Wednesday, May 20, 2015

வாழ்த்துகள் மட்டுமா வாழ்வு?

வாழ்த்துகள் மட்டுமில்லை இங்கு.

பன்னிரெண்டாம் வகுப்பு தோல்வி...கர்நாடகாவில் ரிசல்ட் வந்துவிட்டது.
..நம்ம ஊர்ப் போல இங்கு மதிப்பெண்கள் அதிகம் வாங்க மாட்டார்கள்..அதுப் போல தேர்ச்சி சதமும் குறைவு. அறுவது சதவிகிதமே தேர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்..அதாவது பத்து மாணவர்களில் நான்கு தோல்வி..

ஒரு மாணவியின் தந்தை போன் செய்தார். நீங்கள் வந்து பேசினால் நல்லா இருக்கும் என்று...நம்பிக்கை தவிர கொடுப்பதற்கு ஒன்றுமில்லை என்றாலும் அதை விட சிறந்த பரிசு கிடையாது என்று அறிந்தே இருக்கின்றனர்.

மாணவி திரும்ப திரும்ப நன்றாகத்தான் செய்தேன் என்றார். மிகுந்த சஞ்சலம்..தந்தையும் மாணவியின் கண்ணீரை பார்த்து சஞ்சலத்தில் இருந்தார். எதிர்பார்க்கவில்லை.நடந்து விட்டது..அடுத்து என்ன செய்யப் போகிறாய் என்றுக் கேட்டேன்..அவருக்கு ஒன்றும் புரியவில்லை..இத்தனை வேகமாக கேட்பேன் என்று எதிர்பார்க்கவில்லை..அந்த கேள்விக்கு அவள் தயாராகவில்லை ...

உடலில் வலி ஏற்படுவது இந்த இடத்தில பிரச்னை என்று உணர்த்த..அதை சரியாக வைத்தியம் செய்து சரி செய்ய வேண்டும். அதுபோல தோல்வியின் மூலம் வருத்தம் ஏற்படுவது, வலி வருவதும் உன்னை சரி செய்துக் கொள்ள..அதை முதலில் உணர வேண்டும்.

இதே பார்டரில் பாஸ் செய்து இருக்கலாம்.. நீ கடவுளை நம்பினால்..இது கடவுள் கொடுத்த பரிசு என்று நினைத்துக் கொள்..இந்த நேரத்தில் உன் வலிமைக்கு வந்த சோதனை..அதில் மீண்டு விட்டால் எந்த பிரச்னையும் உன்னால் சமாளிக்க முடியும்..தோல்வியில் இருந்து மிகபெரிய வாழ்க்கைப் பாடங்கள் கற்றுக் கொள்ளலாம்..எங்கோ ஏதோ சமயத்தில் ஏற்பட்ட அலட்சியம் ..இந்த தோல்வி..இனிமேல் உன்னிடம் எந்த விஷயத்திலும் அலட்சியம் வராது..அது வாழ்கையில் வெற்றிப் பெற மிக உதவும்..எனவே இந்த வருத்தத்தை கூட உனக்கு சாதகமாக, நேர்மறையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு பொறியியல் கல்லூரியில் பெரிய நிறுவனத்தின் தலைமை பணியில் இருப்பவர்கள் கேம்பஸ் சென்றார்கள்..ஒரு மாணவன் அரியர்ஸ் வைத்து இருந்தான்..ஆனால் நிறுவனத்துக்கு வேண்டிய திறமை அவனிடம் இருந்தது..மற்றவர்கள் பற்றி கவலைப் படாமல் அந்த தலைமையாளர் வேலைக்கு மாணவனை எடுத்துக்கொண்டார்.. அவன் சென்றவுடன் எப்படி அரியர்ஸ் மாணவனை எடுக்கலாம்..நம் கம்பெனி ரூல்ஸ் இருக்கே என்று கேட்டு இருக்கிறார்கள்..அதற்கு அப்படி என்றால் பன்னிரெண்டாம் வகுப்பில் நான் பெயில்  என்னை என்ன செய்வது என்று கேட்க..அவர் கீழ் வேலை பார்ப்பவர்கள்..வாயடைத்து  போனார்கள்..இது நிஜக் கதை..எனவே பன்னிரெண்டாம் வகுப்பு தோல்வி என்பது வாழ்கையில் ஒரு துளி..அவ்வளவே என்றேன்..


