Thursday, October 30, 2014

அமெரிக்க அனுபவம்..கானல் நீரா, பாலைவன சோலையா? பயணம்-மூன்று..

விசா..

விசாவை பற்றி பக்கம் பக்கமாய் பயமுறுத்தல்கள் வந்துக்கொண்டே இருந்தன..எதையும் பாசிட்டிவாக கருதி முடிவெடுக்கும் எனக்கே நெகடிவ் சிந்தனைகள் வர தொடங்கி இருந்தன..வேறு காலேஜ் எதற்கும் முயற்சிக்கவில்லை..அமெரிக்க கல்லூரியை  நம்பி இந்திய புருஷ கல்லூரிகளை கை விட்ட கதை போல தோன்றியது...

கல்லூரியில் இருந்து மெயில்..டெல்லிக்கு வருகிறோம்.அங்கு ஒரே நாளில் விசா விசாரணைகள் முடிக்கலாம்..நாங்கள் உதவுவோம் என்று கூறினார்கள்..முன்ன்ப்பின்ன பார்த்து இருந்தாதானே தெரியும் என்று ஒரு பழமொழி உண்டு..அதுபோல முன்னப்பின்ன யாரும் வெளிநாட்டு பட்டப்படிப்புக்கு கல்லூரிக்கு சென்ற அனுபவம் இல்லாததால் கொஞ்சம் ஆரம்ப தடுமாற்றம்..இதுக்கு ட்ரைனிங் கொடுக்கிறேன் என்று பத்தாயிரம் முதல் அம்பாதாயிரம் வரை பிடுங்கும் நிறுவனங்கள் உள்ளன..சரியாக வலை தளத்தை அலசினால் எல்லா கேள்விகளுக்கும் விடை கிடைக்கும்..பணமும் தப்பிக்கும்.

     டெல்லி என்றவுடன். இரண்டு டிக்கட் டெல்லிக்கு வாங்கி தோழி ரமாக்கு போன் செய்து சொல்லி..இருவரும் ஊர் சுத்த ரகசிய பிளான் எல்லாம் போட்டாச்சு..எத்தனை டென்ஷன் இருந்தாலும்..சுனாமியில் ச்ச்சும்மிங் அடித்து பழக்கம் என்பதால் தோழி வீட்டுக்கு செல்வது பற்றி அப்படி ஒரு ..மகிழ்ச்சி..

    பையன் என்ன என்னமோ, தேடினான்..யாருக்கோ போன் செய்தான்.. அம்மா விசா என்பது அமெரிக்கன் எம்பசியில் கொடுப்பது..என்னதான் காலேஜ் வந்து நின்றாலும் அங்கு ஒன்னும் செய்ய முடியாது..என்ன ப்ரோசெஸ் இருக்கோ அது வழி சென்றுதான் ஆக வேண்டும் என்றான்..நம்ம பையனா இருந்தாலும் தெளிவா இருக்கானேன்னு நினைத்தேன்..ஆனால் டெல்லி பயணத்தை கைவிட மனமே வரவில்லை..சரி யோசிப்போம்டா என்று சொல்லிவிட்டு போய்விட்டேன்..

வெளியே எங்கோ இருக்கையில் கைப்பேசி மெசேஜ் பாக்ஸ் ஒளிர்ந்து அடங்கியது..பார்த்தால் நம்ம பய சென்னைக்கு டிக்கட் வாங்கி இருக்கான்..அடுத்து மெயில் ஒளிர்ந்தது..பார்த்தா டெல்லி டிக்கெட் எல்லாம் கேன்சல் செய்து இருக்கான்..விசாவை விட ரமா வீடு(வட) போச்சே பீலிங் ஒரு நிமிடம் வந்து போனது..

   அடுத்து சென்னை ரயில்..எப்பவும் சென்டரல் நெரிசல்..ஆனால் சரவண பவன் மணம்  ரொம்பதான் இழுக்குது.. ஒரு நாள் முன்னதாகவே வந்து விட்டோம்..என் பையனுக்கு விவரம் தெரியும் என்பதால் பெரிதாக எதுவும் வாசிக்கவில்லை..ஆனால் சொத்து விவரங்கள் முதல் கொண்டு ஆடிட்டரிடம் செர்டிபிகேட் செய்துக்கொண்டு போயிருந்தோம்..

ஆம்..முக்கியமான விஷயம்..எத்தனை ரூபாய் அங்கு பீஸ் கட்ட வேண்டுமோ அத்தனை ரூபாயை இங்கு விசாவோடு கணக்கு காட்ட வேண்டும்..பேங் பேலன்ஸ் மிக முக்கியம்  என் பையன் ஸ்காலர்ஷிப் என்பதால் கொஞ்சம் தப்பித்தோம்..இல்லாவிடிம் குறைந்தபட்சம் நாற்பது லட்சம், ஒரு வருட கல்லூரி, உணவு, தங்குமிடம் கட்டணம் கணக்கில் இருக்கவேண்டும்..

       பேங் பேலன்ஸ் அடுத்து பிக்சட் டெபாசிட், அளவீடப்ட்ட தங்க நகைகள், பாண்டுகள், உடனே மாற்றக்கூடிய ஷேர்கள் இவை முக்கியம்..அதை தவிர நோட்டரி பப்ளிக் மற்றும் ஆடிட்டர் கொடுக்கும் சொத்து கியாரண்டிகள் மிக முக்கியமானவை..பயங்கர வேலை கொடுக்கும் விஷயங்கள் இவை..பேங் லோன் என்றால் அதற்குரிய டாகுமென்ட்ஸ் அத்தியாவசியம்..

      மிக முக்கியம் காலேஜ்லிருந்து வரும் அனுமதி கடிதம் மற்றும்
I -20  விசா கடிதம்..அதில் குறிப்பிட்டு இருப்பார்கள்..எத்தனை டாலர்கள் என்று..சில சமயம் அத்தனையையும் டாலர் மதிப்பில் போட்டு பேங் ல் இருந்து கடிதம் வாங்கி சேர்க்க வேண்டும்..

       மூச்சு வாங்கிவிடும்.அத்தனை பேப்பர்களையும் சேகரிக்க..ஆனால் வேறு வழியில்லை.. அப்பா, அம்மாக்கே  இவங்கதான் அப்பா ,அம்மா என்று போலிசும் , மாஜிஸ்ட்ரேட் அதிகாரியும், நோட்டரி பப்ளிக்கும் கொடுக்க வேண்டி இருக்கு..இவர்கள் என் கல்யாணத்தை..ஏன் வீட்டைக்கூட பார்த்தது இல்லை..ஆனால் கொஞ்சம் செலவு செஞ்சா  என் பையன் எனக்கு பிறந்தவன் என்று சொல்ல வைக்கலாம்..

 மிக கவனமாக இருக்க வேண்டிய இடம் அமெரிக்க எம்பசி.

      காலை கிளம்பி..எல்லா கடவுள்களையும் துணைக்கு அழைத்து..அமெரிக்க சுவாமிகள் பெயர்கள் அப்ப தெரியாது..இல்லாவிட்டால் ப்ளஷிங் கணேஷ்கிட்டயும், பிட்ஸ்பர்க் வெங்கட்க்கிட்டயும் ஒரு அப்ளிகேஷன் போட்டு இருக்கலாம்..அப்ப அவர்கள் அறிமுகமாகவில்லை..ஏசு அமெரிக்க கடவுளா, இஸ்ரேல் கடவுளா என்று பெருங்குழப்பம்..வேளாங்கண்ணி மாதா முழுக்க இந்தியனைஸ் செய்யப்பட்டு இருந்தாள்.. ஆனால் சென்னையில் எங்கோ விசா கோவில் இருக்கு..அங்கு அப்ளை செய் என்று கூறினார்கள்.. அப்ப அப்ப அக்னாஸ்டிக் மண்டையை தட்டாவிட்டால் வேண்டுதல்கள் உள்ளே வந்து உக்கார்ந்து விடும்..தொட்டில் பழக்கம்..

