Wednesday, June 25, 2014

சொர்க்கம் தேடி..

                  ராண்டே அலகிரி....கேட்பதற்கு நம்ம ஊர் பெயர்ப்போல இருந்தாலும் இவர் இத்தாலியர். மேற்குலகத்தில் முதன் முதல்லா நரகம்  பற்றிய கற்பனைகளை வடிவமைத்து புத்தகமா எழுதினார். அப்படி இப்படி எழுதல..கொஞ்சம் பயங்கரமாகவே எழுதி வச்சுட்டு போயிட்டார்.  படிக்கலாம் என்று யோசித்தால்  கொஞ்சம் பயமுறுத்தும் புத்தகமாக இருக்கிறது.
நான் ஒரூ சமயத்தில் ஒரு புத்தகம் வாசிப்பது இல்லை. ஆங்காங்கே ஒரு புத்தகம் வைத்துக்கொள்வேன். வெளிநாடுகளில் சிலர் கழிவறையில் கூட லைப்ரரி வைத்து இருப்பார்கள். இங்கு சில குடும்பங்களில் சரஸ்வதி என்று புத்தகத்தை  எடுத்துக்கொண்டு போக விடமாட்டார்கள். சிலருக்கு வாசிப்புக்கான நேரமே அங்குதான் கிடைக்கிறது. அவசரத்துக்கு ஒரு புத்தகம் அங்கும் இருக்கும். என் சின்ன பையன் கூட ஒரு புத்தகத்தை வைத்துக்கொண்டு அமர ஆரம்பித்துவிட்டான். வாசிப்பு எங்கு பழகினால் என்ன?
தலையணை சைஸ் ஆங்கில புத்தகத்தை விட சின்ன, சின்னதாக நாலஞ்சு தமிழ் புத்தகங்களை முடித்து விடலாம். தூக்க நேரத்தில் வாசிக்க டான் பிரவுன் Inferno புத்தகத்தை எடுத்துவிட்டேன். இப்பல்லாம் உடனே தூக்கம் வந்துவிடுகிறது. அது நல்லதாகவும் இருப்பதால் அதை முடிக்காமல் தூக்கத்துக்கு துணையாக வைத்துக்கொண்டு இருக்கிறேன். காரில் பெரும்பாலும் கவிதை புத்தகங்கள் வைத்துகொள்வது வழக்கம். இடைவெளியில் ஒரு கவிதை படிக்கலாம் என்று. ஆனால் பெரும்பாலும் லைக் போடுவதில் கழிந்து விடுகிறது.

முன்பெல்லாம் நடு இரவில் விழிப்பு வந்தால் வாசிப்பது அல்லது டி.வி முன்பு உக்கார்ந்து அத்தனை சேனல்களையும் கழுத்தை முறித்து திருகி கொண்டு இருப்பது என்று வழக்கம். இப்பல்லாம் உடனே பேஸ்புக் எடுத்து முக்கியமான மெசேஜ் வந்து இருக்கிறதா இல்லை நம் ஸ்டேடஸ்களில் என்ன என்ன கமெண்ட்ஸ்..நண்பர்களின் எழுத்துக்கள் என்று போய்விடுகிறது.  டி-ஆக்டிவேட் செய்யும் நேரங்களில் அந்த அதி முக்கியமான மெசெஜ்கள் எங்கு இருக்கும் என்று புரியாத புதிராகத்தான் இருக்கு. டி.வி யோ, வாசிப்போ தூக்கம் கலைந்தால் அரை மணியில் தூங்கி விடலாம். ஆனால் பேஸ்புக் வந்தால் பொழுது விடிந்ததே தெரியாமல் ஒரு லிங்க், அடுத்த லிங்க் என்று தாவிக்கொண்டே இருப்போம்.

