Saturday, March 14, 2015

நன்றிகளும், நம்பிக்கையும்.

பத்திரிக்கையில் என்னைப் பற்றி எழுதிய இரு பக்கங்களுக்கு ..நேற்று எங்கெங்கு காணினும் வாழ்த்துகள்..வாட்ஸ் அப், போனில், பேஸ்புக்..எல்லா இடங்களிலும். பத்திரிக்கையில் வருவது சந்தோஷமே..எல்லாருக்கும் மிக சகஜமாக ஆகிவிட்ட ஒன்று. ஆனால் அதற்கு இத்தனை வாழ்த்துகள் நிஜமாகவே எதிர்பார்க்கவில்லை. காலம் திரும்ப தன்னை நிருபிக்கிறது. அன்பைக் கொடுத்தால் பல மடங்கு அன்பு வரும்  என்று. இன்னும் அன்பாக வாழச் சொல்லி கற்றுக்கொடுத்துகொண்டு  இருக்கிறது.


நீ எதுவாக உன்னை நினைக்கிறாயோ அதுவாகவே ஆவாய் என்ற சொல்லில் அதிகபட்ச நம்பிக்கை கொண்டவள் நான். வெளியே காமெடியாக இருந்தாலும், பேசினாலும்  உள்ளுக்குள் எனக்கான நம்பிக்கைகளை விட்டுக் கொடுத்ததே இல்லை. சிறு வயதில் இருந்து அப்பா, எப்பவும் நீ அதிர்ஷ்டம் என்ற சொல்லை சொல்லி, சொல்லி வளர்த்தார்.மிச்ச இருவரிடமும் என்னை விட வாஞ்சை அதிகம் வைத்து இருந்தாலும் அதிர்ஷ்டத்திற்கு என்னையே துணைக்கு அழைத்துக் கொண்டிருந்தார். அவருக்கும் ஒரு நம்பிக்கை தேவைப்பட்டிருக்க கூடும்  என்று இப்பொழுது உணர்கிறேன்.

ஆனால் அந்த ஒரு சொல் என்னை உருவாக்கி இன்று வரை வழி நடதுக்கிறது. எத்தனை பெரிய பிரச்சனை வரட்டும்..வாழ்வையே சூழ்நிலைகள் கலைத்து போடட்டும்..எதற்கும் அஞ்சி ஒடுங்கியதில்லை..அப்படி இருந்தாலும் ஒரு மணி நேரத்துக்கு பிறகு அந்த உணர்வுகள் என்னை ஆண்டதில்லை. நான் அதிர்ஷ்டம்..எனக்கு எந்த பிரச்னையும் வராது என்று தீவிரமாக் நம்புவேன்.  நானே ஏற்படுத்திய பிரச்சனைகளை கூட இப்படிதான் சமாளிப்பேன்.

ஒவ்வொருவரும் நம் மேல் வைக்கும் நம்பிக்கை மட்டும்தான் நம் வாழ்கையை சிறிதாவது உயர்த்துகிறது ஒரு நூல் அளவுக்காவது தினமும். ஆனால் சறுக்கினால் முழுக்க சறுக்கும் அபாயத்தை வாழ்வு தன்னிடம் மர்மமாக ஒளித்து வைத்து இருக்கிறது. இங்குதான் அதிர்ஷ்டம் செயல்படும். கீழே விழுந்தால் கூட எறும்புகளை காணும் அதிர்ஷ்டமாக நாம் உணர்ந்தால் கீழே விழுந்த உணர்வே இருக்காது. என்னிடம் ஒரு மாமி உன் கையால் பணம் கொடு நான் மிக நன்றாக இருப்பேன் என்றார். சரி என்றுக் கொடுத்தேன். நிஜமாகவே இன்று ஓகோ என்று இருக்கிறார்கள். அவரின் அந்த ஒற்றை நம்பிக்கை அவரை எங்கோ கொண்டு சென்று இருக்கிறது. நான் கொடுத்து நூறு ரூபாய் இல்லை என்று எனக்கும் நன்றாக தெரியும். அதனால் காலை வேளையில் யாரிடம் பணம் கொடுத்தாலும் நன்றாக இருக்கும் உங்களுக்கு என்று மனதார சொல்லிக் கொடுப்பேன். அந்த நம்பிக்கை நன்றாக வைக்கும் என்ற நப்பாசையும்..நாளை நம்மை நன்றாக கவனிப்பார் என்ற சுயநலமும்.