முதலில் ஜெமினி மேம்பாலம்..எம்பசிக்கு செல்ல தயாராகும் வேளையில் அப்பாயின்ட் பேப்பரை கவனித்தால் அது வேறு இடத்தை குறித்தது.. பையனை முறைத்தால் அவன் எனக்கு சென்னை பற்றி ஒன்னும் தெரியாது என்று ஜகா வாங்கினான்..உடனே ஆட்டோ பிடித்து போனால்..இரண்டு வரிசை..எட்டு மணி, எட்டரை மணி..என்று..ஒன்பது மணி வரிசையை காணும்..விசாரித்தால் எட்டரையில் நில்லுங்க என்றார்கள்..நின்று கொண்டே இருந்தால்..எட்டு உள்ள போய் இன்னொரு வரிசை தயாராக இருந்தது. எட்டரைக்கு  டாகுமென்ட்ஸ் செக் செய்ய டை போட்ட டிப் டாப்பு இளைஞர்கள் வந்தார்கள்..சில யுவதிகளும் ட்ரெயினிங்ல் இருந்தார்கள்..

அவர்கள் மேடம் நீங்க ஏன் நிக்கறீங்க என்று வினவ..நான் மைனர் கார்டியன் என்றேன்..சரி என்றுவிட்டு பக்கத்தில் உள்ள பெரிய வரிசையை காட்டி ஒன்பது மணி அங்கு போங்க என்று கூற..திரும்ப கடைசியில் சேர்ந்தேன்..நம் நேரம் அப்பவும் வரிசையில் கடைசி இடம்தான்..முன்னால போய் டான் ன்னு நின்னாலும் இதேதான் நடக்கும்.. ஆனால் வரிசையில் அரட்டை அடித்து பிரெண்ட் பிடிக்கும் பழக்கம் போகவில்லை..ஒருவர் விசிட்டர், டிபண்டன்ட், ஐ-டி மூன்று கதைகள் தயாராக இருந்தன..வரிசை கதைகள் என்று எழுத ஆரம்பித்தால் விசா பற்றியே புத்தகம் போடவேண்டும்.அத்தனை அரட்டைகள்  அரங்கேறுகின்றன..  போன் அனுமதி இல்லை..இல்லாவிட்டால் அனைவரும் அதைத்தானே தடவிக்கொண்டு இருப்பார்கள்..இப்பொழுது எல்லாம் பேச ஆள் கிடைக்குமா என்று ஆட்களை துழாவும் சமயங்கள் அரிதாகி வருக்கின்றன..

  அது வெறும் கை ரேகை, கரு விழி, போட்டோ  பதியும் இடம்..அவ்வளவுதான்..உடனே நம்மை பற்றிய விவரங்கள் ஒரு எண்ணில் ஏறிவிடும்..அமெரிக்காவின் எந்த மூலையில் இருந்தும் நம் கைரேகை காப்பி அவர்களிடம் இருக்கும்..நம் பாட்டி , தாத்தாவை பற்றிக்கூட விவரங்கள் வைத்து இருப்பார்கள் போல..

  நம் ப்ரேவேசி தொலைவது பற்றி எல்லாம் யாருக்கும் கவலைப்பட நேரம் இல்லை..முதல் ஸ்டிக்கர் முதுகில் ஓட்ட துவங்கும் இடம் என்பது அந்த ஆபிசில் வரிசையில் நிற்கும் யாரும் அறிவதில்லை..அறிந்து என்ன செய்யபோகிறோம்..படிப்பு, பிழைப்பு எத்தனையோ இருக்க இந்த அரசியல் நமக்கு தேவையும் இல்லை..

மறுநாள் விசா தேர்வு..அங்கு காலையில் இருந்தே வரிசை..உயரமான காம்பவுண்ட் வால்..முள்வேலி , ஆங்காங்கு குழாய் போன்ற கண்காணிப்பு கேமாராக்கள்..காமிரா சுழலும் ராணுவ வசதி உள்ள ஒரு போலிஸ் வாகனம்..சுற்றி நிற்பவர்களை துரத்த அவ்வப்பொழுது வரும் ஜீப் ட்ராபிக் போலிஸ்..ஆஹா..நம்ம ஊர் நவீன ஜெயில் போல இருக்கே..மாட்டிக்கிட்டு இருக்காங்களா,,இல்லை உள்ள நிஜமா வேலை செய்யறாங்களா என்ற சந்தேகம் வந்தது..எத்தனை பேரை பயம் காட்டறாங்க...அதே சமயம் யாருக்கோ பயந்துக்கிட்டு ஒவ்வொரு நாடுலையும் வேலை செய்யறாங்க இல்ல..அப்படின்னு  சின்னதா தோணிச்சு..அப்படியே அடக்கிட்டேன்..நோ, நோ..பையன் படிக்கணும்..கிரேட் கண்ட்ரி, க்ரேட் மக்கள்..அடக்கி வாசி..இது என் மைண்ட் வாய்ஸ்..


விசா கிடைச்சுதா? என்ன கேட்டாங்க? அடுத்த பதிவில்..



Friday, October 24, 2014

அமெரிக்க அனுபவம்..கானல் நீரா, பாலைவன சோலையா? பயணம்-இரண்டு.

பயணம் இரண்டு.. சென்ற பதிவின் தொடர்ச்சி..

கடவு சீட்டை இன்னும் பத்து வருடத்துக்கு ரினிவல் செய்யவும், கடைசி பெயரை சேர்க்க பெயர் மாற்றத்துக்கும் மாரத்தஹள்ளி அலுவலகத்துக்கு கடவு சீட்டு அதிகாரி அனுமதி சீட்டு கொடுத்தார். நடுவில் விடுமுறை , கையழுத்து என்று அலைச்சலில் பத்து நாட்கள் மேல் கழிந்துவிட்டது. அங்கு வரிசையில் நின்றேன். ஆனால் எனக்கு என்னமோ கார்பரெட் ஸ்டைல் வேலைகளில்  அலுவலகர்கள் சக்கையாக பிழியப்படுவதாக உணர்ந்தேன்..ப்ரொடக்டிவிட்டி என்று சொல்லிக்கொண்டு மனிதர்கள் அங்கு இயந்திரம் போல வேலை  செய்துக்கொண்டு இருந்தார்கள்.
TCS  நிறுவனம் எல்லாரையும் செயற்கை புன்னகை ஏந்திய கம்ப்யூட்டர் ஆக்கி இருந்தது.

       நான் சந்தித்துக்கொண்டு இருந்த  அதிகாரிக்கு மூச்சு விடக்கூட நேரமில்லை. ஒரு மணி நேரத்துக்கு எக்கச்சக்க கோப்புகள் மற்றும் நேரடி விசாரணைகள்..என் சொந்தம் ஒருவர் முன்னாள் கடவு சீட்டு அதிகாரி,    (சொந்தம் போன் செய்தாலும் அங்கு இருக்கிற கூட்டத்துக்கு யாரும் எதுவும் செய்ய முடியாது..சிபாரிசு இருந்தால் மட்டும் போதாது..கடவு சீட்டு பெற சில வழிமுறைகள் உள்ளன..சரியான ஆவணங்கள் இல்லாமல் விரலை கூட அங்கு  அசைக்க முடியாது )  நல்லவேளை நான் வாலண்டரி ரிடயர்மென்ட் வாங்கிட்டேன் இல்லாவிடில் அவரின் கதிதான்..நிஜமா அத்தனை அழுத்தமாக ஆகி விட்டது வேலை என்று சொன்னார். இன்னும் சிலரை வேலைக்கு அமர்த்தினால் போதும்..மக்கள் கூட்டத்தை அவர்கள் டென்ஷன், அழுத்தம் இல்லாமல் சமாளிக்கலாம்..நம் மக்கள் தொகைக்கு ...வேலைக்கும் குறைவு இல்லை..வேலை இல்லாதவர்களுகும் குறைவு இல்லை..ஒரு பேலேன்ஸ் வர வேண்டும்..அவ்வளவுதான்..