அழுகை வரும்..நன்றாக அழு..உன் துக்கங்கள் கரையும் வரை அழு..அதை அடக்க வேண்டாம்..வருத்தமா இருக்கா..வருத்தப்படு..அது உணர்வு..அது வரும், போகும்..இப்பவே போய் ஆதித்யா டி.வி பாரு..ப்ரெண்ட்ஸ் கூட வெளில போ..மனசை மாத்திக்கோ என்று சொல்ல மாட்டேன்..இந்த சமயத்தில் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று தீவிரமாக யோசிக்க வேண்டும்..

வருத்தத்தில் சுனங்கி அடுத்த வாய்ப்பை தவற விடக் கூடாது..அதற்கு அந்தப் பெண் ரி வேல்யுவேஷன் அனுப்பனும் என்றாள்..அனால் அடுத்த தேர்வு நாற்பது நாட்களில்.. ரி வேல்யுவேஷன் முடிய இன்னும் இருவது நாட்கள் ஆகும்..மிக முக்கியமான நேரம் கையில் இருந்து நழுவுகிறது...எனவே அழக் கூட நேரமில்லாமல் அடுத்த தேர்வு காத்துக்கொண்டு இருப்பதை உணர்த்தினேன்..

அடுத்து நீ ஒரு பெண்..நாளைக்கு யாரை சார்ந்தும் இருக்க கூடாது..சார்ந்து இருக்க முற்படும் நேரத்தில் உன் சுயம் தொலையும்..அப்பா, கணவன், மகன் என்று யாரையும் சாராத வாழ்க்கை வாழ வேண்டும் என்றால் பணமும் முக்கியம். அதற்கு இப்பொழுது நம் கண் முன்னால் தெரியும் ஒரே வாய்ப்பு கல்வி மட்டுமே.

எல்லாருக்கும் தெரியும்...நீ நன்றாக படிப்பாய் என..எனவே யாரை பார்த்தும் அவமானம் கொள்ள வேண்டாம். யாருக்கும் நம்மை நிருபிக்க தேவை இல்லை. நம் எதிர்காலம் மட்டுமே நமக்கு முக்கியம்..யார் யாரோ பேசுவார்கள் என்று யோசித்துக் கொண்டு இருந்தால் நம் மனம்தான் இன்னும் கெட்டுப்போகும்..நம்மை நன்றாக அறிந்தவர்கள் பற்றி நாம் கவலைப் பட வேண்டாம். அறியாதவர்கள் பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும்?

உன் எதிரில் இரு பாதை இருக்கு..வருத்தப்பட்டுக்கொண்டு சுணங்கி போய்..அழுதுகொண்டு இருப்பது..அடுத்து அழுது முடிச்சிட்டு இதை பாடமாக எடுத்துக்கொண்டு மனதுக்கு வெறி ஏற்றி அடுத்த தேர்வுக்கு படிக்க ஆரம்பிப்பது..உனக்கு வெளியில் இருந்து யாரும் ஊசியோ, மாத்திரையோ கொடுத்து எதுவும் செய்ய முடியாது..உன் மனம், உன் வாழ்வு நீதான் தேர்ந்து எடுக்க வேண்டும்..போக வேண்டிய பாதையை..

இது எல்லாவற்றையும் விட நம்பிக்கை மிக முக்கியம். போன தேர்வின் பொழுது அது எங்கோ தவறி இருக்கிறது..அல்லது கடின உழைப்பை தூண்ட வில்லை. கடின உழைப்புடன் நம்பிக்கையும் மிக முக்கியம். எனவே கல்லூரி சேரப் போவதை கனவாக கொண்டு..அதில் துளிக் கூட நம்பிக்கை இழக்காமல் நேர்மறையாக எல்லாம் சிந்தித்து தேர்வுக்கு தயார் ஆனால் கண்டிப்பாக நாம்தான் வெற்றிப்பெறப் போகிறோம்..கனவுகள், கடின உழைப்புடன் சேரும் வேளையில் அதிர்ஷ்டம் எனப்படும் வெற்றி நம்மை சேரும்..அதற்கு உதவியாக எல்லா வாய்ப்பும் நமக்கு கிடைக்கும்.

