ன ஆகி இருக்கும் என்று தெரியவில்லை. பின் சீட்டில் குழந்தைகள்,.எதுவும் நினைவில் இல்லை. எப்படி மோதியது என்றே தெரியவில்லை. ஒரு கணம் எல்லாம் இருட்டிகொண்டு சென்றது மட்டும் நிஜம். கண் அசந்து என்னை ஏமாற்றி விட்டது.
அதுவும் கூட உணர முடியாத ஷாக்கில் நானும் ரவுடி வடிவேலு போல பேஸ்மென்ட் விடாமல் நடுங்கிக்கொண்டு இருக்கிறது. எல்லாரும் சமாதானப்படுத்தி ஊரில் விட்டு..மாமாக்கு சரியான வேலை மற்றும் செலவும். நான் கண் அசந்தது பற்றி யாரும் என்னை எதுவும் சொல்லாமல் சென்றது குற்ற உணர்வு ஆழமாக இருந்தது. எந்த மன்னிப்பும் ஈடு செய்ய முடியாத பெருந்தவறு அது.
அன்றைய பாதிப்பு வெளியே தெரியவில்லை. ஆனால் ஆழமாக வெளியே சொல்ல முடியாதவாறு மனதில் பாதிப்பு. எங்கையாவது அதிக நேரம் நேரான ஹை வேசில் ஓட்டினால் என்னை அறியாமல் கண் சொக்கும்..என்ன செய்தாலும் தடுக்க முடியாது. அதாவது கால்விரல் நுனியில் இருந்து தூங்கியே ஆகவேண்டும் என்பதுபோல் உடலெங்கும் ஒரு உணர்வு எழும்பும்.. வண்டியை நிறுத்தி சரி செய்துகொண்டு மேலே போக வேண்டும். என்ன செய்தும் இதில் இருந்து மீள முடியவில்லை. அந்த விபத்தில் இருந்து விவரிக்க முடியாத தூக்க உணர்வு என்னை துரத்துவதாக நம்ப ஆரம்பித்தேன்.
இரண்டு மணிநேரம் மேல் ஓட்டினால் தரனிடம் கொடுத்துவிட்டு அடித்துப்போட்டதுப்போல தூங்கிடுவேன். இந்த முறை மூணாறில் இருந்து வரும் பொழுது ஏழு மணி நேர டிரைவிங் என்றாலும் நடுவில் தூங்கிகொண்டேன். தூக்கம் வருதா என்றுக்கேட்டால் கூட எனக்கு வந்துவிடும்.
இந்த முறை நான் தூக்கத்தில் இருந்து விடுபட்டு முழுக்க ஓட்ட வேண்டும் என்று முடிவு செய்தேன். இத்தனை நாள் அதிகம் விவாதிக்காத விஷயமாக வெக்கப்ப்ட்டுகொண்டு சொல்லாமல் வைத்து இருந்தேன். மூன்று மணி நேரம் கழித்து தூக்கம் ஆரம்பித்தது. தரனிடம் இந்த பிரச்னையை விரிவாக சொன்னேன். சொன்னவுடனே கொஞ்சம் அந்த டென்ஷன் குறைந்தது. கொஞ்சம் கண் சொக்கும் இருந்தாலும் நீர் குடித்து. சுக்கு காபி குடித்து சரி செய்துகொண்டு நானே பிடிவாதமாக கார் ஒட்டிக்கொண்டு வந்தேன். தரனும் மிகுந்த சப்போர்டிவாக பேசிக்கொண்டே வந்தார்.
முதன் முறையாக ஒரு இடத்தில கூட கொடுக்காமல் நானே செய்த லாங் டிரைவ். என்னை வெல்ல வேண்டியதுதான் எனக்கு சவாலே. இதில் இருந்து முதல் படியில் வென்றுள்ளேன் என்றே நினைக்கிறேன்.
பார்க்க ஒரு சிறு பிரச்னையாக இருப்பினும் இது மனதிற்குள் மிகு தொந்தரவு கொடுத்து வந்தது என்பதே உண்மை.
நம்மை வெல்ல இதை நான் முயற்சி செய்கிறேன்..
நம் பிரச்சனையை வெளியே சொல்லிவிடுவதே நல்லது. அதிலையே பாதி டென்ஷன் வெளியேறி விடும்.
நம்மால் தீர்க்க முடியாவிடில் அடுத்தவர் துணையை நாடுவது தவறில்லை.
ஒரு இலக்கு வைத்துகொள்வது நல்லது. இதை செய்தால் நான் வந்து போஸ்ட் போடுவேன் என்று நினைத்துகொண்டேன்.
எதையும் ஏற்றுகொள்ளும் மன உறுதி அவசியமாகிறது.
முதலில் நெகடிவ் எண்ணங்களை தூக்க பாசிடிவாக யோசிக்க வேண்டிய அவசியம் அதாவது தூங்கிடுவேன் என்ற எண்ணத்தை விரட்ட...என்னால் விழிப்பாக ஓட்ட முடியும் என்ற பாஸிடிவ் எண்ணம்..
தூங்க மாட்டேன் என்ற எண்ணம்இருந்தால் மனம் தூக்கத்தை மட்டும் சுத்தி நிக்கும். இதுபோல பழைய நெகடிவ் எண்ணங்களை களைய வேண்டியது அவசியமாகிறது.
இப்படிதான் என்னை நான் கொஞ்சம் கொஞ்சமாக ஜெயித்துக்கொண்டு இருக்கிறேன். எல்லாருக்குமே அவரவரை ஜெயிப்பதுதான் பெரிய சவால். ஏனென்றால் நம் பேச்சை நாமே கேக்கமாட்டோம் என்ற மனம்..வெல்வது கடினம் என்றாலும்..வெல்ல முடியும்..என்ற நம்பிக்கை வளராமல் இல்லை.
அடுத்து விடாமல் ஒரு கோவா ரோட் ட்ரிப் என் டிரைவிங்கில் செல்ல வேண்டும். அம்புட்டுதான் ஆசையே.

