Tuesday, August 30, 2016

நினைவிடுக்கின் எச்சம்..உணவு.

காலையில் ஒரு ஆர்கானிக் பால் வாங்குகிறேன் என்று   தோழி  சொன்னது  என் நினைவுகளை சிறிதல்ல நாள் முழுக்க  வேலி இடுக்கு   கோழி  போல  கிளறிவிட்டது.

சேவல்  சத்தம்  வருமுன்  கோனார் குரல் ஒலிக்கும்..கோனார் வர நேரமானால் பாட்டி எண்ணெய் கிண்ணத்தோடு கிளம்பிடுவார். நன்றாக மாடு காம்புகளில் எண்ணெய் தடவி கைகளால் வழித்து இதமாய் காலிடுக்கில் சொம்பு வைத்து பால் பீச்சுவது ஒரு வேடிக்கை என்றால் கோனார் சர் சர் என்று இரண்டு லிட்டர் பாலை ஐந்து நிமிடத்தில் கறந்து அவர் தினம் கொண்டு வரும் நாகத்தகடு கேனில் இருந்து வீட்டு பாத்திரத்தில் ஊற்றி விட்டு வேகமாக சைக்கிளில் செல்வது ஒரு கலை..சைக்கிளில் அவர் வீட்டில் கறந்த பால் கேனில் இருக்கும். இதுக்கு காவலுக்கு குட்டிஸ் போகணும். பழகிய கோனாராக இருந்தால் அவரே கறந்து வைத்துவிட்டு போய்விடுவார்.

அடுத்து வாரா வாரம் மாடுகளை குளிப்பாட்டும் கொண்டாட்டம். வீட்டில் இரு  மாடுகள்., லக்ஷ்மி, சரஸ்வதி..அதில் லக்ஷ்மி சேப்பு மாடு, சரஸ்வதி கருப்பு மாடு..மிகவும் சாது. அதுதான் மிக அழகு..ப்ரெண்ட்லியாக இருக்கும். லக்ஷ்மி பொல்லாது அதன் அருகில் போக மாட்டோம். வைக்க பிரிதான் நார்,பிரஷ்...சோப்பெல்லாம் இல்லை..அதை வைத்து உடம்பு முழுக்க தேய்த்து குளிப்பாட்டுவோம். பால், தயிர், வெண்ணை , நெய், திரட்டுப் பால், பால் அல்வா எதுவும் காசு கொடுத்து வாங்கியதில்லை.

அடுத்து கொல்லைக்கு செல்லும் வைபவம். எங்கள் வீட்டில் கழிவறை அம்மா திருமணத்தின் பொழுதே காட்டினார்களாம். பெண்கள் தண்ணீர் தூக்கி கொண்டு கஷ்டப்படக் கூடாது என்று வீட்டிற்கு உள்ளேயே தாத்தா கிணறு வெட்டி வைத்து இருந்தார். (சிலர் அதுக்கு கூட பெண்களை வெளியே அனுப்ப மனமில்லாமல் உள்ளே வெட்டினார் என்று சொல்லியும் கேட்டேன்)

தாத்தா  வீடுகளில்   கொல்லைப்புறம் போவோம். மிகச் சிறு வயது.  புகை மூட்டமாய்   நினைவுகள். FM ல்ந் ஐந்து  நிமிடத்திற்கு ஒரு முறை கழிவறை கட்டு என்று வரும் மோடி விளம்பரம் தேவையா என்று தோன்றும்.. ஏன் என்றால் கழிவறை கூட இயற்கைக்கு எதிரானதே. நீர் அதில் விரயம் அதிகம். அதை கழித்துக் கட்ட சாக்கடை என்று ஒன்று உருவாயிற்று. அந்தக் காலத்தில் வீட்டு கழிவு சாக்கடை அப்படியே மரங்களுக்கு விடப்படும்.. மலம் போன்றவைகள் மண்ணோடு மக்கி உரமாகி விடும். சாக்கடை என்று தோன்றியதோ அப்போவே கொசுக்களும் அதற்கான மோசமான வியாதிகளும் உருவாக தொடங்கியது. ஆனால் நகர்புறத்தில் அது இல்லாமல் சாத்தியமில்லை. கிராமத்தில்  சாக்கடை  வாய்க்கால், ஆறுகள்  இல்லாதது  கூட  ஆரோக்கியத்தின்  ஒரு  அம்சம். நேற்று  கேட்ட கி.ரா  பற்றிய  எஸ். ரா  உரையில்  கிராமத்தில் புகும்  காற்று   எந்த பக்கத்தில்  இருந்து  வந்தாலும்  இந்த  வாசனையை  தொடாமல்  வர  முடியாது  என்று கி.ரா எழுதியதாக  குறிப்பட்டு இருந்தார்.  ஏன் என்றால்  அந்த  ஊரில்  ஒரு  பக்கம்  பெண்கள்  ஒதுங்குவதும், ஆண்கள்  ஒரு  பக்கம்  ஒதுங்குவதும்  உண்டாம்.  இதெல்லாம்  வாழ்வின்  ஒரு  அம்சமாய்  இருந்ததை   குறிப்பிட்டு இருக்கிறார். 

