Sunday, March 8, 2015

கொண்டாட்டம் என்றும்.

இந்நேரம். காம் ல் வெளிவந்த மகளிர் தினக கட்டுரை..அதில் என்னைப் பற்றி கொடுத்துள்ள அறிமுகம் செம அசத்தல்..அதுப்போல செயல்பட வேண்டும் எனத் தூண்டும் அறிமுகம்.

ன்று (மார்ச் 8) சர்வதேச மகளிர் நாள். ஒரு நாளைக்கு மகளிரை கொண்டாடினால் போதுமா? தினம் கொண்டாட வேண்டுமா? இல்லை அவர்களைக் கொண்டாடத்தான் வேண்டுமா?
மாட்டுப் பொங்கல் அன்று மாடுகளைக் கொண்டாடிவிட்டு பிறகு வருடம் முழுவதும் வேலை வாங்குவதுப் போலவா. இல்லை, நன்றி கூறும் விழாவா? இல்லை, சில மேடை சக்திகள் முழங்குவது போல் ஒரு விழிப்புணர்வு விழாவா?

சரி.  இந்த நாள் மகளிருக்கு என்ன வேண்டும் என்று பேசுவோம், மேடையில் கதறுவோம்..ஆனால் மறுநாள் வீட்டுக்கு போய் ஒரு காபி போடும்மா ப்ளீஸ் என்பதோடு மகளிரை நன்கு வைத்துக் கொள்வது முடிந்து விடும்.

நாளைய மகளிர் யார்..நம் வீட்டுப் பெண் குழந்தைகள், நம் தங்கைகள்..அடுத்து உயிருக்கு உயிராகப் பழகும் தோழிகள். அம்மா, அக்கா, பாட்டி என்று தொடரும் தலைமுறைகள் வேறு.

சரி வளர்ந்து வரும் தலைமுறை மகளிரை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்?. டிஸ்கோ, பஃப் என்று தலைவிரிச்சு ஆடுகின்ற..... உடையில் முட்டிக்கு மேலே எங்கயோ இருக்க ஆடை உடுத்தும் இவர்கள்  இன்னும் என்ன சுதந்திரம் பற்றி பேசுகிறார்கள்  என்ற அலுப்பும் வருகிறது.

ஆனால், தமிழ்நாட்டில் தொண்ணூற்று ஐந்து சதவிகிதம் மகளிர் தங்கள் தேவைகளைக் கூட  தாங்கள் இன்னும் முடிவெடுத்துக் கொள்ளக் கூட இயலாமல் இருக்கின்றனர்.

பெண் குழந்தைகள் என்றாலே திருமணம்..பணம் சேர்த்து, பாத்திரம் சேர்த்து, நகை சேர்த்து.. எல்லாமே திருமண லட்சியத்தில் இருக்கும். நான் படிக்கும் காலங்களில் ஹோம் சயின்ஸ் டிகிரி பிரபலம். ஏன் என்றால் மாப்பிள்ளைகள் டிகிரி வாங்கிய படித்தப் பெண் அதே சமயத்தில் வீட்டோடு இருக்க வேண்டும் என்று ஆசைப் படுவதால்..அதற்கு வசதியாக இருக்கிற துறை ஹோம் சயின்ஸ் என்று அதில் சேருவார்கள். ஆக மொத்தம் கல்யாணச் சந்தையில் விலை போக என்ன தேவையோ அதை லட்சியமாக கொண்டு பெண்ணைத் தயாரிக்கிற ஒரு உலகமாகத்தான் இதுநாள் வரை  இருந்து கொண்டு இருக்கிறது. அதில் கொஞ்சம் இப்பொழுது மாற்றம்..இப்போதெல்லாம் அம்பதாயிரம் சம்பாதிக்க வைத்தால் ஒரு லட்சம் சம்பாதிக்கும் மாப்பிள்ளை பார்த்துக் கட்டி வைத்து விடலாம். இருவரும் நகரத்து மத்தியில் ஒரு பளாட், பெரிய பள்ளியில் குழந்தை படிப்பு, EMI வாழ்க்கை..அல்லது வெளிநாடு..இதான் பெற்றோருக்கு லட்சியம்.