மாரத்தஹள்ளி போனால் எல்லாம் முடிந்து..போட்டோ எல்லாம் ஆச்சு..கடைசியாக அதிகாரி பாஸ் செய்ய வேண்டும்..அவர் இது தட்காலில் செய்ய முடியாது..நேம் சேஞ் கேஸ்..கண்டிப்பாக போலிஸ் வெரிபிகேஷன் வேண்டும் என்று சொல்ல..திரும்ப பெரிய அதிகாரியிடம் கொஞ்சம் வாக்குவாதம் செய்து பார்த்தேன்..பழைய பாஸ்போர்ட்...உங்கள் தவறுதானே லாஸ்ட் நேமாக  தந்தை பெயர் போடாதது என்று.. அதுவும் இல்லாமல் பெற்றோர் பெயர்களை சேர்க்கவில்லை வேறு..எடுத்து சொல்லியும் அவர்கள் அதையெல்லாம் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை..என் பையன்தான் உன் நியாயத்தை இங்கெல்லாம் கேக்காதேம்மா..வா போவோம் என்று சொல்ல அலைச்சலின் எரிச்சல் எனக்கு  உச்சப்பச்சத்தை அடைந்து இருந்தது...

திரும்ப அதே..கோரமங்களா விடிகாலை வரிசை..காபி டே சாண்ட்விட்ச், காபி, லெமன் டீ.. போலிஸ் வெரிபிகேஷன் செய்யுங்கள் உடனே செய்வோம் என்றார். உடனே மளமளவென்று லோக்கல் போலீசிடம் பேசி (இந்த கொடுமையில் ஆபிசர் முதல் போலிஸ் வரை எல்லா இடங்களிலும் தெரிந்தவர் யாரோ ஒருவர் இருந்தனர்)  வெரிபிகேஷன் முடித்து இதுக்கு மட்டும் தரனை அனுப்பி இருந்தேன்..அவரிடம் டாக்டர் நான் உடனே அனுப்பி விடுகிறேன்..மூன்று நாட்களில் போய்விடும் எனசொல்ல ..

அதை நம்பி திரும்ப கோரமங்களா படையெடுக்க வரிசை அலைச்சல்..அங்கு பார்த்தால் சிஸ்டமில் அப்டேட் ஆகவில்லை என்ற விஷயம் தெரிந்தது..இனி எல்லாம் வரிசையாக நம் பக்கத்தில் அப்டேட் ஆகும் என்ற விஷயமும்..

பத்து நாள் ஆச்சு..அப்டேட் ஆகவே இல்லை..சரி என்று தரன் லோக்கல் போலிசுக்கு போன் செய்து கேட்க..அனுப்பிவிட்டோம் என்ற பதில் வர புரியவில்லை..அடுத்து என்ன செய்ய , எங்கு போகும் என்ற விசாரித்ததில் கமிஷனர் ஆபிஸ் போகும் என்று தெரிந்தது...எனக்கு தெரிந்து கடவு சீட்டை இத்தனை நுணுக்கமாக யாராவது துரத்தி இருப்பார்களா என்று தெரியவில்லை..

அடுத்து படையெடுப்பு..பையனுக்கு அலுத்துவிட்டது..அன்று ரிசல்ட் மார்க் வாங்க செல்ல வேண்டும் என கழண்டுக்கொண்டு நண்பர்களுடன் சினிமாக்கும் போய்விட்டான். அங்கு போனால் அப்ளிகேஷன் பேப்பர் பிரிண்ட் அவுட்ல் நம் நம்பர் இருக்கும்..அதை வைத்தே ட்ராக் செய்ய முடியும்..அதை பிரிண்ட் இல்லாமல் ஸ்மார்ட் போன் நம்பிக்கொண்டு போனேன்..மிச்ச வேண்டாத பேப்பர்களை தூக்கிக்கொண்டு..

சினிமாவில் இருந்த பையனுக்கு போன் செய்து பாஸ்வேர்ட் வாங்கி தேடி அலைந்து பிரிண்ட் அவுட் எடுத்து.திரும்ப போலிஸ் கமிஷினர் ஆபிசில் உள்ள கடவு சீட்டு அலுவலகத்துக்கு சென்றேன்..ஆனால் மாணவர், கல்லூரி என்பதால் அனைவரும் மதிப்பு கொடுத்தார்கள்.. எல்லார் வீட்டிலும் ஒரு மாணவர் இருப்பார்கள் இல்லையா..


அங்கு இருந்தவர் ட்ரேஸ் (trace) அவுட் செய்து தேடியதில் லோக்கல் போலிஸ் இன்னும் கோப்பை அனுப்பவே இல்லை என்று தெரிந்தது..தலைக்கு மேல் கோபம் ஏறியது..என்ன செய்ய முடியும்..அங்கிருந்தே அந்த அதிகாரியை லோக்கல் போலிசுக்கு போன் செய்ய வைத்தேன்..உடனே பதற்றம் தெரிந்தது..ஏன் மேடம் கமிஷனர் ஆபிசுக்கு எல்லாம் போனிங்க..இங்க வந்து இருக்கலாமே என்று பணிவாக பேசினார்..

தட்கால் அவசரம் என்று தெரியவில்லை..இந்த மாதம் கோப்புகள் அதிகம்..அப்படி, இப்படி என்று தரனுக்கு சமாதானம் சொன்னார்களாம்....உடனே இரண்டு நாட்களில் வெரிபிகேஷன் அப்டேட் ஆனது.. திரும்ப கோரமங்களா படையெடுத்து..மாரத்தஹள்ளிக்கு அப்பாயின்ட்மென்ட் வாங்கி (இல்லாவிட்டால் சிஸ்டம்ப்படி ஒரு மாதம் கழித்துதான்  அடுத்த அப்பாயின்ட்மென்ட் தேதி) அங்கு மூன்று நாட்கள் கழித்து சென்றோம்..

சின்னவனுக்கு எந்த அலைச்சலும் இல்லாமல் ஒரு மாதம் கழித்து அப்பாயின்ட்மென்ட் வாங்கி செய்ததில் இருவது நாளில் கடவு சீட்டு கையில்..

கடைசியாக அங்கு எல்லாம் முடிந்து பிரிண்டிங், டெஸ்ட்பாட்ச், போஸ்டல் எல்லாம் வரிசையாக சிஸ்டமில் பார்த்துக்கொண்டே வந்து ஒரு நாள் காலையில் ஏழு மணிக்கே போஸ்ட் ஆபிஸ் போய் பறித்துக்கொண்டேன்..ஹப்பாடா..

அடுத்து விசா என்ற பூதம் பற்றி அறியாமலே...

Wednesday, October 22, 2014

அமெரிக்க அனுபவம் ..கானல் நீரா? பாலைவன சோலையா?

கானல் நீரா? பாலைவன சோலையா? பயணம் _1

இன்று வெளிநாடு பயணம் என்பது பெரிய விஷயமில்லை..இந்திய குழந்தைகள படிப்புக்காக செல்வது மிக சகஜமாகி விட்ட விஷயம்..இந்த நேரத்தில் நான் சொல்வது என்ன புதிதாக இருக்க போகிறது என்று நினைத்தேன்..ஆனால் ஒவ்வொருவரின் பார்வையும் வேறு, பயணம் கொடுக்கும் பாடங்கள் அதிகம்..இந்த தொடரில் திடீர் என்று பயணத்தில் இருந்து பிளாஷ் பேக்க்கு மாறும் அபாயம் இருக்கு..த்ரில்லர் கதை இருக்கலாம்..ஆனால் எதுவும் இல்லாமல் ஒரு சக பயணியுடன் பயணிப்பது போல எழுத வேண்டும் என்பதுதான் எண்ணம..

பையனை வெளிநாட்டில் படிக்க வைக்க வேண்டிய அவசியமோ, லட்சியமோ இல்லை..பிறகு ஏன் என்றால் சில விஷயங்கள் அப்படியே அடுக்கு அடுக்காக நிகழும், நாம் வேடிக்கை பார்த்துக்கொண்டே இருப்போம், அதற்காக உழைப்போம் நம்மை அறியாமலே அப்படி நிகழ்ந்துதான் பையனின் வெளிநாடு படிப்பு.