வாழ்வியல் குறித்தான புத்தகங்கள் படிக்கும் பொழுது அதிர்ஷ்டம் என்ற நம்பிக்கை  வார்த்தையின் வளமையை உணர்கிறேன்.நேற்று என்னிடம் அதீத அன்புக் கொண்டவர்கள் உடனே திருஷ்டி சுத்திப் போடு என்றார்கள். ஏன் என்றால் சிறு பொறாமைக் குணம் கூட நம்மை சுற்றி ஒரு எதிர் மறையை வளர்க்க வாய்ப்பு இருக்கிறது. யாரிடமும் பொறாமையுடன் இருப்பதோ, அல்லது அவர் பொறாமைப் படும் இடத்தில் இருப்பதோ நம் வாழ்வின் மீதான அடிகளாக மாற வாய்ப்பு இருக்கிறது. அந்த நம்பிக்கையை சொல்லத் தெரியாமல் அந்தக் காலத்தில் திருஷ்டி எனச் சொல்லி இருக்கலாம்.

அடுத்தவர் நம்மை விட சிறப்பான செயலை செய்யும் பொழுது பொறாமை வருகிறது. அதனால் அவரிடம் அதைக் கற்றுகொள்வதாலோ அல்லது அவரிடம் இன்னும் அன்பாக இருப்பதாலோ அந்த உணர்வை நல்ல உணர்வாக மாற்றி நம்மை மேம்படுத்திக் கொள்ளலாம். நம்மிடம் வரும் பொறாமை போன்ற எதிர்மறை எண்ணங்களை எண் செய்வது என்று வாழ்வியல் புத்தகங்கள் சொல்லித் தருவதில்லை.

நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும்..நாம சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றே வாழ்வியல் புத்தகங்கள் சொல்கிறது. ஆனால் நாம் மட்டும் சந்தோஷமாக இருக்க முடியுமா? பக்கத்தில் ஒருவர் வலியிலும், வேதனையிலும் துடிக்கும் பொழுது நாம் சந்தோஷமாக இருப்பது நீரோ பிடில் வாசிப்பது போல உணரப் படாதா?  பிறகு எங்கிருந்து அன்பைப் பெறுவோம்.. சுற்றுப்புறம சந்தோஷமாக இல்லாமல் நாம் மகிழ்ச்சியாக  வாழவே முடியாது.

எதற்காக அந்தப் பொறாமை வருகிறது என்று யோசித்து  பார்த்தால் நாம் மட்டும் தனியாக கற்றுக் கொண்டு முன்னேறிக்கொண்டு இருப்பதால். நாம் மட்டும் முன்னேறினால் இந்த பிரச்சனை கண்டிப்பாக வரும். அந்த உணர்வு யாருக்காவது இருக்கு என்று நமக்கு சிறு சந்தேகம் வந்தால் கூட அவர்களிடம் இன்னும் அன்பாக இருக்க வேண்டும். அவர்களிடம் இன்னும் நன்றியாகவும்..ஏன் என்றால் அவர்கள்தான் நம் மேல் நம்மை விட அதிக நம்பிக்கையில் பொறாமை படுகிறார்கள். நம்மிடம் சரக்கு இருக்கோ இல்லையோ..எதையோ ஒன்றை வைத்தும்.

அதனால் முடிந்தவரை அவர்களுக்கான வாய்ப்புகள் பற்றி சொல்லிக்கொடுத்து அவர்கள் முன்னேற உதவி செய்ய வேண்டும். நமக்கு தெரிந்ததை அனைவருக்கும் பகிரும் எண்ணம இருந்தாலே போதும். எப்பவும் நம்மை கைதூக்கிவிட அதிர்ஷ்டம் ஆட்களை அனுப்புவதுப் போல..நாம் அவர்களுக்கு திருப்பி செய்துவிட்டால் வாழ்வு பேலன்ஸ் ஆகும். வெற்றிகள் வந்தாலும் நம்மை அது பாதிக்காமல், கீழே தலைகீழே குப்புறத் தள்ளாமல் இருக்கும்.