ஆகமொத்தம், கல்வி, வேலை எல்லாமே திருமணத்தைக் குறிக்கோளாக வைத்துக் கொண்டு செயல்படுகிறது..மகளிருக்கு என்ன தேவை..அவர்கள் எதற்காக கல்வி கற்க வேண்டும், சுய மரியாதை என்றால் என்ன, கல்வி கொடுக்கும் சிறகுகள் எவை..அவற்றைக் கொண்டு எப்படி பறக்க வேண்டும்..எதுவும் தெரிவதில்லை..நிஜமாக பெரியார் கனவு கண்ட பெண் சுதந்திரம் இதுவாக இருக்க முடியாது.

ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டு இருந்தேன். ஒரு சிக்கலான விஷயம். அவர் குடும்பத்திற்கு அவர்கள் வீட்டிலும் காதல் மற்றும் கலப்பு திருமணம் ஒப்புக் கொள்ளப்பட்டு இருக்கிறது. பெரியாரின் கொள்கைகளில் ஓரளவு பிடிப்பு இருந்து இருக்கிறது. ஆனால் இன்றோ மனதளவில் வேறு மாதிரி சிந்தித்தாலும் நடை முறை வாழ்கை பயமுறுத்தி தன்னை ஜாதிச் சங்கத்தோடு (கட்சியோடு) இணைத்துக் கொண்டு உள்ளார்.

ஏன் என்று கேட்டேன்.. நீங்கள் இப்படி இருப்பது தவறு என்று சுட்டிக் காட்டினேன்.. அவர் சொன்னார் எங்கள் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்.. உங்களுக்கென்ன தெரியும்.. பார்த்து பார்த்து வளர்க்கிறோம்.. ஆசைப்படும் கல்வியை கொடுக்கிறோம்.. ஆனால் அந்தக் குழந்தையை இருவது வயதுக்குள் காதலித்து ஒரு குழந்தையோடு ஆறு மாசத்தில் விட்டுவிட்டு போனால்தான் அந்தக் கொடுமை தெரியும்.. என் வீட்டுக் குழந்தைகள் நிர்க்கதியாக நிற்க முடியுமா? ..  இது போன்ற கொடுமையான காதல் திருமணங்களை எப்படித்தான் தடுப்பது.. உங்களிடம் வழி இருக்கா என்று கேட்டார்..  விஷயம் தெரியாமல் நீங்கள் பெங்களுரிருந்து என்ன வேண்டும் என்றாலும் பேசலாம்.. பெண் குழந்தைகள் நிராதரவாய் நிற்கும் வேளையில் உடனிருப்பவர்களின் வேதனை பற்றி உங்களுக்கென்ன தெரியும் என்றார்..

எனக்கு திகு திகு என்று பற்றிக்கொண்டு வந்தது. ஆனால் அவர் இருக்கும் சூழ்நிலை, அவர் பார்வை கோணம் வேறு என்று கொஞ்சம் அமைதியாக இருந்து பின் பேசத் தொடங்கினேன் .

பெண் குழந்தைகளைப் படிக்க வைப்பது என்பது நீங்கள் செய்யும் பேருபகாரம் இல்லை.அது அவர்கள் உரிமை. உலகில் இருக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி கற்க உரிமை உள்ளது. அதை என்னமோ தாராளமா பெரிய படிப்பு படிக்க வைத்தேன் என்று சொல்வதெல்லாம் தேவையில்லை..குழந்தைகள் அவர்கள்..இதில் ஆண் என்ன? பெண் என்ன? அவர்கள் விருப்பப்படும் கல்வியை நாம் கண்டிப்பாக நம் வசதிக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும். இது பெற்றோரின் கடமை.

அடுத்து கல்வி கொடுத்தும்  பெண் வருங்காலத்தைப் பற்றி யோசிக்காமல் ஓடிப் போகிறாள் என்றால் எங்கு தவறு..உலக விஷயங்கள் தெரியாமல், கல்வி பற்றிய ஒரு முழுமையான அறிவை, தன்னம்பிக்கையைக் கற்றுக் கொடுக்காமல் வளர்த்த உங்கள் சமூகம் மேல்தான் தவறு.