ஒரு போன் ..சுபஸ்ரீ மோகன் சீனாவில் இருந்து...நாங்கள் எல்லாம் பேசிக்கொண்டு இருந்தபொழுது உன் பையன் திறமை உள்ளவன் என்று சொல்கிறாய்..ஏன் நீ அமெரிக்காவிற்கு அனுப்ப கூடாது என்று கேட்க..அன்று பொறி பற்றி கொண்டது ..ஆனால் இதை அறியாமலே பையன் நிறைய தகவல்கள் சேகரித்து வைத்து இருந்தான். வெளிநாட்டு கல்வியில் பெற்றோரின் பங்கு மற்றும் அவசியம் பற்றி தனி தொடராக எழுதலாம் என்று இருக்கிறேன்.

அட்மிஷன் பிப்ரவரி மாதமே வந்தாயிற்று...விசா மே மாதம் எடுத்தால் போதும் என்று எல்லா வேலையையும் தள்ளி போட்டாச்சு. விசாக்கு லெட்டர் வாங்க காலேஜ்க்கு அப்ளை செய்தோம். பார்த்தால் உங்கள் பையனின் கடைசி பெயர் (last name ) பாஸ்போர்ட்ல் இல்ல..சரி செய்து அப்ளை செய்யுங்கள் என்று கூறிவிட்டார்கள்.

அன்று ஆரம்பித்தது பாஸ்போர்ட் ஆபிஸ் அலைச்சல். ஒரு நாள், இரு நாள் எல்லாம் இல்லை..கிட்டத்தட்ட இருபது நாட்கள்..நம் சிவப்பு நாடாவா என்னவென்றே புரியவில்லை..ஆனால் எங்கு சென்றாலும் சின்சியராகதான் செய்தார்கள்.

முதலில் ரீஜினல் பாஸ்போர்ட் ஆபிஸ் ... பாஸ்போர்ட் ஆபிசருக்கு தட்கால் முறையில் அப்பாயின்ட்மென்ட்  வாங்க விடியலில் போய் நிற்க வேண்டும். சிலர் காலையிலேயே பைல்களை  நாற்காலிகளில்  போட்டு வைத்து இருந்தார்கள். அதன் ரகசியம் அப்ப புரியவில்லை. போய் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் சில சமயம் மூன்று மணி நேரமும் ஆகும்.. வரிசையில்  நின்று விட்டு அப்பாயின்ட்மென்ட் வாங்கிவிட்டு உள்ளே செல்ல வேண்டும். பெரும்பாலும் ரிநிவல், அரபு நாடுகள் செல்பவர்களும், மாணவர்களும், சில கம்ப்யூட்டர் வல்லுனர்களும் இருந்தனர். பெரிய பெரிய குளிருட்டப்பட்ட அறைகள். உள்ளே காபி டே விற்பனை, அப்ளை செய்தவர்களுக்கு மட்டும் அனுமதி என்று எல்லாம் தரத்துடன் இருந்தது.


டோக்கன் வரிசைப்படி அழைத்தனர்..பயங்கர ஒழுக்க முறையுடன் நடப்பதாக இருந்தது.. ஆனால் எங்கயோ சில ஓட்டைகள் இருக்கத்தான் செய்கிறது என்று பல முறை சென்றதில் அறிந்துக்கொண்டேன். பாஸ்போர்ட் அதிகாரி செக் செய்துவிட்டு ஏன் தட்கால் என்றார்..அவசரமாக கல்லூரிக்கு  அனுப்ப வேண்டிய அவசியத்தையும் , கல்லூரி  அட்மிஷன் லெட்டர்களை காட்டியவுடன் போய் மாஜிஸ்ட்ரேட் அளவு பதவி இருப்பவர்களிடம் உடனே கடிதம் , சில நோட்டரி பப்ளிக் கையழுத்து எல்லாம் கொண்டு வாருங்கள்..இவரின் மகன் என்றும், பெயர் மாற்ற சில விஷயங்களையும் மேற்கொள் செய்து குறிப்பிட்டார் . ஏற்கனவே பேப்பரில் விளம்பரம் எல்லாம் கொடுத்து ஆயிற்று. ஜாதி பெயர் கடைசி பெயராக சேர்த்துக்கொள்ளும் வழக்கம் இங்கு உண்டு..ஏற்கனவே எல்லாரும் என்னை  வற்புறுத்தி இருந்தனர்..ஏன் கடைசி பெயர் சேர்க்கவில்லை என்று..அதற்கு பின்னாடி இத்தனை பெரிய அலைச்சல் இருக்கும் என தெரியவில்லை..அப்பா பெயரை கடைசி பெயராக போட்டுக்கொள்ளும் பழக்கம் இங்கு இல்லை..எனவே பாஸ்போர்ட் ல் கடைசி பெயர் போடாமலே கொடுத்து விட்டார்கள். கடைசி பெயர் இல்லாவிட்டால் வெளிநாட்டில் ஒரு டிக்கட் கூட பதிவு செய்ய முடியாது..அங்கு உள்ள முறைகள் அப்படி..


உடனே தோழி மூலமாக ஒரு கமிஷனருக்கு சமமான  பதவியில் இருக்கும் அதிகாரியிடம்  கடிதம் வாங்கினேன்..அங்கு ஏற்கனவே இது போன்று கொடுத்து பழக்கம் இருக்கு..ஆனால் எல்லாமே நேரடியாக சென்றால் அலைச்சல் மட்டுமே மிஞ்சும்.. விஷயம் தெரியாதவர்கள் உள்ளே நுழைய முடியாத கோட்டையாக மட்டுமே பல அரசாங்க அலுவலகங்கள் உள்ளது. நல்லவேளை தோழி போன் உடனே வேலை செய்தது..அங்கு அமர்ந்து ஆபிசரிடம் செம அரட்டை..என் போன் நம்பர் வாங்கிக்கொண்டு என் மகளுக்கு உங்கள் உதவி வேண்டும் என்று அன்போ அன்பை கொட்டினார்..நாம் பேசும் வரை மட்டுமே..போய் பேசினால் எல்லா காரியத்தையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை உண்டு..தரன் எனக்கு கொடுக்கும் ஒரே பாராட்டு இதுதான்..உன்னை மார்கெட்டிங் அனுப்பினால் சாதித்து விடுவாய் என்று. மகளை அவர் பிறகு தகவல்களுக்கு அனுப்பியது வேறு கதை.

லெட்டர் வாங்கிக்கொண்டு மறுநாள் ஓடுகிறோம்..திரும்ப க்யு ..திரும்ப அதே பாஸ்போர்ட் ஆபிஸ்.. ஆபிசர் பார்த்துவிட்டு பெயர் மாற்றம் மட்டும் பத்தாது..பதினெட்டு வயதில் பாஸ்போர்ட் எக்ஸ்பயர் ஆகிறது..அதற்கும் சேர்த்து அப்ளை செய்யுங்கள் என்று சொல்ல..திரும்ப அதற்க்கான டாகுமென்ட்ஸ் சேர்த்துக்கொண்டு இரண்டு நாள் கழித்து படை எடுத்தோம்..அதற்குள் அங்கு போலிஸ் நண்பர் ஆகி விட்டார்.. ஆகவே முன்னாடி சேர்களில் பைல்கள் கிடக்கும் ரகசியம் கூட தெரிந்து கொண்டாயிற்று..என் போன்றவர்களின் கண்களில் இருந்து குறுக்கு வழிகள் தப்புவது கஷ்டம்..கண்டுபிடிதுவிடுவேன்..மிக அவசரம் என்றால் பயன்படுத்திக்கொள்வேன்..வேறு வழி இல்லாவிட்டால் மட்டுமே..இது நம் சிஸ்டம் என்று பழகி கொள்ளும் மனம்...இதான் நிதர்சனம்.பிறகு உடனே கிடைத்ததா? ஏன் ஒரு மாதம்? அடுத்த பதிவில்..