அனைவரும் வெற்றியை பற்றியே பேசுவதால் தோல்விகள் இல்லை என்று ஆகாது...இத்தனை லட்சம் மாணவர்கள் தோல்வி அடைந்து இருக்கிறார்கள். வருடா வருடம்..எனவே கோடிக்கணக்கான மாணவர்கள் இந்தியா முழுவதிலும் இருக்கிறார்கள். அவர்களுக்கான ஒரு வாழ்கை இருக்கவே இருக்கிறது. கண்டிப்பாக அதில் பலர் மிகப்பெரிய இடங்களை அடைந்து இருப்பார்கள். எனவே தோல்வியை எப்படி கையாளுகிறோம் என்பதுதான் முக்கியமே தவிர..தோல்வி என்பது பெரிய விஷயமே இல்லை..அதுவும் நல்லதுக்கு..

பள்ளிகளில் படி, மதிப்பெண் வாங்கு, பாஸ் செய்யா விட்டால் உன் வாழ்கை போச்சு என்று  பயத்தில் வைத்து இருக்கிறார்கள்..அதற்குமேல் பெற்றோர்கள்..அந்த பயமே தோல்வி வேளையில்  வாழ்கை இருண்டார் போல இருக்கிறது..இனிமேல் அலட்சியம்  என்பது எத்தனை மோசமானது என்ற படிப்பினை வாழ்வின் முதல் படியில் கிடைத்து இருக்கிறது..இதுவும் நல்லதுக்கு..இதைப் படிப்பினையாக கொண்டால் இனி வாழ்வில் எங்கும் அலட்சியமாக இருக்க முடியாது..எனவே எழுந்து வந்து வேலையைப் பார்...யாரையும் இப்பொழுது பார்க்க தேவையில்லை..பிறகு பார்த்துக் கொள்வோம்..நம்பிக்கை மட்டுமே முக்கியம் என்று முடித்தேன்..

எப்படி வெற்றி ஒரு இயல்பான விஷயமோ அதேப் போலதான் தோல்வியும் என்றேன்..

அவளிடம் பேசும் வேளையில் அவள் எனக்கு செய்த மிகப்பெரிய உதவி..என்னை என்னிடம் இருந்தும மீட்டுப் பார்க்க முடிந்தது. அவளுக்கு கொடுத்த நம்பிக்கையை எனக்கும் கொஞ்சம் அள்ளிக் கொண்டு வந்தேன்.

திரும்பும் வழியில் பையனிடம் தோல்வி வலிப்பற்றி பேசினேன்..அவனால் அதை புரிந்துக் கொள்ள முடியவில்லை..அதற்கு ஒரு கேர்ள் ப்ரென்ட் ஆவது உன்னை விட்டு விலகி இருக்கணும்..அப்பத்தான் தெரியும்..அந்த வலியை விட தேர்வு தோல்வி மிக வலிக்கும் என்றேன்..அம்மா அதுக்கெல்லாம்  நேரமே இல்லை..அப்புறம் நானும், என் ப்ரெண்ட்ஸ் குருப்  படு சோம்பேறிகள்.. எனவே அந்த தோல்விகள் எல்லாம் எங்களுக்கு வந்ததே இல்லை..என்றான்.

இந்த போட்டு வாங்கும் அம்மா புத்தி போவதே இல்லை நம்மை விட்டு..ஹப்பாடா என்ற நிம்மதியுடன்,,இதில் என்ன ஆனந்தமோ..நமக்கு..வீடு திரும்பினேன்.

நினைவில் அந்தப் பெண்..விடைபெறும் பொழுது.. அந்தப் பெண்ணின் கண்கள் நம்பிக்கையில்  ஒளிர்ந்தது ..போகும் பொழுது இருந்த வெடித்து வந்த அழுகை இல்லை. தோல்வி அடையும் வரை நாம் ஏன் தோல்விகள் பற்றி பேசுவதே இல்லை? 






Monday, May 18, 2015

நேர்மறை வருத்தங்கள்.