கண்டிப்பாக டீன் ஏஜ் சிரமமான விஷயம்..தடுமாறும் விஷயம்..ஆனால் சிறு வயதில் இருந்தே லட்சியம் நோக்கி பயணப்படுபவர்கள்..மன உறுதி உடையவர்கள் கண்டிப்பாக தடுமாறுவதில்லை.. ஏன் பெரும்பாலும் நகரத்தில் பெரியப் பள்ளிகளில் படிக்கும் பெண்களைக் காதலித்துக் கை கழுவி விட முடிவதில்லை?

பொதுவாக பெண்கள் உணர்வுப் பூர்வமாணவர்கள்..எளிதில் உணர்ச்சி வசப்படுவார்கள்..ஆனால் நடுத் தெருவில் நிற்கும் அவலம் பற்றி யோசித்து அவர்களை கல்வியில் இருந்து ஒதுக்குவது..அல்லது விருப்பப்பட்டபடி வளர விடாமல் செய்வது என்ன நியாயம்?

அடுத்து, பெண்களுக்கு சரியான தன்னம்பிக்கைக் கொடுத்து வளர்த்தாலே போதுமே..தானாகத் தனக்கு வேண்டிய வாழ்க்கையை சரியாகத் தேர்ந்து எடுத்துக் கொள்வார்கள். நன்கு உறுதியும், தைரியமும், கல்வியும், தன்னம்பிக்கையும் உள்ள பெண்களை அத்தனை எளிதில் ஏமாற்றி விட முடியுமா?

ஜாதிச் சங்கங்கள் இன்னும் அடிமைப் படுத்தவே செய்கின்றன...உங்கள் பெண்களைப் பத்திரமாக பார்த்துக் கொள்கிறேன் என்ற போர்வையில் அவர்களை இன்னும் முடக்கி போடுகிறீர்கள்..அதனால் நீங்கள் பெண்களின் வாழ்க்கையை அழித்துக் கொண்டு தான் இருக்கிறீர்கள்.

உண்மையாக நீங்கள் பெண்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றால் எந்த வயதில் திருமணம் தேவை, எப்படி யாரிடம் பழக வேண்டும்..எப்பொழுது காதலித்துத் திருமணம் செய்தால் நம் சமூகத்தில் பாதுகாப்பாக வாழலாம்..எந்த அளவுக்கு பொருளாதாரம் அவசியம்..உணர்வு பூர்வமாக இருந்தாலும்..எந்த நேரத்தில் அறிவுப் பூர்வமாக முடிவெடுக்க வேண்டும்..இதெல்லாம் சிறு வயதில் இருந்து சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும்.. யாரும் போய் அப்படி கிணற்றில் விழ மாட்டார்கள்.

தங்கள் துணையை தேர்ந்து எடுக்கு தைரியம் , தெளிவு எப்பொழுது வர வேண்டும் என்று தீர்மானிக்க கற்றுக் கொடுங்கள். .இந்த வாழ்க்கை, வசதி வேண்டுமென்றால் தங்கள் காலில் சம்பாதிப்பது  அவசியம் என்று சொல்லுங்கள்..

சரியாக கல்வி கற்று, நல்ல வேலைக்குச் செல்லாவிட்டால் பெண் என்ன ஆண் என்ன குடும்பம் எதிர்கொள்ளும் பிரச்னைகளைப் பற்றி விழிப்புணர்வு கொடுங்கள்..அஞ்சு பைசா இல்லாவிட்டாலும் தன்னை பாதுகாத்துக் கொண்டு துணிச்சலாக வாழ்வது எப்படி என்று புரியும்படி சொல்லிக்கொடுங்கள் .

தன்னம்பிக்கை இருந்தால் போதும்..எந்த வேலை வேண்டும் என்றாலும் செய்து பிழைத்துக் கொண்டு விடலாம். அது இல்லாவிட்டால் ஹையோ வாழ்வு போச்சே..ஆண் கை விட்டுவிட்டான் என்று கதறத்தான்  வேண்டும்.