அடுத்து குளியல்..பெரும்பாலும் ஆறு, குளம், கிணறு. கை  பம்புகள்  லேட்டஸ்ட். துணி  தோய்ப்பதும் அங்கேயே முடிந்துவிடும். ஆண்கள் துறை, பெண்கள் துறை தனியாக  உண்டு. பாட்டி வீட்டுக்கு அருகில் காவிரியின் துணை ஆறு நாட்டாறு..அங்கு போனால் குளியலே கொண்டாட்டம். தண்ணீர் இல்லா காலங்களில் வெயில் கொதிக்கும் மணல்தான் விளையாட்டு கூடம். சமிபத்தில் சென்ற பொழுது ஆறு மணல் அள்ளப்பட்டு கோரமான ஓட்டை பனியன் போல காட்சி அளித்தது. ஒரு முறை தண்ணிர் பாய்ந்த பொழுது சென்றோம்..குளித்துவிட்டு உடம்பு முழுக்க ஒரே அரிப்பு. சேறு, சகதி..மணலே இல்லா ஆறு, பிளாஸ்டிக் பைகள் , சாக்கடை கலந்த நீர்..
அடுத்து இப்போ போல உடை கலாசாரம் பற்றியெல்லாம் தெரியாது. என் இரு பாட்டிகள் சட்டை போட்டதே இல்லை. ஸ்லீவ் லெஸ்.. எங்காவது வெளியே சென்றால் லேசாக போர்த்திக் கொள்வார்கள். மிக கம்பீர ஆளுமைகள்..அவர்கள் வைத்தது சட்டம. வீட்டில் புளி குத்துவது, துடைப்பத்திற்கு தென்னங்கீற்று கீறுவது, கொல்லைப்பக்கம் களிமண்ணில் அடுப்பு கையால் செய்வது, உளுந்து உடைப்பது, துவரை சரி செய்வது, அரிசிக்கு கல் பொறுக்குவது, கருப்பு உளுந்து களைவது போன்றவை அவர்களே செய்வார்கள்.

தேங்காய் காய வைத்து எண்ணெய் ஆட்டுவது, எள் எடுத்து அல்லது வாங்கி நல்லெண்ணெய் ஆட்டுவது, எது மீந்தாலும் வற்றல் போட்டு விடுவது, வடகம் அப்பளம் போன்றவை செய்வது, மாவடு பொறுக்கிக் கொண்டு வருவோம்..அது ஒரு பெரிய முதுமக்கள் தாழி போன்ற ஜாடியில் போட்டு வைக்கப்படும். ஒரு வருடம் கழித்து புது மாவடு வரை வரும். சென்னை சொந்தங்களுக்கு குடுத்து அனுப்பப்படும்.

ஆங் எங்கே விட்டேன்..அடுத்து  பல் விளக்குதல்..கோபால்  பல்பொடி இன்றைக்கும் அதன் ரோஸ் நிற சுவை நாவில் மெலிதாக நிரடுகிறது. காலையில் பாட்டிக்கிட்டே போனால் கோபால் பல் பொடியின் மெல்லிய நறுமணம் இருக்கும். அதை ரகசியமாக சாப்பிட்டு கூட இருக்கேன். பேஸ்ட் கெமிக்கல் எல்லாம் இல்லை. ஆற்று, குளத்து  பக்கம்  வேப்பங்குச்சி  பிரஷ்  தேய்ப்பு  வைபவங்கள்  தினம்  நடக்கும்.

