Friday, September 25, 2015

அன்பைத் தேடி..

வாழ்வில் திரும்ப பார்க்க விரும்பாத சில கணங்கள் இருக்கும். ஆனால் யாருமே வாழ விரும்பாத ஒரு வாழ்வு என்னவென்றால் மன பிறழ் நிலையில் வாழ்வதாகும்.

ஒரு புத்தகத்தில் உள்ள கடின பக்கங்களை கூட நம்மால் பொறுமையாக படிக்க முடியாத கால வேகத்தில் ஓடிக்கொண்டு இருக்கிறோம்.  ஆனால் நான் சந்தித்த ஒரு கடின நாள் மனதை விட்டு அகலாமல்.

அந்த அன்பான இடம்  மயிலாடுதுறையில் இருக்கிறது. நுழைந்தவுடன் வாயிலில் சில குழந்தைகள்..அம்மாவை சுற்றி சுற்றி வந்தன..ஒரு கைக்குழந்தை அவர் கையை விட்டுப் போகவில்லை. அவர் கலா அம்மா. அப்படியே உள்ளே ஒரு குழந்தைக்கு பூப்ய்த்து நீராட்டு விழா நடந்தது..அந்த அலங்காரத்தை தொட்டு தொட்டு அந்த பெண் ரசித்துக் கொண்டுருந்தார்.  அன்றைக்கு ஸ்நாக்ஸ் பரிமாறப்பட்டது அந்த சிறு கூட்டத்துக்கு மட்டும். ..ஆனால் அந்த பெண் குழந்தைக்கு இவர்கள் மட்டுமே சொந்தங்கள்.மகிழ்ச்சியுடன்  அவளுக்கு எல்லாம் செய்தனர். நாங்களும் ஆசி செய்து..மஞ்சள், குங்குமம் இட்டோம்.

அக்கா நிறைய சொல்லுவாள் அப்பொழுதெல்லாம் உணராத விஷயத்தை   நேரே சென்றபொழுது மனம் நெகிழ, அதிர உணர்ந்தேன். பலர் வீட்டால் புறகணிக்கபட்டவர்கள்..பலருக்கு விலாசமே அன்பகம். இங்கு இருக்கும் ஒவ்வொருவரும் மன நலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள்..

இன்னொரு அறையில் வலதுப் புறத்தில் வரிசையாக குழந்தைகள் படுக்க வைக்கபட்டு இருந்தன..அவர்கள் ஒவ்வொருவருக்கும் தாய் வடிவில் ஒருவர்..ஊட்டிக்கொண்டும், துடைத்துக் கொண்டும் , வெறுமே மடியில் கிடத்திக் கொண்டும் இருந்தனர். மலம் போக வேண்டும் என்ற உந்துதல், உணர்வுகள் இல்லாத குழந்தைகள்..குழந்தைகள் என்று சொல்வதுக் கூட தவறு..பலர் சிறுவர்கள்..ஆறு வயது, ஏழு வயதுக்கு கூட வளர்ச்சி இல்லாமல் குழந்தையாகவே இருந்தனர். அவர்கள் திரும்ப திரும்ப கழிப்பது, வாய் ஒழுகுவது என்றபடியே இருந்தனர்..பொறுமையாக அந்த வாசனைகளை பொறுத்துக்கொண்டு ஒரு தாய் போல் அங்கு சேவை செய்பவர்களை பார்த்தப்பொழுது தாய்மை எல்லாம் புனிதமே அல்ல என்று தோன்றியது..



பிசியோதெரபி அறைகள்....சாதரணமானவரை பயிற்சி செய்ய வைப்பதே கடினம்..இந்த குழந்தைகளை? ஆனால் அவர்களை நடக்க வைத்து சாதரணமாக ஆக்கிய பல வெற்றிக் கதைகளை கேட்கும் பொழுது வலி நல்லது என்பதின் மகத்துவமும்..இடைவிடாத கடின முயற்சியின் வெற்றி பற்றி நமபிக்கையும் வந்தது.

எல்லாருக்கும் கல்வி வகுப்பும் யார் யாருக்கு எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு பாடத்திட்டமும், கைப் பயிற்சிகளும் இருந்தன. ஒவ்வொன்றையும் மனம் ஒப்பிட்டுக் கொண்டே இருந்தது..ஒரு குழந்தையை சரியாக படிக்க உக்கார வைப்பதைக் கூட பெரிய வேலையாக உணரும் என்னை என்னவோ செய்தது..அந்த இடம்..

அடுத்து ஒரு பெரிய அறை..சிறுவர்கள்..கிட்டத்தட்ட அடைத்து வைக்கப்பட்டு இருப்பதுப் போல தோற்றம்..ஆனால் ஒரு ஒழுங்கு, அமைதி..அவர்களை கட்டுக்குள் கொண்டு வருவது..நினைத்தாலே கலங்கியது.மிக புத்திசாலியான அதிக கேள்விகள் கேட்கும் சிறுவனைப் பார்த்து ஏன் இவன் எங்கே என்று கேட்டப் பொழுது..அப்போ அப்போ மனம் பிறழுமாம்..அப்பொழுது தன்னை தானே காயப்படுத்திக் கொள்வானாம். தலையில் சில காயங்களும்..மனம் கசிந்து உருகியது..உணர்வுகள் மோதியதில் ஏன் நாம் இங்கு இருக்க வேண்டும்?  ஓடிவிடுவோமே இந்த இடத்தை விட்டு என்று தோன்றியது..அந்தளவுக்கு கனத்த  உணர்வுகள்..