ஏன் அமெரிக்க மாப்பிள்ளையை பார்த்து பார்த்து திருமணம் செய்து வைத்தாலும் அடுத்த ப்ளைட் பிடித்து கண் கசக்கிக் கொண்டு வரும் பெண்கள் இல்லையா..அவர்கள் வாழ்க்கைக்கு ஏன் பதில் சொல்வதில்லை..பெற்றோர்கள் ஏற்பாடு செய்த திருமணங்கள் மட்டும் பத்திரமாக இருக்கிறதா..அதை சொல்லுங்கள்..

உங்கள் வீட்டில்  ஏன் ஜாதித் தலைவர் வீட்டில் கூட ஜாதி பார்க்காமல் கலப்பு திருமணம் ஒப்புக்கொள்ளப்பட்டு இருக்கிறது..எப்படி பொருளாதாரம் பின்னணி பார்த்துதான்..சுய ஜாதியாக இருந்தால் கூட ஒரு ஏழைக்கு கண்டிப்பாக திருமணம் செய்துவைக்க துணிய மாட்டீர்கள்..இங்கு ஜாதி என்பது ஏழை, பணக்காரர்கள் என்றாகிக் கொண்டு இருக்கிறது..

ஆனால் சொந்த அரசியலுக்கு மாத்திரம்..ஆழ்ந்து தான் ஆண் என்று நிரூபிக்க மட்டுமே பெண்களை நோக்கி இந்த ஜாதி அரசியல் கொடுரமாக இறங்கி இருக்கிறது. முதலில் தன்னம்பிக்கை உள்ள பெண்ணை வளர்த்து எடுத்தால் போதும்.  பாதுகாப்பு இல்லாத இடங்களுக்கு தனியாகப் போவது எப்படி தவறோ அதேப் போலதான் கணவரோடு போவதும். கணவர் மட்டுமே எந்த பெண்ணையும் பாதுகாக்க முடியாது.

ஒரு பெண் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள அவளின் சுய அறிவு மிக முக்கியம். அடுத்து தன்னம்பிக்கை..அடுத்து வசதியாக வாழ கல்வி ( ஆனால் கல்வி கற்பது அதற்கு இல்லை..ஆனால் பொருளாதாரம் சார்ந்து ஆகி விட்டது கல்வி வியாபாரம்).

தன்னம்பிக்கை ஊட்டும் கல்வியை  நமது மகளிருக்கு அளிக்க வேண்டும்.

அடுத்து தலைமைப் பண்பு..சிறுவயதில் தலைமைப் பண்போடு வளரும் குழந்தைகள்  சுயமாக இருப்பார்கள்.எளிதில் அவர்களை மாற்ற முடியாது.ஏமாற்றவும் முடியாது.  பெரும்பாலும் தானே எளிதில் ஏமாந்து போகும் பெண்களை கவனித்தால் அவர்கள் பெற்றோருக்கு அடங்கி நடக்கும் பெண்களாக இருப்பார்கள் ஏன் என்றால் யார் சொன்னாலும் கேட்கும் மனம். எனவே எளிதில் வசப்பட்டு விடும். தனக்கு எது நல்லது, கெட்டது என்று கூட அறியாத அப்பாவிப் பெண்கள்.

எங்கே பெண்கள் துணிச்சலாகப் பேசினாலே வாயாடி, பஜாரி, துடுக்கு என்று பட்டம் கட்டும் சமூகம்..பெண்களின் சாமுத்ரிகா லட்சணத்தில் என்றுமே தன்னம்பிக்கை , சுய அறிவு இருக்காது. அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்று சொல்லிக் கொடுத்து வளர்த்தால் பதினேழு வயதில் பிள்ளை பெற்றுக்கொள்ளும் இச்சை உணர்வுகள் மட்டும்தான் இருக்கும்.

அப்படியே தப்பித் தவறி தவறாக முடிவெடுத்தாலும் மீண்டும் வரும் துணிச்சல், என்ன செய்துவிடுவாய் என்று இந்தச் சமூகத்தை பார்த்துக் கேள்வி கேட்கும் மனம்..எல்லாம் வர வேண்டும்..