Friday, October 17, 2014

புத்தக பூச்சி.

6174 ..
பார்க்க மிக எளிதாக கடந்துவிடும் ஒரு நம்பர்..ஆனால் இன்னும் மனதில் ஓடிக்கொண்டு இருக்கிறது..கப்ரேகர் கருஞ்சுழி எண்,,,,
எந்த நாலு இலக்க எண்ணையும் எடுத்துக்கொண்டு அதன் பெரிய எண்ணிலிருந்து சிறிது வரை எழுதி..சிறிதில் இருந்து பெரிது வரை எழுதி..கழிக்க வேண்டும்..வேறு, வேறு எண்கள்.
எடுத்துக்காட்டாக " 3141 "
பெரிதிலிருந்து சிறிதாக         4311
சிறிதில் இருந்து பெரிதாக    1134
                                                        ----------
      கழித்தால்                               3177 
அதையும் திரும்ப ஏற்றமாகவும், இறக்கமாகவும் எழுதி கழிக்க..
4311-1134=3177. 
7731-1377=6354. 
6543-3456=3087. 
8730-0378=8352. 
8532-2358=6174. 
7641-1467=6174.. 
இப்படி எந்த நாலு இலக்க எண்ணையும் செய்யும் வேளையில் 6174 என்ற இலக்க கருஞ்சுழியில் மாட்டிக்கொண்டு மேலே வராது..இதை கண்டுபிடித்தவர் இந்தியர் கப்ரேகர்..
                                             
    கேள்விபட்டு இருந்தாலும் இவ்வளவு எளிதாக கப்ரேகர் கருஞ்சுழியை யாரும் விளக்கியதில்லை..    
ஒரு நாவல்  எடுத்தால் கையை விட்டு போகும் வரை அதை சுற்றியே மனம் வர வேண்டும்..முதல் அஞ்சு பக்கம் படித்துவிட்டு ஏதோ பிக்சன் வகை போல என்று வைத்துவிட்ட நாவலை திரும்ப கையில் எடுத்தேன்..அப்படியே விறுவிறுப்பு பற்றிக்கொண்டது..ஒரே நாளில், ஒரே மூச்சில் நாவல் படித்து வருடங்கள் ஆகிவிட்டது.இந்த புத்தகம் காந்தம் போல கையிலும், மனதிலும் ஓட்டிக்கொண்டு  விட்டது..அதும் இல்லாமல் மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது..
டான் பிரவுன் நாவல் படிக்கும்பொழுது  (நாமும் அப்ப அப்ப இங்கிலீஷ் பேர் சொன்னாதானே நாம் தமிழர்..அதுக்குதான் பில்ட் அப் ) மட்டுமே விக்கிபிடியா பக்கத்தில் வைத்துக்கொள்வேன்..இவர் நிஜமாகவே சொல்கிறாரா இல்லை புருடா, கற்பனையா என்று..அவரின் நாவலில் எது புனைவு, எது  நிகழ்வின் சாயல் என்று பிரித்து அறிய முடியாபடி பல facts உள்ளே ஒளிந்துகொண்டு இருக்கும்..
முதன்முதலாக தமிழ் புத்தகத்துக்கு விக்கிபிடியாவை அலச வைத்தார்..அதுவே முதல் வெற்றி..இந்த நிமிடம் வரை அதில் உள்ள இடங்கள், நிகழ்வுகள் பற்றி தேடி,தேடி படித்துக்கொண்டு இருக்கிறேன்.. சுதாகர் சார்..என் நட்பு வட்டத்தில் இருக்கும் உங்களை பற்றிய பிரமிப்பு இன்னும் விலகவே இல்லை..
லெமூரியா கண்டம், குமரி கண்டம் (இன்னும் ஆராய்ச்சியில்)அழிந்து போனது பற்றி தெரியுமா?
லெமூரியா மக்களுக்கு காது நீளம் அறிவோமா?
அது தமிழ்நாட்டின் ஒரு பகுதி..அது தெரியுமா?
அதற்கும் தென்னமெரிக்க மயன் மக்களுக்கும் உறவு உண்டா?
தமிழில் மணிப்ரவாள நடை, துள்ளல் நடை என்று செய்யுள்களை அழகாக நாவலுக்குள் புகுத்த முடியுமா?
மியான்மரை பற்றி என்ன தெரியும்?
எவ்வளவு பெரிய எல்லை..இந்தியாக்கும் அதற்கும்? ம்ஹூம் தெரியாது..இதில் கொடுமை என்ன வென்றால் என் தாத்தா பர்மா போய்விட்டு  போர் சமயத்தில் திரும்பி வந்தவர்...ஆனால் பர்மா தேக்கு தவிர வேறதுவும் நாமறியோம்...அரசியல் கூட..
பிரமிடு பற்றி அறிந்துவைத்து இருக்கும் நாம் பர்மா பகோடா கோவில்கள் பற்றி அறிவோமா?
கோலங்களில் உள்ள கணக்கு அளவீடுகள் , அதனில் உள்ள சிறப்பம்சம்..ம்ஹூம்..
லெமூரியா சீட் கிறிஸ்டல் சிறப்பம்சம்..
பழங்கால வரலாற்றில் அழிந்து போன சீலகந்த்மீன் இன்னும் உயிரோடு இருக்கும் அதிசியம்..(டைனோசர் காலம்)
இப்படி வரலாறு, புவியியல், அறிவியல், தமிழ் இலக்கியம், கணக்கு என்று ஒரு டிபார்ட்மென்ட் கூட விடாமல் அனைத்தையும் தொட்டு சென்று அதை அழகிய மசாலா தடவி பரிமாற முடியுமா? அதுவும் சுத்த தமிழில்..இவர் போன்ற ஆசிரியர்கள் வந்தால் எதையும் கற்றுக்கொள்ள முடியும் மாணவர்களால்..
சுஜாதாக்கு பிறகு வந்த நல்ல அறிவியல் விஷயங்களை தொட்டு செல்லும் நாவல்..
இன்னும், இன்னும் தேடி, தேடி படித்துக்கொண்டு இருக்கிறேன்..பகோடா பற்றி, மீன் பற்றி, குமரி கண்டம் பற்றி, தேவநேய பாவானார் பற்றி..எத்தனை விஷயங்கள் தெரியாமல் இருக்கிறது..
எத்தனை தமிழ் அறிஞர்கள் செயல்பட்டு உள்ளனர்..தமிழ் தொன்மையான மொழி என்பதை நிருபிக்க..
தமிழின் வரலாறு குமரி கண்டத்தில் இருந்து தொடங்கி இருக்கிறதாம் என்று செய்தி..
அமெரிக்கா, இந்தியாவில் பல இடங்கள்,  மியான்மர் என்று பயணம் விறுவிறுப்பாக செல்கிறது..
கப்பல், அணு ஆயுதம், விண்கல் , ராக்கெட், ஏவுகணை, ரஷ்ய அரசியல் .வட கொரியா என்று எதையும் விட்டுவைக்கவில்லை..
இப்படி படிக்க படிக்க பிரமிப்பை தூவிக்கொண்டே போகிறார் ஆசிரியர்..
ஒரு புத்தகம் படித்தால்  யோசிக்க, பேச வைக்க வேண்டும்..இது வைக்கிறது..
க்ளைமாக்ஸ் முடிந்தும் முடிச்சின் விளக்கங்கள் சொல்லி இருப்பது பழைய உத்தி ஆனாலும் விஷயமுள்ளததால் ரசிக்க முடிகிறது..ஆனால் யூகிக்க முடிந்த வாசகர்கள் தாண்டிவிட முடியும்..
ஆனால் நச் முடிவு....அடுத்த பாகம் வருமோ என்ற க்ளைமாக்ஸ்..
படித்துவிட்டு பகிர வேண்டிய புத்தகம்..இது தமிழுக்கு நல்வரவு..அழகும்..
வாழ்த்துக்கள் சுதாகர் கஸ்தூரி சார்..நல்ல வாசிப்புக்கு சந்தோஷமும்,நன்றியும்..
எல்லா மிதாலஜியும் கலக்கி ஒரே குடுவையில் பரிமாறப்பட்ட சுவையான காக்டெயில்..
இது போன்ற பார் டெண்டர்கள் தமிழில் இருந்தால்..தமிழ் போதையில் மூழ்குவது வாசகர்களுக்கு எளிது..