அடுத்து காபி போடும் நிகழ்ச்சி... நல்ல தரமான கொட்டைகள் மாயுரத்தில் இருந்து  வந்துவிடும். அதை கருப்பாக வறுத்து மூன்று நாட்களுக்கு சேமிக்கப்படும்..ஒரு வாரம் மட்டுமே. திரும்ப புதிதாக வறுக்கப்படும். அதை காபி மெஷின் கையால் சுத்தணும். காலை ஐந்து மணிக்கு டூர், டுபுக், டூர் டுபுக்,,சக் என்று ஒரு விசித்திர இசை காபி மெஷின் எழுப்பும். கையால் பாட்டி லாவகமாக சுழற்றுவது பார்த்து ஆசையாக சுழற்ற போவேன்..என் உயரத்துக்கு அது குரங்கு பெடல் சைக்கிள் வித்தை போல இருக்கும்..அலுப்பு பட்டுக்கொண்டு ஓடிவிடுவேன். ஆனால்  அது  ஜெர்ரி  சீஸ்  மணத்தில்  மிதந்துக்  கொண்டே  போவதுப்  போல  அந்த  மணத்தில்  மிதந்துக்  கொண்டே  போய்  பாட்டி  காபி  எனக்  கேக்கலாம்..அத்தனை  திடம்  அந்த  நாசியை  இழுத்த  வாசம்.
அதில் பிததளை பில்டரில் டிகாஷன் இரக்கப்படும். அதுவும் வீட்டின் ஹைரார்ச்சி விதிப்படி வரும். திக் டிகாஷனில் தாத்தாக்கு அப்பா செல்லம் எனவே அப்பாக்கும் கொடுக்கப்படும்..இருவருக்கும் நுரைப்பால், முதல் கள்ளி சொட்டு டிகாஷனில் காபி, அடுத்து டிகாஷன் கீழே நிரம்ப பத்து நிமிடம் ஆகும். அடுத்து நமக்கு வரும்..பெண்களுக்கு அடுத்து நீர் ஊற்றிய டிகாஷன்..பெரிய பாட்டிக்கு யாரை பிடிக்கவில்லையோ அவர்களுக்கு தண்ணியாக மூன்றாவது நீர் ஊற்றிய டிகாஷன். இந்த கொடுமைக்கு சில சமயம் ஆளாவது சின்ன பாட்டியாக இருப்பார். இந்த காபி போடுவது என்பது கிட்டத்தட்ட தலைமை பதவி போல. கடைசியாக வேலை செய்பவர்களுக்கு. அந்த காபி பொடி சகல நிவாரணி போல பல் தேய்க்க, பாத்திரம் விலக்க என்று பல விஷயங்களுக்கு பயன்படும்.. ரீ சைக்கிள் ஆகாத விஷயங்களே அந்தக் காலத்தில் இல்லை.


இன்னும் வரும்.

11 comments:

சங்கர் நீதிமாணிக்கம் said...

அன்றைக்கு இயற்கையோடு ஒன்றிணைந்த ஆரோக்கியமான வாழ்க்கையை நமது முன்னோர்கள் வாழ்ந்தனர்.. எல்லாம் கடந்த முப்பது ஆண்டுகளில் கனவு வாழ்க்கையாய் போய் இன்று அது வரலாறு போல பேசும் நிலைக்கு வந்துவிட்டது.. இன்னும் என்ன என்ன மாற்றமோ.. தவிர்க்கவும் முடியவில்லை..

Nagasubramanian.T said...

கீர்த்திகா ஜி இது உங்கள் பக்கமா நீங்கள் இவ்வளவு இயல்பு நடையில் எழுதுபவர்ரா இப்பொழுது தான் தெரிகிறது உங்கள் எழுத்தோட்டம் . அருமை அந்த கால நிகழ்வுகளை காலக்கண்ணாடி யாக காட்டியதற்க்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள்

Subadhra said...

So beautifully written..

Avargal Unmaigal said...

டைம்மிசின் வைத்து என்னுடைய பாட்டி வீட்டிற்கு அழைத்து சென்ற உங்களுக்கு பாராட்டுக்கள் படிக்கும் போது அப்படியே எனது பாட்டி வீட்டில் வாழ்ந்த அனுபவங்கள் அப்படியே நினைவுக்கு வந்தன. நதியில் ஒடும் நீரைப் போல அழகாவும் தெளிவாகவும் சொல்லி சென்ற பாங்கு போற்றதக்கது பாராட்டுக்கள் கீர்த்திகா

Unknown said...

பழைய நினைவுகள் மகிழ்ச்சி...

Unknown said...

பழைய நினைவுகள் மகிழ்ச்சி...

'பரிவை' சே.குமார் said...

சுவராஸ்யமாய் இழுத்துச் செல்லும் எழுத்து...

Unknown said...

அருமை... அற்புதமான எழுத்துநடை... கிராமத்தில் வாழ்ந்த நாட்களை
மறக்க இயலாது...

Unknown said...

reminds me of VANNADASANS short stories...keep it up

Eric Stalker said...

Really great post, Thank you for sharing this knowledge. Excellently written article, if only all bloggers offered the same level of content as you, the internet would be a much better place. Please keep it up.
Best regards
Eric Stalker
Moscow mules

Unknown said...

Very great post. I simply stumbled upon your blog and wanted to say that I have really enjoyed browsing your weblog posts. After all I’ll be subscribing on your feed and I am hoping you write again very soon! Thanks for sharing wonderful information with us.
Best regards
tree removal erie pa