நாளை பெண்கள் தனக்கு பொருத்தமில்லை என்று நிராகரிக்கும் வேளையில் அவர்கள் தகுதியை மேம்படுத்திக் கொள்வார்கள்.அந்த சமயத்தில் ஒரு சமமான சமுதாயம் உருவாகும். உணர்ச்சிகளைப் புறம் தள்ளிவிட்டு தனக்குப் பொருத்தமான தகுதியுள்ள ஆணைத் தேர்ந்தெடுக்கும் தன்னம்பிக்கை ஒவ்வொரு பெண்ணுக்கும்  வர வேண்டும்.

எப்படி முடியும்? முழுக்க முழுக்க பெற்றோரின் கையில்தான் இருக்கிறது. நம் குழந்தைகளுக்கு எந்தளவுக்கு உலகை எதிர்கொள்ள கற்றுக்கொடுகிறோம்..என்பதில்..
ஆண்களை நண்பர்களாகப் பார்ப்பதில் இருக்கிறது வளர்ப்பு..அனாவசிய கூச்சங்கள் தவிர்த்து நம்பிக்கைத் தோழியாக வளர்ப்பதில் இருக்கிறது அவள் வாழ்க்கை..

வாழ்க்கை நமக்கு எதிர்காலத்தில் என்ன வைத்து தரப் போகிறது என்பதை யாரும் அறிவதில்லை. ஆனால் அதை சமாளிக்கும் தன்னம்பிக்கை, தைரியம் அதற்கான கல்வி மற்றும் வளர்ப்பு இவை இருந்தால் போதும். எப்படிப்பட்ட கஷ்டங்களையும் சமாளித்து வளமோடு வாழலாம்.

இது மட்டும் போதும் பெண்களுக்கு. அவர்கள் வாழ்ந்து கொள்வார்கள்...

அதை விட்டு மகளிர் தினத்தையும் வருடத்திற்கொருமுறை வரும் ஏனைய சிறப்பு நாள் போல் கொண்டாடிவிட்டு மற்ற நாட்களில் அவள் உழைப்பை,பெருமையை,தியாகத்தை  மறந்து போவதும் தன்னலநோக்கில் பயன்படுத்துவதும் பெருந்தவறாகும். அவ்வாறு  செய்யலாகாது. ஆரோக்கியமான சமூகத்திற்கு மாற்றமான விளைவுகளுக்கே அது வித்திடும்.

 - கீர்த்திகா தரண் (சமூக ஆர்வலர், பெங்களூரு)
(ஆசிரியர் குறிப்பு :  கட்டுரையாளர் கீர்த்திகா தரண் பெங்களூருவில் வசிக்கிறார்.  ,சமூக வலைத்தளங்களில் நிறைய எழுதுகிறார். சமூக ஆர்வலர். மற்றும் வெளிநாட்டுக் கல்வி ஆலோசகர். பெண்கள் குறித்தான பிரச்னைகளில் தொடர்ந்து தம் கருத்துகளை எளிமையாகவும் வலிமையாகவும் எடுத்துரைக்கும் கீர்த்திகா தனக்கென்று ஒரு பெரும் வாசக வட்டத்திற்குரியவர். தன்னைப் போன்ற இலட்சிய வேட்கையும் தன்னம்பிக்கையும் மிக்க பெண்களை வளர்த்தெடுக்கும் விருப்பத்தில் மலரும் கீர்த்திகாவின் இக்கட்டுரையை நாம் வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறோம்.)

நன்றி இந்நேரம்.காம்.

http://inneram.com/articles/special/1772-women-s-day.html

2 comments:

Avargal Unmaigal said...

கட்டுரை மிக அருமை.....தெளிவான எண்ணங்கள் அழகான சிந்தனை எளிமையான வார்த்தை ஜாலம் இல்லாத எழுத்து நடை.. மிக அருமை பாராட்டுக்கள் கிர்த்திகா

Avargal Unmaigal said...

என் பெண் எந்த நேரத்திலும் யாரையும் சாராமல் சுயமாக சம்பாதித்து தன்னை காப்பாற்றிக் கொள்ள எந்த அளவு ஒரு நல்ல கல்வி தேவையோ அதை தந்து தன் நம்பிக்கையோடு வளர்க்கிறேன் அவள் நன்றாக படித்து ஒரு வேலையை பெற வேண்டும் என்பது மட்டும்தான் என் கவலை.