Wednesday, June 25, 2014

சொர்க்கம் தேடி..

                  ராண்டே அலகிரி....கேட்பதற்கு நம்ம ஊர் பெயர்ப்போல இருந்தாலும் இவர் இத்தாலியர். மேற்குலகத்தில் முதன் முதல்லா நரகம்  பற்றிய கற்பனைகளை வடிவமைத்து புத்தகமா எழுதினார். அப்படி இப்படி எழுதல..கொஞ்சம் பயங்கரமாகவே எழுதி வச்சுட்டு போயிட்டார்.  படிக்கலாம் என்று யோசித்தால்  கொஞ்சம் பயமுறுத்தும் புத்தகமாக இருக்கிறது.




நான் ஒரூ சமயத்தில் ஒரு புத்தகம் வாசிப்பது இல்லை. ஆங்காங்கே ஒரு புத்தகம் வைத்துக்கொள்வேன். வெளிநாடுகளில் சிலர் கழிவறையில் கூட லைப்ரரி வைத்து இருப்பார்கள். இங்கு சில குடும்பங்களில் சரஸ்வதி என்று புத்தகத்தை  எடுத்துக்கொண்டு போக விடமாட்டார்கள். சிலருக்கு வாசிப்புக்கான நேரமே அங்குதான் கிடைக்கிறது. அவசரத்துக்கு ஒரு புத்தகம் அங்கும் இருக்கும். என் சின்ன பையன் கூட ஒரு புத்தகத்தை வைத்துக்கொண்டு அமர ஆரம்பித்துவிட்டான். வாசிப்பு எங்கு பழகினால் என்ன?
தலையணை சைஸ் ஆங்கில புத்தகத்தை விட சின்ன, சின்னதாக நாலஞ்சு தமிழ் புத்தகங்களை முடித்து விடலாம். தூக்க நேரத்தில் வாசிக்க டான் பிரவுன் Inferno புத்தகத்தை எடுத்துவிட்டேன். இப்பல்லாம் உடனே தூக்கம் வந்துவிடுகிறது. அது நல்லதாகவும் இருப்பதால் அதை முடிக்காமல் தூக்கத்துக்கு துணையாக வைத்துக்கொண்டு இருக்கிறேன். காரில் பெரும்பாலும் கவிதை புத்தகங்கள் வைத்துகொள்வது வழக்கம். இடைவெளியில் ஒரு கவிதை படிக்கலாம் என்று. ஆனால் பெரும்பாலும் லைக் போடுவதில் கழிந்து விடுகிறது.

முன்பெல்லாம் நடு இரவில் விழிப்பு வந்தால் வாசிப்பது அல்லது டி.வி முன்பு உக்கார்ந்து அத்தனை சேனல்களையும் கழுத்தை முறித்து திருகி கொண்டு இருப்பது என்று வழக்கம். இப்பல்லாம் உடனே பேஸ்புக் எடுத்து முக்கியமான மெசேஜ் வந்து இருக்கிறதா இல்லை நம் ஸ்டேடஸ்களில் என்ன என்ன கமெண்ட்ஸ்..நண்பர்களின் எழுத்துக்கள் என்று போய்விடுகிறது.  டி-ஆக்டிவேட் செய்யும் நேரங்களில் அந்த அதி முக்கியமான மெசெஜ்கள் எங்கு இருக்கும் என்று புரியாத புதிராகத்தான் இருக்கு. டி.வி யோ, வாசிப்போ தூக்கம் கலைந்தால் அரை மணியில் தூங்கி விடலாம். ஆனால் பேஸ்புக் வந்தால் பொழுது விடிந்ததே தெரியாமல் ஒரு லிங்க், அடுத்த லிங்க் என்று தாவிக்கொண்டே இருப்போம்.

ஆங்.. இப்படிதான் எனக்கு பேச்சிலும் ட்ராக் மாறிவிடும். இன்பெர்னோ புத்தகத்தை எடுத்தவுடன் அகராதி புரட்ட வேண்டியதாகி விட்டது. இத்தாலியில் நரகம் என்று அர்த்தமாம். பெரியவனுக்கு டான் பிரவுன் புத்தகம் வந்தவுடன் வாங்கி விட வேண்டும். இருவரும் ராண்டே அலகிரி பற்றி விவாதித்துக்கொண்டு இருந்தோம். அவரின் தி டிவைன் காமெடி பற்றியும், இன்பெர்னோ பற்றியும். நரகத்தை அத்தனை கொடூரமாக கற்பனை செய்து புத்தகமாக கொண்டு வந்து இருக்கிறார் என்று பேசிக்கொண்டு இருந்தோம். ஒன்பது வளையங்கள் உள்ள நரகத்தில் ஒருவனின் பயணமே அந்த கதை.  அதை விட அந்த கும்பலான  நிர்வாண ஓவியங்கள் இன்னும் பயமுறுத்தும்.