Sunday, October 12, 2014

விமர்சினம்..கிளாஸ் ஆப் ரவுடிஸ்..

கிளாஸ் ஆப் ரவுடிஸ் (Short Film - Class of Rowdies)
ஒரு ஏழு நிமிடம்..வாழ்க்கைகான செய்தியை சொல்ல முடியுமா?
அற்புதமா..மனதை கனக்க செய்ய முடியுமா?
சுவாரசிய மசாலா போல ஆரம்பித்து முடிவில் அழகான செய்தியை புதைக்க முடியுமா?
மாடர்ன் பள்ளி என்று நாம் அழைக்கும் பள்ளிகளில் bullyingபற்றி சின்ன ஷாட் ல் உணர்த்த முடியுமா?
ஒவ்வொரு குழந்தையின் விஷமத்தனத்துக்கும் பிறகு இருக்கும் திறமையை கொண்டு வருவதை எளிதான விஷயமாக்க முடியுமா?
இப்ப இருக்கும் ஆசிரியர்களின் ஒரு பக்கத்தை உணர செய்ய முடியுமா?
இதெல்லாம் ஏழு நிமிடத்தில் கொண்டு வர முடியுமா? முடியும்..
ஜா(சா)ரா சான்ஸே இல்லை..அமுங்கி கிடக்கும் சில்வியா பாத் மன நிலை குழந்தையை போல..கொஞ்சம் பயம் கூட வருகிறது..
அப்படியே கொஞ்ச நாளில் அந்த வகுப்பை மாற்றிய ஆசிரியையின் சாதனை..
அத்தனை பேரும் குழந்தைகளிடம் இருந்து கற்றுக்கொள்ள மறந்துவிட்டு அவர்களை நாலு சுவரில் அடக்கி வைத்து முடக்குவதால் எப்படி மாறுகிறது என்று விளக்கி இருக்கிறது படம்..
ஒரு புத்திசாலி மாணவனை, அவனுக்கு தெரிந்த விஷயத்தை அடக்கி வைத்து இதைதான் கத்துக்கணும் என்று சொன்னால் என்ன ஆகும் என்று அனுபவபூர்வமாக உணர்ந்தவள்..ஒரு மாணவன் இல்லை பலரை பார்த்து இருக்கிறேன்..
மாணவனிடம் கேட்பதே இல்லை..உனக்கு என்ன கற்றுக்கொள்ள வேண்டும் என்று..கற்றுக்கொள்ளலை அழகாக ஆக்க வேண்டும்..
ஒரு ராக்கெட் ஷாட் ல் அவர்களின் கற்றுக்கொள்ளும் சுதந்திரத்தை காட்டி பறக்க விடுகிறார்..
ஏழு நிமிடத்தில் தவறும் இருக்கு..எல்லாரும் பணக்கார மாணவர்களாக தோற்றம் அளிப்பதும்..சாரா கவிதை வாசிக்கும் பொழுது பின்னணி இசையும்..
ஆனால் மொத்தத்தில் அது பெரிய விஷயம் இல்லை..எல்லா பள்ளிகளுக்கு போட்டு காட்ட வேண்டிய படம்..முக்கியமாக ஆசிரியர்களுக்கு..கொஞ்ச நேரம் முன்பு நண்பர் சொன்னார்..கற்றுக்கொள்ள வேண்டியது மாணவர்கள் அல்ல ஆசிரியர்கள் என்று..நிஜம்.
படத்தை பார்த்து விட்டு மூன்று நிமிடமாவது மனம் கனக்கும்..கொஞ்சம் துளி சொட்டு கண்ணில் எட்டி பார்க்கும்..கமர்ஷியலாகவும் அழகு படம்..
மாற்றங்கள் வர வேண்டும்..இல்லாவிட்டால் வகுப்பின் சூழல்..நினைக்க பயமாக இருக்கு..
அட்டகாசமான படத்தை பார்க்க வைத்த ஓசை செல்லா க்கு நன்றி..

ஜன்னல் 4

ஜன்னல் -நாலு..
தலைமை கோட்டை சுவர் கம்பீரமாக நின்றது..சுற்றி கார்பரேட் ஆபிஸ் புல்லட் ப்ரூப் கண்ணாடி சுவர்கள் சுற்றி வளைத்து சரியான டிரெஸ் கோடில் நின்றுகொண்டு இருந்தன..
வட்ட மேஜை மாநாடு..மிக ரகசியமாக எல்லா சுவர்களின் ஐ-டிக்கள் நிறங்கள் சரி பார்க்கப்பட்டு உள்ளே விடப்பட்டன..அப்பார்மென்ட் சுவர் தலைவர் முதலில் நின்றது..எல்லாம் Gated Community செய்துவிட்டோம்..சில வீடுகளை தரை மட்டமாக்கி விட்டால் போதும்..அத்திப்பட்டிகிராமம் மட்டும்தான் மிச்சம் என்றது..பக்கத்தில் இருந்த சுவர்..அதுதான் கெசட் ல இல்லையே ஏன் வாய்விட்டாய் என்று கல் தோளை தட்டிற்று..
கார்பரேட் சுவர்கள் மகிழ்ச்சியாக ஆரவாரம் ஜல்லி செய்தனர்...எல்லா மனிதர்களையும் அடைத்து ஆயிற்று..அடுத்து..
நாங்கள் விவசாய வேலி சுவர்கள்..விவசாயம் எல்லாம் சுவருக்குள்..உங்கள் சொந்த நிலங்கள்..விவசாயிகளுக்கு இனி நிலம் இல்லை..
ஆஹா, ஆஹா..என்று விவசாய காரபரேட் தலைமை சுவர் கல் தட்டிற்று..
நாங்கள் அரசாங்க சுவர்கள்..கோட்டை சுவர் சொல்படி எல்லா அதிகாரிகளும் நம் கையில்..
அடுத்து ஹோட்டல், கடைகள் அனைத்தும் அடங்கிய மால் சுவர்கள்..எல்லா வியாபாரமும் நம் மூலம் மட்டுமே..
கம்பீரமாக வந்த வெள்ளை சுவரை அனைவரும் மரியாதையோடு பார்த்தனர்..அத்தனை மருத்துவமனைகளும் நம் கையில்..ஒரு நோயாளி கூட தப்பிக்கவில்லை..வெளியே எங்கும் போக முடியாது..
வரிசையாக தொழிற்சாலைகள், மீடியாக்கள், அரசாங்க அலுவலகங்கள், வழிபாடு இடங்கள்..கண்ணுக்கு தெரியாத மெல்லிய தொடு திரை போல உள்ள ஆன்லைன் சுவர்கள்..பாங் சுவர்கள் எல்லாம் தத்தமது ரிப்போர்ட் சமர்ப்பித்தன...
கோட்டை சுவரும், கார்பரெட் சுவர்களும் எழுந்தது..நாம்தான் உலகை ஆள்கிறோம்..மனிதர்களுக்கு இது தெரியவேண்டாம்..அவர்கள் அப்படியே செயல்படட்டும்..ஏமாளிகள்..
ஒரு சுவரின் சந்தேகம்..நாம்தான் எல்லாவற்றையும் கட்டுக்குள் கொண்டு வந்தாயிய்ற்றே.இன்னும் எதற்கு அவர்கள் உதவி?
வேண்டும், வேண்டும்..அவர்கள் உழைப்பு இல்லாமல் ஒரு சுவர் கூட எழும்ப முடியாது..அனைவருக்கும் அனைத்து வசதிகளும் கிடைக்கட்டும்..உழைப்பதற்கு நாமே காசு கொடுப்போம்..மால், உணவு பொருள், மருத்துவமனை, ரோட் டாக்ஸ் , டால், பொது டாக்ஸ் எல்லாம் உற்பத்தி பொருட்கள் எல்லாம் நம்மிடம் வாங்குவான்..அவனே சந்தை..ஆனால் அவன் என்றுமே நம் தொழிலாளி..புரிகிறதா..
ஆஹா, ஆஹா கல் தட்டிற்று ஆணவமாக கார்பரேட் சுவர்கள்..
தூரமாக ஒரு சுவர் ஓடிக்கொண்டு இருந்தது..குழந்தைகள் கிறுக்கிய ஒற்றை பள்ளிசுவர்..குழந்தைகளை மட்டுமாவது என்ற துடிப்போடு..

