Thursday, February 25, 2016

ஏன் பயம்?

இரண்டு நாட்கள் சென்னை பயணம். ஒரு நிகழ்வு..நிகழ்வில் மணிமாறன் அவர்களின்  புத்தர் கலைக்குழு பறையில் அறுநூறு மாணவர்கள் மெய் மறந்து இருந்தனர். முக்கால்வாசி மாணவர்கள் பறை நிகழ்ச்சி பற்றி அதிகம் கேள்விப்பட்டு இல்லாதவர்கள். அவர்களுக்கு அந்த இசையில் இயைந்து மெய் சிலிர்த்து போனது நிஜம்.

இப்படி நம் இசை நம்மை இரத்தத்திற்குள் புகுந்து வேர் வரை ஆட்டும் சக்தி படைத்தது. உணர்வுக்குள் ஊடுருவும் தன்மை உடையது. கண்டிப்பாக இதை ஒரு புரியாத மொழி சங்கீதம் செய்வது கடினம்.

மண் பற்றி இத்தனை பேசும் நிகழ்வுகள் மலர்ந்துகொண்டு வருவது நல்ல விஷயம். ஆனால் இப்போ சொல்லப் போவது எனக்கு நடந்த இரு தனிப்பட்ட நிகழ்வுகள்.

எப்பவும் ஆட்டோவில் அல்லது டாக்சியில் பயணிக்கும் பொழுது லோக்கல் அரசியலை பற்றி கேள்விக்கேட்டு பொறுமையாக கேட்டுக்கொண்டு வருவது உண்டு. இம்முறை ஆட்டோ முத்து நண்பரே ஆகிவிட்டார்.

அவர் சொன்னது..அம்மாவிடம் பணமும், பவரும் இருக்கு..நானே ஒட்டு போட மாட்டேன்..வெள்ள நேரத்தில் மிக பாதிக்கப்பட்டேன்..ஆனால் இன்றும் அம்மா வராங்க என்றால் ஒரு தெருக்கு ஐம்பது லட்சம் வரை செலவில் பேனர் வைக்கிறாங்க.. அந்த பணத்துக்கு நல்லது செய்தாலே போதும்..நிறைய பேர் அம்மாக்குதான் ஒட்டுப்போடுவாங்க..இப்போ நாங்க ஆதரிக்காவிட்டாலும் அம்மாதான் வருவாங்க ஏன்னா பவர் அப்படி என்று அவர் அறிந்த நிலவரத்தை பிட்டு, பிட்டு வைத்தார்.

ஆட்டோ பிரி பெயிட் என்பதால் நூற்று ஐம்பது ஆகும் இடத்தில வெறும் நூறு ரூபாய் ஆயிற்று.

அடுத்த பயணங்கள் எல்லாமே OLA தான். அது வசதியாகவும் இருந்தது. இரவு முடிச்சூர் தாண்டி உறவினர் வீட்டுக்கு செல்ல வேண்டும். காலையில் ஒரு விஷயமாக ரயில் பிடிக்க வேண்டும். உறவினர் வீடு தாம்பரம் தாண்டி வெளியே இருந்தது. அங்கும் மக்கள் நெருக்கமாகத்தான் வசிக்கிறார்கள். போகும்பொழுது ஒரு மணி நேரத்துக்கு அதிகமாக பயணம் செய்தது இடுப்பை நோக செய்து இருந்தது.

இரவு ஒரு வெட்டி ஓட்டும் பணி..முடித்து விட்டு நிமிரும் பொழுது பன்னிரண்டு தாண்டியாச்சு. உறவினர் பல விஷயங்கள், தத்துவங்கள் பற்றி பேசினார். அதில் அந்த இரவு முழுவதும் அசைபோட வைத்தது இந்த வரி..
"என் உயிர் என்று சொல்கிறோமே...நான்தான் உயிர் என்று சொல்கிறோமா?" என்று..மனதிற்குள் பல கேள்விகளை எழுப்பியது அவரின் தத்துவ விசாரங்கள்..அப்படியே தூங்கியும் ஆயிற்று..