ஊரை விட்டு ஓடி வந்தவர்கள், பேருந்து நிலையத்தில் மீட்கப் பட்டவர்கள்..வயதான பெண்கள், வெளியே பாதுகாப்பு இல்லாததால் அங்கேயே இருப்பவர்கள்..

ஒவ்வொரு முறையும் அக்கா பன் வாங்கி செல்வாள்..அதற்கு எத்தனை ஆசை..ஓடி வந்து வாங்கிக் கொண்டார்கள்..தினசரி உணவைத் தவிர ஸ்நாக்ஸ் என்றால் என்ன என்று அறியாத பல குழந்தைகள்..பன் மட்டும்தான் செரிமானம் ஆகும் பலருக்கு.


ஒரு அரை நாளை அங்கு கழிக்க மனஉறுதி  இல்லாத என்னால் அதை நிர்மாணித்த கலா, ஞானசம்பந்தம் தம்பதிகளை கையடுத்துக் கும்பிட தோன்றியது. நிஜமாக அவர்கள் காலில் விழ்ந்து ஆசி வாங்க வேண்டுமென்ற உணர்வைக் கட்டுபடுத்திக் கொள்ள முடியவில்லை. வசதியாக வாழ்ந்து, சொந்த வீடு, சொத்துகளை விற்று இவர்களுக்காக வாழ்வை அர்பணித்த தம்பதிகளை பார்த்தபொழுது சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட அலைக்கழிக்கும் மனம் கொண்ட என்னைக் கண்டு கொஞ்சம் கூச்சம் வந்தது நிஜம்.


அவர்கள் வெளியே உதவி எதுவும் கேட்பதில்லை..ஒரு முறை தோழி பானு ரேகா சென்றுவிட்டு அவர்களுக்கு ஃபேன் போட இன்வர்ட்டர் நண்பர்கள் உதவியுடன் வழங்கினார்.

பல குழந்தைகளுக்கு இட்லியை ஊறவைப்பது கடினம் என்பதால் அக்கா  உதவிகள் மூலம் நெஸ்டம் ரைஸ் மாதம் ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி தருகிறார்கள்..ஓரளவுக்கு..ஒப்பேத்த முடியும்..இதைப் பற்றி நண்பர் ராஜா கே.வி இடம் தெரிவித்தேன்..உடனே மாதம் ஆயிரம் ரூபாய் வழந்குவதாக ஒப்புக் கொண்டார். ஆனால் இன்னும் நெஸ்டம் ரைஸ் தேவைப் படுகிறது. வாங்கிக் கொடுத்தால்.அந்த சிறப்பு குழந்தைகளுக்கு உணவு எளிதாக இருக்கும். மாதம் ஆயிரம் என்பது நமக்கு ஒரு வேளை ஹோட்டல் உணவு..ஆனால் அந்த சிறப்பு குழந்தைகளுக்கு தினசரி உணவு. மனமிருப்பவர்கள் வாங்கித் தரலாம்.
மிக்க நன்றிகள் ராஜா அவர்களுக்கு..சொன்ன அடுத்த நொடி யோசிக்காமல் உடனே உதவ முன்வந்ததில் மனதிலும் ராஜாவாக..




ஒவ்வொரு முறையும் நம்மால் முடிந்த சிறு அடி அடுத்த அடி வைக்க வேண்டும் என்றே ஆசை..இதுப் போன்று தேவைப்படுவர்களையும் கொடுக்க நினைப்பவர்களுக்கும் ஒரு பாலமாக இருக்க ஆசை. கொடுக்க மனமுள்ளவர்கள் தொடர்புக் கொள்ளலாம். 

கடைசியாக அவர்கள் பாடங்கள் பற்றிய பேசிய பொழுது..வெளி உலகில் இருக்கும் பல வார்த்தைகளுக்கு இவர்களுக்கு அர்த்தமே தெரியாது. ஒவ்வொன்றையும் விளக்க வேண்டும் என்றார்..ஒரு குழந்தை சந்தேகம் கேட்டதாம " ஊருக்கு போறதுன்னா என்ன அம்மா ? ஊர் ன்னா எப்படி இருக்கும்" னு என்று..ஊரையோ, பயணத்தையோ பார்த்திராத அக்குழந்தை..

ஒன்றா இரண்டா..நாம் வாழும் வாழ்கையின் ருசியை பத்து சதவிகிதம் கூட ருசிக்காமல்..ஆனால் வாழ அன்பான அன்பகம் கிடைத்து இருப்பதும் வரம். மனம் இன்னும் அன்பைத் தேடி..