ஆங்.. இப்படிதான் எனக்கு பேச்சிலும் ட்ராக் மாறிவிடும். இன்பெர்னோ புத்தகத்தை எடுத்தவுடன் அகராதி புரட்ட வேண்டியதாகி விட்டது. இத்தாலியில் நரகம் என்று அர்த்தமாம். பெரியவனுக்கு டான் பிரவுன் புத்தகம் வந்தவுடன் வாங்கி விட வேண்டும். இருவரும் ராண்டே அலகிரி பற்றி விவாதித்துக்கொண்டு இருந்தோம். அவரின் தி டிவைன் காமெடி பற்றியும், இன்பெர்னோ பற்றியும். நரகத்தை அத்தனை கொடூரமாக கற்பனை செய்து புத்தகமாக கொண்டு வந்து இருக்கிறார் என்று பேசிக்கொண்டு இருந்தோம். ஒன்பது வளையங்கள் உள்ள நரகத்தில் ஒருவனின் பயணமே அந்த கதை.  அதை விட அந்த கும்பலான  நிர்வாண ஓவியங்கள் இன்னும் பயமுறுத்தும்.

இங்கு இரு மனம் யோசிக்க துவங்குகிறது.ஒன்று பகுத்தறிவாக மத அமைப்புகள் தான் தவறு என்று நினைப்பதை மக்கள் செய்யாமல் இருப்பதற்காக எப்படி எல்லாம் பயமுறுத்தும் அமைப்பாக இருந்து இருக்கிறது என்று யோசிக்கும். இன்னொன்று மரணம் பிறகான நிகழ்வுகள் இது போல இருந்தால் நமக்கு நிஜமாக தண்டனை கிடைக்குமா..இதில் எந்த தப்புகள் நாம் அறிந்தோ, அறியாமலோ செய்து இருக்கிறோம்..ஆங்காங்கே சொல்லப்பட்ட பொய்கள், சின்ன வயதில் ஏமாற்றிய  அஞ்சு ரூபாய், என்று கணக்கில் வராத தவறுகள் எல்லாம் கணக்கிலிடப்பட்டு அந்த நரகத்தில் எந்த வளையத்தில் இருப்போம் என இன்னொரு மனம் யோசிக்கிறது.( கொஞ்சம் நடுக்கமாதான் இருக்கும்..)

அதை பற்றி வாசிக்கும் பொழுது நரகத்தை முதலில் கற்பனையில் கொண்டு வந்தவர் என்று வாசித்தேன். திடீர் என்று நம்ம கருடப்புராணம் நினைவுக்கு வந்தது. உடனே கூகிள் ஆண்டவரை துணைக்கு அழைத்தேன்..நம்பியவரை கூகிளாண்டவர் கைவிட்டதில்லை.. உடனே ஆங்கில பதிப்பு கிடைத்தது.. பக்கம், பக்கமாய் பயமுறுத்துகிறது.. விருப்பம் இருப்பின் ஹிந்து மதப்படி நாம் அடையப்போகும் தண்டனைகளை சரிப்பார்த்துக்கொள்ளலாம்,
http://www.sacred-texts.com/hin/gpu/index.htm#contents எடுத்த எடுப்பில் மரங்கள் இல்லாத படு பயங்கரமான வெப்பத்தில், தண்ணீர், உணவு இல்லாமல் நடையை எமலோகத்துக்கு எட்டிப்போட வேண்டும் என ஆரம்பிப்பதால் அடுத்த வரிக்கு செல்லவில்லை நான்.
சின்னவன் நடுவில் வந்து நரகம் என்றால் என்ன? அது எப்படி இருக்கும்? ஏன் அது என்றெல்லாம் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டான். உடனே இன்பெர்னோ அனிமேஷன் ஒன்று இருந்தது..யூ ட்யூப் ல்  போட்டுவிட்டு நகர்ந்துவிட்டேன். கொஞ்சம் பார்த்து விட்டு தவறுக்கான தண்டனைகள் பற்றி வேறு பேச ஆரம்பித்தான்.