இங்கு இரு மனம் யோசிக்க துவங்குகிறது.ஒன்று பகுத்தறிவாக மத அமைப்புகள் தான் தவறு என்று நினைப்பதை மக்கள் செய்யாமல் இருப்பதற்காக எப்படி எல்லாம் பயமுறுத்தும் அமைப்பாக இருந்து இருக்கிறது என்று யோசிக்கும். இன்னொன்று மரணம் பிறகான நிகழ்வுகள் இது போல இருந்தால் நமக்கு நிஜமாக தண்டனை கிடைக்குமா..இதில் எந்த தப்புகள் நாம் அறிந்தோ, அறியாமலோ செய்து இருக்கிறோம்..ஆங்காங்கே சொல்லப்பட்ட பொய்கள், சின்ன வயதில் ஏமாற்றிய  அஞ்சு ரூபாய், என்று கணக்கில் வராத தவறுகள் எல்லாம் கணக்கிலிடப்பட்டு அந்த நரகத்தில் எந்த வளையத்தில் இருப்போம் என இன்னொரு மனம் யோசிக்கிறது.( கொஞ்சம் நடுக்கமாதான் இருக்கும்..)

அதை பற்றி வாசிக்கும் பொழுது நரகத்தை முதலில் கற்பனையில் கொண்டு வந்தவர் என்று வாசித்தேன். திடீர் என்று நம்ம கருடப்புராணம் நினைவுக்கு வந்தது. உடனே கூகிள் ஆண்டவரை துணைக்கு அழைத்தேன்..நம்பியவரை கூகிளாண்டவர் கைவிட்டதில்லை.. உடனே ஆங்கில பதிப்பு கிடைத்தது.. பக்கம், பக்கமாய் பயமுறுத்துகிறது.. விருப்பம் இருப்பின் ஹிந்து மதப்படி நாம் அடையப்போகும் தண்டனைகளை சரிப்பார்த்துக்கொள்ளலாம்,
http://www.sacred-texts.com/hin/gpu/index.htm#contents எடுத்த எடுப்பில் மரங்கள் இல்லாத படு பயங்கரமான வெப்பத்தில், தண்ணீர், உணவு இல்லாமல் நடையை எமலோகத்துக்கு எட்டிப்போட வேண்டும் என ஆரம்பிப்பதால் அடுத்த வரிக்கு செல்லவில்லை நான்.




சின்னவன் நடுவில் வந்து நரகம் என்றால் என்ன? அது எப்படி இருக்கும்? ஏன் அது என்றெல்லாம் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டான். உடனே இன்பெர்னோ அனிமேஷன் ஒன்று இருந்தது..யூ ட்யூப் ல்  போட்டுவிட்டு நகர்ந்துவிட்டேன். கொஞ்சம் பார்த்து விட்டு தவறுக்கான தண்டனைகள் பற்றி வேறு பேச ஆரம்பித்தான்.

இன்னொரு பொழுதில் எல்லாம் மறந்து போயிற்று. காலை டென்ஷனில் சொன்ன பேச்சு கேக்காத சின்னவனிடம் கத்தும் சமயத்தில் நெஞ்சு வலி வந்தது. கோவத்துக்கு அறிவு இருக்குமா என்ன..இப்படி பாடாய் படுத்தினால் அம்மா நெஞ்சுவலி வந்து போயிடுவேன் என்று கத்திட்டு காரில் அள்ளிப்போட்டுக்கொண்டு பள்ளிக்கு கிளம்பினேன். அம்மா செத்து போகிறதுன்னா என்னமா என்று ஆரம்பித்தான்..பிறகு செத்து போனா எங்கம்மா போவோம் என்று கேட்டான்..எங்கயும் போக மாட்டோம்..தோ பாரு இந்த மரம் சாகும், பூச்சி, எறும்புகள், மிருகங்கள், மீன்கள், கோழிகள் என்று ஆயிரக்கணக்கான உயிர்கள் தினம் செத்து போய்க்கொண்டுதான் இருக்கின்றன.. அத்தனையும் எங்கே போச்சு..அது போலதான் மனுஷனும்..செத்து போகிறது ஒரு விஷயம்..முடிஞ்சுடும்..அதுக்கு மேல ஒண்ணுமில்லை என்று சொன்னேன்.