காலை நான்கு மணி..சென்ட்ரல் செல்ல வேண்டும். இரவே OLA வில் Ride Later புக் செய்தாகி விட்டது. எதற்கும் போன் செய்வோம் என்று செய்தால் எட்டு நிமிடத்தில் வரும் என்றார்கள். பிறகு .இங்கு ஒரு வண்டியைக் கூட GPS காட்டவில்லையே என்று கேட்டேன். ஆமாம் மன்னிக்கவும் வண்டி இல்லை என்றார்.

திரும்ப திரும்ப வாதங்கள் விவாதங்கள்..OLA என்று இல்லை பொதுவாக எல்லா சிறு தொழில்களையும் அழிக்கும் கார்பரேட் கோவங்கள் அன்று அவர் மேல் திரும்பியது. நமக்கு தெரிந்த டாக்சி டிரைவர், நம் வீட்டு ஆட்டோக்காரர் எல்லாவற்றையும் மறந்துகொண்டு இருப்பதால் வரும் வினை. முன்பெல்லாம் சென்னை சென்றால் எங்களிடம் பரிச்சியமான மூன்று டாக்சி நம்பர்கள் கைவசம் இருக்கும். அண்ணே போட்டு அழைக்கும் உறவாக வைத்து இருப்போம். உடம்பு சரியில்லை வீட்டில் என்றால் தரனுக்கு போன் செய்வார்கள். நான் இரவு எத்தனை மணியானாலும் அவர்களுடன் தனியே செல்லுவேன். ஏன் என்றால் சென்னை நட்பு, உறவுகளின் எண்ணிக்கை மிக அதிகம். Fast track ஐ விட OLA போன்றவை வந்து அத்தனை டாக்சி, ஆட்டோ உறவுகளை அழித்து விட்டு அவர்கள் வைத்ததே சட்டமாகி விட்டது. அந்த ஏரியாவுக்கு வண்டி இல்லை மன்னிக்கவும் என்ற பதில், மாற்று ஏற்பாடு செய்யாவிடில் ரயிலை தவற விடும் அபாயம். அவர்கள் எதற்கும் தயாராக இல்லை. ரெடிமேட் புன்னகை, ரெடிமேட் சாரி..ச்சே என்று ஆகி போனது.

உடனே நிறைய இடங்களுக்கு போன் செய்து FAST TRACK புக் செய்து ஒரு மணி நேரம் மன உளைச்சல். எப்படியோ கிளம்பி விட்டோம்..

இதன் நடுவே காலை எழுந்துகொள்கிறேன் கால் அசைக்க முடியவில்லை. முதல்நாள் காலை நான்கு மணிக்கு பெங்களூரில் ஆரம்பித்து இரவு பன்னிரண்டு வரை அலைச்சலில்..முதுகு போய்விட்டது..உடனே அங்கு ஏதோ ஏதோ ஸ்ப்ரே தடவி அசைக்க முடிந்தது. கடும் வலியோடு OLA பிரச்னை. அவசரமாக குளித்து விட்டு வந்தால் குனிந்து உடை அணிய முடியவில்லை. முதுகை வெட்டி எடுப்பதுப்போல வலி. இன்னொருவர் உதவியுடன் உடை அணிந்தேன்.

காலையில் ரயில்வே ஸ்டேஷன் சென்று வழி அனுப்பிவிட்டு நிமிர்ந்தப்பொழுது காலை ஆறேகால். அந்த நேரத்துக்கு டாக்டர் கிடைக்கவில்லை. சரி என்று அப்போல்லோ போய்விடலாம்.யாரவாது இருப்பார்கள்..ஒரு நாள் சரி செய்துகொண்டால் நிகழ்ச்சி முழுக்க நடமாட முடியும் என்று உள்ளே சென்றேன்.
சென்றவுடன் படுக்க வைத்து காலை அசைக்க சொன்னார்கள். அப்சர்வ் செய்ய வேண்டும்..ஒரு நாள் இருக்கலாம் என்றார்கள். இல்லை மிக அதிக வேலை இருக்கு. ஒரு ஊசி மட்டும் போடுங்கள்..நான் மருத்துவ துறையில் வேலை செய்கிறேன். கணவர், தம்பி அனைவரும் மருத்துவர்கள். பிரச்னை இல்லை. IM கொடுங்கள்( சதையில் செலுத்தும் ஊசி) என்று கேட்டேன்.