         மனநிலை மாற்றம் என்பது மிக சகஜம். எப்படி வானிலை மாற்றம் இருக்கோ அப்படியான இயற்கை சம்பவம். எப்பவும் உற்சாகம், பாஸிடிவ் என்பது ஓரளவு சரிதான்.
           ஏற்கனவே மனம் நிலைக் கொள்ளாமல் இருந்து வந்தது. நேற்றுக் காலையில் மே பதினெட்டு நினைவாக ஒரு புகைப்படம் பார்த்தவுடன் இன்னும் வருத்தம் கொண்டது..அதையே ஸ்டேடஸ் ஆக போட்டேன். பலர் உற்சாகமாக இருங்கள்..நீங்களா இப்படி ? நம்ப முடியவில்லை என்று சொல்லி இருந்தார்கள்..உடனே சந்தோஷமாக இருக்க மனதை மாற்றிக் கொள்ளவும் அறிவுரை கூறி இருந்தார்கள்.

          வருத்தம், வலிகள் என்பதுதான் இயற்கை மனிதனுக்கு அளித்த மிகப்பெரிய கொடை..ஆறாம் அறிவும்..இல்லாவிடில் உலகமே கொடுரமாக ஆகி இருக்கும். வருத்தப்படும் நேரங்களில் நம்மை சுயமாக அலசிப் பார்க்க இயலும். எங்கே நம் தவறு என்றுப் புரிந்துக் கொள்ள இந்தக் காலக் கட்டம் உதவும். உடனே மனதை மாற்றுகிறேன் என்று சந்தோஷங்களில் ஈடுப்பட்டால் நாம் திருந்தவே முடியாத இடத்துக்கு போய் விடுவோம். வருத்தத்தை எப்படி கையாளுகிறோம் என்பது மிக முக்கியம்.

   என்னைப் பொறுத்தவரை இயற்கை கொடுத்த ஒவ்வொரு உணர்வும சரியானதே. குழந்தைகளுக்கு பயப்படாதே என்று சொல்லிக் கொடுக்கிறோம். அதை விட எப்படி பயத்தைக் கையாள வேண்டும் என்று சரியாக சொல்லிக் கொடுக்க வேண்டும். துணிச்சலும் தேவை. உள்ளுணர்வுதான் பல பயங்களுக்கு காரணம். காட்டில் வாழ்ந்த வேட்டை மனிதர்களின் மிச்ச உணர்வுகளே நாம் கொண்டு இருப்பது. அதில் பத்து சதவிகிதம் கூட இப்பொழுது இல்லை. எல்லாவற்றையும் தொலைத்து விட்டோம். உணர்வுகள் சரியானவை.. காதல், நேசம், பயம், வலி, கோபம், வருத்தம், துணிச்சல், அமைதி, மௌனம், பரபரப்பு எல்லாமே இயற்கைதான்..

        நாகரிகம் என்ற பெயரில் வெடித்து வரும் அழுகையை விழுங்கிக் கொள்கிறோம். அழுதுவிட்டு முகத்தை துடைத்துக் கொண்டு அடுத்த வேலைக்கு செல்லும் மனிதர்களே உணர்வுகளை சரியாக கையாள தெரிந்தவர்கள்..அழுகையை அடக்கி வைப்பவர்கள் அல்ல...அது இன்னும் அழுத்தத்தை கொடுக்கும். என்னைக் கேட்டால் ஆண்களுக்கு வரும் ரத்த அழுத்தம், இதயக் கோளாறுகள் பல எல்லாவற்றையும் அடக்கி வைப்பதால்தான் வருகிறது. அவர்களும் அழுது தீர்த்து விட்டால் மனம் லேசாகும். அழும் நேரத்தில் அழ வேண்டியது மிக அவசியம். இயற்கை அளித்த கொடை அது. என் அக்கா திருமணத்தில் என் கம்பீரமான, ஆளுமையான அப்பா அழுத அழுகை வாழ்நாளில் மறக்க முடியாது..அந்த அன்புக்கும , தவிப்புக்கும் அந்த உணர்வை சரியாக கையாண்டதால் அருமைப்பெண் பிரிவின் துயரத்தை கொஞ்சமாவது கரைத்துக் கொள்ள முடிந்தது.