இன்னொரு பொழுதில் எல்லாம் மறந்து போயிற்று. காலை டென்ஷனில் சொன்ன பேச்சு கேக்காத சின்னவனிடம் கத்தும் சமயத்தில் நெஞ்சு வலி வந்தது. கோவத்துக்கு அறிவு இருக்குமா என்ன..இப்படி பாடாய் படுத்தினால் அம்மா நெஞ்சுவலி வந்து போயிடுவேன் என்று கத்திட்டு காரில் அள்ளிப்போட்டுக்கொண்டு பள்ளிக்கு கிளம்பினேன். அம்மா செத்து போகிறதுன்னா என்னமா என்று ஆரம்பித்தான்..பிறகு செத்து போனா எங்கம்மா போவோம் என்று கேட்டான்..எங்கயும் போக மாட்டோம்..தோ பாரு இந்த மரம் சாகும், பூச்சி, எறும்புகள், மிருகங்கள், மீன்கள், கோழிகள் என்று ஆயிரக்கணக்கான உயிர்கள் தினம் செத்து போய்க்கொண்டுதான் இருக்கின்றன.. அத்தனையும் எங்கே போச்சு..அது போலதான் மனுஷனும்..செத்து போகிறது ஒரு விஷயம்..முடிஞ்சுடும்..அதுக்கு மேல ஒண்ணுமில்லை என்று சொன்னேன்.

அப்படி என்றால் அன்னைக்கு நரகத்தை பத்தி ஏன் பேசினீங்க.. நீ கூட தப்பு பண்ணாத இது போல நடந்தாலும் நடக்கும்னு சொன்ன? அப்ப நரகம் இல்ல இல்லையா? ஏன் மாத்தி, மாத்தி சொல்றம்மா..பொய் சொல்லக்கூடாது..பொய் சொன்னா என்ன தண்டனை  தெரியுமா? என்றான்..

அந்நியனை வீட்டிலயே வளர்த்துக்கொண்டு..ம்ம்ம்..

என்ன இருந்தாலும் நமக்கு பல்ப் வாங்குவது சகஜமான ஒன்றுதானே.

12 comments:

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
வாழ்த்துகள்.

கிருத்திகாதரன் said...

நன்றி ஐயா..மகிழ்ச்சியும்.

கிருத்திகாதரன் said...
This comment has been removed by the author.
பால கணேஷ் said...

1402நானும் ஒரே சமயத்தில் இரண்டு மூன்று புத்தகங்களை வாசிப்பதுண்டு ஒரு மாறுதலுக்காக. இன்பர்னோ பத்தி, கருடபுராணம் பத்தில்லாம் சொல்லி லைட்டா பயமுறுத்திட்டீங்க... சரி விடுங்க... புள்ளைங்க கிட்ட பல்பு வாங்காத பெத்தவங்க எங்காச்சும் உண்டா என்ன...? (மிக ரசித்துப் படித்தேன் இந்தப் பகிர்வை என்பது நிஜம்.)

ezhil said...

நரகம் குறித்த பயமெல்லாம் யாருக்குமே இல்லை... ஆனா அப்படி ஒன்று இருந்தா நல்லா இருக்கும்..

ezhil said...
This comment has been removed by the author.
Arun Kamal said...

இதுக்கு முன்னாடி ஒரு கமெண்ட் போட்டேன்... காணாமப் போச்சே...
:(

ரூபன் said...

வணக்கம்
அறிய முடியாத நல்ல தகவலை அறிந்தேன் தங்களின் கட்டுரை வாயில்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Bagawanjee KA said...

நரகம் என்பதெல்லாம் மதவாதிகள் பிழைப்புக்காக ஏற்படுத்தியவை !

NATARAJAN GANAPATHY said...

நல்ல பதிவு .இருந்தாலும் ரொம்ப பயமுருத்தீட்டின்கர்

ராஜி said...

பசங்கக்கிட்ட பேசி ஜெயிக்க முதியுமா!? அதுங்களுக்கு படிச்ச பாடம்லாம் மறந்துப் போகுது! ஆனா, நாம சொன்னதுலாம் கரெக்டா ஞாபகம் வச்சு நமக்கு பல்ப் கொடுக்குதுங்க.

Advocate Santhanakrishnan said...

நல்ல சிந்தனையோட்டமும் , அதை பகிர்ந்து கொள்ளும் எழுத்தாற்றலும் உங்களது தனி சிறப்பு