ஜன்னல் 3

ஜன்னல் கதை 3
காரை விட்டிறங்கி பேருந்தினாள்..யுவதி... இருபக்கமும் மஞ்சள் தேய்த்து ,கனகாம்பரம் வைத்த பெண் கொஞ்சம் நகரும்மா என்ற கண்டக்டர் சொன்னதுக்கே சுற்றுமுற்றும் புன்னகை கண்ணோடு பார்த்து வெட்கபூரிப்புடன் ஒதுங்குவதை பார்த்து இன்னும் இதுபோன்ற மனங்களும் என்ற எண்ணத்துடன் ஸ்லேட், ஸ்லேட் ஆக கையில் வைத்திருந்த ஜீன்ஸ் யுவதிகள் வரிசையில் நின்றுக்கொண்டாள்.
பொதுவுடைமை பள்ளியிலும் பார்த்திராத பெண் பேருந்தில் தரிசித்துவிட்டு ஆண்களை நோக்க.. நோக்கியா போன்ற சிலவற்றில் கண்ணும் கருத்துமாய் அல்லது வெற்றிடம் நோக்கி, வெளியே நோக்கி என்றே பெண்ணை நோக்கிய பார்வை இல்லாமல் இருப்பது வித்தியாசமாய் இருந்தது..
வெளியெங்கும் உள்ள கண்களை நோக்கி, நோக்கி தரிசித்த கண்களில் எந்த கண்ணும் அவளை பார்க்காமல் போய்..கண்கள் பூத்து.. ஃபேஸ்புக் ல் எழுதினாள் ஆண்கள் பார்வை சரியில்லை என்று...

ஜன்னல் -2

ஜன்னல் கதை 2
நேசம் மைக் பிடித்து கத்திக்கொண்டு இருந்தது.."நேசியுங்கள், மனிதர்களை, மரங்களை, விலங்குகளை, இயற்கையை..நேசம் அற்புதமானது.. நேசமே மனதின் போதை..etc ...." உணர்ச்சிவசப்பட வைத்தது பேச்சால்..கூட்டம் நேசத்தின் மயக்கத்தில்..
கி,கி,கி,கி..மூலையில் சிரிப்பு..அவனை பார்த்த அவள்..ஏன் என்பது போல..வினாகுறி பார்வையில் பதில் தேடினாள்....கொஞ்ச நாளா நான் கொடுத்த போதை பேச வைக்கிறது என்றான்.. ஆவலாக இவள் நேசத்தை விட்டுவிட்டு திரும்பினாள்..
அவன் அமர்ந்த நாற்காலி, மைக், காலையில் தின்ன பிரியாணி, இப்ப குடிச்ச சோடா, சதுர அடி பத்தாயிரம் உள்ள இடம், தண்ணீர் ,கரண்ட்,மளிகை,EMI பில்கள், போட்டிருக்கும் உடை..முச்சா போக மூன்று ரூபாய் வரை நான் இருக்கும் போதை..என்று போக.....
நீ யார் என்றாள்..
நான் பணம்..ஒரு நாள் செல்கிறேன்..மைக் கில் என்ன சொல்கிறான் என்று கேள்..என்றான்..
இரு நான் உன்கூட வருகிறேன்..அவன் கதை நமக்கெதுக்கு நான் உன்னை நேசிக்கறேன்..என்று தோள் தழுவி பென்ஸ் ல் ஏறினாள்..
நேசம் சோர்வாக மைக் கில் விக்கி அழ ஆரம்பித்தது..
DOT

ஜன்னல் 1

ஜன்னல் கதை..1
காலையில் ஆன்லைன் எப்.எம் ல் ஒலித்த வாழ்வே மாயம் மனதிலும்.ஹம் செய்துக்கொண்டே குளித்து உயரக்கொண்டை துண்டுடன் அலமாரியை திறந்தவள் அதிர்ந்தாள்.
நீலத்தில் பல, கருப்பில் சில என அடுக்கிவைக்கப்பட்ட தடிம துணி கால்சராய்கள் ......அடுக்கிவைக்கப்பட்ட இடத்தில் பல முகங்கள் சிரித்துக்கொண்டு இருந்தன...ஒவ்வொன்றும் ஒரு வீர வசனம் பேசியப்படி...ஒன்றை விரட்ட இரண்டு, நான்கு, எட்டு, பதினாறாகி..பல்கி பரவியது..
பயந்து சாத்திவிட்டு உடல் நடுங்க அமர்ந்தவள் துணிந்து உதறினாள். உடுத்த இருந்த கால்சராயில் இருந்த முகங்கள் தரையெங்கும் சிதறி இன்னும் வீராவேச வசனங்கள். பேசியதை உற்று நோக்க.....
கொஞ்சம் நடிங்க பாஸ் மக்கள் பேசும் வீர வசனங்கள் நினைவுக்கு வந்து விழுந்து விழுந்து சிரித்துவிட்டு முகங்களை பத்திரமாக்கினாள் நாளைய ஆதித்யா என்டேர்டேயின்ட்மென்ட் க்கு..
Disclaimer..
இந்த கதை கற்பனை..


Sunday, October 5, 2014

எங்கெங்கும் மின்சாரம்....ஷாக்.

பயணம்...வாழ்கையின் கற்றுக்கொடுக்கும் பகுதி..வாழ்க்கையின் மிகப்பிடித்த பகுதியும்....எதுவுமே அலுத்தாலும் பயணம் மட்டும் அலுப்பது இல்லை.. லட்சியங்கள் என்று சில எனக்கு இருந்தால் அவை பயணம் சார்ந்ததாகவே இருக்கிறது..

இந்த அஞ்சு நாளில் சிங்கப்பூர் ட்ரிப் முதல் சிங்காநல்லூர் அம்மா வீடு வரையான பல கதைகளை கேட்கும் குழந்தைகள் கண்டிப்பாக நம்மை வீட்டில் இருக்க விட மாட்டார்கள். கடந்த மூன்று வருடங்களாக அக்கா வீட்டில் தசரா விடுமுறைக்கு போய்விட்டு விஜயதசமி அன்று சரஸ்வதி அம்மன் கோவில் போகும் பழக்கமும் இருந்தது..அங்கு ஹால் டிக்கெட் எண்களை குழந்தைகளும், பெற்றோர்களும் வேண்டுதலோடு எழுதி வைத்து இருப்பார்கள்..அந்த நம்பிக்கை நிறைவேற்றும் என்ற நம்பிக்கை வரும்.

பேச்சு ஜோக் நீர்வீழ்ச்சி ஆரம்பித்து, கூர்க், மைசூர் எல்லாம் சுற்றிவிட்டு கடைசியில் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக சிவனசமுத்திரம் நீர்வீழ்ச்சியில் வந்து நின்றது.(எத்தனையோ தடவை போக பிளான் செஞ்சு தவறிய இடம்)  முதல்நாள் முடிவெடுத்து கிளம்பியதால்..கூகிளாண்டவர் மைசூர் ரோட் வழியாக செல் என்று உத்தரவு கொடுத்ததாலும்...காமாட் லிருந்து காபி டே, எம்பயர் வரை வரிசை கட்டி நிற்கும் ஹோட்டல்களை நினைத்து நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு கிளம்பியாச்சு..வீட்டில் என்னை சாப்பாடு கட்டிக்க எடுத்து சொல்லியும் ( ஆமா இவங்களுக்கு வேற வேல இல்ல..எப்ப பாரு வீட்டு சாப்பாடுதானா....ம்ம்ம்க்கும்..என்று மனசுக்குள் தோளில்இடித்துக்கொண்டு..நேரில் எல்லாம் பயண நேரத்தில் முறைத்துக்கொள்ளப்பிடாது என்ற கொள்கை ) எதுவும் எடுத்துக்கொள்ளாமல் கிளம்பி ஆயாச்சு.ஜூஸ், பிஸ்கட் பாக்கெட்டுகள் மட்டும்.