அப்படி என்றால் அன்னைக்கு நரகத்தை பத்தி ஏன் பேசினீங்க.. நீ கூட தப்பு பண்ணாத இது போல நடந்தாலும் நடக்கும்னு சொன்ன? அப்ப நரகம் இல்ல இல்லையா? ஏன் மாத்தி, மாத்தி சொல்றம்மா..பொய் சொல்லக்கூடாது..பொய் சொன்னா என்ன தண்டனை  தெரியுமா? என்றான்..

அந்நியனை வீட்டிலயே வளர்த்துக்கொண்டு..ம்ம்ம்..

என்ன இருந்தாலும் நமக்கு பல்ப் வாங்குவது சகஜமான ஒன்றுதானே.

Monday, June 2, 2014

வனம் புகும் மனம்.



வனம்..வசீகரிக்கும் வார்த்தை..பந்திப்பூர் போக திட்டமிட்டவுடன் வன அழகி மனதில் அமர்ந்து கொண்டாள்..இயற்கையை எந்த இடையூறும் இல்லாமல் ரசிப்பது வரம்.

வரிசையில் நிற்கும் வேளையில் குழந்தைகள் ஒரு ஜீப்பில் அமர்ந்து விளையாடினார்கள். ஓட்டுனரை விசாரித்தவுடன் ஜீப் தனியாக வாடகைக்கு கிடைக்கும் என்றவுடன் மகிச்சியுடன் நாங்களும், இன்னொரு குடும்பமும் அவசர உடன்பாடு செய்து தனியாக வாடகைக்கு அமர்த்தினோம்.

காத்திருக்கும் நேரத்தில் அந்த குடும்பத்தினரிடம் பேச்சு கொடுத்தேன். அவர்கள் கொஞ்சம் விடுமுறை கிடைத்தாலும் இயற்கை சுற்றுலா கிளம்புவார்களாம்..கபினி போங்க..அது போன்ற அனுபவம் எங்கும் இல்லை என்றும் சொன்னார்கள்.

ஜீப் காட்டுக்குள் பயணித்தது..குறுக்கே பன்னி கூட்டம்..குட்டிகள் மிக அழகு..ஆனால் மந்தை போல கூட்டமாய் சென்றது..எப்படி இத்தனை குட்டிகள் என்ற ஆச்சரியம்..காட்டு பன்னிகளிடம் ஒரு அழகு..அடுத்து வழக்கம் போல எக்கச்சக்கமாய் மான்கள்.





பாம்பு ஒன்று மிக வேகமாய் புற்றுக்குள் போனது...மேலே பார்த்தால் பாம்பு தின்னும் கழுகு சுற்றிக்கொண்டு இருந்தது.. பாம்பாய் பாதுகாப்பு விஷம் தேக்கியும் எதிரிகள்  சுற்றிகொண்டுதான்..மனித வாழ்க்கை எத்தனை எளிமை..ஒவ்வொரு நிமிடமும் தப்பி பிழைக்கும் போராட்டம் இல்லை..அதற்கு பதிலாக நாமே போர், மாசுப்படுத்தல், கொலை,விபத்து, நோய், கெட்ட பழக்கங்கள் என்று உருவாக்கி தற்கொலை செய்து கொள்கிறோம்..இயற்கையின் சமநிலை விதியாகவும் இருக்கலாம்.

வண்டி தடத்தை தவிர எதுவுமில்லை..வனம் புகும் நிகழ்வு அற்புதம். ஏதோ ஒரு காலத்தில் நம் மூதாதையர்கள் ஏதோ ஒரு வனத்தில் வசித்து இருக்கிறார்கள். நம் தாய்மடி வனம். ஜீப் தடத்தை தவிர அனைத்தும் அடர்வனம்..பெயர் தெரியாத மிக அழகிய பறவைகள், காட்டெருமைகள் மேய்ச்சல் . வித வித மான்கள் காட்சிகளாக விரிந்தது. மானின் கண்கள் எப்பவும் ஒரு மிரட்சியை தேக்கி வைத்து இருக்கிறது..மருண்ட பெண்கள் போல...

மாலை வேளை..ஓட்டுனர் நீர் குட்டைகளை சுற்றி சுற்றி வந்தார். நிறைய மிருகங்கள் தென்படவில்லை. ஆனால் பயணத்தில் ஒரு காட்சி..அடர் வனத்தின் நடுவே தீ சுட்ட பாலை..ஆம் காட்டுத்தீ அறுநூறு ஏக்கர்களை நாசம் செய்து இருந்தது..எந்தனை பறவைகளின் வசிப்பிடமோ..எத்தனை குரங்குகள் இறந்தனவோ..கணக்கில் அடங்காத இழப்பு..தீ அணைப்பு வண்டி வந்து நிறுத்தி இருகிறார்கள்..மூங்கில் மரங்கள் உரசுவதால்  ஆன தீயாக இருக்கலாம் என்று பேசிக்கொண்டார்கள்.