7 comments:

Unknown said...

அருமையான எழுத்து நடை. ....
நல்ல பதிவு கிருத்திகா

Unknown said...

அருமையான எழுத்து நடை. ....
நல்ல பதிவு கிருத்திகா

Avargal Unmaigal said...

கண் சொக்கி தூக்கம் வருவது போல இருந்தால் கண்ணை குளிர்ந்த நீரால் கழுவிவிட்டு காரை ஒட்ட வேண்டும் அதுவும் அவசியம் என்றால்தான் ஆனால் தூக்கம் வருவது போல இருந்தால் காரை ஒரு ஒரமாக நிறுத்திவிட்டு 10 நிமிடம் தூங்கி எழுந்தால் மிக சுறு சுறுசுறுப்புடன் காரை ஒட்ட முடியும். உங்களின் முயற்சிகள் எப்போதும் வெற்றி அடைய வாழ்த்துக்கள்

வரும் ஜுலை முதல் வாரத்தில் நானும் எனது செல்ல நாய்குட்டியும் எனது மகளும்(13) New Jersey யில் இருந்து kansas க்கு எனது வேனில் பயணம் செல்லப் போகிறோம் ஒன்வே 1200 மைல் நான் மட்டும்தான் ஒட்டி செல்ல போகிறேன் ரிட்டனும் நாந்தான் ஒட்டப் போகிறேன் என் மனைவி kansas க்கு விமானத்தில் வருகிறாள். கார் ஒட்டும் போது பாட்டுகள் கேட்பதில்லை செய்திகள் மட்டும் கேட்டுக் கொண்டே செல்லுவேன்

Rathnavel Natarajan said...

எங்கையாவது அதிக நேரம் நேரான ஹை வேசில் ஓட்டினால் என்னை அறியாமல் கண் சொக்கும்..என்ன செய்தாலும் தடுக்க முடியாது. அதாவது கால்விரல் நுனியில் இருந்து தூங்கியே ஆகவேண்டும் என்பதுபோல் உடலெங்கும் ஒரு உணர்வு எழும்பும்.. வண்டியை நிறுத்தி சரி செய்துகொண்டு மேலே போக வேண்டும். - அப்படியென்றால் அவசியம் ஓய்வு கொடுக்க வேண்டும். நடுவில் இருக்கும் கோட்டைப் பார்த்துக் கொண்டு வந்தாலே தூக்கம் வரும் என்று சொல்வார்கள் - எனது நண்பர்கள் இருவர், பெயரும் ஒன்றே - மதியம் மோட்டார் சைக்கிளில் வரும் போது தூங்கி விபத்து ஏற்படுத்தியிருக்கிறார்கள் - நல்ல பதிவு. ஆனால் ஓய்வு அவசியம், மாறி மாறி ஓட்ட வேண்டும். வாழ்த்துகள் Kirthika Tharan.

”தளிர் சுரேஷ்” said...

உறக்கம் வரும் போது கார் ஓட்டுவது தவறு. விபத்தில் நாம் மட்டுமல்ல மற்றவர்களும் பாதிக்க படலாம் அல்லவா? சிறிது நேரம் உறங்கி ஓய்வெடுத்து பின் ஓட்டிச் செல்வது நன்று. உங்கள் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

டீயை ப்ளாஸ்க்கில் அடைத்துக் கொண்டு செல்லுங்கள்... தூக்கம் வருவது போல் உணர்ந்தால் ஓரங்கட்டி கபால்ன்னு குடிச்சுட்டு ஓட்டலாம்...

Unknown said...

precious lives are lost in many accidents....remember that ji