மிகப்பெரிய ஆட்கள் உச்சாணிக் கொம்பில் ஏறிவிட்டு சர, சர வென்று இறங்குவது சரக்கு இல்லாமல் இல்லை..சுற்றி நேர்மறை மனிதர்களுடன் வாழாமல்..போலி புகழ்பாடும் மனிதர்கள்தான் நேர்மறை (
positive)என்று நம்பியதால்.

வாழ்க்கை மிகப்பெரிய பரிசாக இந்த நொடிகளை, நிமிடங்களை, இந்த மனிதர்களை கொடுத்துவிட்டு சென்று இருக்கிறது. அவற்றைக் கொண்டாடியும்..முடிந்தவரை உதவியும் செய்துக் கொண்டிருந்தால் போதும். காலம் நம்மை அதிர்ஷ்டக்காரர்களாக எப்பவும் வைத்து இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.


நேற்றில் இருந்து மனம் நெகிழ்வில் உருகி ஓடுகிறது. இதற்கு இந்த  அன்புக்கு என்ன செய்துவிட முடியும் என்று திணறுகிறேன்..இன்னும் என்னை நம்பிக்கை மனிதராய் வாழ வைக்கும் நண்பர்களுக்கு நன்றி என்ற சொல்லை மட்டும் சொல்லி செல்வதுதான் குறையாக இருக்கு. மிச்ச அனைத்தும் நிறைவாக உணர்ந்து நன்றிகளால் நிறைகிறேன்..நிரப்புகிறேன்.

5 comments:

Balasundaran Savadan said...

முக நூலில் நான் தேடிச்சென்று ( notification ) வைத்து ) நிலைத்தகவலைப் படிக்கும் சிலரில் நீங்கள் முதல் வரிசையில்..செல்லி சீனிவாசன், ஷா ஜகான், கவிஞர் மகுடேஷ்வரன், கவிஞர் வத்திராயிருப்பு கவுதமன், ஷான் கருப்பசாமி, கு.விநாயக மூர்த்தி, ஸ்ரீதர் சுப்ரமணியன், நரேன் என்று சிலரும் இந்த வரிசையில்.....நேர்மறையாகவே வாழும் நீங்கள் அதே positive energy & vibration உலகமெங்கும் பரப்புகிறீர்கள். இதை நான் ஒரு தொண்டாகவே பார்க்கிறேன். ...வாழ்த்துக்கள் சகோதரி. ...உங்கள் தொண்டு மென்மேலும் சிறக்க. ....

ரூபன் said...

வணக்கம்
வாழ்த்துக்கள்.... வாழ்க வளமுடன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

visu viswa said...

புதிய வழி தெரிகிறது.அருமை...க்ரித்திகா தரன்

Avargal Unmaigal said...

இப்போது வரும் புகழையும் பாராட்டுக்களையும் மிக எளிதாக எடுத்து மேலும் முன்னேறுங்கள். அப்படி உங்களுக்கு மிக எளிதாக எடுத்து கொள்ளும் மனப்பான்மை வந்துவிட்டால் எல்லாம் சந்தோஷமாக இருக்கும் அப்படி எடுத்து கொள்ளமுடியவில்லை என்றால் பாராட்டுக்கள் வாராமல் போகும் காலத்தில் மனம் மிக கஷ்டப்பட ஆரம்பிக்கும் அப்போதுதான் வாழக்கையில் பல வித கஷ்டங்கள் சங்கடங்கள் தோன்றி வாழ்க்கையையே சின்னா பின்னாமாக்கிவிடும் ஜாக்கிரதை கீர்த்தி.....
சிறிதுகாலமாகத்தான் உங்கள் எழுத்துக்களை படித்து வருகிறேன் மிகவும் அருமையாக எழுதிவருகிறீர்கள் பாராட்டுக்கள்

KUMAR B S said...

நன்றி சகோதரி