இல்லை. அட்மிட் ஆக வேண்டும். IV (நரம்பில்) மாத்திரமே இங்கு கொடுப்போம் என்றார்கள். இல்லையன்றால் வலியுடன் OPD திறக்கும் வரை காத்திருங்க என்றார்கள். எந்த வாக்குவாதங்களும் எடுபடவில்லை. இது எங்கள் protocol என்று உறுதியாக இருந்தார்கள். கடைசியில் வீட்டுக்கு போன் செய்துவிட்டு வேறு வழியில்லாமல் மாத்திரை வாங்கிக்கொண்டேன். இந்த கூத்துக்கு டிஸ்சார்ஜ் சம்மரி வேற.

எப்படியோ அந்த நாளை வலியுடன், அதை மறந்து ஒரு உற்சாகத்தை வரவழைத்துக்கொண்டு ஒட்டிவிட்டேன். திரும்ப ரயிலில் படுக்கும் பொழுது சுரீர் சுரீர் என்று அடிக்க ஆரம்பித்தது. வீட்டை அடைந்தவுடன் நிம்மதி பிறந்தது.

OLA, APOLLO என்று தேடி தேடி சென்று கடைசியில் அவர்களின் protocol என்று ஒன்று ஒன்றாக சத்தமே இல்லாமல் திணிப்பார்கள். ஒன்றரை பங்கு பணம். ஒரு அறைக்கு பத்தாயிரம் வாடகை, அவசரத்துக்கு சென்றால் அப்சர்வேஷன் என்று. காசு கரையும். நேரடியாக பேச, கேள்வி கேக்க யாரும் இருக்க மாட்டார்கள். கேட்டால் காவலாளி தூக்கி வெளியே போடுவார். எந்த நகரத்துக்கு சென்றாலும் எனக்கு தெரிந்த மருத்துவர்கள் உள்ளனர். சரி செய்துகொள்வேன். இருந்தாலும் என்னால் கேள்வி கேக்காமல் அந்த இடத்தை விட்டு நகர முடியவில்லை.

இரு நாட்கள் ரெஸ்ட்..படுத்துக்கொண்டே ஸ்டேடஸ்கள் போட்டுத் தள்ள முடிவு. சரியாகிடும்.

சாமியாரில் ஆரம்பித்து காய்கறி வரை கார்பரேட் மயம்.
அவர்களின் கரங்கள் நகரங்களை சுற்றி விழுங்க ஆரம்பித்து இருக்கின்றன. நாம் மவுனமாக வேடிக்கை பார்ப்பதை தவிர வேறு வழி இருப்பதாக தெரியவில்லை.

5 comments:

Rathnavel Natarajan said...

ஏன் பயம்?

நகரமா? நரகமா? எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
நன்றி Kirthika Tharan

Unknown said...

உண்மையான, வலி நிறைந்த வார்த்தைகள்... நல்ல பதிவு

S.Raman, Vellore said...

//சாமியாரில் ஆரம்பித்து காய்கறி வரை கார்பரேட் மயம்.
அவர்களின் கரங்கள் நகரங்களை சுற்றி விழுங்க ஆரம்பித்து இருக்கின்றன//

நூற்றுக்கு நூறு சரியான வார்த்தைகள்

Dr. Hariharan said...

ரெடிமேட் புன்னகை, ரெடிமேட் சாரி.... வாவ் ..ரைட்டர் ஆயிட்ட கீர்த்தி

Dr. Hariharan said...

இவ்ளோ பிரச்சினை ஆயிருக்கா!!!! கஷ்டமா இருக்கு..