மைசூர் ரூட் ல போகலாமா என்று தொங்கி கொண்டு இருந்த 
நெட்டு டன் உள்ள என் போனை கேட்டபொழுது..அப்படி ஒரு ரோடா..கனகபுரா வழியாக அல்லவா செல்ல வேண்டும் என ஆணையிட..இவரிடம்..ஹையோ..மைசூர் ரோட் இல்ல..தப்பா போறீங்கன்னு சொல்ல..நன்றாக வழி தெரிந்த ஆளையும் குழப்பி..நைஸ் வழியே கனகபுரா ரோட் போய் சேரலாம் என்று சொல்லி..கிளம்பியாச்சு..

நைஸ் டால் ரோட் தான்..ரொம்ப பிடித்த சாலை..அதன் நேர்த்தியை இது வரை எந்த சாலையிலும் கண்டது இல்லை..நிஜமாகவே வெளிநாட்டுத்தரம்..

இப்படியே சுற்றிக்கொண்டு  இருந்ததில் செம பசி..எப்படி இருந்தாலும் அங்கு தரமான உணவகம் இருக்கும் என்று..போறோம், போறோம், போய்க்கொண்டே இருக்கோம்....ஒரு காபி டே மட்டும் கண்ணில் பட்டது..பிறகு ஒரு அழகான உணவகம்..வாசலில் நிறைய கார்கள்.. அத்தனை பெண்களும் வேற்று நாட்டு கலாசார உடையில்..நல்ல வேளை நான் கம்பளி போர்த்திக்கொண்டுதான் சென்றேன்...எனவே எந்த ஆண்களும் என்னை மோசமாக பார்க்கவில்லை..கையை பிடித்து இழுக்கவில்லை...வேற்று நாட்டு பாணி உடையில் இருந்த அவர்கள்  கதியை நினைத்து கண் இரண்டும் கலங்கி..மனம் பதை பதைத்து..இவர்கள் பாதுக்காப்பை பற்றி நினைக்கவே உடல் நடுங்கியது..சரி..என்று கண்கலங்க வாயில் தோசையை வைத்தால் எண்ணை சகிக்கவில்லை.இட்லி கல்லுப்போல. (கனகபுரா ரோட் வழியில்)

வழியெல்லாம் உஷாரா இருந்தவர்கள் மரத்துக்கு ஒன்றாக பெட்ஷீட் விரித்து உணவு உண்டுகொண்டு இருந்தனர்...இனிமே நாமே இது போன்ற முக்கிய சாலைகளில் உணவகம் ஆரம்பித்து..ப்ரான்சைஸ் கொடுத்து..லட்சம், லட்சமா பணம் அள்ள வேண்டும் என்ற கனவை இவரிடம் புலம்பிக்கொண்டு..எதையோ சாப்பிட்டுக்கொண்டு போய் சேர்ந்தோம்...அரைபட்டினியா இவர்களும்..எதையோ அரைத்துக்கொண்டே  நானும்..

எங்கு பார்த்தாலும் மயூரா ரெஸ்டாரன்ட் என்று பலகை..(போர்ட்)..அதை கண்டுப்பிடிக்கவே முடியவில்லை..கர்நாடாக டூரிசம் போர்ட் வைப்பதோடு வேலையை முடித்துக்கொள்வார்கள் ..

முதலில் கங்கன சுக்கி பால்ஸ்..அது மட்டும் என்று நினைத்துக்கொண்டு போனால்...கொஞ்ச தூரம் சென்றால்தான் பற சுக்கி பாலஸ்..அதுதான் முக்கியம்..அங்குதான் நீர்வீழ்ச்சி அருகே பரிசலில் கொண்டு செல்வார்கள்..அவரிடம் எத்தனை அடி என்று கேட்டேன்..அம்பது..என்றார்..இது வரை விபத்து? குளிக்கிறப்ப சமீபமா நாலேஞ்சு பேர் போயாச்சு..அதுக்குதான் போலிஸ் என்றார்..நூற்றுக்கணக்கான மனித தலைகளுக்கு மத்தியில் இரு போலிஸ்க்காரர்கள் தெரிந்தனர்...பாதுக்காப்புக்கு.. 

ஆனாலும் கவலைப்படாம இரண்டு முறை பரிசலில்..நீர்வீழ்ச்சி அருகில் ... அதுவே முப்பது அடி தூரம் கண் சிமிட்டும் நேரத்தில் தள்ளி விடுகிறது..ஒரு நாளைக்கு எத்தனை பரிசல்களை இது தள்ளுது என்று நினைத்துக்கொண்டேன்..

வரும் வழி முழுக்க தஞ்சை நினைவு...அத்தனையும் பச்சை.. வாழை, தென்னை, நெல் ,கரும்பு, வாய்க்கால், தண்ணி...அந்த காலத்தில் நாங்களும் இப்படித்தானே என்ற பெருமூச்சு வராமல் இல்லை..ஆனால் அங்கயும் விவசாயிகள் வாழ்க்கை சொல்லிகொள்ளும்படியோ, பொறாமை கொள்ளும்படியோ இல்லை...

சாம்ராஜ்நகர் தொகுதியை தொட்டால் பதவி போகும் என்று ஒரு நம்பிக்கை உண்டு..சில முதல்வர்கள் பதவி இழந்த கதைகள் உண்டு..நல்ல வேளை எந்த பதவியும் இதுவரை  நான் ஏத்துக்கலை..

வழியில் குட்டியானையில் சீட்டு போட்டது போல ஒரு வாகனத்தில் பயணம்  போவதை நிறைய பார்த்தேன்.நம் ஷேர் ஆட்டோ போல..அதில் பின்னாடி கால் தொங்கபோட்டுகொண்டு மிக மகிழ்ச்சியாக கதையாடிக்கொண்டே வருவதை பார்க்கும் பொழுது கார்ல வருவது வரமா, சாபமா னு புரியவில்லை..ஆனால் அதில் சென்றவர்களும் சிலர்  மேல்நாட்டு பாணி உடை..அதுவும் கட்டுப்பாடான  மண்டியா மாவட்டத்தில் அணிந்துகொண்டு சென்றதை பார்த்து பக் என்று ஆனது..பாதுகாப்பு பயம்...கண்கள் தளும்பியது..நல்லவேளை போர்வையில் தான் நான் போனேன்..

திரும்ப GPS போட்டு மைசூர் ரோடு வழியா மதுர் டிபனிஸ் ல மதுர் வடை பார்சலும், அடிகாஸ்ல சாப்பாடும் முடிச்ச பிறகுதான் ஹப்பாடான்னு ஆச்சு..

ஆனால் மைசூர் ரோடு விடவில்லை..இந்த பக்கம் வந்ததுக்கு தண்டனை ட்ராபிக்..எப்படியோ நீந்தி நைஸ் ரோடு பிடித்து..முக்கிய கடமையா எழுதி தள்ளியாச்சு..

ஆசியால முதன் முதலா நீர் மின்சாரம் இங்குதானாம்..அது இன்னும் இயங்கி கொண்டு இருக்கு. அந்த நீரின் பிறந்தவீடு , புகுந்த வீடு மின்சாரமும்  இன்னும் இயங்கிக்கொண்டு.. ஆனால் காவிரிக்கு மட்டுமா  மைசூர் வரலாறு?.