  ஆனால் இதே உணர்வுகளை பெண்கள் மிகக் அதிகமாக வெளிக் காட்டுவதால் அவர்களுக்கும் பிரச்னைகள். ஒரு கட்டுரைப் படித்தேன்..ஒருப் பெண் காதலின் மிகுதியால் பிரிந்த அவனுடைய காதலுனுக்கு ஒரே வாரத்தில் லட்சக்கணக்கான மெசேஜ், இரண்டாயிரம் இ.மெயில், எத்தனனையோ போன் கால்கள் என்று இடைவிடாமல் அவனை அழுது அழுது தொல்லைப் படுத்தி..அவன் தாங்க முடியாமல் போலீசிடம் சொல்லி..இப்பொழுது எல்லாம் பிடுங்கப்பட்டு அவள் ஜெயிலில் இருக்கிறாள். அவள் வருத்தத்தை, கோபத்தை, அன்பை சரியாக பயன்படுத்த தெரியாமல்  சிறையில்..எல்லாவற்றுக்குமே ஒரு அளவுதான்..

   கோபமும் அப்படிதான்..காந்திஜி சரியான நேரத்தில் கோபப்பட்டு அஹிம்சை முறையில் அந்தக் கோபத்தை ஒத்துழையாமை இயக்கமாக மாற்றி காட்டினார். உலகில் சரியாக கோபத்தை கையாண்டவரில் காந்திஜி ஒருவர். தன ஆளுமையினால் அக்கிரமம் கொண்டு அடிவயிறில் இருந்து எழும் கோபத்தை சரியான திசையில் மக்களை திருப்ப் வைத்தார்..சுதந்திர போர் மலர்ந்தது. யார் என்ன தவறு செய்தாலும் அவர் உண்ணாவிரதம் இருப்பார். அவருக்கு ஓரளவு அத்தனை உணர்வுகளையும் சரியாக கையாள தெரிந்து இருந்தது..ஆனால் கஸ்தூரி பாய் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கவில்லை என்று எனக்கு தோன்றும். இங்குதான் அனைவரும் மனிதர்கள் என்று உணர்கிறோம்.

  நேர்மறை என்பது எப்பவும் சந்தோஷமாக, உற்சாகமாக இருப்பது அல்ல..நமக்கு நேர்மையாக இருக்க வேண்டும். நாம் செய்த தவறுகளின் மூலமே நமக்கு வருத்தங்கள் பல வரும்..பல சமயம் சூழலும் காரணம்..பல வருத்தங்களை நம்மால் எளிதில் சரி செய்ய முடியாது.. அந்த சமயத்தில் வருத்தமாய் இருப்பது அந்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வழி வகுக்கும்..வாழ்வு என்ப து Trial and Error தான்..கற்றுகொண்டே இருக்கும் பொழுது ஒரு நாள் வாழ்வு முடியும்.

  ஒவ்வொரு விஷயத்தில் இருந்து கற்றுக்கொள்ள எத்தனையோ இருக்கிறது..அந்த நேரத்தில் அந்த உணர்வுகளுக்கு மதிப்பளித்து பாடம் கற்றுக்கொண்டு வெளியில் வர வேண்டும்.

    கற்றுக்கொண்ட பிறகு சரியாக நடந்தால் நிஜமாகவே வாழ்வு மகிழ்ச்சி பெறும்..ஆனால் அதுவும் நிரந்திரமில்லை....வாழ்க்கை சக்கரத்தில் நாம் சுழன்றுக் கொண்டேதான் இருக்க வேண்டும். எதுவும் நிரந்தரமில்லை..மகிழ்ச்சி, கோபம், வலி,வருத்தம், இனபம், துன்பம்..அனைத்தும்..

    எல்லாம் மாயை என்று சொல்ல நன்றாக இருக்கும்..எதுவுமே மாயை இல்லை என்ற விஷயம் இருப்பதால் மட்டுமே அறிவியல் வளர்ந்து இருக்கிறது. ஆராய்ந்து அறிவோம்..உணர்வுகளையும்.













Saturday, May 16, 2015

எது ரைட் சாய்ஸ்? - Kungumam Thozhi

என்னுடைய தொடர்..இன்றில் இருந்து..

நம் வீட்டில் இருக்கும் பொருட்கள்..அதன் அறிவியலும், தொழில்நுட்பங்களும் விரிவாக..

எது ரைட் சாய்ஸ்? - Kungumam Thozhi

Friday, May 15, 2015

மலையகத் துயரமும், பெங்களூர் கூட்டமும்.

"தோட்டக்காட்டீ"

மலையக தமிழர்களின் துயர சரித்திரம்.

இதை எழுத நமக்கு எந்தளவுக்கு தகுதி இருக்கு என்று கேள்வி கேட்டுக் கொள்ளும் நேரம்.