அதிகம் மிருகங்கள் இல்லாதது கூட அதிர்ஷ்டம்..இன்னும் அடர் வனத்துக்கு அழைத்து சென்றார். வண்டியை நிறுத்த சொன்னேன். நாங்கள் சென்றது ஓபன் ஜீப் ..வாக்கி டாக்கி இருக்கு ஆபத்து இல்லை என்று டிரைவர் சொன்னாலும் சிறு திகில்  மனதுள்.

முக்கியமாக வனத்தின் ஓசையை அந்த நல்ல காற்றுடன் சுவாசித்து அமைதியாக கேக்க வேண்டும் என்ற ஆசை.. முதல் நாள் மழையால் வனம் பச்சை போர்த்திக்கொண்டு இருந்தது. ஜீப் அணைந்தவுடன் கிரீச் சப்தங்கள்..இரவில் கிராமத்தில் கேக்கும் பூச்சி, மழை தவளை சத்தங்கள் போல்தான்..வித்தியாசமாக எதுவும் இல்லை..இருப்பினும் அடர்வனமும், பச்சை நறுமணமும், தனிமையும், சிக்னல் இல்லாத செல்போனும்,குளு,குளு அரவணைப்பும், திறந்த வண்டியும்..ஒரு திகிலை, அழகை, ஆரவாரமில்லாத அமைதியை, பரபரப்பை, அன்பை, தாய்மடியை, மனதுக்கு பிடித்த நறுமணத்தை,  சொல்ல முடியா உணர்வுகளை அள்ளி தந்தது.

மிருகங்கள் நுண் உணர்வுகள் கொண்டவை..தூரத்தில் கேட்கும் சிறு சத்தம் கூட அவற்றை விழிக்க வைக்கும்..அதனால் பெரும்பாலும் வன சுற்றுலா யானை, காட்டு மாடுகள், மான்கள், குரங்குகள், பறக்கும் பறவைகளோடு முடிந்து விடும்.

திரும்ப வரும் வழியில் தீ அழித்த இடம்..அது நெடுஞ்சாலையில் இருந்து  ஒரு கி.மி க்குள் இருந்ததால் மனதில் பல சந்தேகங்கள்..
குழுக்கள் ஆட மூட்டப்ட்ட தீயாக  (camp fire)  இருக்கலாம் என்று..பலர் விடுமுறைகளை குடித்து கும்மாளமிட கூட்டம், கூட்டமாக வருகிறார்கள்.ஜங்கிள் லாட்ஜ் விளம்பரங்கள் எங்கும்.. குதூகலமாக இருப்பது அவரவர் இஷ்டம்..ஆனால் அது அடுத்தவரை பாதிக்க கூடாது. மனிதர்கள்  எப்பவுமே அடுத்தவர்களை துன்புறுத்திக்கொண்டே இருக்கிறார்கள்..அங்கு வசித்த ஆதி பழங்குடிகளை வெளியேற்றியதால் வாழ்விடம் போய்  சாதாரண மக்களோடு கலந்துவிட்டர்களாம்..இந்த தலைமுறை வனத்தை மறந்துவிட்டார்கள். சந்தோஷ, சுதந்திர வாழ்கையை விட்டுவிட்டு அரசாங்கம் கொடுக்கும் சிறு வீடுகளிலும், அவர்கள் தரும் சொற்ப உதவிகளிலும் காலத்தை ஒட்டுவதாக கேள்வி.
 வனம் என்று இல்லை..அனைவருமே சொந்த வசிப்பிடத்தை விட்டுவிட்டு வாழ்கிறோம்..வாழ்கிறோமா என்று கேள்வியுடன்..ரிலாக்ஸ் வேண்டும் என்று தேடி செல்கிறோம்..போகிற இடத்தில் அங்கயும் அழிப்பு வேலையை செய்கிறோம்..
நிம்மதியாக வாழும் விலங்குகளை தொல்லைப்படுத்தி வன சுற்றுலா தேவையா என்றும்..வரும் தலைமுறையினற்கு வனம் தெரிய வேண்டாமா என்றும்..மனிதனின் கால் பட்ட இடங்கள் எல்லாம் அழிவின் வளர்ச்சி ஆரம்பம் ஆவதையும் நினைத்து சிந்தனை குழப்பத்துடன் வெளியே வந்தேன்..

"மௌன வனம் கண்ட மனம் இரைச்சலாய் சப்தமிட்டது"


"கால்நடைகளால்
வீழாத புல்வெளி
கால் நடைகளால்
அழிய ஆரம்பித்தது 
மனிதனுக்கு  
காலன் கால்கள்"