ஒரு மூன்று மணி நேரம் என்ன செய்யும்..

அப்படியே ஆணி அடித்து உக்காரச் செய்தது..

மூன்று நபர்கள்..அதில் ஒருவர் சாட்சி..அத்தனையும் எழுத்தில் கொண்டு வந்தவர்...இன்னொருவர் பாதிக்கப்பட்ட மக்களில் ஒருவர்..இன்னொருவர்..பாதிக்கப்பட்ட மக்களை ஏற்றுக்கொள்ளாத சமூகத்தின் பிரதிநிதி..

இந்த முறை பெங்களூரு மாதாந்திர கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட புத்தகம்..தோப்புக்காட்டீ..

எரியும் பனிகாட்டின் இலங்கை சரித்திரம்.. பரதேசிக்களின் பஞ்சம் பிழைக்க சென்ற அவலம்..

இருநூறு வருடங்களுக்கு முன் சென்ற தமிழர்களின் துயரம்..

இன்றும் கொஞ்சம் கூட முன்னேறாத சமூகத்தின் சோகம்..

இன்று கார் கடந்து  சென்றால் கூட சேற்றில் இறங்கி மரியாதை காட்டுவார்களாம்.

எப்பவும் தலை குனிந்தே இருப்பார்களாம்..

பள்ளிக் கூடங்கள் இன்றும் அதிகம் எட்டிப் பார்க்கவில்லை..

லயம் எனப்படும் எந்த வசதியும் இல்லாத வீடுகளில்தான் குடியிருப்பு..

பிள்ளை மடுவம் என்று ஒரு இடம்..அங்கு புதிதாக பிறந்த குழந்தைகளை தாய்மார்கள் தூளியில் போட்டுவிட்டு பால் சுமந்த நெஞ்சு வலிக்க  தேயிலை பறிக்க வேண்டுமாம்..பிள்ளை மடுவதுக்கு பராமரிக்க பணமும் கொடுக்க வேண்டுமாம்..

அட்டை பூச்சிகள் இல்லாத நாட்டை கண்டிராதவர்களின் வாழ்வும், உழைப்பும் இன்றும் அட்டை முதலாளிகளால் உறிஞ்சப்படும் அவலம்..

ஒரு சேஞ்சுக்கு இந்திய முதலாளிகளும் களம் இறங்கி உள்ளார்கள் போல..

சிங்களவரை திருமணம் செய்துக்கொண்டால் கூட ஏற்றுகொள்ளும் தமிழ் இனம்..தோப்புக்காட்டியை வீட்டில் சேர்ப்பது இல்லை..

பட்டினிக் கோடுகளை மட்டும் பார்த்தவர்களின் உடலில் துரோக கோடுகள் வரையப்பட்டு ஒதுக்கப்படுகிறார்களாம்..

அதையும் விட முள்வேலி முகாம்களில் கூட ஒதுக்கப்பட்ட இனமாகவே இருந்தனராம்..

கதைகள் கேட்க கேட்க மனம் பதறியது..நாம் ஒன்றும் இதில் சளைத்தவர்கள் இல்லை என்றாலும் நம் மக்களுக்கு குரல் கொடுக்க எத்தனையோ தலைவர்கள்..அத்தனை எளிதில்லை இங்கு அடிமைப்படுத்தல்.

இரா.வினோத் தோட்டக்காட்டீ  புத்தகம் வலி மிகுந்த கவிதைகளால் நிரம்பியது..அவர்களின் வாழ்கையை நேரடியாக களத்தில் நின்று பதிவு செய்து இருக்கிறார். அவர் அங்கு ஒரு இரவு படுத்து எழுந்தப்பொழுது அட்டைகளால் வெள்ளை சட்டை சிவப்பாக மாறியதாம்.. ஆனால் அவர்கள் வாழ்வே அங்குதான். சோளகர் தொட்டி, எரியும் பனிக்காடு  போன்ற  புத்தகங்களின் விளிம்பு நிலை மக்களின் துயரங்கள் நினைவுக்கு வந்து சென்றது..

இன்று சாய் பாபா வை வழிபடவும் ரஜினியை துதிக்கவும் அறிந்து வைத்து உள்ளதைப் போல..தங்கள் உரிமைகளை பற்றி அறியாமல் கைகட்டியே பேசுகிறார்கள் என்று தெரிய வந்தது. நடேச அய்யர், முதன் முதலில் பள்ளிக் கட்டிய ஆசிரியர், அவரின் மகன் எழுத்தாளர் ஜோசப் (என்றே நினைவு) என்று பல கிளைக் கதைகள் விரிந்துக் கொண்டே சென்றது...அசைய முடியவில்லை..உணர்வுகளால் சிறை வைக்கப்பட்டு இருந்தோம் அனைவரும்.

இன்னொன்று இனம் கருவறையில்  அழிக்கப்படுவது கூட உணரா மக்கள்..எத்தனையோ வருடங்களாக இவர்களின் மக்கள் தொகை ஏறவே இல்லையாம்.. கொடுமை.

கூட்டத்துக்கு வந்திருந்த மலையக தமிழர் லோகேஷ் சொன்ன விஷயம்..அவர்கள் இந்திய வம்சாவளியாக இந்திய அரசாங்கம் அவர்களை ஏற்றுக்கொண்டு வருடத்திற்கு நூறு மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் வழங்கியும் அதைப் பற்றி தெரியாததால் சிங்களவர்கள் கூட அதில் படிக்க வந்துவிடுகிறார்கள். அடுத்து அவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் பற்றி அறியாதது..அடுத்து எட்டாம் வகுப்பு வரை படித்தால் கொழும்புக்கு அல்லது யாழ்பாணத்துக்கு வீட்டு வேலை செய்ய அனுப்பிவிடுவார்களாம்..மிக குறைந்த அளவுக் கூட கல்லூரிப்பக்கம் எட்டிப்பார்ப்பது இல்லை.

யாழ்பாண தமிழர் அருள் சொன்ன விஷயம்..தோட்டக்காட்டிகளை வேலைக்கு வைத்துக் கொள்வோம்..தனியே பின்னாடி இடம் கொடுத்து..ஆனால் சமூகத்தில் சரியான இடமெல்லாம் கிடைக்காது என்று வருத்தத்துடன் கூறினார்.  தோப்புக்காட்டன் என்றுதான் விளிக்கப்படுகிறார்கள் இன்றும்..வீட்டிற்குள் இன்றும் அனுமதியில்லையாம். இந்திய வம்சாவளி ஒரு இழிநிலை சமூகமாக  மாற்றப்பட்ட துயரம்.

மூவரின் பேச்சுகளும் எல்லாரையும் அசைத்தன...எழுத்தாளர் பாவண்ணன் சார்..எழுந்து மூவரையும் கட்டித் தழுவினார்..உங்கள் மூவரையும் நம் சமூகத்தில்  காசிக்கு சென்று விட்டு வந்தவர்களைப் போல எப்படிப் மரியாதையோடு போய் பார்ப்போமா அப்படி  பார்க்கிறேன் என்றார்..அவரும்  உணர்ச்சிவசப்பட்டு இருந்தது கண்களில் தெரிந்தது.

கிளம்பி வரும்பொழுது வார்தைகள் என்னிடம் ஏதுமில்லை..நன்றிகள் சொன்னதாக நினைவு..வீட்டுக்கு வந்து குழந்தைக்கு புத்தக போட்டோக்கள் காட்டி துயர சரித்திரத்தை கதையாக கூறினேன்..

இந்த இளம் தம்பதியின் திருமண புகைப்படத்தில் இருந்து கண்களை அசைக்க முடியவில்லை. புத்தகம் முழுக்க அவர்களின் வாழ்க்கை பதிவுகள் அபூர்வ புகைப்படங்களுடன்..


"கனல் தெறிக்கும்
காட்டுப் பனியில்
வந்து வெடித்த
முலைக் காம்பில்
பிள்ளை மடுவ முற்றத்தில்
அவசர அவசராமாய்
முட்டி முட்டிக் குடித்த
பிள்ளையின் வாயில்
தோய்ந்திருந்தது
தோட்டிக்காட்டீயின்
ரத்தம் ! "

இப்படி கடின வாழ்க்கையின் துயர பக்கங்களை   அள்ளி வீசி சென்று இருக்கும் கவிதைகள்..

நமக்குதான் அது கதை, கவிதை, உணர்வு...ஆனால் அதுதான் அவர்களுக்கு வாழ்க்கை..ப்ச்..